வியாழன், 26 மார்ச், 2009

நான் படித்த புத்தகம்

கொலஸ்ட்ரால்-குறைப்பது எப்படி என்ற புத்தகத்தை டாக்டர் சு.முத்துக்குமாரசாமி என்பவர் எழுதி New Horizon Media Pvt. Ltd. என்ற நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் யாராவது கொஞ்சம் தலைக்கனம் பிடித்து அலைந்தால் ‘அவனுக்கு கொழுப்பு ஏறிப்போச்சு என்று சொல்வது வழக்கம்’. இது ஒரு பேச்சுக்காக சொல்வது. ஆனால் தற்போது பெரும்பாலான-வர்களுக்கு நிஜமாகவே கொழுப்பு அதிகமாகி விட்டது. மருத்துவர்கள் இதை நாகரிகமாக கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
ஒரு மனிதனுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்றவுடனேயே எல்லோரும் நினைப்பது என்னவென்றால் ஏதோ அந்த மனிதனுக்கு வரக்கூடாத நோய் வந்து விட்டது, அந்த ஆள் அவ்வளவுதான் என்கிற மாதிரிதான் நினைக்கிறார்கள்.
டாக்டர் முத்து செல்லக்குமார் அவர்கள் இந்த புத்தகத்தில் கொலஸ்ட்ரால் என்றால் என்ன, மனிதனின் உடலில் கொலஸ்ட்ரால் எவ்வாறு இருக்கிறது, அதன் தேவை என்ன, கொலஸ்ட்ரால் அதிகம் உடலில் சேர்ந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பவைகளைப்பற்றி சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் எழுதியிருக்கிறார்.
மனிதனின் உடம்பில் புரதம் மற்றும் கொலஸ்ட்ரால், இவை இரண்டும்தான் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உடம்பின் எல்லா பகுதிகளும் இந்த இரண்டு பொருள்களினால்தான் உருவாகியிருக்கின்றன. ஆகவே கொழுப்பையே உணவிலிருந்து விலக்குவது முடியாத காரியம். நாம் கொழுப்பை சாப்பிட்டே ஆகவேண்டும். ஆனால் எந்த வகையான கொலஸ்ட்ரால்கள் உடலுக்கு ஏற்றது என்று அறிந்து அவ்வகை உணவுகளைத் தேர்ந்து சாப்பிடவேண்டும். இதற்கான வழிகளை இந்த புத்தகத்தில் விரிவாக காணலாம்.
கொழுப்பின் வகைகளைப்பற்றியும் அவை உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விரிவாக இந்தப்புத்தகத்தில் கூறப்படுகிறது. கொலஸ்ட்ரால் சேர்ந்த பொருட்களைச் சாப்பிடாமல் நாம் உயிர் வாழ முடியாது. ஆனால் அந்த கொலஸ்ட்ரால் அதிகமாகிப்போனால் உடலில் வேண்டாத விளைவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்று விரிவாக கூறப்பட்டு இருக்கிறது.
கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது எவ்வாறு ரத்தக் குழாய்களில் உட்புறம் படிந்து ரத்த அடைப்பு ஏற்பட வழி வகுக்கிறது என்பதை நன்கு படங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. இந்த ரத்த அடைப்பு இருதயத்திற்கு போகும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டால் மாரடைப்பில் முடியும் என்பதை அழுத்தமாக கூறியுள்ளார்.
கொழுப்பில் நல்லது, கெட்டது என்று இரண்டு வகை உண்டு என்பதே பலருக்கு ஒரு புதுமையான செய்தியாக இருக்கும். நம் உடம்பில் இந்த பல வகை கொலஸ்ட்ரால் சத்துக்கள் எவ்வளவு இருக்க வேண்டும், அவைகள் அதிகமாக இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர் விளக்கமாக கூறியிருக்கிறார். மேலும் ஒமெகா கொலஸ்ட்ரால் அமிலங்கள் என்றால் என்ன, அவை நமக்கு எவ்வாறு உபயோகப்படுகின்றன என்ற தகவல்கள் புதிதானவை. நம் உடம்பில் இருக்கும் பல்வேறு வகை கொலஸ்ட்ரால்களை எவ்வாறு டெஸ்ட் மூலம் கண்டு பிடிக்கலாம், அவை எவ்வளவு அளவில் இருக்கவேண்டும் என்ற கணக்குகளை ஆசிரியர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த என்னென்ன மருந்துகள் உபயோகப்படுத்தலாம் என்பதைப் பற்றியும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
சாதாரணமாகவே ஒவ்வொருவரும் தம்முடைய உணவு, உடற்பயிற்சி ஆகியவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். ருசிக்காக எண்ணையில் பொரித்த பலகாரங்களை சாப்பிட்டால் எவ்வாறு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதைப்பற்றி விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண நடைப்பயிற்சி கூட எவ்வாறு கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் என்று விளக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரியங்களில் கவனமாக இருந்தாலே கொலஸ்ட்ரால் சம்பந்தமான பெரும்பாலான தொந்திரவுகளிலிருந்து நாம் விடுதலை பெறலாம்.
Fast Food கலாச்சாரத்திற்கு அடிமையாகி இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தினர் அவசியம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம். தெருவோரங்களில் எண்ணையில் பொரித்துக் கொடுக்கப்படும் தின்பண்டங்களில் இருக்கும் எண்ணையால் உடலுக்கு எவ்வாறு கேடு விளைகிறது என்பதை இந்த புத்தகத்தை படித்தால் நன்கு புரிந்து கொள்ளலாம்.

