செவ்வாய், 25 அக்டோபர், 2016

நான் ஒரு பாபியானேன்.

                      Image result for punishments in hell in hinduism

நான் நன்றாகத்தான் இருந்தேன். தினம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு, இரண்டு தடவை காப்பி குடித்து விட்டு, பகலில் மூன்று நான்கு மணி நேரம், இரவில் ஒரு ஆறு மணிநேரம் தூங்கி விட்டு, அவ்வப்போது நண்பர்களைப் பார்த்து அளவளாவி விட்டு, வாரம் ஒரு பதிவு எழுதி அன்பர்களைத் திருப்திப் படுத்தி விட்டு நானும் திருப்தியாக இருந்தேன்.

நான் இதுவரை எனக்குத் தெரிந்து யாரையும் கொலை செய்ததில்லை. ஆனால் நான் செய்த உணவைச் சாப்பிட்டு ஒருவர் இறந்திருக்கிறார். அது கொலைக் குற்றத்தில் சேராது என்று நம்புகிறேன். தவிர சில-பல பதிவுகள் அறுவையாகப் போட்டிருக்கிறேன். அதைப் படித்துவிட்டு யாரேனும் தற்கொலை செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

நான்  இப்படியிருக்க, என் சந்தோஷம் அந்தக் கடவுளுக்கே பொறுக்கவில்லை போல் இருக்கிறது. எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள ஒரு விநாயகர் கோவிலை திருப்பணி செய்கிறோம்  என்று இடித்துப்போட்டு ஆறேழு வருடங்களாக ஒன்றும் செய்யாமல் சும்மா கிடந்தது. திடீரென்று ஒரு மகானுபாவன் தலையிட்டு அந்தக் கோவிலின் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகமும் வைத்து விட்டார்.

என் வீட்டு அம்மணிக்கு அந்தக் கோவில் என்றால் உயிர். கும்பாபிஷேகம் நடக்க யாகசாலைகள் அமைக்கும்போதே அங்கு போய்விடுவார்கள். யாகசாலை அமைத்து ஐந்து காலங்கள் யாகம் நடந்து கும்பாபிஷேகம் முடியும் வரை அம்மணிக்கு 24 மணி நேரமும் கோயில் ட்யூட்டிதான். இதில் எனக்கு என்ன தொல்லை என்றால் கோயிலில் ஆன்மீகப் பிரசங்கம் நடக்கிறது, நீங்கள் ஒரு நாளாகிலும் வந்து கேட்கக்கூடாதா ? என்று வசவு வேறு.

சரி, வந்தது வரட்டும் என்று ஒரு நாள் அந்தப் பிரசங்கத்தைக் கேட்டகப் போனேன். பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு பக்கத்து அரங்கில் நடக்கும் உபன்யாசத்தைக் கேட்கப்போனேன். உபன்யாசகர் அட்டகாசமாக மேக்கப் போட்டுக்கொண்டு கூடவே ஒரு அழகிய நங்கையையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அந்தப் பொண் பின்பாட்டு பாடுவதற்காம். (அவர்கள் போட்டோ கிடைக்கவில்லை).

அந்தப் பொண்ணு நன்றாகவே பாடியது. அதைக் கேட்பதற்காகவே ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தேன். நடு நடுவில் உபன்யாசகரும் அவர் சரக்கை எடுத்து விட்டுக்கொண்டிருந்தார். அவர் கூறியவைகளில் சக்கையை நீக்கி சாரத்தை மட்டும் கொடுக்கிறேன்.

நீங்கள் பிறந்த்தின் நோக்கம் ஆண்டவன் அடைவதே. அப்படி ஆண்டவனை அடைய நீங்கள் புண்ணியம் செய்யவேண்டும். பாப கர்மாக்களை செய்யக் கூடாது. கொலை செய்வதும் திருடுவதும் மட்டுமே பாப காரியங்கள் என்று நீங்கள்  நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தவறு.

