செவ்வாய், 30 ஜூன், 2015

80 வயது முடிந்தால் என்ன செய்ய வேண்டும்?

               

இது ஒரு கேள்வியா? பேசாமல் படைத்தவனைப் பார்க்கப் போக வேண்டியதுதான். அப்படிப் போகாட்டியும் பரவாயில்லை? பதிவு எழுதறேன்னுட்டு எங்களை வேற உயிரை எடுக்கறீங்க? இதை விட அக்கிரமம் உலகத்தில உண்டா? (DD to note)

நண்பர் ஜெயக்குமார் போட்டுள்ள பின்னூட்டத்தைப் பாருங்க.

ஐயா

தங்களுடைய 80 ஆவது பிறந்த நாள் (15ஜூன்)மற்றும் சென்றுவிட்ட 50ஆவது கல்யாண நாள் வீட்டின் 50 வயது முதிர்வு எல்லாவற்றையும் இந்த மாதம் ஒன்றாகக் கொண்டாட இருந்தீர்களே. கொண்டாட்டம் முடிந்து விட்டதா? அல்லது தள்ளிப் போடப்பட்டதா? அல்லது பேரன் மார்க் விவகாரத்தில் வேண்டாம் என்று கை விடப்பட்டதா?

எப்படியாயினும் இது பற்றி ஒரு பதிவு போடுங்கள்.


Jayakumar

இதைப்பற்றி ஒரு பதிவு போட்டா பத்தாதுங்க. இருந்தாலும் நண்பர்கள் வேண்டுகோளைத் தட்ட முடியுமா? அதனால சுருக்கமா ஒரு பதிவில சொல்லிப்புடறனுங்க.

என் வாழ்க்கையில் பல முடிச்சுகள் விழுந்திருக்கின்றன. அதற்குக் காரணம் நான் பிறந்த நேரம் என்று பல ஜோசியர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதில் ஒரு விநோதம் பாருங்க, நான் எப்ப பிறந்தேன் அப்படீங்கறதுதான் முதல் முடிச்சு.

நான் வேலைக்குப் போன முதல் நாள் (16-8-1956), கல்யாணம் பண்ணின நாள்
(9-9-1964), பணி ஓய்வு பெற்ற நாள் (30-6-1994) இதெல்லாம் நன்றாக ஞாபகம் இருக்குது.  ஆனால் நான் என்றைக்குப் பிறந்தேன் என்பது மட்டும் ஞாபகம் வரமாட்டேன் என்கிறது.

என்னுடைய  SSLC சர்டிபிகேட்டில் என் பிறந்த நாள் 15-6-1934 என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ரொம்ப நாள் நான் இதுதான் என் பிறந்த நாள் என்று நம்பிக்கொண்டு இருந்தேன். ஒரு நாள் அந்த நம்பிக்கையில் மண் விழுந்தது.
எங்கிருந்தோ ஒரு பழுப்பு சீட்டு திடீரென்று முளைத்தது. அதில் ஒரு தேதி -இங்கிலீசிலியும் தமிழ் மாதத்திலும் எழுதி நட்சத்திரம் எழுதி கிழமை எழுதி நேரம் எழுதி இந்த நேரத்தில் பழனியப்ப கவுண்டர்-பூவாத்தாள் தம்பதியினருக்கு  குமாரர் சுப ஜனனம் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த அரிய கண்டு பிடிப்பு நான்  SSLC படிக்கும்போது நடந்தது. இந்த சீட்டைக் கொண்டு போய் எனக்குத் தெரிந்த வாத்தியாரிடம் காட்டி இதற்கு என்ன பண்ணலாம் என்று கேட்டேன். அவர் உன்னுடைய  SSLC சர்ட்டிபிகேட் புத்தகத்தில் பழைய தேதியை எழுதியாய் விட்டது. தவிர இது ஒரு துண்டுக் காகிதம். ஒழுங்காக எழுதப்பட்ட ஜாதகம் என்றாலாவது ஏதாவது செய்யலாம். ஆனால் அப்படிச் செய்தால் நீ இந்த வருடம்  SSLC பரீட்சை எழுதவேண்டிய வயது இருக்காது. அடுத்த வருடம்தான்  SSLC பரீட்சை எழுத முடியும் என்றார்.

