வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பாகம் 3


என்ன ஆயிற்று என்றால், அந்த இரண்டு வருடங்களில் மின்சார பம்ப்புகள் அறிமுகமாயிருந்தன. அதனால் பல சௌகரியங்கள். கவலை இறைக்க இரண்டு ஜோடி மாடுகள், இரண்டு ஆட்கள் தேவையில்லை. தண்ணீர், கவலையில் வருவதை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக வாய்க்காலில் வந்தது. அதிக பரப்பு நிலத்தில் நீர் பாய்ச்சி விவசாயம் செய்ய முடிந்தது. அதிக பணம் சேர்ந்தது. அதிகமான கிணறுகளும் வெட்டப்பட்டன. கிணறுகளின் ஆழமும் கூடிப்போய் விட்டது.
இந்த மாற்றம் இந்திய விவசாயத்தின் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பு முனை ஆகும். விவசாயியின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி. விவசாயியின் வருமானம் பன்மடங்கு பெருகியது. ஆள் தேவை, கால்நடைகளின் தேவை குறைந்தது. கடின உழைப்பு குறைந்தது. நேரம் மிச்சமாகியது. இரவிலும் பாசனம் செய்ய முடிந்தது. அவனுடைய வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்தது. விவசாயி சுகவாசி ஆனான். எவ்வளவு சௌகரியங்கள்? பின்னால் ஏற்படப்போகும் ஆபத்துகளை உணராமல் விவசாயி இந்த சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தான்.
இந்த இடத்தில் தமிழ்நாட்டின் விவசாயப் புள்ளி விவரங்களை கொஞ்சமாக தருகிறேன். பயப்படாதீர்கள். ஏறக்குறைய மொத்த இந்தியாவின் பல மாநிலங்களின் நிலையும் இதுதான். தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 130 லட்சம் ஹெக்டேர்கள். இதில் பாதியில் அதாவது ஏறக்குறைய 65 லட்சம் ஹெக்டேர்களில் விவசாயம் நடைபெறுகிறது. அதில் பாதி மானாவாரி விவசாயம். மிச்சம் பாதி பாசன விவசாயம். பாசனத்திற்கு வேண்டிய நீர் மூன்று வகைகளில் கிடைக்கிறதுஆற்றுப்பாசனம், குளத்துப்பாசனம், கிணற்றுப்பாசனம் ஆகியவையே அந்த மூன்று வகைகள். மூன்றும் சம பங்கு பரப்பு நிலங்களுக்கு நீர் வழங்குகின்றன. இப்படியாக கிணற்றுப்பாசனம் மொத்தம் 12 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசனம் வழங்குகின்றது. தற்போதைய நிலவரப்படி மொத்த கிணறுகளின் எண்ணிக்கை 18 லட்சம்.
அதாவது ஒரு கிணறு 2/3 ஹெக்டேர் நிலத்தைத்தான் பாசனம் செய்கிறது. ஏறக்குறைய ஒண்ணேமுக்கால் ஏக்கர். இது ஒரு சராசரி கணக்கு. சில கிணறுகள் அதிக நிலத்தைப் பாசனம் செய்யலாம். அதே மாதிரி சில கிணறுகள் குறைவான நிலத்தைப் பாசனம் செய்யலாம். கடந்த 20 ஆண்டுகளில் கிணறுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறதே தவிர, அவைகளினால் பாசனம் பெறும் நிலத்தின் அளவு கூடவில்லை.
இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
மின்சார மோட்டார் பம்பு செட்டுகளை உபயோகப்படுத்த ஆரம்பித்த புதிதில் விவசாயியின் வாழ்க்கை எப்படி ஒளிமயமாக மாறியது என்று பார்த்தோம். ஆனால் மனித மனம் விசித்திரமானது. முதலில் ஆசை தோன்றும். அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கடைசியில் பேராசையாக மாறும். பல ஆயிரம் கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் கூட, இன்னும் சில ஆயிரம் கோடிகள் கிடைக்காதாவென்று அலைகிறார்கள். விவசாயியும் இதற்கு விலக்கில்லை. தண்ணீர் சௌகரியமாகக் கிடைக்க ஆரம்பித்ததும் தன் விவசாயத்தைப் பெருக்கினான். அதற்கு இன்னும் தண்ணீர் தேவைப்பட்டது. அதற்காக கிணற்றை ஆழப்படுத்தினான். ஒருவனைப்பார்த்து பலரும் இதையே செய்தார்கள். வசதி உள்ளவன் இன்னும் ஆழமாக வெட்டினான். இந்தச் சமயத்தில்தான் ஆழ்குழாய் கிணறுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சாதாரண திறந்த வெளிக்கிணறுகளை மேலும் ஆழப்படுத்த முடியாததால் விவசாயிகள் ஆழ்குழாய் கிணறுகளுக்கு மாறினார்கள். முதலில் 500 அடி, பிறகு 600 அடி, இப்படியாக 1000, 1200 அடி ஆழமான ஆழ்குழாய் கிணறுகள் சர்வ சாதாரணமாய் விட்டன. இப்படியே ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கிணறுகளை ஆழப்படுத்தி, ஆழப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை அதல பாதாளத்திற்குக் கொண்டு போனார்கள். கிணற்று நீரின் தன்மையும் பல இடங்களில் மாறிப்போனது.
இந்த நீர்த் தேடலில் மக்கள் ஒரு தத்துவத்தை மறந்துவிட்டார்கள். நிலத்தடி நீர் என்பது ஒரு வற்றாத சுரங்கமல்ல. அது ஒரு பேங்க் சேமிப்பு கணக்கு மாதிரி. அந்தக்கணக்கில் எவ்வளவு பணம் போடுகிறோமோ அவ்வளவு பணம்தான் எடுக்கமுடியும். அதில் இருந்த முந்தைய சேமிப்பு முழுவதையும் எடுத்த பிறகு, புதிதாக எவ்வளவு போடுகிறோமோ அவ்வளவைத்தானே எடுக்க முடியும். தமிழ் நாட்டின் நிலத்தடி நீரின் நிலை இப்போது இந்த அளவிற்கு வந்துவிட்டது. விவசாயியின் நீர்ப்பேராசை நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது.

