புதன், 26 செப்டம்பர், 2012

ஜோதிடம் வாழ்விற்கு அவசியமா?



கடவுள் தத்துவம் எப்படி ஒரு மனிதனின் நம்பிக்கையைப் பொருத்த விஷயமோ, அதே மாதிரி ஜோசியமும் ஒவ்வொருவருடைய நம்பிக்கையைப் பொருத்த விஷயம்

ஜோசியம் உண்மையா, பொய்யா என்பதைவிட ஜோசியம் மனித வாழ்வில் எவ்வளவு இடம் பிடித்திருக்கிறது, ஏன் மக்களுக்கு ஜோசியம் அவசியப்படுகின்றது என்பதுதான் சிந்திக்கத் தகுந்த பொருள்.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் அனைத்தும் பலவிதமான கதிர்வீச்சுகளை வெளிப்படுத்துகின்றன. இவை மனிதனை பல வகையில் பாதிக்கின்றன. கண்ணுக்குத் தெரியும் பாதிப்புகள், கண்ணுக்குத் தெரியாத பாதிப்புகள் இரண்டும் இதனுள் அடக்கம். இந்த பாதிப்புகள் ஒவ்வொருவருக்கும், அவரவர்கள் ஜாதகப்பிரகாரம் வேறுபடுகின்றன என்பதுதான் ஜோதிடத்தின் அடிப்படை சித்தாந்தம்.

இந்த வேறுபாடுகளை, ஜோதிட சாஸ்திரம் வகைப்படுத்தி வைத்திருக்கிறது என்று ஜோசியர்கள் ஆணித்தரமாகக் கூறி மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள். இந்தக் கருத்தை தீவீரமாக ஆதரிக்கும் சாதாரண மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் ஜோசியத்தை நம்பாதீர்கள் என்று சொன்னால், சொன்னவர்களை அடிக்க வருவார்கள்.
என்னுடைய வாழ்க்கையில் நடந்தவைகளை இந்த ஜோசியர் அப்படியே புட்டுப்புட்டு வைத்தார் என்று சொல்பவர்கள் அநேகம். ஆனால் எதிர்காலத்தில் நடப்பவைகளைப் பற்றி அவர் சொன்னதெல்லாம் பலித்ததா என்று கேட்டால் மழுப்புவார்கள். நம் வாழ்வில் நடந்தவைகள்தான் நமக்கே தெரியுமே, அதை அந்த ஜோசியன் வாயால் கேட்பதில் என்ன பயன்? ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பதுவும், நம்புவதும் என்னவென்றால்நம் கடந்த காலத்தை இவ்வளவு துல்லியமாக சொல்பவன், எதிர்காலத்தைப் பற்றி சொல்வதில் பாதிக்குப் பாதியாவது பலிக்காதா என்ற நம்பிக்கைதான்.

சரி, அவன் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம். அதனால் என்ன பயன் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். ஜோசியத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒரு உதாரணம்- இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால் கொஞ்சம் வழி நன்றாகத் தெரியுமல்லவா? வழியில் உள்ள குண்டு குழிகளில் விழாமல் தப்பிக்கலாம் அல்லவா? அப்படி எல்லாத் தடங்கல்களையும் ஜோசியம் மூலம் தாண்டி விடலாம் என்று வைத்துக் கொண்டால் ஏன் ஜோசியத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் வருகிறது?

இதற்கு அவர்கள் சொல்லும் பதில் -  ஜோசியன் சொன்ன பரிகாரத்தை நான் சரியாகச் செய்யவில்லை என்பதாகும். ஜோசியம் பார்க்கும் எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கிவிட முடியும் என்றால் இப்போதுள்ள ஜோசியர்கள் போதுமா? தவிர அனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?

இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டேதான் இருக்கும். மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று ஒரே கொள்கையில் நிற்பார்கள். அவர்களுக்கு ஜோசியம் தேவையில்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஊன்றுகோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

கடவுள் செய்யும் அக்கிரமம்




மனிதன் பிறக்கும்போது எல்லோரும் சமம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒருவன் பணக்காரனாகிறான், இன்னொருவன் பிச்சைக்காரனாக இருக்கிறான். கடவுள் ஏன் இந்த பட்சபாதம் காண்பிக்கிறார்? இது காலம் காலமாக கேட்கப்பட்டு வரும் கேள்வி.

