சனி, 16 ஜூலை, 2011
ஏழரை நாட்டுச்சனி விலகியது
ஆஹா, இன்று என்னைப் பிடித்திருந்த ஏழரை நாட்டுச்சனி விலகிவிட்டது.
ஏதோ நாலு பதிவைப் பார்த்தோம், ஒன்றுக்கு பின்னூட்டம் போட்டோம் என்று இருந்தேன். பொதுவாக நான் கூகுள் ரீடரைப் பயன்படுத்தித்தான் பதிவுகளைப் பார்ப்பேன். அதில் தமிழ்மணம் திரட்டியையும் இணைத்திருந்தேன். தமிழ் மணம் திரட்டி மிகவும் பிரபலமான திரட்டி. எல்லாப் பதிவர்களும் தமிழ்மணம் திரட்டிப் பட்டையை தங்கள் பதிவில் இணைத்திருக்கிறார்கள். ஆகவே கூகுள் ரீடரில் முக்கால்வாசி தமிழ்மணத்தில் இணைத்துள்ள பதிவுகள்தான் முண்ண்ணியில் இருக்கும்.
இது நல்லதுதான். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்மணம் பதிவைப் படிக்கலாமென்று சுட்டினால் கர்சர் சுற்றிக்கொண்டே இருக்கிறதே தவிர, பதிவு தெரிவதாகக் காணோம். எவ்வளவு நேரம் ஆனாலும் இதே நிலைதான். என்னென்னமோ, எனக்குத் தெரிந்த தகிடுதத்தம் எல்லாம் செய்து பார்த்து விட்டேன். ஒன்றும் முடியவில்லை.
இன்று கூகுள் ரீடரை நோண்டிக் கொண்டிருக்கும்போது, அதில் Manage Subscription என்று ஒரு வழி தென்பட்டது. அதில் போய் இந்த தமிழ் மணம் திரட்டியை நீக்கினேன். அவ்வளவுதான். என்னைப் பிடித்திருந்த ஏழரை நாட்டுச்சனி விலகிற்று.
வெள்ளி, 8 ஜூலை, 2011
நாய் பெற்ற தங்கப் பழம்
கனவில் கிடைத்த புதையல்
திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி கோவிலில் ஐந்து லட்சம் கோடி மதிப்புள்ள தங்கப்புதையல் கிடைத்துள்ளதாகப் பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சாதாரண மக்களின் கற்பனைக்கு இது எவ்வளவு செல்வம் என்ற மதிப்பு மனதில் பதியாது. ஏதோ பெரிய செல்வம் என்ற அளவில்தான் உணரக்கூடும்.
இவ்வளவு பெரிய செல்வத்தை அரச குடும்பத்தினர் எவ்வாறு அடைந்தார்கள் என்பது சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிக்க வேண்டிய விஷயம். “சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி” என்கிற பழமொழிக்கேற்ப சிவனே என்று படுத்துக்கிடந்த பத்மனாபஸ்வாமியை சந்திக்கு இழுத்தாகி விட்டது. இந்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும், திருவாங்கூர் அரச சந்ததியினருக்கும் பிடித்தது “ஏழரைநாட்டுச்சனி”. பூதம் புதையலைக் காப்பாற்றிய மாதிரி இனி அரசு இந்தப் புதையலைக் கட்டிக்காக்க வேண்டும்.
இதை வைத்துக்கொண்டு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இது முழுவதும் மக்களின் உழைப்புதான். அன்றைய ராஜா வசூலித்து இப்படி சேமித்து வைத்திருக்கிறார். ஆனாலும் இதை ஒன்றும் செய்ய முடியாது. நம் நாட்டுச் சட்டதிட்டங்கள் அப்படி. இன்றைய ராஜாக்கள் ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கிறார்கள். இரண்டும் ஒன்றுதான். நாய் பெற்ற தங்கப்பழம்.
கேரள மக்கள் பேச்சுப் பிரியர்கள். வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரி இந்த சப்ஜெக்ட் இன்னும் பல தலைமுறைகளுக்கு காணும். மொத்தத்தில் கனவில் காணும் புதையலுக்கும் இதற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை. இரண்டும் யாருக்கும் பயன்படப் போவதில்லை. http://www.youtube.com/watch?v=w27OvzzNAUE&NR=1&feature=fvwp
புதன், 6 ஜூலை, 2011
தீவிர உடல் நலக்குறைவு ஏற்படும்போது…..
