திங்கள், 29 ஜூலை, 2013

உலகில் பேரின்பம் தருவது எது ?


பல கால ஆராய்ச்சியின் சாரத்தை இப்போது நான் உங்களுக்குக் கொடுக்கப் போகிறேன். அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விதிப்பயனால் தீர்மானிக்கப்படும்.

உலகில் பேரின்பம் மற்றும் சிற்றின்பம் என்று இரண்டு வகை இருப்பதை எல்லோரும் அறிவீர்கள். சிறிது நேரமே இருந்து பின் மறைந்து போவதை சிற்றின்பம் என்று சொல்வது மரபு. ஐஸ்கிரீம் சாப்பிடுகிறோம். சாப்பிடும்போது இன்பமாக இருக்கிறது. சாப்பிட்டு முடித்தவுடன் அந்த இன்பம் மறைந்து விடுகிறது.

இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் பெரும்பாலான இன்பங்கள் இவ்வகையைச் சேர்ந்ததுதான். அதனால்தான் பெரியவர்கள் பேரின்பத்தை நாடு என்று சொல்லி வைத்துப் போனார்கள். ஆனால் பேரின்பம் என்றால் என்ன, அதை அடைவது எப்படி என்கிற வழிவகைகளை அவர்கள் சொல்லவில்லை.

ஆண்டவனை உணர்வதுதான் பேரின்பத்திற்கு வழி என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டார்கள். ஆனால் இந்த வழியில் போய் பேரின்பத்தை நுகர்ந்தவர்களை யாரையும் காணோம்.

இவ்வுலக மாந்தர் உய்யும்பொருட்டு பலகாலம் சிந்தித்து பேரின்பம் அடையும் மார்க்கத்தை இங்கே கொடுத்திருக்கிறேன். இந்தப் பொருளை நினைக்க நினைக்க இன்பம் தரும். பார்த்தால் இன்பம் பலமடங்கு பெருகும். தொட்டாலோ பேரின்பம் பயக்கும்.

இந்த இன்பம் எப்போதும் தெவிட்டாது. இந்தப் பொருளை எவ்வளவு அடைந்தாலும் மேலும் மேலும் வேண்டும் என்றே தோன்றும்.

அது என்னவென்று அறிய ஆவலாய் இருக்கிறீர்களா?

இதோ பாருங்கள்.

பணம் ஒரு பேய், பணத்தாசை கூடாது, பணத்திற்கு அடிமையாகாதீர்கள் என்றெல்லாம் கூறுபவர்களை நம்பாதீர்கள். ஒன்று அவர்களிடம் பணம் இல்லை அல்லது ஏற்கெனவே ஏகப்பட்ட பணத்தைச் சேர்த்துவிட்டார்கள். நம்ம கார்பரேட் சாமியார்களைப் பாருங்கள். அவர்களிடம் ரிசர்வ் பேங்க் கஜானாவே இருக்கிறது. ஆனால் அவர்கள் போதிப்பது என்னவென்றால் பணத்தாசை கூடாது என்று.

ஆகவே பதிவர்களே, விவேகத்துடன் பணத்தை சேமியுங்கள்.

சனி, 27 ஜூலை, 2013

கம்ப்யூட்டரி(னா)ல் (வந்த) கதை - பாகம் 2

அந்தக் காலத்தில் மூன்றே மூன்று புரொக்ராம்கள்தான் பிரபலம். வேர்டு. ஸப்ரெட்ஷீட், டேட்டாபேஸ். மூன்றுக்கும் மூன்று பிளாப்பிகள்.

நான் முதலில் போரிட ஆரம்பித்தது வேர்டுடன். அந்த மேன்யிவலைப் புரிந்து கொள்ளவே பல நாட்கள் ஆயின. நான் அந்தக்காலத்தில் டைட்ரட்டிங்க் படிக்கவில்லை. ஏனென்றால் அது என் குடும்ப பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்டதாய் இருந்தது. மாதம் மூன்று ரூபாய் கட்டணம் என்னால் கொடுக்க முடியவில்லை.

