வெள்ளி, 31 டிசம்பர், 2010

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்




புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்பிய அத்துணை நல்ல இதயங்களுக்கும் மனமார்ந்த நன்றி தனித்தனியே வாழ்த்துக்கள் அனுப்ப இயலவில்லை. மன்னிக்கவும்.

ஒரு முக்கிய அறிவிப்பு. நாளை புத்தாண்டு தினத்தன்று நானும் என் நண்பர் ஒருவரும் காரைக்காலில் நடக்கவிருக்கும் ஒரு சதாபிஷேக வைபவத்தில் கலந்து கொள்ளச் செல்கிறோம். வழக்கம்போல் போட்டோக்களும் விவரங்களும் இந்தப் பதிவில் வரும். அதைத் தவறாது பார்க்கவும். அப்படிப் பார்ப்பவர்கள் எல்லோரும் தங்கள் சதாபிஷேகத்தை மக்கள், மருமக்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்திகளுடன் கொண்டாடுவார்கள் என்பதற்கு நான் உறுதி கூறுகிறேன்.

வியாழன், 30 டிசம்பர், 2010

மண்ணும் மண் வளமும்.

என்னுடைய இந்த http://swamysmusings.blogspot.com/2010/12/blog-post_28.html பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம்: அதற்கான பதில்களை சுருக்கமாக கொடுத்திருக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

சார், இது குறித்து இன்னும் விளக்கமாக எழுதுங்களேன். இப்போ நீங்கள் எழுதியிருப்பது புரிகிறது. ஆனால், இயற்கை விவசாயம் செய்யவே முடியாது என்று நீங்கள் சொல்லவில்லை, இல்லையா?

உங்கள் ஆர்வம் பாராட்டுக்குடையது. விவசாயக்குடும்பத்தில் இருந்து வந்ததினால் இந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. விவசாய சம்பந்தமான பல வலைத்தளங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே உங்களுக்குப் பதில் சொல்லும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

இயற்கை விவசாயம் செய்யமுடியும். ஆனால் அதைப்பற்றிய போதுமான விவரங்கள் இன்னும் வெளி வரவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக வெளிவரும் பேட்டிகளை மட்டும் வைத்து நாம் ஒரு முடிவுக்கும் வர முடியாது, வரவும் கூடாது.

ரசாயன உரங்கள் இரண்டாம் உலகப்போர் நடக்கும் காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அது வரையிலும் இயற்கையாகக் கிடைக்கும் இடுபொருள்களைக் கொண்டுதான் விவசாயம் நடந்து கொண்டு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு மகசூல் கிடைத்தது என்பதைப்பற்றி துல்லியமான புள்ளி விபரம் வேண்டுமென்றால் கிடைக்கும். அது மிகவும் குறைவாக இருந்தது என்று மட்டும் தெரிந்தால் இப்போதைக்குப் போதும். அந்த கால கட்டத்தில் உணவுப் பஞ்சங்கள் இருந்தன என்பதை நினைவில் கொண்டால் போதும்.

விளைச்சலை அதிகப்படுத்தவேண்டும் என்பதுதான் ரசாயன உரங்களை அறிமுகப்படுத்தியதன் நோக்கம். அது சுற்றுச் சூழலை எந்த அளவிற்கு பாதிக்கும் என்ற தெளிவு அப்போதைக்கு இல்லை. பிறகுதான் அதைப்பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளிலிருந்து கண்டுபிடித்தது என்னவென்றால், வரை முறையில்லாமல் ரசாயன உரங்களை உபயோகித்தால் மண்ணின் வளம் பாதிக்கும், விளையும் மகசூலின் தரம் குறையும் என்பதாகும்.

