வியாழன், 10 பிப்ரவரி, 2011

பல்லி பிடிக்கத் தெரியுமா?

இது என்ன புதுசா இருக்குன்னு நினைக்காதீங்க. ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தெரிந்து கொள்ளவேண்டிய கலை இது. எத்தனை வீட்டுல இல்லத்தரசிகள் இந்த அப்பாவிப் பிராணியைப் பார்த்துவிட்டு ஊரைக்கூட்டி இருக்கிறார்கள் என்று விசாரித்தால் தெரியும்.


இதற்குத் தேவையான  உபகரணங்கள் மிகவும் சாதாரணமானவை.

1. ஒரு 4 அங்குல விட்டம் கொண்ட பிளாஸ்டிக் கிண்ணம்,
2. ஆறு அங்குல அளவில் ஒரு சதுர அட்டை. ரொம்ப கெட்டியாக வேண்டாம்.
3. நிறைய மனோ தைரியம்.
படம் 1 ஐப் பார்க்கவும்.

                                                                       படம் 1

இவைகளைத் தயார் செய்த பிறகு வீட்டில் எங்காவது பல்லி இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு இருக்கவும். தேவையானால் ஆணி புடுங்குவதை சில நாட்கள் தள்ளிப்போடவும். பல்லி வருவதை எளிதில் அறிந்து கொள்ளலாம். சமையல் அறையிலிருந்து திடீரென்று அமானுஷ்யமான அலறல் கேட்டால் பல்லி வந்து விட்டதை அறிந்து கொள்ளலாம்.

பல்லி சமையல் மேடையில் இருக்கும். ஏறக்குறைய படம் - 2 ல் இருக்கிற மாதிரி இருக்கும்.



படம் - 2

உங்கள் தளவாடங்களுடன் சமையலறைக்கு ஆஜராகவும். முதலில் உங்கள் துணைவியாரை ஜாக்கிரதையாக அப்புறப்படுத்தவும். பல்லியைப் பயப்படுத்தி விடவேண்டாம். பிறகு பல்லிக்கு மேல் நைஸாக பிளாஸ்டிக் கிண்ணத்தால் மூடவும். பல்லியின் வாலை நசுக்கி விடாதீர்கள். பல்லி வாலைத் துண்டித்துக்கொள்ளும். அப்புறம் வால் தனியாகத் துடித்துக் கொண்டு இருக்கும். அதை டீல் பண்ணுவது வேறு கலை. அதை அடுத்த வகுப்பில் சொல்லித்தருகிறேன். பார்க்கவும் படம் - 3.


 
படம் - 3
இப்போது பல்லி பிளாஸ்டிக் கிண்ணத்தின் உள்ளே சிக்கிக்கொண்டது. அதை எப்படி வெளியே எடுப்பது?  ஒரு கெட்டி அட்டை முதலில் எடுத்து வைத்தோமல்லவா, அந்த அட்டையை எடுத்து நைஸாக கிண்ணத்தின் அடியில் சொருகவும். பார்க்க படம் - 4.
அவ்வளவுதான். பிளாஸ்டிக் கிண்ணத்தை அட்டையுடன் சேர்த்து தூக்கி, திருப்பிக் கொள்ளவும்.



 படம்- 4
இப்போது பல்லி பிளாஸ்டிக் ஜெயிலில். இந்தப் பல்லியை இப்போது என்ன செய்வது?

பல options  இருக்கின்றன. அவைகளில் சில.

  1. வேண்டாதவர்கள் யாராவது இருந்தால் (கண்டிப்பாக இருப்பார்கள்) அவர்கள் தலையில் இந்தப் பல்லியைப் போடலாம். ஆனந்தபோதினி சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் சொல்லியுள்ள பல்லி விழும் பலன்படி, தலை மேல் பல்லி விழுந்தால் உடனே மரணம் ஏற்படும். உங்கள் அத்யந்த நண்பர் எந்த விதமான நோய்நொடிகளும் இன்றி வைகுந்தப்ராப்தி அடைந்த புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்.

2. அப்படி இல்லாமல் அவர் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் வைகுண்டம் போகவேண்டுமென்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் அந்தப் பல்லியை
அவர்கள் வீட்டில் சாம்பார் கொதிக்கும்போது நைஸாக உள்ளே போட்டுவிடவும். இதற்கு அசாத்திய மனோதைரியமும் பின்விளைவுகளை சந்திக்கும் பலமும் வேண்டும்.

3. இந்த இரண்டு வழிகளும் பிடிக்காதவர்கள் பல்லியை காத தூரத்திற்கு அப்பால் கொண்டு சென்று விடுவிக்கவும். எக்காரணம் கொண்டும் பல்லிக்கு எந்த விதமான தொல்லையும் கொடுத்து விடாதீர்கள். அப்படிச் செய்தால் நீங்கள் இறந்த பிறகு, கல்ப கோடி காலம் கொதிக்கும் எண்ணைக் கொப்பறையில் வதக்கப்படுவீர்கள். அப்படித்தான் கருட புராணம் சொல்கிறது.


படம் - 5

நேர்முக வகுப்புகள் தேவைப்படுபவர்கள் ஆயிரம் ரூபாய்க்கு டிடி எடுத்து அனுப்பினால் ஏற்பாடு செய்யப்படும்.

திங்கள், 7 பிப்ரவரி, 2011

ஒரு பிரபல பதிவரின் அன்றாட அலுவல்கள்




ஒரு பதிவு போட்டவுடன் செய்யவேண்டிய வேலைகள்.