அதனால் இந்த கீபோர்டை ஒவ்வொரு எழுத்தும் எங்கே இருக்கிறது என்று தேடுக்கண்டு பிடித்து ஒரு வரி டைப் அடிப்பதற்கு அரை மணி நேரம் ஆயிற்று. இப்படியாக ஏறக்குறைய ஒரு மூன்று மாதத்தில் வேர்டின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டேன்.

பின்பு ஒரு முறை அமெரிக்கா சென்றிருந்தபோது என்னுடைய உபயோகத்திற்கென்று ஒரு கம்ப்யூட்டர் தனியாகக் கொடுத்தார்கள். அதற்குள் கம்ப்யூட்டர்கள் வளர்ச்சியடைந்து விட்டன. ஹார்டு டிஸ்க் வந்துவிட்டது. புரொக்ராம் மேன்யுவல்கள் தடிதடியாக தலையாணி சைசில் வந்து விட்டன.

அங்கு உட்கார்ந்து ஸ்ப்ரெட் ஷீட் எப்படி உபயோகிப்பது என்று பழகினேன். பின்பு ஒரு முறை ஸ்வீடன் போயிருந்தபோது அவர்கள் பழைய கம்ப்யூட்டர்களை மாற்றி புதிதாக வாங்கியிருந்தார்கள். பழைய கம்ப்யூட்டர் ஒன்று கொண்டு போகிறார்களா என்று கேட்டார்கள்.

நம் தமிழ்பண்புதான் தெரியுமே. ஒருவன் சாப்பிடும்போது தெருவில் கடனுக்கு யானை  விற்றுக்கொண்டு போனார்களாம். இவன் வாய் நிறைய சோறு. பேச முடியவில்லை. சைகையிலேயே "எனக்கு ஐந்து" என்று சொன்னானாம். கடனில் கொடுப்பதையே அப்படி ஆசைப் பட்ட தமிழன் சும்மா கொடுத்தால் விடுவானா?

ஒன்றை வாங்கிக்கொண்டு வந்தேன், தப்பு, தப்பு, கொண்டு வரப்பார்த்தேன். ஸ்வீடன் ஏர்போர்ட்டில் இதன் சைஸைப் பார்த்ததும் ஏற்றிக்கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டான். அதை அங்கேயே லவுன்ஞ்சில் அதைக் கொடுத்தவர்கள் விலாசத்தை அந்தப் பார்சலின் மேல் எழுதி வைத்து விட்டு வந்து விட்டேன்.

அந்தப் பார்சல் அதைக் கொடுத்தவர்களிடம் சேர்ந்து விட்டது என்று பின்னால் கேள்விப் பட்டேன்.

கம்ப்யூட்டர்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் நடந்து இன்று விலை மலிவாகவும், பலமடங்கு திறனுள்ளவையாகவும் மாறி விட்டன. இன்று புதிதாக வாங்கும் கம்ப்யூட்டர் அடுத்தவாரம் பழைய மாடல் ஆகி விடுகிறது.

பிறகு நான் ரிடையர் ஆன பின்பு என் பெண் தான் உபயோகித்து கழித்த ஒரு கம்ப்யூட்டரை எனக்கு தானம் கொடுத்தாள். தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடாதல்லவா? அதை தட்டிக் கொட்டி இன்றைய நிலைக்கு கொண்டு வந்து உங்களையெல்லாம் வாதித்துக்கொண்டு இருக்கிறேன்.

இப்போது கம்ப்யூட்டர் ஹார்டுவேர், சாஃப்டுவேர் எல்லாம் தலைகீழாக அத்துபடி. இந்தக் கம்ப்யூட்டரினால்தான் என் மூளை துருப்பிடிக்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறது. 

வியாழன், 25 ஜூலை, 2013

கம்ப்யூட்டரி(னா)ல் (வந்த) கதை - தொடர் பதிவு -பாகம் 1


ஆஹா, அடிச்சது ஒரு லாட்டரி பிரைஸ். நம்மையும் (ஒரு பார்மாலிட்டிக்காக தன்மைப் பன்மை உபயோகித்திருக்கிறேன். தன்மைப் பன்மை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் உடனடியாம ஒரு தமிழ் வாத்தியாரைப் பார்த்து கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.)  ஒரு பதிவரா மதிச்சு ஸ்ரீராம் ஒரு தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டிருக்கார். விடுவோமா வந்த வாய்ப்பை. எல்லோரும் எழுந்து ஓடத் தயாராக இருங்கோ!

