வியாழன், 7 ஏப்ரல், 2011

முழுமையாக வாழும் வழிகள்.


1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2.
நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக்குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத்தூக்கம் அவசியம்.

3.
நடங்கள்! ஓடுங்கள்!

தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4.
ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5.
சிரியுங்கள்

மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6.
மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7.
உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8.
தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9.
விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10.
மற்றவர்களையும் கவனியுங்கள்

உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !!!
இது என் சரக்கல்ல. ஒரு நண்பர் மின் அஞ்சலில் அனுப்பியது.

புதன், 6 ஏப்ரல், 2011

கடன் வாங்கி விட்டுத் திருப்பித் தராமல் சமாளிப்பது எப்படி?



“கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று அந்தக் காலத்தில் கம்பன் எழுதினான். அவன் இப்போது இருந்தால் “கடன் கொடுத்தார் நெஞ்சம் போல்” என்று எழுதியிருப்பான்.   

பொதுவாக யாராக இருந்தாலும் கடன் வாங்கும்போது அந்தக் கடனை எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிறோம் என்பதை யோசித்துத்தான் கடன் பத்திரத்தில் கையெழுத்து போடுவார்கள். ஆனால் சிலர் கடன் வாங்கினபின் இருக்கும் நிலையைப் பார்த்தால் அவர் கடன் வாங்கின மாதிரியே தெரியாது. எப்போதும் போல் டம்பமாகச் செலவு செய்து கொண்டும், சவடால் அடித்துக் கொண்டும் இருப்பார்.

இன்னும் சிலபேர் “எனக்கு இரண்டு கோடி கடன் இருக்கிறதாக்கும்” என்று பெருமையாகக் கூட சொல்லிக்கொள்ளுவார்கள். அதாவது கடன் இரண்டு கோடி இருந்தால் அவர் சொத்து எவ்வளவு இருக்குமோ என்று நாம் யூகித்துக்கொள்ள வேண்டுமாம். நான் யாருக்காவது ஒரு பத்து ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தால் அன்று இரவு முழுவதும் சரியாகத் தூக்கம் வராது. அடுத்த நாள் முதல் வேலையாக அந்தப் பணத்தைக் கொடுத்த பிறகுதான் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த மாதிரி இருக்கும்.

ஆனால் இந்த இரண்டு கோடிக்காரரோ சர்வ சாதாரணமாக இருக்கிறார். எப்போதும்போல் சாப்பிடுகிறார், எப்போதும்போல் தூங்குகிறார். இவரால் எப்படி அவ்வாறு இருக்க முடிகிறது என்பது எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம்!

அதைவிட ஆச்சரியம் எந்த மடையர்கள் இவரை நம்பி இவ்வளவு கடன் கொடுத்தார்கள் என்பதுதான். இந்த மாதிரி கடன் வாங்கியிருப்பவர்களின் வாய்ச்சாலம் அருமையானது. இவர்கள் பேச்சைக் கேட்பவர்கள் இவருக்கு கடன் கொடுப்பது நம் பாக்கியம் என்று நம்புகிற அளவுக்கு பேச்சுத்திறமை கொண்டவர்கள். அப்படி கடன் கொடுப்பவர்களும் வெளியில் நான் இன்னாருக்கு கடன் கொடுத்திருக்கிறேனாக்கும் என்று பெருமை பேசிக்கொள்வார்கள். பணம், யானை வாயில் போன கரும்புதான் என்பது ரொம்ப நாள் கழித்துத்தான் அவர்களுக்கு உறைக்கும்.

கடன் கொடுத்தவர் கடன் வாங்கினவர் வீட்டுக்குப் போனால் அவருக்கு கிடைக்கிற மரியாதையே தனி தினுசாக இருக்கும். நிறைய சமயங்களில் அவரைப் பார்க்கவே முடியாது. ஏதாவது ஒரு சமயத்தில் பார்க்க முடிந்தாலும் “எதுக்கய்யா வீட்டுக்கெல்லாம் வர்ரே? உன் பணத்தை யாரும் தூக்கீட்டு ஓடிவிட மாட்டார்கள். உன் வீடு தேடி பணம் வரும். இனிமேல் இங்க வீட்டுக்கு வர்ர வேலையெல்லாம் வச்சுக்காதே” என்று நாயை விரட்டுகிற மாதிரி விரட்டுவார்கள். இவனுக்கு என்னமோ தனக்கு கடன் கேட்டுப் போன மாதிரி ஒரு எண்ணம் வரும். சில சமயம் ஆளைவிட்டு மிரட்டுவார்கள். கொலை நடந்த கேஸ்களும் உண்டு.

