வியாழன், 26 நவம்பர், 2015

இது என்னுடைய 900 ஆவது பதிவு

                          Image result for 900
முதலில் ஒரு சந்தேகம். "900 ஆவது" என்ற சொல், அதாவது எண்ணையும் எழுத்தையும் இணைத்து உருவாக்கிய சொல், இலக்கண விதிகளின்படி சரியா? "தொள்ளாயிரமாவது" என்று எழுதியிருக்கவேண்டுமோ? சரி, இதை இலக்கண நிபுணர்களின் விவாதத்திற்கு  விட்டு விட்டு நம்ம சமாச்சாரத்திற்கு வருவோம்.

இதுவரை, இந்தப் பதிவோடு சேர்த்து தொள்ளாயிரம் (எதுக்கு வம்பு, இலக்கணப்பிரகாரமே எழுதி விடுவோம்) பதிவுகள் எழுதியாகி விட்டது. வயதும் 80 ஆகி விட்டது. மூளையின் உயிரணுக்கள் குறைந்து கொண்டே போகின்றன. ஒரு வித சோம்பல் மனதையும் உடலையும் பீடிக்கிறது. பதிவு எழுத ஆர்வம் குறைகிறது.

இந்தப் புலம்பல்களை பதிவில் எழுதி என்ன ஆகப்போகிறது? பதிவுலக நண்பர்கள் சில ஆறுதல் வார்த்தைகள் கூறலாம். ஒரு நண்பர் (எதிரி நண்பர் என்று சொல்லலாம் என்று கருதுகிறேன்) நீங்கள் பதிவு எழுதாவிட்டால் உலகம் அஸ்தமித்துப் போய்விடுமா என்று கூடக் கேட்டார்.  இன்னொருவர் முனைவர் பட்டம் வாங்கி என்ன பயன்? பகுத்தறிவு இல்லையே என்கிறார்.

ஆகவே இந்த இரண்டு கருத்துக்களுக்கும் ஒரு தீர்வு காணவேண்டும். பத்து நாளாக நான் பதிவு எழுதவில்லை. உலகம் அஸ்தமித்துப் போன மாதிரி தோணவில்லை. ஆகவே நான் பதிவு எழுதுவதற்கும் உலகம் அஸ்தமிப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்று நிரூபணம் ஆகி விட்டது.

ஆனால் சென்னையில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி மக்களை மிகவும் வதைத்து விட்டது. நான் பதிவு எழுதாததிற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று ஆராய வேண்டும். என்னமோ "கேயாஸ் தியரி" என்று ஒன்று இருக்கிறதாமே? நம் கமல் கூட தசாவதாரம் படத்தில் இது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அது பிரகாரம் இந்த நிகழ்வுகளுக்குள் என்ன தொடர்பு என்று ஆராயவேண்டும். யாராவது இந்த ஆராய்ச்சிக்கு மான்யம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

                                          Image result for சென்னை வெள்ளம்

அடுத்து பகுத்தறிவுக்கும் முனைவர் பட்டத்திற்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி ஆராயவேண்டும். இது இன்றைய வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த ஆராய்ச்சியை எப்படி செய்வது என்று இந்த துறையில் உள்ள நிபுணர்கள் கருத்துகள் சொன்னால் என்றென்றும் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.

ஆஹா, எப்படியோ சோம்பிக் கிடந்த நரம்புகளைத் தட்டியெழுப்பி ஒரு பதிவைத் தேத்தியாகி விட்டது. என் பிதற்றல்களைத் தவறாது படித்து வரும் நண்பர்களுக்கு நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம்.

வெள்ளி, 20 நவம்பர், 2015

நாம் எல்லோரும் வள்ளல்களே


                                            Image result for திருடன்
முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரிவள்ளல் என்று நம் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. நம்மையும் இப்படி யாராவது வள்ளல் என்று போற்ற மாட்டார்களா என்று ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ ஒரு மூலையில் ஒரு நப்பாசை ஒட்டிக்கொண்டிருக்கும். உங்களுக்கெல்லாம் எப்படியோ தெரியாது, ஆனால் என் மனதிற்குள் அப்படி ஒரு ஆசை ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

அந்த ஆசையைத் தீர்க்கவென்றே இப்போது தீவிரவாதிகள் கிளம்பியிருக்கிறார்களாம். அவர்கள் நம்மை வாரிவழங்கும் வள்ளல்கள் என்று போற்றுகிறார்களாம். எப்படி என்று கேட்கிறீர்களா?

தீவிரவாதிகளுக்கு இன்று முக்கியமாகத் தேவைப்படுவது ஒரு பெயர் அதாவது ஒரு Identity. உங்கள் பெயரை வைத்து ஒரு தீவிரவாதி தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். எப்படி?

