புதன், 27 பிப்ரவரி, 2013

1.தேவலோகத்தில் ஒரு புரட்சி


நான் நேற்றிரவு ஒரு கனா கண்டேன். அந்தக் கனவில் மும்மூர்த்திகளும் தோன்றி, மகனே, உன்னால் ஒரு பெரிய காரியம் ஆகவேண்டியிருக்கிறது. அதற்கு நீ தயாரா என்று கேட்டார்கள். ஆஹா, மும்மூர்த்திகளும் கேட்கும்போது மறுத்தால் நன்றாக இருக்காது என்று, சரி என்று சொன்னேன்.

அப்போது அவர்கள் சொன்னதின் சுருக்கம்:

முமூ (மும்மூர்த்திகள்) - மகனே, இந்திர லோகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய். அங்கே தற்போது இந்திரன் என்று ஒரு கையாலாகாத ராஜா ஆண்டு கொண்டிருக்கிறான். அவன் சரியான ஒரு சோம்பேறி. எப்போதும் டான்ஸ் பார்த்துக்கொண்டு நாட்டின் நலனைக் கவனிப்பதில்லை. தேவர்கள் எல்லோரும் சோர்ந்திருக்கிறார்கள். நீதான் அந்த நாட்டை சீர்திருத்தவேண்டும்.

நான் - ஐயன்மீர், எனக்கு வயதாகி விட்டது. உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. என்னால் எப்படி இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும்?

முமூ (மும்மூர்த்திகள்) - தேவலோகத்திற்கு வந்து ஒரு "புல்" பாட்டில் சோமபானம் அருந்தி ஒரு மணி நேரம் ஊர்வசியின் நாட்டியம் பார்த்தால் உன் சோர்வெல்லாம் பறந்து போய்விடும்.

நான் - ஊர்வசி இப்போ அங்கதான் இருக்காங்களா?

முமூ - மகனே, அது சினிமா ஊர்வசி இல்லை, நிஜ ஊர்வசி. நீ முதலில் புறப்படு. காலம் கழிந்து கொண்டே இருக்கிறது.

நான் - அது சரி, அங்கே நான் என்ன சீர்திருத்தம் வேண்டுமானாலும் செய்யலாமா?

முமூ - நீ என்ன செய்தாலும் யாரும் உன்னை ஒன்றும் கேட்க மாட்டார்கள். கேட்கக்கூடாது என்று உத்திரவு போட்டிருக்கிறோம். தவிர, உனக்கு சர்வ சக்தியும், சர்வக்ஞானமும் சர்வ பராக்கிரமும் கொடுத்திருக்கிறோம். நீ கிழித்த கோட்டை ஒருவரும் தாண்ட மாட்டார்கள்.   உனக்கு 100 ஆண்டுகள் டைம் கொடுத்திருக்கிறோம். அதற்குள் நீ எப்படியாவது தேவலோகத்தை சுறுசுறுப்பாக்கிவிடவேண்டும்.

நான் - அப்படியே செய்கிறேன். எனக்குத் துணையாக பூலோகத்திலிருந்து இரண்டு பேர் வேண்டுமே?

முமூ - எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். சீக்கிரம் புறப்பட்டால் போதும்.

நான் உள்ளூர் பஞ்சாயத்து தலைவரையும் ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும் கூட்டிக்கொண்டு அவர்களுடன் புறப்பட்டேன்.

அவர்களுடைய புஷ்பக விமானத்தில் ஏறிச்சென்றோம். அந்த புஷ்பக விமானம் அரதப் பழசு. லொடலொடவென்று சத்தம். உட்காருவதற்கு மரப் பெஞ்சுகள். ஏர் ஹோஸ்டஸ் ஒருவரும் இல்லை. சரி. நாம் பதவி ஏற்றதும் முதலில் நம்முடைய உபயோகத்திற்காக சவுதி மன்னர் டிசைன் செய்திருக்கும் விமானம் போல் ஒன்று வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

எல்லோரும் தேவலோகம் போய்ச் சேர்ந்தோம்.  அங்கு இறங்கியதும்தான் கவனித்தேன். எங்களை வரவேற்க ஒரு ஈ, எறும்பு கூட விமான நிலையத்திற்கு வரவில்லை. மும்மூர்த்திகளிடம் என்ன, நம்மை வரவேற்க ஒருவரையும் காணவில்லையே என்றேன். அதற்கு விஷ்ணு, நாட்டின் நிலை எவ்வளவு சீர்கெட்டுக் கிடக்கிறது பார்த்தாயா, இதையெல்லாம் சீர்திருத்தத்தான் உன்னை வரவழைத்திருக்கிறோம் என்றார்.
ஒரே வருடத்தில் பாருங்கள். நான் என்னவெல்லாம் மாற்றிக்காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு இந்திர சபைக்குச் சென்றோம். அங்கு இந்திரன் ரம்பை ஊர்வசியின் நாட்டியத்தைப் பார்த்துக் கொண்டு நாங்கள் வந்ததையே கவனிக்கவில்லை. பிரம்மா அவனருகில் சென்று அவனைத் தொட்டபிறகுதான் அவன் நாங்கள் வந்ததை அறிந்து எங்களை வரவேற்றான்.

நாட்டியம் பார்க்கத் தடை ஏற்பட்ட வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது. மும்மூர்த்திகளும் அவனைப் பார்த்து இதோ இங்கு வந்திருக்கும் மானிடன்தான் இனிமேல் இந்த தேவலோகத்திற்கு அரசன். நீ இனி ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்றார்கள். இந்திரனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

அதெப்படி மூன்று மாத நோட்டீஸ் கொடுக்காமல் என் பதவியைப் பறிக்கலாம் என்றான். மும்மூர்த்திகள் அதற்குப் பதிலாக உனக்கு மூன்று மாத சம்பளம் இதோ, வாங்கிக்கொண்டு உடனடியாக இடத்தைக் காலி செய் என்றார்கள். அவன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. நான் தேவர்களைச் சேர்த்துக்கொண்டு ஸ்ட்ரைக் செய்வேன் என்றான். மும்மூர்த்திகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

என்னைப் பார்த்தார்கள். அவர்கள் எனக்கு சர்வ சுதந்திரமும் சர்வ வல்லமையும் கொடுத்திருந்த படியால், நான் அவர்களைப் பார்த்து நீங்கள் கவலைப்படவேண்டாம், இனிமேல் நான் கவனித்துக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்று சொல்லி அவர்களை வழியனுப்பினேன்.


தொடரும்...

திங்கள், 25 பிப்ரவரி, 2013

கும்ப மேளாவும் உயிரிழப்பும்


மனித நேயம் என்று ஒன்று இருக்கிறது என்று எங்கேயோ படித்த ஞாபகம். அதன் விஸ்வரூப அரங்கேற்றம் அலகாபாத் ரயில் நிலையத்தில் சமீபத்தில் அரங்கேறியது.

