செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கம்-துவக்க விழா

நான்கு நாள் முன்னமேயே இந்தப் பதிவு வெளிவந்திருக்கவேண்டும். தமிழர்கள் வழக்கப்படி இன்று லேட்டாக வெளிவருகிறது.

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கத்தின் துவக்க விழா நேற்று அதாவது ஸ்ரீதுன்முகி ஆண்டு சித்திரை ஒன்றாம் தேதி (14-4-2016) அன்று கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது. கூட்டத்திற்கு மொத்தம் மூவாயிரம் பேர் வந்திருந்தார்கள் என்று சொல்ல விருப்பம்தான். ஆனால் வந்திருந்ததோ மூன்று பேர்கள்தான்.
நான், என் இரு நண்பர்கள், ஆகக்கூடி மூன்று பேர்கள். இதற்கெல்லாம் அசந்து விடுவேனா?  "அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும்" என்ற கொள்கையில் வளர்ந்தவனாச்சே. நாங்கள் மூவரும் முதலில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டோம். நான் தலைவர். ஒரு நண்பர் உபதலைவர். இன்னொரு நண்பர் காரியதரிசி.

இந்த சங்கத்தின் மூலமாக தமிழை வளர்ப்பது எப்படி என்று ஆலோசனை நடத்தினோம். பாண்டிய மன்னன் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சரித்திரம் எல்லோருக்கும் தெரியும். அதே போல் இந்த சங்கத்தையும் பிரபலமாக்குவோம் என்று தீர்மானம் போட்டோம். பின்பு நான் பேசும்போது கூறினேன். தமிழை வளர்க்க முதல் தேவை தமிழன் வளரவேண்டும். தமிழனை எப்படி வளர்த்தலாம் என்று ஆலோசித்ததில் பின்கண்ட யோசனைகள் உதித்தன.

1. தமிழனுக்கு தமிழ்ப்பற்று இல்லை. பேசுவது ஆங்கிலத்தில். பார்ப்பது இந்தி சினிமா. வேலைக்குப் போவது அமெரிக்கா. அங்கு போய் குழந்தை குட்டி எல்லாம் பெத்ததுக்கப்புறம்தான் தான் தமிழன் என்பது ஞாபகம் வரும். உடனே இவனைப்போல் இருப்பவர்கள் எல்லாம் கூடி ஒரு தமிழ்ச்சங்கம் ஆரம்பிப்பார்கள். அதில் நடவடிக்கைகள் எல்லாம் அமெரிக்க ஆங்கிலத்தில்தான் இருக்கும்.

2. கல்லூரியில் படிக்கும் பெண்கள் எல்லாம் தமிழில் பேச வெட்கப்படுகிறார்கள். அவர்கள் பேசும் ஆங்கிலம் அவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒரு பரிபாஷை.

3. தமிழ் சீரியல்களில் வரும் பெண்கள் சீலை கட்டுவதில்லை.

4. ஆகவே இனிமேல் தமிழர்கள் எங்கு இருந்தாலும் ஆண்கள் வேட்டி, சட்டைதான் அணியவேண்டும். பெண்கள் சேலைதான் உடுத்தவேண்டும். சிறு பையன்கள் ஆப்-டிராயர் போட்டுக்கொள்ளலாம். சிறு பெண்கள் பாவாடை, தாவணிதான் போட்டுக்கொள்ளவேண்டும்.

இந்த நடைமுறைகளை அனுசரிப்பவர்கள்தான் தமிழர்கள். மற்றவர்கள் வந்தேறிகள். இந்த நடைமுறைகளை தமிழர்கள் எந்த அளவிற்கு கடைப் பிடிக்கிறார்கள் என்று கணித்த பிறகு அடுத்த கட்ட செயல்பாடுகளைப் பற்றி விவாதிப்போம். இத்துடன் கூட்டம் கலைகிறது.

திங்கள், 18 ஏப்ரல், 2016

18. நாட்டின் தலைவிதி மாறியது

                            Image result for indian parliament

பிரதம மந்திரி. நிதி அமைச்சர், கட்சித்தலைவர் ஆகியார் குழு வந்தார்கள். பொதுத் தேர்தலை எப்படி நடத்துவது என்பதைப்பற்றி தீவிரமாக விவாதித்தோம்.


நான் சில கருத்துகளைக் கூறினேன்.

1. இப்போது உள்ள தேசீயக் கட்சியே வேட்பாளர்களை நிறுத்தும். இதில் 33 சதம் பெண்கள். இந்த  வேட்பார்களே 90 சதம் வெற்றி பெறுவார்கள்.

2. எதிர்க் கட்சிக்கு 10 சதம் இடம் கொடுப்போம். ஏனெனில் எதிர்க்கட்சி இல்லாவிடில் அதை ஜனநாயக நாடு என்று ஒருவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

3. பாராளுமன்றத்திற்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். இப்போதுள்ள நாடாளுமன்றம், அனைத்து சட்டசபைகளையும் கலைப்பதற்கு ஜனாதிபதியிடம் உத்திரவு வாங்கி அமுல்படுத்துங்கள்.

4. தேர்தலுக்கான அறிவிப்புகளும் வேட்பாளர் தேர்வும் உடனடியாக ஆரம்பிக்கட்டும்.

5. தேர்தலை இன்னும் மூன்று மாதத்தில் நடத்தி முடித்து விடவேண்டும்.

இந்த கருத்துகளுக்கு அவர்கள் ஏகமனதாக ஒத்துக்கொண்டார்கள்.

நிதி அமைச்சர் மட்டும் ஒரு சந்தேகம் எழுப்பினார். நம் வேட்பாளர்கள் 90 சதம் வெற்றி பெறுவார்கள் என்று கூறினீர்களே, அது எப்படி சாத்தியமாகும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். சந்தோஷத்துடன் அவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. எல்லொரும் மும்முரமாக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தார்கள். தேசீயக் கட்சி வேட்பாளர்கள் சீக்கிரம் முடிவு செய்யப்பட்டு அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து விட்டார்கள். எதிர்க்கட்சிகளுக்கு வேட்பாளர்கள் யாருமே முன்வரவில்லை. அவர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கும் வேட்பாளர்களை நானே ஏற்பாடு செய்தேன்.

வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு ஓட்டுச் சீட்டுகள் அடித்தாகிவிட்டது தேர்தல் பிரசாரம் என்பதே மருந்துக்குக்கூட இல்லை. ஆங்காங்கே விளம்பரத் தட்டிகள் வைத்ததோடு சரி. அனைத்து ஓட்டர்களும் கண்டிப்பாக ஓட்டுப் போடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். அனைவருக்கும் ஓட்டுப் போட்டவுடன் பிரியாணி விருந்து கட்சி பேதமில்லாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன்.

தேர்தல் நாளைக்கு முன்தினம் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஓட்டுப்பதிவிற்கான அனைத்து சாதனங்களும் தேர்தல் அதிகாரிகளும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வைக்கப்பட்டிருந்த அனைத்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களும் "வை-ஃபி" முறையில் தேவலோகத் தூதரகத்திலுள்ள சூபர் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருந்தன.

தேர்தல் நாள் வந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒவ்வொரு யம கிங்கரனைக் காவலுக்குப் போட்டிருந்தேன். எந்தச்சாவடியிலும் எந்த விதமான சலசலப்பும் இல்லை. மக்கள் ஒழுங்காக வந்து ஓட்டுப்போட்டு விட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள்.

மாலை 5 மணிக்கு பத்து நிமிடம் இருக்கும்போது ஒரு அவசரச்செய்தி.

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

17. ஆணும் பெண்ணும் சமம்.


இந்த தேர்தல்கள் முடிந்து எல்லோரும் பதவி ஏற்றுவிட்டார்கள். மகளிர் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மகளிருக்கு 33 சதம் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இந்த பஞ்சாயத்து உறுப்பினர் அனைவருக்கும் ஒரு வார காலப் பயிற்சி தேவலோகத் தூதரகத்தில் கொடுக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் நடைமுறை அலுவல்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களை நல்வழிப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன. மக்களின் நலவாழ்விற்காக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவைகளை செயல்படுத்தத் தேவையான வழிமுறைகளும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.

