புதன், 1 மே, 2013

19. அவசரச் செய்தி

வந்த அவசரச்செய்தி என்னவென்றால், அனைத்து மாநிலங்களிலும் சில ஓட்டுச் சாவடிகளை "பூத் கேப்சர்" செய்வதற்காக குண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே.

இந்தக் குண்டர்களை ஓட்டுச் சாவடியில் இருக்கும் நமது கிங்கரர்களே கவனித்துக்கொள்வார்கள் என்றாலும் ஓட்டுச் சாவடிக்குப் பக்கத்தில் சலசலப்பு எதற்கு என்று, அவர்கள் அனைவரையும் நமது தூதரகத்திற்கு கொண்டுவரச் சொன்னேன்.

எல்லோரும் வந்து மீட்டிங் ஹாலில் உட்கார்ந்தார்கள். எதற்காக பூத் கேப்சர் பண்ண முயன்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஒவ்வொரு எலெக்ஷன் நடக்கும்போதும் இதுதான் எங்களுக்கு வேலை. இந்தந்த பூத்துகளை கேப்சர் செய்யுங்கள் என்று வேட்பாளர்கள் சொல்லுவார்கள். அதன்படி செய்வோம். அடுத்த எலெக்ஷன் வரும்வரை நாங்கள் வாழ்வதற்கான செலவிற்கு பணம் கொடுப்பார்கள். அதை வைத்து பிழைத்துக்கொண்டிருந்தோம்.

இந்த எலெக்ஷனில் எங்களை ஒருவரும் கூப்பிடவில்லை. எங்களுக்குத் தெரிந்த தொழில் இது ஒன்றுதான். அதனால்தான் இந்த வேலைக்குக் கிளம்பினோம் என்றார்கள்.

அப்படியா சேதி, உங்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான பணம் கொடுக்கப்படும். நீங்கள் அனைவரும் எல்லைக் காவல் படையில் சேர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளம் உங்கள் வீட்டில் கொடுக்கப்படும் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.

பிறகு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்தது. 98 சதம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. நடக்க முடியாதவர்களும் ஆஸ்பத்திரியில் இருந்தவர்களையும் தவிர அனைவரும் ஓட்டுப்போட்டிருந்தார்கள்.

மறு நாள் காலையில் ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்தது. மதியத்திற்குள் முடிவுகள் வெளியாகிவிட்டன. தேசீயக் கட்சி, எதிர் பார்த்தது போல் 90 சதம் இடங்களில் வெற்றி பெற்றார்கள். எதிர்க்கட்சிகளுக்கு 10 சதம் இடங்கள் கிடைத்தன. இது எப்படி நடந்தது என்று அனைத்து மக்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அந்த ரகசியம் தேவலோக தூதரகத்தில் இருக்கும் சூபர் கம்ப்யூட்டருக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்.

மாநில சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதினைந்து நாள் பயிற்சி கொடுக்கப்பட்டது. அவர்களின் கடமைகள் என்ன, உரிமைகள் என்ன, மாநில அரசின் பொறுப்புகள் என்ன, அவைகளை நிறைவேற்றுவது எப்படி ஆகிய விஷயங்களில் அவர்களுக்குத் தீவிரப் பயிற்சி கொடுக்கப்பட்டது.

அதே மாதிரி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. எல்லோரும் நாட்டை ஆளுவதற்கு தயாராகி விட்டார்கள்.

இந்தப் பயிற்சிகளில் வலியுறுத்தப்பட்ட அம்சங்கள் வருமாறு.

1. இந்திய நாட்டில் இனி லஞ்சம் எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது.

2. இலவசங்கள் எந்த ரூபத்திலும் இல்லை.

3. அனைவரும் வேலை செய்யவேண்டும்.

4. தொழிற்சாலைகள் தரமான பொருள்களையே உற்பத்தி செய்யவேண்டும்.

5. நாட்டில் பிச்சை எடுப்பது ஒழிக்கப்பட்டு விட்டது.

6. எல்லோரும் சமம். யாருக்கும் எந்தவிதமான சலுகைகளும் இல்லை.

7. பொருட்களுக்கு உற்பத்தி செலவிற்கு மேல் 30 சதம் லாபம் உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்கப்படும்.

8. வியாபாரத்தில் வாங்கும் விலைக்கு மேல் 10 சதம் மட்டுமே அதிகப் படுத்தி விற்கலாம்.

9. அனைத்து அரசு நிறுவனங்களும் மக்களின் சேவைக்காகவே தரமாக பணியாற்றும்.

10. ரயில்கள் குறித்த நேரத்தில் ஓடும்.

11. போக்குவரத்து நெரிசலான நேரங்களில் நகரின் மையப் பகுதிகளில்  தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

12. நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் அரசு அலுவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.

13. அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து விதிகள் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும்.

14. கல்விக்கூடங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும். தனியார் கல்விக்கூடங்களை அமைப்பது தடுக்கப்படுகிறது.

15. போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும்.

16. பாராளுமன்ற, சட்டசபை உறுப்பினர்களுக்கு எந்த ஆடம்பர வசதிகளும் தரப்படமாட்டாது. மத்திய மந்திரிகள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்யலாம்.

17. டில்லியில் மீட்டிங் வைத்து மாநிலங்களிலிருந்து மந்திரிகளையும், செயலர்களையும் கூப்பிடும் வழக்கம் அடியோடு நிறுத்தப்படுகிறது.

இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அவைகளை எனக்குத் தெரிவிக்குமாறு எல்லோருக்கும் அறிவித்தேன். பாராளுமன்றமும் சட்டசபைகளும் செயல்பட ஆரம்பித்தன. நாடு ஒழுங்கான பாதையில் போக ஆரம்பித்தது.


11 கருத்துகள்:

  1. கனவு ஏதும் கண்டீர்களா அய்யா ஹா ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  2. முக்கியமா வி ஐ பிக்கள்போகும்போது பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தி வச்சு தேவுடு காக்க வைக்கக்கூடாது என்பதும் உண்டுதானே?

    அப்படியே சாலை ஓரங்கள் ஆண்களுக்கான ரெஸ்ட்ரூம் அல்ல என்பதையும் சேர்த்துக்கலாமா?

    பதிலளிநீக்கு

  3. "போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும்.”
    இதோடு புதிதாய் முளைக்கும் எல்லா வழிபாட்டுத்தலங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    ‘எண்ணம் போல் வாழ்க’ என்று சொல்வார்கள். உங்கள் எண்ணம் போல், ஒரு நாள் எல்லாம் நடக்கும் என நம்புவோம்!

    பதிலளிநீக்கு
  4. அடுத்த பதிவுக்கு காத்திருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  5. சங்கர் படத்தில் கூட இப்படி அம்சங்களை அமைக்க முடியாது...! ஹிஹி.... வாழ்த்துக்கள் சார்...

    பதிலளிநீக்கு
  6. இன்னும் மூன்று அம்சம் சேர்த்தால், இந்திரா காந்தியின் இருபது அம்ச திட்டம் போல இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. பயிற்சிகளில் வலியுறுத்தப்பட்ட அம்சங்கள் அருமை..!

    பதிலளிநீக்கு
  8. நினைப்பு பொழப்பை கெடுக்குதுன்னு பழமொழி படித்திருப்பீர்களே ?

    பதிலளிநீக்கு