இந்திய மக்களின் (இல்லை, மாக்களின்) தேசீய கலாசாரம் என்னவென்றால் கூட்டம் கூடுவது. அரசியல் கூட்டமானாலும் சரி, ஆன்மீகக் கூட்டமானாலும் சரி, லட்சக்கணக்கில் கூடுவது . கூட்டம் கூட்டுபவர்களுக்கு கூட்டத்திற்கு ஆட்களைச் சேர்த்துவதுதான் முக்கிய நோக்கமே தவிர, இத்தை பேர் கூடிகிறார்களே, அவர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான ஏற்பாடுகள் செய்வோமென்ற சாதாரண பொதுப் புத்தி கூடக் கிடையாது.

விபத்துகள் நடந்து உயிர்ச்சேதம் ஆன பின்பு ஒருவருக்கொருவர் பழி சுமத்துவார்களே தவிர முன்னேற்பாடுகளை ஒருவரும் செய்ய மாட்டார்கள். கும்பமேளா சமயத்தில் லட்சக்கணக்கானவர்கள் ரயில்வே ஸ்டேஷனை நாடுவார்கள் என்பது பாமரனுக்கு கூட விளங்கும். ரயில்வேயின் உயர் அதிகாரிகள் கும்பமேளா சமயத்தில் அலகாபாத்தில் இருந்து, நடப்பவைகளை கவனித்து முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும்.

இதைச் செய்யாமல் அசம்பாவிதம் நடந்த பிறகு நொண்டிச் சமாதானங்கள் சொல்வது நமது அரசு அதிகாரிகளின் வாடிக்கையாகப் போய்விட்டது.

மக்களுக்கும் சரி, ஒழுங்கு, கட்டுப்பாடு, பொறுமை என்ற குணங்கள் அடியோடு அற்றுப் போய்விட்டன. இது சமூகச் சீரழிவின் அடையாளம். இதை மாற்ற இறைவன்தான் நேரில் வரவேண்டும். அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால், தனக்குப் பதிலாக யமதர்மனை அனுப்புகிறான்.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

வெள்ளரிக்காய் , தக்காளி , சேலட் – எப்படி செய்வது? தெரியுமா?நண்பர் முகமது அலி, முட்டைப் பொரியல் செய்வது பற்றிப் பதிவு போட்டிருந்தார். அவர் மட்டும்தான் சமையல் பதிவு போடுவதா? நாமும் ஏன் போடக்கூடாது என்று சிந்தித்ததின் விளைவுதான் இந்தப் பதிவு.

முதலில் சேலட் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். இது ஒரு ஆங்கில நாட்டு பேஷன். நம் நாட்டில் சமையல் செய்ய சோம்பல்படும் இல்லத்தரசிகளுக்கான ஒரு வரப்பிரசாதமாய் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் முறை.

இதைச் சமையல் என்று சொல்வதே ஒரு “நகைமுரண்”. நகைமுரண் அப்படீன்னா என்னன்னு கேக்கறீங்களா? இதுவும் ஆங்கில நாட்டு இறக்குமதியே. அங்கே “comedy of error” என்று தீங்கு விளைவிக்காத, சிரிப்பு வரவழைக்கும் தவறுகளைக் குறிப்பிடுவார்கள். நமது அருமை தமிழ் ஆர்வலர்கள் இதைத் தமிழ்ப்படுத்தியது ஒரு நகைமுரண்.

சேலட் செய்வதற்கு சமையலறை வேண்டியதில்லை. ஒரு கத்தியும் ஒரு பேசினும் மட்டும் போதும். வெள்ளரிக்காய் சேலட் செய்யத்தேவையான பொருட்கள்.

  1.   வெள்ளரிக்காய்         – 2
  2.   ஆப்பிள் தக்காளி        - 4
  3.   பச்சை மிளகாய்         - 4
  4.   பெரிய வெங்காயம்     - 2
  5.   டேபிள் சால்ட்          - தேவையான அளவு
  6.   மிளகுத்தூள்            - தேவையான அளவு
  7.   ஆலிவ் ஆயில்          - ஒரு டேபிள்ஸ்பூன்

8. ரெடி மேட் பிளாஸ்திரிகள் - தேவையான நெம்பர்கள் (கையில் காயம் ஆகும்போது உபயோகிக்க)
   

செய்முறை:
1, 2, 3 ஐட்டங்களை தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். இயற்கை ஆர்வலர்கள் இந்த ஸ்டெப்பை விட்டுவிடவும்.
பெரிய வெங்காயத்தை தோலுரிக்கவும். (தவறான பொருள் கொள்ளவேண்டாம்)

இந்த நான்கு ஐட்டங்களையும் பொடிப்பொடியாக நறுக்கி பேசினில் போடவும். தேவையான அளவு டேபிள் சால்ட்டையும் மிளகுத்தூளையும் சேர்த்து கலக்கவும். ஆலிவ் ஆயிலை மேலே ஊற்றிப் பரிமாறவும். உடனே சாப்பிடவேண்டும். இல்லாவிட்டால் நீர் கோர்த்து ருசி போய்விடும்.

இந்த ஆலிவ் ஆயிலை எதற்கு ஊற்றவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் யூட்யூப்பில் எல்லா ரெசிபிக்களிலும் போட்டிருக்கிறார்கள். அதனால் நானும் போட்டேன். ஆலிவ் ஆயிலுக்கான வியாபார உத்தியாக இருக்கலாம். ஆலிவ் ஆயில் மிகவும் சலீசு. கிலோ ஆயிரம் ரூபாய் மட்டுமே.

இந்த சேலடை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்.

1. நீண்ட ஆயுள்.
2.  பிரமசாரிகளுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும்.
3.  கல்யாணமானவர்களுக்கு சீக்கிரமே குழந்தை பிறக்கும்.
4.  குழந்தைகள் பெற்றோர்கள் சொன்னபடி கேட்பார்கள்.
5.  மொத்தத்தில் நீங்கள் பூலோக சொர்க்கத்தில் வாழ்வீர்கள்.

செய்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டுப் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும்.

புதன், 20 பிப்ரவரி, 2013

கோடிகளில் புரள ஆசைப்படுங்கள்


இதற்குத் தேவை “மார்க்கெட்டிங்க்” அதாவது பேச்சுத்திறமை. உங்களுக்கு அது இருந்தால் போதும். உலகமே உங்கள் காலடியில் விழுந்து கிடக்கும். அது இல்லாவிடில் நல்ல மூளை வேண்டும். பேச்சுத்திறமையை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.

முதலில் ஒரு தொழில் திட்டம் தயாரிக்கவேண்டும். இதற்கு நல்ல கன்சல்டென்ட்ஸ் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்கள் ஐடியாவை ஒரு கோடு போட்டுக் காட்டினீர்களென்றால், அவர்கள் நல்ல பக்கா ரோடு போட்டு விடுவார்கள்.

அடுத்து ஆரம்ப மூலதனம். உலகமயமாக்கல் – இந்த தாரக மந்திரத்தை அறியாதவர்கள் இன்று யாரும் இந்தியாவில் இல்லை. இதனால் பட்டி தொட்டிகளில் இருப்பவர்களெல்லாம் இன்று கோடிகளில் புரள்கிறார்கள். நாமும் அப்படி புரளவேண்டாமா? மேலே படியுங்கள்.