ஆன்மீகவாதிகள் சொல்லும் வியாக்யானம் என்னவென்றால் அவரவர்கள் பூர்வஜன்ம கர்ம பலன்களின்படி இவ்வுலக வாழ்க்கை அமைகிறது என்கிறார்கள். அப்போது மறு ஜன்மம் உண்டு என்று ஊர்ஜிதமாகிறது. இந்தக் கொள்கையை ஆதரிப்பவர்கள் மேலும் சொல்வதாவது. போன ஜன்மாவில் பாவகாரியங்கள் செய்ததால்தான் உனக்கு இந்த ஜன்மாவில் இவ்வாறு துன்பங்கள் வந்துள்ளன. இந்த ஜன்மாவில் நீ நல்ல காரியங்கள் செய்வாயாகில் அடுத்த ஜன்மாவில் நீ சுகப்படுவாய் என்று கூறுகிறார்கள்.

இந்த தத்துவத்தை ஏற்றுக்கொள்வதில் ஒரே ஒரு தயக்கம், இப்பூவுலகில் பிறந்த எவருக்குமே தங்களுடைய பூர்வ ஜன்ம ஞாபகம் அணுவளவு கூட இருப்பதில்லை. அப்படி இருக்கையில் இந்த பூர்வ ஜன்மம், கர்ம வினை இவைகளை எப்படி நம்ப முடியும்? என்று யாராவது கேட்டால், சாஸ்திரம் சொல்லுகிறது, ஆகையால் நீ நம்ப வேண்டும் என்கிறார்கள்

சாஸ்திரங்கள் ஆகாயத்திலிருந்தா விழுந்தது? அதுவும் நம்மைப்போன்ற மனிதன் எழுதியதுதானே? இப்படிக்கேட்டால் நீ நாத்திகன், நீ நாசமாய்ப்போவாய் என்று சாபம் கொடுக்கிறார்கள்.

நான் நினைக்கிறேன். மனிதனின் ஏற்றத் தாழ்வுகளை நியாயப் படுத்த அல்லது அவைகளை நினைத்து மனிதன் துவண்டு போகாமலிருக்க கொஞ்சம் புத்திசாலி மனிதன் கண்டுபிடித்த யுக்திதான் இது. காலம் காலமாய் சொல்லி வந்ததினால், பலர் அதை உண்மை என்றே நம்புகிறார்கள். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். என்று ஒரு சித்தர் இருந்தார் என்றால் அன்றிருப்பவன் எல்லாம் நம்பினாலும் நம்புவார்கள்.

கர்ம வினை, மறுஜன்மம், புண்ணியம், பாவம் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கைகள்தான். ஒருவனுடைய நம்பிக்கைகள்தான் அவனை ஆத்திகனாகவோ நாத்திகனாகவோ அடையாளம் காட்டுகின்றன. உண்மை எது என்று யாரால் சொல்ல முடியும்?

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

பூனையின் தன்மானம்


வீட்டு வளர்ப்புப் பிராணிகளான நாய், பூனை ஆகியவற்றிற்கு பகுத்தறிவோ, சிந்திக்கும் திறனோ இல்லையென்றுதான் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால் பல சமயங்களில் அவைகள் செய்யும் காரியங்களைக் கண்டால் நம் இந்தக் கருத்து சரியானதல்ல என்று புரியும்.

ஆல்ப்ஸ் மலையில் பனிப்புயலில் சிக்கிய பலரை அங்குள்ள பனி நாய்கள் கண்டுபிடித்து காப்பாற்றினதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வீட்டில் எஜமானர் இல்லாதபோது, அவர்களின் குழந்தைகளை பல விபத்துகளிலிருந்து காப்பாற்றிய நாய்களைப் பற்றியும், பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம்.

எங்கள் வீட்டில் நான் கண்ட ஒரு காட்சியை இங்கு கூறுகிறேன், கேளுங்கள்.

