செவ்வாய், 30 செப்டம்பர், 2014

காதலாவது கத்திரிக்காயாவது

விமர்சனம்.


காதலாவது கத்திரிக்காயாவது என்ற வைகோவின் சிறுகதைக்கு என் சிறு விமர்சனம். இதைப் படித்த பின் இந்த சிறுகதையைப் படிக்கத் தோன்றினால் இங்கே செல்லவும்.

காதலாவது கத்திரிக்காயாவது என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. அதன் பொருள் என்னவென்றால் சமூகத்தில் வாழும் சாதாரண மனிதர்களுக்கு காதல் என்பது ஒரு எட்டாக்கனி அல்லது காதல் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒன்றல்ல என்பதேயாகும்.

ஆனாலும் அவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் இயற்கையை ஒட்டிய உணர்வுகள் வரும் என்பதை அன்றாட வாழ்க்கைப் போராட்ட நிகழ்வுகளுக்கிடையே பின்னியிருக்கும் விதம் அருமை. ஒரு ஆதரவற்ற இளைஞனுக்கும் இளைஞிக்கும் தற்செயலாக ஏற்படும் சந்திப்பு, பரஸ்பர நட்பாக மாறி இறுதியில் காதலாக உருவெடுக்கும் ரசாயன மாற்றத்தை கதாசிரியர் மிக நுணுக்கமாக விவரித்துள்ளார்.

கதையில் குறிப்பிடும் நிகழ்வுகள் சாதாரணமாக யாருக்கும் ஏற்படக்கூடியவை. அவைகளைப் பின்னி ஒரு காதல் கதையை புனைந்த வை.கோ. அவர்களை பாராட்டவேண்டும். கதையின் ஓட்டம் ரோல்ஸ்ராய் காரில் பயணம் செய்வது போல் அவ்வளவு சுகமாக இருக்கிறது. இது அவரின் ஒரு தனித்துவம்.


பரமு காமாட்சி ஜோடியின் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கவேண்டும் என்று கதையைப் படித்தவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இயற்கையாகவே தோன்றும். 

திங்கள், 22 செப்டம்பர், 2014

காதல் வங்கி - சிறுகதை விமர்சனம்.

காதல் வங்கி

இந்தக்கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

விமர்சனம்:

ஆற்று நீர் சலசலப்பில்லாமல் அமைதியாக ஓடும்போது அதைப் பார்த்துக்கொண்டிருப்பதே ஒரு சுகம். மனதிற்கு சாந்தியளிக்கும் ஒரு அனுபவம். எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காது.

அதேபோல் கோயிலில் கடவுள் விக்கிரகத்தை ஒரு நல்ல அர்ச்சகர் தேர்ச்சியாக அலங்காரம் செய்திருந்தால் அதையே பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் என்றே தோன்றும்.

சில கதைகள்தான் அத்தகைய அனுபவத்தைக் கொடுக்க வல்லவை. காதல் வங்கி அந்த மாதிரியான ஒரு சிறுகதை. எந்த விதமான நெருடலும் இல்லாமல், அபஸ்வரம் அற்ற ஒரு நல்ல சங்கீதத்தைக் கேட்கும் அனுபவத்தைத் தருகிறது.

அழகை அனுபவிப்பது பல வகைப்படும். அழகில் தெய்வீகத்தைப் பார்ப்பது ஒரு வகை. குழந்தையின் கபடமற்ற அழகு ஒரு வகை. பெண்களைத் தெய்வமாகப் பார்ப்பது ஒரு வகை. இப்படி அழகின் பல பரிமாணங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் திரு. வை.கோ. அவர்கள்.

கண்டதும் காதல் என்பதை நாசூக்காக கண் முன்னால் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர். இக்காலத்து நவநாரீமணிகளுக்கு மிகவும் வேறுபட்டவளாக கதாநாயகியை சித்தரித்திருப்பது மனதை தொடுகிறது. மிக இயல்பாக அவள் தன் நாயகனுடைய பழக்கவழக்கங்களுக்கு மாற்றிக்கொள்கிறாள்.


ஆனால் நடைமுறையில் இத்தகைய சம்பவங்கள் நடக்குமா என்பது ஒரு கேள்விக் குறியாய் மனதில் தங்குகிறது.

சனி, 13 செப்டம்பர், 2014

இன்னுமொரு விமர்சனம்
இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.(சுடிதார் வாங்கப் போறேன்)

சிறுகதைகளுக்கு ஒரு சம்பவத்தை அப்படியே கண்முன் காட்சியாகக் கொண்டுவரும் வல்லமை உண்டு. ஆனால் இந்த திறமை அந்த கதையின் ஆசிரியரின் சாமர்த்தியம். அப்படிப்பட்டவர்களே சிறுகதை மன்னன் என்று போற்றப்படுகிறார்கள். திரு வை.கோ. அவர்களிடம் இந்தத் திறமை நன்றாக பளிச்சிடுகிறது.