பேங்க் அல்லது மொபைல் டீலர், கேஸ் கம்பெனி இப்படி பல இடங்களில் உங்களுடைய அடையாளத்தை நிரூபிக்க பல ஆதாரங்களைக் கேட்கிறார்கள். ரேஷன் கார்டு, வாக்குரிமை அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு இப்படி பல ஆதாரங்களின் நகல்களை இங்கு நாம் பாரிவள்ளல் ரேஞ்சில் வாரி வழங்குகிறோம். தற்சமயம் மோடியின் தயவால் அவைகளை நாமே சர்டிபை பண்ணிக்கொள்ளலாம்.

ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரி ஆதாரம் கேட்கிறார்கள். பேங்கில் ரேஷன் கார்டு செல்லாது. டெலிபோன் ஆபீசில் வாக்காளர் அட்டை செல்லாது. இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனி ரூல்ஸ் வைத்திருக்கிறார்கள். இப்படி அடுத்தடுத்து இந்த நகல்களைக் கேட்பதால் நான் அனைத்து அடையாள ஆதாரங்களையும் பத்துப்பத்து காப்பி எடுத்து அனைத்தையும் ஒரு பையில் வைத்திருக்கிறேன். இம்மாதிரி ஆதாரம் கேட்கும் இடங்களுக்குச் சென்றால் அந்தப் பையை அப்படியே கொண்டு போய்விடுவேன். அவர்கள் அட்ரஸ் புரூப் என்றால் அந்தப் பையில் இருக்கிம் அனைத்துக் காப்பிகளையும் அவர்கள் முன்னால் போட்டு உங்களிக்கு எத் பிடிக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவது வழக்கம்.

இந்த ஆதாரங்களைக் கொடுத்து நம் காரியங்களை முடித்தவுடன் இதைப்பற்றி நாம் அறவே மறந்து விடுகிறோம். ஆனால் இவை பின்னால் என்ன ஆகிறது தெரியுமா? எல்லோரும் இவ்வாறு செய்வதில்லை. ஆனாலும் சில இடங்களில் தில்லு முல்லு நடக்கிறது. தீவீரவாதிகள், அல்லது போலி பெயர்களில் உலாவ விரும்புகிறவர்கள் அனைவரும் நாம் இப்படிக்கொடுக்கும் நம் விவரங்கள் அடங்கிய காப்பிகளை விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள். அதை வைத்து அவர்கள் பாஸ்போர்ட் வாங்குகிறார்கள், ரயில் டிக்கட் வாங்குகிறார்கள், பேங்க் கணக்கு ஆரம்பிக்கிறார்கள், இன்னும் என்னென்னமோ செய்கிறார்கள்.

இதற்கு என்று ஏஜண்டுகள் இருக்கிறார்கள். நீங்கள் வீட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் பெயரில் எவனோ ஒருவன் வெளி நாட்டுக்குப் பறந்து கொண்டிருப்பான். உங்கள் பெயரில் இருக்கும் பேங்க் கணக்கில் பல தில்லு முல்லுகள் நடக்கும். நினைத்தாலே பயமாக இருக்கிறதல்லவா? இது நாம் பாரி வள்ளலாக ஆனதின் விளைவு.

இதற்கு மாற்று என்ன? இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் ஒரு வழி சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி ஆதாரங்களின் நகல்களில் சர்டிபை செய்ய கையெழுத்து போடும்போது இன்ன காரியத்திற்காக என்று குறிப்பிடவேண்டும். பேங்க் கணக்கு ஆரம்பிக்க, சிம் கார்டு வாங்க என்று குறிப்பிடவேண்டும். அதன் கீழ் கையெழுத்து போட்டுவிட்டு தேதியை மறக்காமல் எழுத வேண்டும். இந்த இரண்டு குறிப்புகளையும் கடைப்பிடித்தால் ஓரளவு திருட்டுகளைத் தவிர்க்க முடியும் என்று வல்லுநர்கள் சொல்லுகிறார்கள்.

இந்த விபரங்களை எல்லோருக்கும் அறிவியுங்கள்.

செவ்வாய், 17 நவம்பர், 2015

மனிதனும் சம்பிரதாயங்களும்

  

மனிதன் எக்காலத்திலும் சூழ்நிலைக்கு அடிமையே. இயற்கைச் சூழ்நிலை மட்டுமல்ல. சமூகச் சூழ்நிலைக்கும் அவன் அடிமையே. அடிமை என்ற வார்த்தை சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அப்படியானால் சூழ்நிலைக்கு அனுசரித்துப் போதல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஒவ்வொருவரும் சுகமாகவே வாழ விரும்புகிறான். துக்கத்தை ஒருவரும் விரும்புவதில்லை. இது உலக வழக்கம். இதில் தவறு எதுவுமில்லை. அடுத்தவர்களைக் கெடுக்காமல் சுகமாக வாழ ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.