1987 ம் வருடம். விவசாயப் பல்கலைக் கழகத்தில் நான் ஒரு ஆராய்ச்சி யூனிட் டைரக்டராகப் பொறுப்பேற்றேன். யூனிவர்சிடி வைஸ்-சேன்சலருக்கு அடுத்த கீழ் பதவி. (பேரு பெத்த பேருதான்.) என்ரூமில் ஒரு கம்ப்யூட்டர் வைத்திருந்தது. எனக்கு முன் இருந்தவர் வாங்கிப்போட்டிருந்தார். ஏறக்குறைய ஒரு வாஷிங்க் மெஷின் சைசில் இருந்தது.

அப்போதுதான் PC  என்று சொல்லப்படும் Personal Computer கள் மார்க்கெட்டில் வர ஆரம்பித்த காலம். அதற்கு முன் மெய்ன் பிரேம் கம்ப்யூட்டர்கள் என்று சொல்லப்படும் வெள்ளை யானைகள்தான் கோலோச்சிக்கொண்டு இருந்தன. எல்லாம் யானை சைசில் இருக்கும். விலையும் யானை விலைதான். எங்கள் யூனிவர்சிடியில் ஒரு வெள்ளை யானை 20 லட்சம் ரூபாயில் வாங்கி, ஏகப்பட்ட பாதுகாப்புகளுடன் ஒரு 10 அடி அகலம் 20 அடி நீளமான ரூமுக்கு AC பொறுத்து அதற்குள் வைத்திருந்தார்கள்.

அந்த அறைக்குள் போவதென்றால் கோவிலுக்குள் போவது போல் செருப்பையெல்லாம் கழட்டி வாசலில் வைத்து விட்டுப் போகவேண்டும். அந்தக் கம்ப்யூட்டரை இயக்க ஒரு அசிஸ்டென்ட்டுக்கு ஒரு மாதம் அந்தக் கம்ப்யூட்டர் கம்பெனியே டிரெய்னிங்க் கொடுத்திருந்தது. அந்த ஆளுக்கு ஏகப்பட்ட மரியாதை. தலையில் லேசாக கொம்பு முளைத்திருக்கிறது என்று எல்லோரும் சொன்னார்கள். என் கண்ணுக்குத் தெரியவில்லை.

அதுவரை கம்ப்யூட்டரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேனே தவிர கம்ப்யூட்டரை தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. ஆகவே என் ரூமில் இருந்த கம்ப்யூட்டரை ஆசை தீர தொட்டு, தடவி எல்லாம் பார்த்தேன். பக்கத்தில் அந்தக் கம்ப்யூட்டரை உபயோகப் படுத்துவது பற்றிய மேன்யுவல் எல்லாம் இருந்தன. அந்த கம்ப்யூட்டரில் ஹார்டு டிஸ்க் கிடையாது.  A மற்றும் B டிரைவ் என இரண்டு ஸ்லாட்டுகள்தான் இருந்தன.  அப்போது 6 அங்குல விட்டத்தில் பிளாப்பி டிஸ்க் என்று ஒன்று இருக்கும். அதில்தான் கம்ப்யூட்டர் புரொக்ராம்கள் இருக்கும். அதை A டிரைவில் போட்டால் கம்ப்யூட்டர் இயங்கும். B டிரைவில் நாம் தேவைப்பட்ட பைல்களை சேமிக்க ஒரு பிளாங்க் பிளாப்பி டிஸ்க்கைப் போட்டு வேலை செய்யவேண்டும்.

இந்த விவரங்களெல்லாம் பல மாதங்கள் கழித்துத்தான் நான் அறிந்து கொண்டேன். முதலில் எனக்கு ஒன்றும் தெரியாது.

