புதன், 29 செப்டம்பர், 2010

கேதார்-பத்ரி யாத்திரை – 8 பத்ரிநாத் சலோ.


அடுத்த நாள் காலையில் எழுந்தால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உபாதை. எனக்கு காலில் காயம். மனைவிக்கு உடம்பு வலி. சம்பந்திக்கு வயிறு கோளாறு. சம்பந்தியம்மாவுக்கு இட்லி கிடைக்காத குறை. தங்கச்சிக்கு தூக்கம் போறவில்லை. டாக்சி டிரைவருக்கு சளிக்காய்ச்சல். நான் லீடர். பேரு பெத்தப்பேருதான். புது இடத்தில் என்ன செய்ய முடியும்?
ஊரிலிருந்து புறப்படும்போதே ஒரு புத்திசாலித்தனமான காரியம் செய்திருந்தோம். நாங்கள் எப்போது டூர் போனாலும் இப்படித்தான் செய்வோம். அதாவது ஒரு எலெக்ட்ரிக்டம்ளர்ஹீட்டர்”. நூறு ரூபாய் விலையில் எலெக்ட்ரிக் சாமான் விற்கும் கடைகளில் கிடைக்கிறது. 100 முதல் 500 வாட்ஸ் வரை கரன்ட் தரத்தில் கிடைக்கும். ஹோட்டல்களில் உள்ள கரன்ட் பிளக்குகளில் உபயோகப்படுத்தலாம். பியூஸ் போகாது. ஒரு லோட்டா டம்ளர் தண்ணீரை (அரை லிட்டர்) 10 நிமிடத்தில் கொதிக்க வைத்துவிடும். (என் சம்பந்தி இதை வைத்து டில்லியில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலைக் கொளுத்தப் பார்த்தார். கேதார்நாத், பத்ரிநாத் தரிசன புண்ணியத்தால் தப்பினோம். அந்த சாதனையை தகுந்த இடத்தில் சொல்கிறேன்).
 அடுத்து பால் பவுடர். பலவித பிராண்டுகளில் கிடைக்கிறது. வாங்கி ஒரு டப்பர்வேர் டப்பாவில் போட்டு வைத்து விட்டால் காற்றுப்புகாமல் அப்படியே இருக்கும். கூடவே இன்ஸ்டன்ட் காபி பவுடர். இதையும் ஒரு டப்பர்வேர் டப்பாவில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை ஒரு பாட்டில், கூட தேவையான டம்ளர்களும் ஒரு லோட்டாவும் வேண்டும்.
தண்ணீரைக் கொதிக்க வைத்து,  டம்ளர்களில் தலா இரண்டு ஸ்பூன் பால் பவுடர், ஒரு ஸ்பூன் சர்க்கரை, அரை ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் போட்டு வெந்நீரை டம்ளர் நிறைய ஊற்றி இரண்டு தடவை ஆற்றினால் மணக்கும் காபி ரெடி. ஹோட்டல்களில் ரூம் பாய்களிடம் சொன்னால் ஒரு மணி நேர்ம கழித்துத்தான் காபி கிடைக்கும். அதுவும் சூடு இல்லாமல். இந்த முறையில் சூடான, சுத்தமான காபி பத்து நிமிடங்களில் ரெடி.
இந்த முறையில் எல்லோருக்கும் காபி போட்டுக் கொடுத்தேன். நம்ம தமிழ் நாட்டுக்காரங்களுக்கு காபியைப் போன்ற சர்வ ரோக நிவாரணி எதுவும் இல்லை. காலையில் எழுந்தவுடன் ஒரு காபி குடிக்காவிட்டால் ஒரு வேலையும் ஓடாது அல்லவா? காபி குடித்தவுடன் எல்லோரும் ஓரளவுக்கு சுறுசுறுப்பாகி குளித்து ரெடியானார்கள்.
அப்புறம்தான் எனக்கு சோதனை ஆரம்பித்தது. டிபன் சாப்பிடலாமா என்றால் எல்லோரும் எனக்கு வேண்டாம், உனக்கு வேண்டாம் என்று ரகளை. முந்தின நாள் இரவும் களைப்பினால் ஒருவரும் சரியாக சாப்பிடவில்லை. காலையிலும் டிபன் ஒழுங்காக சாப்பிடவில்லை என்றால் அன்றைய பிரயாணக் களைப்பை எப்படி ஈடு செய்ய முடியும்? அந்தக் கடுகு எண்ணையின் வாசனை எல்லோருக்கும் வெறுத்து விட்டது. போதாக்குறைக்கு வயிற்றுக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. சரியென்று நான் மட்டும் சாப்பிட்டேன். மற்றவர்களுக்கு ஆளுக்கு நாலு மாத்திரை கொடுத்து சாப்பிடச் சொல்லிவிட்டு, பத்ரிநாத்துக்குப் புறப்பட்டோம்.
கேதார்நாத்திலிருந்து பத்ரிநாத்துக்கு இப்போது ஒரு குறுக்கு வழியில் சாலை போட்டிருக்கிறார்கள். சாலை நன்றாக இருக்கிறது. டிராபிக் குறைவு. தூரமும் 50-60 கி.மீ. குறைவு. வழியெங்கும் அடர்ந்த காடுகள். ஓங்கி வளர்ந்த மரங்கள். மனிதனால் கன்னி கழிக்கப்படாதவை. அமைதி என்றால் அப்பேர்ப்பட்ட அமைதி. காலமெல்லாம் இங்கேயே கழித்துவிட மாட்டோமா என்று ஏங்க வைக்கும் அமைதி. தனியாகப் போயிருந்தால் அப்படி செய்திருப்பேனோ என்னமோ? இப்போது பக்கத்தில் உள்ளவர்களைப் பார்த்ததும்தான், வந்த வேலை ஞாபகத்திற்கு வந்தது. சரி, பிராப்தம் இருந்தால் அடுத்த ஜன்மத்திலேயாவது இங்கு வந்து தங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
 ஒரே குறை என்ன என்றால் வழியில் அதிகமான ஊர்கள் இல்லை. வண்டி பிரேக்டவுன் ஆனால் ஆட்களைக்கண்டு பிடித்து ரிப்பேர் செய்ய இரண்டு நாட்கள் ஆகிவிடும். வழியில் ஒரு இடத்தில் ஒரு டீக்கடை இருந்தது. ஆற்று ஓரத்தில் ரம்யமான சுழ்நிலை. தங்கும் வசதி இருந்தால் அங்கேயே நான்கு நாட்கள் தங்கலாமென்ற எண்ணம் வந்தது. அங்கு வண்டியை நிறுத்தி டீ சாப்பிட்டு விட்டு, அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்தோம்.
 பிறகு புறப்பட்டு ஹரித்துவார்-பத்ரிநாத் மெயின் ரோடில் சமோலி என்னுமிடத்தில் சேர்ந்தோம். அங்கிருந்து ஆறு மிலோமீட்டர் தூரத்தில் பிப்லிகோட் என்னும் ஊர் வருகிறது. இது கொஞ்சம் பெரிய ஊர். அங்கு மதிய உணவை முடித்துக்கொள்ளலாம் என்று டிரைவர் பரிந்துரைத்ததால் அங்குள்ள ஒரு பெரிய ஓட்டலில் சாப்பிடப் போனோம்