கல்கி, தேவன், கி.வா.ஜ., அகிலன், மு.வ., புதிமைப்பித்தன் ஆகியோர் சிறுகதைகளைப் படித்து வளர்ந்தவன் நான். ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் ஆகிய பத்திரிக்கைகளில் அவர்களது
கதைகள் வெளிவரும். தவிர அந்தப் பத்திரிக்கைகளின் தீபாவளி மலர்களிலும் அவர்களது சிறப்புக் கதைகள் வெளியாகும். இது எல்லாம் ஒரு காலம்.

அப்படிப்பட்ட பத்திரிக்கைகளின் இன்றைய இதழ்களைப் பார்த்தால் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. ஒரு துணுக்கைப் போட்டுவிட்டு இதுதான் ஒரு பக்கக்கதை என்கிறார்கள். சிறுகதை எழுதும் ஆசிரியர்களே இல்லையோ என்று மனது வெறுத்துப் போய் இருக்கும்போது பதிவுலகத்திலே திரு வை.கோ. அவர்களின் கைகளைப் படித்து வெகுவாக இன்புற்றவன் தான்.

இந்த சுடிதார் வாங்கும் கதையில் ஒரு மூத்த குடும்பஸ்தனின் மன எண்ணங்களை அப்படியே தத்ரூபமாக காட்டியிருக்கிறார். இவர் வாங்கி வரும் சேலைகளையே அலட்சியமாக எடுத்துக் கொள்ளும் மனைவிக்கு சுடிதார் போட்டுப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததுதான் வயதான குடும்பஸ்தனுக்கு வரக்கூடாத ஆசை. ஆனாலும் வருவதை எப்படி தடுக்க முடியும்? இதை வெகு நாசூக்காக கோடி காட்டியிருப்பது எல்லோருக்கும் பொருந்தும்.

வரப்போகும் மருமகளுக்கு சுடிதார் வாங்கிக்கொடுத்து நல்ல பெயர் வாங்கவேண்டுமே என்ற ஆதங்கத்தை நுணுக்கமாக விவரித்திருக்கிறார். தெருவில் போகும் பெண்களின் சுடிதார் பேஷன்களைப் பார்த்து மதி மயங்குவது இயற்கையான ஒரு உணர்ச்சி. நாம் அதிக விலை கொடுத்து வாங்கின பொருளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவேண்டுமே என்ற மனதின் வேட்கை அந்த வார்த்தைகளில் புலப்படுகிறது.

ஜவுளிக்கடைகளில் ஜவுளிகளோடு அந்த விற்பனைப் பெண்களும் விற்பனைப் பொருளானால் நன்றாக இருக்கும் என்ற கற்பனை எல்லா இளைஞர்களுக்கும் இனிப்பாக இருக்கும். (பெரிசுகளுக்கும் கூடத்தான்)

கடைசியில் தான் வாங்கின சுடிதாருக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று அறியும்போது தான் பட்ட கஷ்டங்களெல்லாம் மறந்து ஒரு சந்தோஷம் கிடைக்கிறதே, அதற்காகத்தான் திரும்பத் திரும்ப மனிதர்கள் இந்தக் கஷ்டங்களை வலுவில் சுமக்கிறார்கள். இந்த உண்மையை மறைமுகமாக கதாசிரியர் இக்கதையின் மூலம் வலுவாக சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு நல்ல சிறுகதை படித்த மனத்திருப்தி கொடுத்த ஆசிரியரைப் பாராட்டுகிறேன்.

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

நான் பெற்ற விருது

திருமதி ரஞ்சனி நாராயணனுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றி. இவர் ஒரு பிரபல பதிவர். பல வருடங்களாக பிளாக்கில் எழுதி வருகிறார். பதிவர் சந்திப்புகளில் நேரிலும் சந்தித்திருக்கிறேன்.

அவர்கள் எனக்கு ஒரு விருது கொடுத்து என்னை மிகவும் கௌரவப்படுத்தி இருக்கிறார்கள்.

                              versatile-blogger
இந்த விருது ஒரு பெரிய விருது என்று கருதுகின்றேன்.  இந்த விருதை எனக்களித்தற்காக அவருக்கு மீண்டும் நன்றி.

