ஞாயிறு, 29 ஜூன், 2014

தமிழன் என்று ஓர் இனம்.


தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. ஆஹா, எப்படிப்பட்ட வார்த்தைகள். இவ்வார்த்தைகளைக் கேட்கும்போதே புல்லரிக்கிறது, மயிர்க்கால்கள் சிலிர்க்கின்றன, தலை தானாக உயர்கிறது.

தமிழினத்தைப் போல் தன்மானமுள்ள இனம் இவ்வுலகில் கிடையாது. ஒரே சிக்கல் என்னவென்றால், அதை அவன் அடிக்கடி மறந்து விடுவான். தற்காலக் கலாச்சாரக் காவலர்களான திராவிட அரசியல்வாதிகள் அவனுக்கு இதை அடிக்கடி நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.

இலங்கையில் பிரபாகரன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்தபோது "ஆஹா, எங்கள் சகோதரர்களை இலங்கை அரசு படுகொலை செய்து கொண்டிருக்கிறது, இதை ஏன் இந்திய அரசு கண்டும் காணாதது போல் இருக்கிறது? இதை வன்மையாக எதிர்க்கிறோம்" என்று தமிழனின் தன்மான உணர்வை தூசு தட்டி எழுப்பி ஒரு சில தீக்குளிப்பு வரை கொண்டு சென்றது யார்?

இந்த அரசியல் வாதிகள் இல்லாவிட்டால் தமிழனுக்கு, தான் ஒரு பாரம்பரியம் மிக்க, தன்மானத்திற்குப் பெயர் போன இனம் என்பது மறந்து போயிருக்கும். ஈழத் தமிழர் பிரச்சின் ஒரு வழியாக ஓய்ந்த பிறகு அவர்களுக்கு மெல்லுவதற்கு ஒன்றும் இல்லாமல் போயிற்று.

நல்ல காலம், மோடி வந்தார். அவர் ஏதோ இந்தி பற்றி அறிக்கை விட்டிருக்கிறார். உடனே நம் அரசியல்வாதிகள் " பழைய குருடி, கதவைத்திறடி" என்றபடி இந்தி எதிர்ப்புக் கோஷங்களை கூவுகிறார்கள். தமிழா, மோடி உன் தமிழை அழித்து விட முடிவு செய்து விட்டார், நீ வீறு கொண்டு எழு என்று உசுப்பி விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

நம்மூர் அரசியல்வாதிகளுக்கு அவ்வப்போது ஏதாவது ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கட்சி உயிரோடு இருப்பது மக்களுக்கு எப்படித் தெரியும்? அதற்கு ஏதாவது நொண்டிச் சாக்கு வேண்டும். அவ்வளவுதான். இப்போது மோடி சிக்கிக்கொண்டார். அவர் இன்று சென்னை வரும்போது இரண்டொரு கட்சிகள் கருப்புக்கொடி காட்டினாலும் காட்டுவார்கள். அவர்களை  கைது என்ற பெயரில் உடனே ஒரு கல்யாண மண்டபத்திற்கு கூட்டிக்கொண்டு போய் நல்ல பிரியாணி போட்டு மாலையில் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.

முன்னூறு வருடங்களுக்கு முன் இங்கிலீஷ்காரன் நம்மூருக்கு வியாபாரத்திற்கென்று வந்து நம்மை ஆள ஆரம்பித்த கதை எல்லோருக்கும் தெரியும். அப்போது இங்கிலீஷ் தெரிந்தால் அவனிடம் சேவகம் செய்யவும் கொஞ்சம் காசு பார்க்கவும் முடியும் என்பதினால் நம் ஆட்கள், குறிப்பாக தமிழர்கள் இங்கிலீஷ் படித்து காசு பண்ணினார்கள்.

அவன் நம் நாட்டைவிட்டுப் போய் 70 ஆண்டுகள் ஆன பின்பும் நாம் இங்கிலீசை விடவில்லை. ஏன் என்றால் இங்கிலீஷ் இன்றைக்கும் காசு கொடுக்கிறது. இல்லையென்றால் எப்படி அமெரிக்கா செல்ல முடியும்? இந்திக்கு அவ்வளவு மவுசு இல்லை. இருந்தாலும் பலர் வடநாட்டுக்கு உத்தியோகம் பார்க்கப்போவதால் இந்தி படிக்கிறார்கள். (இந்தியை கொள்கை ரீதியாக எதிர்ப்பவர்கள் உட்பட).