அப்போ எல்லாம்  SSLC பரீட்சை எழுத ஒரு குறிப்பிட்ட வயது முடிந்திருக்கவேண்டியது அவசியம். இது என்னடா கிணறு வெட்ட பூதம் வந்த கதையாகப் போயிற்றே என்று நான் அந்த விஷயத்தை விட்டு விட்டேன். இருந்தாலும் இந்த தேதி விவகாரம் எப்படி நடந்தது என்று ஆராய்ச்சி செய்து கொண்டேயிருந்தேன். அப்பவே என் மூளை எப்படி என்னை ஒரு ஆராய்ச்சியாளனாக ஆவேன் என்று அடையாளம் காட்டி இருக்கிறது பாருங்கள்.

அப்படி ஆராய்ச்சி செய்ததில் என் பாட்டி சொன்னதாவது. நான் சிறுவனாக இருந்தபோது என்னைவிட இரண்டு வயது மூத்தவனான என் அத்தை மகன் எங்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் போய்க்கொண்டு இருந்திருக்கிறான். என் அத்தையைக் கட்டிக் கொடுத்தது ஒரு வரப்பட்டிக்காடு. அங்கு பள்ளிக்கூடம் இல்லை. அதனால் டவுனில் நாங்கள் குடியிருந்ததினால் எங்கள் வீட்டில் இருந்து படித்திருக்கிறான்.

அவன் பள்ளிக்கூடம் போவதைப் பார்த்த நான் அவனுடன் பள்ளிக்கூடம் போகவேண்டும் என்று அழுது ரகளை பண்ணியிருக்கிறேன். என் ரகளை பொறுக்க மாட்டாமல் என் பாட்டி என்னை ஒரு நாள் பள்ளிக்கூடத்திற்கு கூட்டிப்போய் என்னையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர் பாட்டியிடம் இவன் வயதென்ன என்று கேட்டதற்கு என் பாட்டி அது எல்லாம் எனக்குத் தெரியாது, எப்படியோ நீங்கள் இவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தே ஆகவேண்டும். வீட்டில் இவன் ரகளை பொறுக்க முடிவதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க ஐந்து வயது முடிந்திருக்க வேண்டும். அதை கணக்கில் வைத்து அந்த ஆசிரியர் என் வயதை 15-6-1934 என்று குறித்துக் கொண்டார். அப்போதெல்லாம் பிறப்பு சான்றிதழ் வழக்கமெல்லாம் ஏற்படவில்லை. ஒருவருடைய ஜாதகம்தான் அவருடைய பிறப்பு சான்றிதழாக இருந்தது.

எனக்கு ஜாதகம் எழுதாததினால் குத்து மதிப்பாக இந்த பிறந்த தேதி நிர்ணயிக்கப்பட்டு விட்டது. வெகு காலம் கழித்து என் உண்மையான பிறந்த தேதி எழுதிய துண்டுக்காகிதம் கிடைத்தது என்று முன்பே கூறினேன் அல்லவா? நான் வேலைக்குச் சேர்ந்த பிறகு ஒரு பஞ்சாங்க ஐயர் எனக்குப் பழக்கமானார். அவர் என்னுடைய ஜாதகம் எங்கே என்று கேட்டார். எனக்கு ஜாதகம் எழுதவில்லை என்று சொன்னேன். பிறந்த தேதியும் நேரமும் தெரியுமா என்று கேட்டார். நான் இந்த துண்டு காகித த்தை எடுத்துக் காண்பித்தேன்.

அவர் அந்தக் காகிதத்தை வாங்கிக்கொண்டு போய்  சில நாட்கள் கழித்து என் ஜாதகத்தை ஒரு புது நோட்டில் எழுதிக்கொண்டு வந்து கொடுத்தார். அதை வைத்துக் கொண்டு இருந்தேன். சர்க்கார் ஆவணங்களிலெல்லாம் என் பிறந்த நாள்  SSLC சர்டிபிகேட் புத்தகத்தில் இருப்பது போன்று பதிவாகிவிட்டது. ஆனால் ஜாதகப்படி என் பிறந்த நாள் ஒரு வருடம் ஒரு மாதம் கழித்துத்தான் வருகிறது. இதைச் சரி செய்ய முடியுமா என்று விசாரித்தேன்.

