வெள்ளி, 18 மார்ச், 2011

சோர்வும் சலிப்பும்


இந்த இரண்டு வார்த்தைகளையும் உடல், மனம் ஆகியவை சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் பொதுவாகவே உபயோகிப்பதுண்டு. இருந்தாலும் நான் ஒரு வித்தியாசத்தைப் புகுத்தி இருக்கிறேன்.
அதாவது:

1.   சோர்வு என்பது சாதாரணமாக உடல் சோர்வைக் குறிக்கும். இது உடல் தன் சக்திக்கு மீறி உழைக்கும்போது ஏற்படுவது. இதற்குத் தீர்வு ஓய்வு எடுப்பதுதான். இது ஒரு இயற்கை விதி.

2.   சலிப்பு மன ரீதியாக ஏற்படுவது. வாழ்க்கை ஒரே கதியில் ஓடிக்கொண்டிருந்தால் சலிப்பு ஏற்படுவது இயற்கை.

பதிவுலகத்தில் சோர்வும் சலிப்பும் மலிந்திருக்கின்றன என்பது என் அபிப்பிராயம். பலர் ஆர்வத்தில் பதிவுகள் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் கொஞ்ச காலத்திலேயே காணாமல் போகிறார்கள். ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களில் மறைந்துவிடும் பதிவுகள் ஏராளம். மூன்று வருடங்களுக்கு மேல் இருக்கும் பதிவர்களில் கூட சிலர்தான் தொடர்ந்து பதிவுகள் போட்டு வருகிறார்கள். 

இதற்கான காரணங்களை யாராவது ஆராய்ந்து சொன்னால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பூனைக்கு மணி கட்டுவது யார்?
எனக்குத்தெரிந்த சில காரணங்களைப் பதிவர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

1.   பதிவுக்கான பொருள்கள் அமையாமை.
எதைப்பற்றி எழுதுவது என்பது பல பதிவர்களுக்கு ஒரு தலையாய வலி (தலைவலி). சிலர் வழியில் பார்த்த ஒரு சிறு உரையாடலைக் கூட வைத்து ஒரு பதிவு தேற்றி விடுவார்கள். அந்தக்கலை எல்லோருக்கும் வருவதில்லை. இவர்களுக்கு ஆதரவாகத்தான் பல பதிவர்கள் “தொடர் பதிவு” என்ற உத்தியைக் கடைப்பிடிக்கிறார்கள்.

2.   அடுத்தபடியாக எழுதுவதற்குத் தேவையானது கற்பனைத்திறன்.
இது கொஞ்சம் கஷ்டமான விஷயம். கடையில் வாங்கக் கூடிய சரக்குமில்லை. கம்ப்யூட்டர் இவர்களுக்காகவே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் copy, paste வசதியைச் செய்து கொடுத்திருக்கிறது. யாரும் கமென்ட் போடாத பதிவைக் காப்பி, பேஸ்ட் செய்தால் வெளியில் யாருக்கும் தெரியாது.

3.   ஊக்கம் இல்லாமை.
பாலோயர்ஸ், ஹிட்ஸ், பின்னூட்டங்கள் வராவிட்டால் பலர் மனமுடைந்து தற்கொலை லெவலுக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் பதிவுலகத்திற்குள் வந்ததே தவறு. அவர்கள் போவதே பதிவுலகத்துற்கு அவர்கள் செய்யும் தியாகம்.

4.   ஆபீஸில் டேமேஜர் தொந்திரவுகள்.
இந்தத் தொந்திரவு பல விதங்களில் இருக்கும். குறிப்பாக இணையக் கட்டுப்பாடுகள். இது கொஞ்சம் சீரியஸ் மேட்டர். வேலைக்கே உலை வைக்கும் அபாயமும் உண்டு. என்னைப்போல் பென்ஷன் வாங்கிக் கொண்டு வீட்டில் சொந்தக் கம்ப்யூட்டரில் பதிவு போடும் ஆசாமிகள் ரொம்பக் கம்மி.