ஒரு உதாரணம் சொன்னால் இது நன்கு விளங்கும். ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் உடனடியாக அதிக சக்தி வேண்டுமென்பதற்காக குளுகோஸ் சாப்பிடுவார்கள். உடனடியான ஓட்டத்திற்கு வேண்டிய சக்தியை அந்த குளுகோஸ் கொடுக்கும். ஆனால் அந்த வீரருடைய உடம்பு சரியான உணவுகள் சாப்பிட்டு நல்ல திடகாத்திரமாக இருக்கவேண்டும். ஒரு நோஞ்சான் உடம்புக்காரரை குளுகோஸ் சாப்பிடச் செய்து ஓட்டப்பந்தயத்தில் ஓடச்செய்தால் அவர் ஜெயிப்பாரா? மாட்டார்.

அது போலத்தான் மண்ணும். மண் என்பது வெறும் உயிரற்ற பாறைத்துகள்கள் அல்ல. அது ஒரு உயிருள்ள, நம்மைப் போலவே வாழும் ஒரு பொருள். அது எப்படி வாழ்கிறது என்றால், அந்த மண்ணில் ஒரு சதம் அங்ககப்பொருள் (Organic matter) இருக்கிறது. அந்த அங்ககப்பொருளும் மண்ணின் துகள்களும் இணைந்து இருக்கின்றன. இதற்கு clay-humus complex என்று பெயர். இதுதான் மண்ணின் உயிர். இதில்தான் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. அவைகளின் செயலால்தான் பயிர்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கின்றன.

ரசாயன உரங்கள் போடுவதுடன், போதுமான இயற்கை உரங்களையும் போட்டு வந்தால் மண்ணின் வளம் கெடாமல் இருக்கும். வெறும் ரசாயன உரங்களை மட்டும் போட்டு வந்தால் நாளாவட்டத்தில் மண்ணின் வளம் குறைந்து மண்ணின் தன்மை மாறிவிடும். இந்தத் தத்துவத்தை விவசாய மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் பல காலம் முன்பே கண்டு பிடித்துள்ளார்கள். இந்த உண்மை எல்லா ஆராய்ச்சி இதழ்களிலும் புத்தகங்களிலும்
இருக்கிறது. இதையெல்லாம் படித்துத்தான் நாங்கள் பட்டம் வாங்கினோம்.

இந்த உண்மை முன்பே உங்களுக்கு, அதாவது விவசாய ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியமல்லவா? இதை மாற்ற ஏன் எந்த முயற்சியும் நீங்கள் எடுக்கவில்லை என்று கேட்கலாம்? ஐயாமார்களே, அம்மாமார்களே, இந்த உண்மையை காலம் காலமாக எல்லா மேடைகளிலும், பத்திரிக்கைகளிலும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம் மக்களின் மனப்பான்மை என்னவென்றால் நல்லது எதையும் கேட்கமாட்டார்கள். தங்கள் அரசியல் தலைவியை கைது செய்து விட்டார்கள் என்று கேட்டவுடன் விவசாய மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தைக் கொளுத்தி மூன்று மாணவிகளை உயிரோடு எரித்த சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். அந்த உணர்ச்சி வேகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு, ஆக்கபூர்வமான செயல்களைச் செய்வதில் இருந்தால் நம் நாடு ஒரு வல்லரசாக என்றோ ஆகியிருக்கும்.



புதன், 29 டிசம்பர், 2010

ஈரோட்டுக்காரரின் கோவை ஆக்கிரமிப்பு

ஈரோட்டுக்காரரான அருண் என்னும் வால் பையன் கோவைக்கு வந்து செய்திருக்கும் ஆக்கிரமைப்பைப் பார்க்கவும்.







மேலும் விபரங்களுக்கு இந்த சுட்டியைப்பார்க்கவும்.
http://valpaiyan.blogspot.com/2010/12/blog-post.html







செவ்வாய், 28 டிசம்பர், 2010

தாய்ப்பாலில் விஷம் ?


ஈரோடு பதிவர் சந்திப்பு பற்றி கக்கு - மாணிக்கம் said...