ஒவ்வொரு குடும்பத்திலும் திடீரென்று யாருக்காவது தீவிர உடல் நலக்குறைவு ஏற்படலாம். அப்போது பொதுவாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்படுவது சகஜம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலை எப்படியிருந்தாலும் அந்த நபரை அந்த ஊரிலுள்ள பெரிய, தனியார் ஆஸ்பத்திரிக்குத்தான் பொதுவாக கூட்டிச் செல்வார்கள். எப்படியாவது, என்ன செலவானாலும் சரி, இவரைப் பிழைக்க வையுங்கள் என்று சொல்வார்கள் இப்படி சொல்பவர்கள் பெரும்பாலும் பக்கத்து வீட்டுக்காரர்களாகவே இருக்கும். அந்த நபருக்காக செலவு செய்யும் குடும்ப அங்கத்தினர் அழுது கொண்டு இருப்பாரே தவிர, இந்த முடிவுகளில் தலையிடக்கூடிய மன நிலையில் இருக்க மாட்டார்.
வசதி இல்லாதவர்கள் முதல் நாள் செலவைப் பார்த்தே, இது நமக்குக் கட்டுப்படியாகாது என்று கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.
மிகப் பணக்காரர்களுக்கு இந்த செலவுகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
இந்த இரண்டும் கெட்டானாக இருக்கிற நடுத்தர மக்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள். சரியான முடிவு எடுக்க முடியாமல், திண்டாடி, சரி, எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று கடன் வாங்கி அந்த தனியார் ஆஸ்பத்திரியிலேயே வைத்தியம் பார்ப்பார்கள்.
அந்த ஆள் உடல் நலம் தேறி, வீட்டுக்கு வந்தால், அவரின் மிச்ச ஆயுள் முழுவதும் இந்த கடனை அடைக்கவே சரியாயிருக்கும். பல சமயங்களில் இந்தக் கடன் தீர்வதற்குள்ளாகவே அவர் போய்ச் சேர்ந்து விடுவார். அவருடைய குடும்பம் சின்னாபின்னமாகப் போய்விடும்.
நீதி: இந்த நிலை ஒரு குடும்பத்தில் இருக்குமானால் அவரை அரசாங்க ஆஸபத்திரியில் சேர்ப்பதே நல்லது. அரசாங்க ஆஸபத்திரிகளிலும் வைத்தியம் நன்றாகவே செய்கிறார்கள்.
திங்கள், 4 ஜூலை, 2011
புகழ் என்னும் மாயை
சமுதாயத்தில் வாழும் ஒவ்வொருவரும் தன்னை இந்த சமுதாயம் மதிக்கவேண்டும், தன்னை அங்கீகாரம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. இதற்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறார்கள். சிலர் அந்த முயற்சியில் வெற்றி பெறுகிறார்கள். பலர் தோற்றுப் போகிறார்கள்.
அப்படித் தோற்றுப் போகிறவர்களுக்கும் அவர்கள் வாழும் சூழ்நிலையில், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் மத்தியில் ஒரு அங்கீகாரம் இருக்கத்தான் செய்யும். அவர்கள் நாளாவட்டத்தில் அந்த அங்கீகாரம் போதுமென்ற மன நிலைக்கு வந்து விடுவார்கள்.
இந்த மன நிலை இணையத்திலும் நிலவுகிறது. பதிவுலகத்தில் இந்த புகழுக்காக மிகுந்த சிரமம் எடுத்துக்கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகம் என்று நான் கருதுகிறேன். அவர்கள் இணையத்திற்கு அடிமையாகி, தங்கள் மற்ற கடமைகளிலிருந்து விலகுகிறார்களோ என்ற ஐயப்பாடு எனக்கு இருக்கிறது.
இது ஒரு மாயா உலகம். அனைவரும் இதை உணர்ந்து, இந்த மாயையிற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.
புதன், 29 ஜூன், 2011
நான் ஆனந்தப்பட்ட தருணம்
பிரிட்டிஷ் பார்லிமென்ட்டில் இருந்து ஒரு பிரபல அரசியல்வாதி ரிடையர்டு ஆனபோது பலர் அவரை “இனி என்ன செய்வீர்கள்” என்று கேட்டார்களாம்.
