வியாழன், 16 மே, 2019

சரித்திரம் தெரியுமா?

எனக்கு 13 வயது இருக்கும். ஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு இந்த சரித்திரப் பாடத்தின் மீது ஒரு வெறுப்பு. மண்டையில் ஏறவே இல்லை. என் வாத்தியார் இந்தப் பாடத்தில் சுலபமாகப் பாஸ் செய்ய ஒரு வழி சொல்லிக் கொடுத்தார். ஏதாவது ஒரு ராஜா தன் ஆட்சியின்போது செய்த சாதனைகள் என்னவென்று கேட்டால் எதுவும் யோசிக்காமல் சாலைகள் போட்டார், சாலைகளின் ஓரத்தில் மரம் நட்டார், குளங்கள் வெட்டினார், சத்திரங்கள் கட்டினார் என்று இப்படி எழுதினால் போதும், நீ பாஸ் ஆகி விடுவாய் என்று சொல்லிக்கொடுத்தார்.

அது போலவே எழுதி சரித்திரம் பாஸ் செய்து மேல் படிப்புகளெல்லாம் படித்து மேலே வந்தது ஒரு பெரிய கதை.

ஆனால் என்னுடைய ஆயுள் காலத்திலேயே ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நடந்தது. நான் மேற்கூறியவாறு சரித்திரம் படித்துக்கொண்டு இருக்கும்போது தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை சினிமா பாணியில் பத்திரிக்கைக்காரர்கள் பிரசுரித்தார்கள்.

அதில் எனக்கு நினைவு இருப்பதெல்லாம் அந்த படு கொலையைச் செய்தவன் ஒரு தேசத்துரோகி என்றும் அவன் பெயரைச் சொன்னாலே ஏழேழு தலைமுறைக்கும் பாவம் வந்து சூழும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இன்றைக்கும் அவன் பெயரைச் சொல்ல எனக்கு பயமாக இருக்கிறது.

இது நடந்து ஒரு எழுபது வருடங்கள் ஆகியிருக்கும். இன்றைக்கு அவனை யாரோ ஒரு சினிமா நடிகர் என்னமோ சொல்லிவிட்டார் என்பதால் இந்த தேசமே அந்த நடிகரை கால்வேறு கைவேறு ஆக்கத்துடிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் மகாத்மா காந்தி சிலைக்குப் பக்கத்திலேயே அவன் (அவர் என்று சொல்ல வேண்டுமோ) சிலையை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நான் சொல்ல வருவது என்னவென்றால் ஒரு எழுபது வருடத்திலேயே, என் வாழ்நாளில் நடந்ததையே மக்கள் மாற்றுகிறார்கள் என்றால், 1000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாய் சரித்திரத்தில் சொல்பவைகளை எவ்வாறு நம்பவது?

பின் குறிப்பு; இது ஒரு சரித்திர ஆராய்ச்சிப் பதிவுதானே தவிர வேறு எந்த உள் நோக்கமும் இல்லை என்று ஆணையிட்டுச் சொல்கிறேன். அப்படியும் இந்தப் பதிவிற்கு உள் நோக்கம் கற்பிப்பவர்கள் ஏழேழு ஜன்மத்திற்கும் இந்தியாவிலேயே பிறக்கக்கடவது என்று சாபம் கொடுக்கிறேன்.

17-5-2019  / 6.00 AM    இதையும் பாருங்கள்;

Bhopal candidate Pragya Thakur courted fresh controversy on  .. 

ஞாயிறு, 12 மே, 2019

காதல் விபத்துகள்


காலையில் பேப்பரைத் திறந்தால் கொலைச்செய்திகள்தான் முதலில் கண்ணில் படுகின்றன. அவைகளில்  பெரும்பாலானவை காதல் சம்பந்தப்பட்டதாக இருப்பது வருத்தத்குரியது. அதிலும் குறிப்பாக எங்கள் மாவட்டம் அதில் முன்னிலை வகிப்பதைக் கண்டு தலை குனிகிறேன்.


தற்காலத்தில் காதல் கல்யாணங்கள் அதிகமாக நடப்பதாக நான் நினைக்கிறேன். அவைகளில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவுகின்றன என்பது ஒரு பரிதாபம்.

ஏன் காதல் கல்யாணங்கள் தோல்வியில் முடிகின்றன என்று பார்த்தால், சில காரணங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.

கல்யாணம் என்றால் என்ன, கல்யாணம் செய்துகொண்ட பிறகு அந்தக் கணவன் மனைவிக்கு உண்டான பொறுப்புகள் என்னென்ன, இவைகளைப் பற்றி இன்றைய காதலர்கள் சிந்திப்பதாகவே தெரியவில்லை.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு குடும்பம் அமைப்பது என்பது விளையாட்டுக் காரியம் அல்ல. ஆனால் 21 அல்லது 22 வயது வேலையில்லாத ஒருவன் 18 வயது கல்லூரியில் படிக்கும் பெண்ணைக் காதல் கல்யாணம் செய்தால், அவனுக்கு குடும்பப் பொறுப்புகள் என்ன என்று தெரியுமா?

அதிலும் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் நடைபெறும் கல்யாணங்களில் அவர்கள் தங்கள் சுய காலிலேயே நிற்க வேண்டும் என்றால் என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியுமா?

உலகம் போற போக்கை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.