எனக்கு வாழ்நாள் ஆசை ஒன்று இருக்கிறது. நாமும் இந்த மாதிரி ஒரு இரண்டு கோடி கடன் வாங்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. சக பதிவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். அப்படி இரண்டு கோடி கடன் கொடுக்கக் கூடிய வள்ளல்கள் (அதாவது இளிச்சவாயர்கள்) யாராவது இருந்தால், உடனே தெரியப்படுத்தினால் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். தவிர கடன் பத்திரத்தில் கையெழுத்துப் போடும் அரிய வாய்ப்பை உங்களுக்கே கொடுக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

தொலை பேசியில் பேசும்போது அனுசரிக்கவேண்டிய பண்புகள்



தொலைபேசியில் பேசுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. பெரும்பாலோருக்கு அவைகளைப் பற்றிய விழிப்புணர்வே கிடையாது. போன் என்பது பேசுவதற்குத்தானே, யாரையும் எப்போது வேண்டுமானாலும் கூப்பிட்டுப் பேசலாம் என்று பலர் தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள்.

விடியற் காலையில் 5 மணிக்குப் போன் வந்தால் என்னைப்போன்ற உள்ளூரில் வசிப்பவர்கள் என்ன நினைப்போம்? யாரோ இன்றைக்கு மண்டையைப் போட்டு விட்டார்கள், இன்றைய பொழுது அவ்வளவுதான் என்று முடிவு செய்துதான் போனை எடுப்போம். செய்தியும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். “இன்றைக்கு என்ன புரொக்ராம்” என்று ஒரு நண்பன் அந்நேரத்தில் கேட்டானென்றால் என்ன நினைப்போம்? பாவி, உன்னை எளவெடுக்க, காலங்கார்த்தாலே ஏண்டா என் தூக்கத்தை கெடுத்தே? என்றுதான் எண்ணுவோம் அல்லவா?

சிலர் அர்த்த ராத்திரியில் போன் பண்ணி, நாளைக்கு அவனைப் பார்க்கப் போகலாமா என்று விசாரிப்பார்கள். அவர்கள் அன்றைக்கு அன்று, தூங்காத ஜாதியைச் சேர்ந்தவர்கள். இரவு 1 மணிக்கு மேல்தான் படுக்கப்போவார்கள். காலையில் 11 மணிக்குத்தான் அவர்களுக்குப் பள்ளியெழுச்சி. நாம காலைல 7 மணிக்கு எழுந்திருச்சு 8 மணிக்கு ஆபீஸ் போறவங்களா இருந்தா, இந்தப் பீடைங்களுக்கு அர்த்த ராத்திரியில என்ன வாழ்த்துச் சொல்றது?

போன் என்பது அவசர, அத்தியாவசியச் செய்திகளைச் சொல்வதற்காக ஏற்படுத்திய சாதனம் என்று என்னைப் போன்ற கிழடுகள் இன்னும் நம்பிக்கொண்டு இருக்கின்றன. வடச்சட்டியில் எண்ணை ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு, தாளிப்பதற்கு என்னென்ன போடவேண்டும் என்று அமெரிக்காவிலிருந்து, இந்தியாவிலிருக்கும் அம்மாவிற்குப் போன் போட்டுக் கேட்கும் மகள்கள் ஏராளம். “அடியே, நேற்று அந்த சீரியலில் என்ன நடந்தது, எனக்கு நாத்தனார்ப் பீடைகூட கோவிலுக்குப் போகச் சொல்லி அந்தக் கெழம் உயிரைப் பிடுங்கிச்சு, அதனால அந்த சீரியலப் பாக்க முடியல. அதில அவ புருசன் சாகறாப்பில இருந்தானே, அவன் செத்துட்டானா?” என்று அரை மணி நேரம் போனிலேயே கதை கேட்கும் மாமிகளும் உண்டு. அன்றைக்கு வெள்ளிக்கிழமையாக இருக்கும். வீட்டில் மங்களகரமாக நாலு ஸ்லோகம் சொல்றத விட்டுட்டு இந்த எளவு விசாரணை. கதை கேக்கற சுவாரஸ்யத்தில நாளாவது, கிழமையாவது?

சிலர் அவர்கள் வழக்கமாகப் போகும் டாக்டருக்கு போன் செய்து “டாக்டர், வயிற்றில் இடது புறமாக வலிக்கிறது, அன்றைக்கு கொடுத்தீர்களே, அந்த மருந்தைச் சாப்பிடலாமா என்று கேட்பார்கள். என்ன அட்வைஸ் சொல்ல முடியும்? நேரில் பார்க்காமல் ஒன்றும் சொல்ல முடியாதம்மா, நேர்ல வாங்கன்னு சொன்னா, “பார்மசியில கேட்டாக் குடுக்கறான், இந்த டாக்டருக்கு கொம்பு மொளச்சிடுச்சு”, என்று பேசும் மக்கள்தான் அதிகம். இப்படிப்பட்ட சாவு கிராக்கிகள் வராததே நல்லதுக்குத்தான் என்றுதான் பெரும்பாலான டாக்டர்கள் நினைப்பார்கள்.

