வியாழன், 25 ஜூன், 2015

நான் ஆடிட்டரை ஏமாற்றிய கதை

                                   Image result for ஜீப்

ஆடிட்டர்களுடைய தலையாய குணம் என்னவென்றால் நாம் எதை எப்படி ரூல்படிச் செய்திருந்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதுதான். இது எனக்கு நன்றாகத் தெரியும். இந்த யூகத்தின் அடிப்படையில் நான் ஒரு முறை ஆடிட்டர்களை வகையாக ஏமாற்றினேன். அது எப்படி என்று பாருங்கள்.

அரசு அலுவலகங்களில் உள்ள வாகனங்கள் அந்த அலுவலக உயர் அதிகாரி அலுவலக வேலைகளுக்குப் பயன்படுத்துவதற்காக மட்டுமே வாங்கப்பட்டவை ஆகும். ஆனால் இதை சொந்த வேலைகளுக்காகப் பயன்படுத்துபவர்கள் அதிகம். பெண்டாட்டி ஷாப்பிங்க் போவதற்கும் குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்கும் உபயோகப்படுத்துபவர்கள் உண்டு.

இதனால் வாகனங்கள் இருக்கும் அலுவலகங்களில் இந்த ஆடிட்டர்கள் கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு வெகு கவனமாகப் பார்ப்பார்கள். எனக்கு இது நன்றாகத் தெரியும். நான் தஞ்சாவூரில் ஆபீசராக இருந்த போது எனக்கு இந்த மாதிரி ஒரு வாகனம் கொடுத்திருந்தார்கள். நான் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு போகாததினால் தனியாக இருந்தேன். சொந்த உபயோகம் என்று ஏதும் வந்ததில்லை.

ஒரு சமயம் என் குடும்பத்தினருக்கு தஞ்சாவூரிலும் பக்கத்து ஊர்களிலும் உள்ள கோவில்களைக் காட்டலாமே என்று நினைத்து அவர்களை வரவழைத்தேன். ஆபீஸ் வாகனத்திலேயே கூட்டிக்கொண்டு போகலாம் என்று முடிவு செய்தேன். இம்மாதிரி சொந்த உபயோகத்திற்கு ஆபீஸ் வாகனத்தை மேலதிகாரியின் முன் அனுமதியுடன் உபயோகித்துக் கொள்ளலாம். அப்படி உபயோகித்த அளவிற்குண்டான பணத்தைக் கட்டவேண்டும். இப்படி ஒரு விதி உண்டு.

நான் முன்னேற்பாடாக என் மேலதிகாரிக்கு விண்ணப்பம் எழுதி அனுப்பிவிட்டேன். குடும்பத்தினர் வந்தார்கள். ஆபீஸ் வாகனத்தில் ஏறி  எல்லா ஊரையும் பார்த்தார்கள். திரும்பிப் போய்விட்டார்கள். சில நாட்கள் கழித்து நான் அனுப்பிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று ஆர்டர் வந்தது. நானோ வாகனத்தை உபயோகித்தாகி விட்டது. வாகனத்தின் லாக் புஸ்தகத்திலும் சொந்த உபயோகம் என்று எழுதியாகி விட்டது. இனி அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

என் மேலதிகாரி எனக்கு நன்றாகப் பழக்கப்பட்டவர். என்பேரில் தனி அபிமானம் கொண்டவர். அதனால் நான் இந்த ஆர்டரைப் பற்றி அதிகம் கவலைப் படவில்லை. அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது இந்த சமாச்சாரத்தை மெதுவாகச் சொன்னேன். அவர் உன் சொந்த வேலையென்றால் உபயோகித்துக் கொள்ளவேண்டியதுதானே, அதை எதற்கு கணக்கில் காட்டுகிறார் என்று என்னைக் கோபித்துக்கொண்டார்.

நான் சொன்னேன், அப்படி நான் என் சொந்த உபயோகத்திற்காக ஆபீஸ் கணக்கில் அந்த வாகனத்தை உபயோகித்தால் ஆபீசில் வேலை செய்யும் எல்லோருக்கும் அது தெரிந்து விடும், பிறகு எனக்கு அங்கு மரியாதை கிடைக்காது. ஆகவே நான் ஏற்கனவே உபயோகித்து விட்டேன். அதை என் சொந்த உபயோகம் என்றும் லாக் புக்கில் எழுதிவிட்டேன். இனி மாற்ற முடியாதே, என்று சொன்னேன். அவர், சரி, நீ ஒரு கிறுக்கன், சொன்னால் கேட்கமாட்டாய், திரும்பவும் அந்த விண்ணப்பத்தை அனுப்பு, நான் சேங்க்ஷன் செய்து விடுகிறேன் என்றார்.

