ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

மதியும் விதியும்

விதி, விதி என்று அடிக்கடி பேசுகிறோம். ஆனால் அது என்ன என்று தீவிரமாய் சிந்தித்திருக்கிறோமா
 
உதாரணத்திற்கு, நாம் நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு செயல் செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு இரண்டு வழிகள் தென்படுகின்றன. ஏதோ ஒரு வழியை தேர்ந்தெடுக்கவேண்டும். அதன் பின் விளைவுகள் என்னவென்று தெரியாது. இந்த நிலையில் பொதுவாக எல்லோரும் தம்முடைய அனுபவத்தின் காரணமாக ஒரு வழியைத் தேர்வு செய்வோம். விளைவு சாதகமாக இருந்துவிட்டால் ஆஹா, நாம் தேர்ந்தெடுத்த வழி நல்ல வழி என்று திருப்திப் பட்டுக்கொள்வோம். இல்லையென்றால் ஆஹா, இந்த வழியை ஏன் தேர்ந்தெடுத்தோம்? என்று வருத்தப்பட்டுக்கொள்வோம்

நடைபெற்ற செயல் சாதாரணமானதாக இருந்துவிட்டால் சீக்கிரமே அதை மறந்துவிடுவோம். ஆனால் அதுவே வாழ்வா-சாவா என்ற ஜீவமரணப் பிரச்சினையாக இருந்து, நடந்த விளைவு மிகவும் மோசமானதாக இருந்தால் மனம் வருந்தி சோர்வில் ஆழ்ந்து, மனிதன் உடைந்துபோய், ஒன்றுக்கும் உதவாதவனாய் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது

அதாவது, குற்ற உணர்வு மேலோங்கி, சுய பச்சாத்தாபத்தில் மூழ்கி தீவிர மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இங்குதான் ஒரு மனோதத்துவ ஆறுதலை பெரியவர்கள் ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிறார்கள்.

குழந்தை கீழே விழுந்து அழுது கொண்டு வந்தால் அம்மா என்ன செய்கிறாள்? குழந்தையை, அது கீழே விழுந்த இடத்திற்கு கூட்டிப்போய், அந்த இடத்தை குச்சியால் இரண்டு அடி கொடுத்தால் குழந்தை சமாதானமாகி விடுகிறது. நாமும் வளர்ந்த குழந்தை மாதிரிதான். நமக்கும் இந்த மாதிரி நொண்டி சமாதானம் மன ரீதியாகத் தேவைப்படுகிறது. நடந்தது நம் விதிப்பயன், நாம் என்ன முயன்றிருந்தாலும் இந்த விளைவு ஏற்பட்டேயிருக்கும் என்ற தத்துவத்தை நம் மனதில் ஆழமாக ஏற்றியிருப்பதால், அதைச்சொல்லி சமாதானப்பட்டுக் கொள்கிறோம்.

நம் சுய பச்சாத்தாபத்தை மாற்ற இதைவிட வேறு உபாயம் இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் இந்த சமாதானத்தின் உட்பொருளை விளங்கிக்கொண்டிருந்தால் சரி. இல்லாமல் முழு மூடத்தனமாக என்னுடைய எல்லாச் செயலையும் விதிதான் நிர்ணயிக்கிறது என்று எண்ணி செயல்களைச் செய்வானானால் விளைவுகள் மோசமாக இருக்கும். அவன் வாழ்வு சிறப்பாக இருக்காது.


செல்போன் பேசிக்கொண்டு ரயில் தண்டவாளத்தைக் கடந்த பெண்ணும், காரை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்குபவர்களும் இவ்வாறு தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஆவார்கள். நமக்கு இயற்கை கொடுத்திருக்கும் மதியைப் பயன்படுத்தி வாழ்க்கையை நடத்த வேண்டும். இதைத்தான் பெரியவர்கள் விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

சலீசாக ஊட்டி சீசனைப் பார்க்க வேண்டுமா?

