ஞாயிறு, 31 ஜூலை, 2011

பச்சக்குடிசைக்கு முன் மொறை மாப்பிள்ளைகள் பண்ணும் ரகளை.


கடைசி பகுதி.

பச்சக்குடிசைக்குள்ள விடுவதற்காக சமஞ்ச புள்ளயக்கூட்டிட்டு வரப்போறாங்கன்னு தெரிஞ்ச உடனே முறை மாப்பிள்ளைகள் அந்த குடிசைக்குள் போய் உட்கார்ந்து கொள்வார்கள். புள்ள வந்து குடிசவாசல்ல நிக்கும். இந்தப்பசங்களெ வெளில வாங்கடான்னா, எனக்கு இந்தப்புள்ளய கட்டிக்கொடுக்கறேன்னு சொன்னாத்தான் வெளில வருவேன்னுட்டு ஒரே ரவுசு பண்ணுவாங்க.

பொண்ணோட அம்மா “சரி, பொண்ணக்கட்டிக்குடுக்கிறன்னுசொன்னா, பொண்ணோட அப்பா சொல்லோணும்னுட்டு ரகளை பண்ணுவாங்க. பொண்ணாட அப்பனும் “சரி, மாப்ள, பொண்ணக்கட்டிக்குடுக்கறம்னு  சொன்ன பிறகும் இதெல்லாம் பத்தாது, பொண்ணுப்புள்ளயே கட்டீக்கறன்னு சொன்னாத்தான் நான் வெளில வருவேன்னு ஒரே ரகளையாக்கிடக்குமுங்க. அப்றமேல் நாலுபேரு சமாதானம் பண்ணி, அவங்கவங்க சக்திக்கு தகுந்தாமாதிரி. நூறோ, ஆயிரமோ இல்லைன்னா ஒரு பவுன் காசோ குடுத்து அவங்களெ வெளியில வரவைப்பாங்க.


அப்பறம் அந்த சீர் பண்ணுன புள்ளய பச்சக்குடிசைக்குள்ள உக்கார வைப்பாங்க. தொணைக்கு அஞ்சாறு சோடிப்புள்ளைங்களும் இருக்குமுங்க. அந்த சமைஞ்ச புள்ள அந்தக்குடிசைக்குள்ள மூணு நாளு அல்லாட்டி அஞ்சு நாளு இருக்கோணுமுங்க.

அப்பறம் வந்திருக்கற ஒரம்பறைக்கெல்லாம் விருந்து நடக்குமுங்க. விருந்தில ஒப்பிட்டு கட்டாயமா இருக்குமுங்க. சாப்பிட்டு முடிச்சுட்டு எல்லாரும் அவங்கவங்க ஊட்டுக்கு போயிருவாங்க.

இந்த நாளுகள்ல சொந்தக்காரங்க எல்லாம் பலகாரம் பட்சணம் எல்லாம் கொண்டுவந்து புள்ளக்கி கொடுப்பாங்க. எல்லாம் புள்ள தாட்டியா வளருட்டும்னுதானுங்க. யாராச்சும் மொறக்காரங்க பலகாரம் கொண்டுவல்லீன்னா, இந்தப் புள்ளயோட அம்மாக்காரி பேசற பேச்சு நாண்ட்டுட்டு சாகலாம்போல இருக்குமுங்க. “இவ புள்ள சமஞ்சப்ப நாம்போயி கோயமுத்தூரு கடைவீதியிலெ துணியெடுத்துட்டு அய்யரு கடெலெ பலகாரம் வாங்கீட்டு போயீஈ, மூணு நாளு அவ ஊட்டுலெ இருந்து, புள்ளக்கி வேணுமுங்கறதெச் செஞ்சுபோட்டுட்டு வந்தேன். இவளுக்கு இப்ப ராங்கியாப்போச்சு. சமஞ்ச புள்ளக்கி ஒரு வடைவாளக்காயி வாங்கிட்டு வர்ரதுக்கு முடியலயாக்கும்? இப்படி நீட்டி மொளக்கீட்டு இருக்கறப்பவே அவ வந்திருவா.

ஒடனே இவ பேச்சு திரும்பும் பாருங்க, “நங்கேஏஏ (அண்ணி), எங்க உன்னயக்காணம்னு இப்பத்தான் சொல்லி வாய் மூடலே, நீங்க வந்துட்டீங்க. சேதி கெடச்சா நிக்கமாட்டீங்களே, எங்கயாச்சும் ஒடம்புக்கு முடியாமப் போச்சோன்னு ஒரே கவலையாப்போச்சுங்க. ஊட்லெ அண்ணன், கொளந்தைக எல்லாம் நல்லா இருக்காங்கல்லோ, வந்து பாரு ஒன்ற மருமகளெ” என்று வரவேற்பு பெரமாதமாயிருக்குமுங்க.

வர்ற ஒரம்பறைங்க எல்லாம் புள்ளக்கி புத்தி சொல்லுவாங்க. “இத பாரு, இப்ப நீயி பெரிய புள்ள ஆயிட்ட, இனி வெளயாட்டுப்புத்தியெல்லாம் உட்டுடோணும். சோறாக்கிப்பளகிக்கோணும், நாளெக்கி போற எடத்துல “புள்ள வளத்துருக்கா பாருன்னு யாரும் ஒங்கம்மாவெ சொல்லீரப்படாது, பாத்துப்பளகிக்கோ” அப்படீன்னு புத்தி சொல்லிட்டுப்போவாங்க.