வீடுகளில் பூனைகள், அவைகளை யாரும் தனிப்பட வளர்க்காவிட்டாலும், எங்கிருந்தோ வந்து சுற்றிக்கொண்டு இருக்கும். அப்படி ஒரு பூனை எங்கள் வீட்டு வளாகத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும். சமீபத்தில் அது குட்டிகளை ஈன்றது. அதற்கடுத்த நாள் எங்கள் வீட்டு சமையலறையின் வாசலில் என் மனைவி நின்று கொண்டிருக்கும்போது வந்து, மனைவியின் முகத்தைப் பார்த்து, மியா, மியாவென்று கத்தியது. அதற்குப் பசி போலும். ஏதாவது உணவு கிடைக்காதாவென்று அப்படிக் கத்தியிருக்கிறது. என் மனவி வழக்கம்போல் அதை விரட்டி விட்டாள். அது போய்விட்டது.

நான் என் ரூமிலிருந்து பூனையின் சத்தத்தைக் கேட்டு, அந்தப் பூனைக்கு ஏதாவது போடுங்களேன் என்று சொன்னேன்.  அதற்குள் அந்தப் பூனை போய்விட்டது.

அடுத்த நாள் அந்தப் பூனை அந்தப் பக்கமாக வந்த போது மனைவி ஒரு தட்டில் பால் சாதம் வைத்து அதைக் கூப்பிட்டிருக்கிறாள். அந்தப் பூனை மனைவியைச் சட்டை செய்யாமல் போய்விட்டது. இதைக் கேட்ட நான் அந்தப் பூனையின் தன்மானத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

முதல்நாள் அதற்கு ஒன்றும் கொடுக்காமல் விரட்டியடித்த சம்பவம் என் மனதை விட்டு நீங்காமல் உறுத்துகிறது.

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

ஆசிரியர் மாணவனுக்கு புத்தி புகட்டின கதை – பாகம் 2


விவசாயக்கல்லூரியில் அந்தக் காலத்தில் “ப்யூர் சைன்ஸ் கிரேஜுவேட்” (Pure Science Graduate) என்று சொல்லப்படுகின்றவர்கள் பலர் பல துறைகளில் வேலையில் இருந்தார்கள். அக்ரி கிரேஜுவேட்டுக்களுக்கும் இந்த ப்யூர் சைன்ஸ் கிரேஜுவேட்டுக்களுக்கும், யார் உயர்ந்தவர்கள் என்று ஒரு வித பனிப்போர் நடந்துகொண்டிருந்தது.

இந்தியாவில் பசுமைப்புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருந்த வேளை. அதற்கு அமெரிக்க விதைகளும், அமெரிக்கத் தொழில் நுட்பங்களும் இறக்குமதியாகிக் கொண்டிருந்த நிலை. அமெரிக்கா விவசாயத்தில் உயர்ந்து நிற்கக் காரணம், அந்நாட்டில் விவசாயம் கற்பிக்க தனிப்பட்ட விவசாய பல்கலைக்கழகங்கள் இருந்ததுதான் என்று நம் அரசியல்வாதிகள் கருதினார்கள். அதே மாதிரி நம் நாட்டிலும் விவசாயப் பல்கலைக் கழகங்களை ஏற்படுத்தவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான செயல் திட்டங்களை உருவாக்க ஒரு உயர்மட்ட கமிட்டி அமைத்தார்கள்.

அந்தக் கமிட்டியில் எங்கள் கல்லூரியைச் சேர்ந்த உயர்அதிகாரி ஒருவரும் உறுப்பினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ஒரு ப்யூர் சைன்ஸ் கிரேஜுவேட். கல்லூரியில் இருக்கும் அக்ரி கிரேஜுவேட் ஆசிரியர்கள், அந்த ஆபீசர் இந்தக் கமிட்டியில் இருந்தால் ப்யூர் சைன்ஸ் கிரேஜுவேட்களுக்கு ஆதரவாக சிபாரிசுகள் செய்வார், நம்முடைய எதிர்கால முன்னேற்றம் பாதிக்கப்படும் என்று கருதினார்கள். 
என்ன செய்ய முடியும்? ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள். எந்தப் போராட்டமும் நடத்த முடியாது. ஆகவே மாணவர்களைத் தூண்டிவிட்டு ஒரு போராட்டம் நடத்தினார்கள். அந்த உயர் ஆபீசர் கமிட்டியில் கலந்து கொள்ளச் செல்லவேண்டிய நாளுக்கு முந்தைய நாளில் மாணவர்கள் ஸ்டிரைக் செய்ய ஆரம்பித்தார்கள். கல்லூரி அலுவலர்கள் ஒருவரையும் கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை. ஒரு ஆபீசையும் திறக்க முடியவில்லை. ஒரு வேலையும் நடக்கவில்லை.