இதேபோல் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் கடைசியாக ஒரு அறிவுரை வழங்கப்பட்டது. எல்லோருக்கும் அவர்கள் நல்லமுறையில் வாழ்க்கை நடத்தத் தேவையான ஊதியம் கொடுக்கப்படும். ஆகவே எந்த திட்டத்திலும் ஊழல் என்பதே தலைகாட்டக்கூடாது. அனைத்து நலத்திட்டங்களும் கச்சிதமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த செயல்பாடுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் நடக்கும். இந்த செயல்பாடுகளை ஒரு சூபர் கம்ப்யூட்டர் கண்காணிக்கும். எங்கு தவறு நடந்தாலும் அது என் தனிப்பட்ட கவனத்திற்கு வந்து விடும். அதற்கான தீர்வுகள் உடனடியாக எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

பஞ்சாயத்துகள் செயல்படுத்த வேண்டிய கிராம நலத்திட்டங்கள்:

   1.   எல்லோருக்கும் குடியிருக்க கழிவறை வசதியுடன் கூடிய வீடுகள்
   2.   அனைவருக்கும் வேண்டிய குடிநீர்
   3.   அனைவருக்கும் வேலை வாய்ப்பு 
   4.   கிராமத்திலேயே தரமான கல்வி
   5.   எல்லோருக்கும் மருத்துவ வசதி
   6.   நல்ல சாலைகள்
   7.   விளைபொருட்கள் கொள்முதல் நிலையங்கள்
   8.   மக்களுக்குத் தேவையான பொருட்களின் விற்பனை நிலையங்கள்
   9.   சமூக கூடங்கள்
10. வேலை வாய்ப்பு சுய உதவிக் குழுக்கள்.
11. விவசாயத்திற்கு முன்னுரிமை

இந்த வசதிகள் அனைத்தும் அந்தந்த கிராமங்களிலேயே மக்களின் தேவையை அனுசரித்து இருக்கும். கிராம மக்கள் பெரும்பாலான தேவைகளுக்கு கிராமத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

அனைத்து அரசு துறைகளும், அனைத்து கிராமங்களுக்கும் சென்று அந்த கிராமங்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை தயாரித்து அவைகளை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக நிறைவேற்றுவார்கள். இதற்கான நிபுணர்கள் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்படுகிறது. இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான போதிய நிதி வசதிகள் ஒவ்வொரு பஞ்சயத்திற்கும் தடையில்லாமல் வழங்கப்படும். எங்கும் எதிலும் இலவசம் என்ற பேச்சுக்கு இடமே கொடுக்கப்பட மாட்டாது.

இதற்கான நடைமுறை உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டு நாட்களில் அனைத்து உத்திரவுகளும் நடைமுறைக்கு வந்தன.

வேலை வாய்ப்பு சுய உதவிக்குழுக்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் அமைக்கப்பட்டன. அந்தந்த தொழிலுக்குத் தேவையான வேலைகளை இந்த குழுக்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுக்கும். அந்தந்த குழுக்களுக்குத் தேவையான தொழில் நுட்ப பயிற்சிகள் தகுந்த நிபுணர்களால் கொடுக்கப்பட்டது. விவசாய வேலைகளுக்கு தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக இயந்திரங்களை வைத்துக்கொண்டு ஆட்களின் தேவைகளைக் குறைக்கும் தொழில் நுட்ப பயிற்சிகள் விரிவாக கொடுக்கப்பட்டன.

இதனால் குறிப்பாக விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற குறை தீர்ந்தது. அனைத்து விளைபொருட்களுக்கும் உற்பத்திச் செலவை அனுசரித்து விற்பனை விலை நிர்ணயிப்பதால் உற்பத்தியாளர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.

கிராமங்கள் செழிப்படைய ஆரம்பித்தன. இந்நிலையில் நாட்டின் பொதுத் தேர்தலுக்கான நேரம் வந்து விட்டது. பிரதம மந்திரியின் குழுவை வரச்சொல்லி தகவல் அனுப்பினேன்.

புதன், 13 ஏப்ரல், 2016

மக்கள் திருந்தவே மாட்டார்களா?

                          Image result for ராஜஸ்ரீ

பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீயிடம் ரூ. 15 லட்சம் தங்க-வைர நகைகள் கொள்ளை.


இன்றைய தினத்தந்தி செய்தி.

பேங்க் லாக்கரிலிருந்து இந்த நகைகளை எடுத்து ஒரு கைப்பையில் வைத்து காரில் உட்கார்ந்து கொண்டிருந்த போது ஒரு நபர் வந்து காருக்குப் பக்கத்தில் கீழே கிடக்கும் பத்து ரூபாய் நோட்டுகள் உங்களுடையதுதானா என்று கேட்டிருக்கிறார்.

ராஜஸ்ரீ காரை விட்டு இறங்கி அந்த நோட்டுகளை ராஜஸ்ரீ குனிந்து எடுத்துக்கொண்டிருந்தபோது காரில் இருந்த கைப்பையை அந்த நபர் எடுத்துக்கொண்டு மறைந்து விட்டார்.

இந்த மாதிரி திருடும் டெக்னிக் எனக்குத் தெரிந்து 50-60 வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த திருட்டுகள் செய்தித்தாள்களிலும் பிரசுரமாகி வருகிறது.

ஆனாலும் நம் மக்கள் இந்த டெக்னிக்குக்கு பலியாவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை?

திங்கள், 11 ஏப்ரல், 2016

16.தலைவருக்கும் வட்டத்திற்கும் ஆப்பு


இரண்டு நாளில் மூவரும் திரும்பி வந்தார்கள். செக்கை கொஞ்சம் அலைய விட்டிருக்கிறார்கள். ஆனால் செக்கு சுதாரிப்பாக இருந்ததால் அவரை ஏமாற்ற முடியவில்லை. நான் தலையைப் பார்த்து இனி என்ன செய்வதாக உத்தேசம் என்றேன். இனி நான் பிச்சைதான் எடுக்கவேண்டும் என்றார். நல்லது, நானே அதைத்தான் சொல்லலாமென்று இருந்தேன், அதற்குள் நீயே சொல்லி விட்டாய். எந்தக் கோயிலுக்குப் போக விருப்பம், அதைச் சொன்னால் அந்தக் கோவில் அதிகாரிக்கு ஒரு லெட்டர் தருகிறேன் என்றேன்.

அதற்குள் பொது என் முதுகைச் சுரண்டினான். என்ன என்று திரும்பிக் கேட்டதற்கு குசுகுசுவென்று, இவர்களை இருவரையும் நாம் ஏன் நம் எடுபிடி வேலைகளுக்கு வைத்துக் கொள்ளக்கூடாது, இருவருக்கும் நல்ல அனுபவம் இருக்கிறது, நாம் அதை உபயோகப் படுத்திக் கொள்ளலாமே என்றார். பரவாயில்லையே, நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது, எதற்கும் அவர்கள் அபிப்பராயத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.

அவர்களை நீயே கேள் என்று பொதுவிடம் சென்னேன். பொது அவர்களை அந்தப் பக்கமாகத் தள்ளிக்கொண்டு போனார். என்ன டீல் போட்டாரோ தெரியவில்லை. திரும்பும்போது தலைக்கும் வட்டத்திற்கும் வாயெல்லாம் பல். மந்திரி ஐயா, " அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். எனக்கு தலையும் செக்குவிற்கு வட்டமும் பி.ஏ. வாக இருப்பார்கள் " என்றார். சரி, ஆனால் அவர்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன்.

அவர்களைப் பார்த்து யமலோகம் பார்த்ததை மறக்காதீர்கள். இன்னொரு முறை போனால் திரும்பி வரமுடியாது, ஜாக்கிரதையாயிருங்கள், உங்கள் பழைய வேலைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடுங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பினேன்.

இப்படி நடந்து கொண்டிருக்கும்போதே ரெண்டு தடவை போன். யாரென்று பார்த்தால் நம் நிதி மந்திரி. என்னவென்று கேட்டேன். அதற்கு அவர், வரப்போகின்ற தேர்தல் விஷயமாக பி.எம். உங்களைப் பார்க்க விரும்புகிறார். உங்களுக்கு எப்ப சௌகரியப்படும் என்று கேட்கச்சொன்னார், என்றார். நாளைக்கு நான் ப்ரீதான். நீங்கள் மூவரும் பத்து மணிக்கு வந்து விடுங்களேன். அப்படியே லஞ்ச் இங்கேயே சாப்பிட்டுவிடலாம் என்றேன். சரி என்றார்.