அதுசரி.......ஈரோடு பதிவர் சந்திப்புக்கு போகாமல் இங்கே உட்கார்ந்து கொண்டு இன்னும் பதிவு எழுதுகிறீர்களே.
26 December 2010 14:13

***** மாணிக்கம் என் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டை சுமத்திவிட்டார். *****

ஈரோடு பதிவர் சந்திப்புக்கு போய் வந்து விட்டேன், மாணிக்கம். ஒரு பதிவும் போட்டுவிட்டேன். நான் எடுத்த படங்கள் அனைத்தையும் வலையில் ஏற்றி அதற்கான சுட்டியையும் அதில் கொடுத்து விட்டேன். கொஞ்சம் போய் வந்த அலுப்பு தீர்வதற்காக தூங்கி எழுந்து பார்த்தால், நான் எழுதலாம் என்று யோசித்து வைத்திருந்தது அனைத்தையும் பலரும் எழுதித் தீர்த்து விட்டார்கள். குறிப்பாக கதிரும், “பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்”. அதற்கு மேல் எழுத என்னிடத்தில் விஷயம் ஒன்றுமில்லை.

விழாவை நன்கு திட்டமிட்டு நடத்திய கதிருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எனக்கு ஒரு குறைபாடு உண்டு. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமலேயே இது நாள் வரையிலும் சமாளித்து விட்டேன். ஆனால் அதை இப்போது சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என் மூளையின் ஒரு பகுதியில் களிமண் இருக்கிறது. அது எந்தப் பகுதி என்றால் - சந்திக்கும் மனிதர்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக்கொள்ளும் பகுதி. சம்பவங்கள் ஞாபகம் இருக்கும் அளவிற்கு பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. அதனால் நான் ஈரோடு பதிவர் சங்கமத்தில் பலரை சந்தித்தபோதும் ஒரு சிலரின் முகங்கள் மட்டுமே பெயருடன் ஞாபகம் இருக்கிறது. அதனால் என்னால் சரளமாக சங்கமத்தின் விவரங்களை பதிவு போட இயலவில்லை. அனைவரும் என் வயதை மனதில் கொண்டு இந்த குறையை மன்னிக்க வேண்டுகிறேன்.

நான் சந்தித்த பலரும் என்னை நினைவு கூர்ந்து பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

*********************************************************************************************************************

இனி நம் சப்ஜெக்ட்டுக்கு வருவோம். அதாவது இயற்கை வழி விவசாயம்.

போன பதிவிற்கு வந்த சில பின்னூட்டங்களைப் பார்ப்போம்.

கலாநேசன் said...

விவசாயத்திற்கு பூச்சிமருந்து பயன்படுத்தித்தான் இன்று தாய்ப்பாலிலும் விஷம் கலந்தோம் நாம். முற்றிலும் இயற்கையான விவசாயம் நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும் முடிந்தவரை முயலலாமே...

26 December 2010 06:15

ஆரண்ய நிவாஸ்ஆர்.ராமமூர்த்தி said...

எல்லாம் நடக்கும்.. நாம் மனது வைத்தால்...

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

shammi's blog said...

very true sir , its easy to say but its hard to follow, even now organic foods are available in the market Only the persons could afford to, buy them, Just as ages passed, we could not go to neolithic era, but still we could try to minimize the use of certain seeds like Monsanto's hybrid brinjal, and so on. Yeah, what you said is true if its on the greener side its far better but as you ended just some are interested, not all...nice article sir ...thanks for sharing.

