செவ்வாய், 1 நவம்பர், 2016

வாழ்வியல்

ஒரு பதிவில் திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் போட்ட பின்னூட்டம்.  இந்தப் பின்னூட்டத்தில் வாழ்வின் ஆதாரங்களைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். இதில் கூறப்பட்ட கருத்துகளை ஆழமாக சிந்தித்து பயன் பெற வேண்டுகிறேன்.

குறிப்பாக  பிழைத்தார்-செத்தார் இந்த இரண்டு சொற்களை அவர் பிரயோகித்த விதம் மிகவும் பாராட்டுக்குரியது. 


வை.கோபாலகிருஷ்ணன் said...

அவரவர் வசதிப்படி, செளகர்யப்படி, மத நம்பிக்கைப்படி, மன சாட்சிப்படி யோசிக்க வைக்கும் ஒரு சிறு நிகழ்வு பற்றி கதைஎன்ற பெயரில் இங்கு சொல்லப்பட்டுள்ளது. 

இருப்பினும் பின்னூட்டங்கள் என்ற பெயரில் பலரும் நன்றாகவே இங்கு கதைவிட்டுள்ளார்கள். 

எந்த ஒரு ஜீவனும் எதற்கும் பிறரை நம்பி இழுத்துக்கொண்டு நாறக்கூடிய அவல நிலை ஏற்படாமல், மணக்க மணக்கச் சட்டுப்புட்டுன்னு போகும் பாக்யம் செய்திருக்க வேண்டும். இதை சொல்வது மிகவும் எளிது. ஆனால் அதுபோல எல்லோருக்கும் பாக்யம் கிடைத்து நடப்பது மிகவும் கஷ்டம். 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் சிறுவயதில் செய்யும் தியாகங்களும் கடமைகளும் முற்றிலும் வேறு. 

அதை பிரதிபலனாக பிள்ளைகளிடமிருந்து தங்களின் முதுமையில் எதிர்பார்ப்பது போன்றதொரு முட்டாள்தனம் இருக்கவே முடியாது. 

இன்றைய சூழ்நிலையில் யாருக்கும் எதற்கும் நேரமோ, பொறுமையோ, சகிப்புத்தன்மையோ, சேவை மனப்பான்மையோ, உண்மையான பாசமோ இருப்பது இல்லை. எல்லாமே வெளி வேஷம் மட்டுமே என்ற கசப்பான உண்மையை இங்கு ஆணித்தரமாக வலியிறுத்திச் சொல்லிக்கொள்கிறேன். 

அழுகை உள்பட அனைத்துமே போலியானவைகள் மட்டுமே. ஆங்காங்கே அழவும் ஒப்பாரி வைக்கவும் கூட ஆள் போட்டு விடுகிறார்கள் என்பதையும் நம்மால் இன்று மிகச்சுலபமாகப் பார்க்க முடிகிறது.

பலரிடம் இன்று செலவழிக்கப் பணம் மட்டும் உண்டு. எதற்கெடுத்தாலும் காண்ட்ராக்ட் போல ஆளை நியமித்து கவனித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். பொருத்தமான தகுந்த ஆட்களும் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும், பணத்துக்காகவும் கடன் எழவுக்காகவும் வேலை செய்பவராகவே பெரும்பாலும் அமைகிறார்கள். அவர்களிடம் உண்மையான அன்பையோ, அரவணைப்பையோ நாம் எதிர்பார்க்க முடியாது. ரத்த சம்பந்தமுள்ள நமக்கே இல்லாத அன்பும் அக்கறையும் கூலிக்கு மாரடிக்க வந்திருப்போரிடம் மட்டும் எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்? 

எனவே எதற்கும் பிறர் உதவியை எதிர்பார்த்து முடியாமல் 
படுத்துவிடும் நிலைக்கு வந்த ஒருவர் ................... 

அடுத்த மூன்று நிமிஷத்திலோ அல்லது 

அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளோ அல்லது 

அடுத்த மூன்று நாட்களுக்குள்ளோ அல்லது 

அடுத்த மூன்று வாரங்களுக்குள்ளோ அல்லது கடைசி பக்ஷமாக 

அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளோ 

டிக்கட் வாங்கிக்கொண்டு புறப்படும் பாக்யம் வாய்த்தவராக இருந்தால் மட்டுமே ..... 

பி--ழை--த்--தா--ர். :)

இல்லாதுபோனால் 

செ--த்--தா--ர். :)

oooooooooooooooooooooooooo

இன்றைய உலக யதார்த்தங்களை யோசிக்க வைக்கும் நிகழ்வினை எழுதியவருக்கும், வெளியிட்டுள்ளவரும் நன்றிகள்.
October 19, 2016 at 4:42 AM

ஒரிஜினல் பதிவில் பிரசுரமான சில பின்னூட்டங்களையும் வாசகர்கள் சௌகரியத்திற்காக இங்கே கொடுத்திருக்கிறேன்.  அந்தத் தளத்தின் ஆசிரியருக்கு நன்றி.

காமாட்சி said...
வயோதிகம் ஒரு சாபம்தான். நாலுங்கிடக்க நடுவில் போய்விடுகிரார்களே அவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். வயோதிகத்திலும் வியாதிகள் இல்லாது இருப்பவர்களும் கொடுத்து வைத்தவர்கள். அனாயாஸேன மரணம் கிடைத்தால் அதைவிட பாக்கியம் கிடையாது. மற்றபடி நேரம்,காலம், பொழுது எல்லாம் பார்த்து எதுவும் வருவதில்லை. நீங்கள் எழுதியிருப்பதுபோல ஒவ்வொரு முதியவர்களும் நினைப்பார்கள். கிடைத்தால் பரலோக ஸாம்ராஜ்யம்தான். எல்லாம் எழுதுவதற்கு நன்றாக உள்ளது. அவரவர்கள் வினைப்பயன் அனுபவித்தே தீரவேண்டும். பெற்ற பிள்ளைகளோ, மற்றவர்களோ கருணையுடன் நடந்து கொள்ளுங்கள் முதியவர்களிடம் என்று வேண்டுமானால் கேட்டுக் கொள்ளலாம். நீயாரையா இதெல்லாம் சொல்வதற்கு என்று பதில் வரும். இது தொடர்கதைதானே தவிர பலவும் நல்லது,கெட்டது என எல்லா வகைகளையும் உள்ளடக்கியது.கொஞ்சம் வயதானவர்களை சிந்திக்க வைத்துவிட்ட உண்மைப் பதிவு இது. அன்புடன்
ஜீவி said...
'மனைவியின் ஒத்துழைப்பு இருந்தால்தான், ஒரு பிள்ளை அவனது கடமையைச் செவ்வையாய்ச் செய்யமுடியும்.' என்று காமாட்சி அம்மா சொன்னதை எடுத்துச் சொன்னீர்கள், ஸ்ரீராம்!