தமிழனின் தன்மானம் எந்த அளவிற்கு இருக்கிறதென்றால், தன் பிள்ளைகளுக்கு வேத வியாஸ், தினேஷ், பிரபு விகாஷ் என்று பெயர் வைப்பதில் இருக்கிறது. தமிழ் இனம் அழிகிறதா, எப்படி அழியும்? அழிய விட்டு விடுவோமா? அமெரிக்காவில் ஊர்ஊருக்கு எவ்வளவு தமிழ்ச் சங்கங்கள் வைத்து தமிழ் கலாச்சாரத்தை பேணிக் காக்கிறோம், ஒவ்வொரு கலாசார நிகழ்ச்சி முடிந்தவுடன் பீஸ்ஸா சாப்பிட்டு கோக் குடித்து எவ்வளவு பாடு படுகிறோம். தமிழ் கலாச்சாரத்தை அழிய விடுவோமா?

தமிழனே, எப்போதும் தன்மானத்தைக் காக்க புரட்சி செய்யத் தயாராக இரு. வாழ்க தமிழ், வாழ்க தமிழினம்.

திங்கள், 23 ஜூன், 2014

ரயில் கட்டணம் அதிகரிப்பு - மக்கள் கவலை!


சமீபத்தில் மோடி அரசு ரயில் கட்டணங்களை அதிகரித்துள்ளது. இது மிகவும் நியாயமான ஒரு நடவடிக்கை. ரயில்வே நிர்வாகம் தினமும் 30 கோடி ரூபாய் அளவில் நஷ்டத்தை சந்திக்கிறதாம். எந்த ஒரு ஸ்தாபனத்தையும் இப்படி நஷ்டத்தில் நடத்த முடியாது. ஆகவே மோடி கட்டணங்களை அதிகரித்ததில் எந்த வித தவறும் கிடையாது.

ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் மாநில ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இட்லி ஒரு ரூபாய்க்கு கொடுக்கவேண்டும் என்றால் அதற்கு பணம் எங்கிருந்தாவது வர வேண்டுமல்லவா? இப்படி மத்திய அரசு செய்வதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தால் அப்புறத் மத்திய சர்க்கார் எப்படி நடக்கும்?

சரி, அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஒரு சம்பிரதாயமான கடமை. மருமகள் கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம் என்பது போல், மத்திய சர்க்கார் என்ன செய்தாலும் அதை எதிர்த்து ஒரு அறிக்கை விடுவது மாநில சர்க்காரின் பிறப்புரிமை. தினமும் தூங்கி எழுவது போல் இது ஒரு "நித்தியானுஷ்டானம்". ("நித்தியானுஷ்டானம்" அப்படீன்னா என்னன்னு கேட்கப்படாது. எனக்குத் தெரியாததைக் கேட்டால் நான் என்ன பண்ண முடியும்?)

இது புரிகிறது. ஆனால் இந்த பொது ஜனம் என்று சொல்லப்படுகின்ற ஜந்து எதற்காக ஊளையிடுகிறது என்று புரியவில்லை? தென்னாட்டில்தான் இந்த ஓலம். வடநாட்டில் இப்படி யாரும் ரயில் கட்டண உயர்விற்காக ஓலமிடுவதாய் தெரியவில்லை. அதனால்தான் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொல்கிறார்கள்.

வட மாநில மக்கள் ஏன் ரயில் கட்டண உயர்வைப்பற்றி ஓலமிடவில்லை என்பது வட மாநிலங்களுக்குப் போய் வந்தவர்களுக்குத் தெரியும். டிக்கட் வாங்கி ரயில் பயணம் செய்பவர்களுக்குத்தான் ரயில் கட்டண உயர்வைப் பற்றி கவலை. வட மாநில மக்கள் எப்போதும் ரயிலில் செல்வதற்கு டிக்கட் வாங்குவதில்லை. (சில அரசியல் வாதிகள் உட்பட.) நம் அரசின் ரயில், நாமெல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், நாம் எதற்கு டிக்கட் வாங்க வேண்டும்? இது அவர்கள் கொள்கை.