 
கோவைக்கு வாருங்கள். என்றுமில்லாத அதிசயமாய் நேற்று இரவு முதல் மழை பெய்து சும்மா ஜிலுஜிலுவென்று இருக்கிறது. இதைப் பார்த்துத்தான் வெள்ளைக்காரன் "ஏழைகளின் ஊட்டி" என்று பெயர் வைத்திருக்கிறான்.

இதைப் பார்த்து விட்டுத்தான்  வேறு மாவட்டங்களிலிருந்து கோவைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் எல்லாம் பணக்காரர்களாகி, இங்கனயே வூடு கட்டிக்கினு, கோயமுத்தூர்க்காரனையெல்லாம் வெளியூருக்கு அனுப்பிச்சிட்டிருக்கான்.

டெம்ப்ளேட் கமென்ட்டுகள்.


பதிவுகள் எக்கச்சக்கமாகி விட்டன. எல்லாப் பதிவுகளையும் படிக்க நேரம் போதவில்லை. எல்லாப்பதிவர்களும் தங்கள் பதிவுகளில் ஓட்டுப் போடவும், பின்னூட்டம் போடவும் வற்புறுத்துகிறார்கள். ஒரு மரியாதைக்காக ஓட்டுப் போடலாம் என்று பார்த்தால் ஓட்டுப்பெட்டிகள் ஏழு தலைமுறை ஜாதகத்தைக் கேட்கின்றன. 
 
அது போகட்டும், பின்னூட்டமாவது போடலாம் என்று பார்த்தால் அந்த சமயம் பார்த்து நம் மூளை (இருந்தால்தானே என்பவர்களுக்கு தனியாக ஒரு பதிவு போடுகிறேன்) அந்த சமயம் பார்த்து ஊர் மேயப்போய் விடுகிறது. அப்டிப்பட்ட சமயங்களில் உதவுவதற்காக சில “டெம்ப்ளேட்” கமென்ட்டுகளை இங்கே தொகுத்து அளித்திருக்கிறேன். உசிதம் போல் உபயோகித்துக் கொள்ளவும். நன்றி எல்லாம் வேண்டாம். இதுநாள் வரை சேர்ந்த நன்றிகளே வீடு கொள்ளாமல் வாசலில் போட்டு வைத்திருக்கிறேன்.


1.     ரொம்ப நல்லா இருக்கு :-)
2.     very interesting video. :-)
3.     நல்லாயிருக்கு... சகோதரா
4.     போடு முத வெட்டை
5.     ரசிக்க வைத்த வரிகள்
6.     நச் வரிகள்
7.     சூப்பர்! கலக்கிட்டீங்க பாஸ்!
8.     நல்லாய் இருக்கு சார்
9.     arumaiyana pathivu....
10.  மீ த பர்ஸ்ட்டேய்...
11.  mmmmmm....
12.  என்ன சொல்வதென்றே தெரியவில்லை……………………கலக்குங்க பாஸ்..
13.  செம நக்கல். ஆட்டோ வர போகுது பாத்து பத்திரமா இருங்க ....:))
14.  நல்ல பதிவு . . . நன்றி . . .
15.  i got the vada
16.  ஆட்டோ கன்பார்ம்...
இவ்வளவு போதும்னு நினைக்கிறேன். கும்மி அடிப்பது தனிக்கலை. அதைப்பற்றி பின்னால் ஒரு ஸ்பெஷல் பதிவு போடுகிறேன்.

ரொம்ப ரொம்ப நல்ல பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள்.
17.  0 comments:


 பின்குறிப்பு:  ஒரு  அட்டகாசமான (அக்கிரமமான ?) படம் போட்டிருந்தேன். படம் நல்லா இல்லைன்னு நாலு பேரு சொன்னதால படத்தை மாத்தீட்டேன்.

சனி, 19 பிப்ரவரி, 2011

முதுமையை எதிர்கொள்ள பத்து அம்சத்திட்டம்.முதுமை தவிர்க்க முடியாதது. முதுமையைச் சந்திக்கத் தகுந்த திட்டமிடல் இருந்தால் முதுமையையும் சந்தோஷமாக அனுபவிக்கலாம். அதற்கு உதவும் சில கருத்துக்கள்.