புதன், 10 ஆகஸ்ட், 2011

பரளிக்காடு - ஒரு நாள் சுற்றுலா


பரளிக்காடு சுற்றுலாவைப் பற்றி நிறைய பதிவர்கள் தங்கள் பதிவுகளில் எழுதி விட்டார்கள். ஒரிஜினல் கோவைவாசியான நான் அதைப் பற்றி எழுதாவிட்டால் என் தன்மானம் என்ன ஆவது? ஆகவே கடந்த 7-8-2011 ஞாயிற்றுக்கிழமை, நானும் இன்னும் மூன்று நண்பர்களுமாக போய்வந்தோம்.


போவதற்கு முன் அங்குள்ள வன அதிகாரிகளுக்கு தகவல் சொல்லிவிடவேண்டும்.
தொடர்புக்கு; திரு.ஆண்டவர், போன்- 90470 51011.

சனி, ஞாயிறுகளில் சுமார் 100 பேர் வரைக்கும் வருகிறார்கள். மற்ற நாட்களில் போக வேண்டுமென்றால் குறைந்தது 30 பேராவது போனால்தான் அவர்கள் தேவையான உணவு மற்றும் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யமுடியும்.

அங்குள்ள ஆதிவாசிகளைத் திரட்டி ஒரு சுய உதவிக்குழு அமைத்து அதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வன இலாக்கா அலுவலர்கள் இந்த முயற்சிக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குகிறார்கள்.

கோவையிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் பரளிக்காடு இருக்கிறது. பில்லூர் அணைக்கட்டின் நீர்ப்பரப்புப் பகுதியின் ஆரம்பப் பகுதி. இங்கிருந்து பில்லூர் அணை நன்றாகத் தெரிகிறது. காலை 7 மணிக்கு கோவை காந்திபுரம் பஸ் ஸ்டேண்டிலிருந்து பரளிக்காட்டிற்கு அரசு பஸ் இருக்கிறது. சரியாக 10 மணிக்கு பரளிக்காட்டுக்கு கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள்.


நாங்கள் எங்கள் காரில் சென்றோம். வழி: காரமடை-வெள்ளியங்காடு-அத்திக்கடவு-முள்ளி-பரளிக்காடு.  வெள்ளியங்காட்டிற்கு அப்புறம் ரோடு கொஞ்சம் சுமார்தான். மலைப்பாதை. சிங்கிள் ரோடு. மலைப்பாதைகளில் வாகனம் ஓட்டி நன்கு அனுபவம் உள்ளவர்களினால்தான் இந்த ரோட்டில் வாகனம் ஓட்ட முடியும். கொண்டை ஊசி வளைவுகள் திடீரென்று முன் அறிவிப்பு இல்லாமல் தோன்றும். போர்டுகள் கிடையாது.

வழியில் இரண்டு செக் போஸ்ட்டுகள் இருக்கின்றன. அங்கு விவரங்கள் சொன்னால் விட்டுவிடுகிறார்கள்.


இப்படிப்பட்ட ரோட்டில் எங்கள் காரை யார் ஓட்டினார்கள் என்று தெரிந்துகொள்ள ஆவலாய் இருப்பீர்கள். இதோ அந்த டிரைவர்.


தன்னடக்கம் காரணமாக அது யார் என்று சொல்லாமல் விடுகிறேன்.

காலை 10 மணிக்குள் அங்கு இருக்கவேண்டும். பத்தரை மணிக்கு சூடாக சுக்குக் காப்பி கோடுக்கிறார்கள். அதன் பிறகு பரிசல் சவாரி.

இந்த நீர்ப் பரப்பில் சுற்றுலாப் பயணிகளை பிளாஸ்டிக் பரிசலில் கூட்டிக்கொண்டு ஒன்றரை மணி நேரம் சுற்றிக் காண்பிக்கிறார்கள். ஒரு பரிசலுக்கு நான்கு பேர். பரிசலில் போகும்போது லைஃப் ஜாக்கெட் கண்டிப்பாக அணிந்து கொள்ளவேண்டும்.



பரிசலில் போகும்போது இயற்கையை ஆசை தீர அனுபவிக்கலாம்.


பரிசல் சவாரி முடிந்ததும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விடுகிறோம். இங்கு உட்காருவதற்கு நாற்காலிகளும் படுத்துக்கொள்வதற்கு கயிற்றுக் கட்டில்களும் ஊஞ்சல்களும் இருக்கின்றன. நான்கு சுவர்களுக்குள்ளேயே வாழ்க்கையைக் கழிக்கும் நகரவாசிகளுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும்.


ஒன்றரை மணிக்கு சாப்பாடு வந்து விடுகிறது. சப்பாத்தி-குருமா, வெஜிடபிள் பிரியாணி-தயிர்ச்சட்னி, ஒரு அசைவ குழம்பு, தயிர் சாதம்-ஊறுகாய், சிப்ஸ், ராகிக் களி-கீரை மசியல், இவ்வளவுதான் மதிய உணவு. கடைசியாக மலையிலேயே விளைந்த கதலி வாழைப் பழம். பரிசலில் போவதற்கும் உணவிற்கும் சேர்த்து 350 ரூபாய் கட்டணம்.

ஒரு வெட்டு வெட்டி விட்டுப் படுத்தால் மாலை எப்படியும் யானை வந்து எழுப்பிவிடுமாம். நாங்கள் யானைகளை ஏற்கனவே பார்த்திருப்பதால், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து புறப்பட்டு விட்டோம். 4 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.




