கேதார்-பத்ரி யாத்திரை – 6 கழுதை சவாரியும் நானும்.
காலையில் 5 மணிக்கே எழுந்து ஹோட்டல்காரன் கொடுத்த வெந்நீரில் குளித்துவிட்டு 7 மணிக்கெல்லாம் குதிரை சவாரி ஆரம்பிக்கும் இடத்திற்குப் போய்விட்டோம். எங்கள் ஏஜண்ட் அங்குள்ள குதிரைக்காரர்களிடம் பேசி ஐந்து குதிரைகளுக்கு ஏற்பாடு செய்தார்.
இங்கிருந்து புறப்படும்போதே ஆளுக்கொரு பழைய பெட்ஷீட் கொண்டு போயிருந்தோம் (முன் அனுபவமும் கேள்வி ஞானமும் இருந்ததால் இந்த ஏற்பாடு). அதைக் குதிரையின் சேணத்தின் மேல் போட்டுக்கொண்டால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கும். வழக்கமாக நம் சினிமாக்களில், கதாநாயகன் அப்படியே குதிரைகளின் சேணத்தின் மேல் ஜம்ப் பண்ணி ஏறி, குதிரையை விரட்டிக்கொண்டு வில்லனைப்பிடிக்க ஓடுவதைத்தான் பார்த்திருக்கிறோம். அறுபது வயசு தாண்டிய என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இது ஞாபகம் இருக்கும். அந்தக்குதிரைகளின் சேணம் நன்றாகப் பராமரிக்கப்பட்டு மிருதுவாக இருந்திருக்கலாம்.
இங்கே இந்தக்குதிரைகளின் சேணங்கள் (மாட்டுத்தோல்) மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்து நன்றாக காய்ந்த மரம் போல் இருக்கும். அதன்மேல் பெட்ஷீட்டை எட்டாக மடித்துப்போட்டால்தான் நம்மைப்போல் ஆட்கள் உட்கார முடியும். நாங்களும் அப்படி பெட்ஷீட்டைப் போட்டு குதிரையின் மேல் ஏறினோம். இதற்காக அந்த இடத்தில் ஒரு பிளாட்பாரம் கட்டி வைத்திருக்கிறார்கள். அதன் மேல் ஏறி குதிரையின் மேல் சுலபமாக ஏறிவிடலாம். ஆனால் மற்ற இடங்களில் ஏறுவது கொஞ்சம் கடினம். அந்த மாதிரி இடங்களில் குதிரைக்காரன் நம்மை அலாக்காகத் தூக்கி குதிரையின் மேல் ஏற்றிவிடுகிறான்.
குதிரையின் சேணத்தின் முன்பாக ஒரு இரும்பு வளையம் இருக்கிறது. அதுதான் நமக்கு ஒரே பிடிப்பு. அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இறங்கும்போது உள்ளங்கைகள் இரண்டும் ரணமாகி இருக்கும். இப்படியாக குதிரை புறப்பட்டுவிட்டது. ஒரு குதிரைக்காரன் இரண்டு குதிரைகளை ஓட்டுகிறான். அவன் எப்படி ஓட்டுகிறானென்றால், வாயால் பல சப்தங்களை உண்டாக்கி அவற்றுக்கு ஏற்ற மாதிரி போக குதிரைகளைப் பழக்கி இருக்கிறான். நம் ஊரில் மாட்டு வண்டிகளை ஓட்டுவார்களே அந்த மாதிரி.
இந்தக் குதிரைகளின் மேல் போகும்போது கடைப்பிடிக்கவேண்டிய சில விதிகள். குதிரை, மலை மேலே ஏறும்போது முன்னால் சாய்ந்து கொள்ளவேண்டும். இறங்கும்போது பின்னால் சாய்ந்து கொள்ளவேண்டும். மலைப்பாதையில் சில இடங்களில் பாறைகள் நீட்டிக்கொண்டு இருக்கும். அந்த இடங்கள் வரும்போது கவனமாக தலையைக் குனிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தலை பாறையில் மோதி பலமான காயங்கள் ஏற்படலாம்.