1.   முதுமையில் பணம் மிகவும் அவசியம். வாழ்நாளில் சேமித்தது எல்லாவற்றையும் மக்களுக்காக செலவழித்த பிறகு, மக்கள் பெற்றோரை புறக்கணிக்கும் சம்பவங்கள் ஏராளம்.


2.   உங்கள் வருமானத்தில் பாதி தொகையில் உங்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை முடித்துக் கொள்ளவேண்டும். மீதி பாதியைச் சேமித்தால், அதில் பாதி எதிர்பாராத செலவுகளுக்காகத் தேவைப்படும். மீதிப்பாதிதான் உண்மையான சேமிப்பாக அமையும்.


3.   முதியவர்கள் தங்கள் சுய சம்பாத்தியத்தில் சேர்த்தவை, பரம்பரையாக வந்த சொத்துக்கள் இவற்றை தமக்குப் பிறகு யார் யாருக்கு எவ்வளவு என்று பிரித்து தெளிவாக உயில் எழுதி, சாட்சிகள் கையொப்பமிட்டு, ரிஜிஸ்டர் செய்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. உயிலில் என்ன எழுதியிருக்கிறோம் என்பது சம்பந்தப் பட்டவர்களுக்குத் தெரிந்திருப்பது நல்லது.

4.   வங்கியிலிருந்து அதிகத் தொகை எடுத்து வரவேண்டியிருந்தால் நம்பகமான ஒருவரைத் துணைக்கு அழைத்துச் செல்லவும்.


5.   தடுமாற்றமுள்ளவர்கள் கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்களிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. காலையில் படுக்கையிலிருந்து வேகமாக எழுந்திருக்காமல், முதலில் அரை நிமிட நேரமாவது படுக்கையில் உட்கார்ந்த பிறகு மெதுவாக எழுந்து நடக்க வேண்டும்.

6.   வழவழப்பான தரை, பாத்ரூமில் ஈரமான தரை, மார்பிள் தளம் போன்றவற்றால் நிலை தடுமாறி விழும் நிலை தோன்றலாம். டெலிபோன் அழைப்புக்குக் கூட வேகமாகச் செல்லாமல் நிதானம் கடைப்பிடிப்பது நல்லது.


7.   உடற்பயிற்சி மேற்கொள்வதால் உடலில் இரத்த அழுத்தம் குறையும், எலும்புகள் வலுப்பெறும், மலச்சிக்கல் தோன்றாது. நல்ல தூக்கம் வரும்.

8.   சிலர் மரணபயத்தால் நிலை குலைந்து தவிப்பார்கள். இவர்கள் மனநல மருத்துவரைக் கலந்து தகுந்த ஆலோசனைகள் பெறுவது நல்லது. மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


9.   உணவு முறைகளில் வயதுக்கேற்ப மாற்றம் தேவை. வயது கூடும்போது ருசி மாறும், பசி குறையும், உண்ணும் உணவின் அளவும் மாறுபடும். காலையில் அதிகமாகவும், பகலில் மிதமாகவும், இரவில் குறைவாகவும் உணவு உண்ணவேண்டும்.

10. பற்றற்ற வாழ்க்கை வாழப்பழகிக் கொள்ளவேண்டும். தியானம் மூலம் மன அமைதி பெறலாம். சகிப்புத்தன்மை கூடும், உடல் நலம் பாதுகாக்கப் படும்.

வியாழன், 17 பிப்ரவரி, 2011

பாலமலை அரங்கநாதர் கோவில் (கோயமுத்தூர் மாவட்டம்)


கொஞ்சம் தத்துவம் = கடனைத் திருப்பித்தர அதிக நாள் எடுத்துக் கொள்ளக் கூடாது. காரணம்வட்டி அதிகமாக ஏறிவிடும். அதே மாதிரி உடம்பில் அழுக்கு சேர விடக்கூடாது. நோய் நொடிகள் வரும். ஆகவே அவ்வப்போது (நன்றாக கவனிக்கவும், தினமும் தேவை இல்லை) குளித்து அந்த அழுக்கை நீக்கிவிடவேண்டும். அதே போல் நாம் தினசரி சேர்த்துக் கொண்டிருக்கும் பாவங்களையும் அவ்வப்போது கழித்துவிடவேண்டும். அதிகமாகச் சேர்ந்துவிட்டால் அதைக் கழிப்பது கஷ்டமாய் விடும்

