திங்கள், 13 ஜூன், 2011

சாலை விபத்துகள் ஏன் நடக்கின்றன?



சமீப காலங்களில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு காரணமாக இருந்தாலும், பெரும்பாலான விபத்துக்களில் மனிதக் கவனக் குறைபாடே காரணமாக அமைகின்றன. நான் பல ஆண்டுகளாக இந்த விபத்துகளை கவனித்துக்கொண்டு வருகிறேன். பொதுவான சில காரணிகள் என் மனதிற்குத் தோன்றின. அவைகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

1.   அவசரம்: நேரம் பொன்னானதுதான். ஆனால் உயிர் அதனினும் மேலானதல்லவா? இந்த உண்மையை அநேகர் புறக்கணிப்பதால் ஏற்படும் விபத்துகள்தான் அநேகம். சமீபத்தில் ஒரு மந்திரி இறந்தது இதனால்தான். சரியானபடி திட்டமிட்டு நிதானமாக பயணிக்கவேண்டும். சீக்கிரம், சீக்கிரம் என்று அவசரப்பட்டு யமலோகத்திற்கு சீக்கிரம் போக்கூடாது.
சீக்கிரம் போகவேண்டுமென்று அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டும்போது பல தவறுகள் நிகழும். அதனால் நிச்சயமாக விபத்துகள் ஏற்படும்.

2.   உடல் சோர்வு: உடலுக்கு ஓய்வு கொடுக்காவிட்டால் அது ஒரு கட்டத்தில் நம் அனுமதி கேட்காமலேயே ஓய்வு எடுத்துக்கொள்ள முயலும். இது உடலின் இயற்கை. இயற்கை விதிகளை மீறுவதால் ஏற்படும் அனர்த்தங்களை வேறு பல சூழ்நிலைகளிலும் காண்கிறோம். வாகனம் ஓட்டும்போது இந்த நிலை ஏற்பட்டால் அது நிச்சயமாக விபத்தை உண்டாக்கும்.
ஆனால் பலர் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துக் கொள்கிறார்கள். சொந்த சிலவில் சூன்யம் வைத்துக்கொள்பவர்களை என்ன செய்ய முடியும்?

3.   தூக்கமின்மை: வழக்கமாக வாடகை வண்டி ஓட்டுபவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக தூக்கத்தை தியாகம் செய்கிறார்கள். அது உயிர்த் தியாகத்தில் முடியும் என்பதை உணறுவதில்லை. எவ்வளவுதான் அனுபவம் உள்ள ஓட்டுநர்களானாலும் அவர்களின் உடம்பும் மற்றவர்களின் உடம்பு மாதிரிதானே?

அறுபது கிலோமீட்டர் வேகத்தில் போகும் வாகனம் நிமிடத்திற்கு ஒரு கிலோமீட்டர் போகும், அதாவது ஒரு விநாடிக்கு 16.7 மீட்டர் அல்லது ஏறக்குறைய 50 அடி தூரம். ஓட்டுபவர் ஒரு விநாடி கண் மூடினால் வாகனம் 50 அடி சென்றுவிடும். அந்த 50 அடிக்குள் ஒரு பாலம் இருக்கலாம். அல்லது ஒரு வளைவு இருக்கலாம். அதைக் கவனிக்க முடியாததால் விபத்து ஏற்படலாம்.

4.   தேவையற்ற ரிஸ்க்: ஒருவர் சென்னையில் வியாபாரியாக இருக்கலாம். சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை அவருடைய சொந்தங்கள் ஒரு விசேஷம் வைத்திருந்தால், அவர் என்ன செய்வார் என்றால் – சனிக்கிழமை வியாபாரத்தை முடித்துவிட்டு 11 மணிக்கு ஒரு டாக்சியில் புறப்படுவார். அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை ஊருக்குப்போய் அந்த விசேஷத்தைப் பார்த்துவிட்டு, அன்று இரவே அங்கிருந்து புறப்பட்டு திங்கள் அதிகாலை சென்னை வந்து சேர்ந்து வழக்கம்போல் வியாபாரத்தைக் கவனிப்பதாகத் திட்டம்.