26 December 2010 18:50

வாசிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இங்கு நான் என் அனுபவத்தில் கற்றுக்கொண்டவைகளை உங்களுடன் பங்கிடுகிறேனே தவிர, இந்த இயற்கை விவசாயத்தில் நான் ஒரு சர்வதேச நிபுணன் இல்லை. என்னுடைய கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கும். அவை சரியாகவும் இருக்கலாம். நான் விரும்புவது, இந்த சப்ஜெக்ட் அனைவருடைய கவனத்திற்கும் சென்றால் போதும். ஒரு ஆரோக்கியமான விவாதத்தை வைத்துக் கொள்வோம். என்னுடைய கருத்துத்தான் சரி என்கிற உடும்புப் பிடிவாதம் தேவையில்லை. என்னுடைய கருத்துகளுக்கு எந்த விதமான பின்னூட்டங்களும் போடலாம். பதில் சொல்ல முடிந்தால், தெரிந்தால், சொல்லுகிறேன். முடியாவிட்டால் முடியவில்லை என்று சொல்லி விடுகிறேன். எல்லாவற்றையும் எல்லோராலும் தெரிந்து வைத்திருப்பது முடியாத காரியமல்லவா?

முதலில் கலாநேசன் கருத்தை எடுத்துக்கொள்வோம். பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிப்பதால் அந்த மருந்து, அந்தப் பயிரிலிருந்து விளையும் பொருள்களில் சேர்ந்து, அவைகளை தாய் சாப்பிடும்போது அவள் உடம்பில் சேர்ந்து. பிறகு அது தாய்ப்பால் மூலமாக குழந்தைக்குப் போய் சேருகிறது என்று சொல்கிறார். இந்த வாதம் சரியானதுதான். ஆனால் அவ்வாறு சேரும் பூச்சி கொல்லி மருந்தின் அளவு என்ன?, அதனால் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ ஏற்பட்ட தீங்குகள் என்ன? என்று ஏதாவது ஆராய்ச்சி செய்திருக்கிறாரக்ளா? அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் என்ன? இந்த விவரங்கள் தெரியாமல் அவசரமாக முடிவு செய்வது சரியில்லை. இந்த பூச்சி மருந்தை விஷம் என்று பொத்தாம் பொதுவாக சொல்வது மக்களுக்கு பயத்தை உண்டு பண்ணுவதற்காகத்தான் என்று நான் கருதுகிறேன். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதான். பாம்பின் விஷமும் குறைந்த அளவில் மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.

நாம் பொதுவாக எந்தப் பிரச்சினையையும் அறிவு பூர்வமாக அணுகாமல், உணர்ச்சி பூர்வமாக அணுகுகிறோம். இதனால் பிரச்சினை தீர்வதில்லை. உதாரணத்திற்கு, ஒரு தாய் கர்ப்பமாக இருக்கும்போது அவளுக்கு பலவிதமான சத்து மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. அவைகளை குறிப்பிட்ட அளவில் சாப்பிட்டால்தான் மருந்தாக வேலை செய்யும். அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும். அதற்காக அந்த மருந்துகளை சாப்பிடக்கூடாது என்று சொல்லலாமா? சாதாரணமாக சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளும் உப்பே அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் விஷம்தான்.

இன்னொன்றை சொல்ல விரும்புகிறேன். பெரிய நகரங்களில் இப்போது வாகனங்கள் வெளிவிடும் புகை சர்வதேச அனுமதிக்கப்பட்ட அளவை விட பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. அதைக்குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் அதை நாம் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இது போன்று பல விஷயங்கள் இருக்கின்றன. முடிந்த வரையில் அதன் தீமைகளைக் குறைக்க விஞ்ஞானிகளும் அரசுகளும் தொடர்ந்து முயற்சி எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதுதான் இன்று இருக்கும் நடைமுறை உண்மை. மனது வைத்தால் மாற்ற முடியும் என்று ஆர்.ஆர்.ஆர். சொல்கிறார். நான் மறுக்கவில்லை. கமலஹாஸன் தசாவதாரத்தில் கடவுளைப்பற்றி சொல்கிற மாதிரி நான் சொல்ல வருவது என்னவென்றால் : இந்த தீங்குகளை அகற்றுவதற்கு நான் எதிரியில்லை. அகற்றினால் நன்றாக இருக்கும், ஆனால் அது சாத்தியமில்லை என்றுதான் சொல்கிறேன்.