உங்கள் திட்டத்தை நல்ல விளம்பரக் கம்பெனி மூலம் விளம்பரப் படுத்துங்கள். நீங்கள் அடையப்போகும் லாபத்தை மூலதனம் போடுபவர்களுக்கு பிரித்துக்கொடுப்பதாக சொல்லுங்கள். அவர்கள் போட்ட மூலதனம் ஒரு வருடத்தில் மூன்று பங்காக வளரும் என்று சொல்லுங்கள். உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை.

உங்கள் ஊரில் நல்ல லொகாலிடியில் ஒரு ஆபீஸ் திறந்து கொள்ளுங்கள். நல்ல பெர்சனாலிடி உள்ள நாலு இளம் பெண்களை ஆபீஸ் வேலைக்கு அமர்த்துங்கள். நீங்கள்தான் MD. உங்கள் ரூம் மிகவும் அட்டகாசமாக இருக்கவேண்டும். முதலில் சூடு பிடிக்க கொஞ்ச நாளாகும்.

நல்ல களப்பணியாளர்களாக பத்து பேரை வேலைக்கு அமர்த்துங்கள். அவர்கள் ஊர் ஊராகப்போய் உங்கள் கம்பெனியில் முதலீடு செய்து கோடீஸவரர் ஆனவர்களைப் பற்றி பிரசாரம் செய்யவேண்டும்.
நாளாக நாளாக உங்கள் கம்பெனிக்கு முதலீடு செய்ய ஆட்கள் வருவார்கள். அப்படி வருபவர்களில் ஊருக்கு ஒருவராகத் தேர்ந்தெடுத்து கோவா அல்லது அந்தமானுக்கு டூர் கூட்டிக்கொண்டு போங்கள். மற்றவர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு கூப்பிட்டு விருந்து வையுங்கள்.

அப்புறம் பாருங்கள். வரும் பணத்தை வாங்கி எண்ணக்கூட முடியாத அளவிற்குப் பணம் வரும். அப்போது ஒரு நல்ல ஆடிட்டரைப் பிடித்து அந்தப் பணத்தையெல்லாம் பினாமி பெயர்களில் முதலீடு செய்து விடுங்கள். அப்படியே ஒரு நல்ல வக்கீலையும் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இனிமேல் நீங்கள் செய்யவேண்டியதுதான் மிகவும் கடினமான வேலை. இப்படி பணம் கொட்டிக் கொண்டிருக்கும்போதே கம்பெனியை மூடிவிடவேண்டும். பணம் மரத்தில் காய்ப்பது போல் கொட்டிக்கொண்டிருக்கும்போது அதை வேண்டாம் என்று சொல்வது மெத்தக் கடினம். ஆனால் இங்கேதான் பலரும் தவறு செய்திருக்கிறார்கள்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. கம்பெனியை அப்படியே அம்போவென்று விட்டு விட்டு நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் தலைமறைவாகி விடவேண்டும். அவ்வளவுதான் நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிட்டீர்கள். பிறகு என்ன, ராஜபோகம்தான்.

வாழ்த்துக்கள்.

திங்கள், 18 பிப்ரவரி, 2013

என்னைக் கொள்ளையடியுங்கள் - அழைப்பு விடுக்கும் ஜனங்கள்


என்னைக் கொள்ளையடியுங்கள் என்று சொன்னால் கொள்ளையடிப்பவனுக்கு கசக்குமா என்ன? இதை அன்றாடம் நம் சூப்பர் மார்க்கெட்டுகளும் பலசரக்குக் கடைக்காரர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு டிவிக்காரர்களும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள்.

நமது அன்றாட உணவுப் பழக்கங்களில் நமக்கு வேண்டிய அனைத்துச் சத்துக்களும் கிடைக்கின்றன. மக்கள் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொண்டால் வீட்டில் யாருக்கும் எந்த சத்துக் குறைவும் வராது. ஆனாலும் இன்றைய தாய்மார்கள் தங்கள் மேலேயே நம்பிக்கை இல்லாமல் டிவி விளம்பரங்கள் மேல்தான் நம்பிக்கை வைக்கிறார்கள்.

அவர்களுக்கு வீட்டு வேலை முடிந்த பிறகு பொழுது போக்க டிவி யை விட்டால் வேறு வழியில்லை. டிவிக் காரனுக்கும் விளம்பரங்களில்தான் வருமானம். அதற்காகத்தான் சீரியல்கள். சீரியல் பார்க்கும் பெண்களைக் குறிவைத்தே அனைத்து விளம்பரங்களும் காட்டப் படுகின்றன. விளம்பரங்களில் சொல்லப்படும் அனைத்து தகவல்களையும் அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்படும் குடும்பத்தலைவிகள் அநேகம்.

உதாரணத்திற்கு குழந்தைகளுக்கான உணவு வகைகளில் "பெடியாஷ்யூர்" என்று ஒரு பொருள் விளம்பரப்படுத்தப்படுகிறது. குழந்தைகள் இந்த உணவைச் சாப்பிடாவிட்டால் அவர்கள் வளர மாட்டார்கள், அவர்களின் மூளை வளராது, வாழ்க்கையில் அவர்கள் தோற்று விடுவார்கள் என்றெல்லாம் விளம்பரத்தில் சொல்லுவார்கள். இதைக் கேட்கும் தாய்மார்கள், தங்கள் குழந்தை எல்லாவற்றிலும் முதலாவதாக வரவேண்டும், அதற்கு இதைக் கொடுத்தால்தான் நடக்கும் என்று நம்புகிறார்கள்.

இதன் விலை யானை விலை. ஆனாலும் அதை வாங்கிக் கொடுக்கிறார்கள். இத்தகைய உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகள் அனைத்தும் வெகு புஷ்டியாக, அதாவது அதிக குண்டாக வளர்கின்றன. இத்தகைய குழந்தைகளுக்கு "கிளாக்சோ பேபி" என்றே அந்தக் காலத்தில் பெயர். இந்த உணவுகளில் தேவைக்கு அதிகமான மாவுச்சத்துக்கள் இருப்பதே இந்தக் குழந்தைகள் கொழு கொழுவென்று ஆவதற்குக் காரணம்.

டிவியில் ஒரு விளம்பரத்தை பத்து செகன்ட் காட்டுவதற்கு என்ன கட்டணம் தெரியுமா? 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. அனைத்து மொழிகளிலும் அனைத்து முக்கிய சேனல்களிலும் தினம் பலமுறை இந்த விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. அப்படியானால் தினசரி என்ன செலவாகும், மாதத்திற்கு எவ்வளவு, வருடத்திற்கு எவ்வளவு என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு பல கோடி ரூபாய்கள் விளம்பரத்திற்காக செலவு செய்கிறார்கள்.

