வெள்ளி, 7 செப்டம்பர், 2012

மும்பையில் தனியாகத் தவித்தேன்



மும்பையில் என்னுடன் படித்த நண்பர் ஒருவர் ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜராக இருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு, மாணவர்கள், ஆசிரியர் ஆகியோர், நாங்கள் 80 பேர், மும்பைக்கு இத்தனாம் தேதி டூர் வருகிறோம், எங்களுக்கு தங்குவதற்கும் பார்க்க வேண்டிய இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டிருந்தோம். அவரும், ஆஹா, செய்து விடுகிறேன் என்று பதில் அனுப்பியிருந்தார்.

ஹைதராபாத்தில் இருந்தும் எங்கள் வருகையை உறுதிப் படுத்தி-யிருந்தோம். நாங்கள் மும்பையில் விக்டோரியா டெர்மினஸ்ஸுக்கு பல ஸ்டேஷனுக்கு முன்பு வந்துகொண்டிருந்தபோதே, என் நண்பனின் சகாக்கள் மூன்று பேர் எங்கள் கோச்சில் ஏறி அறிமுகம் செய்து கொண்டார்கள். அவர்கள் சொன்ன திட்டத்தின்படி, நாங்கள் அனைவரும் விக்டோரியா டெர்மினஸ் போகாமல் மாதுங்கா ஸ்டேஷனில் இறங்கிக் கொள்ளவேண்டும். அங்குள்ள தமிழ்ச்சங்கத்தில்தான் எங்களுக்குத் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எங்களை ஏற்றிச்செல்ல இரண்டு பஸ்களும் அங்கே காத்துக்கொண்டு இருக்கின்றன. நாங்கள் விக்டோரியா டெர்மினஸ் போய் அங்கிருந்து திரும்பி வருவதென்றால் அதிக தூரம், தவிர நேரமும் அதிகம் ஆகும் என்றார்கள்.

நாங்களும் அவர்களை நம்பி மாதுங்கா ஸ்டேஷனில் மூட்டை முடிச்சுகளுடன் இறங்கி விட்டோம். எங்கள் கோச் நாங்கள் வந்த ரயிலுடன் விக்டோரியா டெர்மினஸ் போய் விட்டது. கோச் அங்குதானே இருக்கும், இந்த தங்குமிடம் மற்றும் மும்பை புரொக்ராம் வேலைகளை முடித்து விட்டுப் போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று எதார்த்தமாக நம்பினோம். (வடிவேலு பாணியில் - நம்ப்ப்ப்ப்ப்ப்பினோம்) இங்குதான் நாங்கள் தவறு செய்து விட்டோம்

எல்லோரும் அவரவர்கள் உடைமைகளை வைத்துவிட்டு குளித்து டிபன் சாப்பட்டோம். கூட வந்த இரண்டு ஆசிரியர்களும் மாணவர்களைக் கூட்டிக்கொண்டு புரொக்ராமுக்கு சென்று விட்டார்கள். நான் மட்டும் ரயில்வே பார்மாலிடிகளைக் கவனிக்க விக்டோரியா டெர்மினஸ் சென்று ஸ்டேஷன் சூப்பிரன்ட் ஆபீசுக்குப் போய், நாங்கள் ஸ்பெஷல் கோச்சில் சென்னையிலிருந்து வந்து மாதுங்காவில் இறங்கிவிட்டோம். எங்கள் கோச் இங்கே வந்திருக்கும். நாங்கள் அந்தக் கோச்சில் இத்தனாம் தேதி இந்த ரயிலில் டில்லி போகவேண்டும். அதற்குண்டான ஆர்டர்கள் போடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

அவர்கள் என் தலையில் ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டார்கள். உங்கள் கோச்சா? அது காலியாக வந்ததா, அதை ஒரு கல்யாணப் பார்ட்டிக்கு கொடுத்துவிட்டோம் என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்கள். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. என்னடா இது, நேத்து வந்தவன் பொண்டாட்டியை இண்ணைக்கு வந்தவன் கூட்டீட்டுப் போன கதையாக இருக்கிறது? என்று நினைத்துக்கொண்டு, அவர்களிடம் அதெப்படி எங்களுக்கு என்று கொடுக்கப்பட்ட கோச்சை இன்னொருவருக்கு கொடுக்கலாம் என்று கேட்டேன்அவர்கள் உங்கள் கோச்சை அனாதையாக விட்டுவிட்டு நீங்கள் எங்கே போனீர்கள்? கோச் காலியாக வந்ததினால் நாங்கள் அதை வேறு பார்ட்டிக்கு கொடுத்து விட்டோம். உங்களுக்கு வேண்டுமானால் வேறு கோச் அலாட் செய்கிறோம் என்று சொன்னார்கள். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த புது கோச்சை சென்னையிலிருந்து வாங்கி வந்தோம், அதை இப்படி செய்து விட்டீர்களே, எங்களுக்கு அதே மாதிரி புது கோச் கொடுக்காவிட்டால் மாணவர்கள் உங்கள் ஆபீசுக்கு முன்னால் வந்து தர்ணா செய்வார்கள், பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