இது யதார்த்தமான உண்மை. சாமவேதத்தில் இந்த யதார்த்த உண்மைக்கும் ஒரு முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறது. மனைவி இருந்தால் தான் சாமவேதம் சார்ந்தோருக்கு தன் முன்னோர்களூக்கு
சிரார்த்தம் செய்யும் யோக்கியதையே இருக்கிறது என்று அந்த வேத்ததில் வரையறுத்து வைத்திருக்கிறது.
மருமகளுக்கு அவ்வளவு உரிமை. தாம்பாளத்தில் தணல் கொண்டு வந்து ஹோமத்தையே ஆரம்பித்து வைப்பவள் அவள் தான்.
Geetha Sambasivam said...
இந்தப் பதிவுக்கு என் கருத்தை இடுவதற்கு முன் ரொம்ப யோசித்தேன். மனம் புண்படும்படி எழுதிடுவோமோ என்ற பயம் தான். ஆனால் இப்போத் தான் ஶ்ரீராம் இங்கே வந்திருக்கும் கருத்துகளைப் படிக்கச் சொன்னார். பலரும் நான் நினைத்தாற்போலவே எழுதி இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே அறுபதைக் கடந்தவர்கள் என்பதும் புரிகிறது. இப்போது என் கருத்தைத் தாராளமாய்ச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
Geetha Sambasivam said...
தவறாக நினைக்க வேண்டாம். ஒரு கட்டத்தில் பெற்றோரைப் பார்த்துக் கொள்ள ஆள் நியமிப்பது தவறில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அந்த மகனோ, மகளோ குடும்பத்தில் அதிகம் வேலை செய்பவர்களாகவோ அல்லது அவர்களும் வயதானவர்களாகவோ அல்லது நோயாளிகளாகவோ இருக்கலாம் இல்லையா? ஒன்றுமே இல்லை என்றாலும் வேலை நிமித்தம், பணி நிமித்தம் வெளியே செல்ல நேரிடும். எப்போதும் வயதான தாய், தந்தையைக் கவனிப்பது என்பது இயலாது என்பதே யதார்த்தம்! குறைந்த பட்சமாக சாமான்கள் வாங்கவானும் வெளியே செல்ல வேண்டி இருக்கும். ஆகவே வீட்டோடு இருக்கும்படி நம்பிக்கையான ஆள் கிடைத்தால் போடுவதில் தவறில்லை என்பது என் கருத்து. வீட்டில் இருப்பவர்கள் அவங்க வீட்டு வேலையை முடிச்சுட்டு வந்து தான் வயதான பெற்றோரின் கழிவுகளை அகற்ற முடியும். அதே ஆளைப் போட்டு விட்டால் உடனடியாகச் சுத்தம் செய்வார்கள். பிரச்னைகளும் வராது இல்லையா! //

இது தான் நான் ஶ்ரீராமுக்கு இந்தக் கதை குறித்து அனுப்பிய கருத்து! நீங்களே சொல்லுங்கனு ஶ்ரீராம் சொன்னதாலே இங்கே கொடுத்திருக்கேன். ஆனால் இதைச் சொல்லும் முன்னர் ரொம்பவே தயங்கினேன். :)
Geetha Sambasivam said...
அநாயாசமான மரணமே அனைவரும் எதிர்பார்ப்பது! ஆனால் அதுக்கும் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும். மற்றபடி சிராத்தம் செய்வதோ, தானங்கள் செய்வதோ அவரவர் மனோநிலையையும் குடும்ப நிலையையும் பொறுத்தது. இந்தக் கதையில் வரும் பிள்ளை/பெண் தாயிடம் பற்று இருந்ததால் தான் தாயின் நிலை அலங்கோலமாக இருக்க வேண்டாம் என்று ஆளைப் போட்டாவது கவனிக்கச் சொல்லி இருக்கார். என்ன ஒரு குறைனால் அம்மாவிடம் அருகே அமர்ந்து தினம் பத்து நிமிஷமாவது செலவிட்டிருக்கலாம். அதற்கு அவருக்கு நேரமில்லை போலும்! அல்லது மனசு வரலையோ! எதுவோ தெரியலை. ஆனாலும் பெற்ற தாய் கடைசியில் இப்படிச் சொல்லிட்டுச் செத்திருக்கவும் வேண்டாம். நம் பிள்ளைகளுக்கு நாம் செய்துவிட்டு அதைத் தியாகம் என்று சொல்வது சரியில்லை. பிள்ளை நன்றாக இருக்கணும்னு தானே பாடுபட்டுப் பிள்ளையை வளர்க்கிறோம். நாம் மட்டுமா? எல்லாப் பெற்றோரும் செய்வது தான் இது! பிள்ளை ஒண்ணும் தெருவிலே விட்டுடலையே! தன்னோடு வைத்துக் கொண்டு ஆளைப் போட்டுத் தானே பார்த்துக்கொள்ளச் செய்தார். அதுக்கும் பணம் செலவு செய்யணும் இல்லையா? அந்த மனசு பிள்ளைக்கு இருந்திருக்கு இல்லையா?
Geetha Sambasivam said...
ஆகவே தானங்கள் செய்வதோ, சிராத்தத்தை விமரிசையாகச் செய்வதோ அவரவர் வசதிப்படி. ஒண்ணுமே கொடுக்க முடியாதவங்க சிராத்தம் செய்யாமலே இருக்காங்களா என்ன? அதுக்குத் தகுந்தாற்போல் நம் சாஸ்திர சம்பிரதாயங்கள் வளைந்து கொடுக்கிறதே தவிர கட்டாயப்படுத்த வில்லை. செய்யாமலே இருப்பவர்களை வற்புறுத்திச் செய்ய வைப்பதும் இல்லை. அவரவர் மன விருப்பம், பண வசதி பொறுத்தே தானங்கள் கொடுப்பது எல்லாம் நடைபெறும். ஒரு சில இடங்களில் புரோகிதர்கள் கேட்பதாகச் சொல்கின்றனர். ஆனால் எனக்குத் தெரிந்து புரோகிதர்கள் வசதி இல்லாதவங்களுக்குக் குறைவான செலவிலேயே முடித்துத் தருவதையும் பார்த்திருக்கேன்.
Geetha Sambasivam said...
//மனைவி இருந்தால் தான் சாமவேதம் சார்ந்தோருக்கு தன் முன்னோர்களூக்கு
சிரார்த்தம் செய்யும் யோக்கியதையே இருக்கிறது என்று அந்த வேத்ததில் வரையறுத்து வைத்திருக்கிறது.
மருமகளுக்கு அவ்வளவு உரிமை. தாம்பாளத்தில் தணல் கொண்டு வந்து ஹோமத்தையே ஆரம்பித்து வைப்பவள் அவள் தான்.//