சம்பந்தியம்மாளுக்கு தேவையான அரிசிச் சாதம் அங்கே கிடைத்தது. நல்ல தயிரும் இருந்தது. மிகவும் ஆசையாக வாங்கிப் பிசைந்து சாப்பிட்டால் சாதம் உள்ளே போகமாட்டேன் என்று சத்தியாக்ரஹம் பண்ணுகிறது. என்ன விஷயம் என்றால் சாதம் அரை வேக்காட்டில் எடுத்து விட்டார்கள். அப்புறம்தான் தெரிந்தது, வட இந்தியா முழுவதும் எல்லா ஹோட்டல்களிலும் சாதம் இப்படித்தான் இருக்கும் என்று கண்டுபிடித்தேன். இப்போது நம் ஊரிலும் சாதத்தை ஓட்டல்களிலும் கல்யாண வீட்டுகளிலும் இப்படித்தான் அரை வேக்காட்டில்தான் போடுகிறார்கள். பலருக்கும் பிடிக்கிறது போல் இருக்கிறது. எனக்குத்தான் பிடிக்கவில்லை போலும்.
எப்படியோ ஒரு மாதிரி மதிய உணவை முடித்துவிட்டு பத்ரிநாத் புறப்பட்டோம். முன்பே சொல்லியிருக்கிறேன், இந்த ரோடு எல்லைப் பாதுகாப்பு படையினரின் பராமரிப்பில் இருக்கிறது என்று. போகும் வழியெங்கும் சாலை அகலப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பல இடங்களில் கார் மிகவும் மெதுவாகத்தான் ஓட்ட முடிந்தது. ஒரு வழியாக மாலை ஐந்து மணிக்கு பத்ரிநாத் சேர்ந்தோம். அந்நேரத்திலேயே குளிர் எலும்பு வரைக்கும் ஊடுருவியது. கேதார்நாத்தைவிட பத்ரிநாத் 1500 அடி அதிக உயரம். (கடல் மட்டத்திலிருந்து 11500 அடி உயரம்) ராத்திரிக்கு எப்படி தூங்கப்போகிறோம் என்ற கவலை எட்டிப்பார்த்தது.

டாக்சி டிரைவர் பரிந்துரைத்த ஒரு லாட்ஜில் தங்கினோம். ஒரே ரூம். ஐந்து பேர் தங்கக்கூடியது. கட்டில்களின் மேல் அரை அடி கனமுள்ள மெத்தைகள் இருந்தன. இது என்னவென்று கேட்டதற்கு அவைதான் ரஜாய், ராத்திரிக்கு தூங்கும்போது அவைகளைத்தான் போர்வையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ரூம்பாய் சொன்னான். அவைகளைத் தூக்கவே தனியாக சாப்பிடவேண்டும் போல இருந்தது. ஆனால் தூங்கும்போதுதான் தெரிந்தது. பத்ரிநாத் குளிருக்கு அந்த ரஜாய்தான் பாதுகாப்பு கொடுத்தது. அவை இல்லாவிட்டால் நாங்கள் தூங்கியே இருக்க முடியாது.
 நம் ஸ்பெஷல் காபி போட்டுக் குடித்துவிட்டு பத்ரிநாதரைத் தரிசிக்கப் புறப்பட்டோம். லாட்ஜிலிருந்து கோவில் அரை கிலோமீட்டர் தூரம்தான். ஆனால் கோவிலுக்கு போய்விட்டு வர நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே? அதை அடுத்த பதிவில் பார்க்கலாமா?
(பின்குறிப்பு: பல விவரங்களை மிகவும் விரிவாக எழுதக்காரணம், இந்தக் குறிப்புகள் இந்த யாத்திரை மேற்கொள்ளுபவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால்தான். மற்றவர்களுக்கு கொஞ்சம் சலிப்பாக இருந்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.)


ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

ஒரு தேசீயப் பிரச்சினை

டிஸ்கி:  இந்தப்பதிவு யாரையும் புண்படுத்துவதற்காகப் போடப்பட்ட து அல்ல. அந்த வாசகத்தைப்படித்தவுடன் எனக்குத் தோன்றிய உணர்வை  வெளிப்படுத்தினேன். ஒரு நண்பர் இது தேவையில்லையே என்று கருத்து தெரிவித்தார். இனிமேல் இந்த மாதிரி பதிவுகள் போடுவதில்லையென்று அவருக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இன்று ஒரு பதிவில் படித்தது.

//ஒரு பிரபலமான எழுத்தாளனுக்கு ஒரு படத்தைப் பற்றி மதிப்புரை எழுதுவதற்காக டிக்கட் எடுத்துக் கொடுக்கவே ஆள் இல்லை என்கிற போது இந்த சமூகத்திலிருந்து எனக்கு என்ன கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?//

இது எந்திரன் சினிமாவைப் பற்றி ஒரு பதிவர் எழுதியது. ஆஹா, எப்படிப்பட்ட தேசீயப்பிரச்சினை இது. யாராவது உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லுங்க அப்பு.