வாழ்க மத்திய அரசு.

திங்கள், 16 ஜூன், 2014

நான் 100/100 வாங்குவது எப்போது?


வாழ்க்கையில் 100 என்ற எண்ணுக்கு எப்போதுமே ஒரு தனி மதிப்பு உண்டு.

மாணவனுக்கு அனைத்து பரீட்சைகளிலும் 100 க்கு 100 வாங்கவேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கும். இந்தக் காலத்தில் அது சாத்தியமாகவும் இருக்கிறது. நான் படித்த காலத்தில் 60 மார்க் போடவே ஆசிரியர்கள் மிகவும் தயங்குவார்கள்.

எல்லோரும் 100 வயது வரை வாழ விரும்புகிறார்கள். சமீபத்தில் நான் கேட்ட ஒரு டாக்டரின் பிரசங்கத்தில் அவர் ஒவ்வொரு மனிதனும் 100 ஆண்டுகள் வாழுமாறுதான் பிறப்பிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் மனிதன்தான் தன் வேண்டாத பழக்கங்களினால் தன் ஆயுளைக் குறைத்துக்கொள்கிறான் என்று கூறினார்.

100 சதம் உத்திரவாதம் என்று பலவற்றிற்கு வியாபாரிகள் கூசாமல் கூறுகிறார்கள். இதை நம்பி பலர் அந்தப் பொருளை வாங்குகிறார்கள். வியாபாரம் அமோகமாக நடக்கிறது.

ஆக மொத்தத்தில் ஒரு காரியம் 100 சதம் முடிந்து விட்டது என்றால் அந்தக் காரியம் வெற்றி என்று பொருள். பதிவுலகில் நானும் அப்படி ஒரு வெற்றி பெற ஆசைப்படுகிறேன்.

அது இதுதான். நான் இந்த இடத்தைப் பிடிக்கவேண்டும்.


நான் இப்போது இருப்பது இந்த இடத்தில்.


நான் இந்த இடத்திற்கு வருவதற்கு உதவிய அனைத்து வாசக நேயர்களுக்கும் நன்றி. என்னுடைய உழைப்பும் இதில் பெரித கலந்திருக்கிறது. இருந்தாலும் வாசகர்களின் பங்களிப்பே அதிகம்.

இவ்வளவு நாள் ஒத்துழைப்பு நல்கியது போலவே வருங்காலத்திலும் கொடுத்தால் நான் என்னுடைய குறிக்கோளை விரைவில் எட்ட ஏதுவாக இருக்கும். பிறகு நான் என் குறிக்கோளை எட்டிய திருப்தியில் ஓய்வு பெறுவேன்.

உங்கள் ஒத்துழைப்பை வெகுவாக எதிர் பார்க்கிறேன்.

திங்கள், 9 ஜூன், 2014

பூதம் காத்த புதையல்


ஆசைகளில் தீராத ஆசை பணத்தின் மேல் உள்ள ஆசைதான். இந்த ஆசை எல்லாவற்றையும் முற்றும் துறந்ததாகக் கூறிக்கொள்ளும் இந்நாள் மாடர்ன் சாமியார்களையும் விடவில்லை. அப்படியிருக்க நான் எம்மாத்திரம்?

நான் ஒரு சராசரி மனிதன். ஏதோ கொஞ்சம் ஆன்மீகத்தில் பரிச்சயம் உண்டு. ஆசையே மனிதனின் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று பல குருமார்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவர்களும் பிரசங்கம் முடிந்தவுடன் சீடர்களை தட்டுடன் வசூலுக்கு அனுப்புவதையும் பார்த்திருக்கிறேன்.

