செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

ஆஹா, காதல் வந்திருச்சு

                             Image result for income tax logo

"ஆஹா, காதல் வந்திருச்சு"

இந்தப் பாட்டை கமலஹாசன் பாடுவாரே, அது எந்தப் படமுங்க? இருங்க யோசிக்கிறேன். வயசாயிருச்சுங்களா, சட்டுனு கியாபகம் வரமாட்டேங்கிறது.

வந்திருச்சு "ஜப்பானில் கல்யாணராமன்" அந்தப் படத்தில கமலஹாசன் "ஆஹா காதல் வந்திருச்சு" அப்படீன்னு ஒரு பாடல் பாடுவார். அந்தப் பாடலைக் கேட்டிராதவர்களுக்காக ஒரு லிங்க் -



இப்போ ஏன் அந்த நெனப்பு வந்திருச்சு பெரிசு, எளம திரும்புதாங்காட்டியும்னு ஏசாதீங்க.

மார்ச் மாதம் என்பது மாதச் சம்பளக்காரர்களுக்கு ஒரு எமகண்டம். ஏனெனில் அப்போதுதான் வருடாந்திரக் கணக்குகளைப் பார்த்து வருமானவரி கட்டவேண்டிய நேரம். ரொம்பக் கஷ்டமான சமாச்சாரம். அதுக்காகத்தான் கமலஹாசன்-ஸ்ரீதேவி காதல் பாட்டைப் போட்டேன். எதுக்கும் இன்னொரு முறை அந்தப் பாட்டைக் கேட்டுருங்க. ஏன்னா நான் இனிமேல் சொல்லப்போவது ரொம்பவும் கசப்பான சமாச்சாரங்கள்.

எவ்வளவு கசப்பாக இருந்தாலும் குடித்தே தீரவேண்டிய கஷாயம் இந்த வருமானவரி சமாச்சாரம். இதில் ஒரு விசேஷமான செய்தி என்னவென்றால் வருமான வரியைப் பற்றி நீங்கள் எவ்வளவு குறைவாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்களோ அந்த அளவிற்கு நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம். நாளைக்கு வருமான வரிக்காரன் என்ன கேட்டாலும் அது எனக்குத் தெரியாதே என்று கூறி விடலாம். இதற்கு முன்னால் பல அரசியல் வாதிகள் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று சட்டத்திற்குட்பட்டு  வருமான வரியைக் குறைப்பது.  இரண்டாவது வருமானவரி கட்டாமல் ஏய்ப்பது. உங்களுக்கு எந்த வழி சுலபமாகத் தோன்றுகிறதோ அந்த வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மாட்டிக்கொள்ளாத வரையில் இரண்டு வழிகளும் சரியானவைகளே. மாட்டிக்கொண்டால் உங்கள் மாமனார் பிரபல வக்கீல் ஆக இருந்தால் ஒழிய நீங்கள் தலையில் துண்டு போட்டுக்கொள்ளவேண்டி வரும். அவ்வளவுதான்.

வங்கியில் ஒரு வருடம் இரண்டு வருடம் சேமிக்க டெபாசிட் திட்டங்கள் உண்டு. இவற்றிற்கு 8 முதல் 9 சதம் வரை வட்டி கிடைக்கும். நம்ம பணம், நம்ம வட்டி, உனக்கு எதற்கு வரி என்று கட்டபொம்மன் பாணியில் கேட்டுக்கொண்டு இந்த வட்டியைக் கணக்கில் காட்டாமல் இருந்தீர்களோ, வம்பு அழையா விருந்தாளியாக வந்துவிடும். எல்லாம் "பான்" ( PAN ) எண் உபயம். உங்களுக்குக் கொடுக்கும் வட்டிக்கணக்கையெல்லாம் வங்கிக்காரன் இந்த எண்ணில் ஏற்றிவிடுவான். வருமான வரிக்காரன் இதைப் பார்த்துத்தான் உங்களுக்கு ஆப்பு வைப்பான்.

அநேகமாக நீங்கள் கட்டவேண்டிய வரி 10000 ரூபாய்க்குள் இருந்தால் மொத்த வரியையும் மார்ச் மாதத்தில் கட்டிவிட்டால் போதும். அதற்கு அதிகமாக இருந்தால் செப்டம்பர், டிசம்பர், மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் மூன்று தவணைகளாகக் கட்டியிருக்கவேண்டும். அப்படிக் கட்டாமலிருந்தால், உங்கள் வருமானவரிக் கணக்கை வருமானவரி அதிகாரி தணிக்கைக்கு எடுத்துக் கொண்டால் அபராத வட்டி கட்டவேண்டி வரும்.