நான் அப்போது மாணவர் விடுதி வார்டன். இந்த டூர் போகும் ஆபீசர்தான் என்னுடைய நேரடி உயர் ஆபீசர். என்னுடைய குணம், நான் எந்த வேலை பார்த்தாலும், அந்த வேலைக்கு உண்மையாக இருப்பது. அன்று இரவு அவரை அவர் வீட்டில் சந்தித்தேன். அவர் வீடு கல்லூரி வளாகத்தினுள்ளேயே இருந்தது. மறுநாள் காலை அவர் அந்த உயர்மட்டக் கமிட்டியில் கலந்து கொள்ள சென்னை சென்று, அங்கிருந்து டில்லி செல்லவேண்டும். பயணத்திற்கான விமான டிக்கெட்டுகள் எல்லாம் தயார். மாணவர்கள் அவரை அந்தப் பயணம் மேற்கொள்ளாதவாறு தடுக்க காலையில் அவர் வீட்டை முற்றுகை இடுவதாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அவர் டூர் போகாவிட்டால் அவருடைய அந்தஸ்த்திற்கும் கல்லூரிக்கும் பெரும் அபவாதம் வரும். என்ன செய்வதென்று யோசித்தோம். அவரை தான் கேட்டேன்.

“சார், டவுனில் உங்களுக்கு வேண்டியவர்கள் யாராவது இருக்கிறார்களா?”

“இருக்கிறார்கள்” என்றார்.

“அப்படியானால் இன்று இரவே நீங்கள் அங்கு சென்று விடுங்கள். நான் நாளைக் காலையில் ஆபீஸ் வண்டியுடன் அங்கு வருகிறேன். அங்கிருந்து அப்படியே விமான நிலையம் சென்று விடலாம்” என்றேன்.

அவருக்கும் வேறு வழி தோன்றாததால் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டார். அதன்படியே அவரை இரவு பத்து மணிக்கு மேல் டவுனில், அருக்குத் தெரிந்தவர் வீட்டில் விட்டுவிட்டு, டிரைவரிடம் காலையில் 7 மணிக்கு என் வீட்டிற்கு வருமாறு சொல்லிவிட்டு, நான் வீட்டில் இறங்கிக்கொண்டேன். மறு நாள் ஏற்பாட்டின்படி வீட்டிற்கு ஆபீஸ் ஜீப் வந்தது. அதில் போய் ஆபீசரை, அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏற்றிக்கொண்டு ஏர்போர்ட் சென்று அவரைப் பிளேனில் ஏற்றிவிட்டு, கல்லூரிக்கு வந்தேன்.

அந்த ஆபீசர் வீட்டுக்கு முன்பு ஒரே மாணவர் கூட்டம். அவர் இன்னும் வீட்டிற்குள்தான் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, மாணவர்கள் அவர் வீட்டை முற்றுகையிட்டிருந்தார்கள். பத்து மணிக்கு மேல்தான் பட்சி பறந்துவிட்டது என்பது அவர்களுக்குத் தெரிய வந்தது.

அவர்களுக்கு ஏமாற்றத்தினால் கடும் கோபம். அந்த ஆபீசருக்கு ஒரு கொடும்பாவி கட்டி அவர் வீட்டிற்கு முன்பாக அதை எரித்து விட்டு கலைந்து போனார்கள். நான் இந்த விவகாரத்தில் ஈடுபட்டது எப்படியோ அவர்களுக்குத் தெரிந்து விட்டது.