ஒருவனுக்கு எது சுகம் என்பதை அடுத்தவர்கள் தீர்மானிக்க முடியாது. அவரவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். அதே மாதிரி ஒருவன் சுகம் என்று அனுபவிப்பதை இன்னொருவன்  அது சுகம் அல்ல என்று சொல்லலாம். அது அவனுடைய கருத்து. எல்லோருடைய கருத்தும் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

பழக்க வழக்கங்களும் அம்மாதிரியேதான். அவரவர்களுக்குப் பிடித்த எண்ணங்களுடன்தான் ஒருவன் தன்னுடைய பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்துவான். இதுதான் சரி, இது தவறு என்ற ஒரு பொது விதி சில செயல்களுக்குத்தான் பொருந்தும். வீதிகளில் வண்டிகள் ஓட்டுவது இப்படித்தான் என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அது எல்லோருக்கும் பொது. அதை மீறினால் சிக்கல்கள் வரும்.

ஆனால் கோயிலுக்குப் போவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். நம்பிக்கையிருப்பவர்கள் போகலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் போகாமல் இருக்கலாம். ஆனால் கோயிலுக்குப் போவது தவறு என்று கோவிலுக்குப் போகாதவர்கள்  கோவிலுக்குப் போகிறவர்களைப் பார்த்து சொல்லுவது தேவையில்லை. அதே மாதிரி கோவிலுக்குப் போகாமல் இருப்பது தவறு என்றும் கோவிலுக்குப் போகிறவர்கள் சொல்லக் கூடாது.

எனக்குத் தெரிந்த தத்துவம் இதுதான்.

ஞாயிறு, 15 நவம்பர், 2015

பதிவர்களின் ஆயுள்.

                                    Image result for பிளாக்கர்
புதியன புகுதலும் பழையன கழிதலும்
வழுவல கால வகையினானே.  நன்னூல் சூத்திரம்.

இந்த சட்டம் யாருக்குப் பொருந்துமோ பொருந்தாதோ, பதிவரக்ளுக்கு மிகவும் பொருந்தும். நான் ஏறக்குறைய ஆறு வருடங்களாகப் பதிவுலகில் வலம் வருகிறேன். பல பிரபல பதிவர்களைப் பார்த்து விட்டேன்.

எல்லோருக்கும் பொதுவான விதி என்னவென்றால் பதிவர்களுக்குண்டான ஆயுள் முடிந்தவுடன் அவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள். நான்காயிரம் பதிவுகளுக்கு மேல் பதிவிட்ட பிரபல பதிவர் சி.பி.செந்தில்குமார். அவர் பதிவுலகில் எழுதுவதை ஏறக்குறைய நிறுத்தி விட்டார்.

தினம் தவறினாலும் தவறும், ஆனால் இவர் பதிவு தினத்திற்கு ஒன்று வந்தே தீரும் என்று பெயர் வாங்கின பதிவர் திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்கள். அவர்கள் பதிவுகள் இப்போது ஆடிக்கு ஒன்று, அமாவாசைக்கு ஒன்று என்று வருகிறது.

துளசி தளம் டீச்சர் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறார். ஆனால் இந்த மாதிரி தொடர்ந்து எழுதுபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கிறார்கள்.

பொதுவாக நான் பார்த்த வரையில் பதிவர்களின் ஆயுட்காலம் ஐந்து வருடங்கள் அல்லது 1000 பதிவுகள். இவைகளைத் தாண்டி பதிவு தொடர்ந்து எழுதிபவர்கள் பதிவுலகில் மிகச்சொற்பமே.

நான் ஏறக்குறைய 900 பதிவுகள் போட்டு விட்டேன். இதை வைத்து என் பதிவுலக ஆயுள் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே தோராயமாகக் கணக்குப் பண்ணிக்கொள்ளலாம். இந்தக் கணக்கு எனக்கு மட்டும் இல்லை. அநேகமாக எல்லாப் பதிவர்களுக்குமே பொருந்தும்.

சனி, 14 நவம்பர், 2015

விதியின் விளையாட்டு-கடவுளைக் கண்டேன்.

                                                   Image result for பரமசிவன் பார்வதி

விதி ஒரு மனிதனை எந்த வகையில் எந்த ரூபத்தில் தாக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சமும் எதிர் பார்க்காத நேரத்தில்தான் அது தன் வேலைகளைக் காட்டும். பாருங்கள் நான் சிவனேயென்று நானுண்டு என் பதிவுகளுண்டு என்று இருந்தேன்.