திட்டம் என்னமோ நல்ல திட்டம்தான். ஆனால் அந்த ஓட்டுநர் சனி பகல் முழுவதும் வேலை செய்திருக்கக் கூடும். அவருடைய முதலாளி வரும் கிராக்கியை விட மனமில்லாமல் இந்த ஒட்டுநரையே அனுப்புவார். அவருக்கும் வேறு ஓட்டுநர் கைவசம் இருந்திருக்கமாட்டார். இந்த ஓட்டுநரும் கிடைக்கப்போகும் அதிக ஊதியத்திற்காக இந்த வேலையை ஒப்புக்கொள்வார்.

நிகழ்வதென்ன? விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதுதான்.

5.   வாகனத்தின் தன்மையை அறியாதிருத்தல்: வாடகை வண்டிகள் ஓட்டும் ஓட்டுநர்கள் வழக்கமாக ஒரே வண்டியைத்தான் ஓட்டுவார்கள். அப்போதுதான் அவர்களுக்கு அந்த வண்டியின் நெளிவு சுளிவுகள் நன்றாகத் தெரிந்திருக்கும். சில சமயம் அவர்கள் வேறு வண்டிகளை ஓட்டவேண்டிவரும். அப்போது அவர்கள் மிகுந்த கவனத்துடன் அந்த வண்டியை ஓட்டவேண்டும். ஆனால் அதிக அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள் பழைய வண்டி ஞாபகத்திலேயே ஓட்டுவார்கள்.

இதுவும் விபத்துக்களை ஏற்படுத்தும்.

6.   அதிக பயணிகள்: சொந்த வாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் அனுபவத்தில் கண்டிருப்பார்கள். வாகனத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாகனம் ஓட்டும்போது மிகுந்த வித்தியாசம் தெரியும். வாகனத்தின் வேகம் மிகக் குறையும். திருப்பங்களில் வண்டி அதிகமாக சாயும். இந்த வித்தியாசங்களைக் கண்டுகொள்ளாமல் வாகனத்தை ஓட்டும்போது பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பயணிகள் மட்டுமல்ல. அதிக பாரம் ஏற்றினாலும் இதே நிலைதான்.

7.   செல்போன்: விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் மிகக் குறுகிய காலத்தில் அதிகம் பேர் உபயோகப்படுத்தும் பொருள்களில் செல்போன்தான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. சரியாக உபயோகித்தால் மிகவும் பயன் தரக்கூடிய சாதனம். ஆனால் இதுவே, முறையற்ற பயன்பாட்டினால் பல அனர்த்தங்களை விளைவிக்கக் கூடியது.

எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் செல்போன் அழைப்பு வந்தால் அந்த வேலையை விட்டுவிட்டு செல்போன் பேசுகிறார்கள். செல்போன் பேசிக்கொண்டே ரோட்டில் நடக்கிறார்கள். ரயில்வே லைனை கிராஸ் செய்கிறார்கள். கார், பஸெ ஓட்டுகிறார்கள்.
ஆங்காங்கே வைத்திருக்கும் போர்டுகளில் ‘’ செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள் ‘’ என்று விளம்பரம் வைத்திருக்கிறார்கள். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல்தான் எல்லோரும் நடந்துகொள்கிறார்கள். விபத்துகளை சம்பாதிக்கிறார்கள். எந்த சுவற்றில் முட்டிக்கொள்வது? 

8.   ஆணவம் அல்லது Road Rage: நல்ல சாதுவான, பொறுமையான மனிதர்கள் கூட வாகனம் ஓட்டும்போது தங்கள் இயல்புக்கு மாறாக நடந்துகொள்கிறார்கள் என்று சர்வதேச ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பின்னால் வரும் ஓட்டுநர் ஹார்ன் அடித்தாலோ அல்லது நம் வண்டியை நம் அனுமதியின்றி ஓவர்டேக் செய்தாலோ பெரும்பாலான
சமயங்களில் நம் ஆணவம் மேலோங்குகிறது. அப்போது நாம் நம் இயல்பை மறந்து பல தவறுகள் செய்கிறோம். இது விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.

9.   சாலை விதிகளைக் கடைப்பிடியாமை: சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது. அல்லது அவை போலீஸ்காரர் இருக்கும்போது மட்டும்தான் அமலில் உள்ளவை என்று நினைக்கிறோம். மேலை நாடுகளில் நடு இரவில் கூட சிகப்பு விளக்குக்கு வண்டிகள் நின்றுதான் செல்லும் என்று கேள்விப்படுகிறோம். அவர்கள் மடையர்கள் என்று கூட சிலர் நினைக்கலாம்.

சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்ற எண்ணம் நம்மிடையே இல்லை. அது மட்டுமல்ல. எந்த விதிகளுமே நமக்குப் பொருந்தாது என்கிற மனப்பான்மையை இன்றைய அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதைப் படிப்பவர்களில் யாராவது ஒருவராவது மனம் மாறினால் ஒரு உயிரைக் காப்பாற்றிய புண்ணியம் எனக்கு சேரும்.

சனி, 4 ஜூன், 2011

இந்தியாவின் சனி இன்றோடு ஒழிந்தது

இந்த போட்டோவைப் பார்த்த பிறகும் இந்திய நாட்டு சனியான லஞ்சம் ஒழியவில்லை என்று யாராவது நினைத்தால் அவர்கள் கீழ்ப்பாக்கம் செல்லவேண்டியவர்கள்.



செவ்வாய், 31 மே, 2011

ரோட்டில் மரணமடையாமல் நடந்து வீட்டுக்குத் திரும்புவது எப்படி?


 (வயதானவர்களுக்கு மட்டுமான பதிவு. மற்றவர்களும் படிக்கலாம்)

விஞ்ஞான வளர்ச்சியில் பல மாற்றங்களை நாம் காண்கிறோம். அவைகளில் பல விஷயங்கள்  நமக்குத் தேவைப்படுவதில்லை. ஆகவே அவைகளைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. குறிப்பாக கணினிகள். மைக்ரோவேவ் அவன்கள், மேக்கப் சாதனங்கள், அவைகள் எதற்குப் பயன்படும் என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

ஆனால், நாம் ஏதாவது ஒரு காரணத்திற்காக வீட்டைவிட்டு வெளியில் போய் வர வேண்டியிருக்கிறது. அந்த சமயங்களில் ரோடுகளில்தான் நடந்து போக வேண்டியிருக்கிறது. நம் இளம் வயதில் ரோடுகள் நடப்பதற்காக மட்டுமே உபயோகத்திலிருந்தது ஞாபகத்தில் இருக்கலாம்.. இரண்டு நண்பர்கள் சந்தித்தால் நடு ரோட்டில் நின்று குசலம் விசாரிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. சைக்கிள்கள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் வந்தால் அவை ஒதுங்கிப் போய்விடும். ஏதாவது வண்டிக்காரன் சத்தம் போட்டால், ஏனய்யா, ரோட்டில் இவ்வளவு இடம் இருக்கிறதே, தள்ளிப் போகவேண்டியதுதானே என்று கூசாமல் சொல்லியிருக்கிறோம்.

ஆனால் இன்றோ வாகனங்கள் பெருகிவிட்டன. நடுரோடில் நின்றால் அடுத்த நிமிடம் சட்டினி ஆகிவிடுவோம். ரோட்டில் நடப்பதே இன்று ஒரு தனி கலையாய் இருக்கிறது. அதில் நான் கற்ற சில நுணுக்கங்களை இங்கு கூறுகிறேன்.

1.   முதலில் ரோடு என்பது நடப்பவர்களுக்காக அல்ல என்பதை மனதில் கொள்ளவேண்டும். லாரி, பஸ்காரர்களின் தயவால்தான் நீங்கள் ரோட்டில் நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

2.   நடப்பவர்களுக்காகத்தான் ரோடுகளின் ஓரத்தில் பிளாட்பாரம் கட்டியிருக்கிறார்கள். அப்படி பிளாட்பாரம் கட்டாத ரோடுகளில் என்ன செய்வது என்று முட்டாள்தனமாக கேள்விகள் கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். அப்படி பிளாட்பாரம் இல்லாத ரோடுகள் மனிதர்கள் நடப்பதற்காக இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

3.   அந்தப் பிளாட்பாரங்களில் கடைகள் இருக்கும் அதற்கு முன்பாக ஐந்தாறு பேர் பீடி, சிகரட் குடித்துக்கொண்டு நின்றிருப்பார்கள். அது அவர்களின் தேசீய உரிமை. அவர்களைப்பார்த்து ஒரு சலாம் வைத்தால் போனால் போகிறது என்று கொஞ்சம் வழி விடுவார்கள். அந்த இடைவெளியில் ஜாக்கிரதையாக கீழே விழாமல் நடக்கவேண்டும்.