மறுநாள் சரியாக பத்து மணிக்கு மூவரும் வந்து விட்டார்கள். என்ன விஷயம் என்று கேட்டேன். தேர்தல் வருகிறது. கட்சியில் இருந்த பணத்தைப் பூராவும் எடுத்து ரிசர்வ் வங்கி கஜானாவில் சேர்த்து விட்டோம். இப்பொழுது தேர்தல் செலவிற்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை என்று கையைப் பிசைந்தார்கள்.

இதற்கா கவலைப் படுகிறீர்கள்? ஒரு கட்சிக்காரனிடத்திலும் காசு இல்லை. போய்க் கேட்டால் ஒருவனும் கொடுக்க மாட்டான். ஆகவே எல்லோரும் ஓட்டாண்டிகள்தான். ஆனால் உங்களுக்கு நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள். ஆனால் நான் சொன்ன மாதிரிதான் தேர்தலை நடத்தவேண்டும் என்றேன்.

மூவரும் சாமி மாடு மாதிரி தலையை ஆட்டினார்கள்.

இந்த தேர்தலில் பிரதம மந்திரி மற்றும் நிதி மந்திரி ஆகிய நீங்கள் இருவர் மட்டும்தான் பழைய ஆட்கள். கட்சித்தலைவர் ஏதோ ஆசை வைத்திருக்கிறேன் என்றாரே, அது என்ன என்றேன். அது ஒண்ணும் இல்லீங்க, அவங்க மகனை கொஞ்சம் மேலுக்கு கொண்டு வரவேண்டும், அவ்வளவுதானே, செஞ்சுடுவோம். அவர் இப்போதைக்கு வெளி உறவு மந்திரியாக இருக்கட்டும். மற்ற மந்திரிகளைப் பற்றி தேர்தல் முடிந்த பிறகு பேசுவோம்.

இப்போது நாம் அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். பஞ்சாயத்து தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் இரண்டையும் முதலில் முடித்து விடுவோம். அப்போது நமக்கு ஓரளவு ஜனங்களை எடை போட்டுவிடலாம். இந்த அடிமட்ட தேர்தல்களில் இது வரைக்கும் அரசியலில் ஈடுபடாதவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கு நாம் நம் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவேண்டும். இந்த வேலையை அடிமட்ட கிராமங்களிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு துடிப்பான இளைஞனைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கு நல்ல பயிற்சி கொடுக்கவேண்டும். ஒரு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி கொடுக்கவேண்டும். நீதி, நேர்மை, நியாயம். சட்டம், ஒழுங்கு, சமூக முன்னேற்றம், தனிநபர் ஒழுக்கம், கல்வி, தொழில், விவசாயம் ஆகிய துறைகளில் அவர்களை சிறந்தவர்களாக மாற்றவேண்டும்.

இவர்கள்தான் இனிமேல் இந்தியாவை நிர்வகிப்பார்கள். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைத் தழுவுவார்கள். இவர்களைத்தான் பஞ்சாயத்திற்கும் உள்ளாட்சிகளுக்கும் வரப்போகும் தேர்தலில் நிற்கவைத்து ஜெயிக்கவைக்கப் போகிறோம். இன்னும் இருபது ஆண்டுகளுக்கு எதிர்க் கட்சிகள் எந்தப் பொறுப்பிற்கும் வரக்கூடாது. அதை நான் கவனித்துக் கொள்கிறேன்.

இந்தத் தேர்தல்கள் இவர்களின் பயிற்சி முடிந்ததும் வைத்துக் கொள்ளலாம். பயிற்சி நடக்கும்போதே அவர்களின் திறமைகளை கவனித்து அவரவர்களின் தகுதிக்கு ஏற்ற பதவிகளுக்கு நிற்க வைப்போம். நாம் நிறுத்தும் அனைத்து வேட்பாளர்களும் ஜெயிப்பார்கள். ஏனெனில் அவர்கள் அந்தந்த கிராம மக்களின் ஆதரவு பெற்றவர்கள். இந்தப் பயிற்சிக்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.

இந்த தேர்தல்கள் முடிந்த பிறகு அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் பாராளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் வைத்துக்கொள்ளலாம். இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கு பதிவர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நல்லவர்கள். நீதி,நேர்மைக்குப் பேர் போனவர்கள். அவர்களை முடிந்த மட்டில் வேட்பாளர்களாக நிறுத்துவோம். எதிர்க்கட்சி என்பதே இந்த தேர்தலுக்கு அப்புறம் இருக்கக் கூடாது.  பாராளுமன்றத்திற்கு இனி யமகிங்கரர்ளை  காவலுக்குப் போட்டுவிடலாம். தகராறு பண்ணுகிறவர்களை அவர்கள் நேராக யமபட்டணமே தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்.

மிச்சம் இருக்கும் பதிவர்களை சட்டசபை உறுப்பினர்களாக்கி விடுவோம்.

 சரியென்று சொல்லிவிட்டு மூவரும் சாப்பிட்டுவிட்டு சென்றார்கள்.

பின் குறிப்பு: இந்த பயிற்சி மற்றும் தேர்தல்கள் நடந்து முடிய கொஞ்ச நாட்கள் ஆகும். அது வரையில் நாம் வேறு பொருட்களைப் பற்றி சிந்திப்போம்.

வியாழன், 7 ஏப்ரல், 2016

15. தூதரகத்தில் ரெய்டு


அன்று இரவு தூங்கிக்கொண்டு இருக்கும்போது திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு விழித்தேன். மணியைப் பார்த்தேன். மணி காலை 2. இன்னேரத்தில் என்ன சலசலப்பு என்று வாயில் காவலாளியைக் கூப்பிட்டுக் கேட்டேன். அவன் ஐயா. நிறைய போலீஸ், மற்றும் பல அதிகாரிகள் வந்து உள்ளே விடும்படி சத்தம் போடுகிறார்கள் ஐயா, என்றான்.

அப்படியா அதில் முக்கிய அதிகாரியை மட்டும் உள்ளே விடு. நான் என் ஆபீசுக்கு வருகிறேன் என்றேன். அவன் சிறிது நேரம் கழித்து, ஐயா, எல்லோரும் ஒன்றாகத்தான் உள்ளே வருவார்களாம், என்னை கேட்டைத் திறக்கச்சொல்லி வற்புறுத்துகிறார்கள் ஐயா, என்றான். ஒரு நிமிஷம் இருக்கச்சொல்லு, நானே வருகிறேன் என்று சொல்லிவிட்டு நான் வாசலுக்குப் போனேன்.

அங்கு நான் கண்ட காட்சி இரண்டாம் உலகப் போரை நினைவு படுத்தியது. நூற்றுக்கணக்கான ஜீப்புகள், டாங்கிகள், லாரிகள், ஆயிரக்கணக்கில், பலரேங்கில்  போலீஸ்காரர்கள் மற்றும் சிவில் டிரஸ்சில் பல அதிகாரிகளும் அங்கு கூடியிருந்தார்கள். கொஞ்சம் நடுத்தர ரேங்கில் இருக்கும் போலீஸ்காரர்கள் காவலாளியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

ஆஹா, தலை (அந்த அரசியல்வாதி) பெரிய வேலை செய்திருக்கிறான் போல் இருக்கிறது. அவனைத் தனியாக கவனிப்போம். இப்போது இவர்களைக் கவனிப்போம் என்று முடிவு செய்து வெளியில் வந்தேன். நீங்கள் எல்லாம் யார், எதற்காக இந்நேரத்தில் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அதில் முக்கியமாகத் தென்பட்ட அதிகாரி, நாங்கள் இந்த தூதரகத்தை ரெய்டு பண்ண வந்திருக்கிறோம் என்றார்.

அப்படியா, சந்தோஷம், தூதரகத்திற்கு சில விதிகள் உண்டல்லவா? அதன் பிரகாரம் பிரதம மந்திரி அல்லது ஜனாதிபதி உத்திரவு இல்லாமல் யாரும் உள்ளே நுழையக் கூடாது என்பது தெரியுமா என்றேன். அது எல்லாம் எங்களுக்குத் தெரியும், எங்களை உள்ளே விடப்போகிறாயா இல்லையா என்று மிரட்டும் தொனியில் கேட்டார். விடச்சொல்லுகிறேன், ஆனால் இதனால் வரும் விளைவுகளுக்கெல்லாம் நீங்களேதான் பொறுப்பு, நான் உங்களை எச்சரிக்கை பண்ணவில்லை என்று பிறகு சொல்லக்கூடாது என்றேன்.

எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்றார் அந்த அதிகாரி. எல்லோரையும் உள்ளே அனுமதிக்கச் சொன்னேன். எல்லோரும் முதலில் எல்லோரும் ஒரு இடத்தில் உட்காரலாம், உங்களுக்கு என்ன வேண்டுமோ, கேளுங்கள், அதை செய்கிறேன் என்றேன். எல்லோரும் கான்பரன்ஸ் ஹாலில் உட்கார்ந்தார்கள். சுமார் ஐயாயிரம் பேர் இருக்கும். எங்கள் பக்கம் நான், பொது, செக்கு, நாலைந்து காவலாளிகள் இவ்வளவு பேர்தான்.

எல்லோரும் உட்கார்ந்த பிறகு நீங்கள் எல்லாம் எந்தெந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் என்றேன். அவர்கள் சொன்னதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், இந்திய அரசின் விவசாயத் துறை நீங்கலாக மற்ற அனைத்துத் துறைகளிலிருந்தும் அதிகாரிகளும், குட்டித்தேவதைகளும் வந்துள்ளார்கள்.

நீங்கள் எல்லோரும் ஒன்றாக வந்த காரணம் என்னவோ என்றேன். நாங்கள் இந்தத் தூதரகத்தை முழுமையாக ரெய்டு பண்ணவேண்டும் என்றார்கள். நான் கேட்டேன், அப்படி ஒரு அயல்நாட்டுத் தூதரகத்தை ரெய்டு பண்ணவேண்டுமென்றால் அதற்கு இந்நாட்டு மந்திரி சபை ஒப்புதல் கொடுத்து ,இந்தத் தூதரகத்திற்கு முன் அறிவிப்பு கொடுத்த பின்தானே செய்ய முடியும். அப்படி எதுவுமில்லாமல் திடீரென்று வந்திருக்கிறீர்களே, இதற்கு யார் உங்களுக்கு உத்திரவு கொடுத்தார்கள் என்றேன்.

எங்கள் மேலதிகாரிகள் ஒப்புதல் கொடுத்த பிறகுதான் நாங்கள் வந்துள்ளோம் என்றார்கள். அப்படியானால் அந்த மேலதிகாரிகளை வரச்சொல்லுங்கள், நான் அவர்களுடன் பேச வேண்டும் என்றேன். அங்கிருந்த சீனியர் அதிகாரிக்கு கோபம் வந்து விட்டது. நீ எங்களை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் நினைத்தால் உன்னை இப்போதே அரெஸ்ட் பண்ண முடியும் என்றார். பிறகு எல்லோரும் புறப்பட்டு அவரவர்கள் வேலைகளைப் பாருங்கள் என்று பின்னால் திரும்பி உத்திரவு போட்டார்.

எல்லோரும் எழுந்திருக்க ஆரம்பித்தார்கள். நான் ஒரு நிமிடம் என்று அவர்களைக் கையமர்த்தி உட்கார வைத்து விட்டு சொன்னேன். நீங்கள் அனைவரும் ஒரு அயல் நாட்டுத் தூதரகத்திற்குள் அத்து மீறி நுழைந்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் அனைவரும் இந்நாட்டின் கைதிகள். என் அனுமதியின்றி நீங்கள் அசையக்கூட முடியாது. பேசாமல் நான் சொல்லுகிற மாதிரி நடந்து கொள்ளுங்கள். தவறினால் நீங்கள் உங்கள் பிள்ளை குட்டிகளை இந்த ஜன்மத்தில் பார்க்க முடியாது என்றேன்.

எல்லோரும் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்கள். அவரவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்கள எடுத்து என் மேல் பிரயோகிக்க தயார் ஆகிவிட்டார்கள். என் ஒரு கையசைப்பில் அத்தனை ஆயுதங்களும் என் மேஜைக்குப் பின்னால் வந்து விழுந்தன. ஒருவராலும் அவர்கள் ஆசனத்தை விட்டு எழுந்திருக்க முடியவில்லை.

இதற்குள் ஒரு கிங்கரனை அனுப்பி அந்த தலையையும் வட்டத்தையும் பிடித்து வரச்சொன்னேன். அவர்கள் இந்தக் கூட்டத்தைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்கள். இது அவன் வேலை என்று சொல்லாமல் சொல்லி விட்டான். தலை என்னைப் பார்த்து எதற்காக என்னை இங்கு தூக்கிக்கொண்டு வந்தீர்கள் என்று சத்தம் போட்டான். நான் அவனைப் பார்த்து நீ நேற்று என் காலில் விழுந்ததைப் பார்த்து நான் ஏமாந்து போனேன். ஆனாலும் நீ கெட்டிக்காரன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

இந்த ரெய்டை நீ யார் மூலமாக ஏற்பாடு செய்தாய் என்று சொன்னால் அவர்களுடன் பேச சௌகரியமாக இருக்கும் என்றேன். அந்த மடையன் எனக்கு இந்த ரெய்டு பற்றி ஒன்றுந் தெரியாது என்றான். அப்படியா என்று சொல்லிவிட்டு, ஒரு கிங்கரனைக் கூப்பிட்டு தலைவரை சித்திரகுப்பதனிடம் கூட்டிக்கொண்டு போய் நம் பாணியில் கொஞ்சம் கவனித்து இந்த விவகாரத்தில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் இவன் வாயிலிருந்து வர வழைத்து அனைவரையும் இங்கே கூட்டி வாருங்கள் என்றேன்.

அரை மணி நேரத்தில் அனைத்து நபர்களும் வந்து விட்டார்கள். இந்த தலைவனுக்கு பிஎம் ஆபீசில் ஒரு பிஏ வைத்தெரியும். அவனிடம் சொல்லி அனைத்து துறைத் தலைவர்களுடனும் சொல்லி இந்த ரெய்டை ஏற்பாடு பண்ணியிருக்கிறான். துறைத் தலைவர்களை எல்லாம் முன் வரிசையில் உட்கார வைத்து அவர்களைக் கேட்டேன்.

தூதரகத்திற்கு என்று சில பாதுகாப்புகள் உண்டல்லவா? அந்த விதிகளின் படி தூதரகத்தை ரெய்டு பண்ண வேண்டுமென்றால் பிரதம் மந்திரி நேரடியாக உத்திரவு கொடுக்கவேண்டுமல்லவா? அப்படி உங்களுக்கு உத்திரவு கிடைத்துத்தான் உங்கள் ஆட்களை இங்கே அனுப்பினீர்களா? பதில் சொல்லுங்கள் என்றேன். பிரதம மந்திரி இந்த ரெய்டை அப்ரூவ் பண்ணியிருக்கிறார் என்று இந்த பிஏ சொன்னார், அதனால் ரெய்டை அனுமதித்தோம் என்றார்கள்.

அந்தப் பிஏ வைக் கேட்டேன். இந்த ரெய்ட் நடக்கும் விஷயம் பிரதம மந்திரிக்கு தெரியுமா என்றேன். அவன் சொன்னான், இந்த தலைவன் என்ன கேட்டாலும் அதைச் செய்யும்படி பிஎம் சொல்லியிருக்கிறார் என்றான். அப்படியானால் இந்தத் தலைவன் ஒருவனைக் கொலை செய்யும்படி கேட்கிறான், அப்படி செய்வாயா என்று கேட்டேன். "பெப்பெப்பே" என்று முழித்தான். சரி இருக்கட்டும், பிரதம மந்திரியையே வரச்சொல்லுவோம், அவரே வந்து இதை விசாரிக்கட்டும் என்று சொல்லி பிரதம மந்திரிக்குப் போன் போட்டேன்.

அவரிடம் உங்கள் ஆபீசர்கள் எல்லாம் தேவலோக தூதரகத்தை ரெய்டு பண்ணுவதற்காக வந்திருக்கிறார்கள். நீங்கள்தான் இந்த ரெய்டுக்கு பர்மிஷன் கொடுத்ததாக உங்கள் பிஏ சொல்லுகிறான் என்றேன். அவர் போனிலேயே மன்னிப்பு கேட்டுவிட்டு பத்து நிமிடத்தில் நிதி அமைச்சர், உள்துறை, வெளி உறவுத்துறை மந்திரிகள் புடை சூழ வந்து விட்டார். அவரைப் பார்த்துத் அனைவரும் பேயறைந்தது போல் ஆனார்கள்.