இதில் ஒரு நுணுக்கம் என்னவென்றால் நம் போன்ற மாத வருமானக்- காரர்களை வருமான வரித்துறை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நாம் கட்டும் வருமான வரி நமக்குத்தான் பெரிதாகத் தோன்றுகிறதே தவிர அவர்களுக்கு இந்தத் தொகை பிச்சைக்காசுக்கு சமம். லட்சக் கணக்கில் வரி கட்டும் பணக்காரர்கள் இருக்கும் நாடு நம்முடையது. நம் நாட்டு சினிமா நடிகர்கள் வைத்திருக்கும் வரி பாக்கிக் கணக்கைப் பார்த்தால் நம் நாட்டை ஏழை நாடு என்று எவனுக்காவது சொல்லத்தோணுமா?

உலக வங்கிக்காரன் கிட்ட கடன் கேட்கப் போகும்போது இத்தனாம் பெரிய நாட்டில் இத்தனை கோடி ஜனங்கள் இருக்கும் போது ஏன் இவ்வளவு கொஞ்சம் பேர்தான் வருமான வரி கட்டுகிறார்கள் என்று கேட்பான். அதுக்காகத்தான் நம்மை மாதிரி அன்றாடம் காய்ச்சிகளிடமும் வருமான வரி வாங்குகிறார்கள்.

நம் வருமான வரிக் கணக்கை தணிக்கை செய்வதே ஏதோ ஒரு அருவருப்பானதைத் தொடுகிற மாதிரித்தான் நினைக்கிறார்கள். ஆனாலும் உங்கள் ஜாதகப் பிரகாரம் உங்களுக்கு சனி திசை ஆரம்பிக்கிறது என்றால், உங்கள் வருமானவரிக் கணக்கு தணிக்கைக்கு எடுக்கப்பட்டு விடும். ஏனெனில் அவர்களுக்கும் வேலை செய்வதற்கு ஒரு இலக்கு வைத்திருக்கிறார்கள். பிச்சைக்கார வருமான வரிக் கணக்குகளில் இத்தனை கணக்குகளை தணிக்கை செய்யவேண்டும் என்ற இலக்கு வைத்திருக்கிறார்கள்.

சாதரணமாக ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு வருமான வரி நிபுணர் இருப்பார். அவரை ஒழுங்காகக் கவனிக்க வேண்டிய முறையில் கவனித்தால் அவர் உங்கள் வருமான வரிப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து விடுவார். இல்லையென்றால் நீங்கள் உங்கள் தலை விதியை நம்பி, சீட்டுக் குலுக்கிப் போட்டு எது உங்களுக்கு சௌகரியமோ அந்த மாதிரி செய்து கொள்ளலாம். விதி வலிது. விதியை யாரால் மாற்ற முடியும்?

ஒரு கொசுறு தகவல் - மும்பையில் வருமான வரி கட்டும் பிச்சைக்காரர்களும் இருக்கிறார்கள் என்று கேள்வி.  நம்மைப் போன்ற பிச்சைக்காரர்கள் இல்லை. நிஜப் பிச்சைக்காரர்கள்.

23 கருத்துகள்:

  1. மாதா மாதம் வரி கட்டி விடும் மாதச் சம்பளக்காரர்களை கௌரவிக்க வேண்டாம், இப்படி தொல்லை செய்யாமலிருந்தால் போதாதோ.. குஷ்டம்... ச்சே.. கஷ்டம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருமான வரி கட்டுவது எவ்வளவு எரிச்சல்தரும் சமாச்சாரம் என்பது இப்போது புரிகிறது.

      நீக்கு
    2. அந்த எரிச்சல் அடங்கவே அடங்காத எரிச்சல்.
      எத்தனை ஜெலூசில் மாத்திரை சாப்பிட்டாலும் போகாத எரிச்சல்.
      அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அந்த எரிச்சல்.

      திருச்சி தாரு

      நீக்கு
  2. சட்டத்திற்குட்பட்டு நடக்கவிட்டால் மும்பைக்கு செல்ல வேண்டியது தான்... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மும்பை செல்வதற்கு காசு வேண்டுமே. அதற்காகவாவது வருமான வரி கட்டாமல் பணம் மிச்சம் பிடிக்க வேண்டும்.
      பிறகு மும்பையில் பிச்சைக்காரராக "உழைத்து" பணம் சம்பாதித்து அபராத தொகையோடு வரி கட்டிக்கொள்ளலாம்.