அவர் மிகவும் சாதாரணமாக சொன்ன பதில் மிகவும் பிரபலம்.
இனி தினமும் “டைம்ஸ் ஆப் லண்டன்” பத்திரிகையை என் பெட்சைடுக்கு டெலிவரி செய்யச் சொல்லிவிடுவேன். காலையில் முதலில் அதை எடுத்து இரங்கல் செய்திகளைப் பார்ப்பேன். அதில் என் பெயர் இல்லாவிட்டால், எழுந்து காலை உணவு சாப்பிட்டுவிட்டு மற்ற வேலைகளைப் பார்ப்பேன் என்றாராம்.
இதில் உள்ள நகைச்சுவை எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை.
இது போல் நேற்றைய ஒரு பிரபல தமிழ் தினசரியில் கீழே கொடுத்திருக்கும் இரங்கல் செய்தியைப் பார்த்தேன்.
மிக்க ஆனந்தம் அடைந்தேன். ஆஹா, இன்றுடன் நான் இந்தப் பூலோகத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்களுக்கெல்லாம் விடிவு வந்து விட்டது என்று பூரித்துப் போனேன். எப்படி இந்த விடிவு எனக்கு ஏற்பட்டது என்று மேலும் படித்தபோதுதான் உண்மை விளங்கியது.
அது நானில்லை. வெறும் பெயரில் மட்டும்தான் ஒற்றுமை என்று விளங்கியது. மிகவும் ஏமாற்றமாகப் போய்விட்டது.
செவ்வாய், 28 ஜூன், 2011
தமிழ்மணம் திரட்டி-பிரச்சினைகள்
தமிழ்மணம் திரட்டியில் இணைத்துள்ள அனைத்துப் பதிவுகளும் தரவிறங்க மிகுந்த நேரம் எடுத்துக் கொள்கின்றன. மேலும் பல சமயங்களில் "டைம் அவுட்" என்ற செய்தி மட்டுமே வருகிறது.
ஞாயிறு, 26 ஜூன், 2011
காதலும் கத்தரிக்காயும்
காதலாவது கத்தரிக்காயாவது என்று காதலில் விழுந்த கதாநாயகியைப் பார்த்து தந்தை கேட்பாரென்று பல கதைகளில் படித்திருக்கிறோம். சினிமாவிலும் பார்த்திருக்கிறோம். கத்தரிக்காய் இரண்டு நாளில் வாடி வதங்கிப்போவது போல காதலும் சீக்கிரம் வாடி விடும் என்பதுதான் காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் உள்ள ஒற்றுமை.
இன்றும் கூட என்னைப்போன்ற கிழடுகள் அந்த அபிப்ராயத்தைத்தான் கொண்டிருக்கிறோம். பத்தாம்பசலி என்று எங்களைப் போன்றவர்களை ஏளனமாகக் கூறுவார்கள். நாங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டிருப்போம்.
காதல் கல்யாணம் நன்மையா, தீமையா என்று பட்டி மன்றம் நடத்தினால் ஆயுளுக்கும் நடத்தலாம். ஒவ்வொருவரும் அந்தப் பட்டி மன்றத்தில் ஒவ்வொரு கருத்து கூறமுடியும். ஆனால் இன்று உலகத்தில் நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். செய்தித்தாள்களில் வருவதுதான் இன்றைய உலக நடைமுறை.
காதலித்தவன் என்னைக் கெடுத்துவிட்டு, கைவிட்டுவிட்டான் என்று போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும், கலெக்டர் ஆபீசுக்கும் அலைபவர்கள் எத்தனை பேர். காதல் கல்யாணம் நடந்து ஆறு மாதத்தில் கைவிட்டுவிட்டு ஓடுபவர்கள் எத்தனை பேர். இல்லையென்றால் விவாக ரத்து வழக்கு போடுபவர்கள் எத்தனை பேர்.
இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், ஆணும் பெண்ணும் வளர்ந்த கலாசாரம் மற்றும் பொருளாதார சூழ்நிலை வித்தியாசங்கள்தான். இவைகள் வாழ்க்கையில் மிகவும் முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இளமை வேகத்தில் வெறும் பாலுணர்வை காதல் என்று நினைத்து ஏமாந்து போகிறவர்கள்தான் அநேகர்.