ஒருவன் தன் முயற்சியால் பாடுபட்டு பணக்காரன் ஆகிறான். அவனைப் பார்த்து அற்பனுக்கு வந்த வாழ்வைப் பார் என்று பொறாமைப் பட்டால் அதுவும் பாப காரியமே.

உன் நண்பணின் பெண் காதல் கல்யாணம் செய்து கொண்டாளா? அவளைப் பற்றி கேலமாகப் பேசினால் அதுவும் பாவமே. யாராவது புருஷன் பெண்டாட்டி சண்டை போட்டுக் கொண்டார்களா, இல்லை பொண்டாட்டி புருஷன் தலையில் அம்மிக்குழவியைப் போட்டாளா என்று ஊரில் நடக்கும் வம்புகளைப் பற்றி நாலு பேர் கூடிப் பேசுகிறீர்களா? இவைகளை எல்லாம் சித்திரகுப்தன் உங்கள் பாபக் கணக்கில் ஏற்றி விடுவான்.

நீங்கள் யமபட்டணம் போனதும் அவன் இந்தக் கணக்குகளையெல்லாம் விலாவாரியாக யமனிடம் விஸ்தாரமாகச் சொல்லுவான். யமன் அவைகளை எல்லாம் கேட்டு விட்டு, சரி, இவனை ஆறு மாதம் கொதிக்கும் எண்ணைக் கொப்பறையில் போடுங்கள் என்று தார்ப்பு சொல்லி விடுவான்.

இப்படியாக அவருடைய உபன்யாசம் நடந்தது. வீட்டுக்கு வந்து அன்று படுக்கையில் படுத்தவுடன் அவர் சொல்லிய பாப லிஸ்ட்டுகள் மனதில் ஓடின. நாம் தினமும் இவைகளைத்தானே செய்து வருகிறோம். இவைகளைதானே நாம் பொழுது போக்க உதவுகின்றன. அப்படியானால் நாம் யம பட்டணம் போனால் நம்மை எண்ணைக் கொப்பறையில்தான் போட்டு கொதிக்க வைப்பார்களே?

ஐயோ, கடவுளே, என்னை இப்படி ஒரே நாளில் பாபியாக்கி விட்டாயே, நான் இனி என் செய்வேன் என்று நினைத்துக் கொண்டே
தூங்கி விட்டேன். கனவில் யம கிங்கரர்கள் என்னை எண்ணைக் கொப்பறையில் போட்டு வேக வைப்பதாகவே கனவுகள் வந்தன.

தூங்கி எழுந்ததும் அந்த உபன்யாசகரிடமே போய் இந்தப் பாவல்களுக்கு என்ன விமோசனம் என்று கேட்டு வரவேண்டும் என்று முடிவு பண்ணி விட்டுத் திரும்பவும் தூங்கினேன்.

இந்தப் பாபங்களுக்கு விமோசனம் உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் தவறாமல் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

செவ்வாய், 18 அக்டோபர், 2016

"பேலியோ" டயட்

                         
                         Image result for paleolithic age

பேலியோலித்திக் காலம் என்பது  (Paleolithic age) மனித இன பரிணாம வளர்ச்சியில் இரண்டரை மில்லியன் வருடங்களுக்கு முந்திய காலம். இதை பழைய கற்காலம் என்று கூறுவார்கள். மனிதன் நாகரிகம் அடையாத காலம். மொழி தோன்றாத காலம்.

இந்தக் காலத்தில் மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதைப் பற்றிய செய்திகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிலபல ஆதாரங்களைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் யூகித்தறிந்தவையே. இந்த யூகங்களின் அடிப்படையில் அக்காலத்து மனிதர்கள் எவ்வகையான உணவைச் சாப்பிட்டிருந்திருப்பார்கள் என்ற செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

இயற்கையில் விளைந்திருக்கக்கூடிய பழங்கள், கிழங்கு வகைகள், சிறு அல்லது நடுத்தர அளவுள்ள மிருகங்கள் ஆகியவைகளே அவர்களின் உணவாக இருந்திருக்கக் கூடும். இது ஒரு யூகம் மட்டுமே. இந்த உணவுத் தேடல்களுக்கு அவன் கற்களால் ஆன சில கருவிகளை உபயோகித்திருக்கக்கூடும். அத்தகைய கருவிகள் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்திருக்கின்றன.

