வாழ்க்கையில் கணக்கு வைப்பதும் அந்தக் கணக்கை உரியவர்களிடம் அவ்வப்போது காட்டி ஒப்புதல் வாங்குவதும் நடைமுறையில் உள்ள வழக்கம்தான். கணக்கு பணத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் மற்ற செயல்களுக்கும் சேர்த்துத்தான். நான் யாருக்கும் கணக்குக் காட்டவேண்டியதில்லை என்று யாரும் சொல்ல முடியாது. இந்தியாவின் பெரிய பணக்காரரான அம்பானியும் கூட தன் மனச்சாட்சிக்கு கணக்கு (பதில்) சொல்லித்தான் தீரவேண்டும்.
அரசு அலுவலகங்களில் இன்றும் நிலவும் பல நடைமுறைகள், வெள்ளைக்காரத் துரைகள் விட்டுச் சென்றவைகள்தான். அவர்களுக்கு இந்தியர்கள் மேல் தீராத சந்தேகம் இருந்தது. அதனால் தணிக்கை முறைகளை மிக தீவிரமாகக் கையாண்டு வந்தார்கள். இதில் இரண்டு விதமான தணிக்கைகள் உண்டு.
ஒன்று, துறை சார்ந்த தணிக்கை. இது மேலதிகாரிகள் தொழில் நுட்ப ரீதியாகச் செய்வது. அந்த அலுவலகத்தில் கடந்த வருடத்தில் செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்காகச் செய்திருக்கிறார்களா? அவ்வாறு செய்யாவிட்டால், ஏன் செய்யவில்லை? என்ன வசதிகள் இல்லை, என்ன வசதிகள் வேண்டும்? இப்படி ஆக்கபூர்வமாக தணிக்கை நடக்கும். இதிலும் சில அதிகாரிகள் வெறும் குற்றம் கண்டு பிடிப்பவர்களாகவே அமைவதும் உண்டு. இந்தத் தணிக்கை அந்த அலுவலகத்தில் செய்யவேண்டிய வேலைகளை மேலும் சிறப்பாகச் செய்ய உதவும்.
அடுத்தது, கணக்கு ரீதியான தணிக்கை. ஒரு அலுவலகத்தில் கடந்த ஆண்டு செய்த செலவுகள் முறையாகச் செய்யப்பட்டிருக்கறதா, ஏதாவது தில்லு முல்லு செய்திருக்கிறார்களா? என்று சரி பார்க்கும் தணிக்கை. பல அலுவலகத் தலைவர்கள் இந்தத் தணிக்கையைக் கண்டு பயந்து கொள்வார்கள். காரணம் அவர்களுக்கு தங்கள் துறை சார்ந்த விதி முறைகள் பற்றிய அறிவு போறாமல் இருக்கும். அவர்கள் இந்த தணிக்கைக்கு வரும் உதவி அதிகாரிகளுக்கு வேண்டிய உபசாரங்களை அதிகமாகச் செய்து அவர்களை சந்தோஷப்படுத்தி, அதிகமான தணிக்கைக் குறிப்புகளை எழுதாத மாதிரி பார்த்துக் கொள்வார்கள். என்ன சௌகரியங்கள் என்று தெரியவேண்டுமல்லவா? அதிகம் ஒன்றுமில்லை. அவர்கள் அந்த அலுவலகங்களிலேயே தங்கிக்கொள்வார்கள். அவர்கள் தங்கும் நாட்களில் இலவச உணவு, டீ, காபி, எடுபிடி வேலைகளுக்கு ஒரு ஆள், ஒரு நாள் சினிமா, பக்கத்திலிருக்கும் ஒரு பிரபல கோவிலுக்கு ஒரு விசிட், அசைவம் சாப்பிடுபவர்களாயிருந்தால் ஒரு நாள் அசைவ விருந்து, ஊருக்குப் போகும்போது பண்ணையிலிருந்து தேங்காய், மற்ற காய்கறிகள், இவ்வளவுதான்.