நாங்கள் புறப்படும் அன்று ஸ்டேஷனுக்கு சென்று பார்த்தபோது நாங்கள் வந்த அதே மாதிரியான கோச் எங்களுக்கு அலாட் செய்திருந்தார்கள். நான்கு டிஜிட் கோச் நெம்பரில் கடைசி நம்பர் மட்டும்தான் மாற்றம். யாராவது சொன்னால் தவிர கோச் மாறினது யாருக்கும் தெரியாது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன். வேறு ஏதாவது பழைய கோச் கொடுத்திருந்தார்களானால் மாணவர்கள் மத்தியில் என் மானம் மரியாதை எல்லாம் கப்பலேறிப் போயிருக்கும். அன்று என்னைக் கடவுள்தான் காப்பாற்றினார்.

வியாழன், 6 செப்டம்பர், 2012

கையைச் சுட்டுக் கொண்டேன்.


நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அதாவது இல்லத்தரசிகளின் பாஷையிலே “தண்டச்சோறு”. பொழுது போவதற்காக இந்தக் கருமத்தை (கம்ப்யூட்டரை என்று பொருள் கொள்ளவும்) நோண்டிக்கொண்டு இருக்கிறேன். இதற்காக நான் பெறும் புகழ்மாலைகள் அளவிற்கரியது. முக்கியமாக மூன்று வேளைகளில் கிடைப்பது – சாப்பிடக்கூப்பிட்டது கூடக் காது கேட்காமல் அந்தச் சனியனை எத்தனை நேரம் கட்டீட்டு அழுவீங்க – இது ரொம்பவும் சாந்தமானது. உச்சத்தைக் கூறினால் உங்கள் இளகிய மனது தாங்காது என்பதினால் தவிர்க்கிறேன்.

இப்படியாக பொழுது நல்லபடியாக போய்கொண்டிருக்கும் போது, ஏழரை நாட்டுச் சனி கூகுள்காரன் ரூபத்தில் வந்தது. அவன் ஒரு நாள் ஒரு செய்தி போட்டிருந்தான். அதாவது மைக்ரோசாஃப்ட் கம்பெனி ஒரு புது ஆபரேட்டிங்க் சிஸ்டம் வெளியிடப்போகிறான். “விண்டோஸ் 8” என்பது அதன் பெயர். உலகத்தில் அந்த மாதிரியான புரோக்ராம் இது வரையில் வந்ததில்லை இனிமேலும் வரப்போவதில்லை, அதனுடைய டெஸ்க் டாப்பைப் பார்த்தால் அப்படியே மயங்கி விழுந்து விடுவீர்கள், அதனுடைய செயல் திறன் அலாவுதீனின் பூதத்தைக் காட்டிலும் அற்புதமாக இருக்கும், என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.

எனக்குச் சனி காத்துக்கொண்டிருப்பது தெரியாமல், நான் இந்த பசப்பு வார்த்தைகளில் மயங்கி விட்டேன். அதுவும் இந்த விண்டோஸ் 8 புரொக்ராம் பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்காக இலவசமாகத் தரப்படும் என்று வேறு போட்டிருந்தார்களா, அது வேறு என்னுடைய ஆர்வத்தை காட்டுத்தீ போல வளர்த்தி விட்டது. சரி என்னதான் நடக்கும் பார்த்து விடலாம் என்று துணிந்து அதற்குண்டான ஏற்பாடுகளில் இறங்கினேன்.

முதலில் அது சம்பந்தமான செய்திகளை எல்லாம் கூகுளில் தேடிப் படித்தேன். நிறையப் பேர் சிபாரிசு செய்திருந்தார்கள். (இப்போதுதான் தெரிகிறது – எல்லாப் பயல்களும் மைக்ரோசாஃப்ட் கம்பெனியில் கமிஷன் வாங்கும் பயல்கள் என்று). கொஞ்சம் பேர் இந்தப் புரொக்ராம் சரிப்படாது என்றும் சொல்லியிருந்தார்கள். இவர்கள் எல்லாம் மைக்ரோசாஃப்ட் மேல் அவர்களுக்கு இருக்கும் பொறாமையினால் அப்படி சொல்கிறார்கள் என்று நினைத்தேன்.