புதன், 22 செப்டம்பர், 2010

கேதார்-பத்ரி யாத்திரை – 7 - கேதார்நாத் அதிர்ச்சிகள்



{அங்கு நாங்கள் முதலில் அடைந்தது பெரிய அதிர்ச்சி. அது என்னவென்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?}

கோவிலுக்கு போகும் வழியில் கங்கையின் உபநதியான அலக்நந்தா நதி ஓடிக்கொண்டு இருக்கிறது. தண்ணீரைத் தொட்டுப் பார்த்தோம்ஐஸ் மாதிரி இருந்தது. நாங்கள் சட்டைக்கு உள்ளே ஒரு ஸ்வெட்டர், வெளியே ஒரு ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு இருந்த போதிலும் குளிரால் நடுங்கிக்கொண்டு இருந்தோம். பேசுவதற்கு வாயைத்திறந்தால் ஆவியாக வெளியில் வருகிறது. அவ்வப்போது பெய்யும் மழையில் வேறு நனைந்திருந்தோம். நாங்கள் இப்படி இருக்கும்போது அந்த ஐஸ் ஆற்றில் வடநாட்டு ஜனங்கள் சர்வ சாதாரணமாக, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரி ஆற்றில் குளிப்பது போல் குளித்துக்கொண்டும், துணிகளைத் துவைத்துக் கொண்டும் இருந்தார்கள். படத்தைப்பாருங்கள். அதைப் பார்த்தே எங்களுக்கு குளிர் ஜுரம் வந்தது போல் ஆகிவிட்டது. இது முதல் ஆச்சரியம்.

அடுத்தது-தென்னிந்தியாவில் இருப்பவர்களுக்கு கோவில் என்றால் ராமேஸ்வரம், தஞ்சாவூர், மதுரை, திருப்பதி, திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி இப்படிப்பட்ட பிரம்மாண்டமான கோவில்கள்தான் மனக்கண்ணில் தெரியும். நான்கைந்து பிரகாரங்கள், நாலு மகாமண்டபங்கள் இப்படி இருந்தால்தான் ஆஹா, சக்தி வாய்ந்த நல்ல கோவில்என்று ஒத்துக்கொள்வோம். இப்படிப்பட்ட நமக்கு சென்னையில் இருக்கும் தெருமுனை பிள்ளையார் கோவில் மாதிரி ஒன்றைக்காட்டி இதுதான் கேதார்நாத் கோவில் என்றால் எப்படியிருக்கும்? பதினாறு அடிக்கு பதினாறு அடியில் ஒரு ரூம். அதில் நடுவில் ஸ்வாமி என்று சொல்லப்படும் ஒன்று. இருபது பேர் ஒன்றாக நிற்க முடியாத இடம். நம்மூரில் சில பணக்காரர்களின் வீடுகளில் பங்களாக்களில் கூட பூஜை அறை இதைவிடப் பெரிதாக இருக்கும். நான் நாஸ்திகனல்ல. இருந்தாலும் இந்தக் கோவிலைப் பார்க்கவா இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று மனது பெரும்பாலானவர்களுக்கு சோர்ந்து போகும். ஆனால் வடநாட்டவர்கள் காட்டும் பக்தி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இப்படிப்பட்ட கோவிலுக்கு கூட பயபக்தியுடன் கூட்டம் கூட்டமாக, வயதானவர்கள் உட்பட, வருகிறார்கள். இது இரண்டாவது ஆச்சரியம்.  
மூன்றாவது ஆச்சரியம். ஏழு அடி உயரமான திருப்பதி பாலாஜி, முப்பது அடி ஆஞ்சனேயர், இருபத்தியைந்து அடி விநாயகர் ஆகிய சாமிகளைப்பார்த்துப் பழகிய நமக்கு ஒரு இரண்டடி உயரமுள்ள ஒரு மலை முகட்டைக்காட்டி இதுதான் உலகப்பிரசித்தி பெற்ற கேதார்நாத் என்றால் கொஞ்சம் ஏமாற்றம் வருவதைத் தடுக்க முடியவில்லை. என்ன, ஒரே ஆறுதல் என்றால், சாமியை நம் கையாலேயே தொட்டு வணங்கலாம். நாமே அபிஷேக ஆராதனைகளைச் செய்யலாம். இது ஒன்றுதான் வித்தியாசமான விஷயம். நம்ம ஊர்ல சாமிக்கு பத்து அடி தூரத்தில நின்னுதான் சாமி கும்பிடணும். குருக்கள் மேல நம்ப கையோ, உடம்போ தெரியாத்தனமா பட்டுடுச்சுன்னா உடனே தீட்டு வந்துடுச்சுன்னு பெரிய ரகளை நடந்துடும்.
ஆனா, கோயிலுக்குள் கூட்டம் எக்கச்சக்கமாக இருந்ததாலும், பூஜை வழிமுறைகள் தெரியாததாலும், அந்தக் குளிரிலிருந்து சீக்கிரம் தப்பித்து செல்லவேண்டும் என்கிற எண்ணத்தினாலும் ஒரு புரோக்கர் அய்யரைப் பிடித்து ஒரு தொகை பேசி பூஜைக்கு ஏற்பாடு செய்யவேண்டிய சூழ்நிலையாகி விட்டது. அந்த அய்யர் கிடுகிடுவென் பூஜை சாமான்களை வாங்கி எங்கள் கையில் கொடுத்து கோவிலின் பின்புறவாசல் வழியாக கேதார்நாத்திடம் கூட்டிப்போய்விட்டார். அவருக்கு அங்குள்ள நடைமுறைகள் அத்துபடி.
எங்கள் கையாலேயே பாலபிஷேகம் செய்வித்தார். பூவால் அர்ச்சித்து சந்தனம், குங்குமம் பொட்டு வைத்தோம். அவுவளவுதான். சாமியைத் தொட்டு ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு வெளியே வந்தோம். இவ்வளவையும் மொத்தம் ஐந்து நிமிடங்களில் முடித்துவிட்டோம். வெளியில் வந்ததும் அய்யர் பூஜை சாமான்களுக்கு காசை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவருடைய காணிக்கையை வாங்கிக்கொண்டு காணாமல் போய்விட்டார். அடுத்த கிராக்கியைப் பிடிக்க வேண்டுமல்லவா?