எனக்கு விதி கில்லர்ஜி ரூபத்தில் அதன் வேலையைக் காட்டிவிட்டது. கீழே கொடுத்துள்ள ஸ்கிரீன் ஷாட்டைப் பாருங்கள்.


இந்த லிஸ்டில் நான்காவது பெயரைப் பாருங்கள். இதில் "அன்பிற்குரிய" என்ற அடைமொழி வேறு. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஆத்திர அவசரத்திற்கு அவரது பதிவைக் "காப்பி பேஸ்ட்" செய்யலாம் என்றால் ஒரு அட்சரத்தைக்கூட காப்பி பண்ண முடியாமல் மந்திரம் போட்டு வைத்திருக்கிறார். இதில் அன்பு எங்கே வந்தது?

அவரைப் பழி தீர்க்க எனக்கு ஒரே வழிதான் இருக்கிறது. அதைத்தான் இப்போது செய்யப்போகிறேன். நான் எப்படியோ கைலாசத்தில் பரமசிவன் முன்னால் நிற்கிறேன்.

அவர் பக்தா என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். நான் பலமுறை அவரைத் தண்டனிட்டு நமஸ்கரித்து வேண்டிய வரம் என்னவென்றால்.

பிரபோ, நான் வசிக்கும் பூவுலகில் எனக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் முன்பே கொடுத்து விட்டீர்கள். அதுவே போதும். ஆனால் இப்போது புதிதாக ஒரு பிரச்சினை கில்லர்ஜி என்றி ஒருவரால் ஏற்பட்டிருக்கிறது. அதை மட்டும் தீர்த்து வைத்தால் போதும் என்றேன்.

அவர் அந்தக் கில்லர்ஜியினால் உனக்கு என்ன பிரச்சினை என்றார். அது வந்து பிரபோ நான் என் பாட்டுக்கு பதிவுகள் எழுதிக்கொண்டிருந்தேன். அவர் என்னை உடனடியாக உங்களை பேட்டி கண்டு விட்டு வந்து விபரங்களைச் சொல்லுமாறு என்னை நச்சரிக்கிறார் என்றேன்.

பரமசிவனும் அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றார். அதற்கு ஒன்றே ஒன்று செய்தால் போதும் பிரபுவே. அவர் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தால் அந்தக் கம்ப்யூட்டரின் கீபோர்டில் எழுத்துகள் மாயமாய்ப் போகவேண்டும். இது ஒன்றுதான் நான் கேட்கும் வரம் என்றேன்.

சிவனாரும் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதித்து என்னைத் திரும்பவும் பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார். இனி மேல் கில்லர்ஜி பதிவுகள் எழுதமாட்டார். அப்படி எழுதினால் நான் பரமசிவன் மேல் நம்பிக்கைத் துரோகத்திற்காக கேஸ் போடுவேன்.

வெள்ளி, 13 நவம்பர், 2015

இந்து மத சம்பிரதாயங்களும் சங்கடங்களும்.

                                            Image result for திதி கொடுத்தல்

இந்து மதத்தின் பல முகங்கள் வெளியில் தெரிவதில்லை அல்லது அதைப் பற்றி அதிகமாக யாரும் பேசுவதில்லை என்று வைத்துக்கொள்ளலாம். இந்த மாதிரி பல பழக்கவழக்கங்களைப் பற்றி ஏதாவது இந்து மதப் புத்தகங்கள் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. எல்லாம் செவி வழி வந்த சம்பிரதாயங்கள்தான்.

அதில் ஒன்று இறப்பு பற்றியது. மனிதனாகப் பிறந்தவன் இறப்பது திண்ணம். ஆனால் அப்படி இறந்த பிறகு அவனுடைய உறவினர்களுக்கு ஏகப்பட்ட நியதிகள் வந்து விடுகின்றன. குறிப்பாக இறப்புத் தீட்டு என்பது ஒன்று. இறந்த வீட்டிற்குப் போய் வந்தால் தலை முழுகவேண்டும். இறந்த வீட்டுக்காரர்கள் யார் வீட்டிற்கும் போகக்கூடாது. இப்படி பல நடைமுறைக் கட்டுப்பாடுகள் வந்து விடுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்தக் கட்டுப்பாடுகள் இறந்தவரின் பங்காளிகளுக்கும் வந்து விடுகின்றன. அவர்களும் பதினாறு நாட்கள் தீட்டுக் காக்க வேண்டும் அவர்களும் யார் வீட்டிற்கும் போக க்கூடாது. நல்ல, கெட்ட விசேஷங்களுக்குப் போகக்கூடாது. கோயிலுக்குப் போகக்கூடாது. வீட்டில் உள்ள சாமியையும் கும்பிடக்கூடாது. இப்படியெல்லாம் நடைமுறைச் சட்டங்கள் இருக்கின்றன. இவைகளை யார் இயற்றினார்கள், எந்தப் புத்தகங்களில் இவை தொகுக்கப்பட்டிருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் அவைகளை நாம் கடைப் பிடிக்கிறோம்.

