புதன், 31 டிசம்பர், 2014

தொழில் நுட்பப் பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

                                                
புதிதாக சந்தைக்கு வரும் தொழில் நுட்பங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதில் தொழில் நுட்பப் பதிவர்களின் பங்கு பாராட்டிற்குரியது. ஆனால் அதே சமயம் அவர்களுக்குப் பொறுப்பும் அதிகம் என்பதை அவர்கள் உணரவேண்டும். பதிவு போடுவதற்காக ஏதோ ஒன்றைப் பதிவிட்டு விட்டு, மற்றதெல்லாம் அவரவர்கள் பாடு என்று போவது நல்ல வழியல்ல.

என்னுடைய "மீண்டும் கையைச் சுட்டுக்கொண்டேன்"  என்கிற பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதில் பலரும் குறிப்பிட்ட ஒரு விஷயம் என்னவென்றால், "எந்தத் தளத்தில் கூறிய எந்த புரொக்ராமை தரவிறக்கும்போது அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது, அதை எங்களுக்கும் சொன்னால் நாங்களும் எச்சரிக்கையாக இருப்போமே" என்பதாகும்.

நான் அதை வெளிப்படையாகச் சொல்லாததற்குக் காரணம் ஒரு பதிவர் தன்னையறியாமல் தவறு செய்திருக்கலாம். அதைச் சொல்லி அவருடைய மனதை புண்படுத்தக்கூடாது என்பதால்தான். ஆனால் பதிவுலக மக்கள் தொழில் நுட்ப விஷயங்களுக்கு தங்களுக்கு ஒரு வழி காட்டுதல் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆகவே தொழில் நுட்பம் பற்றி எழுதும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இனி வரும் காலத்தில் நீங்கள் எழுதும் பதிவுகளில் கூறும் புரொக்ராம்களை நீங்களே சோதித்து அதில் உள்ள சாதக பாதகங்களையும் குறிப்பிட்டு எழுதினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

இது ஒரு வேண்டுகோள் மட்டுமே. இவன் யார் எங்களுக்கு நாட்டாமை செய்ய என்று யாராவது நினைத்தால் இந்தப் பதிவை எழுதியதற்காக என்னை மன்னித்து விடவும். அப்படி மன்னிக்க முடியாவிட்டால் ஏதாவது நல்ல சாபம் கொடுக்கவும். "துபாய் சென்று தங்கக்காரைப் பார்த்து வயிற்றெரிச்சலில் வேகவும்" என்கிற மாதிரி சாபம் கொடுக்கவும்.

திங்கள், 29 டிசம்பர், 2014

நான் மீண்டும் கையைச் சுட்டுக் கொண்டேன்.

                                   

                                   

மீண்டும் மீண்டும் கையைச் சுட்டுக்கொளவதே என் வழக்கமாகப் போய் விட்டது. பலமுறை பதிவுலக நண்பர்களுக்கு நான் அறிவுரை வழங்கியுள்ளேன். சொல்வார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போகாதீர்கள் என்று எல்லாருக்கும் நான் சொல்வேன். ஆனால் "எல்லோருக்கும் கௌளி சொல்லுமாம் பல்லி, அது விழுந்ததாம் கழுநீர்ப் பானையில்" என்ற மாதிரி நானும் நேற்று கழுநீர்ப்பானையில் விழுந்தேன்.

பதிவுலகில் தொழில் நுட்பப் பதிவர்கள் என்று ஒரு ஜாதி இருக்கிறது. இவர்கள் செய்யும் வேலை என்னவென்றால் எங்காவது ஒரு புது கம்பெனி ஏதாவது ஒரு புரொக்ராமைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்றால் அதை மோப்பம் பிடித்து தங்கள் பதிவில் போட்டு விடுவார்கள். அதன் சாதக பாதகத் தன்மைகளைப் பற்றி ஒன்றும் ஆராய மாட்டார்கள். அதை நம்பி அந்த புரொக்ராமை நிறுவும் பயனாளிகளான நாம்தான் இளிச்சவாயர்கள்.