சாமியை எங்கள் கைகளால் தொட்டு நமஸ்காரம் செய்தது இந்தக்கோவிலில் மட்டும்தான். இத்தனை கஷ்டங்களுக்கு இடையிலும் ஆறுதல் தந்தது அது ஒன்றுதான்.
மதியம் ஒரு மணி ஆகிவிட்டது. இனி கீழே இறங்கவேண்டும். மேகங்கள் கூடி எப்பொழுது வேண்டுமானாலும் மழையைப்பொழிவேன் என்று பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது. உடம்பு அசதி, குளிர், மூச்சுத்திணறல் இவைகளினால் பசி மறந்தும் மறைந்தும் போனது. ஆளுக்கு ஒரு டீ வாங்கிக் குடித்து விட்டு குதிரைக்காரர்கள் இருக்குமிடத்துக்கு வந்தோம். பார்த்தால் நான்கு குதிரைக்காரர்கள் மட்டும் இருக்கிறார்கள், ஒருவனைக் காணோம். எல்லோருமாகத் தேடி அவனைக்கண்டு பிடித்து எல்லோரும் குதிரைகளில் ஏறிப் புறப்பட்டோம். இறங்கும்போது குதிரைகள் வேகமாக இறங்குகின்றன. அதனால் அவைகள் கால்களை கீழே வைக்கும்போது ஏற்படும் அதிர்ச்சி இடுப்பு எலும்புக்குள் ஊடுருவி, ஏற்கனவே புண்ணாகி இருக்கும் தசைகளை மேலும் ரணமாக்குகிறது. இந்த வேதனையால் வழியில் தெரிந்த இயற்கைக்காட்சிகளை ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் உங்களுக்காக சில காட்சிகளை படம் பிடித்து வந்திருக்கிறேன்.
பாதி வழியில் இருக்கும் ராம்பாரா வந்தவுடன் நான் இனி நடந்தே வந்து விடகிறேன், நீங்கள் எல்லோரும் கீழே போய் காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். என் சம்பந்தி அதற்கு முன்பிருந்தே நடந்து வந்து கொண்டிருந்தார். இருவரும் இரண்டு கிலோ நடந்திருப்போம். கால்களை பிரேக் போட்டு நடந்ததால் கால்களில் வலி ஆரம்பித்துவிட்டது. அப்படி நடக்காவிட்டால் நடக்கும் வேகத்தில் தலை குப்புற விழ வேண்டிவரும். என்ன செய்வதென்று யோசித்து திரும்பவும் வேறு குதிரைகளைப் பேசி மீதி தூரத்தைக்கடந்து கௌரிகுண்டிற்கு வந்து சேர்ந்தோம். அவ்வப்போது பெய்த மழையினால் எல்லோரும் நன்றாக நனைந்து விட்டோம். ஆனால் குதிரை சவாரிசுகத்தில்மழை ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.
எங்களக்கொண்டு வந்து விட்ட டாக்சி டிரைவர் எங்களை உடனடியாகக் கண்டு பிடித்துவிட்டார். டாக்சியில் ஏறி ரூமுக்கு வந்து படுத்ததுதான் தெரியும். தூங்கினது எப்பொழுது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. தூக்கத்தில் குதிரை என்னைக்கீழே தள்ளுவது போலவும், நான் அதல பாதாளத்தில் விழுவது போலவும் கனவுகள் வந்து கொண்டே இருந்தன. ஒரு வழியாகப் பொழுது விடிந்தது. முந்தின நாள் பயணம் ஒரு கனவு போல்தான் தோன்றியது. காலில் பட்ட காயம்தான் அது கனவல்ல, நிஜம்தான் என்று உணர வைத்தது.
காலையில் வெந்நீரில் குளித்து டிபன் சாப்பிட்ட பிறகுதான் ஓரளவு தெம்பு வந்தது. இன்று புறப்பட்டு பத்ரிநாத் போகவேண்டும். டிரைவர் ஒரு நாள் ஓய்வு எடுத்திருந்ததால் புத்துணர்ச்சியுடன் இருந்தார்.
பத்ரிநாத் பயணம் அடுத்த பதிவில்.


ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

ஆசிரியர்களின் ஒரு வருந்தத்தக்க குணம்!

பெரும்பாலான ஆசிரியர்களுக்கு உண்டான ஒரு கெட்ட குணத்தை எவ்வளவு பேர் அறிவீர்கள் என்று எனக்குத்தெரியவில்லை. அது உண்மையிலேயே கெட்ட குணம்தானா என்றும் நிச்சயமாக சொல்வதற்கில்லை. இருந்தாலும் என் மனச்சாட்சி என்னை மிகவும் நச்சரிப்பதால் இந்த உணர்வை வெளியேற்றியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளேன். அதற்குத்தான் இந்தப்பதிவு.

நான் ஏறக்குறைய ஒரு இருபது ஆண்டுகள் விவசாய இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்திருக்கிறேன். என்னுடைய முப்பதாவது வயதில் இந்த ஆசிரியவேலை ஆரம்பித்தது.  என்னுடைய இளம் வயதில் ஒருவன் ஒரு வேலையை நல்ல முறையில் செய்து முடித்தான் என்றால், அவனுடைய பெற்றோர்களோ, ஆசிரியர்களோ அவனைப் பெரிதாகப் பாராட்ட மாட்டார்கள். அவன் செய்த காரியத்தில் குறை ஒன்றும் சொல்லாமல் இருந்தாலே அதைப்பாராட்டு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் எவ்வளவு நல்ல மார்க்கு வாங்கியிருந்தாலும், "சரி, அடுத்த தேர்வில் இன்னும் அதிக மார்க்குகள் வாங்கு" என்றுதான் சொல்வார்களே தவிர அந்த மார்க்கைப் பாராட்ட மாட்டார்கள்.

இந்த மாதிரி ஏன் பெரியவர்கள் அன்று நடந்துகொண்டார்கள் என்றால், ஒருவனைப் பாராட்டிவிட்டால் அவனுக்கு தலைக்கனம் வந்துவிடும். பிறகு அவன் மெத்தனமாக நடந்து கொள்வான், அது அவன் முன்னேற்றத்தை தடுக்கும் என்பது அன்றைய காலத்து கருத்து. ஆகவே பாராட்டு ஒருவனின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்து விடும் என்பதினால் ஒருவரும் பாராட்டை சம்பந்தப்பட்டவனின் முன்பாகச் சொல்லமாட்டார்கள். அவனில்லாதபோது அடுத்தவர்களிடம் அவனைப்பற்றி உயர்வாகப் பேசுவார்கள். அக்கம்பக்கத்தவர் அவனைப்புகழ்ந்தாலும் கூட அதை பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவன் என்ன உலகத்தில் யாரும் செய்யாததைச் செய்து விட்டான் எட்றுதான் சொல்வார்களே தவிர அந்த புகழ்வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொண்டவர்கள் அந்தக்காலத்தில் கிடையாது.

