திங்கள், 29 ஆகஸ்ட், 2016

நெடுங்கதைகள் படிப்பதில் உள்ள சிரமங்கள்

                      

சமீப காலமாக பொழுதைப் போக்குவதற்கு ஒரு வழியாக கதைகள் படிக்கலாம் என்று முயற்சித்தேன். என் நண்பர் ஒருவர் அன்பளித்த கைக் கணிணியில் (Tablet)  நிறைய கதைகளைச் சேமித்து வைத்தேன்.

அதில் பல கதைகள் ஆங்கிலத்தில் இருந்தன. பரவாயில்லை, நமக்குத்தான் ஆங்கிலம் நன்றாகத்  தெரியுமே என்று சில கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.

இளம் வயதில் ஆங்கிலக் கதைகள் பல படித்திருக்கிறேன். அந்த ஆசிரியர்களைப் பற்றி இப்போதுள்ள இளைஞர்கள் அறிய மாட்டார்கள். கோனன் டாயில், மார்க் ட்வைன், ஆர். எல். ஸ்டீவன்சன், எச்.ஜி.வெல்ஸ், மாப்பசான், இப்படி பல ஆசிரியர்கள்.

இப்போது ஆங்கிலத்தில் பலர் நன்றாகவே எழுதுகிறார்கள். எனக்கு இப்போது, அதாவது வயதானபின் சேர்த்துள்ள பல சொத்துக்களில்  ஒன்று "மறதி". குறிப்பாக மனிதர்களின் பெயர்கள். ஏதாவது ஒரு விசேஷத்தில் புதிதாகப் பலரை சந்திக்க நேரிடுகிறது. யாராவது சிலர் அறிமுகப்படுத்தி வைக்கப்படுகிறார்கள். அப்படி அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அந்தப் பக்கம் போனவுடன் அவர் பெயர் என்ன என்று எவ்வளவு யோசித்தாலும் நினைவிற்கு வருவதில்லை. சரி, போகட்டும் என்று விட்டு விடுவது வழக்கமாய் விட்டது.

அந்த மாதிரி பல கதாசிரியர்களின் பெயர்கள் நினைவிற்கு வருவதில்லை. அதுவாவது தொலையட்டும். கதைக்கு வருவோம். கதையில் கதாபாத்திரங்கள் பலர் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இந்த இங்கிலீஷ்காரன்களின் பெயர்களே ஒரு பெரிய மர்மம். இத்தனை வயதிற்கு அப்புறமும் அந்த மர்மத்தை விடுவிக்க என்னால் முடியவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று: John Fitzgerald Kennedy  என்று ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தது  பலருக்கு நினைவிருக்கலாம். சாதாரண மக்கள் இவரை  Mr.Kennedy கூப்பிடவேண்டும். பெயரை எழுதும்போது முழுசாக John Fitzgerald Kennedy என்று எழுத வேண்டுமாம். அதையே சுருகி எழுதும்போது John F. Kennedy என்று எழுதுகிறார்கள். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை John என்று கூப்பிடலாமாம். பெண்டாட்டி இவரை "ஜோ" என்று செல்லமாகக் கூப்பிடுவாள்.

ஆங்கிலக் கதைகள் ஆரம்பிக்கும்போது ஒருவனை ஒரு பெயரில் அழைத்திருப்பார்கள். இரண்டு பக்கம் கழித்து அவனை இன்னொரு பெயரில் அழைப்பார்கள். இவன் யாருடா, புதிதாக இருக்கிறதே என்று யோசிப்பதற்குள் அவன் காதலி அவனை வேறு ஒரு செல்லப் பெயரில் கூப்பிடுவாள். இந்தக் குழப்பத்திலிருந்து விடுபடுவதற்குள் மளமளவென்று பத்துப் பதினைந்து நபர்கள் கதைக்குள் புகுத்தப்பட்டிருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ஐந்து பெயர்கள்.

ஆச்சா, தலை சுற்ற ஆரம்பித்து விடும். சரி, முதலில் இருந்து வரலாம் என்று திரும்பவும் முதல் பக்கத்திலிருந்து ஆரம்பித்தால், இரண்டு மூன்று பக்கத்திற்கு மேல் கவனம் நிலைப்பதில்லை. புத்தகத்தை மூடி வைத்து விட்டு ஒரு இரண்டு மணி நேரம் கழித்துப் படிக்க ஆரம்பித்தால் கதையை எங்கே விட்டோமென்பது தெரியமாட்டேன்   என்கிறது.

மறுபடியும் முதல் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். இப்படி ஒரு கதையைப் படிப்பதற்கு முதல் பக்கத்தை மட்டும் ஒரு ஐம்பது தடவை படித்திருப்பேன்.

தமிழ்க்கதைகளில் இந்த மாதிரி குழப்பங்கள் கிடையாது. பத்துப் பேர் கதையில் இருந்தாலும் எல்லாம் சுப்பன், குப்பன் என்றிருப்பதால் குழப்பம் வருவதில்லை. ஆனால் என்ன கஷ்டம் என்றால் தமிழ்க் கதைகளை எல்லாம் ஏற்கெனவே படித்து முடித்தாயிற்று. இப்போது வரும் கதைகள் மனதிற்கு உகந்ததாய் இல்லை.