அவருடைய பிஏ வைக்கூப்பிட்டு இது எப்படி ஏற்பட்டது என்று கேட்டார். அவன் இந்த தலை சொன்னதை செய்யவேண்டும் என்று முன்பு நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், அதனால் செய்தேன் என்றான். அப்படியா, அவன் என்னைக் கொல்லும்படி சொல்லுகிறான், அப்படியே செய்வாயா என்று கேட்டார். அவன் பதில் சொல்ல முடியாமல் விழித்தான்.

பிறகு அவர் துறை அதிகாரிகளைப் பார்த்து தூதரக "டிப்ளொமேடிக் இம்யூனிடி" சட்டங்கள் உங்களுக்குத் தெரியுமல்லவா, தெரிந்தும் ஒரு பிஏ சொல்வதைக் கேட்டு இந்த மாதிரி செய்திருக்கிறீர்களே, உங்களுக்கு சொந்தமாக மூளை இல்லையா? என்று சகட்டு மேனிக்கு அவர்களைச் சாடினார். எல்லாப் பயல்களும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பிறகு என்னைப் பார்த்து இந்தப் பயல்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்றார்.

நியாயமாக அனவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆனால் எல்லோரும் பிள்ளைகுட்டிக் காரர்களாய்த் தெரிகிறது. அதனால் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு இன்கிரிமென்ட்டை நிறுத்தி ஆர்டர் போட்டு விடுங்கள் என்றேன். அப்போதே உள்துறை செயலரை விட்டு அந்த ஆர்டர்களை டைப் செய்து ஒவ்வொருவருக்கும் கையிலேயே கொடுக்கப்பட்டது.

பிறகு எல்லோருக்கும் காலை டிபன் கொடுக்கச்சொன்னேன். பிரதம மந்திரியும் நிதி அமைச்சரும் என்னிடம் பலமுறை மன்னிப்புக் கேட்டார்கள். அவர்கள் புறப்பட்டுப் போனதும்  இந்த அதிகாரிகள் தங்கள் ஆயுதங்களை திருப்பிக் கேட்டார்கள். அவைகள் உங்கள் ஞாபகார்த்தமாக  இங்கேயே இருக்கட்டுமே என்றேன். அவர்களை ஐயோ, ஐயோ, இவை எங்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட ஆயுதங்கள், அவைகள் இல்லாவிட்டால் எங்கள் வேலையே போய்விடும் என்று மூக்கால் அழுதார்கள்.

எடுத்துக் கொண்டு போங்கள். ஆனால் உங்கள் ஆயுளுக்கும் இந்தப் பாடம் மனதில் இருக்கட்டும் என்று சொல்லி அவர்களை அனுப்பினேன். இந்த சந்தடியில் தலையும் வட்டமும் தப்பிக்கப் பார்த்தார்கள். அவர்களை நீங்கள் போகவேண்டாம் இருங்கள் என்று சொல்லி ஒரு கிங்கரனைக் காவலுக்குப் போட்டேன்.

எல்லோரும் போன பிறகு அவர்கள் இருவரையும் தனியாகக் கூப்பிட்டேன். என்னைப் பாரத்ததும் அவர்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நான்தான் தலையைப் பார்த்து இனி என்ன செய்வதாக உத்தேசம் என்றேன். ஐயா எங்களை மன்னியுங்கள் என்று கேட்கக்கூட எங்களுக்கு அருகதை இல்லை, இனி நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறோம் என்றார்கள்.

முதலில் அந்த நிலங்களை எல்லாம் ஒழுங்காக எங்கள் பெயருக்கு மாற்றிவிடுங்கள். பிறகு தலை வைத்திருக்கும் எல்லா சொத்துக்களையும் அரசுக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள். தலை வைத்திருக்கும் அனைத்து ரொக்கங்களும் ஏற்கனவே அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டு விட்டன. இரண்டு நாளில் இவைகளை எல்லாம் முடித்து விட்டு இருவரும் இங்கே வாருங்கள். இந்தத் தடவை ஒன்றும் கோல்மால் பண்ணமாட்டீர்கள் என்று நம்புகிறேன். எதற்கும் செக்கு உங்கள் கூடவே இருப்பார். போய் வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

திங்கள், 4 ஏப்ரல், 2016

14.வட்டத்திடம் மாட்டிக்கொண்டோம்.


வட்டத்திடம் பணம் கொடுத்தனுப்பி ஒரு வாரம் இரு வாரமாகி, ஒரு மாதமும் ஆகிவிட்டது. அவரிடமிருந்து ஒழுங்கான பதில் கிடைக்கவில்லை. எப்போது செல்லில் கூப்பிட்டாலும் பிசி என்றே வந்தது. கடைசியில் செக்கை அனுப்பி என்ன விவரம் என்று பார்த்துவிட்டு வரச்சொன்னேன்.

அவர் போய் விசாரித்து விட்டு வந்து சொன்ன தகவல் கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது. நாம் சொன்னது போல் 1000 ஏக்கர் நிலம் பேசி வாங்கி விட்டாராம். ஆனால் அதை முழுவதுமாகத் தலைவர் பேரில் (அதாவது அன்று வந்த அரசியல்வாதி) ரிஜிஸ்டர் ஆகி, சுவாதீனம் எடுத்து, தற்பொழுது சுற்றிலும் வேலி போட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.

வட்டத்திடம் கேட்டதற்கு, இதுதான் மாமூலுங்க, நிலம் உங்களுதுதானுங்க, கிரயம் யார் பேரில் இருந்தால் என்னங்க? என்றாராம். அப்படியா என்று கேட்டுக் கொண்டு, பொதுவை அந்த அரசியல்வாதியிடம் அனுப்பினேன். அவர் பொதுவை மிரட்டியிருக்கிறார். இத பாரு பொது, எங்ககிட்ட வம்பு வச்சுக்காதீங்க, அப்புறம் இந்தப் பணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது, இதுக்கு இன்கம்டாக்ஸ் கட்டீருக்கீங்களா. இப்படியெல்லாம் கேள்வி கேட்கவைப்பேன். அப்புறம் நீங்கள் எல்லோரும் ஜெயிலில் களி திங்க வேண்டி வரும் என்று சொல்லியிருக்கிறார்.

நான் அவருடன் போனில் பேச முயற்சி செய்தேன். போனை எடுக்கவே இல்லை. ஓஹோ, இதெல்லாம் காரியத்திற்கு உதவாது என்று நேரடி நடவடிக்கை எடுத்தேன். இரண்டு யமகிங்கரர்களை விட்டு வட்டத்தைத் தூக்கி வந்தேன். வட்டத்திற்கு என்னைப் பார்த்ததும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவருக்கு குடிக்க பானம் கொடுத்து ஆசுவாசப் படுத்திய பிறகு பேச ஆரம்பித்தார்.

என் பேரில் எந்த தப்பும் இல்லைங்க, தலைவர் (அந்த அரசியல்வாதி) இப்படித்தானுங்க, நிலம் வாங்கித் தாரேன் அப்படீன்னு, யாரு பணம் கொடுத்தாலும் வாங்கி தன் பெயரில் நிலம் வாங்கி ரிஜிஸ்டர் பண்ணீப்பாருங்க. ஏனுங்க இப்படீன்னு கேட்டா, தம்பி, இதப்பாருங்க, நிலம் உங்க பேர்ல இருந்தா என்ன, என் பேரில இருந்தா என்ன. நெலம் எங்க போயிடப்போகுது, உங்க பேர்ல நெலம் இருந்திச்சின்னு வையுங்க, இந்த இன்கம்டாக்ஸ்காரன் ஆயிரத்தெட்டு கேள்வி உங்களைக் கேட்பான், அதுக்கு உங்களால பதில் சொல்ல முடியாது. என்னைக் கேள்வி கேட்க ஒரு பயலுக்கும் திராணி கிடையாது.

இப்படியே இருக்கட்டும், உங்களுக்கு தேவைப்படும்போது சொல்லுங்க, மாத்தி எழுதீடலாம் என்பார். இதுதானுங்க இப்ப நடைமுறை. நான் என்ன பண்ணுட்டுங்க என்று வட்டம் சொன்னான். சரி இப்ப அந்த தலைவரைப் பார்க்கணுமே, அதுக்கு என்ன வழி என்றேன். வட்டம் சொன்னார், இந்த மாதிரி டீல் ஒண்ணை முடிச்சா, அவரு ஆறு மாசம் ஊர்லயே இருக்க மாட்டாருங்க. அவருக்குப் பல ஊர்களிலே பங்களாக்கள் இருக்குதுங்க, எங்க இருக்காருன்னு யாருக்கும் தெரியாதுங்க என்றான்.