இது ஒரு எதிர்மறை கருத்து என்று என் மீது குற்றம் சுமத்தலாம். வரலாற்று உண்மைகளை உணர்ந்து, எதை நடைமுறைக்கு கொண்டு வரமுடியும், எதைக் கொண்டு வர முடியாது என்று சிந்தித்து, பிறகு என் கருத்துகளைக் குறை கூறுங்கள்.

தொடரும்….

திங்கள், 27 டிசம்பர், 2010

ஈரோடு பதிவர் சங்கமம் - 1


ஈரோடு பதிவர் சங்கமத்திற்கு போய்விட்டு வந்தேன். விழாவைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் = விழா வெற்றி, மாபெரும் வெற்றி, வரலாறு காணாத வெற்றி, பதிவுலக சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி. அவ்வளவுதானுங்க.

விரிவாக எழுதுவதற்கு முன்பாக எனக்குப்பிடித்ததைப்பற்றி முதலில் எழுதுகிறேன்.

செவிக்குணவு இல்லாத போழ்தில் சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.

செவிக்குணவு இன்னும் ஜீரணமாகவில்லை. ஆகவே அதை அப்புறம் பார்ப்போம்.

வயிற்றுணவைப் பற்றி முதலில் பார்த்து விடுவோம். பாருங்க. எழுத்தெல்லாம் எதுக்குங்க?

காலை சிற்றுண்டி களம் ?


முட்டைல என்னென்னமோ பார்த்திருப்பீங்க. முட்டை பூரிய பார்த்திருக்கீங்களா?


மதிய உணவு. இடமிருந்து வலமாக மூன்றாவது இருப்பதுதான் உலகிலேயே தலை சிறந்த பதிவர் ( நான்தானுங்க அது, ஹிஹீஹி..)


நாமக்கல்லில் ஒரு கோழிப்பண்ணையே காலி !

ஆனாப் பாருங்க, மீட்டிங் முடியறதுக்குள்ள அத்தனையும் ஜீரணமாகிட்டுதுங்க. புறப்படறப்ப கொஞ்சம் ஊட்டுக்கு கட்டிட்டிப் போலாம்னு பாத்தா சமையலறைல எல்லாத்தையும் கழுவிக் கமுத்துட்டுப் போயிட்டாங்க. நமக்கு கொடுப்பினை அவ்வளவுதான். ஆனா பாருங்க, அடுத்த வருஷம் உஷாரா மொதல்லயே பார்சல் பண்ணீடுவமில்ல !

நான் எடுத்த எல்லா படங்களையும் பார்க்க இங்கே செல்லவும். அல்லது இங்கே பார்க்கவும்

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

குதிரைக்கு குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம்தானே?



இயற்கை விவசாயம். இதற்கு எதிர்ப்பதம் என்ன? செயற்கை விவசாயம். சரிதானே! இந்த இரண்டு வார்த்தைகளையும் மறந்து விடாதீர்கள். நம்முடைய விவாதத்திற்கு இந்த இரண்டு வார்த்தைகளும் மிகவும் முக்கியம்.

முதலில் இயற்கை விவசாயம் என்றால் என்ன என்று பார்ப்போம். இன்று இயற்கை விவசாயத்தை ஆதரிப்பவர்கள் எல்லோரும் சொல்வது. விவசாயத்தில் இயற்கையாக கிடைக்கும் பொருள்களை மட்டும் உபயோகித்து பயிர் செய்வது. அதாவது உரத்தை எடுத்துக்கொண்டால், தொழு உரம், கம்போஸ்ட் உரம், பசுந்தாள் உரம், எண்ணைவித்து புண்ணாக்குகள், இப்போது பிரபலமாக இருக்கும் பஞ்சகவ்யம், இவை போன்றவைகளை மட்டும்தான் பயிர்களுக்கு உபயோகப்படுத்த வேண்டும். பயிர்களுக்கு பூச்சி, நோய் வந்தால் வேப்பெண்ணை, நோய் கண்டு இறந்த பூச்சிகளிலிருந்து எடுக்கப்படும் சாறு, இப்படிப்பட்ட தடுப்பு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.