 
1.   அந்தப் பதிவை எல்லா திரட்டிகளிலும் இணைப்பது.

2.   நண்பர்களுக்கெல்லாம் Facebook, Twitter, email மூலம் செய்தி அனுப்புவது.

3.   ஒரு மணிக்கு ஒரு தரம் டேஷ்போர்டை ஓப்பன் செய்து பின் கண்டவற்றை செக் செய்வது.

a.   பின்னூட்டங்கள்

b.   ஹிட் கவுன்டர்

c.   Followers


d.   பதிவான ஓட்டுக்கள்.

e.   அலெக்ஸா முதலான ரேட்டிங்குகள்.

4.   வந்த பின்னூட்டங்களுக்குப் பதில் போடுவது.


 
5.   பின்னூட்டம் போட்ட பதிவர்களின் பதிவுகளுக்குப் போய் அவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவது.

6.   அந்தப் பதிவுகளில் முன்பே followers  ஆக சேராவிடில் இப்பொழுது சேருவது.

7.   புது பதிவுகளைப் பார்த்து பின்னூட்டங்கள் போடுவது.

8.   அவரவர்கள் பதிவுகளுக்கு தினமும் ஓட்டுப்போடுவது.

9.   பல ID க்கள் ஏற்படுத்திக்கொண்டு அவைகளிலிருந்து பின்னூட்டம்
  போடுவது.

10. தொடர் பதிவுகளை ஆரம்பித்து அப்பாவி பதிவர்களைக் கோர்த்து விடுவது.

11. தொழில் நுட்பங்களை அவ்வப்போது புதிப்பித்துக்கொள்வது.

12. பதிவு போட்டு ஒரு மணி நேரத்தில் 108 பின்னூட்டங்கள் வரவழைப்பது எப்படி?” என்று புத்தகம் எழுதுவது.

13. புதிய பதிவர்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்குவது.

14. சக பதிவர்களைச் சந்திக்க தோதான ஓட்டல் பாருக்குப் போவது

இதில் ஏதாவது மூன்றை நீங்கள் செய்து கொண்டிருந்தால் நீங்கள் பிரபல பதிவர் ஆகி விட்டீர்கள் என்று அறியவும்.  

நானா, ஹி ஹி ஹி ஹி, என் சொந்த வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிடுவதை நான் விரும்புவதில்லை (ஓட்டல் பாரைத்தவிர்த்து).



சனி, 5 பிப்ரவரி, 2011

வெற்றிச் சிந்தனைகள்


(ஒரு கல்யாண அழைப்பிதழில் அச்சடித்திருந்தது.)

  1. தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது, இவை நிம்மதியளிக்கும்.   
  2. துன்பத்தையோ, தோல்வியையோ ஒரு போதும் கண்டிராத மனிதனை நம்பாதே. அவனை பின்பற்றாதே. அவன் கொடியின் கீழ் போரிடாதே.
  3. புகை நுழையாத இடத்தில் கூட வறுமை நுழைந்துவிடும். வறுமை வந்தால் உடல், உள்ளம் பலகீனமடையும். பிறர் வெறுப்பார்கள். நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது. எனவே வறுமைக்கு இடம் கொடுக்கக் கூடாது.
  4. விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்.
  5. நோய், நெருப்பு, பகை, கடன் இவற்றை மிச்சம் வைக்கக் கூடாது. சமயம் பார்த்து இவை நம்மை அழித்து விடும்.
  6. இளமையில் கல்வி கற்காமலும், பொருள் சேர்க்காமலும் இருந்தால் முதுமையில் கஷ்டப்பட நேரிடும். முதுமைக்கு வேண்டியவற்றை இளமையிலேயே தேடிக்கொள்ள வேண்டும்.
  7. உயர்ந்த சிந்தனையில் இருந்துதான் உயர்ந்த எண்ணம் உருவாகும்.
  8. உயர்ந்த எண்ணத்தில் தான் வாழ்வு சிறப்பாக அமையும்.
  9. யாரையும் எதுவும் கேட்காமலிருப்பது கௌரவம். நம் வருவாயில் வாழ்வது கௌரவம். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது கௌரவம். வாங்கிய கடனைத் திருப்பித் தருவது கௌரவம்.
  10. ஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரை இழக்கலாம். உணர்வை இழக்கலாம். உரிமையை இழக்கலாம். ஆனால் கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது.
  11. பணத்தால் அன்பையோ, நிம்மதியையோ வாங்க முடியாது.
  12. ஒரு மனிதனுக்கு உண்மைதான் தாய், அறிவுதான் தகப்பன், தர்மம்தான் சகோதரன், தயவுதான் நண்பன், அடக்கம்தான் மனைவி, பொறுமைதான் மகன். இவர்களே உறவினர்கள்.
  13. வீரனைப் போரிலும், நண்பனைக் கஷ்ட காலத்திலும், மனைவியை வறுமையிலும், யோக்கியனைக் கடனிலும் அறிந்து கொள்ளலாம்.
  14. பெருந்துன்பமும், பெருங்கவலையும் உற்ற காலத்திலும் ஒரு பெண் தன் ஆலோசனையால் கணவனின் உயிர் காப்பாள்.

 

திங்கள், 31 ஜனவரி, 2011

குட்டையர்கள்

மனுசங்க, நீங்க மட்டும்தான் குட்டையா இருப்பீங்களா? நாங்களும் குட்டையாவோம்ல.

எல்லா மரங்களும் ஒரு அடிக்கு குறைவானவைதான். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்திய மலர் கண்காட்சியிலிருந்து எடுக்கப்பட்ட போட்டோக்கள்.