ஆனால் எந்தக் கதைகளைப் படிக்க ஆரம்பித்தாலும் ஒரு சௌகரியம் இருக்கிறது. படிக்க ஆரம்பித்த மூன்றாவது நிமிடம் தூக்கம் வந்து விடுகிறது. வயதான காலத்தில் அது ஒரு பெரிய சௌகரியமல்லவா?

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஆயிரம் அறுவைப் பதிவிட்ட அறுவைத்திலகம்.


  Image result for 1000 number

இது என்னுடைய ஆயிரத்தியோராவது  அறுவை. இந்த சாதனையைப் பாராட்டி எங்கள் தெருவில் உள்ள பதிவர்கள் அனைவரும் (நான் ஒருவன் மட்டுமே< மற்ற பதிவர்கள் எனக்குப் பயந்து ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள்) எனக்கு "ஆயிரம் அறுவைப் பதிவிட்ட அறுவைத் திலகம்" என்ற பட்டத்தை சூட்டி இருக்கிறார்கள்.

இத்தனை அறுவைப் பதிவுகள் போட்டிருந்தும் இன்னும் பதிவுலகில் இந்த அறுவையைத் தாங்காமல் யாரும் உயிரை விட்டதாகத் தெரியவில்லை. நானும் என்னால் முடிந்த மட்டில் அறுவைப் பதிவுகளாகத்தான் போடுகிறேன். ஆனாலும் ரிசல்ட் வரமாட்டேன் என்கிறது.

கொஞ்ச நாள் அபுதாபி போய் அங்குள்ள ஒரு பிரபல பதிவரிடம்  பாடம் கற்றுக்கொண்டு வரலாமா என்றும் ஒரு யோசனை இருக்கிறது. இருந்தாலும் தமிழ்ப் பதிவர்கள் அதற்கெல்லாம் மசிவார்களா என்றும் நினைக்கவேண்டி இருக்கிறது.

அந்த   அபுதாபிப் பதிவர் சமீபத்தில் இந்தியா வருவதாகக் கேள்விப்பட்டேன். அவரை நேரில் சந்தித்து சில பல யோசனைகள் பெறலாம் என்று முடிவு செய்துள்ளேன். அது வரை இப்போது வெளி வரும் சாதாரண அறுவைகளை வைத்து திருப்திப் பட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொல்கிறேன்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

அம்மிக்கல் என்னும் ஆயுதம்

 
                    Image result for அம்மி மிதித்தல்

கல்யாணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் என்று ஒரு சடங்கு இருக்கிறது. வெகு நாட்களுக்கு முன் பொதுவாக பிரம்மண சமூகத்தில்தான் இந்த வழக்கம் நடைமுறையில் இருந்தது. பிறகு மற்ற சமூகத்தினரும் இந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள்.

இந்த சடங்கைப் பற்றி ஆழ்ந்து யோசித்தீர்களேயானால் ஒரு உண்மை புலப்படும். அந்தக் காலத்திலேயே பெண்ணுரிமையைப் பற்றி தீவிரமாக யோசித்தவர்தான் இந்தச் சடங்கை நடைமுறைப் படுத்தியிருக்க வேண்டும்.

கல்யாணம் என்று நடந்து விட்டால் புருஷன் என்ன அடித்தாலும் உதைத்தாலும் பெண் திருப்பி அடிக்க முடியாத சூழ்நிலைதான் அன்று இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் இந்தச் சடங்குகள் நடந்தன. ஒரு புத்திசாலிப் பெண்ணாக இருந்தால் இந்தச் சடங்கின் பொருளை உணர்ந்திருப்பாள்.

அந்தக் காலத்தில் அம்மியும் குழவியும் இல்லாத வீடே கிடையாது. பிற்காலத்தில் மிக்சி, கிரைண்டர் வந்த பிறகும் கூட அம்மி தொடர்ந்து வீடுகளில் இருக்கிறது. காரணம் நமது கடைசி யாத்திரையின்போது இது கண்டிப்பாகத் தேவைப்படும். தவிர இந்த அம்மியும் குழவியும் எளிதில் கண்ணில் படக்கூடிய இடத்தில்தான் போடப்பட்டிருக்கும்.

ஒரு நிலையில் புருஷன் தொந்தரவு சகிக்க முடியாமல் போகிறது என்று வைத்துக்  கொள்ளுங்கள். அந்த அபலைப் பெண் என்ன செய்வாள்? பெண்களுக்கு கண்ணீரே ஆயுதம் என்றாலும் அந்தக் கல் நெஞ்சுக்காரன் அந்த ஆயுதத்திற்கு மசியாமல் போனால் என் செய்வது?இங்குதான் அந்தப் பெண் கல்யாணத்தின்போது நடந்த அம்மி மிதித்த காட்சியை நினைவு கூர்வாள். ஆஹா, இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் உதவுவதற்காக அல்லவா அந்தச் சடங்கை வைத்தார்கள். இந்த ஞானம் எனக்கு இது வரையில் தோணாமல் போயிற்றே என்று ஞானோதயம் பிறக்கும்.

