திங்கள், 26 ஏப்ரல், 2010

பத்ரிநாத், கேதார்நாத் பயணம்




இந்தப்படம் நிறையப் பேருக்கு அறிமுகம் ஆன படம். ரிஷிகேஷ் லக்ஷ்மண் ஜூலா எனப்படும் தொங்குபாலம். நான் குடும்பத்துடன் ஜூலை மாதம் போகலாமென்று இருக்கிறேன். போய் வந்த பிறகு உங்களை அறுப்பதற்கு நிறைய விஷயங்கள் கொண்டு வரலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். அந்த அறுவைகளைத் தாங்கக் கூடியவர்களெல்லாம் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க பார்க்கலாம்.

சத்தமே கேக்கலயே, இன்னும் கொஞ்சம் பலமா. ம்ம்ம், இப்ப கேக்குது. ரெடியா இருங்க J

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

ஆனைமலையில் ஆனை பிடிக்கும் கதை

 
ஆனைமலை ஒரு அமைதியான ஊர். நகரமுமில்லாமல் கிராமமுமில்லாமல் ஒரு நடுத்தர ஊர். நல்ல செழிப்பான பூமி. தெற்கே பத்து கி.மீ. தூரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை. அங்கிருந்து உற்பத்தியாகும் ஆளியாறு ஆனைமலையை ஒட்டி ஓடுகிறது. ஆற்றிலிருந்து நீர் எடுத்து நெல் பாசனம் நடக்கும். பச்சைப்பசேல் என்று பச்சைக்கம்பளம் விரித்தாற்போல் நெல் வயல்கள். ஆற்று மட்டத்திற்கு மேல் உள்ள நிலங்களில் நிலக்கடலை விவசாயம். மேற்குத்தொடர்ச்சி மலைகள் பக்கத்தில் இருந்ததால் நல்ல மழை பெய்யும். மானாவாரியாகவே நிலக்கடலை மிக நன்றாக விளையும். ஆனி, ஆடி மாதங்களில் அங்கு போனால் இயற்கைக்காட்சிகள் கண் கொள்ளாமல் இருக்கும். ஒவ்வொருவருக்கும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பூமி சொந்தம். விவசாயம் அபரிமிதமாக விளைந்ததால் ஊரில் எங்கு பார்த்தாலும் லக்ஷிமி கடாட்சமாய் இருக்கும்.