விதைகளுக்கு எந்த ரசாயனப் பூச்சும் போடக்கூடாது. பயிர்கள் வளர்வதற்கு எந்த ரசாயன மருந்தையும் அடிக்கக் கூடாது. பஞ்சகவ்யம் மட்டும் அடிக்கலாம். பூக்கள், காய்கள் உதிர்வதைத் தடுக்க, பழங்கள் பெரிதாவதற்கு, களைகளை தடுப்பதற்கு என்று எந்தக் காரியத்திற்கும் ரசாயனங்களை உபயோகிக்கக் கூடாது. இந்த லிஸ்ட்டில் ஏதாவது விட்டுப்போயிருக்கலாம். ஆனால் பொதுவான கருத்து இதுதான். பண்ணைக்குள் எந்த ரசாயனமும் வரக்கூடாது. இயற்கைப் பொருள்களைக் கொண்டுதான் எல்லா வேலைகளும் நடக்கவேண்டும்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால், ரசாயனங்களை பயன் படுத்தினால் அவை பழம், காய், தானியங்கள் அவைகளில் சேர்ந்து நாம் சாப்பிடும்போது நம் உடலில் சேர்ந்து விஷமாக மாறிவிடுகின்றது. நாளாவட்டத்தில் இந்த விஷம் அதிகரிப்பதினால்தான் இன்று இவ்வளவு டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள். இயற்கை விவசாயம் செய்து அதிலிருந்து வரும் மகசூலை மட்டும் சாப்பிட்டால் மனிதனுக்கு நோய் வராது. வந்தாலும் அதை குணப்படுத்த இயற்கை வைத்தியம் இருக்கிறது. இப்போது கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் டாக்டர்கள் எல்லாம் மம்மட்டியை தூக்கிக்கொண்டு இயற்கை விவசாயம் செய்யப் போக வேண்டியதுதான்.

இதைப் படிக்கும் ஐயாமார்களே, அம்மாமார்களே, சிறுவர் சிறுமிகளே, இப்படிப்பட்ட நிலைமை வந்தால் எப்படியிருக்கும்? பூலோகத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்கலாம். எல்லோரும் மிகவும் ஆரோக்யமாக இருப்பார்கள். எல்லோருடைய ஆயுளும் நூறு வயது வரைக்கும் நீடிக்கும். இன்னும் என்னென்னவோ நன்மைகள் எல்லாம் சித்திக்கும். அத்தனையையும் எழுதினால் இடம் போதாது என்பதால் அவைகளை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். எனக்கு இப்போதே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. “அந்த நாளும் வந்திடாதோஎன்று பாடலாம் போல இருக்கிறது.

இந்தப் பதிவில் என்னமோ நக்கல் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அதில் தவறு ஒன்றுமில்லை. அதனால் நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி என்று கணக்குப்போடாதீர்கள். நான் இயற்கை விவசாயத்தை முழுவதுமாக ஆதரிக்கிறேன். என்னுடைய ஒரே கவலை என்னவென்றால், இது நடைமுறைக்கு ஒத்து வருமா என்பதுதான். ஏன் நடக்காது? மனிதன் மனது வைத்தால் நடக்காதது ஒன்றுமில்லை என்று ஆணித்தரமாக சொல்பவர்கள் ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் எத்தனை காலமாக வறுமையை, ஊழலை, லஞ்சத்தை, ஜாதியை, குழந்தைத் தொழிலாளர்களை, கலப்படங்களை, இன்னும் எத்தனையோ சமூக விரோத செயல்களை ஒழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

நடக்குமா ? நடக்காதா ? பொறுத்திருந்து பாருங்கள்.



இதுக்கு என்ன பேரு வைக்கலாம்?