சரி, இந்த விண்டோஸ் 8 ஐ எப்படி கம்ப்யூட்டரில் நிறுவுவது என்று ஆராய்ச்சி பண்ணி, நோட்ஸ் எடுத்து வைத்தேன். அதில் முதல் ஸ்டெப். இன்டர்நெட்டில் இருந்து அந்த புரொக்ராமை டவுன்லோடு செய்யவேண்டும். அது மொத்தம் 2.5 ஜி.பி. அளவு கொண்டது. என் கம்பயூட்டரில் நான் வைத்திருக்கும் இன்டர்நெட் பிளானில் அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரை டவுன்லோடு இலவசம். அந்த தைரியத்தில் காலை 2 மணிக்கே எழுந்திருந்து டவுன் லோடை ஆரம்பித்தேன். டவுன்லோடிங்க் ஆமை வேகத்தில் நடந்து நான்கு மணி நேரத்தில் முடிந்தது.

அது ISO image ரூபத்தில் இருந்தது. அதை டிவிடி யில் காப்பி பண்ணவேண்டும். அந்த வேலையை ஆரம்பித்தால் டவுன்லோடு சரியில்லை, எங்கேயோ ஒரு தப்பு இருக்கிறது, காப்பி செய்யமுடியாது என்று கம்ப்யூட்டர் சொல்லிவிட்டு படுத்துக் கொண்டது. அதற்கு அப்பீல் கிடையாது. இந்த இடத்தில் எனக்கு இந்த வேலை நமக்காகாது என்று புரிந்திருக்கவேண்டும். ஆனால் என் களிமண் மூளைக்குப் புரியவில்லை.
எல்லாவற்றையும் ஈரத்துணி + டெட்டால் போட்டுத்துடைத்து விட்டு மறுபடியும் ஆரம்பித்தேன். நாலு மணி நேரம் டவுன் லோடிங்க். காப்பி பண்ண ஆரம்பித்தால், திரும்பவும் பழைய குருடிக் கதைதான். இதை விடக்கூடாது என்று மறுபடியும் ஈரத்துணியில் ஸ்ட்ராங்க் பினாயிலில் தோய்த்து எல்லாவற்றையும் துடைத்தேன்.

பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு அடுத்த நாள் மீண்டும் ஆரம்பித்தேன். எல்லாம் சரியாக நடந்தது. ISO image சரியாக டவுன்லோடு ஆகி DVD யில் காப்பி செய்தாகி விட்டது. இனி இன்ஸ்டால் செய்யவேண்டியதுதான் பாக்கி. மனதில் கடவுளை வேண்டிக்கொண்டு இன்ஸ்டலேஷனை ஆரம்பித்தேன். எல்லாம் சரியாக நடந்தது. ஆஹா, இனி நாம் ஆகாயத்தில் மிதக்கப்போகிறோம் என்று கம்பயூட்டரை ஆன் செய்தேன். விண்டோஸ் 8 ன் வெல்கம் ஸ்கிரீன் தெரிந்தது. கலர் கலராக, கட்டம் கட்டமாக இருந்தது. என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் விழித்தேன். நமக்குத் தெரிந்ததெல்லாம் மவுஸ்தானே. சரி என்று மவுஸை ஒவ்வொரு கட்டமாக கொண்டு போய் அழுத்தினேன். அது உடனே இன்டர்நெட்டுக்குப் போகவேண்டும் என்றது. சரி, போய்த்தொலை என்றதும் அங்கே போய் கொஞ்ச நேரம் இருந்து விட்டு பழைய இடத்திற்கே வந்து விட்டது. அங்க போய் என்ன செய்ததோ கூகுளாண்டவர்க்கே வெளிச்சம். (ஒரு சமயம் பாத்ரூம் போய்ட்டு வந்திருக்குமோ, என்னமோ?) அடுத்த கட்டத்தை அழுத்தினேன். அதுவும் ஸ்கூல் பையன் ஒரு விரலைக் காட்டுவானே, அந்த மாதிரி இன்டர்நெட் போகவேண்டும் என்று காட்டியது. இப்படி எந்தக் கட்டத்தை அழுத்தினாலும் இதே கதைதான்.