4.   எப்போதும் ரோடுகளில் இருக்கும் மரம். கரன்ட் கம்பங்கள் இவைகளின் பாதுகாப்பிலேயே நடக்க வேண்டும். அதாவது அந்த மரம், கம்பம் அவைகளுக்கும், கட்டிடங்களுக்கும் இடையிலேயே சாக்கடைக்குள் விழுந்து விடாமல் நடக்க வேண்டும்.

5.   பஸ் ஸ்டாப்புகளின் ஓரத்தில் நடக்கும்போது பஸ் வந்தால் உடனே ஓடி ஓளிந்து கொள்ளவேண்டும். பஸ் டிரைவர்களுக்கு பாதசாரிகள் அல்வா மாதிரி. எப்படியாவது அவர்கள் மேல் ஏற்றிவிடவே முயல்வார்கள்.

6.   மோட்டார் சைக்கிள் வீரர்கள் அனைவரும் யமனுடன் அக்ரீமென்ட் போட்டுவிட்டுத்தான் வெளியில் வருகிறார்கள். அதாவது ஒன்று அவர்கள் வீர மரணம் அடையவேண்டும் அல்லது யாரையாவது வீரமரணம் அடைய வைக்கவேண்டும். இவர்களை தூரத்தில் பார்த்தவுடன் ஏதாவது கடைக்குள் புகுந்து விடுவது உத்தமம்.

7.   ரோட்டின் வலது புறத்தில் பாதசாரிகள் நடக்க வேண்டுமென்பது சட்டம். அப்போதுதான் இடதுபுறமாக வரும் வாகனங்கள் எதிரில் வரும்போது அதற்கு ஏற்ப நாம் ஒளிந்து கொள்ளலாம். ஆனால் பின்னால் வரும் வாகனங்கள் நம் மீது மோதாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஒரு கனரக வாகனத்தை இன்னொரு கனரக வாகனம் ஓவர்டேக் செய்து கொண்டிருக்கும் போதே, அந்த இரண்டாவது வாகனத்தை மூன்றாவதாக ஒருவன் ஓவர்டேக் செய்வான். அவன் சத்தியமாக உங்கள் மீது மோதி உங்கள் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்வதற்கு வழி பண்ணுவான்.

இதையெல்லாம் தவிர்த்து நீங்கள் உயிருடன் வீட்டிற்குத் திரும்பி வந்து சேர்ந்தீர்களானால் அது நீங்கள் பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியம் என்று உண்ர்ந்து கொள்ளுங்கள்.

ஞாயிறு, 29 மே, 2011

கடன் வாங்குதல்


கடனைக்கண்டு சிலர் பயப்படுவார்கள். கடன் வாங்கினால் அதைத் திருப்பிக் கட்டுவது எப்படி? கட்டமுடியாமல் போனால் மானம் போகுமே! என்றெல்லாம் கவலைப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் கடன் வாங்க மாட்டார்கள். தங்கள் வரவுக்குள்ளேயே செலவைக் குறுக்கிக் கொள்வார்கள்.

பலர் இவ்வாறெல்லாம் கவலைப்படுவதில்லை.  இவர்கள் கடனைக்கண்டு பயப்படாதவர்கள்.  கடன்தானே இருக்கட்டுமே. அவனிடம் இருந்தால் அந்தப்பணம் சும்மாதானே இருக்கப்போகிறது. நம்மிடம் வந்ததால் அது பயனுள்ள பல வேலைகளைச் செய்கிறது. நல்ல விஷயம்தானே. இதற்கு ஏன் வீணாக உடம்பை அலட்டிக்கொள்வானேன்?

சரி, அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டாமா? என்றால் அது அவன் (கடன் கொடுத்தவன்) கவலை. நான் ஏன் அதைப் பற்றிக் கவலைப் படவேண்டும்? என்பார்கள்.

இதுதான் கலியுகம்!