இந்த வித்தியாசங்களையும் மீறி அந்தக் கல்யாணம் நிலைத்தாலும் அவர்களுக்கு ஒரு சமுதாய அந்தஸ்து கிடைப்பதில்லை. அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணும்போது ஏற்படும் பிரச்சினைகள் அநேகம். இதையெல்லாம் இளைஞர்கள் மனதில் கொண்டு அவர்கள் எதிர்கால வாழ்க்கையை வகுத்துக் கொள்ளவேண்டும்.
சனி, 25 ஜூன், 2011
சாருவின் உரையாடல்கள்
சாருவின் உரையாடல்கள் என்று பல பதிவுகளில், பல உரையாடல்கள் (படிக்கவே கூசும்படியானவை), வெளிவந்துள்ளன. அவைகள் உண்மையாக இருக்குமானால் என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதே சமயம் இந்த அளவிற்கு செயல்பட்ட அந்தப் பெண்ணிற்கும் என் கண்டனத்தை உரித்தாக்குகிறேன். ஒரு பெண் இந்த அளவிற்குப் போயிருக்கக் கூடாது.
சனி, 18 ஜூன், 2011
நெல்லை பதிவர்கள் சந்திப்பு
திரு.சங்கரலிங்கத்திற்கு ஒரு ஜே!
நெல்லைப் பதிவர் சந்திப்புக்குப் போய் வந்தேன். திரு சங்கரலிங்கம் பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார். திருமதி சித்ரா சாலமன் உறுதுணையாய் இருந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து இந்த சந்திப்புக்காகவே வந்திருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பு தனியாக வெளியிடப்படும். இந்தப் பதிவு ஒரு ஆஜர் சொல்வதற்காக மட்டுமே.
என்னுடைய பயண ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்த திரு சங்கரலிங்கம் அவர்களுக்கு என் நன்றி.


நெல்லைப் பதிவர் சந்திப்புக்குப் போய் வந்தேன். திரு சங்கரலிங்கம் பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார். திருமதி சித்ரா சாலமன் உறுதுணையாய் இருந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து இந்த சந்திப்புக்காகவே வந்திருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பு தனியாக வெளியிடப்படும். இந்தப் பதிவு ஒரு ஆஜர் சொல்வதற்காக மட்டுமே.
என்னுடைய பயண ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்த திரு சங்கரலிங்கம் அவர்களுக்கு என் நன்றி.
திரு சங்கரலிங்கம் பதிவர்களை வரவேற்கிறார்.

பலாச்சுளை சங்கர் அவர் கருத்துகளைக் கூறுகிறார்.
(நெல்லையிலிருந்து புறப்படும்போது பலாச்சுளை வாங்கிச் சாப்பிட்டேனா, அந்த ஞாபகத்தில் பலாபட்டறைக்குப் பதிலாக பலாச்சுளை என்று பதிவிட்டுவிட்டேன். திரு. சங்கர் மன்னிக்வேண்டும்.)

திங்கள், 13 ஜூன், 2011
சாலை விபத்துகள் ஏன் நடக்கின்றன?
சமீப காலங்களில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு காரணமாக இருந்தாலும், பெரும்பாலான விபத்துக்களில் மனிதக் கவனக் குறைபாடே காரணமாக அமைகின்றன. நான் பல ஆண்டுகளாக இந்த விபத்துகளை கவனித்துக்கொண்டு வருகிறேன். பொதுவான சில காரணிகள் என் மனதிற்குத் தோன்றின. அவைகளை இங்கே குறிப்பிடுகிறேன்.
1. அவசரம்: நேரம் பொன்னானதுதான். ஆனால் உயிர் அதனினும் மேலானதல்லவா? இந்த உண்மையை அநேகர் புறக்கணிப்பதால் ஏற்படும் விபத்துகள்தான் அநேகம். சமீபத்தில் ஒரு மந்திரி இறந்தது இதனால்தான். சரியானபடி திட்டமிட்டு நிதானமாக பயணிக்கவேண்டும். சீக்கிரம், சீக்கிரம் என்று அவசரப்பட்டு யமலோகத்திற்கு சீக்கிரம் போக்கூடாது.
சீக்கிரம் போகவேண்டுமென்று அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டும்போது பல தவறுகள் நிகழும். அதனால் நிச்சயமாக விபத்துகள் ஏற்படும்.