இதற்கு மேல் அந்தப் பொருளின் தயாரிப்புச் செலவு இருக்கிறது. அதை மார்க்கெட்டுக்கு அனுப்ப செலவு இருக்கிறது. இத்தனையையும் செய்த பிறகு அந்தக் கம்பெனிக்கு லாபமும் வரவேண்டும். அப்படியானால் உற்பத்தி செலவுக்கு மேல் எத்தனை அதிகம் விலை வைக்கவேண்டும்? யோசித்துப் பாருங்கள்.

என்னுடைய அனுமானம், இந்த மாதிரி பொருள்களில் விற்பனை விலையில் கால் பங்குதான் உற்பத்திச் செலவு இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படி கொள்ளையடிக்கும் பொருட்களை நாம் வாங்குகிறோம். இப்படிப்பட்ட உணவுகளை நாமே வீட்டில் தயாரித்துக் கொண்டால் ஆரோக்கியத்துடன் பணவிரயமும் தவிர்க்கப்படும்.

மக்களே, சிந்தியுங்கள்.


வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

காதலர் தினமும், தொடரும் அமில வீச்சுகளும்.காதலர் தினம் அதாவது Valentine Day என்று சொல்லப்படும் ஆங்கில மோக கலாச்சாரம் எப்படியோ நம் நாட்டு இளைஞ-இளைஞிகளிடம் ஒட்டிக்கொண்டு விட்டது. அதை நேற்று எல்லோரும் பிரபலமாகக் கொண்டாடினார்கள். பல பதிவர்களும் அதற்கு ஜால்ரா கவிதைகள்  போட்டார்கள்.

ஆனாலும் நம் இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் கிடையாது என்பது உலகம் அறிந்ததே. முந்தாநாள் ஒரு ஆசிட் வீச்சுக்கு ஆளான ஒரு பெண் செத்து, புதைத்த இடத்தில் இன்னும் ஈரம் கூடக் காயவில்லை. அதற்குள் காதல் புராணம். மக்களுக்கு மனச்சாட்சியே கிடையாது.

இதுவரை டில்லியில் நடந்த பாலியல் பலாத்காரத்தில் ஏகப்பட்ட பேர் போராட்டம் நடத்தி அதில் ஒரு காவலர் கூட இறந்து போனாரே, அந்த சம்பவத்தில் அந்தப் பெண் கூட இருந்தவன் நண்பன் என்றுதான் எல்லோரும் குறிப்பிடுகிறார்களே தவிர, யாராவது அந்தப் பெண் ஏன் அவனுடன், வேலையிலிருந்து வந்தவுடன் ஊர் சுற்றினாள் என்று கேட்டார்களா?

எல்லோரும் பெண்கள் அபலைகள் என்று சொல்லுகிறார்களே தவிர, அவர்கள் பண்ணும் அக்கிரமங்களைப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. அவள் ஆணுடன் பழகுவாள், அவனுடைய எதிர்பார்ப்புகளைத் தூண்டிவிடுவாள், திடீரென்று கழட்டி விடுவாள். அந்த இளிச்சவாயன், ஒன்றும் சொல்லாமல் அவள் வாழ்க்கையில் இருந்து மறைந்து விட வேண்டும்.

இது என்னவோ விளையாட்டு என்று இந்த அபலைப் பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் பின் விளைவுகளைப் பற்றித் தெரியாத அளவிற்கு இவர்கள் என்ன கை சூப்பும் குழந்தைகளா? அதற்கு இந்த வேலென்டைன் ஆட்கள் தூபம் போடுகிறார்கள். என்ன சட்டம் போட்டாலும் பெண்கள் மனது மாறி ஜாக்கிரதையாக செயல்பட்டால் ஒழிய, இந்த சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

எந்த கோவிலுக்கோ, பார்க்குக்கோ, பீச்சுக்கோ, சினிமாக் கொட்டகைக்கோ போய்ப்பாருங்கள் என்னென்ன அக்கிரமங்கள் நடக்கின்றன என்று? யாராவது இதைத் தட்டிக் கேட்க முடியுமா? கேட்டால் மனித உரிமைக் கழகம் மற்றும் பெண்கள் நலப் பாதுகாப்புக் கழகங்கள் வக்காலத்து வாங்கும். அப்புறம், வேறென்ன, போலீஸ் ஸ்டேஷன்களில்தான் திருமணங்கள் உறுதிப்படுத்தப்படும். பெற்றோர்கள் வாயை மூடிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

இத்தகைய காதல் திருமணங்களில் கால்வாசி கூட வெற்றியடைவதில்லை என்று இந்தப் பெண்களுக்குத் தெரியுமா? எல்லா உயிரினங்களும் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கின்றன. மனிதன் மட்டும் தான்தோன்றித்தனமாக நடப்பான், அவனை ஒருவரும் கேள்வி கேட்கக் கூடாது?

இதையெல்லாம் காலத்தின் கோளாறுகள் என்று ரொம்ப சுலபமாக  சொல்லிவிடலாம். இந்த பெண்ணியல் நலப் பாதுகாவலர்கள் இதற்கு ஒன்றும் வழிவகை சொல்லமாட்டார்கள். அப்புறம் இதனால் தொடரும் சீரழிவுகளுக்கு மட்டும் ஏன் குய்யோ முறையோ என்று ஓலமிடுகிறீர்கள்?

வியாழன், 14 பிப்ரவரி, 2013

நான் மீசை வளர்த்த கதை


மூக்கு என்றதும் உங்கள் போட்டோவில் உங்கள் மீசை ஞாபகம் வந்தது. மீசை வகைகள், நீங்கள் மீசை வைத்த கதை, மீசைக்கு செலவிடும் நேரம் – இவைகள் பற்றி விரிவாக, வழக்கம் போல உங்கள் பாணியில் நகைச்சுவையாக ஒரு பதிவு போடவும்.

நம் மக்களுக்கு எப்போதுமே ஒரு ஆசை உண்டு. அதுதான் கொம்பு சீவுதல். அதாங்க கிள்ளிவிட்டு வேடிக்கை பாக்கறது. காசா, பணமா, சும்மா வேடிக்கை பாக்கலாமில்லையா? அதுக்குத்தான். இப்ப பாருங்க, தமிழ் இளங்கோ எனக்கு கொம்பு சீவி உட்டிருக்கார். பாக்கலாம், இந்த ஐயா என்ன பண்ணுவார்னு பாக்கறதுக்காக காத்திட்டிருக்காங்க.

நாம என்ன இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் அசர்ற ஆளா? எதைப் பத்தி எளுதச்சொன்னாலும் எதையாவது தேத்தீடுவமில்ல?

உலகத்தில ஆம்பிளைன்னு சொல்லணும்னா, மீசை வச்சிருக்ணுங்க. மீசை இல்லாதவங்களை பொம்பிளைங்கன்னுதான் சொல்லணும். அதாவது அவங்களுக்கு மனசில மாஞ்சா இல்லைன்னு அர்த்தம்.