எல்லா வேதங்களிலும் ஔபாசனம் சிராத்தம் செய்யும் குடும்பத் தலைவரின் மனைவியால் தான் ஆரம்பித்து வைக்கப்படும். அதைத் தொடர்ந்து சிராத்தம் ஆரம்பிக்கும் முன்னும் கணவன் மனைவியின் அனுமதி வாங்கித் தான் செய்ய ஆரம்பிப்பார். இது பொதுவானது. ஆனால் சாமவேதத்தில் மனைவி உயிருடன் இல்லை என்றாலோ, உடல்நலமின்றிப் படுத்த படுக்கையாக இருந்தாலோ, வீட்டுக்கு விலக்காக இருந்தாலோ, வெளிஊர் சென்றிருந்தாலோ கணவனுக்கு ஹோமம் வளர்த்து சிராத்தம் செய்யும் அருகதை கிடையாது. ஹோமம் இல்லாமல் வெறும் சிராத்தம் மட்டுமே நடக்கும். அதே போல் இரு பிராமணர்கள் பிதுர்க்களாகவும், ஒரு மஹாவிஷ்ணுவும் உண்டு. சமையலும் சிராத்த சமையல் தான் செய்யணும். ஆனால் ஹோமம் மட்டும் இருக்காது. இது நான் இல்லாத சமயங்களில் என் கணவர் செய்திருக்கார். என் கடைசி மைத்துனர் அவர் மனைவிக்கும், தந்தைக்கும் செய்து வரும் சிராத்தத்தில் ஹோமம் இல்லாமலேயே செய்து வருகிறார். இரணிய சிராத்தம் எனப்படும் சிராத்தத்தில் தான் யார் செய்தாலும் எந்த வேதக்காரர்களாக இருந்தாலும் ஹோமம் இல்லை. சிராத்த மந்திரங்களும் அதற்குத் தனியாக உண்டு.
Geetha Sambasivam said...
சாமவேதத்தில் மனைவி இல்லைனா கணவன் சிராத்தமே செய்யக் கூடாது என்றெல்லாம் சொல்லபப்டவில்லை! சிராத்தம் செய்! ஆனால் மனைவி இல்லாமல் ஹோமம் வளர்க்காதே! என்பது தான் சொல்லப்பட்டிருக்கிறது.
ஞா. கலையரசி said...
எத்தனை நாளுக்குத்தான் இப்படி இழுத்துக்கொண்டு இருக்கப்போகுதோ

தெரியல? வேலைக்குப் போக முடியல, நிறைய செலவு, எப்பதான் முடியுமோ தெரியல”. இப்படிப்பட்ட வார்த்தைகளை அம்மா காதுபட மகன் பேசுவது தான் தவறு. முதுமையில் படுக்கையில் விழுந்தால் நமக்குமே இதே கதிதான். திரு கோபு சார் சொல்லியிருப்பது போல பெற்றோர் நன்றிக்கடனைப் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான். பல வீடுகளில் இது தான் இன்றைய நிலைமை. யதார்த்தமான கதைக்குப் பாராட்டுக்கள் வெங்கட்!
RAVIJI RAVI said...
அம்மா செய்தவற்றிற்கு பிரதி பலன் எவராலும் செய்துவிடமுடியுமா? ஒரு விழுக்காடாவது...? சுத்தம் செய்யவாவது ஒரு ஆளை ஏற்பாடு செய்தவரையில்...சரிதான். ஒருவரின் மறைவிற்குப்பிறகு இதை செய்திருக்கலாமே ...விட்டுவிட்டோமே என்ற எண்ணம் மேலிடுவதும் இயல்புதான். பெத்த மனம் பித்து...பிள்ளை மனம் கல்லு...ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்! சற்றே உணர்ச்சிகரமான பதிவுதான். நன்றி!!!
Geetha Sambasivam said...
அதே போல் சாம வேதத்தில் மூத்த பிள்ளைக்கு மனைவி இல்லை என்றாலோ அல்லது மனைவியால் சிராத்தத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனாலோ அடுத்த பிள்ளையின் மனைவி இருந்தால் கூட ஹோமம் பண்ணி சிராத்தம் என்பது இல்லை. மூத்த பிள்ளையின் மனைவி இருந்தால் மட்டுமே மூத்த பிள்ளை செய்யும் சிராத்தத்தில் ஹோமம் உண்டு. தம்பி மனைவி இருந்தால் கூட ஹோமம் இல்லை. மூத்த பிள்ளை, மூத்த மருமகள் இருவருமே இல்லை என்றால் மட்டுமே அடுத்த பிள்ளை தன் மனைவியுடன் சேர்ந்து ஹோமம் வளர்த்துப் பெற்றோரின் சிராத்தம் செய்யலாம்.
ஜீவி said...
கீதாம்மா, வேதங்களில் கூட யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காக நான் அழுத்தமாக எடுத்துக்காட்டிய ஒரு விஷயத்தை ரொம்பவே dilute பண்ணி விட்டீர்கள்.
வெங்கட் நாகராஜ் said...
கதையல்ல நிஜம்.....

சில விஷயங்கள் நம்மைப் பாதிக்கும் விதமாகவே இருக்கின்றன. ஆள் வைத்து பார்த்துக் கொள்வதில் தவறில்லை - இருந்தாலும் பெற்ற குழந்தைகளும் கொஞ்சம் அனுசரணையாக இருக்கலாமே என்பதைச் சொல்லத்தான் இந்தப் பகிர்வு.