என்ன திடீரென்று இந்த ஆராய்ச்சி என்று யோசிப்பவர்களுக்கு; என் பங்காளியின் மனைவி முந்தாநாள் ஹார்ட் அட்டாக்கில் காலமாகி விட்டார்கள். பங்காளி வீட்டில் எது நடந்தாலும் அனைத்து பங்காளிகளும் கலந்து கொண்டுதான் ஆகவேண்டும். நானும் போய்வந்தேன். அனைத்துப் பங்காளிகளும் நடைமுறைப்பிரகாரம் 16 நாள் தீட்டு அனுசரிக்கவேண்டும்.

இதற்கு நடுவில் என் சதாபிஷேகம் இன்னும் நான்கு நாளில் கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தேன். ஆனால் இந்த சம்பவம் நடந்த பிறகு தீட்டு வந்துவிட்டதே. என்ன செய்யலாம் என்று காலகாலேஸ்வரர் கோவில் ஐயரைப் போய் விசாரித்தேன். (அங்குதான் என் சதாபிஷேகத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தேன்). கோயிலுக்குள் நான் போகக் கூடாதல்லவா?அதனால் என் மச்சினன் ஒருவனைக் கூடக் கூட்டிக்கொண்டுபோயிருந்தேன்.

அந்த ஐயர் திட்டவட்டமாக 16ம் நாள் காரியம் முடியாமல் எந்தக் காரியமும் செய்யக் கூடாது என்று சொல்லி விட்டார். பிறகு என்ன செய்ய முடியும்? அடுத்த மாதம் என் ஜன்ம நட்சத்திரம் வரும் வரையில் காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஒருவனின் வாழ்வில் விதி எப்படி விளையாடுகிறது பாருங்கள்.

வியாழன், 12 நவம்பர், 2015

காது கருவிகள்

                                             Image result for காது மிஷின்
வயசானா பல்லு போகும். கண்ணு தெரியாது. காது கேட்காது. இவைகள் எல்லாம் சித்திரகுப்தன் தமக்கு அனுப்பும் நோட்டீசுகள். "அப்பா, பூலோகத்தில  பட்ட கஷ்டம் எல்லாம் போதும்ப்ஃபா, இங்க வந்திருங்க. உங்களுக்காக எல்லா சௌகரியங்களும் பண்ணி வச்சிருக்கோம் " னு அவன் அனுப்பும் நோட்டீசுகள் அவை.

ஆனால் நாம் கேட்போமா? "இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருக்கும் சொகங்களை அனுபவிச்சுட்டு வரேண்டா, மகனே" என்று இருப்பவர்கள்தான் அதிகம் பேர்.

பல்லு போனா செயற்கைப் பற்கள் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதில் இருக்கும் சிரமங்களை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். கண்ணு தெரியலைன்னா கண்ணாடி போட்டுக்கிடலாம். அதில் அதிகம் சிரமம் இல்லை. எங்காவது மறந்து வச்சுட்டா தேடறதுக்கு இன்னொரு கண்ணாடி வேண்டும். அவ்வளவுதான்.

இந்தக் காது கேட்கறது இருக்குதே, இது ஒரு பெரிய சவால். இதை ஒரு சாபமாகவும் எடுத்துக் கொள்ளலாம்,  இல்லை, ஒரு வரமாகவும் எடுத்துக்கொள்ளலாம். பெண்டாட்டி வையறது கேட்காதுங்கறது ஒரு பெரிய வரம். ஆனால் நமக்கு வேலை ஆகவேண்டிய இடங்களில், பாங்க் போன்ற இடங்களில் நாம் ஒன்று கேட்க அவர்கள் ஒரு பதில் கூற, அது நமக்கு கேட்காமல் நாம் ஏறுமாறாக எதையாவது கூறப்போக, வம்பு வந்து விடும்.

காது கேட்காவிட்டால் வெளி வேலைகளுக்குப் போகாமல் இருந்து விட்டால் என்ன என்று சிலர் கேட்கலாம். இத்தனை நாட்களாக நாமே பார்த்த வேலைகளை இன்னொருவரை வைத்துப் பார்க்க மனது ஒப்புவதில்லை. இதுதான் பெரிய வேதனை.

சரி, காது மிஷின் வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்று டாக்டர் பேச்சைக் கேட்டு என் நண்பர்கள் பலர் மிஷின் வாங்கி வைத்தார்கள். கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் அவர்களை அந்த மிஷினை உபயோகப்படுத்துவதாகக் காணோம். ஏனென்று கேட்டால் சும்மா இருக்கும்போது கூட உஸ் என்று ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த சப்தத்தைக் கேட்டுக்கொண்டே இருப்பது கஷ்டமாக இருக்கிறது என்ற பதில் வந்தது.