அதனால் இதுவரை சேர்ந்திருக்கும் பாவத்தை நீக்க நாங்கள் மூன்று நண்பர்கள் கோவைக்குப் பக்கத்தில் இருக்கும் பாலமலை அரங்கநாதர் கோவிலுக்குப் போய் வந்தோம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முதுமொழிக்கிணங்க அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 

போவதற்கு எளிய வழி, டவுன் பஸ்சில் போவதுதான். கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டேண்டிலிருந்து கோவனூர் என்ற ஊர் வரை (சுமார் 20 கி.மீ.தூரம்) பஸ்கள் அரை மணி நேரத்திற்கு ஒன்று இருக்கிறது. கோவனூர் பாலமலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர். அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் மலைப்பாதை ஆரம்பமாகிறது. மலைமேல் 4 கி.மீ. போகவேண்டும். இந்தப்பாதை முன்பு கல்லும் முள்ளுமான ரோடாக இருந்தது. இப்போது தார் ரோடு போட்டிருக்கிறார்கள். ரோடு அகலம் குறைவு. அதிக வளைவுகள் இருக்கின்றன. அதிக ஏற்றமாகவும் இருக்கின்றது. பழக்கப்பட்ட ஜீப் டிரைவர்கள்தான் இந்தப் பாதையில் செல்ல முடியும்.

கோவனூரில் டவுன் பஸ்சிலிருந்து இறங்கும் இடத்திலேயே இந்த ஜீப்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. ஆளுக்கு 20 ரூபாய் கட்டணம் மட்டுமே. இவைகள்தான் மேலே போகவர இயங்கிக்கொண்டு இருக்கின்றன. மாலை 7 மணிவரை சர்வீஸ் உண்டு 

கோவில் ஒரு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. சுற்றிலும் இயற்கைக் காட்சிகள் மனதைக் கவருகின்றன. கோவில் கருவறை சிறியதாக இருந்தாலும் பிரகாரம் விசாலமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தப் பிரகாரத்தில்தான் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் நடத்தியிருக்கிறார்கள். தற்போது அன்னதானத்திற்கு தனியாக ஒரு அன்னதானக்கூடம்பிரிகால்என்னும் கம்பெனியார் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