மூத்த குடிமக்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பயன் படக்கூடியது. ஒவ்வொரு வகை உணவிலும் எவ்வளவு கொலஸ்ட்ரால்ச்சத்து உள்ளது என்ற பட்டியல் எல்லொருக்கும் பயனுள்ளதாக இருக்கும். உணவில் எந்தெந்த எண்ணைகள் சேர்த்துக்கொள்ளலாம், எவைகளைத் தவிர்க்க வேண்டும் என்கிற தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. வயதான பிறகு தங்களுடைய உடல் நலத்தில் மூத்த குடிமக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி பல குறிப்புகள் உள்ளன.
சில குறைகள்;
பக்கம் 32ல் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் பல உணவு வகைகள் நம் நாட்டினருக்கு பரிச்சயமில்லாதவை. உணவு மாற்றங்களைப பற்றி எழுதும்போது சில இடங்களில் மிகவும் டெக்னிகலாக இருக்கின்றன. அவை மூத்த குடிமக்கள் பலருக்கு புரிந்து கொள்ள சிரமமாக இருக்கலாம். மற்றபடி இந்த புத்தகம் எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடயதாகவே இருக்கிறது.
நல்ல சரளமான தமிழில் எல்லோருக்கும் பயன்படக்கூடிய ஒரு புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கும் அதை தைரியமாக பிரசுரித்த NHM நிறுவனத்திற்கும் என்னுடைய பாராட்டுகள். புத்தகத்தின் அட்டைப்படமும் மற்ற அமைப்புகளும் நன்றாக இருக்கின்றன.
புத்தகத்தின் பிரசுர விவரங்கள்;
கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி?
ஆசிரியர்; டாக்டர் சு.முத்து செல்லக்குமார்
முதல் பதிப்பு – அக்டோபர், 2008
128 பக்கம் விலை; ரூ.60
பிரசுரித்தவர்; பத்ரி சேஷாத்ரி
Published by:
New Horizon Media Pvt. Ltd.,
No. 33/15, Eldams Road,
Alwarpet, Chennai-600 018.

Email : support@nhm.in
Website: www.nhm.in

புதன், 11 மார்ச், 2009

நாட்டு நடப்பு – 3

இன்றைய செய்தி-கோவையில் நான்கு இடங்களில் பெண்களிடமிருந்து நகை பறிப்பு. தங்கம் பவுன் 11 ஆயிரம் ரூபாயக்கு மேல் விற்கிறது. தங்கத்தை விற்பது எளிது. ஆகவே அதை திருட பல கயவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம் தமிழ்நாட்டுப்பெண்களுக்கு கழுத்தில் ஒரு இரண்டு பவுனாவது இல்லாவிட்டால் அவர்களுக்கு மூச்சு விட முடியாது. மிடில் கிளாஸ் குடும்பம் என்றால் குறைந்தது ஒரு பத்து பவுனாவது கழுத்தில் வேண்டும். பத்து பவுன் என்றால் இன்றைய விலையில் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்.
இதைப்பார்க்கும் வழிப்பறித்திருடனுக்கு அல்வா சாப்படுகிற மாதிரி. இரு சக்கர வாகனங்களில் இரண்டு பேர் வேகமாக மேலே இடிப்பது போல் பக்கத்தில் உரசிக்கொண்டு போவார்கள். பின்னால் உட்கார்ந்திருப்பவன் கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் கழுத்தில் இருக்கும் நகையை அறுத்துக்கொண்டு வேகமாக ஓடிவிடுவார்கள். என்ன நடந்தது என்று அந்த பெண்ணுக்குத் தெரிவதற்குள் அந்த திருடர்கள் கண்ணுக்குத்தெரியாத தூரத்திற்கு சென்று விடுவார்கள்.
நகையை பறிகொடுத்த பெண் சுதாரித்து சத்தம் போடுவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டிருக்கும். போலீசுக்கு தகவல் போய் அவர்கள் வந்து விசாரிக்கும்போது இந்தப்பெண்ணிற்கு அழுகைதான் வருமே ஒழிய கோவையாக வார்த்தைகள் வராது.
பிறகு என்ன? வீட்டிற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் பத்து-இருபது தடவை நடந்தபின் ‘நகை போனால் போகிறது, இந்த தொந்தரவிலிருந்து தப்பித்தால் போதும்’ என்று கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினால் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் துக்க விசாரிப்புகள் வேறு. சொந்தக்காரர்களின் விசாரிப்பு வேறு விதமாக இருக்கும். உனக்கு எப்போதும் ஜாக்கிரதை போறாது. வெளியில் நகை போட்டுக்கொண்டு போகையில் அக்கம் பக்கம் பார்த்து ஜாக்கிரதையாக போகக்கூடாதா? நகை போன துக்கம் ஒரு பக்கம், இந்த ஈவிரக்கமில்லாத விசாரிப்புகள் இன்னொரு பக்கம், எல்லாம் சேர்ந்து அந்தப்பெண் படும் பாடு இருக்கறதே அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.
இதை விடக்கொடுமை என்னவென்றால் அந்தப்பெண்ணின் கணவன் இருக்கிறானே அவன் படுத்தும் பாடு ஆயுளுக்கும் தொடர் கதையாகத்தொடரும். அதுவும் அவன் வாங்கிக் கொடுத்த நகையாக இருந்ததோ போச்சு, அவன் பேச்சைக் கேட்டு காதில் இரத்தம் வந்து விடும்.
சரி உலகத்தில் இப்படி நடக்கிறதே, நாமாவது ஜாக்கிரதையாக ஏதாவது டூப்ளிகேட் நகை அல்லது வடநாட்டுப்பெண்கள் போடுவது போல் ஏதாவது ஒரு அரை பவுனில் ஒரு செயின் கண்ணுக்குத் தெரியாமல் போடலாம் என்று நினைப்பார்களா? மாட்டார்கள், அவள் அஜாக்கிரதையாக இருந்ததால்தான் அவள் நகையை திருடன் அறுத்துக்கொண்டு போனான். நானெல்லாம் அப்படி அஜாக்கிரதையாக போகமாட்டேன் என்று பீத்திக்கொள்வாள். அவளும் ஒரு நாள் தன் நகையை திருட்டுக்கொடுப்பாள்.
வெளிநாட்டிலே பெரும்பாலான பெண்கள் நகைகளையே அணிவதில்லை. அப்படியே ஏதாவது அணிந்தாலும் அது கண்ணுக்கே தெரியாத மாதிரி இருக்கும். அதுவும் அந்தப் பெண்களின் நிறத்தில் ஒன்றிப்போய்விடும். மேலும் அவர்கள் அணிவது 18 அல்லது 14 கேரட் தங்க நகைகள்தான். நம் தமிழ் பெண்களுக்கு மட்டும் இந்த நகை மோகம் எப்படி பிடித்த்து என்று தனியாக ஒரு ஆராய்ச்சி நடத்த வேண்டும.
தொடரும்....

