திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மாறிவரும் கலாசாரங்கள்


"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்று அந்தக் காலத்திலேயே நன்னூலில் எழுதி வைத்துச் சென்றார்கள் நம் முன்னோர்கள். இந்தக் காலத்து நடப்புகள் அதை நிரூபணம் செய்கின்றன.

நான் சிறுவனாக இருந்தபோது கல்யாணங்களில் பெண்ணும் பையனும் பார்த்துக்கொள்வது என்பது தாலி கட்டும் சமயத்தில்தான். இருவரும் உறவினர்களாக இருந்தால் அது வேறு விஷயம்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த வழக்கம் மாறி கல்யாணத்திற்கு முன்பு பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரு கோயிலிலோ அல்லது ஒரு பொது இடத்திலோ பார்த்துக்கொள்வது பழக்கமாகியது. நான் சொல்வது பிராமணரல்லாத சமூகங்களில் நடக்கும் பழக்கவழக்கங்கள்.

கொஞ்ச நாள் கழித்து நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பெண்ணும் பையனும் சேர்ந்து ஓட்டலுக்குப் போவதும் சினிமாவிற்குப் போவதும் சகஜமாயிற்று. இவை எல்லாம் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன்தான் நடந்தன.

இப்போது புதிதாக ஒரு வழக்கத்தை எங்கள் பக்கத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். பஞ்சாங்கம் பார்ப்பவர்களுக்குத் தெரியும். அதில் ஒரு இடத்தில் விருந்திற்குப் போகக் கூடாத நாட்கள் என்று ஒரு குறிப்பு இருக்கும். அதாவது ஒருவர் வீட்டிற்குப் புதிதாக விருந்திற்குப் போவதாக இருந்தால் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் போகக்கூடாது என்று குறிப்பிட்டிருக்கும். ஏன் என்றால் அப்படிப் போய் விருந்துண்டால் அந்த உறவு பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதை கல்யாணப் பெண்ணுக்கும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது கல்யாண முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் அன்று அந்தப்பெண் புருஷன் வீட்டிற்குப்போவதும் ஞாயிற்றுக்கிழமையாகவே இருக்கும் அல்லவா ? பஞ்சாங்கப்படி அப்படி விலக்கப்பட்ட நாளில் பெண் புருஷன் வீட்டிற்குப் போனால் உறவுகள் பாதிக்கப்படும் என்று யாரோ ஒரு அதி மேதாவி சொல்லி, அதற்கு ஒரு மாற்று ஏற்பாடும் சொல்லியிருக்கிறான்.

அதாவது அந்தக் கல்யாண நாளான ஞாயிற்றுக்கிழமைக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை அந்தப் பெண் புருஷன் வீட்டிற்குப் போய்விட்டு வந்தால் இந்த பஞ்சாங்க விதிக்கு தப்பித்து விடலாமாம். இப்போது எங்கள் பக்கம் இப்படி ஒரு புது நடைமுறை பழக்கத்திற்கு வந்துள்ளது.

முற்காலத்தில் உண்டான பழக்கவழக்கங்கள்  அனுபவத்தின் அடிப்படையில் ஏற்பட்டவை. அவைகளில் பல நன்மைகள் உண்டு. ஆனால் தற்காலத்தில் அந்தப் பழக்க வழக்கங்களை நாகரிகத்தின் பெயரால் மாற்றி அமைக்கிறோம். அவைகளின் விளைவுகள் எப்படியிருக்கும் என்று நாளாவட்டத்தில்தான் தெரிய வரும்.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கல்யாணமாகாத இளைஞனும் இளைஞியும் "சேர்ந்து வாழுதல்" என்ற ஒரு கலாச்சாரம் உருவாகியுள்ளதை அறிவீர்கள். அப்படி சில மாதங்கள் அல்லது வருடங்கள் வாழ்ந்து இருவருக்கும் ஒத்துப்போனால் பிறகு கல்யாணம் செய்து கொள்வார்கள். இதற்குள் அவர்களுக்கு ஓரிரு குழந்தைகள் கூடப் பிறந்திருக்கலாம். இந்தப் பழக்கம் நம் நாட்டில் கூட பெரிய நகரங்களில் பரவ ஆரம்பித்திருப்பதாக கேள்விப்படுகிறோம்.

பழங்காலத்தில் ஆதிவாசிகள் சமூகத்தில் இந்த வழக்கம் இருந்திருக்கிறது என்று படித்திருக்கிறோம். ஆக மொத்தம் நாம் பழங்கால கலாச்சாரத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம். வாழ்க நாகரிகம். 