5.   அனானி பின்னூட்டங்கள்.
அனானியாகவோ இல்லை ஒரு பெயருடனோ, ஒரு பதிவரைப் பற்றி தரக்குறைவான வகையில் பின்னூட்டங்கள் வந்தால், நன்கு இரும்பு இதயம் கொண்ட பதிவர்களைத் தவிர மற்றவர்கள் ஆடிப்போய் விடுகிறார்கள். இது இயற்கை. இதற்குப் பயந்து பல பதிவர்கள் நமக்கு எதற்கு வம்பு என்று ஓடிப்போகிறார்கள். பொதுவெளிக்கு வந்துவிட்டால் கல் வீச்சுக்குப் பயந்து விடக்கூடாது.  அதே கல்லைப்பிடித்து திரும்ப வீசும் தைரியம் வேண்டும்.

இதையெல்லாம் கடைப்பிடித்து, தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பதிவுகள் போட்டு எல்லோரும் பிரபல பதிவர்கள் ஆக வாழ்த்துக்கள்.

திங்கள், 14 மார்ச், 2011

காப்பி குடிப்பது எப்படி?

காப்பி குடிக்கத் தெரியாதா எங்களுக்கு! நேத்துப்பொறந்த குழந்தை கூட இன்னைக்கு காப்பி குடிக்கறது என்று சொல்பவர்கள் சற்றுப் பொறுக்கவும். இது ரோடோரக் கடையில வாங்கி நாலு மொடக்குல குடிக்கற காப்பி மாதிரி இல்லை. ஜப்பானில் “டீ செரிமனி” என்று வைப்பார்களே அந்த மாதிரி.

{ பாவம் ஜப்பான்காரர்கள் ! விதி அவர்களுடன் எப்போதும் விளையாடுகிறது. யாருடனும் வம்புக்குப் போகாமல் அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களை இயற்கை ஏன் இவ்வாறு பழி வாங்குகிறது என்று தெரியவில்லை. அவர்களுக்கு உதவ நாம் என்ன செய்யமுடியும் என்றும் தெரியவில்லை. இந்தப் பேரழிவிலிருந்து மீண்டுவரத் தேவையான மன தைரியத்தை அவர்களுக்குக் கொடுக்க இறைவனை வேண்டிக்கொள்வோம். உயிர்நீத்த அனைத்து ஆத்மாக்களும் அமைதி பெற ஆண்டவனை வேண்டுவோம்.} 

இரண்டு பேர் காப்பி குடிக்கவேண்டும் என்றால் தேவையானவைகள் - இரண்டு பழைய காலத்து டம்ளர்கள். கால் படிக்குக் கம்மியில்லாமல் கொள்ளளவு இருக்கவேண்டும். அரைப்படி பிடிக்கக் கூடிய வாழைப்பூ சொம்பு ஒன்று. ஒரு படி ஒரு உப்புப்பொரி. சாதாரணப் பொரி இரண்டு உப்புப்பொரி என்று சொல்வார்கள். அது கொஞ்சம் கசக்கும்.
 
கிராமங்களில், வெளியூரிலிருந்து யாராவது ஒரம்பரை (உறவினர்) வந்தால் இரண்டு பேரும் (அதாவது வீட்டுக்காரரும், ஒரம்பரைக்கு வந்தவரும்) வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொள்வார்கள். வீட்டுக்காரர் உள்ளே பார்த்து “அம்மணீ, யாரு வந்திருக்காங்கன்னு பாரு” ன்னு குரல் கொடுப்பார். வூட்டு அம்மணி வெளியில் வந்து பார்த்துவிட்டு, வாங்கண்ணா, ஊர்ல அண்ணியெல்லாம் எப்படி இருக்காங்க, எங்களையெல்லாம் மறந்துட்டீங்களாட்டம் இருக்குது, அப்படீன்னு குசலம் விசாரித்து விட்டு, வீட்டுக்குள் போய் ஒரு சொம்பில் குடிப்பதற்கு தண்ணீரும் கூட ஒரு தட்டில் வெத்தலபாக்கும் கொண்டு வந்து வைப்பாங்க. அண்ணா, வெத்தில போடுங்க, காப்பி கொண்டார்றேன்னுட்டு உள்ள போயிடுவாங்க. 