வயதானவர்களும் அப்படித்தான் யார் என்ன செய்தாலும் அதில் குறைதான் கண்டுபிடிப்பார்களே ஒழிய ஒரு வார்த்தை கூட நன்றாகச் செய்தாய் என்று வராது. அதனாலேயே இளைஞர்கள் யாரும் வயசானவர்களை மதித்து ஒன்றும் சொலவதில்லை. அப்போதும் என்னை யாரும் மதித்து ஒன்றையும் சொல்வதில்லை என்று புலம்புவார்களே தவிர அதற்கு என்ன காரணம் என்று யோசிக்கமாட்டார்கள்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் எனக்கும் இந்த வியாதி இருக்கிறது.  குறிப்பாக ஒரு நல்ல பதிவைப்பார்த்தால் "நல்ல பதிவு" என்று ஒரு டெம்பிளேட் கமென்ட் மட்டும்தான் போட மனது வருகின்றதே ஒழிய, அதை நாலு வார்த்தைகளால் பாராட்டுவோமே என்கிற மனது வரமாட்டேன் என்கிறது. நோய் இருக்கிறது என்பது தெரிந்துவிட்டபடியால் அதற்கு வைத்தியம் செய்வது சுலபம்தானே. வைத்தியம் ஆரம்பித்து விட்டேன்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

கேதார்-பத்ரி யாத்திரை – 6 கழுதை சவாரியும் நானும்.


கேதார்-பத்ரி யாத்திரை6 கழுதை சவாரியும் நானும்.

காலையில் 5 மணிக்கே எழுந்து ஹோட்டல்காரன் கொடுத்த வெந்நீரில் குளித்துவிட்டு 7 மணிக்கெல்லாம் குதிரை சவாரி ஆரம்பிக்கும் இடத்திற்குப் போய்விட்டோம். எங்கள் ஏஜண்ட் அங்குள்ள குதிரைக்காரர்களிடம் பேசி ஐந்து குதிரைகளுக்கு ஏற்பாடு செய்தார்.
இங்கிருந்து புறப்படும்போதே ஆளுக்கொரு பழைய பெட்ஷீட் கொண்டு போயிருந்தோம் (முன் அனுபவமும் கேள்வி ஞானமும் இருந்ததால் இந்த ஏற்பாடு). அதைக் குதிரையின் சேணத்தின் மேல் போட்டுக்கொண்டால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கும். வழக்கமாக நம் சினிமாக்களில், கதாநாயகன் அப்படியே குதிரைகளின் சேணத்தின் மேல் ஜம்ப் பண்ணி ஏறி, குதிரையை விரட்டிக்கொண்டு வில்லனைப்பிடிக்க ஓடுவதைத்தான் பார்த்திருக்கிறோம். அறுபது வயசு தாண்டிய என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இது ஞாபகம் இருக்கும். அந்தக்குதிரைகளின் சேணம் நன்றாகப் பராமரிக்கப்பட்டு மிருதுவாக இருந்திருக்கலாம்.
இங்கே இந்தக்குதிரைகளின் சேணங்கள் (மாட்டுத்தோல்) மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்து நன்றாக காய்ந்த மரம் போல் இருக்கும். அதன்மேல் பெட்ஷீட்டை எட்டாக மடித்துப்போட்டால்தான் நம்மைப்போல் ஆட்கள் உட்கார முடியும். நாங்களும் அப்படி பெட்ஷீட்டைப் போட்டு குதிரையின் மேல் ஏறினோம். இதற்காக அந்த இடத்தில் ஒரு பிளாட்பாரம் கட்டி வைத்திருக்கிறார்கள்.  அதன் மேல் ஏறி குதிரையின் மேல் சுலபமாக ஏறிவிடலாம். ஆனால் மற்ற இடங்களில் ஏறுவது கொஞ்சம் கடினம். அந்த மாதிரி இடங்களில் குதிரைக்காரன் நம்மை அலாக்காகத் தூக்கி குதிரையின் மேல் ஏற்றிவிடுகிறான்.
குதிரையின் சேணத்தின் முன்பாக ஒரு இரும்பு வளையம் இருக்கிறது. அதுதான் நமக்கு ஒரே பிடிப்பு. அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இறங்கும்போது உள்ளங்கைகள் இரண்டும் ரணமாகி இருக்கும். இப்படியாக குதிரை புறப்பட்டுவிட்டது. ஒரு குதிரைக்காரன் இரண்டு குதிரைகளை ஓட்டுகிறான். அவன் எப்படி ஓட்டுகிறானென்றால், வாயால் பல சப்தங்களை உண்டாக்கி அவற்றுக்கு ஏற்ற மாதிரி போக குதிரைகளைப் பழக்கி இருக்கிறான். நம் ஊரில் மாட்டு வண்டிகளை ஓட்டுவார்களே அந்த மாதிரி