புதன், 13 ஆகஸ்ட், 2014

வணிக நாணயம்



நாணயம் என்று ஒரு வார்த்தை பழக்கத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியும். தெரியாதிருந்தால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். பணத்திற்கும் நாணயம் என்று சொல்வார்கள். நாம் இப்போது பார்க்கப்போவது அந்த நாணயம் அல்ல.

வியாபாரத்தில் நேர்மை என்று ஒன்று இருக்கிறது. அதாவது ஒரு பொருளை விற்பவன் அதற்கு வாங்கும் விலைக்குத் தகுந்ததான பொருளைக் கொடுக்கவேண்டும். அந்தப் பொருளின் தரத்திலோ, பயன்பாட்டிலோ ஏதாவது குறை இருந்தால் அதற்கு விற்பவன் பொறுப்பேற்க வேண்டும். இதைத்தான் வியாபாரத்தில் நாணயம் இருக்கவேண்டும் என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள்.

அப்படி நாணயமாக வியாபாரம் செய்தவர்கள் முன்னேற்றமடைந்தார்கள். மக்கள் அப்படிப்பட்வர்களைத்தான் ஆதரித்தார்கள்.

ஆனால் இன்றைய விளம்பர உலகில் நாணயம் என்றால் அது எங்கே விற்கிறது என்று கேட்கும் அளவிற்கு வந்து விட்டது. சமீபத்தில் நடந்த என் அனுபவத்தைக் கேளுங்கள்.

இப்போதெல்லாம் எந்தப் போருள் வாங்கினாலும், அதற்கு விற்பனைக்குப் பிறகு தரப்படும் பராமரிப்பு பணியை விற்பவர் ஏற்றுக்கொள்வதில்லை. பராமரிப்புக்கென்று தனியாக ஒரு கம்பெனியை ஒவ்வொரு உற்பத்தியாளரும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள்தான் அந்தப் பொருளுக்கு "விற்பனைக்குப் பின் பராமரிப்பு" (After Sales Service) என்கிற பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். நாம் என்ன நம்புகிறோம் என்றால் "நாம் வாங்கும் பொருளுக்கு ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அதை அவர்கள் சரி செய்து தருவார்கள்" என்று.

இந்த மாதிரி பராமரிப்புக்கென்று தனி அமைப்பு வைத்திருப்பதே நம்மைப் போன்ற இளிச்சவாயன்களை ஏமாற்றுவதற்காகவே. அவர்களுக்கென்று கட்டணமில்லா போன் நெம்பர் ஒன்று இருக்கும். அந்த நெம்பருக்குப் போன் செய்தால் எப்போதும் அதை யாரும் எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்தக் கசமாலங்களுக்குத் தெரியும் - ஒவ்வொரு போன்காலும் ஒரு பிரச்சினையைத் தான் கொண்டு வரும் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள்.

அப்படித் தப்பித் தவறி யாராவது எடுத்தால் மறு முனையிலிருந்து "க்யா பாத் ஹை" என்று ஒரு கேள்வி வரும். நாம் சுதாரித்துக் கொண்டு "இங்கிலீஷ் மே போலோ" சொல்வதற்குள் லைனை கட் செய்து விடுவார்கள். அநேமாக உங்களில் பலர் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பீர்கள்.

நான் ஐந்து வருடங்களுக்கு முன் பிரபல கம்பெனி ஒன்றின் பிரிட்ஜ்  20000 ரூபாய் கொடுத்து வாங்கினேன். சமீபத்தில் அதனுடைய கைப்பிடி உடைந்து விட்டது. இது என்ன சாதாரண ரிப்பேர்தானே என்று அந்தக் கம்பெனியின் சர்வீஸ் சென்டருக்குப் போனேன். விஷயத்தைச் சொன்னதும் அங்கு வரவேற்பில் இருந்த நவநாகரிக யுவதி, "சார், நீங்க உங்க பிரிட்ஜை இங்கு கொண்டு வந்தால் நாங்கள் ரிப்பேர் செய்து கொடுப்போம். இல்லையென்றால் இந்த நெம்பருக்குப் போன் செய்யுங்கள், அவர்கள் உங்கள் வீட்டிற்கே வந்து ரிப்பேர் செய்து தருவார்கள்" என்று மிழற்றியது. (மிழற்றியது என்றால் என்ன அர்த்தம் என்று தமிழறிஞரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அல்லது இந்த மாதிரி ஒரு சர்வீஸ் சென்டருக்கு ஒரு முறை போய் வாருங்கள்.)