ஆகவே ஆம்பிளைன்னா மீசை கண்டிப்பா இருக்கணும். இந்த மீசை வளர்க்கறதில யார் பலே கில்லாடின்னு ஒரு போட்டி நடக்குது தெரியமுங்களா? அதில ஜெயிச்ச ஆளோட மீசையைப் பாருங்க.


வச்சா இந்த மாதிரி மீசை வைக்கோணுங்க. நாம வக்கறதெல்லாம் ஒண்ணுமே இல்லீங்க.

ஹிட்லர் மீசை உலகப்பிரசித்தம்.


நம்ம ஊரு ஸ்பெஷல்.


நான் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தபோது, ஜெமினி கணேசன் மீசைதான் ரொம்பவும் பாபுலர்.

அதுதான் அன்று ஸ்டேண்டேர்டு மீசை. நானும் அப்படித்தான் வைத்திருந்தேன்.

பிறகு பணி ஓய்வு பெற்றபின் வேறு முக்கியமான வேலை வெட்டி எதுவும் இல்லாததினால், நானும் என் ஜாதி ஆசாரப்படி பெரிதாக மீசை வைத்தாலென்ன என்ற ஆசை வந்தது. சரி வயதான காலத்தில் வந்த ஆசையை நிறைவேற்றி விடுவோம் என்று பெரிய மீசையாம வளர்த்தேன்.


மீசை வளர்ப்பது பெரிதல்ல. அதை பராமரிப்பது பெரிய வேலை என்று அப்புறம்தான் கண்டுபிடித்தேன். அதற்கு பல வித கிரீம்கள் தேவைப்படுகின்றன. அப்புறம் அதை ஒரே நிலையில் வைத்திருக்க அதற்கு ஏகப்பட்ட வேலை இருக்கின்றன.

இதை எல்லாம் பார்த்த பிறகு, இப்போது வேறு ஸ்டைலில் மீசை வைத்திருக்கிறேன்.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

நான் முட்டாள் ஆனேன்.

நான் எப்போதும் என் மனதில் உள்ளதை உள்ளபடியே சொல்லிவிடுவேன். இதனால் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் என்னால் என் குணத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

முன்னொரு காலத்தில் ஒரு நெசவாளி ஒரு மன்னரை ஏமாற்றிய கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். கண்ணுக்குத் தெரியாத அபூர்வ ஆடை நெய்வதில் நான் நிபுணன் என்று சொல்லி அரசனை அம்மணமாக நகர்வலம் போகச்செய்துவிட்டான். எல்லாரும் அரசனைத் துதி பாடிக் கொண்டிருக்கும்போது ஒரு குழந்தைதான் உண்மையைக் கூறியது உங்களுக்குத் தெரியும்.

அந்த மாதிரி இப்போது உலகமே போற்றிக்கொண்டிருக்கும் ஒரு சினிமாவைப் பற்றி என் கருத்தைக் கூற விரும்புகிறேன். நான் இது வரையிலும் சினிமா விமரிசனம் எழுதியதில்லை. இப்பாதும் இதை சினிமா விமரிசனமாக எழுதவில்லை.

சினிமா என்பது மக்களின் பொழுதுபோக்கு சாதனம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு சாதாரண பிரஜை. இந்த சினிமா பத்து கோடி ரூபாய் கேமராவில் எடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் சரி, கை விடியோ கேமராவில் எடுக்கப்பட்டிருந்தாலும் சரி, எனக்கு வேண்டியது என்னவென்றால் ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம்.

லேடெஸ்ட் சினிமா டெக்னாலஜியில் நான் இந்தப் படம் எடுத்திருக்கேன் என்றால் எனக்கென்ன ஆயிற்று? எனக்கு படம் புரிகிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்.

நான் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களைப் பார்த்து ரசித்தவன். பிகாசோ ஓவியங்களின் கசாப்புக்கடை சீன்களை என்னால் ரசிக்க முடிந்ததில்லை. நான் பிற்போக்குவாதியாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் என்னை மாதிரித்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

பாசமலர், கல்யாணப்பரிசு, தெனாலி, பஞ்ச தந்திரம் போன்ற படங்களை ரசித்துப் பார்த்திருக்கிறேன். அவைகளை எப்போதும் பார்க்கலாம். மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சிவாஜி என்ற படம் தோல்வியைத் தழுவியது தெரியும்.

சினிமா என்றால் பாமர ரசிகனுக்குப் புரியும்படியாக இருந்தால்தான் அது வெற்றியடையும். ரொம்பவும் டெக்னிகலான படம் என்றால் அது இந்தியாவில் விலை போகாது.

விஸவரூபம் படம் பார்த்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சத்தம் விதவிதமாக வருகிறது. வெறும் சத்தத்திற்காக ஒரு படம் ஓடுமா என்று எனக்குத் தெரியவில்லை. சைக்கோ என்று அந்தக்காலத்தில் ஒரு படம் வந்தது. அதில் ஒரு காட்சியில் ஒரு சப்தம் கொடுத்திருந்தார்கள். ஒரு நிமிடம் இருதயம் நின்று பிறகு துடித்தது.

இங்கே வெறும் சப்தம் மட்டும்தான் இருக்கிறது. இதற்கு நல்லாப் பூச்சாண்டி காட்டுனாங்கய்யா.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

காதில் வண்டா? கவலை வேண்டாம்

ஸ்ரீராம்.22 ஜனவரி, 2013 7:49 PM என்னுடைய "காது குடைவது எப்படி" என்ற பதிவில் போட்ட பின்னூட்டம்.
மூக்கு சிந்துவது, பல் குடைவது பதிவுகள், காதில் வண்டு, பூச்சி புகுந்தால் எப்படி எடுப்பது போன்ற பதிவுகள் கியூவில் நிற்கின்றன என்பதைக் கவலையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.


நண்பர் ஸ்ரீராம் கேட்டதில் கடைசி பதிவு.


காது குடைவது எப்படி என்று சமீபத்தில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக காதில் ஏதாவது எறும்பு, கொசு, வண்டு, அல்லது வேறு பூச்சிகள் ஆகியவை சென்று விட்டால் என்ன செய்வது என்று பார்ப்போம்.

சாதாரணமாக இந்த மாதிரி பூச்சிகள் காதுக்குள் போகாது. அபூர்வமாகத்தான்  இது நிகழும். இருந்தாலும் களவும் கற்று மற என்ற பரம்பரையில் வந்த நாம் இதைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம் என்பதால் இந்தப் பதிவை இடுகிறேன்.

எறும்பு யானைக் காதில் புகுந்தால் யானை இறந்து விடும் என்கிற புருடாவையெல்லாம் நம்பாதீர்கள். அப்படியெல்லாம் யானை இறக்காது. மனிதனும் அப்படித்தான். எறும்பு காதில் புகுந்த சில விநாடிகள் காதுக்குள் விநோதமாக உணர்வீர்கள். கொஞ்ச நேரம் அப்படியே இருந்தால் அந்த எறும்பு செத்துப் போய்விடும். பிறகு தானாகவே அந்த எறும்பின் உடல் வெளி வந்து விடும்.