அடுத்த நாள், இந்த ஸ்ட்ரைக்கைத் தூண்டிவிட்ட குழுவின் தலைவரை, கல்லூரித் துணைத்தலைவராக நியமனம் செய்து அரசு ஆணை தந்தி மூலம் வந்துவிட்டது. இப்போது அவர்தான் எனக்கு உயர் அதிகாரி. இந்த அரசு ஆணை விவரம் தெரிந்தவுடன் அவரைப்போய்ப் பார்த்தேன். அவர் என்னை அழைத்துக் கொண்டு இருவருமாக ஆபீசுக்குப் போனோம்.

ஆபீஸ் வாசலில் ஒரு நூறு மாணவர்கள் வழியை அடைத்துக்கொண்டு இருந்தார்கள். இந்தப் புது உயர் அதிகார், மாணவர்களிடம் சொன்னார். இப்படியே ஒருவரையும் உள்ளே போகவிடாமல் இருந்தால், உங்கள் பிரச்சினை எப்படித் தீரும். நாங்கள் யாராவது உள்ளே சென்று சென்னையிலுள்ள பெரிய ஆபீசர்களிடம் பேசி விவரங்களைச் சொன்னால்தானே உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றார். அவர்கள் சரி, சார், நீங்கள் உள்ளே செல்லுங்கள் என்று சொன்னார்கள். அவர் பிறகு, நான் மட்டும் உள்ளே போய் என்ன செய்ய முடியும்? எனக்கு உதவிக்கு யாராவது வார்டன் இருந்தால்தானே சௌகரியமாயிருக்கும் என்றார்.

சரி சார், ஒரு வார்டனை அழைத்துச் செல்லுங்கள் என்றனர். அந்த ஆபீசர் பின்னால் திரும்பி என்னைப் பார்த்து, “வா, கந்தசாமி, உள்ளே போகலாம்” என்று கூப்பிட்டார். நான் முன்னே செல்ல ஆயத்தமானேன். அப்போதுதான் அந்த மாணவர்கள் என்னைப் பார்த்தார்கள். அந்தக் கூட்டத்திலிருந்த மாணவர் மன்றத் தலைவர் என்னைப் பார்த்ததும், இந்த வார்டனை விடமாட்டோம் என்றான். நிலைமையைப் பார்த்ததும், “சார், நான் வரவில்லை, நீங்கள் மட்டும் உள்ளே செல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு, மனதிற்குள் நினைத்தேன்.

“மகனே, இன்று உன் நாக்கில் சனி இருந்து உன்னை இப்படி சொல்ல வைத்திருக்கிறது. வா, உன்னுடைய இறுதிப் பரீட்சைக்கு என்னிடம்தானே வரவேண்டும், அப்போது உன்னைக் கவனித்துக்கொள்கிறேன் என்று முடிவு செய்து கொண்டு போய்விட்டேன்.”

அவர்கள் முதல் நாள் அந்த ஆபீசர் வீட்டிற்கு முன்பாக கொடும்பாவி கட்டி எரித்தார்கள் அல்லவா? அவர்கள் அந்த அதிகாரிக்கு எதிராகத்தான் கொடும்பாவி கட்டி எரித்தார்கள். ஆனால் போலீஸ் அந்த சம்பவத்தை மாற்றி, கருணாநிதிக்கு கொடும்பாவி கட்டி எரித்தார்கள் என்று ரிப்போர்ட் அனுப்பிவிட்டார்கள். கருணாநிதி அப்போது முதல்மந்திரி. சும்மா இருப்பாரா? உடனே ஸ்ட்ரைக் செய்யும் மாணவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்திரவு போட்டுவிட்டார். மறு நாள் விடிவதற்குமுன் மாணவர் விடுதிக்குள் போலீஸ் புகுந்து எல்லா மாணவர்களையும் குண்டுக் கட்டாகத் தூக்கிக் கொண்டுபோய் சிறையில் அடைத்து விட்டார்கள். மொத்தம் 800 மாணவர்கள். மூன்று நாட்கள் சிறையில் வாடின பின் அவர்களை 50, 50 பேர்களாக வெளியில் விட்டு விடுதிக்கு கூட்டிக்கொண்டுவந்து அவர்களின் உடமைகளை எடுத்துக்கொள்ளச் செய்து, பஸ் ஸ்டேண்ட் அல்லது ரயில் நிலையத்தில் விட்டார்கள். வழிச் செலவிற்கு ஹாஸ்டலில் இருந்து பணம் கொடுத்தோம்.