செல்லவேண்டிய தூரம் 14 கிலோமீட்டர். பாதி வழியில் ராம்பாரா என்னும் இடத்தில் ஒரு ஹால்ட். இங்கு யாத்ரீகர்கள் தாங்கள் சவாரி செய்யும் குதிரைக்கு வெல்லம் வாங்கித் தரவேண்டும். வெல்லம்தான் குதிரைக்கு உடனடி சக்தியைக் கொடுக்கிறது. அப்படியே குதிரைக்காரனுக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுக்க வேண்டும். நீங்களும் ஏதாவது சாப்பிட்டுக்கொள்வது நல்லது. நாங்கள் ஒரு ஆலு பரோட்டாவும் டீயும் சாப்பிட்டோம். இங்கு ஒரு அரை மணி நேரம் ஆகிறது.
நாங்கள் குதிரையில் போகும் போதுதான் எனக்குத்தெரிந்த அரைகுறை இந்தியில் தெரிந்து கொண்டது என்னவென்றால் (சொல்ல வெட்கமாக இருக்கிறது) நாங்கள் சவாரி செய்தது குதிரை அல்ல கழுதை என்று. அடடா, கழுதை சவாரி செய்யவா இவ்வளவு தூரம் வந்தோம் என்று எங்களுக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. என்ன, கொஞ்சம் நாகரீகமாக கோவேறு கழுதை என்று சொல்லுகிறார்கள். இவை கழுதையையும் குதிரையையும் சேர்த்து உண்டாக்கிய ஒரு மிருக இனம். இவை இனப்பெருக்கம் செய்து கொள்ளாது. மலைப் பிரதேசங்களில் கனமான சுமைகளை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டுபோக மிகவும் உபயோகப்படும் பிராணி. இரண்டாவது உலக மகா யுத்தத்தில் மலைப்பிரதேசங்களில் பாதிகாப்புப் படையினரால் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டது. தற்சமயம் பொது மக்களால் பல்வேறு உபயோகங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
போகும் வழியில் பல்வேறு இயற்கைக் காட்சிகள் மனதைக் கவருகின்றன. சில போட்டோக்களை இணைத்திருக்கிறேன். ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளும் அதிக உயரத்திலிருந்து விழுகின்றன. வழியெங்கும் கோவேறுகழுதையிலும், டோங்காவிலும், நடந்தும் பக்தர்கள் கேதார்நாத் மகாதேவைச் சந்திக்க சாரிசாரியாக சென்று கொண்டிருக்கிறார்கள். டோங்கா என்பது ஒரு சாய்வு நாற்காலிக்கு இருபுறமும் இரண்டு கெட்டியான கழிகளை வைத்துக் கட்டப்பட்ட ஒரு சப்பரம். இதை நான்கு பேர் தூக்கிக்கொண்டு போகிறார்கள். மிகவும் வயதானவர்கள் இதில் செல்கிறார்கள். ஒரு பக்கம் ஓங்கி உயர்ந்த மலை. இன்னொரு பக்கம் கிடுகிடு பாதாளம். தவறி விழுந்தால் எலும்புகளை சாக்கில்தான் கட்டிக்கொண்டு வரவேண்டும். போன தடவை போயிருந்தபோது இந்தப்பள்ளங்களுக்கு எந்த விதமான தடுப்புகளும் இல்லை. இப்போது கம்பி தடுப்பு போட்டிருக்கிறார்கள்.
இதுவரை பிளஸ் பாயின்ட்டுகளை மட்டும் சொன்னேன். இப்போது சில நெகடிவ் பாயின்ட்டுகள். குதிரையில் உட்கார்ந்து போகும்போது குதிரை நடப்பதால் உண்டாகும் அதிர்வுகளினால் நமது பின்பகுதியில் உள்ள தசைகள் அழற்சி அடைந்து ஓரிரு மணிகளில் மிகுந்த வலி ஏற்படுகின்றது. குதிரை ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் இந்த அழற்சியினால் ஏற்படும் வலி இடுப்பு எலும்பு வரை சென்று பொறுக்கமுடியாத கஷ்டம் ஏற்படுகின்றது. ஏறுவதை விட இறங்கும்போது இந்த வலி மிகவும் அதிகம். பேசாமல் இறங்கி நடந்துவிடலாமா என்று தோன்றும். நான் அப்படி இறங்கி கொஞ்ச தூரம் நடந்தேன். ஆனால் சமதளத்தில் நடப்பது வேறு, மலை இறக்கத்தில் நடப்பது வேறு. இறங்கும்போது சரிவில் விழுந்து விடாமலிருக்க ஒவ்வொரு அடி வைக்கும்போதும் காலை அழுத்தி வைக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் நடக்கும் வேகத்தில் நாம் கீழே விழுந்துவிட நேரிடும். இப்படி கொஞ்சநேரம் நடந்தால் கால்கள் வலிக்க ஆரம்பித்து விடுகின்றன.