அது கோர்ட்டுக்குப் போய் தீர்மானமாக வேண்டிய சமாச்சாரம். அங்கு போனால் என்னுடைய ஜாதகத்தைத்தான் ஆதாரமாக காட்ட வேண்டி இருக்கும். ஆனால் என் ஜாதகம் புதிதாக எழுதப் பட்டதாகையால் கோர்ட்டில் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லிவிட்டார்கள். சரி நானும் இந்த கோர்ட் வேலையெல்லாம் நமக்கு உதவாது என்று விட்டு விட்டேன்.

 SSLC தேதி பிரகாரம் ரிடைர்டு ஆகி விட்டேன். சஷ்டியப்த பூர்த்தி என்று ஒரு விசேஷம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அது எங்கள் சமூகத்தில் யாராலும் கொண்டாடப் பட்டதில்லை. நானும் அது பற்றி அதிகமாக நினைக்கவில்லை.அது மட்டுமல்ல, பிறந்த நாள், கல்யாண வலையில் விழுந்த நாள் என்று எல்லாம் கொண்டாடும் வழக்கம் கிடையாது. இறந்த நாளை மட்டும் இறந்தவரின் சந்ததியினர் "திவசம்" என்று அனுஷ்டிப்பார்கள். அவ்வளவுதான்.

இந்த சமயத்தில் என் நெருங்கிய நண்பன் ஒருவன் திருக்கடையூர் சென்று சஷ்டியப்தபூர்த்தி சடங்குகள் செய்து வந்தான். அதைப் பார்த்த எனக்கும் மனதிற்குள் ஒரு ஆசை தோன்றியது. நானும் இந்த வைபவத்தைக் கொண்டாடினால் என்ன? என்று யோசித்து அதை நிறைவேற்றினேன். இதை ஜாதகத்தில் இருக்கும் தேதி பிரகாரம்தான் கொண்டாடவேண்டும், அதுவும் ஒருவன் பிறந்த மாதத்தில் அவன் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில்தான் கொண்டாடவேண்டும் என்றும் சொன்னார்கள்.

அப்படியே திருக்கடையூர் சென்று சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடிவிட்டு வந்தேன். போட்டோக்கள் எடுத்துக்கொண்டேன். மனைவிக்கு இரண்டாம் முறை தாலி கட்டினேன். அதனால்தான் இதை அறுபதாம் கல்யாணம் என்றும் சொல்கிறார்கள். நான் என் மனைவி, எனது இரு மகள்கள், எனது சகோதரி, ஆகிய ஐந்து பேர் மட்டுமே போயிருந்தோம். அங்கு இந்த மாதிரி வைபவம் செய்ய வந்திருந்தவர்கள் ஒரு பெரிய கல்யாணக் கூட்டத்துடன் வந்திருந்ததைப் பார்த்து மலைத்தேன்.

ஆச்சு, அந்த வைபவம் முடிந்து 20 வருடங்கள் ஆயிற்று. நாங்கள் இருவரும் (இரத்த அழுத்தம், சர்க்கரை இவைகளுடன்) நலமாக இருக்கிறோம். ஆகவே 80 ஆம் கல்யாண வைபவத்தையும் ஏன் கொண்டாடக்கூடாது என்று தோன்றியது. ஆனால் திருக்கடையூர் சென்று வருவதற்கான சூழ்நிலை இல்லை. ஆகவே இங்கு பக்கத்தில் 15 கி.மீ. தூரத்தில் கால காலேஸ்வரர் கோவில் ஒன்று இருக்கிறது. அங்குதான் திருக்கடையூரில் சாபம் பெற்ற யமன் சாப விமோசனம் பெற்றதாக ஐதீகம். அங்கும் இந்த மாதிரி சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்களை நடத்தி வைக்கிறார்கள் என்று கேள்விப் பட்டோம்.

ஆகவே இங்கேயே என்னுடை சதாபிஷேகத்தையும் நடத்தி விடலாம் என்று முடிவு செய்தேன். நானாக கூகுளில் பஞ்சாங்கம் பார்த்து 1-7-2015 ல் என்னுடைய ஜன்ம நட்சத்திரம் வருவதைக் கண்டு பிடித்து அன்று சதாபிஷேகம் செய்வதாய் முடிவு செய்தேன். சரி, எதற்கும் அந்தக் கோவிலுக்கே சென்று இதன் நடைமுறைகளை அறிந்து வருவோம் என்று ஒரு மாதம் முன்பு நானும் என் மனைவியும் சென்றிருந்தோம்.