இப்படி கொஞ்ச நேரம் விளையாடினோம். அப்புறம் எனக்குத் தூக்கம் ஆட்டியது. சரி, கம்ப்யூட்டரை ஷட்டவுன் பண்ணலாம் என்றால் அதற்கு ஒரு வழியையும் காணவில்லை. நானும் அரை மணி நேரம் போராடிவிட்டு கூகுளாண்டவரைக் கேட்டால், அதுவா, அதை ஒளித்து வைத்திருக்றோம், இங்க அமெரிக்காவில் யாரும் கம்ப்யூட்டரை ஷட்டவுனே பண்ணமாட்டார்கள், நீங்க ஏன் ஷட்டவுன் பண்ணுகிறீர்கள் என்று கேட்டது. சாமி, எங்க ஊர்ல கரண்டுக்கு சார்ஜ் ஏகப்பட்டது கட்டவேண்டும். இன்டெர்நெட்டுக்கும் செலவு அதிகம். அதனால் வேலை முடிந்ததும் கம்ப்யூட்டரை ஷட்டவுன் பண்ணுவதுதான் எங்கள் வழக்கம் என்றவுடன் ஷட்டவுன் பண்ணும் வழியைக் காட்டியது. ஒரு வழியாக கம்ப்யூட்டரை ஷட்டவுன் பண்ணிவிட்டு கொஞ்ச நேரம் கண்ணசந்தேன்.

ஒரு கனவு. அலாவுதீன் பூதம் மாதிரி ஒரு பூதம் என்னை விழுங்க வருகிறது. அரண்டு போய் எழுந்து பார்த்தால் கனவு என்று தெரிந்தது. உடம்பெல்லாம் பயத்தில் வேர்த்துப்போய்விட்டது. எங்கு பார்த்தாலும் கலர் கலராக கட்டங்களே தெரிகின்றன. எதை என்ன செய்வது என்று புரியவில்லை. இருட்டு ரூமுக்குள் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது என்று சொல்வார்கள். அது போல ஆகிவிட்டது.   

யோசித்தேன். இந்த வேலை நமக்கு உதவாது. பழைய சிஸ்டம்தான் சரி என்று எல்லாவற்றையும் அழித்துவிட்டு விண்டோஸ் 7 க்குத் திரும்பி விட்டேன். இந்த விண்டோஸ் 8 சமாசாரம் டேப்ளட் பிசி, மற்றும் 24 மணிநேர இன்டெர்நெட், கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்யத் தேவையில்லாத சூழ்நிலை ஆகியவற்றுக்கு மிகவும் உகந்தது. இந்த விண்டோஸ் 8 இன்ஸ்டலேஷன் சி.டி. சும்மா இருக்கிறது. யாருக்காவது தேவைப்பட்டால் தட்சிணையுடன் தானம் கொடுக்கப்படும். முந்தவும்.
 
இப்படியாக சட்டி சுட்டதடா, கை விட்டதடா என்று கையைச் சுட்டுக்கொண்டேன்.                                     

காலை 7.45 மணி.

பின் குறிப்பு: இன்னும் விண்டோஸ் 8 ஐ அழிக்கவில்லை. இவ்வளவு வேலை செய்து அதை இன்ஸ்டால் பண்ணியிருக்கிறேன், அதை சும்மா விடுவதா என்று உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று அதை நான் ஜெயிக்கவேண்டும் இல்லை அது என்னை ஜெயிக்கவேண்டும். இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று துணிந்து விட்டேன்.                                                                                                                                          

புதன், 5 செப்டம்பர், 2012

மாணவர்களுடன் ஆல் இந்தியா டூர்-2


சென்னையிலிருந்து முதலில் ஹைதராபாத் போனோம். அங்கு ஹைதராபாத் ஸ்டேஷனில் எங்கள் கோச்சை நிறுத்தினார்கள். அது ஒரு சின்ன ஸ்டேஷன். அங்கு நிறுத்துவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. அங்கிருந்து மும்பை விக்டோரியா ஸ்டேஷனுக்குப் போகும் ரயிலில் இந்தக் கோச்சைச் சேர்க்கவேண்டும். அதற்கு ஜெனரல் மேனேஜர் ஆபீஸ் ஆர்டர் வேண்டும் என்றார்கள்.

நாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டு இருப்பது என்னவென்றால், இன்ஜினும், டிரைவரும், கோச்சுகளும் இருந்தால் ரயில் ஓடும் என்றுதானே நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அது எவ்வளவு தவறான கருத்து என்பது எனக்கு அங்குதான் தெரிந்தது. ஜெனரல் மேனேஜர் ஆபீஸ் என்பது வழக்கமாக எல்லா ஊர்களிலும், ஸ்டேஷன் சப்தம் கேட்காமல், ஸ்டேஷன் நாற்றங்கள் எட்டாமல், ஐந்து கி.மீ. தூரத்தில் வைத்திருக்கிறார்கள்.   