அடுத்த சங்கடம் இந்தக் குதிரைகள் வேண்டுமென்றே பாறைகளின் சமீபமாகவே செல்கின்றன. அடுத்து எதிரே வரும் குதிரைகளின் ஓரமாகவும் செல்கின்றன. அப்போது நமது கால்கள் பாறைகளிலோ, அல்லது எதிரே வரும் குதிரைகளின் கால்களிலோ உரசி பலத்த வலியுடன் காயங்களும் ஏற்படலாம். நான் சென்ற குதிரை ஒரு பாலத்தின் ஓரமாக சென்று அந்தப்பாலத்தில் போட்டிருந்த இரும்புக் கம்பியில் என் கால் மோதி ஆழமான காயம் ஏற்பட்டு விட்டது. எனக்கு சர்க்கரை வியாதி வேறு இருந்ததால் மிகுந்த கவலை ஏற்பட்டுவிட்டது. ஊரிலுள்ள என் டாக்டர் மகளுக்கு போன் செய்து மருந்துகளைக்கேட்டு, அவைகளை வாங்கி சாப்பிட்டேன். அப்படியும் காயம் முழுவதுமாக ஆறுவதற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு மேல் ஆகியது.
இந்தக்குதிரைகளுக்கு அவைகளின் சொந்தக்காரர்கள் அவ்வளவாகத் தீனி போட மாட்டார்கள் போல இருக்கிறது. அவைகள் புல் தரைகளைப் பார்த்தால் போதும், புல் மேயப் போய்விடுகின்றன. குதிரைக்காரன் மிகுந்த சிரமப்பட்டுத்தான் அவைகளை திருப்ப முடிகிறது. இப்படியாக குதிரை சவாரி அனுபவம் ஆயுளுக்கும் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்தது.
வழியெங்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் இந்தக்குதிரைகளின் கழிவுகளை சுத்தப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். என்ன ஒரு கஷ்டம் என்றால் இவர்கள் எல்லா யாத்ரீகர்களிடமும் கையேந்துகிறார்கள்.
இப்படியாக ஒரு வழியாக கேதார்நாத் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். மொத்தம் நான்கு, நான்கரை மணி நேரம் ஆகிறது. கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தூரத்திலேயே குதிரைகளை நிறுத்திவிடுகிறார்கள். அங்கிருந்து நடந்துதான் கோவிலை அடையமுடியும். இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய பத்தாயிரம் அடிக்கு மேல் இருப்பதால் இங்கு காற்றின் அடர்த்தி மிகவும் குறைவாக இருக்கும். ஆஸ்த்மா மற்றும் நுரையீரல் வியாதி உள்ளவர்களுக்கு இங்கே மூச்சு இரைக்கும். அப்படிப்பட்டவர்கள் கௌரிகுண்ட்டிலேயே ஆக்சிஸன் சிலிண்டர்கள் வாங்கிக்கொண்டு வருவது நல்லது. அவைகளை எப்படி உபயோகப்படுத்துவது என்பதையும் கடைக்காரர்களிடம் நன்றாக கேட்டுக் கொள்ளவேண்டும். உடல் சோர்வு காரணமாகவும் ஆக்சிஜன் குறைவு காரணமாகவும் கோவிலுக்கு நடப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். கேதார்நாத் மகாதேவ்வை இப்படி கஷ்டங்கள் பட்டுத் தரிசித்தால்தான் முழு புண்ணியமும் கிடைக்கும் என்று நம்பி மேலே சென்றோம். நாங்களும் ஒரு வழியாக கடைசியில் கோவிலை அடைந்தோம்.
அங்கு நாங்கள் முதலில் அடைந்தது பெரிய அதிர்ச்சி. அது என்னவென்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?