ஆனைமலைக்குத் தெற்கே ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது வேட்டைக்காரன்புதூர் கிராமம். வேட்டைக்காரன்புதூரில் பெரும்பாலும் கவுண்டர்கள். ஆனைமலையில் முதலியார்களும் முஸ்லிம்களும் அதிகம். இரண்டு ஊர்க்காரர்களும் பெரும் நிலச்சுவான்தாரர்கள். இரண்டு ஊர்களுக்குள்ளும் யார் பெரியவர்கள் என்பதில் போட்டி. ஒரு கி.மீ. தூரத்தில் இரண்டு கவர்மெண்ட் உயர்நிலைப்பள்ளிகள்.
இரண்டு ஊர்க்காரர்களுக்கும் இரண்டு பொழுதுபோக்குகள் உண்டு. வேட்டைக்காரன்புதூர்க்காரர்கள் யானை வேட்டையாடுவார்கள். துப்பாக்கி எடுத்துக்கொண்டு காட்டுக்குள் போய் ஆடும் வேட்டையல்ல. தங்கள் தங்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு ஆடும் வேட்டை. வேட்டைக்காரன்புதூரில் ஒவ்வொரு கவுண்டர் வீட்டிலும் அப்படி வேட்டையாடிய யானைகளின் தந்தங்களை ஒரு ஆளுயர மர ஸ்டேண்ட் செய்து அதில் பொருத்தி வைத்திருப்பார்கள்.
மலை ஓரமாக உள்ள பகுதிகளில் அந்த வருட விவசாயம் முடிந்த பிறகு நிலங்கள் தரிசாக கிடக்கும். பக்கத்திலுள்ள மலைகளில் யானைகள் நிறைய உண்டு. வெயில் காலங்களில் மலைகளிலிருந்து யானைகள் சமவெளி நிலங்களுக்கு மேய்ச்சலுக்கு வருவதுண்டு. யானைகளின் இந்த குணத்தைப்பயன்படுத்தி அவைகளை வேட்டையாடுவார்கள் (அதாவது பிடிப்பார்கள்).
யானை வழக்கமாக வரும் வழியில் 15 ஆடி ஆழத்தில் ஒரு பள்ளம் தோண்டுவார்கள். இந்தப்பள்ளம் கீழே போகப்போக குறுகலாக, அதாவது கூம்பு வடிவத்தில் இருக்கும். அதன்மேல் குறுக்கும் நெடுக்குமாக மூங்கில் தப்பைகளைப் போட்டு அதன்மேல் தென்னை ஓலைகளை பரப்பி விட்டு, அதன் மேல் லேசாக மண் போடுவார்கள். சிறுவர்கள் அதன் மேல் நடக்கலாம், பெரியவர்கள் நடக்கமுடியாது. இந்த மண்ணில் சோள விதைகளை அடர்த்தியாகத்தூவி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து விடுவார்கள். ஒரு மாதத்தில் சோளம் நெருக்கமாக முளைத்து  ஒரு இரண்டடி வளர்ந்திருக்கும். இதுதான் யானை பிடிக்கும் குழி.
இந்தக்குழிக்குத் தூரமாக 10-15 ஆட்கள் இரவும் பகலும் விழிப்பாக இருப்பார்கள். அவர்கள் தாரை, தப்பட்டை, குத்தீட்டி, கள்ளிப்பால், தண்ணீர் எல்லாம் வைத்திருப்பார்கள். அவையெல்லாம் பிற்பாடு தேவைப்படும். யானைகள் இரவில் கூட்டமாக மேய வரும்போது ஏதாவது ஒரு யானை இந்த சோளப்பயிரின் வாசத்தை மோப்பம் பிடித்து அதை மேய வரும். அந்தப் பயிரின் நடுப்பாகத்திற்குப் போகும்போது அந்த மூங்கில் தப்பைகள் ஒடிந்து யானை குழிக்குள் விழுந்து விடும். விழுந்த யானை ஆக்ரோஷத்துடன் குழியிலிருந்து வெளியில் வர முயற்சி செய்யும். அதை அப்படியே விட்டு விட்டால் அது குழியைச் சிறுகச்சிறுகத் தூர்த்து மேலே வந்துவிடும். கூட வந்த யானைகளும் விழுந்த யானையின் உதவிக்கு வரும்.  
ஆனால் தூரத்தில் காவலாக இருந்த ஆட்கள் யானை குழியில் விழுந்த சத்தம் கேட்டவுடனே தாரை தப்பட்டைகளை முழக்கிக்கொண்டு குழியை நோக்கி ஓடிவருவார்கள். இந்த சத்தத்தைக் கேட்ட மற்ற யானைகள் காட்டுக்குள் போய்விடும். குழிக்குள் விழுந்த யானை மிகவும் கோபமாக இருக்கும். முதலில் அந்தக்குழிக்குள் நிறைய தண்ணீரை ஊற்றுவார்கள். யானை குழிக்குள் இருந்து மேலே வர முயற்சிக்கும்போது குழிக்குள் இருக்கும் மண்ணும் தண்ணீரும் சேர்ந்து சகதியாகி யானையின் கால்கள் சகதிக்குள் சிக்கிக்கொண்டுவிடும். அப்போது யானை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். அதைத்தணிக்க அதன் மேல் கள்ளிப்பாலை ஊற்றுவார்கள். கள்ளிப்பால் யானைத்தோலின்மேல் பட்டு புண்ணாகி யானைக்கு மிகுந்த வேதனை தரும். இந்த களேபரம் நடக்கும் சத்தத்தைக்கேட்டு அக்கம் பக்கத்திலிருந்து பெரும் கூட்டம் சேர்ந்துவிடும். எல்லோருமாகச் சேர்ந்து அந்த யானையை குத்தீட்டியால் குத்தியும், கற்களால் அடித்தும் சித்திரவதை செய்வார்கள்.
இதையெல்லாம் வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கில் ஜனங்கள் கூடிவிடுவார்கள். அவர்களுக்கும் மற்ற வேலையாட்களுக்குமாக ஓயாமல் சாப்பாடு தயாராகிக்கொண்டு இருக்கும். ஒரே கல்யாணக் கூட்டமாக இருக்கும்.
இப்படி அந்த யானையை துன்பறுத்துவதால் கொஞ்ச நேரத்தில் யானை மிகவும் சோர்ந்துவிடும். பிறகு அதை மேலே கொண்டு வருவதற்கு பழக்கப்பட்ட யானையையும் ஆட்களையும் கேரளாவில் இருந்து வரவழைப்பார்கள். அவர்கள் வந்து அந்த யானையை கயிறுகள் கட்டி மெதுவாக வெளியில் கொண்டு வருவார்கள். வெளியில் அந்த யானையை அடைத்து வைக்க தனி கொட்டகை தயாரிப்பார்கள். அது ஏறக்குறைய ஒரு ஜெயில் மாதிரி இருக்கும். அங்கு வைத்து அதைப்பழக்குவார்கள். நன்றாகப்பழக்கின யானையை நல்ல விலைக்கு விற்க முடியும்.   
நான் ஆனைமலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த மாதிரி ஒரு யானை குழியில் விழுந்துவிட்டது. ஏகப்பட்ட பேர் வேடிக்கை பார்க்கப்போனார்கள். நான் போகவில்லை. நான் எழுதியதெல்லாம் கேள்வி ஞானம்தானே தவிர அனுபவஞானம் இல்லை. அந்த யானையை வெளியில் கொண்டு வந்தவுடனே உடல் உபாதை தாங்காமல் கீழேவிழுந்து இறந்து போனது என்று கேள்விப்பட்டேன்.
ஆனைமலைக்காரர்களின் பொழுதுபோக்கு என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாமா?