இந்தக் குதிரைகளின் மேல் போகும்போது கடைப்பிடிக்கவேண்டிய சில விதிகள். குதிரை, மலை மேலே ஏறும்போது முன்னால் சாய்ந்து கொள்ளவேண்டும். இறங்கும்போது பின்னால் சாய்ந்து கொள்ளவேண்டும். மலைப்பாதையில் சில இடங்களில் பாறைகள் நீட்டிக்கொண்டு இருக்கும். அந்த இடங்கள் வரும்போது கவனமாக தலையைக் குனிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தலை பாறையில் மோதி பலமான காயங்கள் ஏற்படலாம்.
செல்லவேண்டிய தூரம் 14 கிலோமீட்டர். பாதி வழியில் ராம்பாரா என்னும் இடத்தில் ஒரு ஹால்ட். இங்கு யாத்ரீகர்கள் தாங்கள் சவாரி செய்யும் குதிரைக்கு வெல்லம் வாங்கித் தரவேண்டும். வெல்லம்தான் குதிரைக்கு உடனடி சக்தியைக் கொடுக்கிறது. அப்படியே குதிரைக்காரனுக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுக்க வேண்டும். நீங்களும் ஏதாவது சாப்பிட்டுக்கொள்வது நல்லது. நாங்கள் ஒரு ஆலு பரோட்டாவும் டீயும் சாப்பிட்டோம். இங்கு ஒரு அரை மணி நேரம் ஆகிறது.
நாங்கள் குதிரையில் போகும் போதுதான் எனக்குத்தெரிந்த அரைகுறை இந்தியில் தெரிந்து கொண்டது என்னவென்றால் (சொல்ல வெட்கமாக இருக்கிறது) நாங்கள் சவாரி செய்தது குதிரை அல்ல கழுதை என்று. அடடா, கழுதை சவாரி செய்யவா இவ்வளவு தூரம் வந்தோம் என்று எங்களுக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. என்ன, கொஞ்சம் நாகரீகமாக கோவேறு கழுதை என்று சொல்லுகிறார்கள். இவை கழுதையையும் குதிரையையும் சேர்த்து உண்டாக்கிய ஒரு மிருக இனம். இவை இனப்பெருக்கம் செய்து கொள்ளாது. மலைப் பிரதேசங்களில் கனமான சுமைகளை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டுபோக மிகவும் உபயோகப்படும் பிராணி. இரண்டாவது உலக மகா யுத்தத்தில் மலைப்பிரதேசங்களில் பாதிகாப்புப் படையினரால் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டது. தற்சமயம் பொது மக்களால் பல்வேறு உபயோகங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

போகும் வழியில் பல்வேறு இயற்கைக் காட்சிகள் மனதைக் கவருகின்றன. சில போட்டோக்களை இணைத்திருக்கிறேன். ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளும் அதிக உயரத்திலிருந்து விழுகின்றன. வழியெங்கும் கோவேறுகழுதையிலும், டோங்காவிலும், நடந்தும் பக்தர்கள் கேதார்நாத் மகாதேவைச் சந்திக்க சாரிசாரியாக சென்று கொண்டிருக்கிறார்கள். டோங்கா என்பது ஒரு சாய்வு நாற்காலிக்கு இருபுறமும் இரண்டு கெட்டியான கழிகளை வைத்துக் கட்டப்பட்ட ஒரு சப்பரம். இதை நான்கு பேர் தூக்கிக்கொண்டு போகிறார்கள். மிகவும் வயதானவர்கள் இதில் செல்கிறார்கள். ஒரு பக்கம் ஓங்கி உயர்ந்த மலை. இன்னொரு பக்கம் கிடுகிடு பாதாளம். தவறி விழுந்தால் எலும்புகளை சாக்கில்தான் கட்டிக்கொண்டு வரவேண்டும். போன தடவை போயிருந்தபோது இந்தப்பள்ளங்களுக்கு எந்த விதமான தடுப்புகளும் இல்லை. இப்போது கம்பி தடுப்பு போட்டிருக்கிறார்கள்.
இதுவரை பிளஸ் பாயின்ட்டுகளை மட்டும் சொன்னேன். இப்போது சில நெகடிவ் பாயின்ட்டுகள்.  குதிரையில் உட்கார்ந்து போகும்போது குதிரை நடப்பதால் உண்டாகும் அதிர்வுகளினால் நமது பின்பகுதியில் உள்ள தசைகள் அழற்சி அடைந்து ஓரிரு மணிகளில் மிகுந்த வலி ஏற்படுகின்றது. குதிரை ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் இந்த அழற்சியினால் ஏற்படும் வலி இடுப்பு எலும்பு வரை சென்று பொறுக்கமுடியாத கஷ்டம் ஏற்படுகின்றது. ஏறுவதை விட இறங்கும்போது இந்த வலி மிகவும் அதிகம். பேசாமல் இறங்கி நடந்துவிடலாமா என்று தோன்றும். நான் அப்படி இறங்கி கொஞ்ச தூரம் நடந்தேன். ஆனால் சமதளத்தில் நடப்பது வேறு, மலை இறக்கத்தில் நடப்பது வேறு. இறங்கும்போது சரிவில் விழுந்து விடாமலிருக்க ஒவ்வொரு அடி வைக்கும்போதும் காலை அழுத்தி வைக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் நடக்கும் வேகத்தில் நாம் கீழே விழுந்துவிட நேரிடும். இப்படி கொஞ்சநேரம் நடந்தால் கால்கள் வலிக்க ஆரம்பித்து விடுகின்றன.
அடுத்த சங்கடம் இந்தக் குதிரைகள் வேண்டுமென்றே பாறைகளின் சமீபமாகவே செல்கின்றன. அடுத்து எதிரே வரும் குதிரைகளின் ஓரமாகவும் செல்கின்றன. அப்போது நமது கால்கள் பாறைகளிலோ, அல்லது எதிரே வரும் குதிரைகளின் கால்களிலோ உரசி பலத்த வலியுடன் காயங்களும் ஏற்படலாம். நான் சென்ற குதிரை ஒரு பாலத்தின் ஓரமாக சென்று அந்தப்பாலத்தில் போட்டிருந்த இரும்புக் கம்பியில் என் கால் மோதி ஆழமான காயம் ஏற்பட்டு விட்டது. எனக்கு சர்க்கரை வியாதி வேறு இருந்ததால் மிகுந்த கவலை ஏற்பட்டுவிட்டது. ஊரிலுள்ள என் டாக்டர் மகளுக்கு போன் செய்து மருந்துகளைக்கேட்டு, அவைகளை வாங்கி சாப்பிட்டேன். அப்படியும் காயம் முழுவதுமாக ஆறுவதற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு மேல் ஆகியது.
இந்தக்குதிரைகளுக்கு அவைகளின் சொந்தக்காரர்கள் அவ்வளவாகத் தீனி போட மாட்டார்கள் போல இருக்கிறது. அவைகள் புல் தரைகளைப் பார்த்தால் போதும், புல் மேயப் போய்விடுகின்றன. குதிரைக்காரன் மிகுந்த சிரமப்பட்டுத்தான் அவைகளை திருப்ப முடிகிறது. இப்படியாக குதிரை சவாரி அனுபவம் ஆயுளுக்கும் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்தது.
வழியெங்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் இந்தக்குதிரைகளின் கழிவுகளை சுத்தப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். என்ன ஒரு கஷ்டம் என்றால் இவர்கள் எல்லா யாத்ரீகர்களிடமும் கையேந்துகிறார்கள்.