எந்த கம்ப்யூட்டர் புரொக்ராம்காரனும் பொது சேவை செய்வதற்காக கம்பெனி ஆரம்பிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் ஒரு புரொக்ராமை இலவசமாகக் கொடுக்கிறான் என்றால் அதில் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் மறைமுகமான லாபம் இருக்கும்.

சில பெரிய கம்பெனிகள் தங்களுக்கு வரும் விளம்பரங்களுக்காக இத்தகைய புரொக்ராம்களை இலவசமாகத் தருகின்றன. ஆனால் பெரும்பாலான அடையாளம் தெரியாத கம்பெனிகள் வைரஸ்களை இனாமாகத் தருகின்றன. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் நாம் ஏமாந்து விடுவோம்.

ஆகவே நம் தொழில் நுட்ப பதிவர்கள் பரிந்துரைக்கும் புரொக்ராம்கள் 100 சதம் பத்திரமானவை என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்தால் அதை உடனடியாக விட்டொழியுங்கள். நான் நேற்று இப்படி ஒரு புரொக்ராமை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்த பிறகு பார்த்தால் கூடவே ஒரு மோசமான வைரஸும் இறக்குமதி ஆகி கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டது.

எப்படி முயன்றாலும் அன்இன்ஸ்டால் ஆகமாட்டேன் என்றது. வேறு வழியில்லாமல் சிஸ்டம் ரெஸ்டோர் போய்த்தான் சரி செய்ய வேண்டியதாய்ப் போயிற்று. என்னுடைய கம்ப்யூட்டரின் ஆபரேட்டிங்க் சிஸ்டம் ஒரிஜினலாய் இருந்ததால் அதிகம் பிரச்சினை இல்லாமல் போயிற்று. இல்லையென்றால் டாக்டரிடம் போகவேண்டியதாய் இருந்திருக்கும்.

ஆகவே நண்பர்களே ஜாக்கிரதையாய் இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். 

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

தமிழ்மணம் திரட்டி நிர்வாகத்திற்கு நன்றி

                                     
தமிழ்மணம் திரட்டி என்பது தமிழ் பதிவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த திரட்டி எவ்வாறு செயல்படுகிறது என்பது பலருக்குத் தெரியாத ஒரு ரகசியமாக இருக்கிறது. எனக்குத் தெரியலைன்னா அது பலருக்கும் பொருந்துமல்லவா?

இது ஏதோ அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ரிய்ய்ய்ய்ய கம்ப்யூட்டர் செய்யும் வேலை என்றுதான் நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அந்த எண்ணம் சரியில்லை, தமிழ்மணம் திரட்டி நம்மைப் போன்ற சதையும், எலும்பும், நல்ல மனச்சாட்சியும் கொண்ட உயிருள்ள மனிதர்களால் நிர்வகிக்கப்படுகிறது  என்ற முடிவுக்கு இப்போது வந்து விட்டேன்.

காரணங்கள் இரண்டு.

முதல் காரணம்: திரு.தருமி அவர்கள் சில வாரங்களுக்கு முன் தமிழ்மணம் திரட்டியில் பல ஆபாசப் பதிவுகள் இடம் பெறுவதைப் பற்றி தமிழ் மணத்திற்கு தெரியப்படுத்தினார். உடனடியாக அத்தகைய பதிவுகள் நீக்கப்பட்டன.

இரண்டாவது காரணம்: நான் சில நாட்களுக்கு முன் தமிழ்மணம் திரட்டியில் உள்ள பல பதிவுகளில் விளம்பரங்கள் ஆக்கிரமித்துக்கொண்டு பதிவை படிக்க முடியாமல் செய்கின்றன என்று குறிப்பிட்டிருந்தேன். இரண்டு நாட்களிலேயே அத்தகைய பதிவுகள் நீக்கப்பட்டு, தமிழ்மணம் இப்போது தூய்மையாக்கப்பட்டு விளங்குகிறது.