அன்று இரவு புருஷன் என்கிற மிருகம் குடித்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் போது அம்மிக் குழவியை எடுத்து அவன் தலையில் ஒரே போடாகப் போட்டு விட்டால் வேலை முடிந்தது. அவளிடம் கத்தியோ, துப்பாக்கியோ இருக்க வாய்ப்பு இல்லை. உடனே கிடைக்கக்கூடிய ஆயுதம் அம்மிக்குழவி ஒன்றுதான். அதை உபயோகிக்க வேண்டியதுதான்.

நான் ஏதோ கற்பனையில் இந்த மாதிரி சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். நான் சிறுவனாக இருக்கும்போதே இந்த மாதிரிக் கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்றிலிருந்து இது வரை இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி பல கணவர்களை அவர்கள் பெண்டாட்டிகள் மேலுலகம் அனுப்பியிருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு கூட செய்தித்தாள்களில் இந்த மாதிரி செய்தி ஒன்று படித்த நினைவு இருக்கிறது.

பெண்டாட்டிகள் மட்டுமல்ல. பல புருஷர்களும் தங்கள் எதிரிகளை இவ்வாறுதான் தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள். "16 வயதினிலே" சினிமாவில் கமலஹாசன் வில்லனைத் தீர்ப்பதற்கு இந்த டெக்னிக்கைத் தான் கையாண்டது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆகவே இந்த அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு மிகவும் அர்த்தமுள்ளது என்று கூறிக்கொண்டு பதிவை நிறைவு செய்கிறேன்.ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

மர்மம் அவிழ்ந்தது.

என்னுடைய "ஒரு நேர் மறைப் பதிவு"
http://swamysmusings.blogspot.com/2016/08/blog-post_14.html
என்னும் பதிவில் போட்டிருந்த ஓவியத்தைப் பலரும் குறிப்பிட்டிருந்தார்கள்.அந்த ஓவியம் யாரால் வரையப்பட்டது என்ற மர்மம் இன்று அவிழ்ந்தது. நன்றி: திரு பாபு அவர்கள்.

அந்த ஓவியம் பிரபல பதிவர் திருமதி மனோ சாமிநாதன் அவர்களால் வரையப்பட்டது என்று இன்று  அன்பர் திரு. பாபு அவர்கள் மூலம் தெரியவந்தது.

அந்தப் பதிவின் சுட்டி:

http://muthusidharal.blogspot.com/2010/04/blog-post.html

பதிவின் பெயர்: முத்துச்சிதறல்

அந்த ஓவியத்தின் உரிமையாளர் திருமதி மனோசாமிநாதன் அவர்களின் அனுமதி இல்லாமல் அந்த படத்தை என் பதிவில் உபயோகப்படுத்தியமைக்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இது தெரியாமல் நேர்ந்த தவறு. ஆனாலும் ஒரு விதத்தில் அவர்களின் ஓவியத்திற்கு கிடைக்கப்பட்ட ஒரு பாராட்டு எனக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

இறப்புக்கு காரணம் ஜாண்டிஸ்

                         Image result for கல்லீரல்

சமீபத்தில் ஒர பிரபல மனிதர் காலமானதற்கு கூறப்பட்ட காரணம் ஜாண்டிஸ். அதாவது கல்லீரலில் பாதிப்பு.

ஜாண்டிஸ் என்று ஏன் சொல்லுகிறார்கள் அதை ஏன் தமிழில் "காமாலை" என்று சொல்வதில்லை என்றால் ஒரு இமேஜுக்காகத்தான். காமாலை என்றால் ஏதோ பிச்சைக்காரனுக்கு வரும் நோய், ஜாண்டிஸ் என்றால் மேல்தட்டு மக்களுக்கு வரும் ஒரு நோய் என்ற மனோபாவம் நம் மக்களிடையே இருக்கிறது.

காய்ச்சல் வந்திருக்கிறது என்ற சொல்லமாட்டான். லேசா ஃபீவருங்க என்பான்.

சரி, இப்போ காமாலைக்கு வருவோம். காமாலை என்பது ஒரு சாதாரண வைரஸ் தொற்று நோய். கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் இது. கல்லீரல் கொஞ்சம் சுணக்கமாக வேலை செய்யும். அதனால் இரத்தத்தில் சில மாறுபாடுகள் ஏற்படும். கண்ணிலுள்ள வெள்ளைத் திரை மஞ்சள் நிறமாக மாறும். நோய் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் தோலும் மஞ்சளாக மாறும்.   ஆகாரத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தால் சில நாட்களில் தானாகவே சரியாகிவிடக்கூடிய ஒரு நோய் இது.

ஆகவே காமாலை என்பது காய்ச்சல் தலைவலி மாதிரி ஒரு சாதாரண நோய்தான். ஆனால் கல்லீரலில் வேறு பல நோய்களும் வரும். அப்போதும் காமாலை வந்தது போன்ற அறிகுறிகளே தென்படும். அதனால் இதை சாதாரண காமாலை என்று கருதி நாட்டு வைத்தியம் செய்தால் குணம் கிடைக்காது. நோய் அதிகமான பிறகுதான் டாக்டரிடம் போவார்கள்.