அங்குருந்த கோவில் குருக்கள் என் பிறந்த தேதி வருடம் ஆகியவைகளைக் கேட்ட பிறகு, இந்த சதாபிஷேகம் 80 வயது முடிந்து குறைந்தது மூன்று மாதம் கழித்துத்தான் செய்யவேண்டும் என்றார். நான் என்னுடைய கணக்குப் பிரகாரம் 1-7-2015 ல் சதாபிஷேகம் செய்ய துணி மணிகள், புதுத் தாலி ஆகியவை ஏற்பாடு செய்து விட்டேன். குருக்கள் ஆனந்தபோதினி பஞ்சாங்கத்தைப் பார்த்து நவம்பர் 15 ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை சரியாக இருக்கிறது, அன்று உங்கள் விசேஷத்தை வைத்துக் கொள்ளலாம் என்றார்.

எந்த நேரம் இந்த வைபவத்தை நடத்தலாம் என்று கேட்டேன். அவர் காலை 5 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் ஆரம்பித்தால் 8 மணிக்குள் எல்லா விசேஷங்களையும் முடித்து விடலாம் என்று கூறினார். எனக்கும் அது சரியாகப் பட்டதினால் அதற்கு ஒப்புக்கொண்டு கோவிலுக்குச் செலுத்த வேண்டிய ரூபாய் 3000 ஐக் கொடுத்து ரசீது வாங்கிக்கொண்டேன்.

கல்யாணம் முடிந்த 50 வது வருடம் 9-9-2014ல் பூர்த்தியானது. அதற்கு ஏதோ ஒரு கோவிலுக்குப் போய் வந்ததோடு சரி. ஆகவே இந்த சதாபிஷேகத்துடன் அந்த வைபவத்தையும் நடத்துவதாக எண்ணிக் கொண்டால் போகிறது என்று முடிவு செய்தேன்.

பல சமூகங்களில் இந்த வைபவத்தை ஏறக்குறைய கல்யாணம் போலவே செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் அப்படி ஏற்பாடு செய்தால் என் உறவினர்கள் எல்லாம் இவனுக்கு வந்த வாழ்வைப் பார் என்பார்கள். அதனால் என் குடும்பம் மட்டுமே இதில் கலந்து கொள்வதாக ஏற்பாடு. என் பங்காளிகளுக்கு மட்டும் எங்கள் குலதெய்வக் கோவிலில் ஒரு கடாவெட்டு விருந்து. இவ்வளவுதான் சதாபிஷேக ஏற்பாடுகள்.

ஆனால் பதிவுலக நண்பர்கள் விரும்பினால் என் சதாபிஷேக வைபவத்தில் தாராளமாகக் கலந்து கொள்ளலாம், வைபவம் கோவை-சத்தி ரோட்டில் கோவையிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் கோவில்பாளையம் என்ற ஊரில் உள்ள கால காலேஸ்வரர் கோவிலில் காலை 5 மணி முதல் 8 மணி வரை நடக்கும். கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் கணபதி பாரதி நகரில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலில் காலை டிபனும் சாய்பாபா காலனியில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலில் மதிய சாப்பாடும் உண்டு. இரவு சாப்பாட்டை அவரவர்களுக்குப் பிடித்த ஹோட்டலில் அவரவர்கள் செலவில் சாப்பிட்டுக் கொள்ளலாம். இரண்டு நாட்கள் (சொந்த சிலவில்) தங்கி ஊட்டி பார்த்து விட்டு ஊருக்குத் திரும்பலாம்.

                                      Image result for அன்னபூர்ணா, கோவை

அப்படிக் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக நிறைய போட்டோக்கள் எடுத்து ஒரு ஸ்பெஷல் பதிவு போடப்படும் அதைக் கண்டு களிக்கலாம். நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் அழைப்பு கொடுக்கிறேன். நான்கு நாட்கள் முன்னதாகவே சுற்றம் சூழ வந்திருந்து வைபவத்தில் கலந்து கொண்டு எங்களைக் கௌரவிக்கலாம். 