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  3. மாத ஊதியத்திலேயே பிடித்து விடுகிறார்களே ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  4. //அநேகமாக நீங்கள் கட்டவேண்டிய வரி 10000 ரூபாய்க்குள் இருந்தால் மொத்த வரியையும் மார்ச் மாதத்தில் கட்டிவிட்டால் போதும். அதற்கு அதிகமாக இருந்தால் செப்டம்பர், டிசம்பர், மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் மூன்று தவணைகளாகக் கட்டியிருக்கவேண்டும்.//

    ஐயா, நம்மைப்போன்ற பணி ஓய்வு பெற்றோர் (பென்ஷன் வாங்குவோர்) ஆண்டுக்கான் வருமான வரியை ஆண்டு துவக்கத்திலேயே கணக்கிட்டு செப்டெம்பர் டிசம்பர் மார்ச் மாதங்களில் 15 தேதிக்குள் கட்டிவிடவேண்டும். மொத்தமாக மார்ச் மாதத்தில் கட்டினால் வருமான வரித்துறை அபராத வட்டி வசூலித்துவிடுவார்கள். மாத சம்பளக்காரர்களுக்கு அவர்கள் அலுவலகத்திலேயே மாதாமாதம் பிடித்து அடுத்த மாதம் 7 ஆம் தேதிக்குள் கட்டவேண்டும். இல்லாவிடில் மொத்தமாக கட்டினால் அந்த அலுவலக அதிகாரிகள் அபராத வட்டி கட்டவேண்டி வரும். சிறைத்தண்டனை தரவும் சட்டத்தில் இடம் உள்ளது,

    எனவே சட்டத்திற்குட்பட்டு வருமான வரியைக் கட்டுவதே நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இந்த அபராத வட்டி நேற்றுத்தான் கட்டினேன்.

      நீக்கு
    2. நீங்களுமா வரி கட்டாமல் இருந்து விட்டீர்கள்? மறந்து விட்டீர்களா?

      சேலம் குரு

      நீக்கு
  5. இந்த சமயத்தில் சுப்ரமணிய சாமி சொன்ன ஒரு கருத்தை அருண் ஜெட்லி அவர்கள் பரிசீலித்தால் நன்றாக இருக்கும். "நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சுமார் 83000 கோடி வந்திருக்கிறது (இன்னும் பாதி ஒதுக்கீடு கூட முடியவில்லை) இன்னமும் 2G,3G அலை கற்றை ஒதுக்கீடுகள் வேறு இருக்கின்றன. இவ்வளவு வருமானம் இருக்கையில் வருமான வரி வசூலிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். இது வருமான வரி கட்டும் நடுத்தர மக்கள் வயிற்றில் பாலை வார்ப்பது போல இருக்கிறது. முழுவதுமாக எடுக்கிறாரோ இல்லையோ, நல்ல மாதிரி வரி விகிதங்களை குறைத்து பட்ஜெட் அறிவித்தால் நன்றாக இருக்கும்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  6. நம்ம நாடு ஏழை நாடு இல்லை. சமீபத்திய செய்தியின்படி கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் நமது நாடு மூன்றாவது இடம். இதை வெளியிட்டவர்கள் ஏழைகளின் எண்ணிக்கையில் நமது நாடு எத்தனையாவது இடம் என்பதை வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  7. இப்படி பிப்ரவரி கடைசியில் வரி போடும் பட்ஜெட் தாக்கல் செய்வதால்தான், ஜனவரி, பிப்ரவரி என்று சொன்னவர்கள் அடுத்து மார்ச்சுவரி என்று சொல்லாமல் மார்ச் என்று சொல்லி விட்டார்கள். வரி போடத்தான் அரசாங்கம் இருக்கிறதே.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதங்களுக்கு நாமகரணம் சூட்டியவர்களுக்கு நன்கு தெரியும் போலிருக்கிறது. அரசாங்கம் பிப்ரவரி பட்ஜெட்டில் வரி போட்டு ஜனங்களை மார்ச்சுவரிக்கு அனுப்பிவிடும் என்பதால்தான் ஜனவரி, பிப்ரவரி என்று சொல்லிவிட்டு பின்பு மார்ச் என்று நிறுத்திவிட்டார்கள். ஒரே வேலையை ரெண்டு பேர் செய்யக்கூடாதல்லவா?