சில சமயம் நானும் சன்னியாசம் வாங்கிக்கொண்டு, எல்லாவற்றையும் துறந்து விட்டு இமயமலைக்குப் போய்விட்டால் என்ன என்று யோசித்ததுண்டு. ஆனால் இன்னும் தைரியம் வரவில்லை. இப்போது கிடைக்கும் சௌகரியங்களெல்லாம் அங்கு வெறும் கையுடன் போனால் கிடைக்குமா என்பது பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

எங்கு சென்றாலும் பணம் இல்லாமல் ஒன்றும் நடப்பதில்லை என்பதை கண்கூடாகப் பார்த்திருப்பதால் இப்போது அனுபவிக்கும் சுகங்களை விட்டு விட்டு புதிதாக வேறொரு இடத்திற்குப் போவானேன் என்ற சிந்தனையும் மூளையின் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

என் இளம்பிராயத்தில் என்னிடம் பணம் எப்போதும் இருந்ததில்லை. யாராவது சொந்தக்காரர்கள் வந்து போகும்போது காலணா அரையணா கொடுப்பார்கள். அதை வாங்கும்போதே அம்மாவிடம் அர்ச்சனை வாங்கவும் தயாராகிக் கொள்ளவேண்டும். ஏண்டா அவர்களிடம் காசு வாங்கினே என்று ஆரம்பித்து சில சமயம் அடிகளும் கூடக் கிடைக்கும். எப்படியோ, என்ன நடந்தாலும் அந்தக் காசு லாபம்தானே. சில சுகங்களுக்காக சில தியாகங்கள் செய்துதான் ஆகவேண்டும்.

கொஞ்சம் பெரிய பையன் ஆன பிறகு நான் கமிஷன் ஏஜண்ட் ஆனேன். அதாவது கடைகளுக்கு ஏதாவது பொருட்கள் வாங்க அனுப்பினால் அதில் கொஞ்சம் காசு கமிஷனாக எடுத்துக் கொள்வது. இதில் ஒரு நியாயத்தைக் கடைப்பிடித்தேன். காலணா அல்லது அரையணாவிற்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு மேல் எடுத்துக்கொண்டால் அது தெரிந்துபோய் அப்பாவிடம் புகார் சென்று விடும். அப்புறம் நடப்பதை எல்லாம் எழுதினால் இந்தப் பதிவு கிரைம் நாவலாகிவிடும். வேண்டாம்.

நான் தொழிலதிபராக உருவெடுத்ததை முன்பு ஏதோ ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். புக் பைண்டிங்க் செய்திருக்கிறேன். காப்பிக்கொட்டை வறுத்திருக்கிறேன். இதிலெல்லாம் ஏதோ கொஞ்சம் சில்லறை நடமாட்டம் இருந்தது. கல்லூரி படித்து முடித்தவுடன் அரசு வேலைக்கு ஆர்டர் வந்து விட்டது. ஆரம்ப சம்பளத்தை சொல்ல வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு சரித்திரம் என்றால் உண்மையை அறிவிக்க வேண்டுமல்லவா.

மாத சம்பளம் நூறு ரூபாய். பஞ்சப்படி இருபத்திநான்கு ரூபாய். (1956 ம் வருடம்). இப்படியாக இருந்து படிப்படியாக உயர்ந்து நான் ஓய்வு பெறும்போது (1994)  பெற்ற சம்பளம் ஆறாயிரம் ரூபாய். அதில் பாதி மூவாயிரம் ரூபாய் பென்ஷன் கொடுத்தார்கள். இருபது வருடம் கழித்து பென்ஷன் அதைப்போல் பல மடங்கு வாங்குகிறேன். இதனால்தான் அன்றே பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். காலணா உத்தியோகம் என்றாலும் கவர்மென்டு உத்தியோகம் வேண்டும் என்று.

இப்படியான வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், கையில் காசில்லாதவன் வாழ்வில் நடைப்பிணமே. ஆகவே என்னால் முடிந்த அளவு சேமிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச கொஞ்சமாக சேமித்தது இப்போது கணிசமாக வளர்ந்துள்ளது. ஆனாலும் இன்னும் சேர்க்கவேண்டும் என்ற ஆசையைத் தவிர்க்க முடியவில்லை.

சேமித்த பணத்தை எதற்காவது செலவு செய்யலாம் என்றால் மனம் அதற்கு இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது. இந்த சேமிப்பினால் எனக்கு ஏதும் பயன் இல்லை என்றாலும் அது ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. ஏதாவது இன்னல் வந்தால் யார் கையையும் எதிர் பார்க்காமல் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தை அளிக்கிறது.

அதற்காகவே பூதம் காப்பது போல் இந்தப் பணத்தைக் காத்துக்கொண்டு இருக்கிறேன். வேறு வழிகள் யாருக்காவது தெரிந்திருந்தால் தெரிவிக்கவும்.