அப்போது நோய் மிகவும் தீவிரமடைந்து சிகிச்சைக்கு அப்பாற்பட்ட நிலையை அடைந்திருக்கும். டாக்டர் முயற்சி செய்து பார்ப்பார். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அந்த முயற்சி பலனளிக்காது. நோயாளி இறந்து விடுவார். அவர் காமாலை வந்து இறந்து விட்டார் என்றுதான் காரணம் சொல்வார்கள். கல்லீரலில் உண்டான நோயைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள்.

கல்லீரல் கெடுவதற்கு முக்கிய காரணம் நம்ம டாஸ்மாக்தான். ஆல்கஹால் எவ்வாறு கல்லீரலைப் பாதிக்கிறது என்பது ஒரு சீரியஸ் பாடம். பயோகெமிஸ்ட்ரி படித்தவர்கள் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும். அப்படி டாஸ்மாக்கினால் கல்லீரல் கெட்டுப்போய் மரணத்தைத் தழுவுபவர்களையும் "காமாலை" வந்து இறந்து விட்டதாகத்தான் கூறுவார்கள். அதுதான் ஒரு நாகரிகமாகப் பின்பற்றப்படுகிறது.

"பின்னே என்னங்க குடிச்சு செத்துப் போய்ட்டாருன்னா" சொல்ல முடியும் என்று கேட்பவர்களுக்கு பதில் ஏதும் இல்லை. ஆனாலும் எல்லோருக்கும் அந்த நபர் இறந்ததற்கான  நிஜக் காரணம் தெரியும்.
ஆனாலும் நாகரிகம் கருதி வெளியில் பேசுவதில்லை. இது சரிதான். ஆனால் இந்த சாவுக்கு அப்புறமும் டாஸ்மாக் போவதை நிறுத்துவார்களா என்றால் நிறுத்த மாட்டார்கள். அவன் தலைவிதி, போய்ட்டான், நானெல்லாம் யாரு, எமனுக்கே மச்சானாக்கும் என்று சவால் விடுபவர்களே அதிகம்.

வாழ்க டாஸ்மாக், வளர்க குடிமக்கள்.

                          Image result for டாஸ்மாக் கடை

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

ஒரு நேர்மறைப் பதிவு

                    Image result for சூரிய உதயம்
இன்று காலை எழுந்திருந்தேன். இப்போதெல்லாம் காலையில் எழுந்திருப்பதே ஒரு ஆனந்தம். ஆஹா, இன்னும் ஒரு நாள் நான் இந்த சுவர்க்க பூமியில் இருக்கப்போகிறேன் என்பதே ஒரு ஆனந்தமல்லவா?

பல் விளக்கி வந்தவுடன் சூடாக ஒரு காப்பி கிடைத்தது. காப்பி சூப்பராக இருந்தது. பிறகு நடைப் பயிற்சிக்குப் போனேன். தெருக்களெல்லாம் பளிச்சென்று சுத்தமாக இருந்தன. துப்புரவுத் தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

நாளை சுதந்திர தினமல்லவா? மக்களுக்கு தேச பக்தி பொங்கி வழிவதை என் இரு கண்ணாலும் பார்த்தேன்.

கார்க்காரர்கள் நடைப் பயிற்சிக்காரர்ளைக் கண்டவுடன் வேகத்தைக் குறைத்து தள்ளிப்போனார்கள். பைக்கில் போகிறவர்கள் சைக்கிள் வேகத்தில் போனார்கள். நடைப் பயிற்சி முடித்தவுடன் வீட்டிற்கு வந்து குளித்து விட்டு ரெடியானவுடன், எனக்கு மிகவும் பிடித்த இட்லி-சாம்பார் டிபன் ரெடியாக இருந்தது.

ஒரு அரை டஜன் இட்லிகளை சாம்பாருடன் விழுங்கி விட்டு அப்படியே சேரில் சாய்ந்தேன்.  அன்றைய பேப்பர்களைப் பார்த்தேன். எல்லாம் நல்ல செய்திகளாகவே இருந்தன. அதில் முக்கியமான செய்தி- ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்தை அதிகரிக்கப் போவதான செய்தி. அப்படி வரும் அதிக ஓய்வூதியத்தை என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

 அப்படியே கொஞ்சம் தூங்கி விட்டேன் போல இருக்கிறது. வீட்டுக்காரி என்னை எழுப்பி சாப்பிடக்கூப்பிட்டாள். பகல் சாப்பாடு பிரமாதமாக இருந்தது. சாப்பிட்டு விட்டு கட்டிலில் படுத்து நன்றாகத் தூங்கினேன்.

மாலை 5 மணிக்கு விழித்தவுடன் நல்ல மணமான காப்பி வந்தது. குடித்து விட்டு கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து இந்தப் பதிவை தட்டச்சினேன். மனம் நிறைவாக இருந்தது.

நான் எதிர்மறையாளனாக மாறிவிட்டேன் என்று பலரும் குறைப்பட்டுக்கொண்டதால் இந்த நேர் மறைப் பதிவை எழுதினேன். இதிலும் போதுமான அளவு நேர்மறை இல்லையென்றால் பின்னூட்டத்தில் கூறவும். ஆனால் நான் அதற்கு ஒன்றும் செய்யமுடியாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

          

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

சொந்த வீடு வைத்திருப்பதின் கஷ்டங்கள்.