திங்கள், 8 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பாகம் 2



இந்த கால கட்டத்தில்தான் நாணயங்கள் அதிகமாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்தன். அதுவரை இருந்த பண்டமாற்று முறைகள் குறைந்து நாணயங்களை மனிதன் பொருட்கள் வாங்குவதற்கு உபயோகப்படுத்த ஆரம்பித்தான். மனிதனின் சேமிப்பு, தானியமாகவோ, உண்ணும் பண்டங்களாகவோ இருந்தவரை, அவைகளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாதாகையால், அவைகளை மக்கள் தாராளமாக உபயோகப்படுத்தி வந்தார்கள். தங்களுக்குப் போக மிஞ்சியதை தேவையானவர்களுக்கும் கொடுத்தார்கள். மனிதனுக்கு அப்போது பரந்த மனப்பான்மை இருந்தது. நாணயப் புழக்கம் வந்த பிறகுதான், மனிதன் சேமிப்புப் பழக்கத்தை ஆரம்பித்தான். விவசாயம் பொய்க்கும்போது வேண்டிய தேவைக்காகவும் மற்ற பலவித தேவைகளுக்காவும் சேமித்தான். பெண்கள் தங்க நகைகள் போட ஆரம்பித்ததும் இதே காரியத்திற்காகத்தான்.
சேமிப்பு அதிகமாக அதிகமாக, மனிதனுக்கு ஆசை வளர்ந்ததே தவிர குறையவில்லை. இன்னும், இன்னும், இன்னும், இன்னும் என்று சேர்த்தானே தவிர நிறுத்தவேயில்லை. தனக்கு, தன் பிள்ளைக்கு, தன் பேரனுக்கு, இப்படியாகவே போய், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆகி விட்டது. விவசாயத்தையும் இந்த மனப்பான்மை மாற்றியது. இந்த மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது நிலத்தடி நீரின் நிலைதான்.
என் முன்னோர்கள் விவசாயிகளாக இருந்தார்கள். ஆனால் தாக்குப்பிடிக்க முடியாமல் நகரத்திற்கு வந்துவிட்டார்கள். என்னுடைய உறவினர்கள் எல்லோரும் கிராமத்திலேயே விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னுடைய சிறு வயதில் (சுமார் பத்து பனிரெண்டு வயது இருக்கும்) விடுமுறை நாட்களில் ஊருக்குப்போவேன். என் மாமா தோட்டத்தில் சில நாட்களும், பெரியம்மா தோட்டத்தில் சில நாட்களும் கழிப்பேன்.
அந்தத் தோட்டங்கள் எல்லாம் கிணற்றுப்பாசனம் மூலம் பயிர் செய்யப்பட்டவை. தண்ணீர் இறைக்க கவலை”, (சில ஊர்களில் கமலை என்பார்கள்) உபயோகப்படுத்துவார்கள். ஒரு கிணற்றுக்கு இரண்டு முதல் நான்கு கவலைகள் இருக்கும். சாதாரணமாக இரண்டு கவலைகள்தான் பெரும்பாலான கிணறுகளில் இருக்கும்.  ஒவ்வொன்றுக்கும் இரண்டு எருதுகள், ஒரு ஆள். தோலினால் ஆனபறிஎன்று அழைக்கப்படும் ஒரு விதமான பெரிய பையை, வடக்கயிறு என்று சொல்லப்படும் ஒரு பெரிய கயிறு கட்டி முன்னும் பின்னுமாக எருதுகளை ஓட்டி தண்ணீர் இறைப்பார்கள். அந்தப்பறிக்கு ஒரு வால் இருக்கும். அதை வால் கயிறு எனப்படும் ஒரு சிறிய கயிற்றால் கட்டியிருப்பார்கள். வடக்கயிறும் வார் கயிறும் எருதுகளின் நுகத்தடியில் கட்டியிருப்பார்கள். பறி கிற்றுக்கு மேல் வந்தவுடன் அந்த வால் வழியாக நீர் வாய்க்காலில் விழுவதற்குத் தோதாக வால் கயிற்றை இழுப்பார்கள். தண்ணீர் வால் வழியாக வாய்க்காலில் விழும். அந்த கவலை மூலம் நீர் இறைப்பதே, பார்ப்பதற்கு ஒரு வேடிக்கையாக இருக்கும்.
ஒரு நாள் முழுவதும் கவலை இறைத்தால் அரை ஏக்கர் நிலம் நீர் பாய்ச்சலாம். பயிர்களுக்கு எப்படியும் எட்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். ஆக மொத்தம் ஒரு கிணறும் இரண்டு கவலைகளும் இருந்தால் மூன்று அல்லது மூன்றரை ஏக்கர் நிலம் பாசன விவசாயம் செய்யலாம்.
அப்போது கிணறுகளில் நீர் மட்டம் தரை மட்டத்தில் இருந்து கீழே இருபது அடிக்குள் இருந்தது. அப்படி ஒரு கிணற்றில்தான் நான் நீச்சல் கற்றுக் கொண்டேன். கிணற்றின் மேலிருந்து குதிக்கப் பழகவில்லை. ஏனெனில் அதற்குள் விடுமுறை முடிந்து விட்டது. சரி அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அடுத்த வருடம் ஏதோ காரணத்தினால் மாமா தோட்டத்திற்கு போக முடியவில்லை. அதற்கு அடுத்த வருடம் போனால் கிணற்றின் தண்ணீர் மட்டம் நாற்பது அடிக்கு கீழே போய்விட்டது. தண்ணீருக்குள் ஜம்ப் பண்ணி நீரின் அடிமட்டத்திற்குப்போய் மேலே வரும் வித்தையை கற்க முடியாமலேயே போய் விட்டது.
                   