ஆனால் அதற்குள் சில அவசரக்குடுக்கைகள் "ஐயோ, அம்மா" என்று அலறுவார்கள். அவர்களுக்கான வைத்தியம். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அவர்களை ஒருக்களித்து படுக்கச்சொல்லி, காதில் அந்த தண்ணீரை மெதுவாக ஊற்ற வேண்டும். எறும்பு உயிருடன் இருந்தால் தண்ணீரில் நீந்தி வெளியே வந்து விடும். அது இறந்து போயிருந்தால், அதன் சடலம் மேலே மிதந்து வரும். அதை எடுத்து உரிய முறையில் அடக்கம் செய்து விடலாம்.

அவ்வளவுதான் வைத்தியம். இதே முறைதான் வேறு என்ன பூச்சிகள் காதுக்குள் போனாலும் கடைப்பிடிக்க வேண்டியது.

சிலருக்கு பூச்சி வெளியில் வந்த பிறகும், பூச்சி காதுக்குள்ளேயே இருப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு இன்னும் கொஞ்சம் தீவிர வைத்தியம் தேவை.

அந்தக் காலத்தில் வீடுகளில் குடுக்கை விளக்கு என்று ஒன்று இருக்கும். மண்ணெண்ணையில் எரியும் பெட்ரூம் விளக்கு அது. இப்போது ஏறக்குறைய மறைந்து போய் விட்டது. அது இல்லாவிட்டால் அகல் விளக்கு என்றால் எல்லோருக்கும் தெரியும். அதை எடுத்து ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

பிரச்சினை பண்ணும் நபரை ஒருக்களித்துப் படுக்கவையுங்கள். ஒரு வரமிளகாய் எடுத்து காம்பைக் கிள்ளிவிட்டு, அந்தப் பக்கத்தில் ஒரு தெரிய ஓட்டை போடவும். அதில் உள்ள விதைகளை கொட்டி விடவும். அதில் முக்கால்வாசி நல்லெண்ணை ஊற்றவும். பிறகு ஒரு ஊசியினால் அந்த மிளகாயைக் குத்திக்கொள்ளவும்.

படத்தைப் பார்கவும்
அந்த ஊசியினால் மிளகாயை விளக்கு மூக்கில் சிறிது நேரம் காட்டவும். எண்ணை சூடானவுடன் அந்த எண்ணையை பிரச்சினைக்குரியவர் காதில் ஊற்றவும். இந்த சமயத்தில் நல்ல வலுவானவர்கள் நாலு பேர் அந்த பிரச்சினைக்குரியவரை அசையாமல் பிடித்துக் கொள்ளவேண்டும். அவ்வளவுதான் வைத்தியம் முடிந்தது. காதுக்குள் எந்த பூச்சி போயிருந்தாலும் இந்த வைத்தியத்தில் வெளியே வந்தே ஆகவேண்டும்.

மேலும் விளக்கம் வேண்டுபவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால், எங்கள் கம்பெனி வைத்தியரை அனுப்பி வைக்கிறோம். அவர் டெமான்ஸட்ரேஷன் வகுப்புகள் நடத்தி விளக்கம் தருவார். 

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

போர்வையில் கால்மாடு தலைமாடு தெரியுமா?

என்னமோ மாட்டைப் பற்றிய பதிவு என்று எண்ணி ஓடிவிடாதீர்கள். எல்லாம் நம்மைப் பற்றியதுதான். நான் என்ன மாடா என்று சண்டைக்கு வராதீர்கள். மாட்டுக்கும் இந்தப் பதிவிற்கும் ஸ்நானப்பிராப்தி கூடக் கிடையாது.

விக்கிரமாதித்தன் கதை எல்லோருக்கும் தெரியும். அதில் விக்கிரமாதித்தன் பேசாமடந்தையை வெற்றி கொள்வதற்காக பல தடைகளைத் தாண்டிச் செல்லுகிறான். கடைசியில் அவன் பேசாமடந்தையின் சயன அறைக்குள் நுழைகிறான். அங்கே ஒரு "அம்சதூளிகாமஞ்சம்" போட்டிருக்கிறது. "அம்சதூளிகாமஞ்சம்" அப்படீன்னா என்னென்னு கேக்கறீங்களா? நாம படுக்கிற கட்டில்தானுங்க. என்ன, கொஞ்சம் நெறய சிற்ப வேலைகளெல்லாம் செஞ்சிருப்பாங்க.


பேசாமடந்தை பெட் ரூமில் இருந்த கட்டிலின் படம் கிடைக்கவில்லை. கூகுளில் வேறு படம்தான் கிடைத்தது. மன்னிக்கவும். இதற்கும் அதற்கும் என்ன வித்தியாசம் என்றால், பேசாமடந்தை கட்டிலில், கட்டிலின் இரு புறமும் ஒரே மாதிரி இருக்கும்.

அதில் ஒரு கண்டிஷன் போட்டிருந்தார்கள். அதாவது இந்தக் கட்டிலின் கால்மாடு, தலைமாடு கண்டுபிடித்து, தலை மாட்டில் உட்கார்ந்தால், பேசாமடந்தை வந்து உங்களை வரவேற்பாள். மாறி உட்கார்ந்தால் அடியாட்கள் வந்து உங்களை கவனிப்பார்கள், என்று எழுதியிருந்தது.

நம்ம விக்கிரமாதித்தன் என்ன சாதாரண ஆளா, உடனே வேதாளத்தைக் கூப்பிட்டு ஒரு எலுமிச்சம்பழம் கொண்டு வரச்சொன்னான். அந்த எலுமிச்சம்பழத்தை கட்டிலின் நடுவில் வைக்க, அது உருண்டு சென்று கட்டிலின் ஒரு ஓரத்தில் சேர்ந்தது.

அப்போது பட்டி சொன்னான். எலுமிச்சம்பழம் சேர்ந்த இடம் கால்மாடு, அதற்கு எதிர்புறம் தலைமாடு. தேவரீர் தலைமாட்டில் உட்காருங்கள் என்று சொன்னான். பிறகு விக்கிரமாதித்தன் கட்டிலின் தலைமாட்டில் உட்கார்ந்து பேசாமடந்தை வந்து, அவளைப் பேசவைத்து, பிறகு அவளைத் திருமணம் புரிந்து, மீதி நடந்தது எல்லாம் பெரிய கதை. அது இப்போது நம் சப்ஜெக்ட்டுக்கு வேண்டியதில்லை.

சாராம்சம் என்னவென்றால், கட்டிலில் தலைமாடு கால்மாடு பார்த்துத்தான் படுக்கவேண்டும். இப்போதுள்ள கட்டில்களில் அது சுலபம். படத்தைப் பார்க்கவும். சைடு உயரமாக இருக்கும் பக்கம்தான் தலைமாடு.