நான் ஒரு பெர்ர்ர்ரிரிரிய அதிகாரியானதால் எனக்குத் தெரியாது என்று எதைப் பற்றியும் வெளியில் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் நான் அந்தப் பதவிக்கு லாயக்கில்லை என்று அர்த்தம். இந்தக் கலாச்சாரத்தில் வளர்ந்தவனாதலால் யாரிடமும் இந்தக் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துவது என்று கேட்க முடியாது. மற்றவர்கள் எல்லாம் எனக்கு கீழ் பணிபுரிபவர்கள். என்னைவிட ரேங்க் குறைவானவர்கள். அவர்களிடம் போய் இந்தக் கம்ப்யூட்டரை எப்படி இயக்குவது என்று கேட்டால் அது பெருத்த அவமானம். அதற்குப் பதிலாக தூக்குப் போட்டு செத்து விடலாம்.

ஆகவே நானே அந்த  மேன்யுவல்களை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். ஆபீஸ் நேரத்தில் இதை செய்ய முடியாது. ஏனென்றால் பார்ப்பவர்கள் எனக்கு கம்ப்யூட்டரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கேவலமாக நினைப்பார்கள். எனவே மாலை 5 மணிக்கு மேல் எல்லோரும் ஆபீசை விட்டுப் போனபிறகு இந்த மேன்யுவல்கள்ப் படிப்பேன்.

பாகம் 2 ல் தொடரும்.

திங்கள், 22 ஜூலை, 2013

வழி சொல்லத் தெரியுமா ?


நேற்று நான் கடைக்கு ஒரு பொருள் வாங்கப் போகும்போது ஒரு பெண் என்னிடம் வந்து " ஐயா, இங்கு காயின் பாக்ஸ் போன் எங்காவது இருக்கிறதா" என்று கேட்டாள். நான் அவள் "காயின்" அதுதான் ஒரு ரூபாய் காசு இல்லாமல் கேட்கிறாள் என்று நினைத்துக்கொண்டு என் பர்சை எடுத்தேன்.

அதற்கு அவள் "ஐயா, என்னிடம் காசு இருக்கிறது, காயின் பாக்ஸ் போன் பக்கத்தில் இருக்கிறதா?" என்று கேட்டாள். கொஞ்ச தூரத்தால் ஒரு போன் இருந்ததைக் காட்டினேன். அவள் தயங்கினாள். சரி போனில் என்ன பேசவேண்டும் என்று கேட்டேன். அதற்ஃகு அவள் நான் இங்கு என் சித்தி வீட்டிற்கு வந்தேன். வழி தெரியவில்லை, அதனால் அவர்களுக்கு போன் செய்து வழி கேட்கவேண்டும் என்றாள். நான் என் செல்போனை எடுத்து அவள் சொன்ன எண்ணுக்கு போன் செய்து அவளிடம் கொடுத்தேன்.

ஒரு நிமிடம் பேசினாள். அவர்களை என்னிடம் பேசச் சொல், நான் விவரம் கேட்டு உனக்குச் சொல்கிறேன் என்று சொல்வதற்குள் போன் கட் ஆகிவிட்டது. சரி என்ன சொன்னார்கள் என்றேன். கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோரிலிருந்து நேராக வரவும் என்று சொன்னார்கள் என்றாள்.

இதைப் போன்ற மொட்டையான வழியை வைத்துக்கொண்டு என்ன செய்வது? நேராக வரவும் என்றால் எந்த ரோட்டில் என்று சொல்லவேண்டாமோ? அந்தப் பெண் என் பின்னாலேயே வர ஆரம்பித்தது. நான் திரும்பவும் அந்த நெம்பரைக் கூப்பிட்டு "அம்மா, உங்க வீடு எங்கேயிருக்குறது என்று அழுத்தமாகக் கேட்டேன்.

அப்போது அந்த அம்மா அவர்கள் இருக்கும் வீட்டைச் சொன்னார்கள். அது என் வீட்டிலிருந்து மூன்றாவது வீடு. அந்தப் பெண்ணிற்கு வழி சொல்லி அனுப்பி வைத்தேன்.