அப்படியா என்று நாரதரைக் கூப்பிட்டு விவரத்தைச் சொல்லி அந்த ஆள் எந்த லோகத்தில் இருந்தாலும் இழுத்துக் கொண்டு வாருங்கள் என்றேன். துணைக்கு இரண்டு கிங்கரர்களை அழைத்துக்கொண்டு போங்கள் என்றேன். வட்டம் நான் போகட்டுங்களா என்றான். "அடே வட்டம், நீயும் அவனோட கூட்டுக் களவாணிதானே, அவன் வரும்போது நீ இல்லாவிட்டால் எப்படி?" என்று அவனை இருக்கவைத்தேன்.

அரை மணி நேரத்தில் நாரதரும் அந்த அரசியல்வாதியும் வந்து விட்டார்கள். வந்தவுடன் அவன் தாம்தூம் என்று குதித்தான். என்னை யாரென்று நினைத்தீர்கள், இப்போதே பிரதம மந்திரிக்குப் போன் போட்டு உன்னை என்ன செய்கிறேன் பார், உன்னை இன்கம்டாக்ஸ் கேஸ் போட்டு, ஜெயில் களி திங்க வைக்கிறேன் பார் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணினான். வட்டத்தைப் பார்த்து என் சக்தியைப் பற்றி இவர்களிடம் நீ ஒன்றும் சொல்லவில்லையா என்று சத்தம் போட்டான்.

அவன் ஆர்ப்பாட்டம் அடங்கட்டும் என்று காத்திருந்தேன். அரை மணி நேரம் கத்திவிட்டு ஓய்ந்து போனான். அப்புறம் நான் அவனைக்கேட்டேன். நாங்கள் யாரென்று உனக்குத் தெரியுமா என்றேன். "நீ யாராயிருந்தால் எனக்கென்ன, என்னை இப்போதே நான் இருந்த இடத்திற்குக் கொண்டுபோய் விடாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா" என்றான்.

"என்ன நடக்கும், பார்க்க எனக்கு ஆசையாய் இருக்கிறது" என்றேன். யார் யாருக்கோ போன் பேசினான். ஒன்றும் நடக்கவில்லை. உனக்கு யார் வேண்டும் என்றேன். பிரதம மந்திரியிடம் பேசவேண்டும் என்றான். நான் ஹாட்லைனில் பிரதம மந்திரி அலுவலகத்தைக் கூப்பிட்டு விவரத்தைச் சொல்லிவிட்டு போனை அவனிடம் கொடுத்தேன். பிரதம மந்திரியின் உதவியாளர் பேசினார்.

அவர் அவனிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை, அவன் தடாலென்று என் காலில் விழுந்து காலைப் பிடித்துக் கொண்டான். தெய்வமே, நான் தெரியாமல் தப்பு பண்ணிவிட்டேன். இப்போதே அந்த நிலத்தையெல்லாம் நீங்கள் சொல்லுகிற மாதிரி மாற்றி எழுதி விடுகிறேன். இந்த விவகாரத்தைப் பற்றி பிரதம மந்திரியிடம் ஏதும் சொல்லிவிடாதீர்கள், நீங்கள் யாரென்று தெரியாமல் இந்தத் தப்பை செய்து விட்டேன் என்று அழுதான்.

சரி, ரொம்பவும் அழுகிறானே என்று அவனை மன்னிக்கிறேன் என்று சொல்லி எழுப்பி, நான் முதலில் சொன்ன பிரகாரம் பத்திரங்களை ரிஜிஸ்டர் செய்து அனுப்பு என்று சொல்லி அவர்கள் இருவரையும் திருப்பி அனுப்பினேன்.

இங்குதான் நான் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன்.

அடுத்த பதிவைப் பாருங்கள்.

வியாழன், 31 மார்ச், 2016

13. இமிக்ரேஷன் விசா

முதல் ட்ரிப்பில் போய் வந்த அனைத்துப் பதிவர்களும் தங்கள் தங்கள் தளங்களில் தேவலோகத்தை வானளாவப் புகழ்ந்திருந்தார்கள். அதைப் படித்த மற்ற பதிவர்கள் தங்களை ஏன் கூப்பிடவில்லை என்று கோபமாக பதிவுகள் போட்டார்கள். இப்படியாக ஒரு வாரம் முழுவதும் தேவலோகத்தைப் பற்றிய பதிவுகள்தான் இடப்பட்டன.  சினிமா விமர்சனப் பதிவுகள் காணாமல் போய்விட்டன.

ஓரிரு நாளில் இமிக்ரேஷன் விசாவிற்காக ஜனங்கள் வரத்தொடங்கினார்கள். ஒவ்வொருவராக உள்ளே அழைத்து வரப்பட்டு என் ரூமுக்கு கொண்டுவரப்பட்டார்கள். அவர்களைப் பற்றி நன்கு விசாரித்து விட்டு, எனக்கு திருப்தியானவுடன், அவர்களிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினேன். பிறகு அவர்களை பேங்குக்கு சென்று பணத்தைக் கட்டி விட்டு அந்த செலானைக் கொண்டுவரச்சொன்னேன்.

அவர்கள் பணம் கட்டி வந்தவுடன் செலானை வாங்கி அவர்களுடைய ஒப்பந்தத்தில் பின் பண்ணி  தேவலோகத்திற்குப் போகும் தபால் பையில் போட்டேன். அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை இமிக்ரேஷன் விசா பற்றிய விபரங்களைக் கூறிவிட்டு, அவர்களுக்கு விருந்து கொடுத்து, பிறகு அவர்களைத் திருப்பி அனுப்பினேன்,

முதல் நாள் பத்துப் பேர்கள் மட்டுமே வந்தார்கள். நாளாக நாளாக கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்ததைப் பார்த்ததும், இன்டர்நெட்டில் இமிக்ரேஷன் விசாவிற்காக ஒரு தளம் ஆரம்பித்தோம். இமிக்ரேஷன் விசா வேண்டுபவர்கள் இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும். அவர்களுக்கான நாள் மற்றும் நேரம் அலாட் செய்யப்பட்டு இன்டர்நெட்டில் வெளியிடப்படும். அதன்படிதான் வரவேண்டும் என்று நிர்ணயித்தோம்.

இப்படியாக ஆறு மாதத்தில் 1500 பேர்களுக்கு விசா கொடுத்திருப்போம். வரவு செலவு கணக்குகளைப் பார்த்தோம். மொத்த வரவு 1,50,000 கோடி அதாவது ஒன்றரை லட்சம் கோடி. இதில் இந்திய அரசுக்கு வரி கட்டினது 75,000 கோடி. மீதி 75,000 கோடியில் எங்கள் ஊதியமாக எடுத்துக் கொண்டது  15,000 கோடி. இதில் என் பங்கு 7500 கோடி. பொதுவிற்கும் செக்குவிற்கும் ஆளுக்கு 3750 கோடி.

இப்படி கணக்குப் பார்த்ததில் எங்கள் ஊதியத்தொகையைக் கண்டு மலைத்துப் போய் விட்டோம். இந்தப் பணத்தை என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. பொதுவைக் கூப்பிட்டு, வெளியில் போய் ஒரு நல்ல ஆடிட்டர், அனுபவம் மிக்க ஒரு வக்கீல், இவ்வளவு பணத்தை டீல் பண்ணக்கூடிய ஒரு அரசியல்வாதி ஆகியோரைக் கூட்டிக்கொண்டு வரும்படி அனுப்பினேன்.

அவர்கள் வந்தவுடன் அவர்களை வரவேற்று உபசரித்த பிறகு விவரங்களைச் சொன்னோம். அரசியல்வாதி எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். நாங்கள் தொகையைச் சொன்னவுடன் அவர் "பூஊஊஊ, இவ்வளவுதானா, இதற்கா என்னை வரச்சொன்னீர்கள், முதலிலேயே விவரத்தைச் சொல்லியிருந்தால் நான் என் வட்டச் செயலரை அனுப்பியிருப்பேனே, அவரே இந்த மாதிரி தொகைகளை எல்லாம் டீல் பண்ணியிருப்பாரே என்றார்.