இந்த யூகங்களின் அடிப்படையில் இப்போது ஒரு இயக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது "பேலியோ டயட்" என்ற இயக்கம்.
அதாவது கற்காலத்து மனிதன் மாமிசம் மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தான். அவன் ஆரோக்யமாக இருந்தான். அதே போல் நாமும் இப்போது மாமிச உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆரோக்யமாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

இது பற்றி எவ்வளவோ பேசலாம், எழுதலாம், விவாதம் செய்யலாம். ஆனால் அதற்கு இந்தப் பதிவு மட்டுமே போதாது. உலகில் அவ்வப்போது சிலர் இந்த மாதிரி ஒரு புது வார்த்தையை உபயோகித்து பல ஜாலங்கள் செய்வதுண்டு. மக்களை மயங்குமாறு பேச்சுத் திறமையை உபயோகித்து, மக்களை மூளைச் சலவை செய்வதுண்டு.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே எழுகின்றது. அதாவது கற்காலத்து மனிதனுக்கு நெருப்பை உபயோகிக்க தெரிந்திருக்கவில்லை. அதே போல் உப்பையும் அவன் கண்டிருக்கவில்லை. இப்போது பேலியோ உணவைப் பற்றிப் பேசுபவர்கள் அவ்வாறே நெருப்பை உபயோகப் படுத்தாமலும் உப்பையும் உபயோகப் படுத்தாமலும் அவர்கள் உணவைச் சாப்பிடுகிறார்களா?

பதிவர்கள் தங்கள் சொந்த புத்தியை உபயோகப்படுத்தி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இங்கே ஒருவர் மூளைச்சலவை செய்வதைக் கேளுங்கள்.

புதன், 12 அக்டோபர், 2016

"வந்து" எனும் அசைச்சொல்

                            Image result for பேச்சாளர்

மேடைகளில்  தமிழில் நீங்கள் பேசுவதுண்டா? இதோ இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

நான் மதுரை விவசாயக்  கல்லூரியில் இணைப் பேராசிரியராக வேலை பார்த்த காலத்தில் (அது ஒரு பழைய கற்காலம் - 1976-80)
அங்கு பல பயிற்சி நிறுவனங்களிலிருந்து எனக்கு பேச அழைப்புகள் வரும். நான் அப்போது ஓரளவு மேடைப்பேச்சுகளில் திறமை பெற்றிருந்தேன். மேலே கொடுத்துள்ள பேச்சாளர் சுகி சிவம் அளவு இல்லையென்றாலும் அவர் திறமையில் நூற்றில் ஒரு பங்கு திறமை கொண்டிருந்தேன்.

மதுரையிலுள்ள ஒரு தொழிற்பயிற்சிப் பள்ளியில் என்னை விவசாயத்தைப் பற்றிப் பேச அழைத்திருந்தார்கள். இரண்டு மணி நேரம் உரையாற்றவேண்டும். ஒரு மணி உரையாடலுக்குப் பின் பத்து நிமிடம் இடைவெளி. நான் முதல் சொற்போழிவை முடித்து விட்டு உட்கார்ந்தேன். அந்த தொழில் பயிற்சி நிலையத்தின் முதல்வர், உங்களுடைய உரை நன்றாக இருந்தது. ஆனால் இடையிடையே "வந்து" என்கிற அசைச் சொல்லை அதிகமாக உபயோகிக்கிறீர்கள், அதைத் தவிர்த்தால் உங்கள் உரை மேலும் சிறப்பாக இருக்கும் என்றார்.

அடுத்த உரையின்போது மிக க் கவனமாக அந்தச் சொல்லைத் தவிர்த்தேன். அதன் பிறகு எப்போது மேடையில் பேசுவதாக இருந்தாலும் இந்த கவனம் இருந்து கொண்டிருந்தது.