                               
"கட்டினவனுக்கு ஒரு வீடு, கட்டாதவனுக்கு ஊரெல்லாம் வீடு"இந்தப் பழமொழியைக் கேட்டிராதவர்கள் அபூர்வம். எப்பவோ வாங்கின சைட்டில் வீடுகட்ட கடன் வாங்கி, ஊரெல்லாம் அலைந்து ஒரு கொத்தனாரைப் பிடித்து, அவருக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் வாங்கிக் கொடுத்து, அவர் வேலை செய்யும்போதெல்லாம் பக்கத்தில் நின்று ஒரு வீடு கட்டினவனுக்குத்தான் அதிலுள்ள சிரமங்கள் தெரியும். 

வீடு கட்டி முடித்து அந்த வீட்டிற்கு "புது மனைபுகு விழா" நடத்தி குடி வந்த பிறகுதான் ஒருவனுக்கு சோதனைகள் ஆரம்பமாகின்றன. 

வீட்டை முழுவதும் முடித்தபின் "புது மனைபுகு விழா" நடத்துவது சம்பிரதாயமில்லை. ஆகவே "புது மனைபுகு விழா" முடிந்த பின் வீட்டு வேலைகள் பல பாக்கி இருக்கும். வீட்டை இது நாள்வரை கட்டின கட்டிட கான்ட்ராக்டர் "புது மனைபுகு விழா" விற்கு வந்து அவருக்குண்டான வெகுமதிகளை வாங்கிப்போன பின் கண்ணிலேயே தென்படமாட்டார். பேசின தொகைக்கு மேல் 
அவர்  வாங்கியிருப்பார். அதனால் இனி இந்த வீட்டுக்கு வேலை செய்தால் காசு வராது என்று அவருக்குத் தெரியும்.  

இந்த நுணுக்கம் வீடு கட்டுகிறவனுக்கு எப்போதும் புரிவதில்லை. பட்டுக் கெட்டபின்தான் ஞானம் வரும்.  அந்த கான்ட்டிராக்டரை இனி எப்போதும் பிடிக்க முடியாது என்பதுவும் அப்போதுதான் புரியும். அவருடைய செல்போனும் எப்போதும் அணைக்கப்பட்டிருக்கும். 

அந்த வேலைகளை முடிக்காமல் குடி போவதும் சாத்தியமில்லை. இந்த வீட்டுக் கான்ட்டிராக்டர்கள் ஒரு எழுதாத சட்டம் வைத்திருக்கிறார்கள். அதாவது ஒரு கான்ட்ராக்டர் கட்டின கட்டிடத்திற்கு வேறு எந்தக் கான்ட்ராக்டரும் வரமாட்டான். வீட்டுக்காரன் நிலை திரிசங்கு சொர்க்கம்தான்.

எப்படியோ தெரிந்தவர்களைப் பிடித்து ஒரு கொத்தனார் ஏற்பாடு பண்ணி பாக்கி வேலைகளை முடிப்பதற்குள் ஏகப்பட்ட அலைச்சலும் பணமும் செலவாகி இருக்கும். எப்படியோ வீட்டு வேலைகளை முடித்து வீட்டிற்கு குடி வந்தாயிற்று. இனிமேல்தான் சோதனைகள் அடுக்கடுக்காக காத்திருக்கின்றன என்கிற விபரம் ஒவ்வொன்றாகப் புரியும்.

குழந்தைகளைப்  பக்கத்தில் இருக்கும் நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும். இதற்கு அந்த பள்ளிக்கூட நிர்வாகிகள் கேட்கும் நன்கொடைக்கு இன்னும் ஒரு வீடே கட்டி விடலாம். எப்படியோ, யார் யார் காலிலோ விழுந்து கொஞ்சம் சலீசான நன்கொடையில் இடம் வாங்கியாயிற்று. அவர்களைப் பள்ளிக்கூடத்திற்கு கூட்டிக்கொண்டுபோய் திரும்பக்கூட்டிவர ஆட்டோ அல்லது வேன் ஏற்பாடு பண்ணவேண்டும். புது காலனி ஆகையால் அவன் ரொம்பவுமே பிகு பண்ணுவான். சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். 

இதற்கு அப்புறம் தான் ஆபீஸ் போய்வர ஏற்பாடு செய்யவேண்டும். இது அவர் உத்தியோகம் பார்க்கும் இடத்தைப் பொறுத்தது. பஸ் வசதி பக்கத்தில் இருந்தால் அவர் பிழைத்தார். அந்த பஸ் நிலையத்திற்கும் சைக்கிள் (சைக்கிள் யார் இப்போது வைத்திருக்கிறார்கள்?) மொபட் அல்லது  ஸ்கூட்டரில் போய் அங்குள்ள ஸ்டேண்டில் வைத்து விட்டு பஸ் பிடிக்கவேண்டும். பின்பு மாலை திரும்பி வரும்போது வீட்டிற்கு வேண்டிய காய்கறி மற்ற சாமான்களை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேரவேண்டும்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக குடும்பத்தினர், அதாவது மனைவி மக்கள் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மற்ற பொருட்கள் போனால் திரும்ப சம்பாதித்துக் கொள்ளலாம்.