அப்படீங்களா, எங்களுக்கு அனுபவம் போதாதாகையால் உங்களை வரவழைத்து விட்டோம், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவரைத் தாஜா பண்ணினேன். பிறகு எல்லோரும் கலந்து ஆலோசித்தோம். இந்தப் பணத்தில்  எனக்கு 500 ஏக்கர் நிலமும், மற்றவர்கள் இருவருக்கும் ஆளுக்கு 250 ஏக்கர் நிலமும் அவரவர்கள் ஊர்களில் வாங்கிப்போடுவது என்று முடிவு செய்தோம்.

அரசியல்வாதி ஊருக்குப் போனதும் தனது வட்டத்தை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லிவிட்டு மூவரும் கிளம்பிப் போனார்கள். மறுநாள் "வட்டம்" தனது எடுபிடிகளுடன் வந்தார். விஷயத்தைக் கேட்டார். இவ்வளவுதானே. ஒரு வாரத்தில் முடித்துக் கொடுத்து விடுகிறேன். கவலைப் படாதீர்கள் என்று சொல்லி விட்டுப் பணத்தைக் கொடுக்கும்படி கேட்டார்.

பேங்க் மேனேஜரைக் கூப்பிட்டு எங்கள் பணத்தை முழுவதையும் வட்டத்திடம் கொடுக்கச் சொன்னோம். அவர் அந்தப் பணத்தை இரண்டு லாரிகளில் ஏற்றி வட்டத்துடன் அனுப்பினார்.

பிறகு நடந்ததுதான் நாங்கள் எதிர்பாராதது! விவரங்கள் அறியக் காத்திருங்கள்.

செவ்வாய், 29 மார்ச், 2016

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கம்

Image result for பார்க்


பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு


வருகிற ஸ்ரீதுன்முகி வருடம் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி (அதாவது 14-4-2016, வியாழக்கிழமை) கோவையில் ஒரு மகத்தான தமிழ் மறுமலர்ச்சித் திருவிழா நடக்கவிருக்கிறது. அதாவது தாய்த்தமிழை வளர்ப்பதற்காக ஒரு சங்கம் துவக்குகிறோம். இந்தச்சங்கத்திற்கு "கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச்சங்கம்" என்று பெயர் வைத்திருக்கிறோம்.

கிறுக்கர்கள் என்றால் கிறுக்குபவர்கள் அதாவது பேப்பரில் அல்லது சுவர்களில் அல்லது இணையத்தில் கிறுக்குபவர்கள் என்று அர்த்தம். அதாவது எழுத்தாளர்கள் அல்லது இந்த பதிவர்கள் மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம். வேறு அர்த்தம் கொள்பவர்கள் தமிழ் விரோதிகள்.

இந்தச் சங்கத்தில் சேர எந்த வித சந்தாவும் தேவையில்லை. ஒரே தகுதி, அவர்கள் தாங்கள் கிறுக்கர்கள் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். அவ்வளவே.

இந்த சங்கத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் 13-4-2016 தேதிக்குள் அவர்களுடைய விண்ணப்பத்தை கீழ்க்கண்ட பதிவருக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

கிறுக்கர் பழனி.கந்தசாமி, மன அலைகள் பதிவு, மேற்பார்வை "கூகுள் பிளாக்கர்".

தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

துவக்க விழா 14-4-2016 அன்று சாய்பாபா காலனி இராமலிங்கம் காலனி நகராட்சி பூங்காவில் நடைபெறும். அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு இந்த சங்கத்தை வலுப்படுத்த வேண்டும்.

திங்கள், 28 மார்ச், 2016

12. தேவலோகத்திற்கு சுற்றுலா





இந்தியாவில் தனிமனித வாழ்க்கை சுபிட்சமாக மாறத்தொடங்கியது. எங்கும் எதிலும் முன்னேற்றம் தென்பட்டன. அமெரிக்கா, இந்தியாவைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தது. அனைத்து வெளிநாடுகளும் இந்தியாவுடன் சுமுக உறவை நீட்டித்தன. இந்தியாவின் அனைத்து எல்லைகளிலும் வெளிநாட்டிலிருந்து யாரும் ஊடுறுவ முடியாதபடி வேலிகள் அமைக்கப்பட்டன.

பாகிஸ்தான் தன் உளவு வேலைகளையும் சதித்திட்டங்களையும் நிறுத்திக்கொண்டு விட்டது. காஷ்மீரில் அதிக அளவில் டூரிஸ்ட்டுகள் வர ஆரம்பித்தார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக இணக்கம் காட்டினார்கள். தீவிர வாதம் அடியோடு மறைந்து விட்டது.

வடகிழக்கு மாகாணங்களில் சைனா தன் தலையீட்டை நிறுத்தி விட்டது. அந்த மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது.

ராஜபக்க்ஷே வாலைச்சுருட்டிக்கொண்டு, இலங்கையில் வசிக்கும் எல்லோருக்கும் சம உரிமை கொடுத்துவிட்டார். வெளி நாடுகளுக்கு குடிபெயர்ந்த அனைத்து இலங்கை அகதிகளும் தாய்நாடு திரும்பிவிட்டார்கள். பிரபாகனுக்கு ஆங்காங்கே நினைவுச்சின்னங்கள் வைக்கப்பட்டு வை.கோ. வைக்கொண்டு திறந்து வைக்கப்பட்டன. பிரபாகரன் நினைவாக ஒரு தபால் தலை வெளியிடப்பட்டது.

பொதுவைக் கூப்பிட்டு, இனி நம் சொந்த வேலைகளைக் கவனிக்கலாமா என்றேன். அவர்கள் என்னவென்று தெரியாமல் விழித்தார்கள்.

நான் சொன்னேன், பொது, நம் நாட்டில் ஏகப்பட்ட பேர் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் எப்பேர்ப்பட்ட முட்டாள்தனமான திட்டம் சொன்னாலும் பணத்தைக் கொட்டிக்கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

என்னுடைய திட்டம் இதுதான். நமது தூதரகத்திலிருந்து இந்தியர்களுக்கு தேவலோகத்திற்கு செல்ல இரண்டு விதமான விசா கொடுக்கப்படும்.

ஒன்று: டூரிஸ்ட் விசா. மூன்று பகல், இரண்டு இரவு அவர்களைத் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு நாம் போட்டிருக்கும் நகர்களைக் காட்டுவோம். அங்கு தங்க, சுற்றிப் பார்க்க எல்லா வசதிகளும் செய்து தரப்படும். விசா சார்ஜ் ஒரு கோடி ரூபாய். இதில் 50 சதம் வரியாக இந்திய அரசுக்கு கொடுத்துவிடுவோம்.

இந்த டூர் நமது தேவ்லோக் ஏர்லைன்ஸ் மூலமாக ஏற்பாடு செய்யப்படும். வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை கோயமுத்தூர் ஏர் போர்ட்டிலிருந்து புறப்படும். திங்கட்கிழமை செல்பவர்கள் புதன்கிழமை திரும்புவார்கள். வியாழக்கிழமை புறப்படுபவர்கள் சனிக்கிழமை திரும்புவார்கள். இதற்கான விமானக் கட்டணம் மற்றும் ஊர் சுற்றிப் பார்க்கும் செலவுகள், உணவு, தங்கும் வசதிகள் எல்லாவற்றிற்கும் மொத்தமாக பத்து கோடி ரூபாய். இதற்கு உள்ளூர் வரிகள் தனி.

ஒரு ட்ரிப்புக்கு 200 பேர் வீதம் வாரத்திற்கு 400 பேர் மட்டுமே செல்ல முடியும். டிக்கெட்டுகள் அந்த அளவிற்குத்தான் கொடுப்போம். அதிகப் பேர் வந்தால் அவர்களுக்கு அட்வான்ஸ் புக்கிங்க் செய்யப்படும். டூர் கட்டணத்தை வாங்க கோவையில் தேவலோக பேங்கின் கிளை ஒன்றை ஆரம்பிப்போம். இதற்காக ஒரு 50 ஏக்கர் நிலம் வாங்கி, மயனை விட்டு ஒரு காம்ப்ளெக்ஸ் கட்டி விடலாம்.                                                    

இரண்டாவது இமிக்ரேஷன் விசா: இது ஒருவருடைய ஆயுள் காலத்திற்குப் பின்தான் அமுலுக்கு வரும். ஒருவர் தன் ஆயுள்காலம் முடிந்தவுடன் யமலோகம் போய் தனக்குண்டான பாவபுண்ணிய பலன்களை அனுபவித்த பின், இந்த விசா அமுலுக்கு வரும். அவர்களுக்கான குடியிருப்பு ரெடியாக இருக்கும். அங்கு அவர்களை அழைத்துச் சென்று, குடியமர்த்தப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு தேவலோக கிரீன் கார்டு கொடுக்கப்படும்.