உதாரணத்திற்கு:

இப்போ வந்து நீங்க என்ன பண்ணறீங்கன்னா, அங்க கடைக்குப் போய் வந்து நான் சொன்ன சாமானை வாங்கறீங்க, அப்புறம் வந்து வீட்டுக்கு வர்றீங்க.

பலர் இது மாதிரி அடிக்கடி இந்த வார்த்தையைத் தங்கள் பேச்சில் உபயோகப் படுத்துவதைக் கேட்டிருப்பீர்கள்.

கீழே கொடுத்திருக்கும் விடியோ பேச்சைக் கேளுங்கள். அதில் ஐந்து நிமிடம் பேசுவதற்குள் பத்து தடவை இந்த "வந்து" எனும் வார்த்தையை உபயோகப் படுத்தியிருப்பார். இந்த வார்த்தைக்கு அர்த்தம எதுவும் இல்லை. இது வெறும் அசைச் சொல்லே.



மேடைகளில் பேசும் வாய்ப்புள்ள பதிவர்கள் இந்த நுணுக்கத்தை மனதில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வியாழன், 6 அக்டோபர், 2016

போன மச்சான் திரும்பி வந்தாண்டி பூமணத்தோட

                       
                  Image result for a Tamil bride
இப்படி ஒரு பழமொழியை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். அத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மசான வைராக்யம், பிரசவ வைராக்யம் இந்த இரண்டையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இவைகளுக்கெல்லாம் பதவுரை, பொழிப்புரை, கருத்துரைகள் தேவையில்லாமலேயே எல்லோரும் விளங்கிக் கொள்ளக்கூடியவை. இவைகளைப் புரிந்து கொண்டவர்கள் நான் ஏன் பதிவுகள் போடாமல் ஒரு மாதம் இருந்தேன் என்பதையும் நான் சொல்லாமலேயே புரிந்து கொண்டிருப்பார்கள்.

கடைசியாக ஒரு சமகாலப் பிரச்சினை பற்றி என் மேலான (அல்லது சிலர் கருத்தில் கீழான) கருத்துக்களை ஒரு பதிவு போட்டிருந்தது படித்தவர்களுக்கு நினைவு இருக்கலாம். அதில் குறிப்பாக சிலருக்கு என் வயது ஒரு உறுத்தலாக இருந்திருக்கிறது. அதாவது வயது குறைவாக இருந்தால் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். வயது ஆன பின் இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று கருத்து சொன்னார்கள். சரி போகட்டும் என்று அந்தப் பதிவை நீக்கினேன்.

நண்பர் தமிழ் இளங்கோ அவர்கள் தொலை பேசியில் என்னிடம் பேசி சில கருத்துக்களைச் சென்னார். அதிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் இந்த உலகை சீர்திருத்த தனி மனிதனால் முடியாது என்பதுதான்.

சரி, இந்தப் பதிவுலகை விட்டு விலகி இருக்கலாம் என்று முடிவு எடுத்தேன். ஆனாலும் என் பதிவுகளைப் பார்வையிடுபவர்களை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் புதிதாகப் பதிவுகள் எழுதினாலும் எழுதாவிட்டாலும் என் பதிவுகளை மகாஜனங்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூகுளாரின் வரவு செலவு அறிக்கை கூறுகிறது.

இது வரையில் நான் ஆயிரம் பதிவுகளுக்கு மேல் எழுதி விட்டேன். இன்றைய தேதியில் பத்து லட்சம் மக்கள் என் பதிவுகளைப் பார்வையிட்டிருக்கிறார்கள். என் பதிவின் தமிழ் மணம் ரேங்க் ஒரு நூறையாவது எட்டியிருக்கும் என்று பார்த்தால் பனிரெண்டைத் தாண்ட மாட்டேன் என்கிறது.