ஒரு முக்கிய அறிவிப்பு

இந்த பிளாக்கைத்தொடரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
 
என்னுடைய இந்த "சாமியின் மன அலைகள்" என்கிற பிளாக்கு நான் சொல்வதைக் கேட்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது. எனக்குத்தெரிந்த புத்திமதி எல்லாம் சொல்லிப்பார்த்து சலித்துப்போய் எக்கேடும் கெட்டுப்போ என்று கை கழுவி விட்டேன். யாரும் சிபாரிசுக்கு வரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய சொற்படி நடக்கும் வேறொரு பிளாக்கை சீக்கிரம் தத்தெடுத்து விடுகிறேன். அதையும் என்னுடைய விருப்பத்திற்கு பழக்க சிறிது நாள் பிடிக்கும். அதன் பிறகு பதிவுகளைத்தொடருகிறேன். இந்த பிளாக்கில் உள்ளவைகளையும்  ஒவ்வொன்றாக மறுபதிவு செய்கிறேன். அது வரையிலும் இந்த பிளாக்குக்கு தண்டச்சோறு போடுகிறேன்.

அன்பர்கள் யாவரும் வழக்கம்போல் தங்களுடைய ஆதரவை தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிரமங்களுக்கு மன்னிக்கவும். வேறு வழி தெரியாததால்தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

உங்கள் ஆதரவை வேண்டும் அன்பன், தாத்தா,
ப.கந்தசாமி.

பின் குறிப்பு: என்னுடைய இன்னொரு பிளாக்கான  "மசக்கவுண்டன் கிறுக்கல்கள்"  அதுவும் இதோடு சேர்ந்து கொழுப்பெடுத்துத் திரிகிறது. எல்லாம் இந்த "விண்டோஸ்-7" O.S.  நிறுவியதின் விளைவுகள். அதையும் இதனுடன் சேர்த்து கை கழுவப்போகிறேன். காலுக்கு சேராத செருப்பை கழட்டி எறி என்று பெரியவர்கள் சொல்லிப்போயிருக்கிறார்கள். மூத்தோர் சொல்லைக் கடைப்பிடிப்பதே நமது கொள்கை.

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

இடைச்செருகல் - ரத்த பூமி


 ஒண்ணும் புரியல,
ஒரு நாளைக்கு ரத்தம் ஆறா ஓடுது,
அடுத்த நாள் பன்னீரும் ரோஜாவுமா மணக்குது.
நடுவில நம்ம மண்டெய நொழச்சா
காணாம போயிடும்போல இருக்குது.
இதுல எப்படி நானு நீஞ்சி
கரை சேரப்போறேன்னு தெரியல.
முருகனே நீதான் துணை.