ஏனென்றால் அந்த மிஷின் வெளியில் இருக்கும் எல்லா சப்தங்களையும் பெரிதாக்கி காதுக்குள் செலுத்துகிறது. நாம் காதை கையினால் மூடிக்கொண்டால் ஹூம் என்று ஒரு நாதம் வருகிறதல்லவா.இந்த நாதத்தைத்தான் "ஓம்" என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். நாம் கையை எடுத்து விட்டால் இந்த சப்தம் நமக்கு கேட்காது. ஆனால் காது மிஷின் வைத்திருப்பவர்களுக்கு இந்த சப்தம் எப்போதும் பலமாகக் கேட்டுக்கொண்டே இருக்கும். காது மிஷின்களில் இதுதான் பெரிய தொந்திரவு.

இந்த சப்தம் கேட்காமல் இருக்க மிகவும் அதிக விலை கொடுத்து, ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, மிஷின் வாங்க வேண்டியிருக்கும். அவ்வளவு விலை கொடுத்து வாங்க மனது வராது. விலை குறைவான மிஷின்களுக்கே வாரம் ஒரு முறை பேட்டரி மாற்றவேண்டும். ஒரு பேட்டரியின் விலை 30 ரூபாய். இந்த விலைக்குப் பயந்துகொண்டு மிஷினை அடிக்கடி அணைத்து வைப்பார்கள். இப்படி அடிக்கடி அணைத்து பிறகு அதை ஆன் செய்வதால் இந்த சுவிட்ச் பழுதாகி மிஷினே உபயோகமற்றுப் போவதும் உண்டு.

பொதுவாக நான் சிபாரிசு செய்வது என்னவென்றால் பேசாமல் ஒரு அட்டையில் "எனக்கு காது கேட்காது" என்று எழுதி கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வதுதான்.

புதன், 11 நவம்பர், 2015

கருணை இல்லங்கள்


மனிதாபிமானம் இந்த உலகில் இன்னும் இருக்கிறது என்பதற்கு அடையாளம் கருணை இல்லங்கள்தான். பிறந்த குழந்தைகளிலிருந்து நாளை மூச்சை நிறுத்தப்போகும் வயதானவர்கள் உட்பட அனைவருக்கும் உதவக்கூடிய பல வகை கருணை  இல்லங்கள் கோயமுத்தூரில் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

இவ்வகையான இல்லங்கள் பெரும்பாலும் மனிதாபிமானத்துடனேயே செயல்படுகின்றன. ஏதோ ஒன்றிரண்டு மாறுபாடாக இருக்கலாம். தீபாவளி அன்று இப்படிப்பட்ட கருணை இல்லம் ஒன்றிற்குச் சென்று அவர்களுக்கு இனிப்பு வழங்கி வரலாமே என்று எனது நண்பர் விரும்பினார்.

அதற்காக நாங்கள் போன கருணை இல்லம், கோயமுத்தூர் என்ஜிஓ காலனியில் செயல்படும் ஒரு கருணை இல்லம். இதை நாங்கள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது என் மச்சினன் வீட்டிற்கு எதிரில் இருந்ததுதான். முதல் நாளே என் மச்சினன் மகனுக்கு போன் செய்து நாங்கள் இது மாதிரி பலகாரங்கள் கொண்டு வருகிறோம் என்று சொல்லி கருணை இல்ல நிர்வாகியிடம் சொல்லி வைக்கச்சொன்னேன்.


எனது நண்பர், என் மச்சினன் மகன், நான்

இந்த மாதிரி கருணை இல்லங்களுக்கு உணவோ அல்லது பலகாரங்களோ கொண்டு செல்பவர்கள் முன்கூட்டியே சொல்லி அவர்கள் அனுமதி பெற்றுச் செல்வது தேவையானது. ஏனெனில் ஒரே சமயத்தில் தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்கள் வந்து விட்டால் அவைகளை அவர்கள் உபயோகப்படுத்த முடியாமல் வீணாவதற்கு வாய்ப்பு உண்டு.

நாங்கள் முன்கூட்டியே சொல்லி வைத்திருந்ததினால் இந்தக் குழப்பம் வரவில்லை. நாங்கள் காலை 10.30 மணிக்குச் சென்றோம். இந்தக் கருணை இல்லத்தில் பதினைந்து வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள். மொத்தம் 35 பேர் இருக்கிறார்கள். நாங்கள் போன சமயம் 15 பேர் அவர்கள் உறவினர்களின் வீட்டுக்குப் போய்விட்டார்கள். மீதி இருந்தவர்களுக்கு மட்டும் நாங்கள் கொண்டுபோன பலகாரங்களை விநியோகித்து விட்டு மேலும் இருந்தவற்றை அங்கேயே மற்றவர்களுக்கும் கொடுக்கச்சொல்லி வைத்து விட்டு வந்தோம்.

