திங்கள், 11 செப்டம்பர், 2017

20. பணக்காரர்களுடன் பழகுவது எப்படி?

                     Image result for bungalow house
மனிதர்கள் என்றுமே அவர்களின் பொருளாதார ரீதியில்தான் மதிக்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் உணர்ந்த உண்மை. ஒருவனைப் பார்த்தால் இவனுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை அறிந்த பிறகுதான் அவனுக்கு அவன் சொத்திற்குத் தகுந்தாற்போல் மதிப்பு கிடைக்கும்.

இப்போதுள்ள மக்களை பொருளாதார ரீதியில் பார்த்தால் கீழ்க்கண்ட வகுப்புகள் இருப்பது தெரியும்.

Poor (including ultra poor), Lower Middle class, Upper Middle class, Rich, Super Rich, Ultra Rich, Aristocrats, Arab Sultans, Top Rich persons like Ambani brothers.

நான்  ஏழையும் அல்லாத மிடில் கிளாசும் அல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து  தற்சமயம் ஒரு  அப்பர் மிடில் கிளாஸ் என்று சொல்லக்கூடிய தகுதியில் இருக்கிறேன். நான் வளர்ந்த சூழ்நிலை எனக்குள் பல குணாதசியங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில் முக்கியமானது பணக்காரர்களைக் கண்டால் ஒதுங்கிப்போவது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமானது பணக்காரர்கள் நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் ஆசாமிகளைப் பிச்சைக் காரர்கள் போல் பார்க்கும் ஒரு குணம். அவர்கள் வீட்டிற்கு சும்மா பார்க்கப்போனாலே, ஏதோ பண உதவி கேட்பதற்காக  வந்திருக்கிறானோ என்று சந்தேகப்பட்டு தூரமாகவே நிறுத்தி வைத்து திருப்பி அனுப்பி விடுவார்கள்.

பல பணக்காரர்களின் வீடுகளில் பல நிலைகள் இருக்கும்.

1. வாசல் கேட்.
2. முன் வாசல்
3. வராந்தா
4. உள் ஹால்

தங்கள் வீட்டிற்கு வருபவர்களை இனம் பிரித்து அந்தந்த நிலைகளில் நிறுத்தி திருப்பி அனுப்பப்   படுவார்கள். இதற்காக பல நிலைகளில் சிப்பந்திகள் இருப்பார்கள். நீங்கள் முக்கியமானவராகத் தெரிந்தால் மட்டுமே உங்களை முன் வராந்தாவில் அமர வைப்பார்கள். இதோ ஐயா வந்து விடுவார் என்ற செய்தியைச் சொல்லி விட்டு உங்களைக் காக்க வைப்பார்கள்.

அந்த வீட்டு ஐயா வந்திருப்பவர் யார், என்ன விபரம் என்று விசாரித்து விட்டு, சாவகாசமாக தன் ஒப்பனைகளை முடித்து விட்டு முன் வராந்தாவிற்கு வருவார். வந்திருப்பவர் தனக்கு முன்பே தெரிந்தவராகவும் தன் தகுதிக்கு ஈடானவராகவும் இருந்தால் உடனே வாங்க, வாங்க என்று வரவேற்று உள் ஹாலுக்கு கூட்டிக்கொண்டு போவார்.

தன்னை விட கொஞ்சம் கீழ்நிலையில் உள்ளவர் என்றால் அங்கேயே அவரை விசாரித்து விட்டு அனுப்பி விடுவார்.

இந்த நடைமுறைகளை நான் நன்கு பார்த்திருக்கிறேன். அதனாலேயே எனக்கு பெரும் பணக்காரர்கள் வீட்டிற்குப் போவதென்றால் வெறுப்பு.