அப்டியே அந்த விண்ணப்பத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் அனுப்பினேன். மேலதிகாரியின் ஒப்புதல் ஆர்டர் வந்து விட்டது. அதை நான் வாங்கி தனியாக என்னுடைய அலமாரியில் வைத்து விட்டேன். ஆபீசில் உள்ளவர்களுக்கு இந்த ஒப்புதல் ஆர்டர் வந்த விவரம் தெரியாது.

அந்த வருட ஆடிட் பார்ட்டி வந்தது. ஆபீஸ் வாகனத்தின் லாக் புக்கை ஆடிட் செய்தபோது நான் சொந்த வேலைக்காக உபயோகித்த விவரம் அவர்கள் கண்ணுக்குப் பட்டது. இதற்கு மேலதிகாரியின் ஒப்புதல் வாங்கியிருக்கிறதா என்று ஆபீசில் உள்ளவர்களைக் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் விண்ணப்பம் போட்டு அது சேங்க்ஷன் ஆகாமல் திரும்பி வந்தது வரைக்கும்தான் தெரியும். மறுபடி நான் அதை திரும்பவும் அனுப்பி சேங்க்ஷன் வாங்கிய விவரம் அவர்களுக்குத் தெரியாது. நான்தான் அந்த ஆர்டரை என் அலமாரியில் வைத்திருக்கிறேனே?

அவர்கள் நடந்ததைச் சொல்லியிருக்கிறார்கள். ஆபீசர் விண்ணப்பம் அனுப்பினார், ஆனால் அது அப்ரூவல் ஆகவில்லை என்று சொல்லவிட்டார்கள். ஆடிட்டர்களுக்கு கன சந்தோஷம். அது வரையில் பெரிதாக எந்த தவறுகளையும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆஹா, இந்த ஆபீசர் வசமாக மாட்டிக்கொண்டார் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு விலாவாரியாக இந்த சமாச்சாரத்திற்கு கை கால், வாய், மூக்கு, கண் எல்லாம் வைத்து, இந்த ஆபீசர் விதிகளுக்குப் புறம்பாக இந்த மாதிரியான குற்றம் செய்து அரசுக்கு இவ்வளவு நஷ்டம் ஏற்படுத்தியிருக்கிறார், இவரை உடனடியாக கழுவில் ஏற்றவேண்டும் என்று இரண்டு பக்கத்திற்கு நோட்ஸ் எழுதி வைத்துக் கொண்டார்கள். (உண்மையில் இப்படி நடந்திருந்தால் நான் கழுவில் ஏறித்தானாக வேண்டும்.)

ஆடிட் எல்லாம் முடிந்தது. ஆடிட் வழக்கம் என்னவென்றால் அவர்கள் எழுதியுள்ள ஆடிட் நோட்ஸை என்னிடம் காட்டி என் கையெழுத்து வாங்கவேண்டும். அப்போதுதான் அது செல்லுபடியாகும். எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து நோட்ஸைப் பார்த்துக்கொண்டே வந்தோம். அப்படிப் பார்க்கும்போது என்னைக் கழுவில் ஏற்றச் சொல்லி எழுதியிருக்கும் குறிப்பு வந்தது. அப்போது நான் ஒரு டிராமா போட்டேன்.