அப்புறமா காப்பி வரும். ரெண்டு டம்ளர்ல நெறயக் காப்பியும், கூட ஒரு வாழைப்பூ சொம்பில நெறய காப்பியும் கொண்டு வந்து வைப்பாங்க. கூடவே ஒரு தட்டத்தில நெறய பொரியும் கொண்டு வந்து வைப்பாங்க. அந்தக்காப்பிய கொஞ்சம் குடிச்சுட்டு, அப்பறமா பொரிய எடுத்து காப்பி டம்ளர்ல போட்டுக்குவாங்க. அப்புறம் அந்தப் பொரியோட காப்பியக் குடிப்பாங்க. காப்பி அரை டம்ளர் ஆனவுடன் வாழைப்பூ சொம்பில இருக்கிற காப்பிய டம்ளர்ல ஊத்தி, பொரியையும் போட்டு டம்ளரை நெறச்சுக்குவாங்க. டம்ளர்ல காப்பி குறையக் குறைய சொம்பில இருந்து நெரப்பீக்குவாங்க. அப்பப்ப பொரியையும் போட்டுக்குவாங்க.

கொண்டு வந்து வச்ச காப்பியெல்லாம் தீர்ந்ததுக்கு அப்புறமும் காப்பி வேணும்போல இருந்திச்சுன்னா வீட்டுக்காரர் உள்ள பாத்து இன்னும் கொஞ்சம் காப்பித்தண்ணி கொண்டா அம்மணின்னு கொரல் குடுப்பாரு. சித்த நேரத்துல மொத மாதிரியே ரண்டு டம்ளர்ல காப்பியும், ஒரு சொம்பு நெறய காப்பியும், ஒரு தட்டத்தில பொரியும் வந்துடும். அப்பறம் என்ன, பழய மாதிரியே ரவுண்டு கட்ட வேண்டியதுதான்.

மத்தியானம் சாப்பாடு சாப்பிடற மட்டும் இப்படியேதானுங்க குடிச்சிட்டிருப்பாங்க. இதுதாங்க காப்பி குடிக்கிற முறைங்க.

ஞாயிறு, 13 மார்ச், 2011

ஆஹா, தேர்தல் வந்து விட்டது


எல்லோரும் தேர்தலைப்பற்றி பதிவுகள் போட்டுக்கொண்டிருக்கும்போது நான் மட்டும் சும்மா இருந்தால் நன்றாக இருக்குமா? ஆகவேதான் இந்தப் பதிவு.
 
சமீபத்தில், 1951 ம் வருடம் டிசம்பர் மாதம். நான் SSLC பாஸ் ( நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள், “பாஆஆஆஆஆஆஆஆஆஸ்” ) செய்துவிட்டு காலேஜில் இன்டர்மீடியேட்டில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். அரை வருடப் பரீட்சை முடிந்து லீவு விட்டிருந்தார்கள். வழக்கம்போல் அந்தக் காலத்து ஆர்.எஸ்.புரத்தை சர்வே எடுத்துக் கொண்டிருந்தேன். (நான் ஆர். எஸ். புரத்தில்தான் குடியிருந்தேன்). திடீரென்று யாரோ என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்த்தால் ஹைஸ்கூலில் என்னுடன் படித்த வகுப்புத் தோழன். அவன் நன்றாக வளர்ந்து ஆஜானுபானுவாக இருப்பான். என்னை விட நான்கு வயது பெரியவன். அஸ்திவாரம் நல்ல ஸ்ட்ராங்க்.