2. உடல் சோர்வு: உடலுக்கு ஓய்வு கொடுக்காவிட்டால் அது ஒரு கட்டத்தில் நம் அனுமதி கேட்காமலேயே ஓய்வு எடுத்துக்கொள்ள முயலும். இது உடலின் இயற்கை. இயற்கை விதிகளை மீறுவதால் ஏற்படும் அனர்த்தங்களை வேறு பல சூழ்நிலைகளிலும் காண்கிறோம். வாகனம் ஓட்டும்போது இந்த நிலை ஏற்பட்டால் அது நிச்சயமாக விபத்தை உண்டாக்கும்.
ஆனால் பலர் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துக் கொள்கிறார்கள். சொந்த சிலவில் சூன்யம் வைத்துக்கொள்பவர்களை என்ன செய்ய முடியும்?
3. தூக்கமின்மை: வழக்கமாக வாடகை வண்டி ஓட்டுபவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக தூக்கத்தை தியாகம் செய்கிறார்கள். அது உயிர்த் தியாகத்தில் முடியும் என்பதை உணறுவதில்லை. எவ்வளவுதான் அனுபவம் உள்ள ஓட்டுநர்களானாலும் அவர்களின் உடம்பும் மற்றவர்களின் உடம்பு மாதிரிதானே?
அறுபது கிலோமீட்டர் வேகத்தில் போகும் வாகனம் நிமிடத்திற்கு ஒரு கிலோமீட்டர் போகும், அதாவது ஒரு விநாடிக்கு 16.7 மீட்டர் அல்லது ஏறக்குறைய 50 அடி தூரம். ஓட்டுபவர் ஒரு விநாடி கண் மூடினால் வாகனம் 50 அடி சென்றுவிடும். அந்த 50 அடிக்குள் ஒரு பாலம் இருக்கலாம். அல்லது ஒரு வளைவு இருக்கலாம். அதைக் கவனிக்க முடியாததால் விபத்து ஏற்படலாம்.
4. தேவையற்ற ரிஸ்க்: ஒருவர் சென்னையில் வியாபாரியாக இருக்கலாம். சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை அவருடைய சொந்தங்கள் ஒரு விசேஷம் வைத்திருந்தால், அவர் என்ன செய்வார் என்றால் – சனிக்கிழமை வியாபாரத்தை முடித்துவிட்டு 11 மணிக்கு ஒரு டாக்சியில் புறப்படுவார். அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை ஊருக்குப்போய் அந்த விசேஷத்தைப் பார்த்துவிட்டு, அன்று இரவே அங்கிருந்து புறப்பட்டு திங்கள் அதிகாலை சென்னை வந்து சேர்ந்து வழக்கம்போல் வியாபாரத்தைக் கவனிப்பதாகத் திட்டம்.
திட்டம் என்னமோ நல்ல திட்டம்தான். ஆனால் அந்த ஓட்டுநர் சனி பகல் முழுவதும் வேலை செய்திருக்கக் கூடும். அவருடைய முதலாளி வரும் கிராக்கியை விட மனமில்லாமல் இந்த ஒட்டுநரையே அனுப்புவார். அவருக்கும் வேறு ஓட்டுநர் கைவசம் இருந்திருக்கமாட்டார். இந்த ஓட்டுநரும் கிடைக்கப்போகும் அதிக ஊதியத்திற்காக இந்த வேலையை ஒப்புக்கொள்வார்.
நிகழ்வதென்ன? விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதுதான்.
5. வாகனத்தின் தன்மையை அறியாதிருத்தல்: வாடகை வண்டிகள் ஓட்டும் ஓட்டுநர்கள் வழக்கமாக ஒரே வண்டியைத்தான் ஓட்டுவார்கள். அப்போதுதான் அவர்களுக்கு அந்த வண்டியின் நெளிவு சுளிவுகள் நன்றாகத் தெரிந்திருக்கும். சில சமயம் அவர்கள் வேறு வண்டிகளை ஓட்டவேண்டிவரும். அப்போது அவர்கள் மிகுந்த கவனத்துடன் அந்த வண்டியை ஓட்டவேண்டும். ஆனால் அதிக அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள் பழைய வண்டி ஞாபகத்திலேயே ஓட்டுவார்கள்.
இதுவும் விபத்துக்களை ஏற்படுத்தும்.