      சேலம் குரு

      நீக்கு
  8. //நாம் கட்டும் வருமான வரி நமக்குத்தான் பெரிதாகத் தோன்றுகிறதே தவிர அவர்களுக்கு இந்தத் தொகை பிச்சைக்காசுக்கு சமம்//
    முற்றிலும் உண்மைதான். நம்முடைய கணக்கை சரிபார்த்து "ஏமாற்றியதாக" நாம் நினைத்துக்கொண்டிருக்கும் பணத்தை வசூல் செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு பேர் வண்டியில் வந்து ஒரு நாள் முழுக்க வேலை செய்ய வேண்டும். அதற்கு ஆகும் செலவை விட நாம் ஏமாற்றிய தொகை கண்டிப்பாக குறைவாகத்தான் இருக்கும். எனவேதான் மாத சம்பளக்காரர்களை, தவறு தவறு, மாதாந்திர பிச்சைக்காரர்களை அவர்கள் தொந்திரவு செய்வதே இல்லை. என்னினும் அய்யா அவர்கள் சொல்வது போல நிர்ணயித்திருக்கும் இலக்கை அடைய சில பேரை தொந்திரவு செய்வார்கள். அதில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க சனிதோறும் நவகிரகங்களை சுற்றுங்கள் சரியாகிவிடும்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  9. //உலக வங்கிக்காரன் கிட்ட கடன் கேட்கப் போகும்போது இத்தனாம் பெரிய நாட்டில் இத்தனை கோடி ஜனங்கள் இருக்கும் போது ஏன் இவ்வளவு கொஞ்சம் பேர்தான் வருமான வரி கட்டுகிறார்கள் என்று கேட்பான்.//
    உலக வங்கிக்காரனிடம் கடன் வாங்க இதெல்லாம் செய்ய வேண்டுமா? . போகிற போக்கை பார்த்தால் இன்னமும் என்னென்ன கேட்பான் என்றே தெரிய வில்லையே. பேசாமல் கடனும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று இருந்து விட்டு போகலாம்

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  10. //உங்களுக்கு எந்த வழி சுலபமாகத் தோன்றுகிறதோ அந்த வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்//
    நம்மை போன்ற மாத வருமானக்காரர்கள் எல்லாம் பயந்தவர்கள். அதிகாரிகள் அந்தப்பக்கம் வருகிறார்கள் என்றால் இந்தப்பக்கம் ஓடுகிறவர்கள். நியாயத்துக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள். எனவே ஒரு பேச்சுக்கு ஏமாற்றலாம் என்று நினைக்கலாமே ஒழிய அனைவரும் ஒழுங்காக வரி கட்டுபவர்கள்தான்.

    துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
  11. ஆஹா, காதல் வந்திருச்சுன்னு பாடலாம் சந்தோசபடலாம் என்றுதான் நினைத்தேன்.
    ஆனால் மனதோ ஆஹா, மார்ச்சு வந்திருச்சுன்னு சொல்லவும் அவ்வளவு சந்தோசமும் போயே விட்டது. ஒரு விளம்பரத்தில் சொல்வது மாதிரி IT'S GONE, போயே போய்விட்டது, என்று சந்தோசம் போய் கவலை வந்து உட்கார்ந்து கொண்டது.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  12. ஹா ஹா இதற்காகத்தான் நான் இன்னும் வேலைக்கே போகவில்லை. வருமானம் இருந்தால்தானே வருமான வரி. எப்படி என் சாமார்த்தியம்?

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  13. ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம். வருமானம் வருபவர்களிடம் இருந்து வருமான வரி வாங்குகிறார்கள். வருமானமே இல்லாதவர்களுக்கு பணம் கொடுக்க ஒரு இலாகா ஆரம்பித்தால் என்ன?. அந்த இலாகா கொஞ்சம் அதிகமா பணம் கொடுத்தால் - வருமான வரி கட்டும் அளவுக்கு - நான் ஏமாற்றாமல் வரி கட்டி விடுகிறேன். ஏற்பாடு செய்ய முடியுமா?

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  14. அருமையான் விளக்கங்கள்....
    மாதாந்திர சம்பளக்காரர்களை
    மார்ச் மாதம் மார்ச் சுவரியில் படுக்க வைத்திடும்.
    தம5

    பதிலளிநீக்கு
  15. நல்ல பகிர்வு. மாதாமாதம் வருமான வரி கட்டினாலும் மார்ச் மாதத்தில் அனைத்தையும் சரி பார்ப்பதே பெரிய தொல்லை! இருந்தாலும், நீங்கள் சொன்னது போல வரி கட்டாதவர்கள் பல பெருந்தலைகள் இருக்க, நம்மைப் போன்றவர்களைத் தான் பிடித்து வருத்து எடுக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  16. நல்ல தகவல்....பகிர்வுக்கு நன்றி...

    மலர்

    பதிலளிநீக்கு