வீட்டிற்கு தண்ணீர் கனெக்ஷன் மற்றும் மின் இணைப்பு முதலிலேயே வாங்கியிருப்பீர்கள். ஆனால் அவை கட்டிடம் கட்டும்போது வாங்கினதாகையால் அவைகளின் உபயோகக் கட்டணம் வணிக ரீதியில் இருக்கும். அதை குடியிருப்பு ரீதிக்கு மாற்றவேண்டும். அதற்குண்டான ஆபீசைக் கண்டு பிடித்து, அதற்குண்டான ஆளைக் கண்டுபிடித்து, அவருக்குண்டான மாமூலைக் கொடுத்தால் காரியம் கச்சிதமாக முடியும். இல்லாவிட்டால் லோ லோவென்று நாய் படாத பாடாக அலைய விட்டு விடுவார்கள்.

அடுத்தது ரேஷன் கார்டை புது விலாசத்திற்கு மாற்றுவது. இதை நீங்களே செய்ய ஆசைப்பட்டு முயற்சித்தீர்களானால் ஆறு மாதத்திற்கு நீங்கள் ஆபீசுக்கு லீவு போட வேண்டி வரும். அதற்குண்டான சரியான ஆள் யாரென்று உங்கள் ஆபீஸ் பியூன் தெரிந்து வைத்திருப்பான். அவனிடம் விஷயத்தை ஒப்படைத்தீர்களானால் ஒரு மாதத்தில் காரியம் முடிந்து விடும். என்ன, பணம் சில ஆயிரம் செலவு ஆகும். பணம் கிடக்கிறது, விடுங்கள், இன்று போனால் நாளை வந்து விட்டுப் போகிறது. காரியம் ஆயிற்று பாருங்கள். அதுதானே நமக்கு வேண்டியது.

ஓரளவு அரசு சடங்குகளை முடித்தாயிற்று. இனி வரும் சோதனைகள்தான் முக்கியமானவை. தண்ணீர் பைப் ஆங்காங்கே லீக் ஆகும். அதற்கு பிளம்பரைக் கண்டுபிடிப்பது கடவுளைக் கண்டு பிடிப்பது போல்தான். அதே போல் எலெக்ரிசிடியும் அவ்வப்போது தொந்திரவு கொடுக்கும். இதையெல்லாமாவத் எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் இந்த மழைக் காலம் வருகிறதே அதை சமாளிக்கத்தான் பெரிய சாகசங்கள் புரிய வேண்டி இருக்கும்.

இத்துடன் போதும் என்று நினைக்கிறேன். இனி யாரும் சொந்த வீட்டிற்கு ஆசைப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 


திங்கள், 8 ஆகஸ்ட், 2016

ஆசை இருக்கு காதல் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க

இந்தப் பதிவிற்கும் சுவாதி-ராம்குமார் நிகழ்விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்து கொள்கிறேன்.

பொதுவாக பலரும் தங்கள் வாழ்க்கையை இன்ன மாதிரி அமைத்துக் கொள்ளவேண்டும் என்று ஒரு கனவு வைத்திருப்பார்கள். பெரிய வேலை, பெரிய வீடு, அழகான மனைவி, பெரிய கார் என்று இப்படி ஆசை வைத்திருப்பார்கள். இப்படி ஆசை வைப்பதில் தவறில்லை. ஆனால் அவைகளை அடைய தேவையான உழைப்பைத் தருவதற்கு அவர்கள் முன் வருவதில்லை.

முதலில் படிப்பு. படிக்கும்போது படிப்பில் கவனம் வைத்து நல்ல மார்க்குகள் வாங்கி மேல் படிப்புகள் படித்து தன்னை ஒரு நல்ல உத்தியோகத்திற்கு தயார் செய்து கொள்ளவேண்டும். அப்படி படிக்கும் காலத்தில் ஆணாகட்டும், பெண்ணாகட்டும், காதலில் ஈடுபட்டால் அவர்கள் வாழ்க்கை சின்னாபின்னமாகி விடும் என்பதை உணர்வதில்லை.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ என்னென்ன தேவை என்று கூடப் பிரியாத வயதில் காதலில் ஈடுபடுகிறவர்கள் புத்தியில்லாதவர்கள். அப்படி ஈடுபடும் பலரும் சராசரிக் குடும்பத்தில் அல்லது ஏழ்மைக் குடும்பத்தில் இருந்து வருகிறார்கள். இப்படி நடைபெறும் காதல் கல்யாணங்கள் நூற்றுக்கு தொண்ணூறு சதம் தோற்றுப் போகின்றன.

வீட்டில் ஆடு மேய்ப்பவனுக்கு காதல் என்ன வேண்டிக்கிடக்கிறது. இப்படிக் காதல் செய்பவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் பல பேர். காதல் புனிதமானதாம். ஆஹா, புனிதம் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் வயிறு நிறைந்து விடுமா?

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை என்று ஏற்பாடு செய்து அவர்களை முன்னேற்றுவதை விடுத்து, அவர்கள் தலைவர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடம் என்னவென்றால் நீ மேல் ஜாதியில் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து கொள், சீக்கிரம் முன்னேறலாம் என்று சொல்லிக்  கொடுக்கிறார்கள்.

இந்த மேல் ஜாதிப் பையன்கள் ஒருவரும் இப்படி தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பெண்கள் மட்டும் ஏன் இப்படி புத்தி கெட்டுப்போய் அலைகிறார்கள் என்பது புரியவில்லை? ஜாதிகள் மறைவது என்பது இந்தியாவில் சாத்தியமில்லை.