இத்தகைய உடனடி நடவடிக்கைகளுக்காக தமிழ்மணம் நிர்வாகத்திற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். சக பதிவர்கள் அனைவரும் இதை ஆமோதிப்பார்க்ள என்று நம்புகிறேன்.

2015 ம் புத்தாண்டில் தமிழ்மணம் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

                                         


பதிவுலக நண்பர்கள், நண்பிகள், அனானிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



வியாழன், 25 டிசம்பர், 2014

டாட்டா, பிர்லா மாதிரி பணக்காரராக ஆகவேண்டுமா?



டாட்டா பிர்லா மாதிரி நீங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபராக ஆகவேண்டுமா? மேலே உள்ள மாதிரி பங்களாவில் வசிக்கவேண்டுமா? இதோ வெகு சுலபமான வழி.

ரிசர்வ் பேங்க் வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் என்னென்ன செக்யூரிடி அம்சங்கள் இருக்கின்றன என்று அவர்க்ள வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் வந்த படங்களை ஒரு காணொளியாகக் கொடுத்துள்ளேன். இந்த செக்யூரிடி அம்சங்கள் இல்லாததால்தான் கள்ள நோட்டுகளை இனம் காண்கிறார்கள்.

அவைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Security Features of Bank Notes:


                     

நன்றாகப் பார்த்துக்கொண்டீர்களா? வழி காட்டி விட்டேன். இனி உங்கள் சமர்த்து.

களி சாப்பிடும்போது என்னையும் நினைத்துக் கொள்ளவும்.

                                     

செவ்வாய், 23 டிசம்பர், 2014

தமிழர்கள் காதில் நன்றாகப் பூச்சுற்றுகிறார்கள்.



                               

இன்றைய பத்திரிகைச் செய்தி:

பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை சிறையில் இருக்கும் 66 தமிழக மீனவர்கள் விடுதலை.

இந்த மாதிரி செய்திகள் பல வருடங்களாக வந்து கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பதும் இங்குள்ள அரசியல்வாதிகள் அதைப்பற்றி அறிக்கைகள் விடுவதும் சில நாட்கள் கழித்து அவர்கள் விடுதலையாவதும்  தொடர் கதையாக நடந்து வருகின்றன. இந்த நிகழ்வுகள் அடுத்தடுத்து நடப்பதைப் பார்த்தால் இவை எதேச்சையாக நடந்தவை போல் தெரியவில்லை.

ஒரு திட்டமிட்ட அரசியல் நாடகம் நடக்கிறதோ என்றுதான் தோன்றுகிறது. யார் இந்த நாடகத்திற்கு காட்சிகள் அமைத்து கதை வசனம் எழுதுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

திங்கள், 22 டிசம்பர், 2014

சில பதிவர்களின் அக்கிரமம்.

இன்று கீழ்க் கண்ட பதிவை தமிழ்மணம் திரட்டியில் பார்த்தேன்.


VGK 13 - வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி மு.பொ.போ.மு.க. உதயம் !!

இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

இது ஒரு நெடுங்கதை. இதற்கு விமர்சனம் எழுதுவதானால் அது ஒரு நாவலில்தான் முடியும். ஆகவே சுருக்கமாக சொல்லுகிறேன்.

எந்த ஒரு ஆபீசிலும் இந்த மாதிரி ஸ்ரீனிவாசன்களைக் காணலாம். வெறும் சவடால் அடித்துக் கொண்டே காலத்தை ஓட்டுவார்கள். மற்றவர்களை குல்லாய் போட்டே தங்களை காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். இத்தகைய ஒரு நபரை கதாசிரியர் தான் வேலை செய்த ஆபீசில் பார்த்திருக்கவேண்டும்.