வியாழன், 22 ஏப்ரல், 2010

நான் வேலைக்குப் போன கதை-பாகம் ௩ மறு பதிவு



நான் வேலைக்குப்போன கதையில் பெட்டி வாங்கப்போய், அங்கிருந்து ஆளவந்தார் கதைக்குப்போய், பிறகு விக்கிரமாதித்தன் கதையில் கொஞ்சம் பார்த்துவிட்டு வந்திருக்கிறோம். அரும்பாவூர் அவர்கள் நான் முதல் மாதம் எவ்வளவு சம்பளம் வாங்கினேன் என்று அறிய ஆவலாய்க் காத்துக்கொண்டு இருக்கிறார். அவரை மேலும் காக்க வைப்பதில் நியாயமில்லை. ஆகவே இந்தக்கதையை தொடருகிறேன். விக்கிரமாதித்தன் கதை என்ன ஆயிற்று என்று உங்களில் சிலர் கேட்பது காதில் விழுகிறது. அதையும் அவ்வப்போது நடுநடுவில் எழுதுகிறேன். ஒரு மாற்றம் இருந்தால்தானே சுவை இருக்கும்.
ஒரு சுபயோக சுபதினத்தில், அதாவது 1956 ம் வருடம் சுதந்திர தினத்தன்று வேலைக்குச் சேருவதற்காகப் புறப்பட்டேன். வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி பொள்ளாச்சி பஸ் ஸ்டேண்டிற்கு சென்றேன். என் அத்தை-மாமா, கோவை-பொள்ளாச்சி ரூட்டில் டிரைவராக இருக்கிறார் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். அவர் கோவையில் ட்ரிப் எடுக்கும் நேரத்தை முதலிலேயே கேட்டு வைத்திருந்தேன். சரியாக அரை மணி நேரம் முன்பாக பஸ் ஸ்டேண்ட் சென்றுவிட்டேன். மாமா பஸ் நின்றுகொண்டிருந்தது. ஒரு ஆளைப்பிடித்து பெட்டியை முன் சீட்டுக்குப்பக்கத்தில் வைத்தேன். சாதாரணமாக அவ்வளவு பெரிய பெட்டியை பஸ் டாப்பில்தான் ஏற்றவேண்டும். ஆனால் நான் டிரைவரின் மருமானல்லவா, அதனால் இந்த சலுகை. மாமா காபி குடித்துவிட்டு வந்தார். டைம் ஆனவுடன் பஸ் புறப்பட்டது.

சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து பொள்ளாச்சி போய் சேர்ந்தோம். அங்கிருந்து வேறு பஸ்ஸில் ஏறி ஆனைமலை போகவேண்டும். நான் இதற்கு முன் ஆனைமலை போனதில்லை. மாமா ஆனைலை போகும் பஸ்ஸின் டிரைவரைப் பிடித்து விவரம் சொல்லி என்னை அவர் பஸ்ஸில் ஏற்றிவிட்டார். என்ன விவரம் என்றால், பையன் ஆனைமலையில் வேலைக்கு சேரப்போகிறான். அவன் ஊருக்குப்புதிது. அங்கு யாரையாவது பிடித்து அவனுக்கு வேண்டிய வசதிகளைச் செய்யுமாறு ஏற்பாடு பண்ணுங்கள், என்கிற விவரம்தான்.
ஆனைமலை பஸ் புறப்பட்டது. போகும் வழியில் பெரும் மழை. எங்கே போகிறோம் என்றே தெரியவில்லை. எப்படியோ ஆனைமலை வந்து சேர்ந்தோம். மழை விட்டுவிட்டது. பஸ் டிரைவர் ஒரு ஆளைக்கூப்பிட்டு என்னைக்காண்பித்து இவரை அந்த ஆபீசுக்கு கூட்டிக்கொண்டு போய்க் காண்பி என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.

அன்று சுதந்திர நாளானதால் ஆபீஸ் லீவு. இருந்தாலும் ஆபீசர் வீடும் ஆபீசும் ஒன்றாக இருந்ததால் அவரைப்பார்த்தேன். அவர், சரி, நாளைக்கு டூட்டியில் சேர்ந்து கொள்ளலாம், இன்று நீ தங்குவதற்கான ஏற்பாடுகளைக் கவனி என்று சொல்லி ஒரு பியூனைக் கூட அனுப்பினார். அந்த ஊரில் ஒரு விவசாய டெமான்ஸ்ரேட்டர் உண்டு. அவர் ஒரு வீட்டின் முன்புற அறையில் தங்கி இருந்தார். அந்த வீட்டிலேயே இன்னொரு அறையும் இருந்தது. பியூன் அதை எனக்குப்பேசி என்னைக்குடி வைத்தான்.
மறுநாள் பிற்பகலில் வேலையில் சேர்ந்தேன். என்னுடன் படித்த இன்னொருவனுக்கும் அதே ஆபீஸில் வேலைக்குச்சேர உத்திரவு வந்திருந்த து. அவனும் நானும் ஒன்றாகத்தான் வேலைக்கு சேர்ந்தோம். ஆபீசர் எங்களுக்கு வேலைகளைப்பற்றி சொல்லிவிட்டு, பண்ணையைச்சுற்றிக்காட்ட கூட்டிக்கொண்டு போனார். சொல்ல மறந்துவிட்டேன், என்னிடம் ஒரு பழைய சைக்கிள் இருந்தது. அதையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு வந்திருந்தேன். பண்ணை ஒரு கி.மீ. தூரத்தில் இருந்தது. மூன்று பேரும் சைக்கிளில் போனோம். பண்ணையை சுற்றிப்பார்த்தோம். செய்ய வேண்டிய வேலைகளைப்பற்றி பொதுவாக சொன்னார்.