இப்படியாக அந்த ஸ்ட்ரைக் முடிவிற்கு வந்தது. மாணவர்களைத் தூண்டி விட்ட ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களை எக்காலத்திலும் ஆசிரியர் பதவியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆராய்ச்சி நிலையங்களுக்கு மாற்றப்பட்டார்கள்.

கதையின் கிளைமேக்ஸ்சுக்கு வருவோம். ஒரு மாதம் கழித்து கல்லூரி திறந்தது. மாணவர்களின் இறுதிப் பரீட்சையும் வந்தது. அந்தப் பரீட்சைக்கு நான் எக்ஸ்டேர்னல் எக்சாமினர். தியரி பேப்பர் நான்தான் திருத்த வேண்டும். நமது கதாநாயகனின் பேப்பரையும் எப்போதும் போல் திருத்தினேன். பாஸ் மார்க்கிற்கு மூன்று மார்க் குறைந்தது. சாதாரண மாணவனாக இருந்தால் இங்கும் அங்குமாக அரை மார்க், கால் மார்க் போட்டு பாஸ் லெவலுக்கு கொண்டு வந்திருப்பேன். ஆனால் கதாநாயகனுக்கெல்லாம் அப்படி செய்யலாமா? அப்படியே விட்டுவிட்டேன்.

நான் வேண்டுமென்றே அந்த மாணவனைப் பெயில் செய்து விட்தாக எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அதைக்கேட்டு நான் வருந்தவில்லை. நன்றாகப் படிக்கக் கூடிய மாணவனை இவ்வாறு வேண்டுமென்று பெயில் செய்திருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றம். ஆனால் நமது கதாநாயகன் அடி மட்ட மாணவன். தவிர அவர் மாணவர் மன்றத் தலைவர். படிப்பதற்கு அவருக்கு நேரம் ஏது? என்ன, நான் அவருக்கு கருணை காட்டவில்லை. அவ்வளவுதான். அதனால் அவர் பாஸாகவில்லை. ஆகையால் என் மனச்சாட்சி என்னை ஒன்றும் செய்யவில்லை.

அவர் அடுத்த முறை பரீட்சை எழுதி பாஸ் செய்தார். அப்போதும் மார்க் குறைவுதான். இருந்தாலும் இரண்டாவது முறையாதலால் கிரேஸ் மார்க் போட்டு பாஸ் பண்ணவைத்தேன்.

ஸ்டார் ஓட்டல் தில்லுமுல்லுகள்


ஸ்டார் ஓட்டல்கள் ஒரு காலத்தில் சாதாரண நடுத்தர மக்களின் எல்லைக்கு அப்பால் இருந்தன. ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. நடுத்தர வர்க்கத்தின் கல்யாண ரிசப்ஷன் முதலான நிகழ்ச்சிகள் அங்கு நடக்கின்றன. நான்கு பேர் சேர்ந்து ஒரு சிறிய பார்ட்டி வைப்பதானால் கூட அத்தகைய ஓட்டல்களில் வைக்கிறார்கள். அந்த அளவிற்கு மக்களிடம் பணம் இருக்கிறது.

ஸ்டார் ஓட்டல்களைப் பற்றி அந்தக் காலத்தில் சொன்னது. அங்கு சாப்பிடப் போவதென்றால் முதலிலேயே வீட்டிலோ அல்லது வேறு ஓட்டல்களிலோ அரை வயிறாவது சாப்பிட்டு விட்டுப் போகவேண்டும் என்பார்கள். காரணம், நீங்கள் ஸ்டார் ஓட்டலுக்குப் போய் ஏதாவது ஆர்டர் பண்ணின பிறகுதான் அந்த ஐட்டத்தை தயார் செய்ய ஆரம்பிப்பார்களாம். (அப்போதுதான் அந்த ஐட்டம் தயார் செய்ய சாமான் வாங்க கடைக்குப் போவார்கள் என்றும் சொல்வதுண்டு) அந்த ஐட்டம் வருவதற்கு குறைந்தது முக்கால் மணி நேரம் ஆகும். அதாவது அங்கு போவது நேரத்தைக் கழிக்கவே. காதலர்களுக்கு மிகவும் சௌகரியமான நடைமுறை.

