ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

உதவி செய்ய முடியுமா?

என்னுடைய பதிவில் சும்மா இருக்க முடியாமல் சில நாட்களுக்கு முன்  டெம்ப்ளைட்டை மாற்றினேன். ஒரு மாதிரியாக எல்லா திரட்டிகளையும் இணைத்து விட்டேன். தமிழ்மணம் தவிர மற்றவை எல்லாம் சரியாக இருக்கின்றன.

தமிழ் மணம் திரட்டியில் இணைக்க URL ல் "in" ஐ "com" என்று மாற்றி சேர்ந்தால் சேர்ந்துகொள்கிறது. ஆனால் ஓட்டுப்பட்டை வேலை செய்யவில்லை.

கழுதையை என்ன செய்தால் ஒழுங்காகப் பொதி சுமக்கும் என்று யாராவது சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.

சனி, 29 செப்டம்பர், 2012

ஈரோடு மாவட்டக்காரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

உலகத்தில் மிக விலை உயர்ந்த பொருளான காண்டாமிருகத்தின் கொம்பிற்கு பல்லாயிரக்கணக்கில் தேவை இருக்கிறது. அந்தக் கொம்பின் மருத்துவக் குணங்களை அனைவரும் அறிவர். இந்தக் காண்டாமிருகம் ஆப்பிரிக்கா காடுகளில் லக்ஷக்கணக்கில் திரிந்து கொண்டு இருக்கின்றன. அங்குள்ளவர்களுக்கு இந்தக் கொம்பின் மதிப்பு தெரியாததால் அதை சும்மா தங்கள் கழுத்தில் கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள்.

நமது நண்பர் ஒருவர் சமீபத்தில் ஆப்பிரிக்கா போயிருந்தார். அப்போது அவர் ஆயிரக்கணக்கில் காண்டாமிருகக் கொம்புகள் ரோடு ஓரங்களில் கொட்டிக்கிடப்பதைப் பார்த்தார். இதற்கு சர்வதேச மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்கும் என்பதை உணர்ந்து அங்குள்ள லோகல் தலைவர்களுடன் அக்ரிமென்ட் போட்டுவிட்டு வந்துள்ளார்.

அதை சர்வதேச மார்க்கெட்டில் விற்பதற்காக ஒரு மார்க்கெட்டிங்க் கம்பெனி ஈரோட்டில் ஆரம்பித்துள்ளோம். யாம் பெற்ற இன்பம் ஈரோடு மக்களும் அடைய விரும்புகிறோம். இதற்காக வருகிற திங்கட்கிழமை ஈரோடு கொங்கு திருமண மண்டபத்தில் ஒரு கூட்டம் கூட்டியிருக்கிறோம். கூட்டத்தில் விருப்பமுள்ளவர்களை கம்பெனி மார்க்கெட்டிங்க் ஆபீசராக நியமனம் செய்ய உள்ளோம். மாத சம்பளம் 50000 ரூபாய். நீங்கள் வீட்டிலிருந்து கொண்டே கம்பெனி வேலையைச் செய்யலாம்.

ஆபீசர் வேலைக்கு டெபாசிட் தொகை வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. வேலையில் சேர விருப்பமுள்ளவர்கள், தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் டிராப்ட் கொண்டு வரவும். டிராப்ட் " ஈரோடு காண்டாமிருகம்  கம்பெனி" என்ற பெயருக்கு எடுக்கவும். வேலைக்குத் தகுதியுள்ளவர்களுக்கு உடனே அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் கொடுக்கப்படும்.

அனைவரும் வருக, வருக, வருகவே.

பின் குறிப்பு: வேலையில் சேர்ந்த பிறகு எக்காரணம் கொண்டும் டெபாசிட் தொகை திருப்பித் தர மாட்டாது. ஈரோடு மாவட்டம் தவிர வேறு மாவட்டக்காரர்கள் வரவேண்டாம்.

ஒரு திருத்தம்


எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது | உலகவாழ்க்கையே வெறும் ஜெயிலு வாழ்க்கைதான்......