ஆகவே என் பதிவுகளுக்கு என்று ஒரு வாசகர் வட்டம் இருப்பதை அறிந்தேன். அவர்களை ஏமாற்றக்கூடாது என்ற நல்ல அல்லது கெட்ட எண்ணத்தினால் திரும்பவும் எழுதலாம் என்று வந்து விட்டேன்.

பதிவுலக வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். வழக்கம்போல் என்னைத்திட்டி பின்னூட்டம் போடுவதை நிறுத்த வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

பின் குறிப்பு: இதுக்கு எதுக்கு பொம்பளை படம் என்று கேட்பவர்களுக்கு, அந்தப் பெண் பூ வைத்திருப்பதைப் பார்த்தீர்களல்லவா, தலைப்பிலும் பூமணம் இருப்பதைப் பார்த்தீர்களல்லவா, அதுதான் சம்பந்தம்.

வியாழன், 8 செப்டம்பர், 2016

ஒரு மொக்கைப் பதிவு

ஐயா
கொஞ்சம் நாளாக பதிவுலகில் காணவில்லை. பார்க்கிலேயே ரிசர்வ் செய்து உட்காந்திருக்கிறீர்களா? அல்லது ஆசுபத்திரியில் உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கிறீர்களா? அல்லது கணினி பழுதாகி விட்டதா? வீட்டுக்காரம்மா தடா போட்டு விட்டார்களா? பதிவு ஒன்றும் காணோம். ஒரு மொக்கையாவது எழுதுங்கள்.

இதோ ஒரு மொக்கை எழுதி விட்டேன்.

பதிவுலகம் நசிந்து கொண்டு வருகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். ஒரு கால கட்டத்திற்குப் பின் எழுதுவதில் ஒரு சலிப்பு தோன்றுகிறது. குறிப்பாக ஆயிரம் பேருக்கு க் குறையாமல் பார்த்துக்கொண்டிருந்த பதிவுகளை சில நூறு பேர் மட்டுமே பார்க்கிறார்கள் என்றால் அந்த பதிவிற்கு மவுசு இல்லை என்று ஆகிறது.

கொள்வார் இல்லாமல் கடை நடத்துவதில் என்ன பயன்? அதனால் கொஞ்சம் விலகி விடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

என்னை ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பார்த்தார்கள். நான் ஒரேயடியாக மறுத்து விட்டேன். செத்தால் வீட்டில்தான் சாவேன், ஆஸ்பத்திரியில் சாகமாட்டேன் என்று சொல்லி விட்டேன்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும்

                           Image result for காதலர்கள் படங்கள்
எல்லோருக்கும் சுதந்திரம் வந்து விட்டதென்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் எங்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும் என்று தெரியவில்லை.

நாங்களும் இந்நாட்டு மக்கள்தான். எங்களுக்கும் ஓட்டுரிமை இருக்கிறது. நாங்களும் ஓட்டுப் போடுகிறோம். ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் இந்த பட்சபாதம்? எங்கு சென்று சற்று இளைப்பாறினாலும் எங்களை போலீசும் பொது மக்களும் விரட்டுகிறார்கள்.

ஏன் நாங்கள் மட்டும் இவ்வாறு கஷ்டப்படவேண்டும்? எங்களுக்கும் சுதந்திரம் வேண்டும். இதற்காக நாங்கள் எங்கள் உயிரையும் விடத்தயார்.

இப்படிக் கேட்பவர்கள் யார் தெரியுமா? குடிகாரர்களும் காதலர்களும். ஏன் இவர்களுடைய உரிமையைப் பறிக்க வேண்டும்? எங்கு போனாலும் இவர்களை விரட்டுகிறார்கள்.

ஊரில் உள்ள பார்க்குகளில் சிலவற்றை இவர்களுடைய முழு உபயோகத்திற்காக ஒதுக்கித் தரவேண்டும். உபயோகமில்லாத அரசு கட்டிடங்களை இவர்களுடைய உபயோகத்திற்காக ரிசர்வ் செய்யவேண்டும்.