6. அதிக பயணிகள்: சொந்த வாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் அனுபவத்தில் கண்டிருப்பார்கள். வாகனத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாகனம் ஓட்டும்போது மிகுந்த வித்தியாசம் தெரியும். வாகனத்தின் வேகம் மிகக் குறையும். திருப்பங்களில் வண்டி அதிகமாக சாயும். இந்த வித்தியாசங்களைக் கண்டுகொள்ளாமல் வாகனத்தை ஓட்டும்போது பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.
பயணிகள் மட்டுமல்ல. அதிக பாரம் ஏற்றினாலும் இதே நிலைதான்.
7. செல்போன்: விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் மிகக் குறுகிய காலத்தில் அதிகம் பேர் உபயோகப்படுத்தும் பொருள்களில் செல்போன்தான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. சரியாக உபயோகித்தால் மிகவும் பயன் தரக்கூடிய சாதனம். ஆனால் இதுவே, முறையற்ற பயன்பாட்டினால் பல அனர்த்தங்களை விளைவிக்கக் கூடியது.
எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் செல்போன் அழைப்பு வந்தால் அந்த வேலையை விட்டுவிட்டு செல்போன் பேசுகிறார்கள். செல்போன் பேசிக்கொண்டே ரோட்டில் நடக்கிறார்கள். ரயில்வே லைனை கிராஸ் செய்கிறார்கள். கார், பஸெ ஓட்டுகிறார்கள்.
ஆங்காங்கே வைத்திருக்கும் போர்டுகளில் ‘’ செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள் ‘’ என்று விளம்பரம் வைத்திருக்கிறார்கள். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல்தான் எல்லோரும் நடந்துகொள்கிறார்கள். விபத்துகளை சம்பாதிக்கிறார்கள். எந்த சுவற்றில் முட்டிக்கொள்வது?
8. ஆணவம் அல்லது Road Rage: நல்ல சாதுவான, பொறுமையான மனிதர்கள் கூட வாகனம் ஓட்டும்போது தங்கள் இயல்புக்கு மாறாக நடந்துகொள்கிறார்கள் என்று சர்வதேச ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பின்னால் வரும் ஓட்டுநர் ஹார்ன் அடித்தாலோ அல்லது நம் வண்டியை நம் அனுமதியின்றி ஓவர்டேக் செய்தாலோ பெரும்பாலான
சமயங்களில் நம் ஆணவம் மேலோங்குகிறது. அப்போது நாம் நம் இயல்பை மறந்து பல தவறுகள் செய்கிறோம். இது விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.
9. சாலை விதிகளைக் கடைப்பிடியாமை: சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது. அல்லது அவை போலீஸ்காரர் இருக்கும்போது மட்டும்தான் அமலில் உள்ளவை என்று நினைக்கிறோம். மேலை நாடுகளில் நடு இரவில் கூட சிகப்பு விளக்குக்கு வண்டிகள் நின்றுதான் செல்லும் என்று கேள்விப்படுகிறோம். அவர்கள் மடையர்கள் என்று கூட சிலர் நினைக்கலாம்.
சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்ற எண்ணம் நம்மிடையே இல்லை. அது மட்டுமல்ல. எந்த விதிகளுமே நமக்குப் பொருந்தாது என்கிற மனப்பான்மையை இன்றைய அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
இதைப் படிப்பவர்களில் யாராவது ஒருவராவது மனம் மாறினால் ஒரு உயிரைக் காப்பாற்றிய புண்ணியம் எனக்கு சேரும்.
சனி, 4 ஜூன், 2011
செவ்வாய், 31 மே, 2011
ரோட்டில் மரணமடையாமல் நடந்து வீட்டுக்குத் திரும்புவது எப்படி?