31 கருத்துகள்:

  1. எண்பதாவது வயது முடிந்து எண்பத்தியோராவது வயதில் காலடி எடுத்துவைக்கும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்! தங்களது சதாபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு தங்களின் ஆசியைப் பெற ஆசைதான். முயற்சிக்கிறேன்.

    நண்பர் திரு ஜெயக்குமார் அவர்களை குறிப்பிடும்போது ஆரம்பத்தில் தவறுதலாக ஜெயராமன் எனவந்துவிட்டது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவற்றைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. சரி செய்துவிட்டேன்.

      நீக்கு
  2. 15.11.2015 குறித்துக் கொண்டேன்... வர முயற்சிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. ஐயா

    தங்களின் கிரியா ஊக்கி (catalyst) ஆக இருப்பதில் சந்தோசம். தாங்கள் 80ஐ கடந்தும் தங்களுடைய செயல்பாடுகளிலும் முடிவேடுப்பதிலும் மற்றவர்களுடைய தலையீடு (மனைவியைத் தவிர, மனைவி சொல்லே மந்திரம் ) இல்லாமல் சுதந்திரம் பெற்றுள்ளீர்கள். அந்த அளவு நான் இல்லை.

    கொண்டாட்டங்களுக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. சிறப்பாக செய்யலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. நமது பிறந்த நாள், நமது தாய், நமது தந்தை, நமது பெயர், இதெல்லாம் மற்றவர்கள் சொல்லித்தான் நமக்குத் தெரியுமே தவிர நம்மால் தீர்மானமாக நிரூபிக்க முடியாதது.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. சதாபிஷேக வைபவத்தில் கலந்து கொள்ள முடியாத எங்களுக்கு ஒரு செக் அனுப்பி வைத்தால் அந்நாளில் உங்கள் பெயர் சொல்லி வாழ்த்திவிட்டு நாங்களும் சாப்பிடுவோமே

    பதிலளிநீக்கு
  6. நூறு பிறை கண்டபின் தான் சதாபிஷேகம் கொண்டாடுவார்கள் அதற்காகக் காத்திருந்து நவம்பர் மாதம் 15-ம் தேதி விமரிசையாகக் கொண்டாடுங்கள். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. 80வயது பூர்த்தியாகும் தங்களுக்கு என் நமஸ்காரங்கள்.

    தங்களின் சுயசரிதையை தங்களுக்கே உரித்தான எளிமையாகவும், யதார்த்தமாகவும் மற்றும் நகைச்சுவையாகவும் சொல்லியுள்ளீர்கள்.

    மிகவும் சந்தோஷம். பாராட்டுகள் + வாழ்த்துகள், சார்.

    விழா இனிதே நடக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  8. எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா! என்று சொல்லி வாழ்த்த எங்களுக்கு வயதில்லை எனவே தங்களது நல்லாசியை வேண்டுகின்றோம் ஐயா....

    பதிலளிநீக்கு
  9. இந்த நல்ல நாளில் தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லா நலனும் பெற்று, பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நேரில் வர வாய்ப்பு இல்லாத காரணத்தால் எனது இப்பதிவையே வாழ்த்தாக அனுப்புகிறேன். தங்களின் அனுபவங்களும், பகிர்வுகளும் எங்களுக்குப் பாடங்கள். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. எண்பதாம் ஆண்டுவிழா கொண்டாடும் தங்களுக்கு எனது வணக்கங்கள்! விழா சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. அமர்க்களமாக கொண்டாடுங்கள்! ஊரில் இருந்திருந்தால் வரலாமா என்று யோசிக்கவாவது வாய்ப்பு உண்டு. கூகுள் ஆண்டவர் வழியாக ஆசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் ஆசீர்வாதம் வேண்டுகிறேன். இறைவன் திருவருள் இருப்பின் நானும் உங்கள் விழாவில் கலந்து கொள்வேன் அய்யா!
    த.ம.6

    பதிலளிநீக்கு
  13. இதயம் கனிந்த இன்ப வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
  14. இன்னும் பதினைந்து ஆண்டுகள் கழிந்தால் எனக்கும் இம்மாதிரி கொண்டாடவேண்டிய பாக்கியம் (?) வரலாம். அப்போது தங்களைத் தொடர்பு கொள்ளுவேன். தவறாமல் வந்திருந்து வாழ்த்தியருள வேண்டும். நன்றி! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு.இராய செல்லப்பா அவர்களுக்கு,