செவ்வாய், 24 மே, 2011

மனித வாழ்வில் வக்கிரங்கள்



நடைமுறை வாழ்வில் பலதரப்பட்ட மனித இயல்புகளைப் பார்க்கிறோம். பெரும்பாலானவை நடைமுறை பண்புகளுக்கும் நாகரீகத்திற்கும் ஒத்துப் போகின்றன. சில சமயங்களில் மனித மனங்களின் வக்கிரங்களும் வெளிப்படுகின்றன. ஆனால் அதை நாம் வெளிச்சம் போட்டு விளம்பரம் செய்வதில்லை.

உண்மைதான் என்றாலும், எல்லா உண்மைகளையும், எல்லா இடங்களிலும் சொல்ல முடியாது. சொல்லத் தேவையுமில்லை. உண்மைகளையும் மறைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டு. இது ஒரு வகை நாகரிகம் அல்லது ஒரு வகை பண்பு என்று கூறலாம்.

பத்திரிக்கைகளில் பல செய்திகள் போடுகிறார்கள். சில செய்திகளைப் பார்த்துவிட்டு அடுத்த செய்திக்குப் போய்விடவேண்டும். அந்த செய்திகளைப் பற்றி விளம்பரப்படுத்த வேண்டியதில்லை. அதுவும் பதிவுலகம் மூலமாக இதைச் செய்ய வேண்டியதில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. 


சனி, 21 மே, 2011

மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பத்துக் கட்டளைகள்.


1.கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள்.  
 
எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

2.        ஒரு நேரம் ஒரு வேலையை மட்டுமே செய்யுங்கள்.

எட்டு வேலைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்துகொண்டிருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். என்ன செய்யவேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். மிக முக்கியமான விஷயங்களை முதலில் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை. போதுமான ஓய்வு நேரம் உங்கள் பட்டியலில் நிச்சயம் இருக்கட்டும்.

3.      உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை ஒதுக்குங்கள்.

இரைச்சல், வெளிச்சம், தாமதம், சிலவகை வாசனைகள், சில நபர்கள்………. இத்தியாதி….. இத்தியாதி என இந்தப்பட்டியல் எவ்வளவு பெரிதாக வேண்டுமானால் இருக்கலாம். முடிந்தவரை ஒதுக்குங்கள். ஒதுக்க முடியாத சூழல்களில் நீங்களே கொஞ்சம் ஒதுங்கிப் போய் விடுங்கள்.

4.       உடற்பயிற்சி செய்யுங்கள்.

ஆரோக்யமான உடல், மன அழுத்தத்தின் எதிரி. உடலில் ரத்த ஓட்டமும், ஆக்சிஜன் விநியோகமும் சீராக இருக்கும்போது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங், ஜாகிங், போன்றவையும் உங்கள் தினசரி அட்டவணையில் இடம் பெறட்டும்.

5.      தீய பழக்கங்களை கை கழுவி விடுங்கள்.

புகை, மது, போதை போன்றவைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகள்.

6.   எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

திருப்தியடையும் மனநிலை இருந்தால் வாழ்க்கை அழகாகும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருவதில்லை. காரணம் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

7.   ஒரு நல்ல பொழுதுபோக்கை கைவசம் வைத்திருங்கள்.

உங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாய் அது இருக்கட்டும். உங்களுடைய மனதை உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் வைத்திருக்க அது உதவும். குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது, செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது என தினமும் கொஞ்ச நேரம் செலவிடுங்கள்.

8.   பாசிடிவ் சிந்தனைகளை மனதில் கொண்டிருங்கள்.

நடந்து முடிந்த நிகழ்வுகளின் மோசமான பக்கங்களை அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

9.   சின்னச்சின்ன வெற்றிகளைக்கூட கொண்டாடுங்கள்.

சின்னச் சின்ன வெற்றிகளின் கூட்டுத்தொகையே பெரிய வெற்றி என்பதை மனதில் எழுதுங்கள்.

10. பிறருடன் நம்மை ஒப்பிடாதீர்கள்.

பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையற்ற மன அழுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கும். அவர்களுடைய வெற்றி, தோற்றம், அந்தஸ்து, பணம் என எதை ஒப்பிட்டாலும் அது உங்களுக்கு மன அழுத்தத்தையே தரும்.

நன்றி; தினத்தந்தி – இளைஞர் மலர், 21-5-2011.