நான் சமீபத்தில் எங்கள் ஏரியாவிலேயே ஒரு அபார்ட்மென்ட்டுக்குப் போக வேண்டி இருந்தது. அந்த அபார்ட்மென்ட் பெயரில் மூன்று இடங்களில் அபார்ட்மென்ட் இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் பெயரில் சிறிய வித்தியாசமே. அரை மணி நேரம் சுற்றிவிட்டு கடைசியாக ஒரு அபார்ட்மென்ட் வாட்ச்மேனிடம் வழி கேட்டேன். அந்த ஆள் அவ்வளவு படித்தவராகத் தென்படவில்லை. இருந்தாலும் வழி சரியாக சொன்னார்.

சார் இங்கிருந்து இந்த ரோட்டில் நேராக சென்றால் ஒரு ஸ்கூல் வரும் அங்கு வலது பக்கம் திரும்பி போய் மூன்றாவது ரோட்டில் இடது பக்கம் திரும்புங்கள். அங்கிருந்து  மூன்றாவது கட்டில் வலது பக்கமாக திரும்பி நேராகப் போனால் நீங்கள் தேடும் அபார்ட்மென்ட் வந்து விடும் என்றார். அதேபோல் சென்று அடுத்த ஐந்து நிமிடங்களில் நான் போகவேண்டிய அபார்ட்மென்ட்டுக்கு போய்ச் சேர்ந்தேன்.

 ஆகவே வழி சொல்லும்போது, அவர்களுக்குப் புரியும்படியாக தெளிவாக வழி சொல்லவேண்டும். தெளிவில்லாமல் சொல்லப்படும் வழிகளினால் எவ்வளவு சிரமங்கள் ஏற்படுகின்றன.

நான் ஸ்வீடன் போயிருந்தபோது அங்கிருந்து நேதர்லாந்தில் உள்ள சர்வதேச மண் ஆராய்ச்சி நிலையம் பார்க்க விரும்பினேன். அதற்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு வருவதற்கான வழியை ஒரு பேக்ஸ் மூலம் நான்கே நான்கு வரியில் தெரியப்படுத்தியிருந்தார்கள். சுருக்கமாகவும் தெளிவாகவும் எந்த குழப்பமுமில்லாமல் அந்த செய்தி இருந்தது. அதைப் பற்றி அடுத்த பதிவில்.

திங்கள், 15 ஜூலை, 2013

டிவிடி சிடி உருவாக்க

கணினி தொழில் நுட்ப பதிவுகளில் சமீபத்தில் ஒரு பதிவில் டிவிடி தயாரிப்பது பற்றிய ஒரு மென்பொருளைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். சாதாரணமாக இப்படி தொழில் நுட்ப பதிவுகளில் சிபாரிசு செய்யப்படும் மென்பொருட்கள் சோதனைக்காக 15 நாள் அல்லது 30 நாள் இனாமாக வேலை செய்யும் பிறகு முடங்கிப்போய்விடும். இந்த நுட்பத்தை எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள்.

Free Download என்று குறிப்பிட்டிருப்பார்கள். டவுன்லோடுதான் இலவசமே தவிர மென்பொருள் இலவசமல்ல. இதுதான் வார்த்தை ஜாலம். தவிர நமக்குத் தெரியாமல் ஏதாவது ஸ்பைவேர் மென்பொருளையும் கூடவே இனாமாக கொடுத்து விடுவார்கள். அது சிறிது சிறிதாக நம் கம்ப்யூட்டரை முடக்கும்.

நான் இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் மென்பொருள் நான் சில மாதங்களாக உபயோமித்து வரும் மென்பொருளாகும். என் கம்ப்யூட்டருக்கு இது வரையில் எதுவும் நேரவில்லை.

எனக்குப் பொழுது போக்கு சாதனம் இந்தக் கம்ப்யூட்டர்தான். அதில் பலவிதமான மென்பொருட்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பேன்.

அப்படி நோண்டிக்கொண்டிருக்கும்போது ஒரு எண்ணம் தோன்றியது. நாம்தான் நிறைய பாடல்கள், டான்ஸ்கள்,  யூட்யூபில் இருந்து தரவிறக்கி வைத்திருக்கிறோமே, அவைகளை டிவிடி யாக மாற்றினால் என்ன என்று தோன்றியது.