(வயதானவர்களுக்கு மட்டுமான பதிவு. மற்றவர்களும் படிக்கலாம்)
விஞ்ஞான வளர்ச்சியில் பல மாற்றங்களை நாம் காண்கிறோம். அவைகளில் பல விஷயங்கள் நமக்குத் தேவைப்படுவதில்லை. ஆகவே அவைகளைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. குறிப்பாக கணினிகள். மைக்ரோவேவ் அவன்கள், மேக்கப் சாதனங்கள், அவைகள் எதற்குப் பயன்படும் என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
ஆனால், நாம் ஏதாவது ஒரு காரணத்திற்காக வீட்டைவிட்டு வெளியில் போய் வர வேண்டியிருக்கிறது. அந்த சமயங்களில் ரோடுகளில்தான் நடந்து போக வேண்டியிருக்கிறது. நம் இளம் வயதில் ரோடுகள் நடப்பதற்காக மட்டுமே உபயோகத்திலிருந்தது ஞாபகத்தில் இருக்கலாம்.. இரண்டு நண்பர்கள் சந்தித்தால் நடு ரோட்டில் நின்று குசலம் விசாரிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. சைக்கிள்கள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் வந்தால் அவை ஒதுங்கிப் போய்விடும். ஏதாவது வண்டிக்காரன் சத்தம் போட்டால், ஏனய்யா, ரோட்டில் இவ்வளவு இடம் இருக்கிறதே, தள்ளிப் போகவேண்டியதுதானே என்று கூசாமல் சொல்லியிருக்கிறோம்.
ஆனால் இன்றோ வாகனங்கள் பெருகிவிட்டன. நடுரோடில் நின்றால் அடுத்த நிமிடம் சட்டினி ஆகிவிடுவோம். ரோட்டில் நடப்பதே இன்று ஒரு தனி கலையாய் இருக்கிறது. அதில் நான் கற்ற சில நுணுக்கங்களை இங்கு கூறுகிறேன்.
1. முதலில் ரோடு என்பது நடப்பவர்களுக்காக அல்ல என்பதை மனதில் கொள்ளவேண்டும். லாரி, பஸ்காரர்களின் தயவால்தான் நீங்கள் ரோட்டில் நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
2. நடப்பவர்களுக்காகத்தான் ரோடுகளின் ஓரத்தில் பிளாட்பாரம் கட்டியிருக்கிறார்கள். அப்படி பிளாட்பாரம் கட்டாத ரோடுகளில் என்ன செய்வது என்று முட்டாள்தனமாக கேள்விகள் கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். அப்படி பிளாட்பாரம் இல்லாத ரோடுகள் மனிதர்கள் நடப்பதற்காக இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்.
3. அந்தப் பிளாட்பாரங்களில் கடைகள் இருக்கும் அதற்கு முன்பாக ஐந்தாறு பேர் பீடி, சிகரட் குடித்துக்கொண்டு நின்றிருப்பார்கள். அது அவர்களின் தேசீய உரிமை. அவர்களைப்பார்த்து ஒரு சலாம் வைத்தால் போனால் போகிறது என்று கொஞ்சம் வழி விடுவார்கள். அந்த இடைவெளியில் ஜாக்கிரதையாக கீழே விழாமல் நடக்கவேண்டும்.
4. எப்போதும் ரோடுகளில் இருக்கும் மரம். கரன்ட் கம்பங்கள் இவைகளின் பாதுகாப்பிலேயே நடக்க வேண்டும். அதாவது அந்த மரம், கம்பம் அவைகளுக்கும், கட்டிடங்களுக்கும் இடையிலேயே சாக்கடைக்குள் விழுந்து விடாமல் நடக்க வேண்டும்.
5. பஸ் ஸ்டாப்புகளின் ஓரத்தில் நடக்கும்போது பஸ் வந்தால் உடனே ஓடி ஓளிந்து கொள்ளவேண்டும். பஸ் டிரைவர்களுக்கு பாதசாரிகள் அல்வா மாதிரி. எப்படியாவது அவர்கள் மேல் ஏற்றிவிடவே முயல்வார்கள்.
6. மோட்டார் சைக்கிள் வீரர்கள் அனைவரும் யமனுடன் அக்ரீமென்ட் போட்டுவிட்டுத்தான் வெளியில் வருகிறார்கள். அதாவது ஒன்று அவர்கள் வீர மரணம் அடையவேண்டும் அல்லது யாரையாவது வீரமரணம் அடைய வைக்கவேண்டும். இவர்களை தூரத்தில் பார்த்தவுடன் ஏதாவது கடைக்குள் புகுந்து விடுவது உத்தமம்.