தீபாவளி அன்றி இப்படி கருணை இல்லக் குழந்தைகளுக்கு பலகாரம் கொடுத்தது மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.

சில படங்கள்.

கருணை இல்லக் குழந்தைகள்


கருணை இல்ல நிர்வாகி திருமதி. பாலின்.


கருணை இல்லம்

செவ்வாய், 10 நவம்பர், 2015

மேக்கி நூடுல்ஸ்

                                               Image result for மேக்கி நூடுல்ஸ்

ஆறு மாத த்திற்கு முன் 10-6-2015 அன்று மேக்கி நூடுல்ஸ் பற்றி நான் போட்ட பதிவு.

லிங்க்: http://swamysmusings.blogspot.com/2015/06/blog-post_10.html

அதில் கடைசி பாரா;

இந்த மேட்டர் சூடு தணிய கொஞ்ச நாள் ஆகும். சூடு எப்படி தணியும் என்று விவரமானவர்கள் அறிவார்கள். இதற்கு அதிக பட்சம் ஒரு ஆறு மாதம் ஆகலாம். அது வரையில் மேக்கி வாங்கி ஸ்டாக் வைத்திருப்பவர்கள் மேக்கி சாப்பிடுங்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்கள் வாயைப் பார்த்துக்கொண்டு ஆறு மாதம் பொறுத்திருங்கள். மேக்கி இதே பெயரில்  New Maggi என்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிலோ வரும்.பிறகு எல்லோரும் மேக்கி சாப்பிடலாம்.

இன்றைய செய்தித்தாள்களில் வந்த செய்தி. 100 நகரங்களில் மேக்கி நூடுல்ஸ்சுக்கான தடை நீக்கப்பட்டது. ஜிங்க் மற்றும் எம்எஸ்ஜி, ஜீபூம்பா என்று காணாமல் போயிற்று. எல்லோரும் தீபாவளிக்கு மேக்கி நூடுல்ஸ் சாப்பிட்டு ஆனந்தமாக இருக்க நரகாசுரனை வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்க மேக்கி.

திங்கள், 9 நவம்பர், 2015

தீபாவளி வாழ்த்துகள்


அன்பார்ந்த பதிவர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்.



diwali greetings

பந்தி நாகரிகம் தெரியுமா ?

                                                                                                                                                                   

பந்தி நாகரிகத்தைப் பற்றி பல கட்டுரைகள் இணையத்தில் விரவிக்கிடக்கின்றன. அவைகளிலிருந்து சில கருத்துகள்.

                                         
                 

இலையில் சாப்பிடுவதுதான் தமிழ்நாட்டு வழக்கம். இலையில் எது எதை எந்த இடத்தில் பரிமாறவேண்டும் என்ற முறையை இந்தப் படம் காட்டுகிறது.

கையினால் சாப்பிடுவதுதான் நம்ம ஊரில் பொதுவான பழக்கம். அதற்காக ஐஸ்கிரீமையும் கையினால்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கப்படாது.

ஏன் விருந்து படைக்கவில்லை என்று யாரையும் யாரும் கேட்கக் கூடாது. விருந்தளிப்பது அவரவர்கள் உரிமை.

விருந்தினர்கள் கேட்கும் பதார்த்தங்களை அவர்கள் விரும்பும் அளவிற்கு பரிமாறுவதே நற்பண்பு.

தமிழ் நாட்டில் வலது கையினால் சாப்பிடுவதே முறை.

தனிப்பட்ட விருந்துகளுக்கு முறையான அழைப்பு இருந்தாலொழிய போகக்கூடாது. பொதுவான சத்திரங்களில் நடக்கும் அன்னதானங்களில் யார் வேண்டுமானாலும் அழைப்பில்லாமலேயே கூடப் போகலாம்.

சில சமயங்களில் சத்திரங்களில் அன்னதானம் நடக்காமல் போகலாம். அப்போது உணவு விடுதிகளில் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

எந்த விருந்தானாலும் விருந்தினர்கள் தாங்களாக எந்தப் பொருளையும் கொண்டுவந்து பந்தியில் சாப்பிடக்கூடாது.

முறையான அழைப்போடு வந்திருக்கும் எந்த விருந்தினரையும் எந்த வகையிலும் அவமானப்படுத்தக்கூடாது.

விருந்தில் படைக்கப்படும் எல்லாவற்றையும் உண்பதே பண்பு.

விருந்து சாப்பிட்ட பின் கை கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னால் கை கழுவுவது அவரவர்கள் விருப்பம்.