நீங்களும் இந்த மாதிரியான அனுபவங்களை சந்தித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

19. ஆதார் கார்டும் நானும்

                                          Image result for ஆதார் அட்டை
ஆதார் கார்டு பதிவு செய்ய ஆரம்பித்த காலத்திலேயே நானும் என் குடும்பத்தினரும் கூட்டத்தோடு கூட்டமாகப் போய் பதிவு செய்து விட்டோம். ஆதார் கார்டு எந்த ஒரு அரசு வேலைக்கும் தேவையில்லை என்று உச்ச நீதி மன்றம் அன்றிலிருந்து இன்று வரை கரடியாய் கத்திக்கொண்டிருக்கிறது.

ஆனால் அரசோ மும்முரமாய் அனைத்து துறைகளிலும் ஆதார் ஆதார் என்று ஆப்பு வைத்துக்கொண்டே போகிறது. தற்பாதைய லேடஸ்ட் ஆப்பு மொபைல் போனை ஆதாருடன் இணைப்பது.

என்னுடைய மொபைலில் பிஎஸ்என்எல் காரன் ஒரு நாள் இதைப் பற்றி ஒரு செய்தி அனுப்பியிருந்தான். நானும் உடனே ஓடிப்போய் என் மொபைல் நெம்பரை ஆதார் நெம்பருடன் இணைக்கப்பார்த்தேன்.

என் கை விரலை ஒரு ஸ்கேனரில் வைக்கச்சொன்னார்கள். நானும் வைத்தேன். ஸ்கேனர் கம்மென்று இருந்தது. அந்த ஆபரேட்டர் பொறுமையாக ஒவ்வொரு விரலாக ஸ்கேனரில் வைத்துப் பார்த்தார். ஆனால் அந்த ஸகேனர் எதற்கும் அசைவதாகக் காணோம்.

அப்புறம் அந்த ஆபரேட்டர் என் மேல் பரிதாப ப் பட்டு "சார், உங்கள் கைவிரல் ரேகைகளெல்லாம் தேய்ந்து அழிந்து போய்விட்டன. இப்போதைக்கு ஒண்ணும் செய்ய முடியாது. இந்த ஆதார்-மொபைல் லிங்க் செய்வதற்கு ஒரு வருடம் கெடு இருக்கிறது, அதனால் அதற்குள் இந்த பிரச்சினைக்கு ஏதாவது வழு பிறக்கும். அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்று என்னை வழியனுப்பி வைத்தார்.

நானும் என் கை ரேகைகளை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா என்று வழி தேடிக்கொண்டிருக்கிறேன்.

திங்கள், 17 ஜூலை, 2017

18. தேர்தலும் சாதாரண பிரஜையும்

இது ஒரு மீள் பதிவு

முதலில் வெளியிட்ட நாள்;

திங்கள், 4 மே, 2009

                    
                              Image result for தேர்தல்

2009 பாராளுமன்ற தேர்தல்களின் கடைசி கட்ட வாக்குப் பதிவுகள் தங்கத்தமிழ் நாட்டில் வருகின்ற 13ந்தேதி நடைபெறப்போகின்றது. பாண்டிச்சேரியையும் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகள். எனக்கு அவ்வளவாக அரசியலில் ஈடுபாடு இல்லை. எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாளனும் இல்லை. ஆனால் சுற்றிலும் நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டு வருகிறேன்.

நான் கொஞ்சம் படித்திருக்கிறேன் (அதாவது Ph.D. விவசாயம்). இந்த அரசியல்வாதிகளுக்கு படித்தவர்களைக் கண்டால் பிடிப்பதில்லை என்பது என் எண்ணம். காரணம் இந்த படித்தவன் பேசிப்பேசியே காரியத்தைக் கெடுத்து விடுவான். அடுத்தவன் சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளமாட்டான். காசு வேண்டுமென்று கேட்க மாட்டான். காசு கொடுத்தாலும் வாங்கமாட்டான். அவன் யாருக்கு ஓட்டு போடுவான் என்று கணிக்க முடியாது. இப்படிப்பட்டவனை வைத்துக்கொண்டு எப்படி அரசியல் பண்ண முடியும்?