அதை அடிப்படையாக வைத்து இந்த நெடுங்கதையை பின்னியிருக்கிறார். நம் கதை நாயகருக்கு வாழ்க்கையில் இரண்டே இரண்டு நிலைகள்தான். ஒன்று வழுவட்டை நிலை, அடுத்தது எழுச்சி நிலை. இந்த இரண்டு வார்த்தைகளும் அவர் வாயில் இருந்து அனாயாசமாக வெளி வருகின்றன. சோர்விற்கு அவர் “வழுவட்டை” என்றும் சுறுசுறுப்பிற்கு “எழுச்சி” என்றும் கூறுகிறார் என்பது புலனாகிறது. இது ஏதாவது ஒரு ஊரின் வட்டார வழக்காக இருக்கலாம். கதையைப் படித்து முடிக்கு முன் நாமும் இந்த இரண்டு வார்த்தைகளுக்கு மிகவும் பரிச்சயமாகி விடுகிறோம்.

அவர் குடும்ப வாழ்க்கையைப் பற்றி கூறும் தத்துவங்கள் ஒவ்வொரு பிரம்மச்சாரியும் அறிந்து கொள்ள வேண்டியவை. இதை அவர் நம் இளம் கதாநாயகனுக்கு போதிக்கும் முறை இருக்கிறதே, அது 60 வயதில்தான் வரும். அவருடைய துபாய் டூரைப்பற்றிய விவரங்கள் ஒரு தனி பாணி.

எல்லாவற்றிலும் இசையில் சுருதி போல ஆதாரமாக ஓடுவது பொடி உபயோகம்தான். அதன் மேல் உள்ள ஈர்ப்பு, மற்ற எல்லா ஆசைகளையும் புறந்தள்ளி விடுகிறது. பொடி போடும் உத்தி எத்தனை வகைப்படும் என்று அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். பொடி போடுபவர்கள் செய்யும் அட்டூழியங்களையும் அப்படியே புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் ஆசிரியர். நேரடி அனுபவம் இல்லாமல் இப்படி விவரிப்பது சாத்தியமில்லை.

அவர் ரிடையர் ஆகுமுன் அனைவருக்கும் பொடி டின் பரிசளிப்பது அவருடைய பொடி மோகத்திற்கு ஒரு முத்தாய்ப்பு.

ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

சனி, 20 டிசம்பர், 2014

ஐரோப்பாவின் சில கோட்டைகளும் பூந்தோட்டங்களும்

Picasa என்ற மென்பொருளை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். உங்கள் கணிணியில் நிறுவியும் இருப்பீர்கள். ஆனால் அதிலுள்ள சில வசதிகளை முழுமையாக உபயோகித்திருப்பீர்களா என்பது சந்தேகமே.

அதில் create என்கிற மெனுவில்  video என்று ஒரு ஆப்ஷன் இருக்கிறது. இதை உபயோகித்து ஒரு ஸ்லைடு ஷோ உருவாக்க முடியும். பவர் பாய்ன்ட் ஸ்லைடு ஷோ வேறுமாதிரியானது. பிகாசாவின் ஸ்லைடு ஷோவை நாம் யூட்யூபில் பதிவேற்றலாம். பவர்பாய்ன்ட் ஸ்லைடு ஷோவை யூட்யூபில் பதவேற்ற முடியாது.

நமக்குப் பிடித்த படங்களையும் நமக்குப் பிடித்த பாடலையும் கொண்டு நாம் இந்த ஸ்லைடு ஷோவை உருவாக்கலாம். அப்படி நான் உருவாக்கி யூட்யூப்பில் பதிவேற்றிய ஒரு ஷோவை இங்கே கொடுத்துள்ளேன். கண்டு ரசியுங்கள்.


                          

உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.


வெள்ளி, 19 டிசம்பர், 2014

என் பெட்ரூமில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும்


1962 ம் வருடம். அப்போது எனக்கு 28 வயது. கல்யாணம் ஆகவில்லை. ஆனால் குடும்பப் பொறுப்பு முழுவதும் என் தலையில். என் தகப்பனார் குடும்பச் சுமையைத் தாங்கிக்கொள்ள முடியாத மன நிலையில் பொறுப்பை என்னிடம் விட்டு விட்டு சொல்லாமல் கொள்ளாமல் தேசாந்திரம் சென்று விட்டார்.