ஆபீஸ் சூப்பிரன்ட்டைப் பார்த்து "நாம் இதற்கு மேலதிகாரியின் அனுமதி வாங்கவில்லையா?" என்று கோபமாகக் கேட்டேன். அவர் பவ்யமாக, அப்ளை செய்தோம் சார், ஆனால் அதை ரிஜெக்ட் பண்ணி விட்டார்கள் என்றார். அப்புறம் மறு பரிசீலனைக்கு எழுதவில்லையா என்றேன். எழுதினோம் சார், ஆனால் இதுவரை பதில் வரவில்லை, சார் என்றார். என்ன ஆபீஸ் நடத்துறீங்க, பதில் வரலைன்னா ரிமைண்டர் போட்டிருக்கணும், இல்லைன்னா எங்கிட்டயாவது சொல்லியிருக்கணும், இப்ப ஆடிட்டுக்கு என்ன பதில் சொல்றது என்று கேட்டு விட்டு, தலையைச் சொறிகிற மாதிரி பாவனை செய்து, ஆங். இப்ப ஞாபகம் வருது, ஆர்டர் வந்துதே  ஐயா, அதை உங்க கிட்ட கொடுக்கலியா என்று ஒரு புருடா விட்டேன். சார் எங்க கிட்டே வரலியே சார் என்று பரிதாபமாக முனகினார்கள்.

நான் திரும்பவும் தலையைச் சொறிந்து கொண்டு, ஆமாம் அது பத்திரமாக இருக்கட்டும் என்று என் அலமாரியில் வைத்தேன், இருங்கள் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு அலமாரியைத் திறந்து தேடுகிற மாதிரி பாவனை செய்து விட்டு அந்த ஆர்டர் இருக்கும் பைலை எடுத்துக் கொடுத்தேன். அதைப் பார்த்த ஆடிட்டர்களுக்கு முகம் தொங்கிப் போயிற்று. அந்த ஆர்டரைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்கள். ஒரு குற்றமும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்புறம், சார் இதற்கு பணம் கட்டவில்லையே என்றார்கள்.

நான் உடனே சூப்பிரன்ட்டிடம் இதற்கு எவ்வளவு கட்டவேண்டும் என்றேன். அவர் கிலோ மீட்டருக்கு மூன்று ரூபாய் சார் என்றார். எத்தனை கிலோ ஓடியிருக்கிறது என்றேன். நூற்றி இருபது கிலோ ஓடியிருக்கிறது என்றார். அப்படியா, இதோ 360 ரூபாய், இப்பவே ரசீது போட்டுக்கொண்டு வந்து ஆடிட்டர் சாரிடம் காட்டு என்றேன். சார் பட்டம் கொடுத்தவுடனே ஆடிட்டருக்கு உச்சி குளிர்ந்து போனது. ஐந்து நிமிடத்தில் ரசீது வந்து விட்டது. அதைப் பார்த்து விட்டு எழுதி வைத்திருந்த கழுவேற்று நோட்ஸை அடித்து விட்டார்.

நான் இப்படிச் செய்யாமல் முதலிலேயே அந்த ஆர்டரையும் பணம் கட்டின ரசீதையும் ஆடிட்டர்களுக்குக் கொடுத்திருந்தால் வேறு ஏதாவது வகையில் ஒரு குறை கண்டுபிடித்து எழுதியிருப்பார்கள். அந்தக் குறையை நிவர்த்தி செய்யக் கடினமாக இருந்திருக்கும். நான் போட்ட டிராமாவினால் மேட்டர் சிம்பிளாக முடிந்து விட்டது.

வேறு ஒரு சமயம் அப்படி ஒரு குறையும் கிடைக்காமல் போனபோது அவர்கள் அநியாயமாக வேண்டுமென்றே எழுதிய ஒரு ஆடிட் குறிப்பைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

20 கருத்துகள்:

  1. குறை கிடைக்காமல் இருக்கும்போது தாங்கள் கூறுவதுபோல எழுதுகிறார்கள் என்பது உண்மை. உங்களது அப்பதிவினைக் காண காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. தலைப்பை ‘ஆடிட்டர் ஏமாறிய கதை’ என்று தந்திருக்கலாம். பதிவை இரசித்தேன்! தணிக்கையாளர் அநியாயமாக வேண்டுமென்றே எழுதிய ஒரு ஆடிட் குறிப்பைப் பற்றி அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள் ஆயிற்றே! :)

    பதிலளிநீக்கு
  4. ஆடிட் என்றாலே குற்றம் காணவேண்டும் என்பதுதான் விதி என்றே இன்றும் சிலர் இருக்கின்றார்கள்!

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அருமையான இந்த நாடகத்தில் தங்களின் நடிப்பு பிரமாதம், சார். மேலும் இதுபோன்ற பல விஷயங்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. //அப்படியா, இதோ 360 ரூபாய், இப்பவே ரசீது போட்டுக்கொண்டு வந்து ஆடிட்டர் சாரிடம் காட்டு என்றேன்.//

    ஆடிட்டர் கணக்கு பார்க்க விட்டிருந்தால் காந்தி கணக்காயிருக்குமா?