அரசியல்வாதிக்கு வேண்டியது, கேள்வி கேட்காமல் அவன் கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு, அவன் போடும் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு அவன் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப்போடவேண்டும். அவ்வளவுதான். கூட்டங்கள் போட்டால் பேட்டா வாங்கிக்கொண்டு லாரியில் ஏறிக் கொண்டு போய் கோஷம் போட வேண்டியது. இல்லாவிட்டால் எதிர்க்கட்சி கூட்டத்தில் போய் கலாட்டா செய்து கூட்டத்தைக் கலைப்பது.

இந்தக்காரியங்கள் எதிலும் இந்த படித்த முட்டாள் இருக்கிறானே, அவன் உபயோகப்படமாட்டான். பிறகு அவனை வைத்துக்கொண்டு என்ன அரசியல் செய்து எப்படி உருப்படியாவது? அது மட்டுமா! தேவையில்லாத (அதாவது அரசுயல்வாதிக்கு தேவையில்லாத) கேள்விகளைக்கேட்டு மக்களை குழப்புவான். 

ஒரு வேட்பாளர் சொல்கிறார்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் மும்மாரி பொழிய வைப்போம், தமிழ்நாட்டின் ஆறுகளில் பாலாய் ஓடும், எல்லோருக்கும் சாப்பாடு அவரவர் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும், யாரும் வேலைக்கு சென்று கஷ்டப்பட வேண்டியதில்லை. இப்படி எல்லா வேட்பாளர்களும் தங்களுக்கு முடிந்தவரை எல்லோர் காதிலும் பூ சுற்றுகிறார்கள். இதைக் கேட்கும் இந்நாட்டு குடிமகன்கள் (?) ஆகா, இவரல்லவோ நம்மை வாழவைக்க வந்த தெய்வம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள்.

இந்த படித்தவன் என்ன செய்வான். அரசியல்வாதி கூறுவதில் சொத்தை சொள்ளை கண்டு பிடித்து, மேலும் புள்ளி விவரங்கள் சேகரித்து, இந்த வேட்பாளர் சொல்வது போல் செய்யமுடியாது என்று பேசுவான். ஆனால் நம் நாட்டு குடிமக்கள் விவரமானவர்கள். இந்த படித்த முட்டாள்கள் பேச்சைக்கேடகக்கூடாது, அவர்கள் தாங்களும் பிழைக்க மாட்டார்கள், அடுத்தவனையும் பிழைக்க விடமாட்டார்கள் என்று முடிவு செய்து யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அந்தக்கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள்.

எனக்குத்தெரிந்து 1968 லிருந்து இப்படித்தான் நடைமுறை. நடப்பவை நடந்தே தீரும். இனி வரும் தேர்தல்களிலும் இப்படித்தான் நடக்கும்.

வெள்ளி, 14 ஜூலை, 2017

17. அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள்

First Published on 23-4-2009

                                               Image result for luxury cars in india

மனிதன் இயற்கையில் மிகவும் நல்லவன். ஆனால் சூழ்நிலை அவனைப்பலவாறாக மாற்றுகிறது. குறிப்பாக அவன் அரசு நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்த பின் அவன் வெகுவாக மாறிப்போகிறான்.
நேற்று வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு வேலை. ஒன்றுமில்லை. என்னுடைய மகளின் கார் பேங்க் லோனில் வாங்கியிருந்தாள். காரின் RC புத்தகத்தில் அந்த காரின் மேல் கடன் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்த்து. கடன் கட்டி முடிந்தாகிவிட்டது. இந்த விபரம் அந்த காரின் RC புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு ஒரு படிவம் இருக்கிறது. அந்த படிவத்தைப்பூர்த்தி செய்து அதனுடன் காரின் புகை சான்று, காரின் RC புத்தகம், இன்ஷூரன்ஸ் சான்று, பாங்கிலிருந்து கொடுத்த NOC, ஒரு ரிஜிஸ்டர் தபால் கவர் (30 ரூபாய்) இவைகளையெல்லாம் சேர்த்து பின் பண்ணி ரூபாய் 125 பணம் கட்டி அதற்கு உண்டான எழுத்தரிடம் கொடுக்கவேண்டும்.