அந்த நெம்பருக்குப் பலமுறை போன் செய்து ஒருவாறாக லைன் கிடைத்தது. அதிலிருந்த நபர் விவரத்தைக் கேட்டுக்கொண்டு  எங்கள் சர்வீஸ் இன்ஜனியர் உங்களைத் தொடர்பு கொள்வார் என்று சொல்லி என் மொபைல் நெம்பரை வாங்கிக்கொண்டார். உங்கள் கம்ளெய்ன்ட் நெம்பர் என்று ஒரு பதினைந்து இலக்க யெம்பரைத் தந்தார். நானும் இது பெரிய கம்பெனியாச்சே. நம் பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். நம்பிக்கைதானே வாழ்க்கை.

அடுத்த நாள் சர்வீஸ் இன்ஜினியர் போன் செய்து எல்லா விவரங்களையும் விலாவாரியாக கேட்டு விட்டு, சரி சார் நான் கம்பெனிக்கு இந்த ஸ்பேர் பார்ட் வேண்டுமென்று ஆர்டர் போட்டு விடுகிறேன், பார்ட் வந்ததும் நான் உங்கள் வீட்டிற்கு வந்து பிரிட்ஜை சரி செய்து தந்து விடுகிறேன் என்றார். எனக்கும் அசாத்திய நம்பிக்கை வந்து விட்டது.

இரண்டு நாள் கழித்து என் மொபைலுக்கு ஒரு செய்தி. உங்கள் பிரிட்ஜ்ஜுக்கு வேண்டிய ஸ்பேர் பார்ட் எங்களிடம் இல்லை. ஆகவே உங்கள் கம்ப்ளெய்ன்டை இத்துடன் மூடுகிறோம். அவ்வளவே. நான் என்ன செய்வது? திரும்பவும் அந்த சர்வீஸ் டிபார்ட்மென்டைக் கூப்பிட்டேன். அவர்கள் சொன்னது என்னவென்றால், சார் நீங்கள் பிரிட்ஜ் வாங்கி ஐந்து வருடங்களாகி விட்டன, அந்த மாடல் இப்போது மார்க்கெட்டில் இல்லை, அதனால் அதற்கு ஸ்பேர் பார்ட் கிடைக்காது. இப்படி சொன்னால் நான் என்ன செய்வது என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் சொன்ன பதில்தான் இன்றைய நாணயத்தின் உச்ச கட்ட பிரதிபலிப்பு. சார் அந்த பிரிட்ஜை உங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் டீலரிட்ம் கொண்டு போனால் அதை வாங்கிக்கொண்டு உங்களுக்குப் புதிதாய் பிரிட்ஜ் கொடுப்பார்கள் என்றார்கள்.

நான் ஒரு மடையன். இதைக் கேட்டுக் கொண்டு பக்கத்திலிருக்கும் டீலரிடம் போனேன். ஆஹா, அதற்கென்ன, தாராளமாய் எடுத்துக்கொள்கிறோம் என்றார்கள். மாடல் நெம்பர், வாங்கின வருடம் எல்லாம் கேட்டு விட்டு, உங்கள் பிரிட்ஜ் 500 ரூபாய்தான் பெறும், ஆனால் நீங்கள் எங்களுடைய நீண்ட நாள் கஸ்டமர் என்பதால் ஆயிரம் ரூபாய்க்கு எடுத்துக்கொள்கிறோம். புது பிரிட்ஜ் 25000 ரூபாயிலிருந்து கிடைக்கும், உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளலாம் என்றார்கள்.

ஆகவே நண்பர்களே, நீங்கள் இப்போது அமெரிக்க வாழ்க்கை முறைக்கு மாறிக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரே வித்தியாசம். அங்கு பழைய சாமான்களை யாரும் வாங்க மாட்டார்கள் இங்கு அதற்கு அடிமாட்டு விலை கொடுப்பார்கள்.

சனி, 2 ஆகஸ்ட், 2014

தமிழனென்று ஓர் இனம்


கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டு இப்பூவுலகில் வாழ்ந்து வரும் இனம் தமிழினம். பிற்காலத்தில் இவ்வினத்தில் சில புல்லுருவிகளின் சதியால் இனக் கலப்பு ஏற்பட்டது என்னமோ உண்மைதான். இருந்தாலும் தமிழினம் தன் தனித்தன்மையை இது வரையிலும் காத்தே வந்திருக்கிறது. இனியும் காப்போம் என்று மார் தட்டும் தனித்தமிழர்கள் இருக்கிறார்கள்.