ஏனென்றால் கம்ப்யூட்டரில் நாம் சாதாரணமாக ரெக்கார்ட் செய்யும் சிடிக்கள் டிவிடி பிளேயரில் வேலை செய்யாது. அவைகளில் டிவிடி பார்மேட்டில் இருந்தால்தான் வேலை செய்யும்.

நாம் யூட்யூபில் இருந்து தரவிறக்கம் செய்யும் விடியோக்கள் பல பார்மேட்டில் இருக்கும். பழக்கப்பட்டவர்களுக்கு இது தெரியும். MP 3,  MP 4 என்கிற பார்மேட்டுகள்தான் மிகவும் பிரபலமானவை. MP 3 ஒலி மட்டும் உள்ளது. இந்த பார்மேட்டில் இருக்கும் பாடல்கள்தான் டேப் ரிகார்டர்களில் பாடும்.

MP 4 பார்மேட்டில் இருப்பது இப்போது புதிதாக வந்து கொண்டிருக்கும் டிவிடி பிளேயர்களிலும் எல்லா கம்ப்யூட்டர்களிலும் வேலை செய்யும். ஆனால் பழைய டிவிடி பிளேயர்களில் வேலை செய்யாது.

மற்ற எல்லா பார்மேட்டுகளும் கம்ப்யூட்டரில் மட்டுமே வேலை செய்யும். வேறு எந்த உபகரணத்திலும் வேலை செய்யாது.

ஆகவே உங்களுக்குப் பிடித்தமான விடியோக்களை உங்கள் டிவிடி யில் பார்க்க விரும்பினால், அந்த விடியோக்களை டிவிடி பார்மேட்டுக்கு மாற்றி சிடியில் பதியவேண்டும்.

இந்த வேலைக்கு பல மென்பொருள்கள் உள்ளன. நீங்கள் வியாபார ரீதியில் டிவிடி தயாரிக்கவேண்டுமென்றால் அதற்கான பயிற்சியும் விலைகொடுத்து வாங்கிய நல்ல மென்பொருளும் நல்ல பவர்புல் கம்ப்யூட்டரும் தரமான டிவிடி  ரிகார்டரும் தேவைப்படும். இதற்கு அதிக பொருள் செலவாகும். நம்மைப் போன்ற சாதாரண கம்ப்யூட்டர் பயனாளிகளுக்கு இலவசமாக கிடைக்கும் ஒரு மென்பொருளே போதும்.

அப்படிப்பட்ட ஒரு மென்பொருளைப்பற்றிய விவரங்கள் கீழே கொடுத்திருக்கிறேன். இது முற்றிலும் இலவசம். நான் உபயோகித்து பலன் அடைந்திருக்கிறேன். டிவிடி பொழுது போக்குக்காக தயாரிக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது. ஆனால் அதிகமான நுட்பங்கள் கிடையாது.
----------------------------------------------------------------------------------------------------------
 சுட்டி:           http://www.dvdstyler.org/en/

DVDStyler is a cross-platform free DVD authoring application that makes possible for video enthusiasts to create professional-looking DVDs. It is Free software distributed under the GNU General Public License (GPL).


About

DVDStyler is a cross-platform free DVD authoring application for the creation of professional-looking DVDs. It allows not only burning of video files on DVD that can be played practically on any standalone DVD player, but also creation of individually designed DVD menus. It is Open Source Software and is completely free.

Features

Screenshot
Tip: DVDStyler is PC software, not self-hosted web software, soa web hosting plan is not required.
 • create and burn DVD video with interactive menus
 • design your own DVD menu or select one from the list of ready to use menu templates v1.8.0
 • create photo slideshow
 • add multiple subtitle and audio tracks
 • support of AVI, MOV, MP4, MPEG, OGG, WMV and other file formats
 • support of MPEG-2, MPEG-4, DivX, Xvid, MP2, MP3, AC-3 and other audio and video formats
 • support of multi-core processor
 • use MPEG and VOB files without reencoding, see FAQ
 • put files with different audio/video format on one DVD (support of titleset)
 • user-friendly interface with support of drag & drop
 • flexible menu creation on the basis of scalable vector graphic
 • import of image file for background
 • place buttons, text, images and other graphic objects anywhere on the menu screen
 • change the font/color and other parameters of buttons and graphic objects
 • scale any button or graphic object
 • copy any menu object or whole menu
 • customize navigation using DVD scripting