ரொம்பவும் எளிதாக தோன்றுகிறதல்லவா! நேரில் அனுபவித்தால்தான் அதனுடைய எளிமை  புரியும். பணம் கட்டுவதற்கு மட்டும் சுமார் பத்து பேரைக் கேட்டிருப்பேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவுன்டரைக்காட்டினார்கள். எல்லா கவுன்டர்களிலும் கூட்டம். இதனிடையில் கம்ப்யூட்டர் ஒத்துழைக்க மாட்டேனென்கிறது. 

காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை இவ்வாறு அலைந்த பின்பு ஒரு கவுன்டரில் ஒருவாறாக பணத்தைக்கட்டி முடித்தேன். பின்பு இந்த பாரங்களை தபால் செக்சனில் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அங்கு சொன்றால் தபால் வாங்குபவர் அங்கு இல்லை. வேறு அலுவல் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்று சொன்னார்கள். எப்போது வருவார் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை.
அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்த போது அந்த ஆபீஸை சேர்ந்த ஒருவர் அந்த வழியில் போய்க்  கொண்டிருந்தார். அவரை வழிமறித்து ஒரு பெரிய வணக்கம் போட்டு ‘’சார், இந்த பாரத்தை தபால் செக்ஷ்னில்  கொடுக்க வேண்டும். அங்கு அவரைக்காணவில்லை, என்ன செய்வதென்று தெரியவில்லை’’ என்று அழாக்குறையாக சொன்னேன். 

அவர் இந்த உலகில் தப்பிப்பிறந்தவர். என்னுடைய பாரத்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து என்னிடம் வந்து ‘’சார், நீங்கள் நாளை மாலை 4 மணிக்கு வந்து ஈ.4 செக்ஷனில் ஆனந்த் என்பவரிடம் இதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார். அவருக்கு மிகுந்த நன்றி சொல்லிவிட்டு அடுத்த நாள் மாலை 4 மணிக்கு ஈ.4 ஆனந்தைப்பார்த்தேன். 

அவர் பேரைக்கேட்டுவிட்டு ஆமாம், பாரம் இங்கேதான் இருக்கிறது, காலையில் பார்த்தேன், கொஞ்சம் உட்காருங்கள், தேடி எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு, சொன்ன மாதிரியே 2 நிமிடத்தில் பாரத்தை எடுத்து விட்டார். ஆனால் அதில் ஒரு வேலையையும் செய்யவில்லை.

சார், கொஞ்சம் இருங்கள், என்று சொல்லிவிட்டு உடனே பழைய ரிஜிஸ்டரைத்தேடி எடுத்து என்ட்ரி போட்டு ஒரு 5 நிமிடத்தில் பாரத்தை என்னிடம் கொடுத்து ‘’ சார், இதை மேலே உள்ள தபால் செக்ஷனில் கொடுத்து என்ட்ரி போட்டு வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்றார். 

அதை வாங்கிக்கொண்டு தபால் செக்ஷனுக்கு போனேன். அவர் இருந்தார். அவருக்கு ஒரு சலாம் போட்டுவிட்டு இந்த பாரங்களைக்கொடுத்தேன். அவர் அதில் என்னுடைய கையெழுத்தை வாங்கிக்கொண்டு காரின் RC புத்தகத்தையும் இன்சூரன்ஸ் சர்டிபிகேட்டையும் கொடுத்தார். ஒரு பெரிய சலாம் போட்டுவிட்டு வந்த வேலை முடிந்த சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்தேன்.

Ph.D. படித்து ஒரு அரசுப் பணியில் 38 வருடங்கள்  குப்பை  கொட்டிய எனக்கே இந்த RTO ஆபீஸ் வேலையில் இவ்வளவு அலைச்சல் பட வேண்டியிருந்ததென்றால் சாதாரண படிப்பு அதிகமில்லாத மக்கள் எப்படி இந்த மாதிரி காரியங்களைச் செய்வார்கள் என்று யோசித்தேன். 