பழனி.கந்தசாமி at சாமியின் மனஅலைகள் - 10 hours ago
மேற்கண்ட தலைப்பில் என்னுடைய பிளாக்கில் ஒரு பதிவு வெளியானதாக கூகுள் காட்டும். அது ஒரு தவறான சரியான தகவல்தான். அது எப்படி நடந்தது என்பது ஒரு வெட்கக்கேடான சம்பவம்.
இப்போது பதிவுகளில் பின்னூட்டம் போடுவது ஒரு பெரிய கலையாகி மர்மமாகி வருகிறது. ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு மாதிரியான பின்னூட்ட வழிகள் வைத்திருக்கிறார்கள். நேற்று ஒருவர் 

எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது


என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதைப் பார்த்து விட்டு ஒரு பின்னூட்டம் போட முயற்சி செய்தேன். என்னமோ ஈமெயில், அப்பன் பேரு, ஆத்தா பேரு எல்லாம் கேட்டது. எல்லாத்தையும் கொடுத்துப்புட்டு அவங்க சொன்ன பட்டனை அழுத்தினா, என்னுடைய பிளாக்கில் அதே தலைப்பில் ஒரு பிளாக் ஏறி விட்டது.

என்னடா வம்பாப் போச்சே அப்படீன்னு அதை உடனே டெலீட் செய்தேன். ஆனா கூகுள்காரன் கொம்பனாச்சே, உடுவானா, அதையும் லிஸ்ட்டுல சேர்த்துட்டான். அதை கிளிக் பண்ணினா ஒரு மண்ணும் இல்ல. பார்த்தவங்க எல்லாம் பேஜாரா ஆயிட்டாங்க.

இதைப் பார்த்தவங்க எல்லாம் பேராசிரியருக்கு ஏதோ மறை கழண்டு போச்சு போலன்னு நெனச்சிருப்பாங்க. அப்படி நெனச்சா அதில தப்பு ஒண்ணும் இல்லை. கொஞ்ச நாளாகவே மண்டைக்குள்ள என்னமோ லூசா ஆடற மாதிரிதான் இருக்கு. கழட்டிப் பாக்கோணும். எப்படியும் இந்த ஆயுத பூஜைக்கு எல்லாத்தையும் கிளீன் பண்ணோணும். இதையும் கிளீன் பண்ணிடறேன்.

புதன், 26 செப்டம்பர், 2012

ஜோதிடம் வாழ்விற்கு அவசியமா?கடவுள் தத்துவம் எப்படி ஒரு மனிதனின் நம்பிக்கையைப் பொருத்த விஷயமோ, அதே மாதிரி ஜோசியமும் ஒவ்வொருவருடைய நம்பிக்கையைப் பொருத்த விஷயம்

ஜோசியம் உண்மையா, பொய்யா என்பதைவிட ஜோசியம் மனித வாழ்வில் எவ்வளவு இடம் பிடித்திருக்கிறது, ஏன் மக்களுக்கு ஜோசியம் அவசியப்படுகின்றது என்பதுதான் சிந்திக்கத் தகுந்த பொருள்.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் அனைத்தும் பலவிதமான கதிர்வீச்சுகளை வெளிப்படுத்துகின்றன. இவை மனிதனை பல வகையில் பாதிக்கின்றன. கண்ணுக்குத் தெரியும் பாதிப்புகள், கண்ணுக்குத் தெரியாத பாதிப்புகள் இரண்டும் இதனுள் அடக்கம். இந்த பாதிப்புகள் ஒவ்வொருவருக்கும், அவரவர்கள் ஜாதகப்பிரகாரம் வேறுபடுகின்றன என்பதுதான் ஜோதிடத்தின் அடிப்படை சித்தாந்தம்.

இந்த வேறுபாடுகளை, ஜோதிட சாஸ்திரம் வகைப்படுத்தி வைத்திருக்கிறது என்று ஜோசியர்கள் ஆணித்தரமாகக் கூறி மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள். இந்தக் கருத்தை தீவீரமாக ஆதரிக்கும் சாதாரண மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் ஜோசியத்தை நம்பாதீர்கள் என்று சொன்னால், சொன்னவர்களை அடிக்க வருவார்கள்.
என்னுடைய வாழ்க்கையில் நடந்தவைகளை இந்த ஜோசியர் அப்படியே புட்டுப்புட்டு வைத்தார் என்று சொல்பவர்கள் அநேகம். ஆனால் எதிர்காலத்தில் நடப்பவைகளைப் பற்றி அவர் சொன்னதெல்லாம் பலித்ததா என்று கேட்டால் மழுப்புவார்கள். நம் வாழ்வில் நடந்தவைகள்தான் நமக்கே தெரியுமே, அதை அந்த ஜோசியன் வாயால் கேட்பதில் என்ன பயன்? ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பதுவும், நம்புவதும் என்னவென்றால்நம் கடந்த காலத்தை இவ்வளவு துல்லியமாக சொல்பவன், எதிர்காலத்தைப் பற்றி சொல்வதில் பாதிக்குப் பாதியாவது பலிக்காதா என்ற நம்பிக்கைதான்.