இதையெல்லாம் செய்ய வக்கற்ற அரசும் ஒரு அரசா? இக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கிறோம்.

                           Image result for குடிகாரன் படங்கள்

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

நெடுங்கதைகள் படிப்பதில் உள்ள சிரமங்கள்

                      

சமீப காலமாக பொழுதைப் போக்குவதற்கு ஒரு வழியாக கதைகள் படிக்கலாம் என்று முயற்சித்தேன். என் நண்பர் ஒருவர் அன்பளித்த கைக் கணிணியில் (Tablet)  நிறைய கதைகளைச் சேமித்து வைத்தேன்.

அதில் பல கதைகள் ஆங்கிலத்தில் இருந்தன. பரவாயில்லை, நமக்குத்தான் ஆங்கிலம் நன்றாகத்  தெரியுமே என்று சில கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.

இளம் வயதில் ஆங்கிலக் கதைகள் பல படித்திருக்கிறேன். அந்த ஆசிரியர்களைப் பற்றி இப்போதுள்ள இளைஞர்கள் அறிய மாட்டார்கள். கோனன் டாயில், மார்க் ட்வைன், ஆர். எல். ஸ்டீவன்சன், எச்.ஜி.வெல்ஸ், மாப்பசான், இப்படி பல ஆசிரியர்கள்.

இப்போது ஆங்கிலத்தில் பலர் நன்றாகவே எழுதுகிறார்கள். எனக்கு இப்போது, அதாவது வயதானபின் சேர்த்துள்ள பல சொத்துக்களில்  ஒன்று "மறதி". குறிப்பாக மனிதர்களின் பெயர்கள். ஏதாவது ஒரு விசேஷத்தில் புதிதாகப் பலரை சந்திக்க நேரிடுகிறது. யாராவது சிலர் அறிமுகப்படுத்தி வைக்கப்படுகிறார்கள். அப்படி அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அந்தப் பக்கம் போனவுடன் அவர் பெயர் என்ன என்று எவ்வளவு யோசித்தாலும் நினைவிற்கு வருவதில்லை. சரி, போகட்டும் என்று விட்டு விடுவது வழக்கமாய் விட்டது.

அந்த மாதிரி பல கதாசிரியர்களின் பெயர்கள் நினைவிற்கு வருவதில்லை. அதுவாவது தொலையட்டும். கதைக்கு வருவோம். கதையில் கதாபாத்திரங்கள் பலர் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இந்த இங்கிலீஷ்காரன்களின் பெயர்களே ஒரு பெரிய மர்மம். இத்தனை வயதிற்கு அப்புறமும் அந்த மர்மத்தை விடுவிக்க என்னால் முடியவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று: John Fitzgerald Kennedy  என்று ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தது  பலருக்கு நினைவிருக்கலாம். சாதாரண மக்கள் இவரை  Mr.Kennedy கூப்பிடவேண்டும். பெயரை எழுதும்போது முழுசாக John Fitzgerald Kennedy என்று எழுத வேண்டுமாம். அதையே சுருகி எழுதும்போது John F. Kennedy என்று எழுதுகிறார்கள். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை John என்று கூப்பிடலாமாம். பெண்டாட்டி இவரை "ஜோ" என்று செல்லமாகக் கூப்பிடுவாள்.

ஆங்கிலக் கதைகள் ஆரம்பிக்கும்போது ஒருவனை ஒரு பெயரில் அழைத்திருப்பார்கள். இரண்டு பக்கம் கழித்து அவனை இன்னொரு பெயரில் அழைப்பார்கள். இவன் யாருடா, புதிதாக இருக்கிறதே என்று யோசிப்பதற்குள் அவன் காதலி அவனை வேறு ஒரு செல்லப் பெயரில் கூப்பிடுவாள். இந்தக் குழப்பத்திலிருந்து விடுபடுவதற்குள் மளமளவென்று பத்துப் பதினைந்து நபர்கள் கதைக்குள் புகுத்தப்பட்டிருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ஐந்து பெயர்கள்.