என்னைப் பொருத்தவரையில் நான் போனில் சொல்லவேண்டியவற்றை சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிடும் வழக்கமுடையவன். சிலர் அவர்களின் வீட்டுப் பிரச்சினைகளால் ஏற்படும் டென்ஷனைக் குறைக்க இந்தப் போனைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் பேசுவது நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லையென்றாலும் கடனே என்று கேட்டுத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் போன் பேசுவதில் ஒரு பண்பு, எட்டிக்கெட், என்னவென்றால், யார் கூப்பிடுகிறார்களோ அவர்கள்தான் பேச்சை முடித்து போனைக் கட் செய்யவேண்டும்.

என்னுடைய நண்பர்கள் இருவர் இப்படி போனில் ஒரு நிமிஷம் பேசவேண்டியதை ஒன்பது நிமிஷம் பேசுவார்கள். அவர்கள் பேசும்போது நாம் சும்மாவும் இருக்கமுடியாது. “ஊம்”, “அப்படியா”, “அப்புறம்”, இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும். இல்லாவிட்டால், என்ன, கேட்டுட்டு இருக்கீங்களா, இல்லே தூங்கிட்டீங்களா, என்று கேள்வி வேறு வரும். இப்படியாக தடவைக்கு ஒரு அரை மணி நேரமாவது அறுப்பார்கள். விஷயம் ஒன்றுமிருக்காது.    

இதில் சமீபத்தில் நடந்த ஒரு சோகத்தைக் கேளுங்கள். “குதிரை கீழே தள்ளியதுவுமில்லாமல் குழியும் பறித்ததாம்” என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இவர்கள் தங்கள் டென்ஷனைக் குறைக்க ஏதோ பேசுகிறார்களே என்று அனுதாபப்பட்டு கேட்கப்போக, என் மீது அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார்கள். அதாவது, நான் அவர்களுடன் போனில் பேசினால் சீக்கிரம் கட் பண்ணி விடுகிறேன், அவர்கள் என்னுடன் பேசினால் நீண்ட நேரம் பேச அவர்களைத் தூண்டுகிறேன், என்று கூறினார்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருப்போமே என்று பேச்சைக் கேட்கப்போக, குற்றச்சாட்டு என் பேரிலேயே திரும்பி விட்டது. அதாவது அவர்கள் சொல்வது என்னவென்றால் நான் “அடுத்த வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே” என்று அலைகிறேன் என்பதை இவ்வாறு சொல்லி விட்டார்கள். அடுத்தவன் காசில் அனுபவிக்கிற ஜாதி என்பதை இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.

நான் “எனக்கு வேண்டும், இவர்கள் பேரில் அனுதாபம் காட்டியதிற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என்று என் தலைவிதியை நொந்து கொண்டு இனி மேலாவது புத்தியாய் பிழைக்கவேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்துகொண்டேன்.

இந்த நிகழ்ச்சியின் நீதி என்னவென்றால், எந்த வயதிலும் கற்றுக்கொள்ள விஷயங்கள் உண்டு என்பதுதான்.

புதன், 30 மார்ச், 2011

சேவைகளும் சேவைக்களங்களும்



வழுக்கைத் தலைக்காரர் ஒருவர் ஹேர் கட்டிங் சலூனுக்குப் போனால் நாம் என்ன சொல்வோம்- “ இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை” – என்று சொல்வோம். 
நீதி: முடி இருக்கிறவன்தான் அதை வெட்டிக்கொள்ள சலூனுக்குப் போகவேண்டும். 

அதே மாதிரி ஒருவனுக்கு பேங்க்கில் கணக்கே கிடையாது, அவன் நான் பேங்கில் பணம் எடுக்கப்போகிறேன் என்றால் என்ன சொல்ல முடியும்? (கொள்ளையடிப்பது இதில் சேராது). 
நீதி: பேங்கில் கணக்கு இருந்தால்தான் பணம் எடுக்க முடியும்.

இது வரையிலும் நான் சொன்னது புரிகிறதா? புரிந்தால் மேலே படியுங்கள். புரியாவிட்டால் அடுத்த பிளாக்கிற்குப் போங்கள்.

அது போல் எலக்ஷ்ன் சமயத்தில் சொல்வதற்கு நல்ல, மக்களின் மனதைக் கவரக்கூடிய இனிமையான கோஷங்கள் வேண்டும்.