உண்மை கசக்கும். பொய்தான் இனிக்கும். எனக்குப் பொய் பேசத் தெரியவில்லை என்பது ஒரு குறையே.  ஜாதி சமரசம் பேசுபவர்கள் இந்தப் பதிவைப் படிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்படிப் படித்து விட்டு என்மீது ஆங்காரம் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

நின்று போன கல்யாணங்கள்

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் அந்தந்த வீட்டுப்பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்டது. குடும்ப பாரம்பரியத்தைப் பார்த்து மட்டுமே கல்யாணங்கள் நிச்சயிக்கப்பட்ட காலம் அது. கல்யாணத்தில் தாலி கட்டும் வரை பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க மாட்டார்கள்.

கல்யாணம் முடிந்து விட்டால் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றுதான் அந்தக் காலத்துப் பெண்கள் வாழ்க்கை நடத்தினார்கள். மணவாழ்வில் பெரிதாக ஏதும் பிரச்சினைகள் அந்தக் காலத்தில் உருவாகவில்லை. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலம் அது. வாழ்க்கையில் சிக்கல்கள் தோன்றாதிருந்த காலம் அது. அப்படி சிக்கல்கள் தோன்றினாலும் வீட்டுத் தலைவரின் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப் படுவார்கள்.

உடல் ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் பல மாறுதல்கள் உண்டு. பெண் சீக்கிரம் முதிர்ச்சி அடைகிறாள். ஆண் அவ்வளவு சீக்கிரம் முதிர்ச்சி அடைவதில்லை. அறுபது வயது ஆண் இளமையாகத் தெரிவான். ஆனால் அறுபது வயது பெண்ணின் உருவ மாற்றம் வெகுவாகத் தெரியும். இதனால்தான் கல்யாணத்தின்போது அந்தக் காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வயது வித்தியாசம் எட்டிலிருந்து பத்து வரை இருக்குமாறு பார்த்துக்   கொண்டார்கள்.

காலங்கள் எவ்வளவு வேகமாக மாறுகின்றன. இன்றைய கல்யாண சந்தையில் கல்யாணத்திற்கு பெண்ணோ மாப்பிள்ளையோ பார்க்க வேண்டுமானால் அதற்கென்று உள்ள திருமண தகவல் மையங்களில் பதிவு செய்ய வேண்டும். அல்லது ஒரு நல்ல புரோக்கரைப் பிடிக்க வேண்டும். முன்பெல்லாம் பெண்ணுக்கு வரன் அமைவதுதான் சிரமம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது பையனுக்குப் பெண் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது.

ஏனெனில் பெண்கள் இப்போது படித்து நல்ல சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கிறார்கள். அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்பத்தான் மாப்பிள்ளை பார்க்க வேண்டியிருக்கிறது. பெண்ணுக்கு பையனைப் பிடித்தால்தான் மேற்கொண்டு சம்பந்தம் பேச முடியும். பையனுடைய வயது பெண்ணின் வயதை விட ஒன்று அல்லது இரண்டு வருடங்கள்தான் அதிகமாக இருக்கலாம் என்று இன்றைய யுவதிகள் விரும்புகிறார்கள்.

கல்யாணம் முடிந்த பிறகு கூட்டுக் குடும்பத்தில் அவர்கள் இருக்க மாட்டார்கள். பையனுக்கு சகோதர சகோதரிகள் இருக்கக்கூடாது. மாமியார் இருக்கலாம். மாமனார் இல்லாமல் இருந்தால் நல்லது. ஒரு ஐந்து வருடங்களுக்கு குழந்தைகள் கூடாது. இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள். இவை எல்லாம் சரியாக இருந்து கல்யாணம் நிச்சயம் செய்த பிறகும் பெண்கள் தங்கள் முடிவுகளை மாற்றலாம். மாற்றுகிறார்கள்.

எனக்குத் தெரிந்து அப்படி நின்று போன கல்யாணங்கள் சிலவற்றைப் பற்றிக் கூறுகிறேன். ஒரு பெண்ணுக்கு ஏற்கனவே காதலன் மூலம் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தப் பெண்ணையும் ஒருவன் திருமணம் செய்ய முன் வருகிறான். நிச்சயதார்த்தம் முடிந்தது. கொஞ்ச நாள் கழித்து அந்தப் பெண் பையனை சினிமாவுக்குப் போகலாம் என்று கூப்பிடுகிறாள். அவன் இன்று எனக்கு ஆபீசில் வேலை இருக்கிறது, நாளை போகலாம் என்று சொல்லியிருக்கிறான். அந்தப் பெண் "ப்ளெடி ஃபூல்" என்று சொல்லி விட்டு போனை வைத்து விடுகிறாள்.

அந்தப் பையன் என்ன செய்ய முடியும்? வீட்டிற்கு வந்தவுடன் அவன் அம்மாவுடன் இந்தப் பெண்ணுடன் என்னால் வாழ்க்கை நடத்த முடியாது என்று சொல்லி விட்டான். கல்யாணம் நின்று விட்டது.