சரி, இன்றைய நிலைக்கு வருவோம். உணவு தயாரிக்கத் தேவையான அனைத்து மளிகைப் பொருட்களும் காய்கறிகளும் இன்று தாறுமாறாக விலை உயர்ந்து இருக்கின்றன. வீடுகளிலேயே முன்பு மாதிரி தாராளமாக சமைக்க முடிவதில்லை. மிச்சம் மீதி ஆகாமல் கச்சிதமாக சமைக்க வேண்டிய நிலையில் இல்லத்தரசிகள் இருக்கிறார்கள்.

ஓட்டல்கள் தர்ம சத்திரங்களல்ல. அவர்கள் வியாபாரிகள். உணவு தயாரித்து விற்று லாபம் பார்க்கவேண்டியவர்கள். இன்றைய விலைவாசி நிலவரத்தில் அவர்களின் லாபம் குறைந்து கொண்டு வருகிறது. அதைத் தவிர்க்க அவர்கள் பல விதமான யுக்திகளை கையாளுகிறார்கள். அதில் ஒன்று சமைத்த உணவுகளை வீணாக்கக் கூடாது என்பது. வீட்டிலேயே மதியம் சமைத்த சாதம் மிஞ்சிப் போனால் இரவு அதை தயிர் சாதமாக்கி சாப்பிடுகிறோம்.

ஓட்டல்களில் இதற்காக பெரிய பெரிய ஃப்ரீசர்கள் வாங்கி வைத்துள்ளார்கள். எந்த உணவுப்பொருள் மிஞ்சினாலும் அவை இந்த ஃப்ரீசர்களுக்குள் அடைக்கலம் புகும். அடுத்த நாள் இந்தப் பொருட்களுக்கு ஆர்டர் வரும்போது வெளியில் எடுக்கப்பட்டு, நன்றாகச் சுடவைக்கப்பட்டு அப்போதுதான் தயார் செய்தது போன்ற தோற்றத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

குறிப்பாக பெரிய பார்ட்டிகளுக்கு, இவ்வாறு முன் நடந்த பார்ட்டிகளின் மீதியைத் தள்ளி விடுவது சகஜம். உணவுப்பொருட்களை ஓரிரு முறை இவ்வாறு செய்தால் அதிகத் தீங்கு விளையாது. ஆனால் பல முறை இவ்வாறு மிச்சமாகும் பொருட்களை மறு சுழற்சி செய்யும்போது அவைகள் கெட்டுப்போய், பல நோய்களின் பாக்டீரியாக்கள் அவைகளில் சேர்ந்து விடுகின்றன. முக்கியமாக தயிர் சாதங்களிலும் அசைவ உணவுகளிலும் இவ்வாறு ஏற்படுகின்றன.

ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஒரு பார்ட்டியில் சாப்பிட்டு விட்டு வந்தவர்களில் அநேகம் பேர் வயிற்றுப் போக்கினால் அவதிப்பட்டனர். சமீபத்தில் ஒரு சர்வதேச பிராண்ட் கடையில் வாங்கின அசைவ உணவைச் சாப்பிட்ட எனக்கு சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துல் வாந்தி வந்தது.

ஆகையால் மக்களே, பெரிய ஓட்டல் என்றால் உணவு சுகாதாரமாக இருக்கும் என்று நம்பாதீர்கள்.

பின்குறிப்பு. இந்தப் பதிவு கைத்தவறுதலாக நேற்றே குறைப்பிரசவம் ஆகிவிட்டது. அப்புறம் கண்டு பிடித்து இன்குபேட்டரில் வைத்திருந்து இன்று வெளியிடுகிறேன்.