அப்போது இந்தப் படம் வந்து சக்கைப்போடு போட்டது. அதில் இடம் பெற்ற "சிங்கார வேலனே " பாட்டு தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அப்போது இருந்த பாட்டுக்கேட்கும் சாதனங்கள் ரேடியோவும் கிராமபோன் பிளேயரும்தான்.

என்னிடம் ரேடியோ கூட கிடையாது. எங்காவது ரோட்டில் போய்க்கொண்டிருக்கும்போது இந்தப் பாட்டு ஏதாவது கல்யாண வீட்டில் இருந்தோ அல்லது கோயில் திருவிழாவிலிருந்தோ, ஒலி பெருக்கி மூலம் மூலம் காதில் விழுந்தால் அந்தப் பாட்டு முடியும் வரை அங்கேயே நின்று கேட்டுவிட்டுத்தான் போவேன்.

அப்போது என் மனதில் தோன்றிய எண்ணம் என்னவென்றால், எனக்கு வசதி வந்தால் ஒரு கிராமபோன் பிளேயரும் இந்தப் பாட்டின் ரெக்கார்டும் வாங்கி சலிக்கும் வரைக்கும் கேட்கவேண்டும் என்பதுதான்.

                           

காலம் மாறியது. தொழில் நுட்பங்கள் மாறின. எனக்கு வசதி வந்த நாளில் கிராமபோன் மிஷின் காணாமல் போயிற்று. ஆனலும் என்ன? அதன் இடத்தில் வேறு நுட்பங்கள் வந்து விட்டன.

டேப் ரிகார்டர் வந்து ஒரு இருபது ஆண்டுகள் கோலோச்சியது. ஐபாட் வந்தது. உங்கள் அபிமான பாடல்களை பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு போகலாம். ஆனாலும் இன்று வந்துள்ள டேப்ளட்டுகளும் கிண்டில் கருவிகளும் இசை கேட்கும் அனுபவத்தை தலைகீழாய் மாற்றிவிட்டன.

இன்று, இதோ என் பெட்ரூமில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் என் கைப்பிடியில் எனக்காகப் பாடுகிறார்கள். என் பெட்ரூமில் கச்சேரி மேடையே போட்டாகி விட்டது. சுதா ரகுநாதனின் கச்சேரியைக் கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருந்து கேட்டது போய், இப்போது என் கைக்கெட்டும் தூரத்திலிருந்து பாடுவதைக் கேட்க, காண முடிகிறது.

இப்படிப்பட்ட தொழில் நுட்பங்களை உண்டாக்கி, அந்தக் கருவிகளை வாங்கி இந்த இன்பங்களை அனுபவிக்க பழனி. கந்தசாமிக்கு அருள் புரிந்த அந்த சிக்கில் சிங்கார வேலவனுக்கும் என்னப்பன் பழனி முருகனுக்கும் என் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.                                  

புதன், 17 டிசம்பர், 2014

பாப்பாத்தி அம்மா மாடு வந்திருச்சு

                                   


ஒரு ஊர்ல ஒரு சின்ன அக்ரஹாரம். அதுல பதினைந்து வீடுகள். எல்லொருக்கும் நிலம் நீச்சுன்னு சௌகரியமா வாழ்க்கை ஓடிண்டிருக்கு. ஒவ்வொரு வீட்லயும் ஒவ்வொரு பசுமாடு. சாஸ்திரோக்தமா பூஜைக்கு தீட்டுப் படாத பசுமாட்டிலிருந்து பால் கறந்துதான் சாமிக்குப் படைக்கணும். அதுக்காகத்தான் அவாளவாள் ஆத்தில பசுமாடு வளர்க்கறா.