தமிழினத்திற்கு எந்த அவமானம் ஏற்பட்டாலும் அவர்கள் தீக்குளிப்பார்கள் என்பது உறுதி. இந்த சூழ்நிலையில்தான் பார்பனர்களின் ஆதரவோடு செயல்படும் மோடி அரசு சம்ஸ்கிருத மொழித்திணிப்பை பின் வாசல் வழியாக கொண்டு வருகிறது. இதை தமிழினத்தின் காவலர்கள் கவனித்துக் கொள்வார்கள்.

சாமானிய மனிதர்களான நாம் என்ன செய்யலாம் என்று யோசித்ததில் ஒரு வழி  புலனாகியது. அதாவது தமிழ் மொழியில் வடமொழிக்கலப்பு உள்ளதா என்ற ஒரு சுய பரிசோதனை செய்யலாம் என்று தோன்றியது. அப்படிக் கலந்திருந்தால் அந்த வார்த்தைகளை நாம் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சொற்களைக் கொடுத்திருக்கிறேன். அவைகளில் தமிழ் அல்லாத சொற்கள் எவை என்று பகுத்தறிந்து கூறுங்கள்.

ஆகாசம்
உபாயம்
நகம்
வீரன்
ஆனந்தம்
தோரணம்
பாடம்
சபை
மாயை
வீணை
ஆயுதம்
கீதம்
புஸ்தகம்
பயம்
பழம்
சுகம்
வாகனம்
விஷம்
தர்மம்
நரகம்
மேகம்
பக்தன்

இப்போதைக்கு இது போதும். அடுத்த பதிவில் என்னுடைய விடையைக் கூறுகிறேன்.

பின் குறிப்பு: இந்தப் பதிவில் ஆரம்பத்தில் போட்டிருக்கும் படத்திலுள்ள பெண்மணி 100 சதம் தமிழ்ப் பெண்மணிதான் என்று தமிழினத்தின் பேரில் உறுதி கூறுகிறேன்.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 50 பேர் சிறை பிடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம்.



இத்தகைய செய்திகளை பல வருடங்களாக, ஏறக்குறைய நான்கு நாட்களுக்கு ஒரு முறை செய்தித்தாள்களில் படிக்கிறோம். அடுத்த நிமிடம் மறந்து போகிறோம். இது ஏன் இப்படி நடக்கிறது?

ஒரு ஈழத்தமிழ் பதிவர் தன் பதிவில் எழுதியிருந்தார் - கச்சத்தீவு பல நூற்றாண்டு காலமாக இலங்கைக்கு சொந்தமான பகுதி. அதில் இந்திய நாட்டுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஈழத்தமிழர்களாகிய நாங்கள் ஏன் இதை வலியுறுத்துவதில்லை என்றால், ஈழப்போராட்டத்தில் இந்தியத் தமிழர்களின் அனுதாபமும் ஆதரவும் இப்போது எங்களுக்குத் தேவைப்படுகின்றது. அதனால்தான் நாங்கள் இதைப்பற்றி வாய் திறப்பதில்லை.

இதன் உண்மையை வரலாற்று ஆசிரியர்கள்தான் சொல்ல முடியும். சாதாரண இந்தியத் தமிழனான எனக்குத் தெரிந்ததெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் இந்திய-இலங்கை அரசுகள் ஒரு ஒப்பந்தம் போட்டு, கச்சத்தீவில் இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஒத்துக்கொண்டார்கள் என்பதே.

சமீபத்தில் சென்னை நீதி மன்றம் ஒன்றில் கூட மத்திய அரசு இந்த நிலையை திட்டவட்டமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது என்று செய்தித்தாள்களில் படித்த ஞாபகம் இருக்கிறது. இருந்தும் தமிழக மீனவர்கள் ஏன் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிக்கிறார்கள் என்றால் அங்கு மீன் அதிகமாகக் கிடைப்பதேயாகும். இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும்.

இருந்தாலும் இந்த சிறை பிடிப்பு, கடிதங்கள், மீனவர் விடுதலை என்கிற நாடகம் ஏன் தொடர்ந்து நடக்கிறது என்றால், வெறும் வாயையே எத்தனை நாளைக்குத்தான் மெல்லுவது? கொஞ்சம் அவல் இருந்தால் நல்லதுதானே என்கிற நடைமுறைத் தத்துவம்தான்.