தங்களது கருத்துகளைச் சொன்ன அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. எனது பகிர்வையும் இங்கே வெளியிட்ட “எங்கள் பிளாக்” ஆசிரியர் குழுவிற்கு மனம் நிறைந்த நன்றி.

அலுவலக வேலைகள், தமிழகப் பயணம் என சில நாட்களாக பதிவுலகம் பக்கம் வர இயலாத சூழல்..... கருத்துச் சொன்ன அனைவருக்கும் தனித்தனியாக பதில் சொல்ல முடியவில்லை. அனைவருக்கும் மீண்டும் நன்றி!
Thulasidharan V Thillaiakathu said...
ஹை நம்ம வெங்கட்ஜி! அவர்களின் கதை! அருமையான கதை. ஜிக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்.

துளசி, கீதா...

கீதா: பொதுவாக கருத்திடும் முன்னர் பிற பின்னூட்டங்களைப் பார்ப்பது இல்லை. கருத்திட கீழே அழுத்திக் கொண்டே வரும் போது சுப்புத்தாத்தாவின் கருத்தில் ஒரு வரி கண்ணில் படவும் உடனே வாசித்தேன்.அப்படியே நான் அடிக்கடிச் சொல்லும் கருத்து. நானும் எனது மகனுக்குச்சொல்லியிருப்பது அதுதான்..தாத்தாவின் அம்மா சொல்லியிருப்பது போல். அந்தத் தினம் என்றில்லாமல் எப்போதுமே...

அருமையான கருத்துடனான கதை. முடிவும் கண்ணில் கண்ணீஈர் வரவஹைத்துவிட்ட்து. எங்கள் ப்ளாகிற்கு மிக்க நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் said...
இந்தப்பதிவினில் நான் எழுதியுள்ள பின்னூட்டத்தைப் படித்து, மகிழ்ந்து, வியந்து, பாராட்டி ‘வாழ்வியல்’ என்ற தலைப்பினில் இன்று நம் பெரியவர் .. முனைவர் கந்தசாமி ஐயா அவர்கள் தனது ‘மன அலைகள்’ என்ற வலைத்தளத்தினில் தனிப்பதிவே வெளியிட்டுள்ளார்கள்.

இதோ அதற்கான இணைப்பு:

http://swamysmusings.blogspot.com/2016/11/blog-post.html

இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
Anonymous said...
//அவை என்னுடைய தியாகங்களுக்கு
ஈடாகுமா//

பெற்றோருடைய அன்பு, பாசம், தியாகம் என்பது அரித்தால் சொரிந்துகொள்வது போல. Basic instinct. அடுத்த வீட்டு குழந்தைக்கு செய்தால்கூட கொஞ்சம் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அதுவும் Basic instinct தான். சுயநலத்துடன் குழந்தையை வளர்த்தால், குழந்தைகளும் வளர்ந்த பிறகு சுயநலத்துடன்தான் இருக்கும். முற்பகல் செய்யின்.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

வருமான வரி - சில விளக்கங்கள்

       Image result for வருமான வரி                   
"வருமானவரி என்றால் என்ன?": 

SUBBU உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்

இதில் இன்னமும் பல சந்தேகங்கள் உள்ளன, நான் தற்போது ஓய்வு பெற்றுவிட்டேன்,எனக்கு கிடைத்த சுமார் 30 லச்சம் தொகையை வங்கி டெபாசிட்டில் போட்டு மாதா,மாதம், சுமார் 24000/- வட்டியும், பென்ஷன் ஆக ரூபாய் 20000/-சேர்த்து மாதம் மொத்தம் 44,000/- பெறுகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள். 


நான் பெரும் வட்டிக்கு 10% வருமான வரி பிடித்தம் வங்கியிலேயே பிடித்தம் செய்த பிறகும் நான் ஆண்டுதோறும் வருமான ஆண்டின் எந்த மொத்த வருமானத்திற்கு ரிடர்ன்   சமர்பிக்க வேண்டும், அல்லது ரிடர்ன் சமர்ப்பிக்க வேண்டாமா  என்பது குறித்து தெளிவு படுத்துமாறு கேட்டுகொள்கிறேன்.

நான் சுமார் 40 ஆண்டுகளாக வருமான வரி கட்டி, வருமான வரி ரிடர்ன் சமர்ப்பித்துக்கொண்டு வருகிறேன். ஆகவே இந்த மாத சம்பளம் /பென்சன் வாங்குபவர்களின் வருமான வரி சமாச்சாரங்கள் ஓரளவு எனக்கு அத்துபடியாகி உள்ளன.

இந்த வருமான வரி சமாச்சாரத்தில் ஒருவர் இரண்டு நிலைப்பாடுகளை எடுக்கலாம். 

ஒன்று:  சட்டப்பிரகாரம் என்ன வரி உண்டோ அதைக் கட்டிவிட்டு வருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்து விட்டு நிம்மதியாக இருப்பது.

இரண்டு: பலவிதமான கோல்மால்கள் செய்து வரி கட்டாமல் தப்பித்து இரவில் தூக்கம் வராமல் தவிப்பது. இந்த இரண்டாவது வழியும் எனக்குத் தெரியும். ஆனால் அதைப் பற்றி நான் இங்கு விவரிக்கப்போவதில்லை. அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பவர்களுக்கு, நேரில் வந்தால் ட்யூஷன் எடுக்கப்படும். பீஸ் உண்டு.


முதல் வழி நேர் வழி. அதற்கு வருவோம். முக்கியமான சில அம்சங்களைப் பற்றி மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

1. சம்பளம், பென்சன், பேங்க் வட்டி இவைகள் அனைத்தும் ஒருவனின் வருமானமே. இதற்கு வருமான வரி கட்டவேண்டும்.

2. 60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 2.5 லட்சம் வரை வரி இல்லை.

3. 60 வயதிற்கு மேற்பட்டு 80 வயதுக்குள் இருப்பவர்களுக்கு 3.0 லட்சம் வரை வரி இல்லை.

4. 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 5.0 லட்சம் வரை வரி இல்லை.

இப்போது "சுப்பு" அவர்களின் பிரச்சினைக்கு வருவோம்.