இந்த ஜெனரல் மேனேஜர் ஆபீஸில் ஒரு மூலையில்அசிஸ்டன்ட் கமெர்ஷியல் கிளார்க்என்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் அனைத்து ரயில்களையும் ஓட்டுபவர். ரயில் இன்ஜினில் அவர் தன் ஆயுளில் ஒரு நாள்கூட ஏறிப் பார்த்திருக்க மாட்டார். ஆனாலும் அவர் ஆர்டர் போடாவிட்டால் ஒரு ரயிலும் ஓடாது. இது நடைமுறை உண்மை. அவர்தான் அந்த ஸ்டேஷனில் இருக்கும் எல்லா கோச்சுகளுக்கும், (எல்லா ரயில் கோச்சுகளுக்கும் நெம்பர் உண்டு, பார்த்திருப்பீர்கள்). இன்ஜின்களுக்கும் கணக்கு வைத்திருக்கிறார். அந்த ஸ்டேஷனிலிருந்து என்னென்ன ரயில்கள், எந்தெந்த ஊர்களுக்கு, எந்தெந்த நேரங்களில் புறப்படுகின்றன என்பது அவருக்கு மனப்பாடம். அந்த ரயில்களுக்கு எந்த கோச்சுகள், எந்த வரிசையில் இணைக்கப்படவேண்டும், எத்தனை மணிக்கு பிளாட்பாரத்திற்கு அனுப்பவேண்டும் என்று ஆர்டர் போட்டு, ஷண்டிங்க் யார்டுக்கு அனுப்பினால்தான் அந்த ரயில் குறித்த நேரத்திற்கு புறப்படும். அவர் ஏதாவது சொதப்பி விட்டால் அவ்வளவுதான், அன்று அந்த ரயில் புறப்படாது. ஜெனரல் மேனேஜர் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இவரிடம் போய், நாங்கள் இந்த ஊரிலிருந்து, இன்ன ரயிலில், ஸ்பெஷல் கோச்சில், இன்று வந்திருக்கிறோம். இத்தனாம் தேதி, இன்ன ரயிலில் இன்ன ஊருக்குப் போக வேண்டுமென்று சொன்னால், அது பற்றிய ஆர்டர் வந்திருக்கிறதா என்று பார்ப்பார். நாம் டூர் புரொக்ராம் போட்டு, ரயில்வே அப்ரூவல் வாங்கியிருக்கும் ஊரிலுள்ள ரயில்வே ஜெனரல் மேனேஜர் ஆபீசில் இருந்து, நம் டூர் முழுவதற்கும் உள்ள எல்லா விபரங்களையும் சம்பந்தப்பட்ட எல்லா ஸடேஷன்களுக்கும் (அதாவது அந்தந்த ஜெனரல் மேனேஜர் ஆபீசுக்கு) அனுப்பியிருப்பார்கள். இந்த ஆர்டரை அந்த கிளார்க் வைத்திருப்பார்

அதைப் பார்த்து, நாம் சொலும் விபரங்களும், அந்த ஆர்டரில் இருக்கும் விபரங்களும் ஒத்துப் போனால், சரி அப்ளிகேஷன் எழுதிக் கொடுங்கள் என்பார். நம் கல்லூரி லெட்டர் பேடில் அப்ளிகேஷன் எழுதி, அதற்குண்டான காணிக்கையுடன் கொடுத்து விட்டால் நம் வேலை முடிந்தது. சரி, நீங்கள் போகலாம், நான் ஆர்டர் அனுப்பிவிடுகிறேன், என்பார். நம் கோச், நாம் போகவேண்டிய ரயிலில் சேர்ந்து விடும். இந்த நடைமுறையைச் சரியாக கடைப்பிடிக்காமல், எங்களுக்கு முன் சென்ற இரண்டு குழுக்களும் ஹௌரா ஸ்டேஷனில் பட்ட அனுபவம் ஒரு தனிக்கதை (பின்னால் சொல்லுகிறேன்)

இந்த நடைமுறையைக் கண்டுபிடிக்க, முதல் ஊரில் மிகவும் கஷ்டப்பட்டோம். பிறகு அடுத்த ஊர்களில் சுலபமாக இந்த வேலையைச் செய்து முடித்தோம். இப்படி நாங்கள் ஹைதராபாத்தில் பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்து முடித்த பிறகு, பம்பாய் (அந்தக்காலத்தில் அது பம்பாயாகத்தான் இருந்தது. இப்போதுதான் மும்பை) புறப்பட்டோம்.