ஞாயிறு, 15 மே, 2011

முட்டாள்கள் பலவிதம் – அதில் நான் ஒருவிதம்


முட்டாள்களில் பலவிதங்களைப் பார்த்திருப்பீர்கள். 
 
சிலரிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லி எல்லா விவரங்களையும் சொல்லியிருப்பீர்கள். அந்தக்காரியத்தை எந்தெந்த விதங்களில் சொதப்புவார்கள் என்று யூகித்து அதற்கெல்லாம் முன்னேற்பாடாக ஜாக்கிரதையெல்லாம் சொல்லியிருப்பீர்கள். அந்த ஆள் நம் ஜாதியாயிருக்கும் (முட்டாள் ஜாதி) பட்சத்தில் நீங்கள் முழுவதும் எதிர்பாராத ஒரு சொதப்பல் செய்து அந்தக் காரியத்தை உருப்படியில்லாமல் செய்வார். 

ஒரு ஜோக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒருவர் மற்றொருவருடன் சொல்லுகிறார். நான் எந்தத் தப்பையும் ஒரு தடவைக்கு மேல் செய்ய மாட்டேன் என்றார். அப்போது அங்கு வந்த அவர் நணபர் சொன்னார். அவர் சொல்வது சரிதான். ஆனால் அவர் செய்யாத தப்பே கிடையாது என்றார்.

நான் இந்த ஜாதியைச் சேர்ந்தவன், அதாவது எந்த தப்பையும் ஒரு தடவைக்கு மேல் செய்ய மாட்டேன். ஏறக்குறைய எல்லாத் தப்பையும் செய்து முடித்துவிட்டேன் என்ற திருப்தியில் இருந்தவனுக்கு ஒரு மரண அடி. என்ன நடந்தது என்று கேளுங்கள்.

என் தங்கை மகனுக்கு கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை. அவன் சம்சாரம் அவனுடன் ஏதோ கோபித்துக் கொண்டு அவளுடைய அம்மா வீட்டிற்குப் போய்விட்டாள். இதைக் கேள்விப்பட்டவுடன் நானும் எதார்த்தமாக நாலு நாள் போனால் அவள் அம்மா வீட்டிலிருந்து யாராவது கொண்டு வந்து விடுவார்கள் என்று எண்ணி, ஒரு டூர் போய்விட்டேன். ஒரு மாதம் கழித்து திரும்பி வந்தவுடன் கேட்டால், அந்தப் பெண் இன்னும் அம்மா வீட்டில்தான் இருக்கிறது என்று சொன்னார்கள்.

குடும்பத்தில் பெரியவன் நான். எப்படி சும்மா இருக்க முடியும். அங்கேயும் இங்கேயும் இரண்டு மூன்று தடவை நடந்து (காரில்தான்) என்னென்னவோ சமாதானங்கள் செய்து, அந்தப் பெண்ணைக் கூட்டி வந்து புருஷன் வீட்டில் விட்டு விட்டு, எனக்குத்தெரிந்த புத்திமதிகள் எல்லாம் எல்லோருக்கும் சொல்லி விட்டு வந்தேன். 

நான் செய்த இந்தக் காரியத்தில் ஏதாவது தவறு இருக்கிறதா, சொல்லுங்கள். சில நாட்கள் கழித்து ஒரு இடத்தில் அந்தப் பெண்ணின் அம்மாவைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டார்கள். என் தங்கை பையன் என்னிடம் சொல்லாமல் தனிக்குடித்தனம் போய் விட்டான். அவன் மாமனார் வீட்டில் இரண்டு நல்ல காரியங்கள் நடந்தன. எனக்கு அழைப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் என் தங்கை பையன், அவன் பெண்டாட்டி, அவன் மாமனார் வீட்டு ஆட்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை.

நான் செய்த காரியம் பிரிந்திருந்த புருஷன் மனைவியைச் சேர்த்து வைத்ததுதான். இது தவறா? ஆனால் நடக்கும் காரியங்களைக் கவனிக்கும் போது நான் செய்தது முட்டாள்தனம் என்றுதான் தோன்றுகிறது. 