அவருக்கு மாதம் 20000 ரூபாய் பென்சன். அதாவது வருடத்திற்கு 2.4 லட்சம். இது மட்டுமே அவர் வருமானம் என்றால் அவர் வருமான வரி கட்டத்தேவையில்லை.

ஆனால் அவர் 30 லட்சம் ரூபாயை பேங்கில் 8% வட்டிக்குப் போட்டிருக்கிறார். அதன் மூலம் அவருக்கு வருடம் ஒன்றுக்கு இன்னுமொரு 2.4 லட்சம் வருமானம் வருகிறது. ஆக மொத்தம் அவருக்கு வருடத்திற்கு 4.8 லட்சம் வருமானம் வருகிறது.

இதில் அவருக்கு 60 வயது பூர்த்தி ஆகியிருந்தால் 3.0 லட்சத்திற்கு வரி கட்டவேண்டியதில்லை. மீதி உள்ள 1.8 லட்சத்திற்கு 10% வீதம் 18000 ரூபாய் வரி கட்ட வேண்டும். ஒருக்கால் அவருடைய பேங்கில் 10% வரியாக சுமார் 24000 ரூபாய் ஏற்கெனவே பிடித்தம் செய்திருந்தால் அதற்கு உண்டான சர்ட்டிபிகேட்டை வாங்கிக் கொள்ளவேண்டும்.

அவர் அந்தப் பேங்க்கில் 20 லடசம் மட்டும் போட்டிருந்தால் இந்த வரிப்பிடித்தம் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விடலாம். அப்போது பேங்க்கில் இந்த வரிப்பிடுத்தம் செய்ய மாட்டார்கள். 

அவர் கட்டவேண்டிய வரி 18000 மட்டுமே. பேங்க் அதிகமாகப் பிடித்தம் செய்துள்ள 6000 ரூபாயை இன்கம்டாக்ஸ் ரிடர்ன் சமர்ப்பித்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

எப்படியும் அவர் ரிடர்ன் சமர்ப்பித்தே ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்க முடியாது.

வியாழன், 27 அக்டோபர், 2016

சுயமாக முடி வெட்டிக் கொள்ளல்

                                     Image result for self hair cutting


நான் சிறுவனாக இருந்தபோது இப்போது உள்ளது  போல் முடி வெட்டும் கடைகள் இருக்கவில்லை. ஒரு தெரு முனையில் நாலைந்து நாவிதர்கள் தங்கள் உபகரணங்கள் அடங்கிய ஒரு பெட்டியை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். (கவுண்டமணி ஒரு ஜோக்கில் ஆற்றிற்குள் ஒரு பெட்டியைத் தூக்கி எறிவாரே, அந்த மாதிரிப் பெட்டி)

நாம் போய் கூப்பிட்டால் நம்முடன் நம் வீட்டிற்கு வருவார்கள். வீட்டு வாசலில் ஒரு ஓரமாக உட்கார்ந்து நமக்கு முடி வெட்டிவிட்டு, அந்த வெட்டின முடிகளை எல்லாம் எடுத்து தூரமாகப் போட்டு விட்டு, நாலணா, அதாவது இன்றைய கணக்கில் இருபத்தியைந்து பைசா வாங்கிக்கொண்டு போவார்கள்.

பிறகு நாம் குளித்து விட்டுத்தான் வீட்டுக்குள் போகவேண்டும். அந்த நாளைய வழக்கங்கள் அப்படித்தான் இருந்தன. பிறகு முடி வெட்டும் கடைகள் உருவாகின. எல்லோரும் அங்குதான் சென்று முடி வெட்டிக்கொள்ளவேண்டும் என்கிற நிலை உருவாகியது. இருந்தாலும் சில பணக்காரர்களின் வீட்டுக்கு நாவிதர்கள் போவது வழக்கத்தில் இருந்தது. இந்த வழக்கம் இன்றும் சில கிராமங்களில் இருக்கிறது.

நானும் சலூனுக்குப் போய் முடி வெட்டிக் கொள்ள ஆரம்பித்தேன். கடைசியாக வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சலூனுக்கு ஒரு இருபது வருடமாகப் போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது முடி வெட்ட எங்கள் ஊரில் எண்பது ரூபாய் வாங்குகிறார்கள். தீபாவளி சமயத்தில் இது நூறு ரூபாயாக உயரும்.

இங்கு உள்ள முக்கிய உபகரணங்கள் இரண்டே. கத்தரிக்கோலும் சீப்பும். இந்த இரண்டை உபயோகித்தே நாவிதர் உங்களுக்கு முடி வெட்டி விடுவார்.

Image result for சீப்பு
Image result for scissors cutting hair

முன்பெல்லாம் என் தலையில் முடி அடர்த்தியாக இருந்தது. வரவர முடியெல்லாம் கொட்டிப்போய் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக முடிகள் இருக்கின்றன. இப்போதும் என்னிடம் அந்த நாவிதர் அதே சார்ஜ்  வாங்குகிறார்.

முடி நிறைய இருப்பவர்களிடம் வாங்கும் அதே ரேட்டை என்னிடமும் வாங்குகிறாயே, என் தலையில்தான் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தானே முடிகள் இருக்கின்றன, ரேட்டில் கொஞ்சம் குறைத்துக்கொள்ளக் கூடாதா என்று ஒரு நாள் கேட்டேன்.

அந்த நாவிதர் அதற்குக் கூறிய பதிலில் நான் அசந்து விட்டேன். "சார், நியாயமாக உங்களிடம் நான் அதிக ரேட் வாங்கவேண்டும். ஏனென்றால் முடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதால் அவைகளைத் தேடிப்பிடித்து வெட்ட வேண்டியிருக்கிறது. அதற்கு அதிக நேரம் செலவாகிறது. அதனால் இனிமேல் உங்களிடம் அதிக சார்ஜ் வாங்கலாம் என்று இருக்கிறேன்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.

அப்படியா என்று அன்று வீட்டிற்கு வந்த பிறகு அவன் சொன்னதைப் பற்றி யோசித்தேன். நாம் ஏன் சலூனுக்குப் போய் முடி வெட்டிக்கொள்ள வேண்டும். இருப்பதோ கொஞ்சம் முடிகள்தான். அவைகளை நானே ஏன் வீட்டிலேயே வெட்டிக்கொள்ளக்கூடாது என்று ஒரு யோசனை தோன்றியது. இப்போது நாம் சுயமாகத்தானே ஷேவிங்க் செய்து கொள்கிறோம். பின் ஏன் சுயமாக முடி வெட்டிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. அமெரிக்காவில் இப்படித்தான் சுயமாக முடி வெட்டிக்கொள்வார்களாமே என்று எங்கோ படித்ததும் நினைவிற்கு வந்தது. உடனே செயலில் இறங்கினேன்.

எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். "கண் பார்த்தால் கை செய்ய வேண்டும் " என்பார்கள். எத்தனை வருடமாக நான் சலூனுக்குப் போய் முடி வெட்டிக்கொண்டிருக்கிறேன்? வேண்டியதெல்லாம் ஒரு சீப்பும் ஒரு கத்தரிக்கோலும்தானே என்று அடுத்த தடவை நானே முடி வெட்டிக்கொண்டு விட்டேன்.

என்ன, ஆங்காங்கே எலி கரண்டினமாதிரி திட்டுத்திட்டாய் இருந்தது.
இரண்டு நாள் வெளியில் தலை காட்டவில்லை. மூன்றாவது நாள் கண்ணாடியில் பார்த்தேன். அதிக மோசமாகத் தெரியவில்லை. தைரியமாக வெளியில் நண்பர்களப் பார்க்க கிளம்பினேன். என்னைப் பார்த்த நண்பர்கள் என் தலையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆஹா, நம் முயற்சி வெற்றி என்று எண்ணிக்கொண்டேன். இனி இதுவே நம் வழக்கமாக வைத்துக்கொள்வோம் என்று முடிவு செய்தேன்.

அமேசான் தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த டிரிம்மர் கண்ணில் பட்டது. ஆஹா, இதை வாங்கி வைத்துக் கொண்டால் நம் முயற்சிக்குத் துணையாக இருக்குமே என்று மனதிற்குத் தோன்றியது.
Image result for self hair cutting
உடனே இதை 1500 ரூபாய் கொடுத்து வாங்கி விட்டேன். பரீட்சித்துப் பார்த்ததில் உபயோகமாக இருந்தது.

பிறகு இன்னுமொரு யோசனை தோன்றியது. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று தோன்றியது. ஆகவே சுயமாக முடி வெட்டிக்கொள்ளும் யோசனை யாருக்காவது இருந்தால் அவர்களுக்கு இலவசமாக கோச்சிங் வகுப்புகள் நடத்துவதாக முடிவு செய்துள்ளேன். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செவ்வாய், 25 அக்டோபர், 2016

நான் ஒரு பாபியானேன்.

                      Image result for punishments in hell in hinduism

நான் நன்றாகத்தான் இருந்தேன். தினம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு, இரண்டு தடவை காப்பி குடித்து விட்டு, பகலில் மூன்று நான்கு மணி நேரம், இரவில் ஒரு ஆறு மணிநேரம் தூங்கி விட்டு, அவ்வப்போது நண்பர்களைப் பார்த்து அளவளாவி விட்டு, வாரம் ஒரு பதிவு எழுதி அன்பர்களைத் திருப்திப் படுத்தி விட்டு நானும் திருப்தியாக இருந்தேன்.

நான் இதுவரை எனக்குத் தெரிந்து யாரையும் கொலை செய்ததில்லை. ஆனால் நான் செய்த உணவைச் சாப்பிட்டு ஒருவர் இறந்திருக்கிறார். அது கொலைக் குற்றத்தில் சேராது என்று நம்புகிறேன். தவிர சில-பல பதிவுகள் அறுவையாகப் போட்டிருக்கிறேன். அதைப் படித்துவிட்டு யாரேனும் தற்கொலை செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

நான்  இப்படியிருக்க, என் சந்தோஷம் அந்தக் கடவுளுக்கே பொறுக்கவில்லை போல் இருக்கிறது. எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள ஒரு விநாயகர் கோவிலை திருப்பணி செய்கிறோம்  என்று இடித்துப்போட்டு ஆறேழு வருடங்களாக ஒன்றும் செய்யாமல் சும்மா கிடந்தது. திடீரென்று ஒரு மகானுபாவன் தலையிட்டு அந்தக் கோவிலின் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகமும் வைத்து விட்டார்.

என் வீட்டு அம்மணிக்கு அந்தக் கோவில் என்றால் உயிர். கும்பாபிஷேகம் நடக்க யாகசாலைகள் அமைக்கும்போதே அங்கு போய்விடுவார்கள். யாகசாலை அமைத்து ஐந்து காலங்கள் யாகம் நடந்து கும்பாபிஷேகம் முடியும் வரை அம்மணிக்கு 24 மணி நேரமும் கோயில் ட்யூட்டிதான். இதில் எனக்கு என்ன தொல்லை என்றால் கோயிலில் ஆன்மீகப் பிரசங்கம் நடக்கிறது, நீங்கள் ஒரு நாளாகிலும் வந்து கேட்கக்கூடாதா ? என்று வசவு வேறு.

சரி, வந்தது வரட்டும் என்று ஒரு நாள் அந்தப் பிரசங்கத்தைக் கேட்டகப் போனேன். பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு பக்கத்து அரங்கில் நடக்கும் உபன்யாசத்தைக் கேட்கப்போனேன். உபன்யாசகர் அட்டகாசமாக மேக்கப் போட்டுக்கொண்டு கூடவே ஒரு அழகிய நங்கையையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அந்தப் பொண் பின்பாட்டு பாடுவதற்காம். (அவர்கள் போட்டோ கிடைக்கவில்லை).

அந்தப் பொண்ணு நன்றாகவே பாடியது. அதைக் கேட்பதற்காகவே ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தேன். நடு நடுவில் உபன்யாசகரும் அவர் சரக்கை எடுத்து விட்டுக்கொண்டிருந்தார். அவர் கூறியவைகளில் சக்கையை நீக்கி சாரத்தை மட்டும் கொடுக்கிறேன்.

நீங்கள் பிறந்த்தின் நோக்கம் ஆண்டவன் அடைவதே. அப்படி ஆண்டவனை அடைய நீங்கள் புண்ணியம் செய்யவேண்டும். பாப கர்மாக்களை செய்யக் கூடாது. கொலை செய்வதும் திருடுவதும் மட்டுமே பாப காரியங்கள் என்று நீங்கள்  நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தவறு.