இந்த குடியிருப்புக்கான விலை மற்றும் விசா சார்ஜ் மொத்தம் 100 கோடி ரூபாய். பணம் முழுவதையும் ரொக்கமாக இந்திய ரூபாயிலோ அல்லது அமெரிக்க டாலராகவோ அல்லது ஐரோப்பிய யூரோவாகவோ கட்டலாம். வேறு எந்தக் கரன்சியும் வாங்கப் படமாட்டாது. செக்குகள், பாங்க் டிராப்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

இந்தப் பணத்தை ரொக்கமாக நமது தூதரகத்திலுள்ள தேவலோகப் பேங்கில் கட்டவேண்டும். பணம் கட்டும்போது ஒரு ஒப்பந்தம் போடப்படும். அந்த ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துகள்.

1. எக்காரணம் கொண்டும் விசா கட்டணம் திருப்பித்தரமாட்டாது.

2. இந்த விசா வாங்கிய செய்தியை யாரிடமும் சொல்லக் கூடாது.

3. இந்த சமாசாரத்தில் எக்காரணம் கொண்டும் காவல் துறைக்கு புகார் கொடுக்கக் கூடாது.

4. அப்படி யாராவது புகார் கொடுக்கலாம் என்று நினைத்தவுடனேயே அவர்கள் யமலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

5. தினம் பத்து பேருக்கு மட்டுமே விசா வழங்கப்படும். அதிகம் பேர் விண்ணப்பித்தால் அவர்கள் வெய்ட்டிங்க் லிஸ்டில் வைக்கப்படுவார்கள்.

6.  75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விசாவிற்கு தகுதியானவர்கள்.

இந்த ஒப்பந்தத்தில்  ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கி விடுங்கள். ஒப்பந்தத்தின் காப்பி அவர் யமலோகம் சென்றவுடன் கொடுக்கப்படும். இங்கு அதன் காப்பி இருக்கக் கூடாது.


இமிக்ரேஷன் விசாவில் 50 சதம் இந்திய அரசுக்கு வரியாக செலுத்தி விடுவோம். மீதியுள்ள விசா கட்டணத்தில் நம் ஊதியம் போக மிச்சமிருக்கும் பணத்தை அன்றன்று  தேவலோக பிராஞ்சிற்கு அனுப்பி விடவேண்டும்.

இந்த இமிக்ரேஷன் விசா கட்டணத்தில் 10 சதம் நம்முடைய உழைப்பிற்கான ஊதியமாக எடுத்துக்கொள்வோம். அதாவது ஒரு விசாவிற்கு 10 கோடி. அதில் எனக்கு 50 சதம். உங்களுக்கு, ஆளுக்கு 25 சதம். அவரவர்கள் பங்கை அன்றன்றே எடுத்துக் கொண்டு விடவேண்டும். நாம் தூதரக அதிகாரிகளானதால் நமக்கு வருமான வரி கிடையாது. இந்தப் பணத்தை இங்கேயுள்ள தேவலோகப் பேங்கில் அவரவர்கள் அக்கவுன்ட்களில் போட்டு வைப்போம்.

முதலில் டூரிஸ்ட் விசா மட்டுமே கொடுங்கள். இமிக்ரேஷன் விசா பற்றிய விஷயம் தேவலோகத்தில் டூர் வருபவர்களுக்கு மட்டும் வாய் வார்த்தையாக பரவட்டும்.

மறுநாள் இந்திய தினசரிகள் அனைத்திலும் இந்த டூரிஸ்ட் விசா பற்றிய விளம்பரம் முதல் பக்கத்தில் முழு பக்க விளம்பரமாக வெளி வந்தது.

விளம்பரம் வெளிவந்து சிறிது நேரத்திலேயே ஜனங்கள் தூதரகத்திற்கு வர ஆரம்பித்தார்கள். தங்களுக்கு டூரிஸ்ட் விசா வேண்டும் என்றார்கள். வந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு உடனடியாக ஒரு பந்தல் போட்டு எல்லோரையும் உட்காரவைத்தோம். அவர்களுக்குத் தேவையான சிற்றுண்டிகள், பானங்கள், டி.வி. அனைத்து வசதிகளும் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டன.

யமனிடமிருந்து தேவையான ஆட்களை வரவழைத்து ஜரூராக விசாக்கள் கொடுக்கப்பட்டன. முதல் நாளே 5000 பேருக்கு டூரிஸட் விசா கொடுத்தோம்.

கோவையில் பேங்கும் விமான சர்வீசின் ஆபீசும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரியிடம் தேவலோகப் போக்குவரத்துக்கான அனுமதிகள் வாங்கப் பட்டுவிட்டன. தேவலோகப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது.

முதல் வெள்ளோட்டப் பயணத்தில் பிரதம மந்திரி, நிதி அமைச்சர், கட்சித்தலைவர். முக்கிய அதிகாரிகள் மற்றும் தமிழ் மணத்தில் முதல் 20 ரேங்க் வைத்திருக்கும் பதிவர்கள் இவர்களை ஏற்றிக்கொண்டு போனோம்.

அங்கு அவர்களுக்கு ராஜோபசாரம் நடந்தது. இதுவரை பூலோகத்தில் யாரும் சாப்பிட்டிராத உணவு வகைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டன. அவர்கள் தங்குவதற்கு கொடுக்கப்பட்ட அறைகள் அரேபிய சுல்தான்கள் தங்கும் அறைகள் போலிருந்தன. அந்த விடுதிகளில் இல்லாத சௌகரியங்களே இல்லை.

அவர்கள் தேவலோகத்தை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்களைப்போல் அவர்கள் தங்கள் ஆயுளில் பார்த்ததில்லை என்னும்படியாக இருந்தன. ஒவ்வொரு பஸ்சிலும் முப்பது பேர்கள்தான். வழிகாட்டுவதற்கு ஒவ்வொரு பஸ்சிற்கும் ஒரு தேவலோக அப்சரஸ்ஸை ஏற்பாடு பண்ணியிருந்தோம். அவ்வப்போது குடிப்பதற்கும் கொறிப்பதற்கும், வறுத்த முந்திரி, பாதாம்பருப்பு, ஆல்மண்ட், நல்ல திராக்ஷை ரசம், ஆப்பிள் ஜூஸ், மேங்கோ ஜூஸ், இப்படி  ஏதாவது கொடுத்துக்கொண்டிருந்தோம்.

இரவானதும் அவர்கள் தங்கும் விடுதிகளில் பலவிதமான கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவைகளில் முக்கியமானவை ரம்பை-ஊர்வசி நாட்டியம்தான். இரவு விருந்தில் நூற்றுக்கணக்கான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஒவ்வொன்றையும் ருசி பார்ப்பதற்குள்ளேயே பசி தீர்ந்து விட்டது. பல விதமான தீர்த்தங்கள் கொடுக்கப்பட்டன.


இவைகளை எல்லாம் சாப்பிட்டு முடித்தவுடன்  90 சதம் பேர்கள் (பதிவர்களில் 100 சதம்) அங்கேயே படுத்து விட்டார்கள். காரணம் நான் சொல்ல வேண்டியதில்லை. அவர்களை எல்லாம் யம கிங்கரர்கள் தூக்கிக்கொண்டுபோய் அவரவர்கள் அறையில் படுக்க வைத்தார்கள்.

அவர்கள் புறப்படும் நாள் வந்தது. ஒருவருக்கும் புறப்படவே மனது இல்லை. இங்கேயே இருந்து விடுகிறோமே என்றார்கள். அப்போது அவர்களுக்கு "இமிக்ரேஷன் விசா" வைப்பற்றி நாரதர் ஒரு வகுப்பு எடுத்தார். அன்வரும் ஒரே குரலில் நாங்கள் திரும்பிப் போனதும் முதல் வேலையாக இந்த விசாவை வாங்குவோம் என்று பதிவர்களைத் தவிர மற்ற எல்லோரும் ஏகமனதாகச்சொன்னார்கள்.

 இப்படியாக அனைவரையும் பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தோம்.