கோவிலுக்கு ஒரு புதுமையான ஸ்தலபுராணம் இருக்கிறது. பல ஸ்தலங்களில் கேட்டதுதான்.
ஸ்தலபுராணம்
முன்னொரு காலத்தில் ஒரு தொட்டியான் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான். காராம்பசுவின் மடியில் மாலைதோறும் பால் இல்லாமல் இருந்ததினால், மறுநாள் அதனைப் பின்தொடர்ந்து வரும்போது பாலைவனப்புதரில் சுயம்பின் பேரில் காராம்பசு பால் சொறிய, அதைக்கண்டு தொட்டியான் மயங்கி நின்றான். அசரீரியாய் பால்கொண்டு பூஜித்துவர வாக்களிக்க, அப்படியே பூஜித்து வந்தான். அக்காலத்தில் கௌதன்ய மகரிஷி கோத்திரத்தில் பிறந்தகாளிதாஸ்என்பவர் இந்த சுயம்புவைப் பெருமாளாகப் பாவித்து ஒரு பர்ணசாலை கட்டி நைவேத்ய பூஜை செய்நு வந்தார். பிறகுஉங்கணகவுடர்என்பவர் கூரை சாளை கட்டி பூஜிக்க, அவர் வம்சத்தில் பிறந்த நஞ்சுண்டகவுடர் அஸ்தகிரி, கோபகிரி, கெருடஸ்தம்பம், உற்சவ விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தி வந்தார். அதன் பின்னர் பாரஸ்டு கார்டு முனியப்ப பிள்ளை அவர்கள் கோவில் படிக்கட்டுகள் கட்டினார். மறுபடியும் உங்கணகவுடர் வம்சத்தில் தோன்றியவர்கள்அடியார் கோஷ்டியுடன் யோசித்துமண்டபம் கட்ட கல் எழுப்ப வசதி இல்லாததினால் பகவானைப் பிரார்த்திக்க, கீலக வருடம் வைகாசி மாதம் 15 ம் தேதி இரவு 15 நாளிகை அளவில் திடீர் என்று வேட்டு எழும்ப, அதிசயத்துப் போய் பார்க்க பாறை பாளம் பாளமாய் வெடித்திருப்பதைக் கண்டு ஆனந்தித்து, சிற்பிகளைக் கொண்டு கட்டிடம் கட்ட மணல் கிடைக்காததினால் வருத்தப்பட்டு இருந்தார்கள். அப்போது ஒரு பாகவதர் கனவில் பெருமாள் தோன்றி சன்னதிக்கு வாயு மூலையில் ஒரு பர்லாங்க் தூரத்தில் ஒரு அடையாளம் இருக்கும், அங்கே தோண்டினால் மணல் கிடைக்கும் என்று அருளினார். அவ்வாறே அதிகாலையில் எழுந்து போய்ப் பார்க்க அந்த அடையாளம் தெரிந்தது. அங்கு தோண்டிப்பார்க்க மணல் கிடைத்தது. அதை வைத்து கட்டிடங்கள் கட்டி, தெப்பக்குளமும் கட்டி, திருத்தேரும் செய்து சகல உற்சவங்களும் நிறைவாக நடந்து வருகின்றன.

நாங்கள் போனவுடன் அர்ச்சகர் பெருமாளுக்கும், செங்கோதை, பூங்கோதை ஆகிய இரு தேவியருக்கும், மற்ற பரிவாரத் தெய்வங்களுக்கும் பக்தி சிரத்தையுடன் பூஜை செய்து எங்களுக்கு சேவை செய்து வைத்தார். எங்களுக்காக பெருமாள் சந்நிதியில் அர்ச்சனையும் செய்து வைத்தார். போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதியும் கொடுத்தார். மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது.
                 
                
மற்ற பிரபல கோவில்களில் கூட்டத்தோடு கூட்டமாக அவசரக் கோலத்தில் ஆண்டவனைத் தரிசித்துப் பழகிய எங்களுக்கு இது முற்றிலும் புது அனுபவமாக இருந்தது. பிறகு தெப்பக்குளம் பார்க்கப் போனோம்


 வழி ஒரு காட்டுப் பாதைதான். சுமார் ஒரு கி.மீ. தூரம் இருக்கும். தெப்பக்குளம் இருக்கும் இடம் ரம்மியமாக இருக்கிறது.

திரும்பும்போது சுமார் ஒரு மணி இருக்கும். அன்னதானக் கூடத்திற்குப் போனோம். பார்த்தவர்களெல்லாம் சாப்பிடச் சொல்லுகிறார்கள்.

 
அங்கு இருக்கும் டேபிள், சேர் எல்லாம் "லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ்" என்ற நிறுவனம் வாங்கிக்கொடுத்தது. அங்கு உட்கார்ந்து நாங்கள் கையில் கொண்டு போயிருந்த டிபனை (கொண்டு போனதை வீண் செய்யக்கூடாது என்பதால்) சாப்பிட்டோம். அந்த அன்னதானத்தில் தினமும் 100 பேரும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கிலும் மக்கள் சாப்பிடுகிறார்கள்.

அங்கு அந்தக் கோவிலின் பரம்பரை தர்மகர்த்தாவை (திரு.யு.ஜெகதீசன் அவர்கள்) சந்தித்தோம்.

 
அவரிடம் எங்களுடைய நன்கொடையைக் கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். மாலை 4.30 க்குப் புறப்பட்டு 6.30 க்கு வீடு வந்து சேர்ந்தோம்.