உலகில் எதுவும், தாயன்பு உட்பட, இலவசம் அல்ல என்று எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அப்படியே இந்த விருதுக்கும் சில விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

1. இந்த விருதினை என்னுடைய பிளாக்கில் போடவேண்டும். இது ஒரு ஜுஜுபி வேலை. காப்பி, பேஸ்ட் வேலை. அதைத்தான் தினமும் செய்து பழகி விட்டோமே. அதனால் அதை சுலபமாகச் செய்து விட்டேன்.

2. விருது கொடுத்தவருக்கு நன்றி சொல்லவேண்டும். இதுவும் மிகவும் சுலபம்தான். அதையும் செய்து விட்டேன்.

3. என்னைப்பற்றி சில விஷயங்கள் கூற வேண்டும். இது கொஞ்சம் கடினமான வேலை. நான் இப்போதெல்லாம் எந்த கடின வேலையையும் செய்வதில்லை. ஆகவே இந்த வேலையைத் தவிர்க்கிறேன். தவிர தற்பெருமை குற்றம் என்று நன்னூலில் சொல்லியிருக்கிறது. நான் ஒரு நன்னூல்தாசன்.

4. இந்த விருதை இன்னும் சில பேர்களுக்கு அளிக்கவேண்டும். இதுதான் இந்த விருதின் மிகக் கடுமையான நிபந்தனை. இந்தக் காரணத்திற்காகவே இந்த விருதினையே மறுக்கலாமா என்றுதான் முதலில் நினைத்தேன். இருந்தாலும் அன்புடன் ஒருவர் கொடுக்கும் எதையும் நிராகரிக்கலாகாது என்னும் கருத்து காரணமாக இந்த விருதை ஏற்றுக்கொண்டேன்.

இப்படி நான் சொல்வதற்கு காரணம் இப்படியே ஒவ்வொருவரும்  பலருக்கு இந்த விருதைக் கொடுக்க முற்பட்டால் கொஞ்ச நாளில் இந்த விருதை வாங்குவதற்கு பதிவர்கள் யாரும் மிஞ்ச மாட்டார்கள். இந்தக் காரணத்தை முன்னிட்டு நான் இந்த விருதை யாருக்கும் வழங்கப்போவதில்லை.

ஆக மொத்தம் நான் பதிவர்களிலேயே வித்தியாசமானவன் என்பதை உணர்த்தி விட்டேன். அந்த வகையில் இந்த விருது எனக்கு மிகவும் பொருத்தமே.

திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், 8 செப்டம்பர், 2014

பாசப் போராட்டம்

VGK 02 ] தை வெள்ளிக்கிழமை

இந்தக்கதையைப் படிக்க இங்கே சுட்டவும்

விமர்சனம்.

தாய்மை என்பது ஒவ்வொரு உயிருக்கும் இருக்கும் இயற்கை உணர்வு. ஐந்தறிவு மட்டும் இருக்கும் மிருகங்களில் கூட இந்த உணர்வை பல நேரங்களில் பார்க்கலாம். அந்தப் பாசப்பிணைப்புக்கு முன்னால் வேறு எந்த உணர்வும் இணையல்ல. இந்த உணர்வை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் இந்தக் கதாசிரியர்.

மனித மனம் விசித்திரமானது. ஒரு சமயம் எடுக்கும் முடிவுகள் வேறொரு சமயத்தில் மாறி விடுகின்றன. இதுதான் இயற்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் இந்த நிகழ்வு அரங்கேறுகிறது. இதை குற்றம் என்று சொல்ல முடியாது. பிரசவம் பார்த்த டாக்டர் இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டுள்ளார். அந்த கதா பாத்திரம் மனதில் நிலை பெறுகிறது.

சராசரி இந்தியக் குடும்பங்களில் நடைபெறும் பாசப் போராட்டங்கள் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குடும்பங்களை நாம் நம் வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக சந்திக்க முடியும். சிறுகதையின் சிறப்பே அதுதான். நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கக் கூடிய மனிதர்களையும் சம்பவங்களையும் நம் முன்னால் நிறுத்துவதுதான் ஒரு கதாசிரியரின் வெற்றி.


அந்த வகையில் இந்தக் கதை நம் மனதில் நீங்கா இடம் பெறுகிறது.

இந்த விமர்சனத்திற்குத்தான் இரண்டாம் பரிசு கிடைத்தது.

சனி, 6 செப்டம்பர், 2014

கதை கதையாம்...


பிரபல பதிவர் வை.கோபாலகிருஷ்ணன் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர். எழுத்தில் இன்பம் கண்டவர். தாம் பெற்ற இன்பத்தை இவ்வைகயமும் பெறட்டும் என்ற சிறப்பான நோக்கத்தோடு ஒரு விமர்சனப்போட்டி நடத்தி வருவது அனைத்துப் பதிவர்களும் அறிந்ததே.