சனி, 6 ஆகஸ்ட், 2011

ஈமெயில் படித்தால் பணம் தரும்


                            


பதிவுலக நண்பர்களே,


கீழே உள்ள விளம்பரத்தை ஒரு பதிவில் பார்த்தேன். மக்களை எப்படியெல்லாம் முட்டாளாக்குகிறார்கள் என்ற நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

வாரம் ஒரு முறை விளம்பர ஈமெயில் வருமாம். அதைப் படித்தால் பணம் தருவார்களாம். எவ்வளவு தெரியுமா? பிச்சைக்காசு 25 பைசா. பிச்சைக்காரன் கூட ஒரு ரூபாய்க்கு குறைவாக வாங்குவதில்லை. வருடம் 52 மெயில்கள். அதாவது 13 ரூபாய்கள். உங்கள் கணக்கில் 200 ரூபாய் சேர்ந்தால் பணம் கொடுப்பார்களாம். எத்தனை வருடத்தில் 200 ரூபாய் சேரும்? சுமார் 15 வருடங்கள். ஆக மொத்தம் நீங்கள் பதினைந்து வருடம் காத்திருந்தால் 200 ரூபாய் கிடைக்கும்.

இதைவிட காதில் பூ சுற்றும் வேலை ஏதாவது இருக்கிறதா? யோசியுங்கள் நண்பர்களே!!

 

ஈமெயில் படித்தால் பணம் தரும் rupeemail ல் இணைவது எப்படி?

இது உண்மை நண்பர்களே! இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினராக பதிவு செய்துகொண்டால் இத்தளத்தில் இருந்து உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வாரம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட  விளம்பர மின்னஞ்சல்களை அனுப்பிவைப்பார், அவற்றை திறந்து பார்த்தாலே உங்களது அக்கௌண்டில் அந்த விளம்பரத்துக்கான மதிப்பு எவ்வளவோ அவ்வளவு பணம் சேர்ந்திருக்கும். உங்களது நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தாலும் 2 ரூபாய் பணம் அளிக்கப்படுகிறது. மொத்தமாக ரூ.200 ஆனதும் நீங்கள் அந்த தொகையை டி.டி யாக பெறலாம். இலவசமாக உறுப்பினாராக இணைய கீழ் காணப்படும் படத்தை அழுத்தவும்.