காலேஜில் படித்ததிற்கும் பண்ணை வேலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆட்களை வேலை வங்குவது, பண்ணை வேலைகளை மேற்பார்வையிடுவது, பயிர் பரிசோதனை விவரங்கள் சேகரித்தல், ரிக்கார்டுகள் பராமரித்தல், ஸ்டாக் கணக்குகள் பராமரித்தல், ஆபீஸ் கடிதங்கள், ஆபீஸ் கணக்கு வழக்குகள் என்று பல வேலைகளில் மூழ்கிப்போய், நாள் கிழமை கூட மறந்து போய் விட்டன. இந்த நடைமுறைகளை எல்லாம் பொறுமையாக கத்துக்கொடுக்கவும் யாரும் இல்லை. ஆபீசர் இதைச்செய்யவேண்டும் என்றுதான் சொல்வாரேயொழிய, எப்படிச்செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க மாட்டார். அந்த வேலையை செய்து முடிக்காவிட்டால் டோஸ் விடுவார். அவ்வளவுதான்.


இப்படியாக வேலையிலேயே முழுகிப்போய் இருந்தபோது ஒன்றாம் தேதி வந்தது. சம்பள பட்டியல் போட்டு டிரெஷரிக்கு அனுப்பி பாஸ்பண்ணி, டோகன் வாங்கி, பிறகு அங்கிருந்து ஸ்டேட் பாங்க் போய் பணம் வாங்கவேண்டும். எனக்கும் சம்பளம் போட்டார்கள். என்னவோ பெரிய ஆபீஸ், பத்து பேர் அக்கவுண்ட்ஸ் பார்க்கிறர்கள் என்று கற்பனை செய்யாதீர்கள். ஒரே ஒரு கிளார்க் கம் டைப்பிஸ்ட் மட்டும்தான். நாங்கள் இரண்டு பேர் டெக்னிகல் ஸ்டாஃப். நாங்களும் கிளார்க்கும் சேர்ந்து சம்பள பட்டியல் தயார் செய்தோம்.
சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதத்திற்கு சம்பளம் நூறு ரூபாய், பஞ்சப்படி இருபத்தி நான்கு ரூபாய், ஆக மொத்தம் நூற்றி இருபத்திநான்கு ரூபாய். முதல் மாதம் இதில் 15 / 31 பங்கு அதாவது 60 ரூபாய் சம்பளம். ஆஹா, நானும் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் வேலையோ நெட்டி முறிக்கின்றது.
இந்த நிலமையில் என்கூட சேர்ந்த என் வகுப்புத்தோழனுக்கும் ஆபீசருக்கும் ஒத்து வரவில்லை. அவனுக்கு ஒருநாள் திடீர் தந்தி. “பாட்டிக்கு உடம்பு சரியில்லை. உடனே வரவும்.” இந்த தந்தியைக் காண்பித்து இரண்டு நாள் லீவு போட்டுவிட்டு போய்விட்டான். போனவன் போனவனே. லீவை ஒரு மாத த்திற்கு நீட்டித்துவிட்டான். எல்லா வேலையையும் நானே பார்க்க வேண்டியதாயிற்று. இதன் இடையில் என் ஆபீசரும் தன்னுடைய தங்கைக்கு கல்யாணம் என்று 15 நாள் லீவு போட்டுவிட்டுப் போய்விட்டார்.
அவ்வளவுதான். கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற்போலத்தான். எப்படி சமாளித்தேன், என்ன ஆயிற்று ?
அடுத்த பதிவில் பார்ப்போம்….