முன்காலத்தில், அதாவது நான் சின்னப்பையனாக இருந்த காலத்தில் இந்த வம்பெல்லாம் கிடையாது. வீட்டிலுள்ள அனைவருக்கும் ஆளுக்கு ஒரு பாய், அதாங்க கோரைப்பாய், இருக்கும். அவைகளை எல்லாம் சுருட்டி வீட்டின் ஒரு மூலையில் சாத்தி வைத்திருப்பார்கள். ராத்திரி சாப்பிட்டவுடன் ஆளுக்கு ஒரு பாயை எடுத்து உதறி, விரித்துப் போட்டு, கிடைத்த தலையணை, போர்வையுடன் படுத்தால் விடிந்த பிறகு யாராவது எழுப்பினால் எழுந்திருப்போம்.

இப்ப என்னடாவென்றால், ஆளுக்கு ஒரு ரூம், அதில் தனி கட்டில், இத்தியாதிகள் வந்து விட்டன. மெத்தை என்று சொல்லப்படுவதில்தான் எத்தனை வகை? ரப்பர் மெத்தை, ஸ்பிரிங்க் மெத்தை, டெக்ரான் மெத்தை என்று பலவகை வந்து விட்டன. இந்த ரகளையில் இலவம்பஞ்சு மெத்தை காணாமல் போய்விட்டது. ஆனால் அதுதான் உடலுக்கு நல்லது.

இப்படி ஒரு மெத்தையில் படுத்து தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும்போது, திடீரென்று விக்கிரமாதித்தன் கட்டில் ஞாபகத்திற்கு வந்தது. அதன் தாக்கம் காரணமாக என் சிந்தனை இறக்கையில்லாமலேயே பறக்க ஆரம்பித்தது.


எதைப்பற்றிய சிந்தனை என்றால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் போர்வையைப் பற்றியதுதான். இதைப் பற்றி யாரும் தீவிரமாக சிந்தித்து இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். நாம் எல்லோரும் தினமும் போர்வையைப் போர்த்திக் கொள்ளுகிறோம். காலிலிருந்து தலை வரை நன்றாக இழுத்திப் போர்த்திக் கொள்ளுகிறோம். காலையில் எழுந்தவுடன் பெரும்பாலானோர் போர்வையை அப்படியே போட்டுவிட்டுப் போவதுதான் வழக்கம். அவர்கள் இந்தப் பதிவைப் படிக்கவேண்டியதில்லை.

என்னைப் போல் பழங்கட்டைகள் சிலர் எழுந்தவுடன் அந்தப் போர்வையை நான்காக மடித்து பிறகு குறுக்காக இரண்டு தடவை மடித்து மெத்தையின் ஒரு புறம் வைப்பது வழக்கம். மறு நாள் தூங்கப் போவதற்கு முன் இந்தப் போர்வையை எடுத்து விரித்து உதறி மீண்டும் பயன்படுத்துவோம். இதுதான் பொதுவான வழிமுறை.

அப்படி மறுநாள் அந்தப் போர்வையைப் பயன்படுத்துமுன், யாராவது அதில் கால்மாடு, தலைமாடு பார்ப்பதுண்டா? பார்க்கவேண்டாமா? முன்தினம் போர்வையின் ஒருபக்கம் கால்மாடாக இருந்திருக்கும். என்னதான் நீங்கள் காலை சுத்தமாக கழுவிக்கொண்டு படுத்திருந்தாலும் காலில் மிச்சம் மீதி இருக்கும் தூசி தும்புகள் அந்தப் போர்வையின் கால் மாட்டில் ஒட்டிக் கொள்ளும் அல்லவா? மறுதினம் ஒருக்கால் அந்தப் பக்கம் உங்கள் தலைமாடாக வந்து விட்டால் அந்த தூசிதும்புகள் உங்கள் மூக்கு, கண், வாய் ஆகியவைகளில் சேருமல்லவா? அது நம் ஆரோக்கியத்திற்கு கேடு அல்லவா?

ஆஹா, என்ன ஆராய்ச்சி என்று மூக்கின் மேல் விரல் வைக்காமல், நன்றாக யோசியுங்கள். நான் பல நாட்கள் இதைப் பற்றி யோசனை செய்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டுபிடித்திருக்கிறேன்.


அதாவது ஒரு போர்வைக்கு நான்கு மூலைகள் இருக்கும் விவரம் உங்களுக்கு ஏறகனவே தெரிந்திருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமான ஒரு மூலையில் நல்ல கெட்டி நூலால் ஒரு வளையம்  மாதிரி தைத்து விடவேண்டியது. எம்பிராய்டரி அல்ல. சும்மா ஒரு வளையம் மட்டுமே. உங்கள் கை விரல் அதற்குள் நுழைகிற அளவு இருந்தால் போதும். அவ்வளவுதான், வேலை முடிந்தது. 

இனி தினமும் படுக்கும்போது இந்த நூல் வளையம் உங்கள் தலை மாட்டில் இடது கைப் பக்கம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். உங்கள் போர்வையின் தலைமாடு கால்மாடு மாறவே மாறாது. உங்கள் போர்வையைத் துவைத்தாலும் (அந்தப் பழக்கம் இருந்தால்) இந்த நூல் வளையம் அப்படியே இருக்கும்.

இதைக் கடைப்பிடித்தீர்களானால் உங்கள் அலெர்ஜி தொந்திரவுகள் காணாமல் போய்விடும். இந்தக் கண்டுபிடிப்பை பேடென்ட் ஆபீசில் ரிஜிஸ்டர் பண்ணலாமென்று இருக்கிறேன். அப்படி நான் பேடென்ட் வாங்கிவிட்டால் அதன் பிறகு இந்த டெக்னிக்கை உபயோகிப்பவர்கள் அனைவரும் எனக்கு ராயல்டி கொடுக்கவேண்டு வரும்.

புதன், 6 பிப்ரவரி, 2013

ஆத்மாவும் மனிதனும்.

மனிதனின் இரண்டு அம்சங்களாக உடலையும் ஆத்மாவையும் சொல்லுகிறோம். உடல் அழியக்கூடியது. ஆத்மா அழிவில்லாதது. இப்படித்தான் ஆன்மீக போதகர்கள் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

அணுவின் தன்மையைப் பற்றிப் படித்தவர்களுக்கு அணுவின் உள்ளே என்னென்ன இருக்கின்றன என்று தெரியும். கரு, நியூட்ரான்ஸ், எலெக்ட்ரான்ஸ் ஆகியவை முக்கியமானவை. இதற்குள்ளும் பல நுண்-துகள்கள் இருக்கின்றன என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். அதில் ஒன்றுக்கு கடவுள் துகள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதில் நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்த அணுவானது செயலற்றது பொல் தோன்றினாலும், அதற்குள் கண்ணுக்குப் புலனாகாத செயல்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. எலெக்ட்ரான்கள் கருவை இடைவிடாது சுற்றிக்கொண்டே இருக்கின்றன என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இந்த இயற்கை ரகசியத்தைத் தான் ஆத்மா என்கிறோம். உயிருள்ள ஜீவராசிகளானாலும், உயிரற்றவைகளானாலும், அவைகளில் ஆத்மா இருக்குறது என்று நம்புகிறோம்.