இப்படியாக ஒரு வழியாக கேதார்நாத் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். மொத்தம் நான்கு, நான்கரை மணி நேரம் ஆகிறது. கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தூரத்திலேயே குதிரைகளை நிறுத்திவிடுகிறார்கள். அங்கிருந்து நடந்துதான் கோவிலை அடையமுடியும்.  இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய பத்தாயிரம் அடிக்கு மேல் இருப்பதால் இங்கு காற்றின் அடர்த்தி மிகவும் குறைவாக இருக்கும். ஆஸ்த்மா மற்றும் நுரையீரல் வியாதி உள்ளவர்களுக்கு இங்கே மூச்சு இரைக்கும். அப்படிப்பட்டவர்கள் கௌரிகுண்ட்டிலேயே ஆக்சிஸன் சிலிண்டர்கள் வாங்கிக்கொண்டு வருவது நல்லது. அவைகளை எப்படி உபயோகப்படுத்துவது என்பதையும் கடைக்காரர்களிடம் நன்றாக கேட்டுக் கொள்ளவேண்டும். உடல் சோர்வு காரணமாகவும் ஆக்சிஜன் குறைவு காரணமாகவும் கோவிலுக்கு நடப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். கேதார்நாத் மகாதேவ்வை இப்படி கஷ்டங்கள் பட்டுத் தரிசித்தால்தான் முழு புண்ணியமும் கிடைக்கும் என்று நம்பி மேலே சென்றோம். நாங்களும் ஒரு வழியாக கடைசியில் கோவிலை அடைந்தோம்.
அங்கு நாங்கள் முதலில் அடைந்தது பெரிய அதிர்ச்சி. அது என்னவென்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?



செவ்வாய், 7 செப்டம்பர், 2010

எனக்கு ஒரு உண்மை புரியலீங்க.

 
இந்த தகவல் எல்லோருக்கும் சென்றடைய ஓட்டு போடுங்க

 
 இந்த வார்த்தைகளை பதிவர்கள் எல்லோரும் பல பதிவுகளில் பார்த்திருப்பார்கள். இந்த வார்த்தைகளில் இருந்து நான் புரிந்து கோண்டது என்னவென்றால் :-

அவர்களுடைய எழுத்துக்கள் மிகவும் பொருளும், மதிப்பும் மிக்கவை. அவை நிறையப் பேருக்குப் போய்ச் சேர்ந்தால் அந்த மக்கள் அதைப் படித்து ஜன்ம சாபல்யம் அடையட்டும் என்பதுதான் அவர்கள்  அவா. அதனால்தான் அந்த எழுத்துக்கள் பல பேரைச் சென்றடையட்டும் என்று நம்மை பல திரட்டிகளில் ஓட்டுப்போடச் சொல்லுகிறார்கள்.

நான் புரிந்துகொண்டது சரி என்று நினைக்கிறேன். அப்படியானால் அந்தப்பதிவை காப்பி பேஸ்ட் செய்கிறவர்களும் அதே வேலையைத்தானே செய்கிறார்கள். ஏன் அப்போது மட்டும் எல்லோரும் லபோ திபோ என்று அடித்துக்கொள்கிறார்கள். அந்த எழுத்துக்களை நீங்கள் பிறக்கும்போதே கொண்டு வந்தீர்களா, இல்லையே. நீங்களும் அந்தக் கருத்துக்களை எங்கிருந்தோ எடுத்துக்கொண்டவர்கள்தானே? நீங்கள் எங்கிருந்தோ எடுத்ததை, உங்களிடமிருந்து ஒருவர் எடுக்கிறார், அவ்வளவுதானே.


ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கேதார்-பத்ரி யாத்திரை – 5 கேதார்நாத் சலோ


கேதார்நாத் சலோ
இதுதான் எனக்குத் தெரிந்த காலேஅரைக்கால் இந்தி. எல்லாரும் டாக்சியில் ஏறி உக்கார்ந்ததும் நான் டிரைவரிடம் இதைத்தான் கூறினேன். அவனுக்குத் தெரியும். நம்ம சரக்கு அவ்வளவுதான் என்று. அவன் மளமளவென்று ஹிந்தியில் என்னமோ நீளமா சொன்னான். எல்லாம் புரிந்த மாதிரி மண்டையை ஆட்டிவிட்டுடீக்ஹைஎன்று சொன்னேன். அவன் என்ன சொன்னானோ கேதார்நாத்ஜீக்கே வெளிச்சம். அதற்குப்பிறகு பல இடங்களில் அவன் இந்த மாதிரி பேசினபோதெல்லாம்முஜே ஹிந்தி அச்சீ நஹி மாலும்அப்படீன்னு சொல்லி சமாளிப்பேன்.
இந்த டூரைப்பற்றி எழுத ஆரம்பித்ததும் ஒரு பதிவர் சொன்னார். கேதார்நாத் செல்வதற்கு நிறைய மனோதிடம் வேண்டும் என்று. அதை இந்த டூரில் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன். முதலில் நம் ஊர் சாதம், சாம்பார், ரசம், மோர் இவைகளை மறந்துவிட வேண்டும். ரொட்டி, டால் அல்லது சப்ஜி, கடுகு எண்ணெய், இவைகளுக்கு மனது ஒத்துக்கொண்டால் ஒழிய வடநாட்டு யாத்திரையைப்பற்றி கனவு கூடக் காணவேண்டாம். இது தவிர மனதில் அளவுக்கதிகமான பக்தி வேண்டும். வடநாட்டுக்காரர்களிடம் இருக்கும் அளவு பக்தி தென்னாட்டவரிடம் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். பக்தி இருந்தால்தான் உடல் உபாதைகளை மறந்து ஆண்டவனைத் தரிசிக்கவேண்டும் என்ற வேட்கை தோன்றும். இரண்டாவது, பணத்தைத் தாராளமாகச் செலவு பண்ணக்கூடிய சௌகரியம். இது இல்லாவிட்டால் இன்னும் அதிகமான, அசௌகரியங்களுக்கு ஆளாகவேண்டும். இந்த அசௌகரியங்களுக்கு அஞ்சாத மனோதிடம் வேண்டும்.