அப்போதுதான்  ஒரு உண்மை தெரிந்தது. RTO ஆபீசுக்கு வெளியே சின்ன சின்னதாக டேபிள் போட்டுக்கொண்டு பலர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பலவிதமான பாரங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்த பாரங்களை நிரப்பிக்கொடுத்தும், RTO ஆபீஸ் விவகாரங்களில் அனுபவம் இல்லாதவர்களுக்கு உதவி செய்துகொண்டும் இருக்கிறார்கள். 

மேலும் நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் இவர்கள் உதவி செய்கிறார்கள். செய்யும் உதவிக்காக உதவிபெற்றவர்கள் கொடுக்கும் நன்றியை (பணம்) வைத்துக்கொண்டு ஜீவனம் செய்கிறார்கள். இவர்களின் பணி மகத்தானது. ஆனால ஜனங்களும் அதிகாரிகளும் இவர்களை ‘’புரோக்கர்கள்’’ என்று கேவலமாக சித்தரித்து இவர்கள் ஏதோ தீவிரவாதிகள் என்பது போல் நடத்துகிறார்கள். என்னுடைய பார்வையில் இவர்கள் செய்வதுதான் உண்மையான மக்கள் சேவை. வாழ்க இவர்கள் தொண்டு.

சனி, 8 ஜூலை, 2017

16. வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தல்

இது ஒரு மீள் பதிவு. பதிவு இட்ட தேதி -  
இந்த பதிவின் கருத்துகள் எப்படி இன்றும் பொருத்தமாக இருக்கிறது பாருங்கள். அதுதான் தீர்க்க தரிசனம் என்று போற்றப்படுகின்றது.

                                        Image result for திருடன்

கோடை விடுமுறையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அப்போது தங்கள் வீட்டைப்பூட்டி விட்டு செல்வார்கள். இப்படி பூட்டியிருக்கும் வீடுகளை திருடர்கள் நோட்டம் போட்டு, அந்த வீடுகளில் இரவு நேரங்களில் (பல சமயங்களில் பகலிலேயே கூட) பல வகைகளில் உள்ளே புகுந்து திருடுகிறார்கள். தினமும் இந்த செய்திகள் செய்தித்தாள்களில் வருகின்றன.

குறிப்பாக திருட்டு போகும் பொருட்கள் நகைகளும் பணமும்தான். அதுவும் அதிக அளவில். இதில் புரியாதது என்னவென்றால், வெளியூர் போகிறவர்கள் ஏன் அவ்வளவு நகைகளையும் பணத்தையும் வீட்டில் வைத்துவிட்டுப் போகிறார்கள் என்பதுதான்.

வடநாட்டில் வீடுகளை வெளியில் பூசுவதில்லை. வெறும் செங்கல் சுவர் மட்டும்தான் வெளியில் தெரியும். வீட்டுக்குள் எல்லா வசதிகளும் இருக்கும். ஆனால் வெளியில் ஒன்றும் தெரியாது. இது ஏனென்றால் அங்கே பல நூற்றாண்டுகளாக முகலாயர்கள் படையெடுத்து எல்லோருடைய சொத்துக்களையும் கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். ஆகவே அங்குள்ள மக்களின் மனோபாவம் மிகவும் மாறுபட்டது. சொத்துக்களைச் சேர்த்து திருட்டுக்கொடுப்பதை விட அதை நாமே அனுபவித்து விட்டுப்போகலாமே என்ற எண்ணம் வலுவாக ஊறியிருக்கிறது. ஆகவே அவர்கள் தாங்கள் சம்பாதிப்பதை தாங்களே அனுபவிக்கிறார்கள்.

 ஆனால் தமிழ்நாட்டில் தன் மகனுக்கு, தன் பேரனுக்கு, தன் கொள்ளுப்பேரனுக்கு என்று சேர்த்து வைக்கிறார்கள். அப்படி சேர்த்து வைத்ததை எவனோ கொள்ளையடித்துக்கொண்டு போகிறான்.