ஞாயிறு, 8 மே, 2011

முதிர் காளைகள்


பல குடும்பங்களில் முதிர் கன்னிகள் இருப்பதைக்கண்டு மனம் வருந்துகிறோம். அதே மாதிரி பல குடும்பங்களில் முதிர் காளைகள் இருப்பதைப்பற்றி சில நாட்களுக்கு முன் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிலைக்கு பெரும்பாலும் ஜோதிடர்களே காரணம் என்றாலும், சில குடும்பங்களில் வேறு சில சுயநல எண்ணங்களும் காரணமாக அமைகின்றன.
 
அவர்கள் தங்களுடைய சுயநலத்தை மறைப்பதற்காக ஜோசியர்கள் மேல் பழியைப் போடுவார்கள். ஆனால் காரணம் தங்கள் சுயநலமே. கீழ்க்கண்ட காரணங்கள்தான் உண்மையானவை.
1.   பையன் தங்கள் பிடியிலிருந்து நழுவி, மாமியார் வீட்டுக்கோ அல்லது தனிக்குடித்தனமோ போய்விட்டால் தங்களுக்கு ஆதரவு இல்லாமல் போய்விடுமே என்கிற பயம்.
2.   பையனுக்கு குடும்பம், குழந்தைகள் என்று ஆகிவிட்டால், தாய் தந்தையரின் பேரில் உள்ள பாசம் குறைந்து தங்களை ஒதுக்கி விடுவானோ என்ற பயம்.
3.   தான் பெற்று வளர்த்து ஆளாக்கிய தன் மகன் இன்று நல்ல சம்பாத்தியம் பெறுவதை எங்கிருந்தோ வந்த ஒருத்தி அனுபவிப்பதா என்ற பொறாமை.
4.   தன் பையனை ஒருத்தி தன் முந்தானைக்குள் போட்டுக்கொள்வதை பொறுக்க மாட்டாமை.
இதற்கு ஒரே தீர்வு அந்தப் பையன் தனியாக தன் திருமணத்தைப் பற்றி முடிவு எடுப்பதுதான்.  

வெள்ளி, 6 மே, 2011

பேசும் முறை

பல சமயங்களில் நாம் ஒரு விஷயத்தை அடுத்தவர்களிடம் சொல்லும்போது, நேரடியாக விஷயத்தை சொல்லாமல் சுற்று வளைத்து சொல்லுகிறோம். அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களை இவ்வாறு கூறுவதில் தவறில்லை. ஆனால் சாதாரண சமாச்சாரங்களைக் கூட இவ்வாறு கூறுபவர்கள் இருக்கிறார்கள்.

இது கேட்பவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவது ஒரு அறியாமை. சுருக்கமாகவும், பொருள் திரிபு ஏற்படாமலும் பேசுவது ஒரு கலை. இதை நன்கு கற்றுக்கொண்டால் உங்களை எல்லோரும் விரும்புவார்கள்.

அதேபோல் அடுத்தவர்கள் பேசும்போது அதைக் கவனமாகக் கேட்பதுவும் ஒரு கலையே. அவர்கள் பேசி முடிப்பதற்குள் பதில் சொல்வது மிகவும் அநாகரிகம். நம் நாட்டில் இது சாதாரணமாக நடப்பது உண்டு. ஆனால் இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 1 மே, 2011

காலமும் கவலையும்

காலம் ஒன்றுதான் நித்தியமானது. அது மாறிக்கொண்டே இருக்கும் தன்மையுடையது. யாருக்காகவும் அது நிற்பதில்லை. அது முடிவற்றது. மனித வாழ்வில் நிகழும் அனைத்துக் காரியங்களும் காலத்தின் நியதியால்தான் நடக்கிறது. அவனுடைய முடிவும் காலத்தினாலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலத்தை வென்றவர் ஒருவருமிலர்.  அந்தந்த காலங்கள் வரும்போது அந்தந்த விளைவுகளும் வந்து சேரும். இதை யாராலும் தடுக்க முடியாது.

புத்திசாலிக்கு கவலை இல்லை. அவன் துன்பத்தைக் கண்டு கவலைப்படமாட்டான். வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்ததேயாகும். இன்பம் வரும்போது அதிக சந்தோஷமும் துன்பம் வரும்போது அதிக துக்கமும் அடைவது அறிவாளியின் குணம் அல்ல. அவன் இரண்டையும் சமமாகவே ஏற்றுக்கொள்வான்.