சரி, அவன் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம். அதனால் என்ன பயன் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். ஜோசியத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒரு உதாரணம்- இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால் கொஞ்சம் வழி நன்றாகத் தெரியுமல்லவா? வழியில் உள்ள குண்டு குழிகளில் விழாமல் தப்பிக்கலாம் அல்லவா? அப்படி எல்லாத் தடங்கல்களையும் ஜோசியம் மூலம் தாண்டி விடலாம் என்று வைத்துக் கொண்டால் ஏன் ஜோசியத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் வருகிறது?

இதற்கு அவர்கள் சொல்லும் பதில் -  ஜோசியன் சொன்ன பரிகாரத்தை நான் சரியாகச் செய்யவில்லை என்பதாகும். ஜோசியம் பார்க்கும் எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கிவிட முடியும் என்றால் இப்போதுள்ள ஜோசியர்கள் போதுமா? தவிர அனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?

இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டேதான் இருக்கும். மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று ஒரே கொள்கையில் நிற்பார்கள். அவர்களுக்கு ஜோசியம் தேவையில்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஊன்றுகோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

கடவுள் செய்யும் அக்கிரமம்
மனிதன் பிறக்கும்போது எல்லோரும் சமம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒருவன் பணக்காரனாகிறான், இன்னொருவன் பிச்சைக்காரனாக இருக்கிறான். கடவுள் ஏன் இந்த பட்சபாதம் காண்பிக்கிறார்? இது காலம் காலமாக கேட்கப்பட்டு வரும் கேள்வி.

ஆன்மீகவாதிகள் சொல்லும் வியாக்யானம் என்னவென்றால் அவரவர்கள் பூர்வஜன்ம கர்ம பலன்களின்படி இவ்வுலக வாழ்க்கை அமைகிறது என்கிறார்கள். அப்போது மறு ஜன்மம் உண்டு என்று ஊர்ஜிதமாகிறது. இந்தக் கொள்கையை ஆதரிப்பவர்கள் மேலும் சொல்வதாவது. போன ஜன்மாவில் பாவகாரியங்கள் செய்ததால்தான் உனக்கு இந்த ஜன்மாவில் இவ்வாறு துன்பங்கள் வந்துள்ளன. இந்த ஜன்மாவில் நீ நல்ல காரியங்கள் செய்வாயாகில் அடுத்த ஜன்மாவில் நீ சுகப்படுவாய் என்று கூறுகிறார்கள்.

இந்த தத்துவத்தை ஏற்றுக்கொள்வதில் ஒரே ஒரு தயக்கம், இப்பூவுலகில் பிறந்த எவருக்குமே தங்களுடைய பூர்வ ஜன்ம ஞாபகம் அணுவளவு கூட இருப்பதில்லை. அப்படி இருக்கையில் இந்த பூர்வ ஜன்மம், கர்ம வினை இவைகளை எப்படி நம்ப முடியும்? என்று யாராவது கேட்டால், சாஸ்திரம் சொல்லுகிறது, ஆகையால் நீ நம்ப வேண்டும் என்கிறார்கள்

சாஸ்திரங்கள் ஆகாயத்திலிருந்தா விழுந்தது? அதுவும் நம்மைப்போன்ற மனிதன் எழுதியதுதானே? இப்படிக்கேட்டால் நீ நாத்திகன், நீ நாசமாய்ப்போவாய் என்று சாபம் கொடுக்கிறார்கள்.

நான் நினைக்கிறேன். மனிதனின் ஏற்றத் தாழ்வுகளை நியாயப் படுத்த அல்லது அவைகளை நினைத்து மனிதன் துவண்டு போகாமலிருக்க கொஞ்சம் புத்திசாலி மனிதன் கண்டுபிடித்த யுக்திதான் இது. காலம் காலமாய் சொல்லி வந்ததினால், பலர் அதை உண்மை என்றே நம்புகிறார்கள். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். என்று ஒரு சித்தர் இருந்தார் என்றால் அன்றிருப்பவன் எல்லாம் நம்பினாலும் நம்புவார்கள்.

கர்ம வினை, மறுஜன்மம், புண்ணியம், பாவம் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கைகள்தான். ஒருவனுடைய நம்பிக்கைகள்தான் அவனை ஆத்திகனாகவோ நாத்திகனாகவோ அடையாளம் காட்டுகின்றன. உண்மை எது என்று யாரால் சொல்ல முடியும்?