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 8 ஜூலை, 2013

மனித இயல்பும் அன்றாட நிகழ்வுகளும்


லண்டனில் ஒரு நிகழ்வு. ஒரு பொழுதுபோக்கு கிளப்பில் ஒரு நாள் ஒருவர் கீழே விழுந்துவிட்டார். அந்தக் கிளப் பெரிய பெரிய கனவான்கள் உறுப்பினராக உள்ள ஒரு கிளப். கீழே விழுந்தவர் அப்போதுதான் அந்தக் கிளப்பில் சேர்ந்திருக்கிறார். யாரையும் அறிமுகமில்லை. மற்ற கிளப் மெம்பர்கள் எல்லோரும் அவர் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்த பிறகும் உதவிக்குச் செல்லவில்லை. பின்னால் ஏன் நீங்கள் அவருக்கு உதவவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில் ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முறையை துல்லியமாக காட்டுகிறது.

"அவரை இதுவரை யாரும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவில்லையே, நாங்கள் எப்படி அறிமுகமில்லாத அவருக்கு உதவமுடியும்? "

இந்தியர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். வந்தாரை வாழவைப்பவர்கள். இப்படியெல்லாம் பெயர் பெற்றவர்கள். அதிலும் தமிழர்களைப்போல் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்று பெருமையும் பேசிக்கொள்கிறோம். ஆனால் அடுத்தவருக்கு உதவி செய்தல் என்று வரும்போது, பலரும் பின்வாங்குவதை அன்றாடம் நடைமுறையில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

இதை ரோடுகளில் விபத்து நடக்கும்போது கண்கூடாகப் பார்க்கலாம். ஒருவர் கீழே விழுந்து கிடக்கிறார். இரத்தக் காயம் ஒன்றுமில்லை. பக்கத்தில் ஒரு இருசக்கர வாகனம் கிடக்கிறது. இதைப் பார்க்கும் எத்தனை பேர் நின்று அவருக்கு உதவுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? நூற்றுக்கு ஒருவர் தேறக்கூடும். காரணம் என்னவென்று சிந்தித்தால், அப்படி உதவச் செல்லும்போது ஏதாவது வம்பு, வழக்கு வந்து விடுமோ என்ற பயம்தான் காரணம்.

சாதாரண விபத்துக்கே இப்படி என்றால், பலமான காயங்கள் ஏற்பட்டிருந்தால், என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். இந்த இடத்தில் மனித நேயம் அடிபட்டுப் போகிறது. ஆனால் இந்த மனோபாவம் சரிதானா? நாம் ஒரு உதவியை மனித நேய அடிப்படையில் செய்யத் தயங்கினால் நம் மனச்சாட்சி உறுத்தாதா?

முடிந்தவரையில் விபத்துகளின்போது ஒருவருக்கு உதவுவது சிறந்தது. ஆனால் இன்றுள்ள அவசர கதி வாழ்க்கையில் ஒருவர் இதற்காக தன் நேரத்தை ஒதுக்க முடியுமா என்பது ஒரு பதில் சொல்ல முடியாத கேள்வியாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி கருத்து கூறுங்கள்.

திங்கள், 1 ஜூலை, 2013

ஒரு மூத்த பதிவரின் புலம்பல்கள்

நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல்  - குறள் 948

பதிவெழுதுவது ஒரு பைத்தியமாக மாறிக்கொண்டு வருகிறது. எப்பொழுதும் சிந்தனை, அடுத்த பதிவு எப்பொழுது, எதைப்பற்றி என்பதைச் சுற்றியே வந்துகொண்டு இருக்கிறது. இந்த மாதிரிப் பைத்தியம் கல்யாணத்திற்கு முன்பு எங்கள் கிளப்பில் சீட்டு விளையாடினபோது வந்தது. மிகவும் சிரமப்பட்டு அதை குணப்படுத்தினேன்.