“என்னடா செய்து கொண்டிருக்கிறாய்” என்றான். “காலேஜ் லீவு, சும்மா சுற்றிக்கொண்டு இருக்கிறேன்” என்றேன். அப்படியானால் என் கூட வா என்று ஒரு ஆபீசுக்கு கூட்டிக்கொண்டு போனான். அங்கு ஒரு பத்துப் பதினைந்து பேர் என்னென்னமோ காகிதங்களை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் ரொம்ப பிஸியாக போய்க் கொண்டு இருந்தார்கள். காலியாக இருந்த ஒரு டேபிளில் என்னை உட்காரச் சொல்லிவிட்டு, ஒருவரிடம் என்னைக் காண்பித்து ஏதோ சொல்லிவிட்டு வெளியில் போய் விட்டான். அந்த நபர் என்னிடம் ஒரு லிஸ்டைக் கொடுத்து கார்பன் வைத்து நான்கு காப்பி எடுக்கச் சொல்லிவிட்டு, அவர் வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டார். 

பேப்பர், கார்பன் எல்லாம் ஏகப்பட்டது கிடந்தன. நானும் மும்முரமாக காப்பி எடுக்க ஆரம்பித்தேன். அப்படியே சுற்றுமுற்றும் பார்த்ததில் தெரிந்தது – அது ஒரு தேர்தல் ஆபீஸ் என்று. என்னுடன் படித்தவர்கள், மற்றும் தெரிந்தவர்கள் சிலர் இருந்தார்கள். விசாரித்ததில் தெரிந்தது – நாங்கள் எல்லோரும் தேர்தல் தொண்டர்கள். அந்தக்காலத்தில் காங்கிரஸ் ஒன்றுதான் எங்களுக்குத் தெரிந்த ஆரசியல் கட்சி. ஊரில் செல்வாக்கான காங்கிரஸ்காரர்கள் பலர் உண்டு. எல்லோருக்கும் சீட் கொடுக்க முடியாதல்லவா? அப்படி சீட் கிடைக்காத வெங்கிடசாமி நாயுடு என்பவர் சுயேச்சையாக கூஜா சின்னத்தில் நின்றார். அந்த தேர்தல் ஆபீஸ் அவருக்காக அந்தப் பகுதியில் பிரசாரம் செய்ய எற்படுத்தப்பட்ட ஆபீஸ். அவருக்கு பிற்காலத்தில் கூஜா வெங்கிடசாமி நாயுடு என்ற பெயர் நிலைத்து விட்டது.

எங்களுக்கு தினம் மூன்று ரூபாய் கூலி அல்லது கௌரவமாக சம்பளம். காலை, மாலை இரு வேளை டிபன். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை. இந்த டிபனுக்கு பக்கத்தில் இருந்த ஒரு ஓட்டலில் அக்ரிமென்ட். அதாவது என் நண்பன் ஒரு சீட்டு கொடுப்பான். அதை அங்கு கொடுத்தால் ஒரு வடை அல்லது போண்டா, மற்றும் ஒரு காப்பி கொடுப்பார்கள். அதற்கு அளவாக பணத்தை எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுப்பான். எனக்கு மட்டும் பணத்தை எழுதாமல் காலியாகக் கொடுப்பான். நான் இஷ்டம்போல் சாப்பிட்டுவிட்டு பில் வந்ததும் அந்தப் பணத்தை அந்தச் சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விடுவேன். இது எனக்கு ஸ்பெஷல் சலுகை.