ஒருவன் தன் முயற்சியால் பாடுபட்டு பணக்காரன் ஆகிறான். அவனைப் பார்த்து அற்பனுக்கு வந்த வாழ்வைப் பார் என்று பொறாமைப் பட்டால் அதுவும் பாப காரியமே.

உன் நண்பணின் பெண் காதல் கல்யாணம் செய்து கொண்டாளா? அவளைப் பற்றி கேலமாகப் பேசினால் அதுவும் பாவமே. யாராவது புருஷன் பெண்டாட்டி சண்டை போட்டுக் கொண்டார்களா, இல்லை பொண்டாட்டி புருஷன் தலையில் அம்மிக்குழவியைப் போட்டாளா என்று ஊரில் நடக்கும் வம்புகளைப் பற்றி நாலு பேர் கூடிப் பேசுகிறீர்களா? இவைகளை எல்லாம் சித்திரகுப்தன் உங்கள் பாபக் கணக்கில் ஏற்றி விடுவான்.

நீங்கள் யமபட்டணம் போனதும் அவன் இந்தக் கணக்குகளையெல்லாம் விலாவாரியாக யமனிடம் விஸ்தாரமாகச் சொல்லுவான். யமன் அவைகளை எல்லாம் கேட்டு விட்டு, சரி, இவனை ஆறு மாதம் கொதிக்கும் எண்ணைக் கொப்பறையில் போடுங்கள் என்று தார்ப்பு சொல்லி விடுவான்.

இப்படியாக அவருடைய உபன்யாசம் நடந்தது. வீட்டுக்கு வந்து அன்று படுக்கையில் படுத்தவுடன் அவர் சொல்லிய பாப லிஸ்ட்டுகள் மனதில் ஓடின. நாம் தினமும் இவைகளைத்தானே செய்து வருகிறோம். இவைகளைதானே நாம் பொழுது போக்க உதவுகின்றன. அப்படியானால் நாம் யம பட்டணம் போனால் நம்மை எண்ணைக் கொப்பறையில்தான் போட்டு கொதிக்க வைப்பார்களே?

ஐயோ, கடவுளே, என்னை இப்படி ஒரே நாளில் பாபியாக்கி விட்டாயே, நான் இனி என் செய்வேன் என்று நினைத்துக் கொண்டே
தூங்கி விட்டேன். கனவில் யம கிங்கரர்கள் என்னை எண்ணைக் கொப்பறையில் போட்டு வேக வைப்பதாகவே கனவுகள் வந்தன.

தூங்கி எழுந்ததும் அந்த உபன்யாசகரிடமே போய் இந்தப் பாவல்களுக்கு என்ன விமோசனம் என்று கேட்டு வரவேண்டும் என்று முடிவு பண்ணி விட்டுத் திரும்பவும் தூங்கினேன்.

இந்தப் பாபங்களுக்கு விமோசனம் உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் தவறாமல் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

செவ்வாய், 18 அக்டோபர், 2016

"பேலியோ" டயட்

                         
                         Image result for paleolithic age

பேலியோலித்திக் காலம் என்பது  (Paleolithic age) மனித இன பரிணாம வளர்ச்சியில் இரண்டரை மில்லியன் வருடங்களுக்கு முந்திய காலம். இதை பழைய கற்காலம் என்று கூறுவார்கள். மனிதன் நாகரிகம் அடையாத காலம். மொழி தோன்றாத காலம்.

இந்தக் காலத்தில் மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதைப் பற்றிய செய்திகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிலபல ஆதாரங்களைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் யூகித்தறிந்தவையே. இந்த யூகங்களின் அடிப்படையில் அக்காலத்து மனிதர்கள் எவ்வகையான உணவைச் சாப்பிட்டிருந்திருப்பார்கள் என்ற செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

இயற்கையில் விளைந்திருக்கக்கூடிய பழங்கள், கிழங்கு வகைகள், சிறு அல்லது நடுத்தர அளவுள்ள மிருகங்கள் ஆகியவைகளே அவர்களின் உணவாக இருந்திருக்கக் கூடும். இது ஒரு யூகம் மட்டுமே. இந்த உணவுத் தேடல்களுக்கு அவன் கற்களால் ஆன சில கருவிகளை உபயோகித்திருக்கக்கூடும். அத்தகைய கருவிகள் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்திருக்கின்றன.

இந்த யூகங்களின் அடிப்படையில் இப்போது ஒரு இயக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது "பேலியோ டயட்" என்ற இயக்கம்.
அதாவது கற்காலத்து மனிதன் மாமிசம் மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தான். அவன் ஆரோக்யமாக இருந்தான். அதே போல் நாமும் இப்போது மாமிச உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆரோக்யமாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

இது பற்றி எவ்வளவோ பேசலாம், எழுதலாம், விவாதம் செய்யலாம். ஆனால் அதற்கு இந்தப் பதிவு மட்டுமே போதாது. உலகில் அவ்வப்போது சிலர் இந்த மாதிரி ஒரு புது வார்த்தையை உபயோகித்து பல ஜாலங்கள் செய்வதுண்டு. மக்களை மயங்குமாறு பேச்சுத் திறமையை உபயோகித்து, மக்களை மூளைச் சலவை செய்வதுண்டு.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே எழுகின்றது. அதாவது கற்காலத்து மனிதனுக்கு நெருப்பை உபயோகிக்க தெரிந்திருக்கவில்லை. அதே போல் உப்பையும் அவன் கண்டிருக்கவில்லை. இப்போது பேலியோ உணவைப் பற்றிப் பேசுபவர்கள் அவ்வாறே நெருப்பை உபயோகப் படுத்தாமலும் உப்பையும் உபயோகப் படுத்தாமலும் அவர்கள் உணவைச் சாப்பிடுகிறார்களா?

பதிவர்கள் தங்கள் சொந்த புத்தியை உபயோகப்படுத்தி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இங்கே ஒருவர் மூளைச்சலவை செய்வதைக் கேளுங்கள்.