இந்த மாதிரி சௌகரியங்களை அனுபவித்த அந்த உதவி அதிகாரிகள், தாங்கள் போகும் எல்லா அலுவலங்களிலும் இந்த மாதிரி சௌகரியங்களை எதிர்பார்ப்பார்கள். அந்த சௌகரியங்கள் செய்யப்படாவிட்டால் வேண்டுமென்றே பல தணிக்கைக் குறிப்புகளை எழுதி அந்த அலுவலகத் தலைவரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள். அதனால் பெரும்பாலான அலுவலகங்களில் இந்த சௌகரியங்களைச் செய்து கொடுத்து விடுவார்கள். அதற்கு ஆகும் செலவை அந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் பங்கிட்டுக் கொள்வார்கள். இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறை.
இந்த தணிக்கைகளில் பல சமயம் வேடிக்கைகள் நடக்கும். நான் வேலை பார்த்த அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம். நான் வேலை செய்தது வேதியல் துறை. அங்கு நிறைய வேதியல் பொருட்கள் தேவைப்படும். அவைகளை டெண்டர் விட்டு வாங்குவோம். அதில் கந்தக அமிலமும் ஒன்று. அது அந்தக் காலத்தில் பீங்கான் ஜாடிகளில் வரும். அந்த அமிலம் தீர்ந்தவுடன் அந்த பீங்கான் ஜாடிகளை ஊறுகாய் போடுவதற்காக அங்கு பணி புரியும் அலுவலர்கள் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். ஆகவே அந்த காலி ஜாடிகளை கணக்கில் காட்டுவதில்லை. நியாயமாக அவைகளை கணக்கில் கொண்டுவர வேண்டும்.
ஒரு சில ஜாடிகளை இந்த தணிக்கை உதவியாளர்களுக்கும் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் ஒரு சமயம் அவர்கள் நன்றி கெட்டத்தனமாக, “இவ்வளவு அமிலங்கள் வாங்கியிருக்கிறீர்களே, அந்த காலி ஜாடிகளுக்கு கணக்கு எங்கே” என்று எழுதி வைத்து விட்டார்கள். இந்த உதவியாளர்கள் எழுதி வைத்தது எல்லாவற்றையும் ஒரு மேலதிகாரி வந்து எல்லோரையும் வைத்து ஒரு விவாதம் நடத்தி பிறகுதான் அந்த குறிப்புகளை அப்ரூவ் செய்வார். நாங்கள் ஒரு யுக்தி செய்தோம். “சிட்ரிக் அமிலம்” (லெமன் சால்ட்) என்று ஒன்று இருக்கிறது. அது அட்டைப் பெட்டியில் வரும். அதை எடுத்து தயாராக வைத்திருந்தோம். அந்த தணிக்கை ஆபீசர் வந்து இந்தக் குறிப்பைப் படித்ததும் நாங்கள் இந்த சிட்ரிக் அமில பாக்கெட்டைக் காட்டி, எல்லா அமிலங்களும் இப்படி அட்டைப்பெட்டியில் போட்டுத்தான் வரும். நாங்கள் அந்த அமிலத்தை உபயோகித்தவுடன் இந்த அட்டையை குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவோம் என்று சொன்னோம். அவரும் அப்படியா என்று கேட்டுவிட்டு, அப்படியே எழுதிக்கொடுங்கள் என்று எங்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அந்தக் குறிப்பை ரத்து செய்து விட்டார்.
உலத்திலேயே கந்தக அமிலத்தை அட்டைப்பெட்டியில் வாங்கிய லேபரேட்டரி எங்களுடையதாகத்தான் இருக்கும். இன்னும் இதுபோல் பல வேடிக்கைகள் உண்டு. இந்தப் பதிவிற்கு கொடுக்கும் ஆதரவைப் பார்த்துவிட்டு அந்த வேடிக்கைகளைப் பற்றியும் எழுதுகிறேன்.