இன்னொரு நிகழ்ச்சி. கல்யாணம் முடிந்து விட்டது. பெண்ணும் மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டிற்குப் போய் சாப்பிட்டிருக்கிறார்கள். மாப்பிள்ளை சாப்பிட்ட பிறகு கையை நக்கியிருக்கிறான். திரும்ப கல்யாண மண்டபத்திற்கு வந்தவுடன் பெண் தாலியைக் கழட்டி மாப்பிள்ளையிடம் கொடுத்து விட்டு இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

இப்படியெல்லாம் உலகில் நடக்கிறது. கல்யாணம் பண்ணப் போகும் மாப்பிள்ளைகள் ஜாக்கிரதையாகப் பெண் பார்க்கவும்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

செய்நன்றியை எதிர் பார்ப்பது முட்டாள்தனம்

                               Image result for திருவள்ளுவர் images

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு - குறள்.

ஒரு வேளை இந்தக் குறள் திருவள்ளுவர் காலத்திற்குப் பொருத்தமாய் இருந்திருக்கலாம். ஆனால் நிச்சயம் இந்தக்
காலத்திற்குப் பொருந்தாது. என்னடா இவன் சுத்தக் கிறுக்கனா இருக்கானே என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு வகையில் நான் கிறுக்கன்தான். பதிவுலகில் கிறுக்கிக்கொண்டு இருக்கிறேனே, அதிலிருந்தே தெரியவில்லையா, நான் முழுக்கிறுக்கன் என்று?

விஷயத்திற்கு வருவோம். நன்றி என்பது என்ன? ஒருவர் இன்னொருவருக்கு உதவி செய்தால், அந்த உதவி பெற்ற நபர், அந்த உதவியைச் செய்தவருக்கு நன்றியுடன் இருக்கவேண்டும். இது ஓரளவுக்கு நியாயமானதாய்த்தான் தெரிகிறது. ஆனால் இந்த நன்றி உணர்வை எத்தனை காலத்துக்கு வைத்திருப்பது?

உதவி பெற்றவன் தன்னுடைய ஆயுள் காலத்திற்கும் இந்த நன்றியை மறவாதிருக்கவேண்டும் என்றால் பிரச்சினை இங்குதான் உருவாகிறது. ஒருவன் தன் ஆயுள் காலத்தில் பலரிடமிருந்து பலவிதமான உதவிகளைப் பெற்றிருப்பான். அத்தனை உதவி செய்தவர்களுக்கும் இவன் நன்றி பாராட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்றால் இவன் வேறு ஒரு வேலையும் செய்ய முடியாது.
தன்னையும் தன் குடும்பத்தையும் எப்படிக் காப்பாற்றுவான்?

உதாரணத்திற்கு ஒருவனுடைய பெற்றோர்களை எடுத்துக்கொள்ளுங்கள். இவன் பிறந்ததிலிருந்து இவனை வளர்த்து ஆளாக்கி, படிப்பித்து, வேலையில் சேர்த்து, கல்யாணம் செய்து வைத்து இவனை ஒரு மனிதனாக்கியவர்கள் அவர்கள்தான். அவர்கள் செய்த சேவைக்கு ஈடு இணை உண்டோ? ஆகவே ஒவ்வொருவனும் தன்னுடைய பெற்றோர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பாராட்டிக்கொண்டு இருக்கவேண்டும். இதுதானே நியாயம்!

நியாயத்தைப் பார்த்துக்கொண்டு குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு இருந்தால் ஒருவன் முன்னேறுவது எப்போது? படிச்சமா, அமெரிக்கா போனமா, அங்கேயே செட்டில் ஆனமா, கல்யாணம் கட்டுனமா, குழந்தை, குட்டி பெத்தமா, ஒரு வீடு வாங்கினமா, நெண்டு கார் வாங்கினமா அப்படீன்னு இருந்தாத்தான் ஒருவன் முன்னேறியதற்கு அடையாளம். அதை விட்டு விட்டு இங்க உள்ளூர்ல ஒரு குமாஸ்தா உத்தியோகம் பார்த்துட்டு அப்பா அம்மாவைச் சுத்திச் சுத்தி வந்தா அது என்ன வாழ்க்கைங்க?

இதே மாதிரிதான் உதவி செஞ்ச மத்தவங்களையும் ஒரு தேங்க்ஸ் சொல்லிவிட்டு மறந்து விடவேண்டும். அப்படி மறக்காமல் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் "அன்னிக்கு நீங்க உதவி பண்ணாட்டா நான் வாழ்க்கையில முன்னேறியே இருக்க முடியாதுங்க" என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இருக்கவேண்டியதுதான்.

மேலே போவதற்கு ஏணி அவசியம்தான். அதற்காக மேலை போனபின்பும் அந்த ஏணியையே பிடித்துக்கொண்டிருந்தால் அதற்கு மேலே போவது எப்படி? ஏறி வந்த ஏணியை உதைத்துத் தள்ளிவிட்டு அடுத்த ஏணியைப் பிடிக்க வேண்டும். அதுதான் வாழ்க்கையில் முன்னேற வழி.

இதைப் படிப்பவர்கள் அனைவரும் இந்த அறிவுரைகளை கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னேறுவார்களாக!
                                     Image result for ஏணிப்படிகள்