ஹரித்துவாரிலிருந்து கேதார்நாத் மலையின் அடிவாரமானகௌரிகுண்ட்என்னும் இடத்திற்குப்போக ஏறக்குறைய 220 கிலோமீட்டர்கள். வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. ஒரு பக்கம் மலை. மறு பக்கம் அதலபாதாளம். அதன் அடியில் சின்ன வாய்க்கால் மாதிரி தெரியும் கங்கை நதியும் அதன் கிளை நதிகளும். இந்தப்பாதாளத்தில் விழுந்தால் நம் காரும் நாமும் என்னவாவோம் என்கிற நினைப்பே ஆண்டவனை நம்ப வைத்துவிடும். அவன் அருள் இல்லையென்றால் அவனை நினைக்கவோ, தரிசிக்கவோ, தரிசித்துவிட்டு உயிருடன் ஊர் திரும்பவோ முடியாது என்கிற நம்பிக்கையை இந்த பாதாளங்களைப் பார்த்ததும் நிச்சயம் தோற்றுவிக்கும்.

இயற்கையன்னை கருணையுடன் நம்மை இந்த சிந்தனைகளிடமிருந்து மீட்டு தன்வயப்படுத்துகிறாள். எங்கும் பச்சப்பசேல் என்ற பசுமை. ஓங்கி வளர்ந்த மரங்கள். வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. பெரும்பாலான இடங்களில் கூடவே வரும் கங்கை. இவை நம் கவனத்தை ஈர்க்கின்றன.
மதியம் 1 மணிக்கு ஸ்ரீநகர் என்னும் ஊரில் மதிய உணவு சாப்பிட்டோம். என்ன உணவு என்றால் ரொட்டி, சப்ஜி, சாவல், தஹி, அச்சார். இந்த வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஐந்து வார்த்தைகளை வைத்துக்கொண்டு வட இந்தியா முழுவதும் உங்கள் உணவுப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம். என்ன ஒரே சங்கடம் என்றால் இரண்டு நாளில் வயிற்றுப்போக்கு ஆரம்பிக்கும். இதற்கு உண்டான மருந்துகளை நம் மருந்துப்பெட்டியிலிருந்து எடுத்து சாப்பிட வேண்டியதுதான். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இனி ஊர் திரும்பும் வரையில் இந்த மாத்திரைகள்தான் நம் உணவு. அதற்குத்தேவையான அளவு மாத்திரைகளை ஊரிலிருந்தே முன் எச்சரிக்கையாக கொண்டு வந்திருக்கவேண்டும். வயிற்றுப்போக்கு நிற்பதற்கும் நாம் நம் ஊர் வந்து சேருவதற்கும் சரியாக இருக்கும். அப்புறம் என்ன, நம் டாக்டர் நம்மையும் நாம் திருப்பிக் கொண்டு வந்திருக்கும் மிச்சம் மீதி இருக்கும் பணத்தையும் கவனித்துக் கொள்வார்.
ஹரித்துவாரிலிருந்து கேதார்நாத், பத்ரிநாத் செல்லும் சாலைகளை BSF என்னும் எல்லையோரக் காவல் படையினர் பராமரிக்கிறார்கள். ஆகவே அவைகள் நன்றாக இருக்கின்றன. பல சமயங்களில் மலைச்சரிவு ஏற்பட்டு ரோடு அடைபட்டு விடும். அநேகமாக சில மணி நேரங்களில் சரி செய்து விடுகிறார்கள். ஆனால் சில நேரங்களில் சரி செய்வதற்கு ஓரிரு நாட்கள் கூட ஆகலாம். அந்த மாதிரி நிலைமை ஏற்பட்டால் டூரை கேன்சல் செய்து விட்டு திரும்பவதைத்தவிர வேறு வழி இல்லை. எங்கள் நல்ல காலம் அந்த மாதிரி ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
அந்த மலைப்பதையில் வண்டி ஓட்டும் டிரைவர்களும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். வேகமாகச் சென்றால்கூட விபத்துக்களை ஏற்படுத்துவதில்லை. நமக்குத்தான் பயமாக இருக்கிறது. இப்படியாகப்பயணித்து மாலை 5 மணிக்கு சோனப்பிரயாக் என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த இடம் கௌரிகுண்ட் என்னும் இடத்திற்கு ஐந்து கி.மீ. முன்னால் இருக்கிறது. எங்கள் டிரைவர் என்ன சொன்னாரென்றால், “கௌரிகுண்டிற்குச் சென்றால் தங்குவதற்கு நல்ல சௌகரியமான இடம் கிடைக்காது. சோனப்பிரயாக்கில் நல்ல ஓட்டல் இருப்பதால் அங்கேயே தங்கிக்கொள்ளலாம்என்று சொன்னார். நாங்களும் அப்படியே சரியென்று சொல்லி, சோனப்பிரயாக்கிலேயே தங்கினோம். ஓட்டல் உண்மையிலேயே நன்றாக இருந்தது.

அங்கேயே ஒரு குதிரை புரோக்கர் டிரைவர் மூலமாக வந்தார். அவரிடம் ஐந்து பேர்களுக்குமாக குதிரைகளை, குதிரை ஒன்றுக்கு 1100 ரூபாய் என்று பேசி அடவான்ஸ் கொடுத்தோம். கௌரிகுண்ட்டிலிருந்து கேதார்நாத் கோயிலுக்கு 14 கி.மீ.தூரம். நடக்க மனோதிடமும் உடல்திடமும் உள்ளவர்கள் நடந்து செல்லலாம். ஏறுவதற்கு 6 மணி நேரமும்  இறங்குவதற்கு 5 மணி நேரமும் வேண்டும். நாங்கள் அந்தப் பரீட்சைக்கு தயார் இல்லை. ஆகவே குதிரைகள் ஏற்பாடு செய்தோம். குதிரையில் போவது சுகமாக இருக்கும் என்ற நினைவிலேயே தூங்கிப்போனோம்.
தொடரும்….