பதிவு போட்ட பின், பின்னூட்டம் வந்திருக்கிறதா, எத்தனை ஹிட்ஸ் வந்திருக்கிறது என்று பலமுறை பார்க்கத் தோன்றுகிறது. தமிழ்மணம் ரேங்க் எவ்வளவில் இருக்கிறது என்று தினந்தோறும் பார்க்கிறேன். ரேங்க் குறையக் குறைய ஏற்படும் மகிழ்ச்சி, அந்த ரேங்க் அதிகமாகும்போது துக்கமாக மாறுகிறது.

மற்றவர்கள் போடும் பதிவுகளின் தலைப்புகளை மட்டும்  நுனிப்புல் மேய்கிறேன். வெகு சில பதிவுகளை மட்டும் படித்து பின்னூட்டம் போடுகிறேன். ஆழமான படிப்பிற்கான பதிவுகள் அபூர்வமாகத்தான் எழுதப்படுகின்றன. அவைகளை ஆழமாகப் படிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டு வருகிறேன்.

பேப்பரில், பேனாவினால் எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டது போன்று தோன்றுகிறது. ஒரு வித்தியாசத்திற்காக இந்தப் பதிவை முதலில் பேப்பரில் எழுதி பிறகு கம்ப்யூட்டரில் அச்சிடுகிறேன். யாருக்கும் கடிதம் எழுதுவது என்பது மறந்தே போய்விட்டது. யாரிடமிருந்தும் கடிதங்கள் வருவதும் இல்லை. தபால்காரனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்த காலங்கள் மறந்தே போனது.

தூங்கி எழுந்ததும் கம்ப்யூட்டருக்கு முன்னால் உட்கார்ந்து இணையத்தைப் பார்க்கத் தோன்றுகிறதே தவிர வேறு ஒரு வேலையையும் செய்யத்தோன்றுவதில்லை. புத்தகங்கள் படித்து வெகு காலம் ஆகிவிட்டது. ஆரணி குப்புசாமி முதலியார் மற்றும் வடுவூர் துரைசாமி அய்யங்கார் துப்பறியும் கதைகளை நடு ஜாமம் வரை படித்துவிட்டு, பின்பு பயத்தினால், ஒன்றுக்கு கூடப் போகாமல்,  தூக்கம் வராமல் கிடந்தது, ஏதோ போன ஜன்மத்தில் நடந்தது போல் இருக்கிறது.

பிரசங்கங்கள், கதா காலக்ஷேபங்கள், சங்கீதக் கச்சேரிகள், நாட்டியம், சினிமா ஆகியவற்றில் எனக்கு அபரிமிதமான பற்று ஒரு காலத்தில் இருந்தது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. எங்கள் ஊரிலேயே  குமுதம் பிரதியை, முதல் ஆளாக, ஒவ்வொரு வாரமும் (அதற்கு முன்பு மாதம் மும்முறை)  விநியோகஸ்தர் பார்சலைப் பிரித்ததும்  வாங்கி, வீட்டிற்கு வருவதற்குள் அதை நடந்துகொண்டே படித்து முடித்தவன் நான் என்று சொன்னால் என் பேரப் பிள்ளகள் நம்ப மறுக்கிறார்கள்.

யூட்யூபில் இருந்து ஆயிரக்கணக்கான கர்னாடக இசைப் பாடங்களை டவுன்லோடு பண்ணி கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கிறேன். அவைகளை எப்போது கேட்பேன் என்று சொல்ல முடியவில்லை. அநேகமாக அடுத்த ஜன்மத்தில் முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். நாய் பெற்ற தங்கப் பழம் கதைதான்.

நல்லவேளை. பேஸ்புக், ட்விட்டர், செல்போன், எஸ் எம் எஸ், டி.வி. சீரியல், சினிமா விமரிசனம் எழுதுதல் ஆகியவைகளில் நான் சிக்கவில்லை. அப்படி சிக்கியிருந்தால் என்னை ஏர்வாடி தர்காவில்தான் சந்தித்திருக்கமுடியும்.

இது ஒரு  சரியான மனப்பிறழ்தல் நோய். உங்களுக்கும் இருக்கலாம். ஒரு பிரச்சினையை உணர்வதே அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுவதில் முதற்படியாகும். முதற்படி எடுத்து வைத்தாகிவிட்டது. எப்படியும் தீர்வை அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.