இந்தப் போட்டியில் பல பதிவர்கள் கலந்து கொண்டு பரிசுகளைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும் மூன்று பேர்களுக்கு பரிசு கொடுக்கிறார். எனக்கும் கூஊஊஊஊஊஊஊஊட ஒரு மூன்றாம் பரிசு கிடைத்ததென்றால் பாருங்களேன்.

இந்த மூன்றாம் பரிசு கிடைத்த ஊக்கத்தினால் நானும் ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்கிறேன். ஆனாலும் பரிசு ஒன்றும் கிடைப்பதாகக் காணவில்லை. இருந்தாலும் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற முதுமொழிக்கேற்ப விடாமல் ஒவ்வொரு போட்டிக்கும் விமர்சனம் எழுதியனுப்பிக்கொண்டிருக்கிறேன். கடைசியாக ஒரு ஆறுதல் பரிசாவது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பரிசு பெற்ற விமர்சனங்களை வைகோ தன்னுடைய பதிவில் பிரசுரிக்கிறார். அந்தப் பரிசு பெற்ற விமர்சனங்கள் எல்லாம் அந்த கதையை விட நீளமாக இருக்கின்றன. இவ்வளவு திறமை உள்ளவர்கள் ஏன் தாங்களாகவே கதை எழுதாமல் அடுத்தவர் கதைகளுக்கு விமர்சனம் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற என் சந்தேகத்திற்கு இது வரை விடை கிடைக்கவில்லை.

சரி, அது எப்படியோ போகட்டும். நான் ஒவ்வொரு சிறுகதைக்கும், 80 வயதானபின் எஞ்சியிருக்கும் கொஞ்நஞ்ச  என் மூளையைக் கசக்கிப் பிழிந்து விமர்சனங்கள் எழுதி அனுப்பிக்கொண்டிருக்கிறேன். சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்னும் நன்னூல் சூத்திரத்தை சிறுவயதில் படித்த காரணத்தினால் மற்றவர்கள் ஒரு நாவல் அளவிற்குச் சொல்வதை நான் ஒரு வரியில் சொல்லி விடுவேன்.

என்னுடைய விமர்சனங்கள் எல்லாம் இந்த அளவுகோலின்படி எழுதப்பட்டவை. பரிசு பெறாத விமர்சனங்களை வைத்துக்கொண்டு வைகோ என்ன செய்யப்போகிறார்? ஆகவே அவருடைய அனுமதி உண்டு என்கிற நம்பிக்கையில் நான் எழுதிய விமர்சனங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

விமர்சனம் 1.

ஜாங்கிரி. நினைத்தாலே இனிக்கும் ஒரு இனிப்பு. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் அத்தனை இன்பங்களும் இதற்கு உண்டு. இதை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது.
இத்தனை சிறப்பு வாய்ந்த இதை உருவாக்குபவனும் ஒரு மனிதன்தான். அவன் உருவாக்கும் இந்த ஜாங்கிரி.

மற்றவர்களுக்குத்தான் இனிமையே தவிர, அதை உருவாக்குபவன் அதை விரும்பி சாப்பிடுவதில்லை. எந்த உணவும் அப்படித்தான். அதை செய்பவன் அதை ரசித்து உண்ண முடியாது.

தவிர, அவன் வாழ்க்கையில் இனிப்பு சுவை இல்லாததுதான் ஒரு சோகமான உண்மை. இந்த உண்மையை ஒரு நிகழ்வின் மூலம் நம் கண்முன் நிறுத்தும் கதைதான் “ஜாங்கிரி”. மனிதர்களின் பல பரிமாணங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
நிறைய செலவு செய்து பெரிய விழா நடத்தும் பெரிய மனிதர்களுக்கு சாதாரண மனிதப் பண்பு இல்லாமல் போனது நடைமுறையில் பல இடங்களில் சந்தித்திருந்தாலும் இக்கதையில் அது ஆணித்தரமாக காட்டப்பட்டுள்ளது.


சிறுகதையின் வெற்றியே வாசகர்களை கதாபாத்திரங்களோடு கட்டிப்போடுவதுதான். அதை மிகத் திறம்பட இந்த கதையில் ஆசிரியர் செய்திருக்கிறார். அந்த சமையல்காரர் ஏன் வாழ்க்கையில் வெற்றிபெற முயற்சிகள் செய்யவில்லை என்று அவர் மீது கோபம் வருகிறது. அதுதான் கதாசிரியரின் வெற்றி.  


கதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.