புதன், 12 அக்டோபர், 2016

"வந்து" எனும் அசைச்சொல்

                            Image result for பேச்சாளர்

மேடைகளில்  தமிழில் நீங்கள் பேசுவதுண்டா? இதோ இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

நான் மதுரை விவசாயக்  கல்லூரியில் இணைப் பேராசிரியராக வேலை பார்த்த காலத்தில் (அது ஒரு பழைய கற்காலம் - 1976-80)
அங்கு பல பயிற்சி நிறுவனங்களிலிருந்து எனக்கு பேச அழைப்புகள் வரும். நான் அப்போது ஓரளவு மேடைப்பேச்சுகளில் திறமை பெற்றிருந்தேன். மேலே கொடுத்துள்ள பேச்சாளர் சுகி சிவம் அளவு இல்லையென்றாலும் அவர் திறமையில் நூற்றில் ஒரு பங்கு திறமை கொண்டிருந்தேன்.

மதுரையிலுள்ள ஒரு தொழிற்பயிற்சிப் பள்ளியில் என்னை விவசாயத்தைப் பற்றிப் பேச அழைத்திருந்தார்கள். இரண்டு மணி நேரம் உரையாற்றவேண்டும். ஒரு மணி உரையாடலுக்குப் பின் பத்து நிமிடம் இடைவெளி. நான் முதல் சொற்போழிவை முடித்து விட்டு உட்கார்ந்தேன். அந்த தொழில் பயிற்சி நிலையத்தின் முதல்வர், உங்களுடைய உரை நன்றாக இருந்தது. ஆனால் இடையிடையே "வந்து" என்கிற அசைச் சொல்லை அதிகமாக உபயோகிக்கிறீர்கள், அதைத் தவிர்த்தால் உங்கள் உரை மேலும் சிறப்பாக இருக்கும் என்றார்.

அடுத்த உரையின்போது மிக க் கவனமாக அந்தச் சொல்லைத் தவிர்த்தேன். அதன் பிறகு எப்போது மேடையில் பேசுவதாக இருந்தாலும் இந்த கவனம் இருந்து கொண்டிருந்தது.

உதாரணத்திற்கு:

இப்போ வந்து நீங்க என்ன பண்ணறீங்கன்னா, அங்க கடைக்குப் போய் வந்து நான் சொன்ன சாமானை வாங்கறீங்க, அப்புறம் வந்து வீட்டுக்கு வர்றீங்க.

பலர் இது மாதிரி அடிக்கடி இந்த வார்த்தையைத் தங்கள் பேச்சில் உபயோகப் படுத்துவதைக் கேட்டிருப்பீர்கள்.

கீழே கொடுத்திருக்கும் விடியோ பேச்சைக் கேளுங்கள். அதில் ஐந்து நிமிடம் பேசுவதற்குள் பத்து தடவை இந்த "வந்து" எனும் வார்த்தையை உபயோகப் படுத்தியிருப்பார். இந்த வார்த்தைக்கு அர்த்தம எதுவும் இல்லை. இது வெறும் அசைச் சொல்லே.



மேடைகளில் பேசும் வாய்ப்புள்ள பதிவர்கள் இந்த நுணுக்கத்தை மனதில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வியாழன், 6 அக்டோபர், 2016

போன மச்சான் திரும்பி வந்தாண்டி பூமணத்தோட

                       
                  Image result for a Tamil bride
இப்படி ஒரு பழமொழியை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். அத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மசான வைராக்யம், பிரசவ வைராக்யம் இந்த இரண்டையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இவைகளுக்கெல்லாம் பதவுரை, பொழிப்புரை, கருத்துரைகள் தேவையில்லாமலேயே எல்லோரும் விளங்கிக் கொள்ளக்கூடியவை. இவைகளைப் புரிந்து கொண்டவர்கள் நான் ஏன் பதிவுகள் போடாமல் ஒரு மாதம் இருந்தேன் என்பதையும் நான் சொல்லாமலேயே புரிந்து கொண்டிருப்பார்கள்.

கடைசியாக ஒரு சமகாலப் பிரச்சினை பற்றி என் மேலான (அல்லது சிலர் கருத்தில் கீழான) கருத்துக்களை ஒரு பதிவு போட்டிருந்தது படித்தவர்களுக்கு நினைவு இருக்கலாம். அதில் குறிப்பாக சிலருக்கு என் வயது ஒரு உறுத்தலாக இருந்திருக்கிறது. அதாவது வயது குறைவாக இருந்தால் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். வயது ஆன பின் இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று கருத்து சொன்னார்கள். சரி போகட்டும் என்று அந்தப் பதிவை நீக்கினேன்.

நண்பர் தமிழ் இளங்கோ அவர்கள் தொலை பேசியில் என்னிடம் பேசி சில கருத்துக்களைச் சென்னார். அதிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் இந்த உலகை சீர்திருத்த தனி மனிதனால் முடியாது என்பதுதான்.

சரி, இந்தப் பதிவுலகை விட்டு விலகி இருக்கலாம் என்று முடிவு எடுத்தேன். ஆனாலும் என் பதிவுகளைப் பார்வையிடுபவர்களை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் புதிதாகப் பதிவுகள் எழுதினாலும் எழுதாவிட்டாலும் என் பதிவுகளை மகாஜனங்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூகுளாரின் வரவு செலவு அறிக்கை கூறுகிறது.

இது வரையில் நான் ஆயிரம் பதிவுகளுக்கு மேல் எழுதி விட்டேன். இன்றைய தேதியில் பத்து லட்சம் மக்கள் என் பதிவுகளைப் பார்வையிட்டிருக்கிறார்கள். என் பதிவின் தமிழ் மணம் ரேங்க் ஒரு நூறையாவது எட்டியிருக்கும் என்று பார்த்தால் பனிரெண்டைத் தாண்ட மாட்டேன் என்கிறது.

ஆகவே என் பதிவுகளுக்கு என்று ஒரு வாசகர் வட்டம் இருப்பதை அறிந்தேன். அவர்களை ஏமாற்றக்கூடாது என்ற நல்ல அல்லது கெட்ட எண்ணத்தினால் திரும்பவும் எழுதலாம் என்று வந்து விட்டேன்.

பதிவுலக வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். வழக்கம்போல் என்னைத்திட்டி பின்னூட்டம் போடுவதை நிறுத்த வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

பின் குறிப்பு: இதுக்கு எதுக்கு பொம்பளை படம் என்று கேட்பவர்களுக்கு, அந்தப் பெண் பூ வைத்திருப்பதைப் பார்த்தீர்களல்லவா, தலைப்பிலும் பூமணம் இருப்பதைப் பார்த்தீர்களல்லவா, அதுதான் சம்பந்தம்.