      அநேகமாக இன்னும் பதினைந்து வருடங்களில் தொலை தொடர்பு வசதிகள் இன்னும் பலமடங்கு மேற்பட்டு விடும். அதேமாதிரி பிரயாண வசதிகளும் மேம்பட்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த சமயத்தில் நிச்சயமாக பூலோகத்திலிருந்து மேல் லோகத்திற்கு பேச முடியும். போகவரவும் முடியும். நீங்கள் எனக்கு செய்தி அனுப்பினால் கண்டிப்பாக உங்கள் வைபவத்திற்கு வந்து கலந்து கொண்டு வாழ்த்துகள் வழங்குகிறேன்..

      நீக்கு
  15. Happy Birthday. May God Bless you in abundance with Happiness, good Health and All Prosperity.
    Wish your Ensuing Sadhabishekam all success.
    Seek your elderly blessings for a happy & Healthy life - Babu & Bala

    பதிலளிநீக்கு
  16. தங்களின் ஆசி எங்களுக்கு வேண்டும்.
    என்றும் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  17. பல்லாண்டு, இன்னும் பல ஆண்டு நலமுடன் வாழ இறைவனைப்பிரார்த்திக்கிறேன். தங்கள் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்டு தங்கள் ஆசிகளைப்பெற ஆவலாக உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  18. நமஸ்காரங்கள்.

    வாழ்த்துகள்.

    என்னுடைய பிறந்த நாளைக் கூட வேறு சில காரணங்களுக்காக என் அப்பா மாற்றித்தான் கொடுத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  19. சதாபிஷேகம் செய்து கொள்வது மிக விசேஷமானது;செய்து கொண்டவர்களின் ஆசி பெறுவது அதை விட விசேஷமானது.எனவே எண்பதைக் கடந்து விட்ட உங்களின் ஆசிகள் வேண்டி வணங்குகிறேன்.விழா சிறப்புற நிறைவேறவும்,இருவரும் மேலும் பல்லாண்டு நலமோடு வாழவும் பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  20. பிறந்த நாள், வைபவ நாள், கொண்டாட்டங்கள் ... எல்லாவற்றிற்கும் வாழ்த்துகள்.

    கெடா வெட்டு என்று சொல்லி விட்டு....அன்னபூரணி என்றால் .. அது எப்பூடி..!!??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தருமி ஐயா அவர்களுக்கு,
      நீங்கள் என்னைவிட மூன்று வயது மூத்தவர் என்று நினைவு. ஆகவே உங்கள் ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன். உங்கள் அட்வான்ஸ் வாழ்த்துகளுக்கு நன்றி.

      எங்கள் பங்காளிகள் எல்லாம் சேர்ந்து வருடத்திற்கு ஒரு முறை எங்கள் குலதெய்வக் கோவிலுக்குப் போய் வருவோம். போன வருடம் அப்படிப் போனபோது அடுத்த வருடம் அதவது 2015 ல், கடா வெட்டிக் கொண்டாடுவாம் என்று பேசினோம். நான் என் 80 வது வருட முடிவை மனதில் கொண்டு அப்படியானால் அந்த கடாவெட்டு சிலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னேன். அதன்படி அந்த கடாவெட்டு வருகிற 12ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு நீங்கள் கண்டிப்பாக வந்து வாழ்த்தவேண்டும். கோவைக்கு வந்து விட்டால் அப்புறம் உங்களைக் கவனித்துக்கொள்வது என் பொறுப்பு.

      நீக்கு
  21. அன்புடன் ஐயா- அம்மா!
    வணங்குகிறேன். தங்கள் ஆசி வேண்டி!
    தாங்கள் நலமுடன் வாழ இறையிடம் வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  22. ப.க.சாமி அண்ணன் அவர்களுக்கு ...
    நானெல்லாம் சின்னப் பசங்க ஐயா! எனக்கு கொஞ்ச வயது தான் .... இப்பத்தான் 71 நடக்குது ....

    மீண்டும் சின்னத் தம்பியின் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  23. வாழ்த்துக்கள் வணக்கங்கள் ஐயா! உங்களை நினைத்து பெருமை கொள்கின்றோம்

    பதிலளிநீக்கு