ஆச்சா, தலை சுற்ற ஆரம்பித்து விடும். சரி, முதலில் இருந்து வரலாம் என்று திரும்பவும் முதல் பக்கத்திலிருந்து ஆரம்பித்தால், இரண்டு மூன்று பக்கத்திற்கு மேல் கவனம் நிலைப்பதில்லை. புத்தகத்தை மூடி வைத்து விட்டு ஒரு இரண்டு மணி நேரம் கழித்துப் படிக்க ஆரம்பித்தால் கதையை எங்கே விட்டோமென்பது தெரியமாட்டேன்   என்கிறது.

மறுபடியும் முதல் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். இப்படி ஒரு கதையைப் படிப்பதற்கு முதல் பக்கத்தை மட்டும் ஒரு ஐம்பது தடவை படித்திருப்பேன்.

தமிழ்க்கதைகளில் இந்த மாதிரி குழப்பங்கள் கிடையாது. பத்துப் பேர் கதையில் இருந்தாலும் எல்லாம் சுப்பன், குப்பன் என்றிருப்பதால் குழப்பம் வருவதில்லை. ஆனால் என்ன கஷ்டம் என்றால் தமிழ்க் கதைகளை எல்லாம் ஏற்கெனவே படித்து முடித்தாயிற்று. இப்போது வரும் கதைகள் மனதிற்கு உகந்ததாய் இல்லை.

ஆனால் எந்தக் கதைகளைப் படிக்க ஆரம்பித்தாலும் ஒரு சௌகரியம் இருக்கிறது. படிக்க ஆரம்பித்த மூன்றாவது நிமிடம் தூக்கம் வந்து விடுகிறது. வயதான காலத்தில் அது ஒரு பெரிய சௌகரியமல்லவா?

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஆயிரம் அறுவைப் பதிவிட்ட அறுவைத்திலகம்.


  Image result for 1000 number

இது என்னுடைய ஆயிரத்தியோராவது  அறுவை. இந்த சாதனையைப் பாராட்டி எங்கள் தெருவில் உள்ள பதிவர்கள் அனைவரும் (நான் ஒருவன் மட்டுமே< மற்ற பதிவர்கள் எனக்குப் பயந்து ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள்) எனக்கு "ஆயிரம் அறுவைப் பதிவிட்ட அறுவைத் திலகம்" என்ற பட்டத்தை சூட்டி இருக்கிறார்கள்.

இத்தனை அறுவைப் பதிவுகள் போட்டிருந்தும் இன்னும் பதிவுலகில் இந்த அறுவையைத் தாங்காமல் யாரும் உயிரை விட்டதாகத் தெரியவில்லை. நானும் என்னால் முடிந்த மட்டில் அறுவைப் பதிவுகளாகத்தான் போடுகிறேன். ஆனாலும் ரிசல்ட் வரமாட்டேன் என்கிறது.

கொஞ்ச நாள் அபுதாபி போய் அங்குள்ள ஒரு பிரபல பதிவரிடம்  பாடம் கற்றுக்கொண்டு வரலாமா என்றும் ஒரு யோசனை இருக்கிறது. இருந்தாலும் தமிழ்ப் பதிவர்கள் அதற்கெல்லாம் மசிவார்களா என்றும் நினைக்கவேண்டி இருக்கிறது.

அந்த   அபுதாபிப் பதிவர் சமீபத்தில் இந்தியா வருவதாகக் கேள்விப்பட்டேன். அவரை நேரில் சந்தித்து சில பல யோசனைகள் பெறலாம் என்று முடிவு செய்துள்ளேன். அது வரை இப்போது வெளி வரும் சாதாரண அறுவைகளை வைத்து திருப்திப் பட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொல்கிறேன்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

அம்மிக்கல் என்னும் ஆயுதம்

 
                    Image result for அம்மி மிதித்தல்

கல்யாணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் என்று ஒரு சடங்கு இருக்கிறது. வெகு நாட்களுக்கு முன் பொதுவாக பிரம்மண சமூகத்தில்தான் இந்த வழக்கம் நடைமுறையில் இருந்தது. பிறகு மற்ற சமூகத்தினரும் இந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள்.