எங்கள் வேலை என்னவென்றால், அந்த பகுதியில் உள்ள வீதிகளுக்கு ஒவ்வோன்றாகச் சென்று அங்குள்ள வோட்டர்களிடம் துண்டுப் பிரசுரங்களைக் கொடுப்பது. வோட்டர்கள் லிஸ்டை வைத்துக்கொண்டு வோட்டர்கள் லிஸ்ட் பிரகாரம் சரியாக இருக்கிறார்களா என்று செக் செய்வது, இத்தியாதிகள். வோட்டர்களிடம் ஓட்டுக்கேட்பதற்கு, பெரிய மனிதர்கள் அடங்கிய ஒரு குழு தனியாக வேலை செய்தது. இதற்காக எங்களுக்கு இரண்டு பேர்களுக்கு ஒரு குதிரை வண்டி வாடகைக்கு அமர்த்திக் கொடுத்திருந்தார்கள். தேர்தலுக்கு முந்தைய வாரம் முழுவதும் இந்த வேலைதான்.

நடுநடுவில் டிபன் சாப்பிட ஓட்டலுக்குப் போவது, மதிய உணவிற்கு வீட்டுக்குப் போவது எல்லாம் இந்த குதிரை வண்டியில்தான். தேர்தலுக்கு முன் தினம் இரவு டூட்டியும் பார்த்தோம். தேர்தல் அன்று வீடு வீடாகச் சென்று வோட்டர்களை ஒட்டுப் போட அழைத்துப் போகச்சொன்னார்கள். ஆனால் ஒருவரும் குதிரை வண்டியில் வரவில்லை. நாங்கள் தொண்டர்கள் மட்டும் குதிரை வண்டியில் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டு இருந்தோம். ஒரு வழியாகத் தேர்தல் நடந்து முடிந்தது.

கூஜா வெங்கிடசாமி நாயுடு இந்த தேர்தலுக்காக ஏகப்பட்ட செலவு செந்திருந்தார். சுமார் ஏழு லட்சம் ரூபாய் செலவு செய்ததாகக் கேள்விப்பட்டோம். அதாவது இன்றைய மதிப்பிற்கு ஏறக்குறைய ஏழு கோடி ரூபாய்க்குச் சமம். இவ்வளவு செலவு செய்தும் மக்களுடைய காங்கிரஸ் பக்தியை மாற்ற முடியவில்லை. இவருக்கு டெபாசிட் கூடக் கிடைக்கவில்லை. இவர் இவ்வளவு செலவு செய்து தோற்றுப் போனதைப் பற்றி கோவை மக்கள் வெகு காலம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

இதுதான் நான் தேர்தல் தொண்டனாகப் பணியாற்றிய வரலாறு. அப்போது எனக்கு வயது 17. ஓட்டுப்போட அருகதை அற்றவனாக இருந்தேன்.

வியாழன், 10 மார்ச், 2011

மனிதனின் கடமைகள்.


என்னுடைய மதியும் விதியும் என்கிற பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டம்.

Anonymous said...
But, what are all one's duties and who defines that?
இந்த பின்னூட்டம்அனானியாக வந்திருக்கிறது என்பதைத் தவிர, அதில் குறிப்பிட்டுள்ள கருத்து நன்றாகவும் ஆழமாகவும் உள்ளது.
ஒருவருடைய கடமைகள் என்னென்ன? அவைகளை யார் வரையறுக்கிறார்கள்?

மனிதன் என்பவன் தனியானவன் அல்ல. அவன் சுற்றியிருக்கும் சமூகத்தின் ஒரு அங்கம். அந்த சமூகத்தின் பல நியதிகளுக்கு அவன் கட்டுப் பட்டவன். அவனைப் பெற்றவர்களும் அவனுடைய உறவினர்களும் அந்த சமூகத்தின் அங்கத்தினர்களே. அவர்களும் அந்த சமூகத்தின் கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டவர்களே.