உதாரணமாக- 
வறுமைக் கோட்டை அழிப்பேன்.
லஞ்சத்தை ஒழிப்பேன்.
குடிசைகளை மாளிகைகள் ஆக்குவேன்.
எல்லோருக்கும் வேலை கொடுப்பேன்.

இந்தக் கோஷங்களெல்லாம் எவ்வளவு இனிமையாக இருக்கின்றன? காதில் விழும்போது தேன் பாய்வது போல் இருக்கிறதல்லவா?. இவைகள் எல்லாம் எப்போது சாத்தியப்படும்?  
வறுமை இல்லாவிட்டால் வறுமையை அழிப்பது எப்படி?           லஞ்சம் இல்லாவிட்டால் அதை ஒழிப்பது எப்படி?               குடிசைகள் இல்லாவிட்டால் அவைகளை எப்படி மாளிகைகள் ஆக்க முடியும்?

மாக்களே, கவலைப்படாதீர்கள். இவைகள் நம் நாட்டில் என்றும் சிரஞ்சீவியாய் இருக்கும்.


செவ்வாய், 29 மார்ச், 2011

இலவசங்களை குறை கூறாதீர்கள். அது தேசத்துரோகம்.


சரித்திரம் படித்தவர்கள் பிரெஞ்சுப் புரட்சி பற்றியும் ரஷ்யப் புரட்சி பற்றியும் படித்திருப்பார்கள். அந்தப் புரட்சிகளின் பின்னணி பற்றியும் நன்கு அறிந்திருப்பார்கள். சமீபத்தில் எகிப்தில் நடந்த மக்கள் எழுச்சி பற்றி எல்லோரும் செய்தித் தாள்களில் படித்துக் கொண்டிருந்தோம்.
சரித்திரம் படிப்பதின் நோக்கமே, நம் முந்தைய தலைமுறையினர் எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்கள் செய்த தவறுகள் என்ன, அந்த தவறுகளிலிருந்து நாம் நம்மை எவ்வாறு காத்துக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளத்தான். இந்த தத்துவத்தில் யாருக்கும் ஐயப்பாடு இருக்காதென்று நம்புகிறேன்.

எகிப்திய மன்னர் இந்தத் தத்துவத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டார் என்று நினைக்கிறேன். அல்லது தம் மக்கள் ராஜ விசுவாசம் மாற மாட்டார்கள் என்ற மயக்கத்தில் இருந்து விட்டார் என்று நினைக்கிறேன்.

ஆனால் நம் நாட்டு அரசியல் வாதிகள் இந்தத் தத்துவத்தை நன்கு புரிந்தவர்கள். அதாவது மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துள்ளார்கள். மக்களுக்கு வயிறு எப்போது காய்ந்து போகிறதோ அப்போதுதான் புரட்சிக்கான விளை நிலம் உருவாகிறது. பல சமயங்களில் வயிறு நிறைந்திருந்தாலும் அவன் சும்மா இருந்தால் அவன் மனதில் வேண்டாத எண்ணங்கள் தோன்றும். இப்படி பலர் சிந்திக்க ஆரம்பிப்பது நல்லதல்ல. அவர்களை எப்போதும் ஒருவித மயக்கத்திலேயே வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் நாட்டில் அமைதி நிலவும். ஆட்சியாளர்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இருக்காது.

அப்படி வைத்திருந்தாலும், இந்தப் படித்த முட்டாள்கள் இருக்கிறார்களே, அவர்கள்தான் அவ்வப்போது குட்டையைக் குழப்பிக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் அவர்களை ஒரு கட்சிக்கும் பிடிப்பதில்லை. ஆனால் ஒரு நல்ல காலம், அவ்வாறு படித்த சிந்தனையாளர்கள் அதிகமாக உருவாவதில்லை. அப்படி ஒன்று இரண்டு உருவாகும்போது அவர்களை எப்படி கையாளவேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும்.

இந்த சூழ்நிலையை நிலை நிறுத்தத்தான் இலவசங்கள். கிராமிய வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் வேலை செய்யாமல் காசு கிடைக்கிறது. சலீசாக அரிசி கிடைக்கிறது. பொழுது போக்க டி.வி. யும் டாஸ்மாக்கும் இருக்கின்றன. குடிசைமாற்றுத் திட்டத்தின் மூலம் குடியிருக்க வீடு கிடைக்கிறது. இந்த நிலையில் புரட்சியாவது மண்ணாங்கட்டியாவது?
ஆகவே இலவசங்களின் நன்மையைப் புரிந்து கொண்டீர்களா? இனியாவது இலவசத்தைக் குறை கூறாமல் அவைகளை வாங்கி அனுபவியுங்கள். வாழ்க இலவசம். வாழ்க குடி மக்கள்!