ஓரளவிற்கு சேமிப்பு அவசியம்தான். ஆனால் பலரும் செய்வது என்னவென்றால் தான் சரியாக சாப்பிடாமல் கூட வருங்கால சந்ததியினருக்கு சேமிக்கிறார்கள். இது தேவையில்லாதது. ஆனால் மக்கள் எப்போது மனம் மாறுவார்கள் என்று செரியவில்லை.

ஞாயிறு, 2 ஜூலை, 2017

15. GST யினால் எங்கள் வருமானம் போச்சே?


இன்றைய கோவை செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தி GST வந்த பிறகு மாநிலங்களுக்கு இடையேயான வணிக வரிச் சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டுவிட்டன என்பதுதான். இதைப் பற்றி பல கனரக வாகன ஓட்டிகள் பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.

கோவை-பாலக்காடு இடையே வாளையார் என்கிற இடத்தில் ஒரு வணிகவரிச் சோதனைச் சாவடி இருக்கிறது. இது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். தினமும் இதன் வழியாக ஆயிரக்கணக்கான கன ரக வாகனங்கள் பல மாநிலங்களிலும் இருந்து செல்கின்றன. இந்த சோதனைச்சாவடியில் தணிக்கை முடிந்து வாகனங்கள் போவதற்கு குறைந்தது நான்கு நாட்கள் ஆகும்.

இதனால் விளைந்த தீமைகள் - இந்த வாகனங்களின் ஓட்டுனர்கள் வெட்டியாக நான்கு நாட்கள் காத்துக்கொண்டிருப்பதில் அவர்களின் சம்பளம், வாகனங்கள் ஓடாமல் நின்று கொண்டிருப்பதால் ஏற்படும் நஷ்டம் ஆகியவை அடங்கும். இந்த வழியாகப் போகும் மற்ற சாதாரண வாகனங்களும் பல இன்னல்களைச் சந்தித்தன.

இப்போது இந்த வணிக வரிச் சோதனைச் சாவடி நீக்கப்பட்டு விட்டதால் கனரக வாகன ஓட்டிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக செய்தித்தாட்கள் செய்தி பிரசுரிக்கின்றன.

ஆனால் இவர்கள் ஒருவரும் இந்த சோதனைச்சாவடிகளின்  இன்னொரு சாராரைப் பற்றி சிறிதும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. யோசித்துப் பாருங்கள். இந்தச் சோதனைச்சாவடிகளில் பணியாற்றிய பணியாளர்களின் இன்றைய நிலை என்ன? அவர்களின் குடும்பங்கள் எவ்வளவு சிரமப்படும்? இதை யாராவது யோசிக்கிறார்களா?

அவர்கள் அரசாங்க ஊழியர்கள், இந்த வேலை இல்லாவிட்டால் இன்னொரு வேலையில் அமர்த்தப்படுவார்களே, அதனால் அவர்களுக்கு என்ன கஷ்டம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகின்றது.

அப்படிக்கேட்பவர்கள் வாளையார் சோதனைச் சாவடிப் பக்கம் போயிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒரு சர்க்கார் அலுவலகம், ஆயிரக்கணக்கான வாகனங்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஏற்றிச் செல்பவை, அந்த சர்க்கார் அலுவலர்கள் அனுமதித்தால்தான் போகலாம். இப்படிப்பட்ட நிலையில் ஒருவன் சும்மா இருந்தால் கூட வாகன ஓட்டிகள் கொடுக்கும் அன்பளிப்புகளை வாங்கி நிரப்ப ஒரு பாக்கெட் போதாதே.

இனி அவர்கள் பாக்கெட் நிரம்ப வழி ஏதுமில்லையே? இவர்களின் குறையைக் கேட்பார் இல்லையே? இதைவிடக் கஷ்டம் இருக்க முடியுமா? இந்தச் செய்தித்தாள்கள் இவர்களின் குறையை ஏன் செய்தியாக வெளியிடக்கூடாது?   