இந்த சமூக கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டேதான் ஒருவன் தன் தனித்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி வளர்ந்த அவன் தான் வாழும் சமூகத்திற்கு பெருமை சேர்க்கக் கூடியவனாக இருந்தால் அந்த சமூகம் அவனை ஏற்றுக்கொள்ளும். அப்படி இல்லாமல் அவன் சமூகத்திற்கு தீமை பயக்கக் கூடிய பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தால் அவனை அந்த சமூகம்/சமூக அங்கத்தினர்கள் ஒதுக்கி விடுவார்கள்

ஆகவே கடமைகள் என்பவைகளை சமூகம்தான் நிர்ணயிக்கிறது. அந்த சமூக கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டு ஒவ்வொருவனும் தன் தனித்தன்மையை வளர்த்துக் கொள்கிறான். அப்போது அவன் தன்னுடைய கடமைகள் என்னென்ன என்பதை உணர்ந்து வரையறுத்துக் கொள்கிறான். அவ்வாறு வரையறுத்துக்கொண்ட கடமைகள் அல்லது பண்புகள் ஒருவனை மேம்படுத்துவதாகவோ அல்லது தாழ்த்துவதாகவோ அமைகின்றன. இவ்வாறு பண்புகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவனுக்கே உண்டு. வேறு யாரும் அவனைக் கட்டாயப்படுத்த முடியாது.

ஒருவன் வளர்ந்த சூழ்நிலை, அவனுடைய குடும்ப பழக்க வழக்கங்கள், அவன் பழகிய சகாக்கள் ஆகிய அனைத்தும் அவனுடைய பண்புகள் எப்படி உருவாகின்றன என்பதை நிர்ணயிக்கும். கல்வி, கேள்விகளில் ஒருவன் ஈடுபாடு கொண்டிருந்தால் அவனுக்கு நற்பண்புகள் வளர வாய்ப்புகள் அதிகம். இவை எல்லாவற்றையும் விட அவன் தலையெழுத்து எவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது என்பது மிக மிக முக்கியம். ஆகவே அவரவர்கள் கடமை உணர்ச்சி என்பது அவரவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அடுத்தவர்கள் சொல்லிக்கொடுத்து வருவதல்ல.



செவ்வாய், 8 மார்ச், 2011

கோர்த்து விடுதல் (பெயர்க் காரணம் – தொடர் பதிவு)



முதலில் ஒரு கதை கேளுங்கள்.
ஒரு ஊர்ல ஒரு செட்டியார் வியாபாரஞ் செய்து வந்தார். அவர் ஒரு வேலைக்காரனை வேலைக்கு அமர்த்தியிருந்தார். வெளியூர் செல்லும் சமயங்களில் அவனையும் துணைக்குக் கூட்டிப்போவார். அந்த வேலைக்காரனுக்கு கொஞ்சம் விவேகம் கம்மி. இருந்தாலும், சொன்ன வேலையைத் தட்டாது செய்வான். அதனாலேயே செட்டியார் அவனை வேலையை விட்டு நீக்காமல் வைத்திருந்தார்.

அப்படி ஒரு சமயம் வெளியூருக்கு பண வசூலுக்குப் போய்விட்டு காட்டு வழியில் திரும்பும் சமயம் இருட்டிவிட்டது. அப்போது திருடர்கள் வரும் சத்தமும் கேட்டது. செட்டியார் வேலைக்காரனிடம்சத்தம் போடாமல் கட்டை மாதிரி படுத்துக்கொள் என்றுகூறிவிட்டு, தானும் ஒரு புதர் மறைவில் படுத்துக்கொண்டார். வேலைக்காரனும் ஒரு கட்டை போல் படுத்துக்கொண்டான். அந்த வேலைக்காரனுக்கு செட்டியார் சாப்பாட்டு செலவிற்குக் கொடுத்ததில் ஒரு பணம் (கால் ரூபாய்) மிச்சம் பண்ணி இடுப்பில் வேட்டியில் முடி போட்டு சொருகி வைத்திருந்தான்.