அப்புறம் இப்படி சாப்பிடக்கூடாது.

​இப்படித்தான் சாப்பிடவேண்டும்.




அவ்வளவுதானுங்க. எல்லாம் சரியா இருக்குங்களா? ஒண்ணும் தப்பாயிடலயே?

ஞாயிறு, 8 நவம்பர், 2015

கணினியும் கண்ணாடிகளும்

                                      Image result for spectacled cine actress

நாற்பது வயதுக்கு மேல் எழுத்துகளோடு வாழும் எவருக்கும் கண் கண்ணாடி போடுவது அவசியமாகி விடுகிறது. நான் என்னுடைய 43 வது வயதில் கண்ணாடி போட்டேன். அது வரை மங்கலாகத் தெரிந்துகொண்டிருந்த எழுத்துக்கள் எல்லாம் பளிச்சென்று இருந்தன. கண்ணாடி போடவேண்டியதின் அவசியம் அன்று புரிந்தது.

அப்போதெல்லாம் "பைஃபோகல்" எனப்படும் கண்ணாடிகள்தான் பிரபலமாக இருந்தன. (ஏன் இப்போதும் பெரும்பாலானவர்கள் அப்படிப்பட்ட கண்ணாடிகளைத்தான் உபயோகிக்கிறார்கள்.) அப்போது கம்ப்யூட்டர்கள் வரவில்லை. அதனால் இந்தக் கண்ணாடிகள் போதுமானவையாக இருந்தன.

கம்ப்யூட்டர்கள் இன்று இருக்கும் மாதிரியில் வர ஆரம்பித்த உடன் கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதற்கு கண்ணாடி போட்டவர்கள் கஷ்டப்பட்டார்கள். "பைஃபோகல்" கண்ணாடி புத்தகங்களைப் படிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்று. அதைப் போட்டுக்கொண்டு கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதற்கு தலையைத் தூக்கித் தூக்கி பார்த்ததில் கழுத்து வலி வந்தது.

இந்த சிரமத்தைப் போக்குவதற்காக "பைஃபோகல்" கண்ணாடியில் கீழ் பாகத்தின் பவரில் ஒரு தனிக்கண்ணாடி தயார் செய்து உபயோகப் படுத்தினார்கள். இதனால் தலையைத் தூக்கி கம்ப்யூட்டர் திரையைப் பார்க்க வேண்டியதில்லை. சாதாரணமாகப் பார்த்தால் போதும்.

இது வரைக்கும் எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் எங்கள் சங்கத்திற்கு ஒரு கண் டாக்டர் வந்து உரை நிகழ்த்தினார். அப்போது அவர் சொன்ன ஒரு நுணுக்கம் அனைவருக்கும் பயன்படும் என்று கருதுகிறேன்.

"பைஃபோகல்" கண்ணாடியில் கீழ் உள்ள பாகத்தின் பவர் புஸ்தகங்கள் படிப்பதற்காக நிர்ணயித்தது. புத்தகங்களை நாம் சாதாரணமாக ஒன்றரை அடி தூரத்தில் வைத்துப் படிப்போம். அதற்கு இந்த "பைஃபோகல்" கண்ணாடிகள் போதுமானவை. ஆனால் கம்ப்யூட்டர் திரையை நாம் இரண்டடி தூரத்தில் வைத்துப் பார்க்கறோம். அதற்கும் இந்த புத்தகம் படிப்பதற்கான பவர் உள்ள கண்ணாடியையே பயன்படுத்தினால் கண்ணிற்கு அசதி உண்டாகும்.

படிப்பதற்கு உபயோகப்படுத்தும் கண்ணாடியின் பவரில் 0.5 பவரைக் குறைத்து ஒரு கண்ணாடி உபயோகப்படுத்தினால் இந்த அசதி வராது. இந்த நுணுக்கத்தை அந்த கண் டாக்டர் கூறினார்.

நான் அதற்கு முன்பிருந்தே அப்படியான ஒரு கண்ணாடியைத்தான் உபயோகப்படுத்தி வருகிறேன். சைனா கண்ணாடிகள் எல்லா பவர்களிலும் மிகவும் சலீசாகக் கிடைக்கின்றன. விலை 100 முதல் 150 க்குள்தான் இருக்கும். எனக்கு படிப்பதற்கான பவர்  +3.0. கம்ப்யூட்டரைப் பார்ப்பதற்காக நான் உபயோகப்படுத்தும் கண்ணாடியின் பவர் +2.5. இந்த முறையில் நான் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தி வருகிறேன்.

பலரும் இந்த நுணுக்கத்தை அறிந்திருக்கலாம். ஆனாலும் சிலருக்குத் தெரியாமல் இருக்க க்கூடும். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

                                     Image result for computer