வியாழன், 29 ஜூன், 2017

14. பஸ்களும் விபத்துக்களும்

                                           Image result for பஸ் விபத்து

மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் போக்கு வரத்து தேவைகளும் அதிகரித்து விட்டன. பஸ்கள், லாரிகள், மினிபஸ்கள், வேன்கள், கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், ஸகூட்டர்கள் என்று பல விதமான வாகனங்கள் பல மடங்கு அதிகமாகி விட்டன. இந்த வாகனங்கள் அதிகரிப்புக்கு ஈடாக ரோடுகள் அதிகரிக்கவில்லை. அதனால் அடிக்கடி ரோடுகளில் விதவிதமான விபத்துக்கள் நடக்கின்றன.

வாகனங்கள் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வேண்டும். கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு தனியாக ஸ்பெஷல் லைசன்ஸ் வேண்டும். இப்படியெல்லாம் சட்ட புத்தகத்தில் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இவை எந்த அளவுக்கு கடைப்பிடிக்கப்படுகின்றன என்று யாரும் பார்க்கிறார்களா என்பது ஒரு கேள்விக்குறியே?

குறிப்பாக அரசு நடத்தும் பஸ் நிறுவனங்களில் இருக்கும் பஸ் டிரைவர்கள் பெரும்பாலும் அனுபவம் குறைந்தவர்கள். அவர்களிடம் ஒரு பெரிய பஸ்ஸைக்கொடுத்து ஓட்டச்சொன்னால் அவர்கள் அவர்களுடைய திறனுக்குத் தக்கவாறுதான் ஓட்டுவார்கள். சிக்கலான சூழ்நிலையில் அவர்கள் செய்யும் தவறுகளினால்தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களோ ரோடு முழுவதும் அவர்களுக்காகவே இருக்கிறது என்ற எண்ணம். பின்னால் வரும் கனரக வாகனங்களை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. மேலும் இந்த வாகனங்களில் எவ்வளவு பேர் போகமுடியும் என்ற உணர்வும் கிடையாது. ஒரு TVS 50 மொபட் வண்டியில் தன் குடும்பம் முழுவதையும் (5 பேர்) ஏற்றிக்கொண்டு போகிறார்கள். வண்டி இழுக்கமாட்டேன் என்கிறது. முக்கி முனகிக்கொண்டு மேட்டில் ஏறும்போது பின்னால் வேகமாக வரும் பஸ் அல்லது லாரி இந்த மொபட்டின் மேல் லேசாகப்பட்டால் போதும். மொபட்டில் போகிறவர்கள் அந்த லாரியின் முன்னால் விழுந்து.... பிறகு என்ன நடந்தது என்பதைத்தான் தினமும் பேப்பரில் பார்க்கிறோம்.

ஆக மொத்தத்தில் இரண்டு பக்கத்திலும் தவறு இருக்கிறது. ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

கோவையில் மட்டும் கடந்த மாதம் தெரு விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 என்று செய்தித்தாள்களில் பிரசுரமாகியிருந்தது. இது தமிழ்நாட்டிலேயே அதிக பட்ச இறப்பு என்றும் கூறப்பட்டிருந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த விபத்துக்களுக்கு காரணம் அரசு போக்குவரத்து வாகனங்கள்தான். நல்ல சேவை.

இந்த விபத்துக்களை செய்தித்தாள்களில் காலையில் படித்து மாலையில் மறந்து போகிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த விபத்து ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பைப் பற்றி நம்மில் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனாலும் இத்தகைய விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றன என்று ரோடில் செல்லும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். நாமும் ஒரு நாள் இந்த மாதிரி செய்தியாகலாம்.

வேகம், வேகம், வேகம். இதுவே நம் ஒவ்வொருவரின் தாரக மந்திரம். எதிலும் வேகம். எல்லாவற்றிலும் வேகம். யமலோகத்திற்கு போவதற்கும் வேகம். என்ன செய்ய முடியும்? மக்கள் சிந்திக்க வேண்டும்.