திருடர்கள் அந்த வழியில் வரும்போது, ஒரு திருடன் இந்த வேலைக்காரன் படுத்திருந்ததைக் கவனிக்காமல் வந்தான். அப்போது தடுக்கியது. உடனே அந்தத் திருடன் வழியில் ஏதோ கட்டை கிடக்கிறது, பார்த்து வாருங்கள் என்று கூறினான். வேலைக்காரனுக்கு ரோஷம் வந்து விட்டது. அவன் சொன்னான், “உங்க வீட்டுக் கட்டை இடுப்புல ஒரு பணம் சொருகி வச்சிருக்குமோஎன்றான். திருடர்கள் அவனைப் பிடித்து உதைத்து அந்த ஒரு பணத்தைப் பிடுங்கிக் கொண்டார்கள்.

அதைப் பிடுங்கிய திருடன் அந்தக் காசை தடவிப்பார்த்துஇந்தப் பணம் செல்லுமோ செல்லாதோஎன்று சொன்னான். உடனே வேலைக்காரன், “செல்லும் செல்லாததற்கு பக்கத்துப் புதரில் செட்டியார் படுத்திருக்கிறார், அவரைக் கேட்டால் சொல்லி விடுவார்என்றான். திருடர்கள் அப்படியா சங்கதி என்று சொல்லி செட்டியாரைப் பிடித்து அவரிடம் இருந்த பணத்தைப் பூராவும் பிடுங்கிக் கொண்டு சென்று விட்டார்கள்.

கதையின் நீதி ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கதைக்கும் இந்தப் பதிவிற்கும் என்ன தொடர்பு என்று பார்க்கலாமா?

நான் சிவனே என்று என் வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். விதி வலியது. அது எந்த ரூபத்திலும் வரும் என்பது தெரிந்ததே. எனக்கு கோபி ராமமூர்த்தி ரூபத்தில் வந்தது.

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

கோபி ராமமூர்த்தி நல்ல நண்பர். ஆனால் விதி விளையாடினால் அவர் பாவம், என்ன செய்வார்? அவருக்குத் தெரிந்தவர்களையெல்லாம் கோர்த்து விட்டுவிட்டார். என்னையும் அதில் சேர்த்து விட்டார். இனி தப்பிக்க முடியாது.

எனக்குப் பெயர் வந்த காரணத்தைச் சொல்லவா? இந்தப் பதிவுக்கு பெயர் வந்த காரணத்தைச் சொல்லவா?

எனக்குப் பெயர் என்னைக்கேட்டு வைக்கவில்லை. அதனால் என்ன காரணத்தினால் அப்படிப் பெயர் வைத்தார்கள் என்று நான் இது நாள் வரை யோசித்ததில்லை. கோபி ராமமூர்த்தி கேட்ட பிறகுதான் ஏன் இந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள் என்று யோசிக்கிறேன். பதில் சொல்ல வேண்டிய இருவரும் (தந்தையும் தாயும்) வேறு ஊரில் இருப்பதால் நானும் அங்கே போன பிறகு இந்தக் கேள்விக்கு விடையைக் கேட்டு, நீங்களும் அங்கே வரும்போது மறக்காமல் சொல்கிறேன். அது வரையில் பொறுமை காக்கவும்.

இந்தப் பதிவுக்குப் பெயர் வைத்தவன் நான்தான். ஆகவே அதற்கான காரணத்தைச் சொல்ல முடியும். என் மனதில் ஓடும் எண்ணங்கள் அலை அலையாய் ஓடும். ஆகவே என் பெயரைச் சுறுக்கி அலைகளைச் சேர்த்துசாமியின் மன அலைகள்என்று பெயர் வைத்தேன். அவ்வளவுதான்.

அப்பாடா, பெரிய சிதம்பர ரகசியத்தை வெளியில் சொல்லியாயிற்று. இனி எல்லோரும் நிம்மதியாகத் தூங்கலாம்.