ஆனாப் பாருங்கோ, அந்தப் பசுமாட்டப் பாத்தா எல்லா மாமிகளுக்கும் பயம். அது கொம்பை ஆட்டினா ஐயோன்னு கத்திண்டு எல்லோரும் ஆத்துக்குள்ள ஓடிடுவா. அதனால இந்தப் பசு மாட்டுகளை தினமும் காலையில் மேய்ச்சலுக்கு ஓட்டிப் போய் சாயந்திரம் கொண்டுவந்து கொட்டிலில் கட்டிவிட்டுப் போவதற்கு ஒவ்வொரு ஊர் அக்ரஹாரத்திற்கும் ஒரு மாட்டுக்காரன் இருப்பான்.

நான் சொல்றதெல்லாம் 100 வருடத்திற்கு முந்தைய கதை. இன்னிக்குத்தான் பூத் பால்தான் எல்லாத்துக்கும்னு ஆயிப்போச்சே. பாக்கெட் மேலே கொஞ்சம் ஜலம் தெளிச்சா  தீட்டு எல்லாம் போயிடும்கறது சாஸ்த்ரம்.

இப்படி இருக்கச்சே, ஒரு நாள் ஒரு மாமிக்கு இந்த மாட்டுக்காரன் பேர்ல கோவம். முந்தின நாள் அரைப் படி பால் கொறச்சலாக் கறந்தா கோவம் வராதா? அதனால அன்னிக்குக் காலைல மாட்டுக்காரனை சத்தம் போட்டுட்டள். நீ மாட்டை சரியா மேய்க்கல, அதனாலதான் பால் கொறஞ்சு போச்சுன்னு சத்தம் போட்டாச்சு.

அன்னிக்கீன்னு பாத்து அந்த மாட்டுக்காரன் ஊட்லயும் அவன் பொண்டாட்டி கூட அவன் சண்டை போட்டுட்டு வந்திருக்கான். மாமியும் இப்படி சத்தம் போட்டதால, அவனுக்கு கோவம் இன்னும் ஜாஸ்தியாயிடுச்சு. இருந்தாலும் மாமி கிட்ட கோவத்தைக் காட்ட முடியுமோ. பேசாமல் போய்ட்டான். பகல் பூராவும் அவனுக்கு மனசே சரியில்லை. இந்த மாமி இப்படிக் கேட்கலாச்சே என்று மனதிற்குள்ளேயே பொருமிக்கொண்டிருந்தான்.

அதனால் என்ன பண்ணினான் என்றால் அந்த மாமியின் மாடு அவாள் வீட்டுக்கு எதிரில் வந்தவுடன் " பாப்பாத்தியம்மா, மாடு வந்துட்டுது, புடிச்சுக் கட்டிக்கோ" அப்படீன்னு சத்தமாச் சொல்லீட்டு போய்ட்டான். அந்தக் காலத்தில சூத்திரப் பயலுகளுகளெல்லாம் எல்லா அய்யர்களையும் பாப்பான் என்று சொல்லித்தான் பழக்கம். நேர்ல பாக்கறப்ப "சாமி" அப்படீம்பான்.

இப்படி ஆன பிறகு அந்த மாமி என்ன செய்தாள் என்பது வேற கதை. இந்த சொலவடை ஏன் வந்தது என்றால் ஒரு வேலையை அரைகுறையாக முடிப்பவனுக்காகச் சொல்லப்படுவது.

இந்தக் கதை பாப்பாத்தியம்மாள் கதையாதலால் ஆங்காங்கே அவாள் பாஷை வந்து விட்டது. யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அய்யர்களே தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது அடுத்தவனை "அந்தப் பாப்பான் எதிர்ல வந்தான் அதனாலதான் அந்தக் காரியம் நடக்கல" என்று பேசிக்கொள்வார்கள். ஆகவே நான் ஒன்றும் பெரிதாகத் தவறு இழைத்து விடவில்லை என்று நம்புகிறேன்..

வலைச்சர ஆசிரியர் பணி முடிந்தவுடன் நான் எழுதிய பிரிவுரையில் இந்தப் பழமொழியைக் குறிப்பிட்டிருந்தேன். அப்போது இந்தக் கதையை ஒரு தனி பதிவாகப் போடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அதனால்தான் இந்த்ப பதிவு.