    பதிலளிநீக்கு
  7. ஐயா

    ஆடிட்டர்களைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள், இவர்கள் எல்லாம் CA படித்தவர்கள் தானா இல்லை, பேங்குகளில் உள்ளவர்கள் போன்று, அவர்களுக்குள்ளேயே, ஆடிட்டிங் பயிற்சி கொடுக்கப்பட்டவர்களா ?
    CA படிப்பது என்பது மிகவும் கடினமானது, மிகவும் கண்ணியத்துக்குரியது. பொருளாதார சட்டங்கள் ( ஓட்டைகள் ) இவர்களுக்கு அத்துபடியாக இருக்கும். பெரும்பாலோர் தம் கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்டு, பொருளாதார குற்றம் புரிபவர்களுக்கு துணை நிற்கிறார்கள். அரசியல் வாதிகளின் கொள்ளை பணத்தை. வெள்ளையாக்க உதவுவதே இவர்கள் தான்.
    இப்படி குற்றம் புரிபவர்களை தண்டிக்க இந்த நாட்டில் சட்டம் இருக்கிறதா ?

    பதிலளிநீக்கு
  8. நல்லா போட்டிருக்கீங்க டிராமா! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. Official ஆ வந்த லெட்டரை ரிகர்ட் பண்ண வேண்டாமா?
    ஒரு வேளை நீங்கள் வைத்திருந்த லெட்டர் தோலைந்து போயிருந்தாலோ அல்லது வேறேதேனும் ஆகியிருந்தாலோ உங்களது பொறி ஒர்க் அவுட் ஆகியிருக்காதே சார்...
    நல்ல பதிவு.
    God Bless You

    பதிலளிநீக்கு
  10. ஆடிடர்கள் எழுதியது சரிதானே. கோப்புகளில் இருப்பதைக் கொண்டுதானே எழுத முடியும் . அவர்களுக்கு உங்களைப் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை, உங்களுக்கு ஒரு திருப்தி. சரிதானே.

    பதிலளிநீக்கு
  11. ரசித்தேன். ஆம், பெரிதாக எதுவும் எழுதாமலிருக்க சிறு தவறுகளை தூண்டில் போல வைப்பது வழக்கம்தான்! நானும் செய்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  12. V.N.S.உடைய "ஏமாற்றுவதும் ஒரு கலை தான்" என்பது நினைவில் வந்தது. ஐயாவும் ஏமாற்றுக் கலையில் Phd. பட்டம் வாங்கி இருக்கீங்களோ?

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  13. ஐயா

    தங்களுடைய 80 ஆவது பிறந்த நாள் (15ஜூன்)மற்றும் சென்றுவிட்ட 50ஆவது கல்யாண நாள் வீட்டின் 50 வயது முதிர்வு எல்லாவற்றையும் இந்த மாதம் ஒன்றாகக் கொண்டாட இருந்தீர்களே. கொண்டாட்டம் முடிந்து விட்டதா? அல்லது தள்ளிப் போடப்பட்டதா? அல்லது பேரன் மார்க் விவகாரத்தில் வேண்டாம் என்று கை விடப்பட்டதா?

    எப்படியாயினும் இது பற்றி ஒரு பதிவு போடுங்கள்.


    Jayakumar

    பதிலளிநீக்கு
  14. ஹஹஹஹ்ஹ் செம ட்ராமா...கலக்கிட்டீங்க...ஆடிட்டர்களே ஆடற அளவுக்கு கலக்கலா பண்ணிருக்கீங்க போல ...

    பதிலளிநீக்கு
  15. இந்த மனநிலை எல்லா அலுவலகங்களிலும் உண்டு. நான் அச்சகத்தில் கணிணி டிசைனராக இருந்த பொழுது வேண்டுமென்றே 2, 3 தவறான வார்த்தைகளை டைப் செய்வேன். புருப் ரீடர் சரிபார்க்கும் பொழுது ஒரு தவறு கூட இல்லையென்றால் வருத்தப்படுவார். ஏற்கனவே தவறு இருந்தால் பத்தோடு 13. மேட்டர் ஓவர்.

    பதிலளிநீக்கு