ஆகவேதான் அணுக்களை உயிருள்ளவை என்று நாம் கருதுகிறோம். மனிதன் அணுக்களால் ஆனவன். ஆகவே அவன் ஜீவித்திருந்தாலும் சரி, இறந்தாலும் சரி, அவனுள் இருக்கும் இருந்த அணுக்கள் உயிருடன்தானே இருக்கும்? ஆகவேதான் மனிதனின் உடல் அழிந்தாலும் அவனுடைய ஆத்மா அழிவதில்லை என்று சொல்கிறார்கள்.

இதுதான் மெய்ஞானம்.

திங்கள், 4 பிப்ரவரி, 2013

மூக்கு - ஒரு வாதனை

வாதிப்பது = வாதனை. மூக்கு நம்மை எப்படி வாதிக்கும் அல்லது நாம் எப்படி அதை வாதிக்கிறோம் என்பது ஒரு பெரிய சமாசாரம்.

"மூக்குள்ள வரைக்கும் சளி இருக்கும்" என்பது பழமொழி. "சளிப் பிடித்த மூக்குடன் வெளியில் போகாதே" என்பது புதுமொழி.

தெனாலிராமன் காளியுடன் செய்த வேடிக்கை ஞாபகம் இருக்கும். மனிதர்களுக்குள்ள ஒரு மூக்கில் சளி பிடித்தாலே எங்களால் சமாளிக்க முடியவில்லையே. காளிக்கு இருக்கும் ஆயிரம் மூக்குகளிலும் சளி பிடித்தால் இரண்டு கைகள் எப்படிப் போதும் என்பதுதான் தெனாலிராமனின் கேள்வி.

சளியும் தும்மலும் சாகும் வரைக்கும் என்று சொல்வார்கள். சில மாவட்டங்களில் இதை "தடுமன்" என்றும் சொல்வார்கள். எப்படி சொன்னாலும் சளி பிடித்தால் மூக்கை அடிக்கடி சிந்த வேண்டி வரும். நீங்கள் வீட்டில் இருக்கும்போது இதை எப்படி செய்தாலும் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. ஆனால் பொது இடங்களில் கொஞ்சம் நாகரிகத்துடன் இருக்கவேண்டும்.

நாலுபேர் மத்தியில் இருக்கும்போது மூக்கை சிந்த வேண்டி வந்தால், அவர்களை விட்டு விலகிச்சென்று, உங்கள் காரியத்தை முடித்துவிட்டு, பிறகு அவர்களிடம் வரவேண்டும். அங்கேயே இதைச்செய்வது காட்டுமிராண்டித்தனம். அதேபோல் உணவு விடுதியில் சாப்பிடும்போதும் இதே முறைதான்.

சளி பிடித்தால் கூடவே தும்மலும் வரும். தும்மல் வந்தால், அந்த இடத்தை விட்டு விலகி, தும்மிவிட்டு, பிறகு அங்கு வருவதுதான் நாகரிகம். முடியாத பட்சத்தில் முகத்தை ஒரு துண்டு அல்லது கர்சீப்பால் நன்கு மூடிக்கொண்டு தும்மலாம். அப்படி இல்லாமல் எல்லோர் மீதும் ஸ்ப்ரே செய்வது நம் வழக்கம். உங்களுக்கு எது சௌகரியமோ அப்படி செய்து கொள்ளவும்.

மூக்குக்கும் காதுக்கும் ஒரு ட்யூப் கனெக்ஷன் இருக்கிறது. இது எவ்வளவு பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. மூக்கை மிகவும் பலமாக சிந்தினால் காது ஜவ்வு கிழிந்து போய்விடும் அபாயம் உள்ளது. ஆகவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

பொதுவாக ஒரு டிப்ஸ். சளி பிடித்தால் பேசாமல் வீட்டில் இருந்துகொள்வது உத்தமம்.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

குடும்பப் பழக்கங்களில் நவீனம்

காலத்தின் கோலத்தினால் பல பழக்கவழக்கங்கள் மாறிக்கொண்டு வருகின்றன. உறவுகளின் நெருக்கம் குறைந்துகொண்டு வருகிறது. இது காலத்தின் கட்டாயம்.

வீட்டிற்கு உறவினர் வருவதையே தொல்லையாக பலர் நினைக்கிறார்கள். காரணங்கள் பல. இன்றைய போட்டி உலகத்திலே, பல சிக்கல்கள் தோன்றியிருக்கின்றன. குழந்தைகளின் படிப்பு, அவர்களை நல்ல மேற்படிப்பு படிக்கவைக்க பெற்றோர்கள் படும் அவஸ்தை, விலைவாசிகளைச் சமாளிக்கப் படும்பாடு, ஆகியவை உறவுகளை ஒதுக்கி வைக்கச் செய்கிறது.

அடுத்த தலைமுறையினருக்கு இந்த உறவு முறைகளே தெரியாமல் போகலாம். விடுமுறையில் உறவினர் வீடுகளுக்குப் போய் சில நாட்கள் இருக்கும் பழக்கம் ஏறக்குறைய மறந்தே போய்விட்டது. இவைகளை நினைத்து பயன் ஏதும் இல்லை.

வீட்டுக்கு யாராவது வந்தால் வரவேற்பது எப்படி என்று இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுப்பார் யாரும் இல்லை. சில நாட்களுக்கு முன் என் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த வீட்டுப் பெண்ணுக்கு கல்யாணம் பேசி முடித்திருக்கிறார்கள். நான் அந்தப் பெண் எங்கே என்று கேட்டேன். மேலேயுள்ள அவள் ரூமில் இருக்கிறாள் என்று பெண்ணின் தாயார் சொன்னாள். அரை மணி நேரம் கழித்து நான் திரும்பும் வரையிலும் அந்தப் பெண் கீழே வரவுமில்லை, அந்தப் பெண்ணின் தாயார் அவளைக் கூப்பிடவுமில்லை.

இந்தப் பெண் கணவன் வீட்டுக்குப் போனபின்பும்  இப்படித்தானே இருப்பாள்? இதை நான் சுட்டிக் காட்டினால் கிழவனுக்கு வேறு வேலை என்ன? சும்மா இருக்க முடியாதா? என்று நினைப்பார்கள். நான் என் பெண்ணிடம் கேட்டேன். இந்த மாதிரிப்பெண்கள் கணவன் வீட்டுக்குப் போய் என்ன வேலை செய்வார்கள் என்று. அதற்கு என் பெண் சொன்ன பதில் என்னைத் தூக்கிவாரிப்போட்டது. அவள் எதற்கு வேலை செய்யவேண்டும்? அங்கு வேலைக்காரர்கள் இருப்பார்களல்லவா, அவர்கள் வேலை செய்துவிட்டுப் போகிறார்கள் என்றாள்.

நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். நமக்கு இனிமேல் இந்த உலகில் வாழ அருகதையில்லை என்று. ஆனால் என் குறையை யார் நிவர்த்திப்பார்கள்?