இந்த சடங்கைப் பற்றி ஆழ்ந்து யோசித்தீர்களேயானால் ஒரு உண்மை புலப்படும். அந்தக் காலத்திலேயே பெண்ணுரிமையைப் பற்றி தீவிரமாக யோசித்தவர்தான் இந்தச் சடங்கை நடைமுறைப் படுத்தியிருக்க வேண்டும்.

கல்யாணம் என்று நடந்து விட்டால் புருஷன் என்ன அடித்தாலும் உதைத்தாலும் பெண் திருப்பி அடிக்க முடியாத சூழ்நிலைதான் அன்று இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் இந்தச் சடங்குகள் நடந்தன. ஒரு புத்திசாலிப் பெண்ணாக இருந்தால் இந்தச் சடங்கின் பொருளை உணர்ந்திருப்பாள்.

அந்தக் காலத்தில் அம்மியும் குழவியும் இல்லாத வீடே கிடையாது. பிற்காலத்தில் மிக்சி, கிரைண்டர் வந்த பிறகும் கூட அம்மி தொடர்ந்து வீடுகளில் இருக்கிறது. காரணம் நமது கடைசி யாத்திரையின்போது இது கண்டிப்பாகத் தேவைப்படும். தவிர இந்த அம்மியும் குழவியும் எளிதில் கண்ணில் படக்கூடிய இடத்தில்தான் போடப்பட்டிருக்கும்.

ஒரு நிலையில் புருஷன் தொந்தரவு சகிக்க முடியாமல் போகிறது என்று வைத்துக்  கொள்ளுங்கள். அந்த அபலைப் பெண் என்ன செய்வாள்? பெண்களுக்கு கண்ணீரே ஆயுதம் என்றாலும் அந்தக் கல் நெஞ்சுக்காரன் அந்த ஆயுதத்திற்கு மசியாமல் போனால் என் செய்வது?



இங்குதான் அந்தப் பெண் கல்யாணத்தின்போது நடந்த அம்மி மிதித்த காட்சியை நினைவு கூர்வாள். ஆஹா, இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் உதவுவதற்காக அல்லவா அந்தச் சடங்கை வைத்தார்கள். இந்த ஞானம் எனக்கு இது வரையில் தோணாமல் போயிற்றே என்று ஞானோதயம் பிறக்கும்.

அன்று இரவு புருஷன் என்கிற மிருகம் குடித்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் போது அம்மிக் குழவியை எடுத்து அவன் தலையில் ஒரே போடாகப் போட்டு விட்டால் வேலை முடிந்தது. அவளிடம் கத்தியோ, துப்பாக்கியோ இருக்க வாய்ப்பு இல்லை. உடனே கிடைக்கக்கூடிய ஆயுதம் அம்மிக்குழவி ஒன்றுதான். அதை உபயோகிக்க வேண்டியதுதான்.

நான் ஏதோ கற்பனையில் இந்த மாதிரி சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். நான் சிறுவனாக இருக்கும்போதே இந்த மாதிரிக் கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்றிலிருந்து இது வரை இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி பல கணவர்களை அவர்கள் பெண்டாட்டிகள் மேலுலகம் அனுப்பியிருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு கூட செய்தித்தாள்களில் இந்த மாதிரி செய்தி ஒன்று படித்த நினைவு இருக்கிறது.

பெண்டாட்டிகள் மட்டுமல்ல. பல புருஷர்களும் தங்கள் எதிரிகளை இவ்வாறுதான் தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள். "16 வயதினிலே" சினிமாவில் கமலஹாசன் வில்லனைத் தீர்ப்பதற்கு இந்த டெக்னிக்கைத் தான் கையாண்டது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆகவே இந்த அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு மிகவும் அர்த்தமுள்ளது என்று கூறிக்கொண்டு பதிவை நிறைவு செய்கிறேன்.