திங்கள், 9 மார்ச், 2009

நாட்டு நடப்பு – 2

தினமும் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளில் முக்கியமானவை திருட்டுச்செய்திகள்தான். திருட்டுகளில் பலவகை. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
வங்கிகளில் பணம் எடுத்து வரும்போது திருட்டுக்கொடுப்பது மிகவும் சாதாரணமாகி விட்டது. இரண்டொரு பண நோட்டுக்களை வழியில் போட்டுவிட்டு ‘ஐயா, இந்த நோட்டு உங்களது போல இருக்குதே’ என்று கூறுவார்கள். நீங்களும் ஓஹோ, நம் பணம் தானோ என்று அதை எடுக்க முயற்சி செயவீர்கள். அந்த சமயத்தில் உங்கள் கவனம் அந்த கீழே கிடக்கும் பணத்தின் மீதுதான் இருக்கும். அப்போது அந்த திருடர்கள் உங்கள் பணப்பையை பிடுங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. இரண்டொரு நிமிடங்கள் கழித்துத்தான் என்ன நடந்தது என்று புரியும். அதற்குள் அந்த திருடன் கண்காணாமல் போயிருப்பான்.
இந்த மாதிரியான செய்திகள் அநேகமாக வாரத்திற்கு ஒருமுறையாவது வருகின்றன. மக்கள் இந்த செய்திகளைப் பார்த்துவிட்டு என்ன நினைப்பார்கள் என்று புரியவில்லை. நமக்கு இந்த மாதிரி நடக்க்காது என்று நினைப்பார்கள் போலும். ஆனால் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது என்றால் மனித மனம் சபல புத்தி உள்ளது. எதுவும் சும்மா கிடைக்கிறது என்றால் அவனது புத்தி அப்போது வேலை செய்வதில்லை. என் பாட்டி ஒரு பழமொழி சொல்வார்கள் – ஒருத்தன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தெருவில் ஒருவன் யானை, யானை, கடனுக்கு யானை என்று விற்றுக்கொண்டு போனான். இந்த சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு வாய நிறைய சோறு, பேச மடியவில்லை, இடது கையினால் எனக்கு ஐந்து என்று சாடை காட்டினானாம், அது போல சும்மா கிடைக்கு மென்றால் எதுவாக இருந்தாலும் கை நீட்டுவதுதான் நம் ஜனங்களுக்கு பழக்கம். இந்த பழக்கம் இரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.
இதன் காரணமாகத்தான் பணத்தை கீழே பார்த்தவுடன் அது நம்முடையதுதானா என்ளு கொஞ்சமும் யோசிக்காமல் அதை எடுக்க முயற்சிக்கிறான். நஷ்டம் அடைகிறான். இந்த ஆசையானது மக்களை மேலும் எப்படி அலைக்கழிக்கிறது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.
தொடரும்....