வெள்ளி, 15 மார்ச், 2019

38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்

                                 
                                   

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வக்கிரங்களைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதாயம் தேடுகின்றன. பத்திரிக்கைகள் கல்லா கட்டுகின்றன.

ஆனால் யாராவது இந்த அக்கிரமங்கள் நடப்பதற்கு அடிப்படைக் காரணங்களைப் பற்றி எள்ளளவாவது  சிந்திக்கிறார்களா என்றால், ஒருவரையும் காணோம். இந்த அக்கிரமக்காரர்கள் எந்தப் பெண்ணையும் பலாத்காரமாகவோ, மயக்க மருந்து கொடுத்தோ தூக்கிக் கொண்டு போனதாக எந்தச் செய்தியும் இது வரை இல்லை.

பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களும் தங்களுடைய பூரண நினைவுடனேயே தங்களுடைய பரிபூர்ண சம்மதத்துடனேயே சென்றிருக்கின்றார்கள். கூட்டிக்கொண்டு போனவர்கள் அந்தப்பெண்களை சீரழித்தது ஒரு வகையில் காட்டுமிராண்டித்தனம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இந்தப் பெண்கள் அவர்களுடன் போனது அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியுமா? பெற்றோர்களின் அனுமதியுடன்தான் அவர்கள் சென்றார்களா?

மனிதனாகப் பிறந்தவன் ஒவ்வொருவனுக்கும் இயற்கை சில பயங்களைக் கொடுத்திருக்கிறது. இருட்டு பயம், புது இடம், புது மனிதர்கள், புது சூழ்நிலை இவைகளைக் கண்டு பயம், எதிர்பாலரிடம் பேச. பழக பயம். இப்படி “தெனாலி” படத்தில் கமலஹாசன் லிஸ்ட் போடுவாரே அந்த மாதிரி நிறைய பயங்கள் இயற்கை நம்மிடத்தில் ஏற்படுத்தி உள்ளது. இந்த பயங்கள் எல்லாம் நம்முடைய பாதுகாப்புக்குத் தானே ஒழிய சும்மா விளையாட்டுக்கல்ல.

அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பல எச்சரிக்கைகளை கடைப்பிடிக்கவேண்டும். அதில் முக்கியமாக பெரியவர்கள் (பெற்றோர்களும் இதில் அடங்கும்) சொல்லும் அறிவுறைளைக் கேட்டு நடக்கவேண்டும். பெற்றோர்களிடத்தில் உண்மையை பேச வேண்டும். இப்படியெல்லாம் சில பழக்க வழக்கங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இன்றைய இளைய சமுதாயம் எதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. தாங்கள் நினைப்பதுதான் சரி, தங்கள் நண்பர்கள் செலவதுதான் வேதவாக்கு. இப்படியாக அவர்களுடைய போக்கு இருக்கிறது. ஆணுக்குப் போட்டியாக பெண்களும் இப்படியான கலாச்சாரத்தைக் கடைப் பிடிக்கிறார்கள்.

பாய் பிரண்ட் இல்லையென்றால் அது மகா கேவலம் என்ற எண்ணம் பொதுவாக எல்லா பெண்களிடமும் காணப்படுகின்றது. பாய் பிரண்டுடன் ஊர் சுற்றுவது ஒரு கட்டாயம் என்ற நிலைக்கு இன்றைய கல்லூரிப் பெண்கள் வந்திருக்கிறார்கள். இந்த மாதிரி சுற்றுவதற்கு பல பொய்க் காரணங்களை
வீட்டில் சொல்லி நம்ப வைக்கிறார்கள்.

இந்த மனப்பாங்கை இன்றைய கயவர்கள் நன்கு புரிந்து கொண்டு பல அக்கிரமங்கள் செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த பொள்ளாச்சி விவகாரமும். அடிப்படைக் காரணத்தை அலசாமல் நடந்த நிகழ்வுகளை மட்டும்  ஆராய்வதில் எந்தப் பலனும் இல்லை.