7. ரோட்டின் வலது புறத்தில் பாதசாரிகள் நடக்க வேண்டுமென்பது சட்டம். அப்போதுதான் இடதுபுறமாக வரும் வாகனங்கள் எதிரில் வரும்போது அதற்கு ஏற்ப நாம் ஒளிந்து கொள்ளலாம். ஆனால் பின்னால் வரும் வாகனங்கள் நம் மீது மோதாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஒரு கனரக வாகனத்தை இன்னொரு கனரக வாகனம் ஓவர்டேக் செய்து கொண்டிருக்கும் போதே, அந்த இரண்டாவது வாகனத்தை மூன்றாவதாக ஒருவன் ஓவர்டேக் செய்வான். அவன் சத்தியமாக உங்கள் மீது மோதி உங்கள் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்வதற்கு வழி பண்ணுவான்.
இதையெல்லாம் தவிர்த்து நீங்கள் உயிருடன் வீட்டிற்குத் திரும்பி வந்து சேர்ந்தீர்களானால் அது நீங்கள் பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியம் என்று உண்ர்ந்து கொள்ளுங்கள்.
ஞாயிறு, 29 மே, 2011
கடன் வாங்குதல்
கடனைக்கண்டு சிலர் பயப்படுவார்கள். கடன் வாங்கினால் அதைத் திருப்பிக் கட்டுவது எப்படி? கட்டமுடியாமல் போனால் மானம் போகுமே! என்றெல்லாம் கவலைப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் கடன் வாங்க மாட்டார்கள். தங்கள் வரவுக்குள்ளேயே செலவைக் குறுக்கிக் கொள்வார்கள்.
பலர் இவ்வாறெல்லாம் கவலைப்படுவதில்லை. இவர்கள் கடனைக்கண்டு பயப்படாதவர்கள். கடன்தானே இருக்கட்டுமே. அவனிடம் இருந்தால் அந்தப்பணம் சும்மாதானே இருக்கப்போகிறது. நம்மிடம் வந்ததால் அது பயனுள்ள பல வேலைகளைச் செய்கிறது. நல்ல விஷயம்தானே. இதற்கு ஏன் வீணாக உடம்பை அலட்டிக்கொள்வானேன்?
சரி, அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டாமா? என்றால் அது அவன் (கடன் கொடுத்தவன்) கவலை. நான் ஏன் அதைப் பற்றிக் கவலைப் படவேண்டும்? என்பார்கள்.
இதுதான் கலியுகம்!
பலர் இவ்வாறெல்லாம் கவலைப்படுவதில்லை. இவர்கள் கடனைக்கண்டு பயப்படாதவர்கள். கடன்தானே இருக்கட்டுமே. அவனிடம் இருந்தால் அந்தப்பணம் சும்மாதானே இருக்கப்போகிறது. நம்மிடம் வந்ததால் அது பயனுள்ள பல வேலைகளைச் செய்கிறது. நல்ல விஷயம்தானே. இதற்கு ஏன் வீணாக உடம்பை அலட்டிக்கொள்வானேன்?
சரி, அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டாமா? என்றால் அது அவன் (கடன் கொடுத்தவன்) கவலை. நான் ஏன் அதைப் பற்றிக் கவலைப் படவேண்டும்? என்பார்கள்.
இதுதான் கலியுகம்!
செவ்வாய், 24 மே, 2011
மனித வாழ்வில் வக்கிரங்கள்
நடைமுறை வாழ்வில் பலதரப்பட்ட மனித இயல்புகளைப் பார்க்கிறோம். பெரும்பாலானவை நடைமுறை பண்புகளுக்கும் நாகரீகத்திற்கும் ஒத்துப் போகின்றன. சில சமயங்களில் மனித மனங்களின் வக்கிரங்களும் வெளிப்படுகின்றன. ஆனால் அதை நாம் வெளிச்சம் போட்டு விளம்பரம் செய்வதில்லை.
உண்மைதான் என்றாலும், எல்லா உண்மைகளையும், எல்லா இடங்களிலும் சொல்ல முடியாது. சொல்லத் தேவையுமில்லை. உண்மைகளையும் மறைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டு. இது ஒரு வகை நாகரிகம் அல்லது ஒரு வகை பண்பு என்று கூறலாம்.
பத்திரிக்கைகளில் பல செய்திகள் போடுகிறார்கள். சில செய்திகளைப் பார்த்துவிட்டு அடுத்த செய்திக்குப் போய்விடவேண்டும். அந்த செய்திகளைப் பற்றி விளம்பரப்படுத்த வேண்டியதில்லை. அதுவும் பதிவுலகம் மூலமாக இதைச் செய்ய வேண்டியதில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