இந்த நாட்களில் இந்தப்பொண்ணை எம்பையனுக்கு கட்டிக்குடு, எம்பையனுக்கு கட்டிக்குடுன்னு, ஒரே கேடியமா இருக்குமுங்க. நெறய சமயங்களிலெ கலியாணமே முடிவு ஆகிடுமுங்க. அப்படி மொற மாப்பிள்ளைக்கு குடுக்கமாட்டேன்னு சொல்லீட்டா அப்பவே சண்டை வந்திருமுங்க. ஜாக்கிரதையாப் பேசோணுமுங்க. இப்படித்தானுங்க எங்க அத்தைக்கு சீர் செய்யறப்போ பொண்ணு கேக்கற ஞாயத்துல வெவகாரம் பெரிசா ஆகிப்போயி, எங்க குடும்பமே ஊரைவுட்டுட்டு கோயமுத்தூரு வந்துட்டமுங்க.

இப்படி சமைஞ்ச புள்ள அந்தப்பச்சக்குடிசைலெ மூணு நாளு இல்லாட்டி அஞ்சு நாளு இருக்குமுங்க. சோறு தண்ணி எல்லாம் அந்தக் குடிசக்குள்ளதானுங்க. அந்த நாளு முடிஞ்ச அன்னிக்கு பொளுது உளுந்தபொறவு அந்தக்குடிசய பிரிச்சு நாசிவப்பையன், புள்ள, கூட அஞ்சாறு பேரு எல்லாருமா ஊருக்கு வெளியிலெ கொண்டு போயி அத தீ வச்சு   எரிச்சுப்போட்டு வருவாங்க. முட்டலும் எரியற மட்டும் இருக்கமாட்டாங்க. ஊட்டுக்கு வந்ததும் புள்ளக்கி தலயோட தண்ணி வாத்து ஊட்டுல சேத்திக்குவாங்க. அப்புறம் மறுச்சு நாளைலிருந்து அந்தப்புள்ள வழக்கம் போல வேலயப்பாத்துட்டு இருக்குமுங்க.

வெள்ளி, 29 ஜூலை, 2011

மணற்கேணி போட்டிகள்

சிங்கைப் பதிவர்கள் குழுமம் 2009ம் ஆண்டு கட்டுரைப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற மூன்று பதிவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து விருது வழங்கியது பதிவர்கள் எல்லோருக்கும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும்.

அதேபோல் 2010 ம் ஆண்டுக்கும் கட்டுரைப் போட்டி அறிவிப்பு வெளியாகி பலரும் கட்டுரைகளை அனுப்பினார்கள். நானும் ஒரு கட்டுரை அனுப்பியிருந்தேன்.

இக்கட்டுரைகள் யாவும் தகுந்த நடுவர்களால் ஆய்வு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் தெரிந்தெடுக்கப் பட்டுள்ளார்கள் என்று சில பதிவுகள் மூலமாக அறிந்தேன். ஆனால் இந்த முடிவுகள் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. ஏனெனில் எனக்கு இதுவரையில் எந்த தகவலும் வந்து சேரவில்லை.

போட்டிகள் நடத்தும் அமைப்பாளர்கள் போட்டி முடிவுகளை பதிவுகளில் வெளியிடுவதோடு இல்லாமல் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முடிவு விவரங்களை அனுப்புவது தேவை என்று கருதுகிறேன்.

ஏனென்றால் மிகுந்த முயற்சியில் தயாரிக்கப்பட்ட கட்டுரைகளை அந்தந்த பதிவர்கள் தங்களுக்கு ஏற்றமாதிரி உபயோகித்துக் கொள்ளலாம் அல்லவா? இதை மணற்கேணி அமைப்பாளர்கள் உடனடியாக கவனித்து ஆவன செய்வார்கள் என்று நம்புகிறேன்.

சமைஞ்ச சீர் செய்யற மொறை.


சமைஞ்ச சீர் செய்யற மொறை.


மொத நாளு சமைஞ்ச புள்ளைக்கு தண்ணி வாத்து தனியா உக்கார வச்சுட்டாங்களா? அடுத்த நாளு,  இல்லீன்னா அதுக்கு மறுச்சு நாள்லெ சீரு வச்சுருவாங்க. மாமமாரு, பங்காளிங்க, அப்பறம் நெருங்கின சொந்த பந்தங்களுக்கெல்லாம் ஆளு மூலமா, இன்ன கெளமீல புள்ளக்கி சீர் வைக்கிறோம்னு சேதி சொல்லி அனுப்பிச்சுருவாங்க.

பொதுவா சீரு பொளுதோட நேரம்தான் வப்பாங்க. அப்பத்தான் காடுகரைக்கு போனவங்க எல்லாம் வேலைகளைப் பாத்துட்டு திரும்பி வரமுடியும். எல்லாரும் பொளுது சாயறதுக்கு முன்னாடியே சீரூட்டுக்கு வந்துருவாங்க. தோட்டத்தில இருந்து பச்ச தென்னை ஓலைகளெ வெட்டிட்டு வந்து வச்சிருப்பாங்க. பொம்பளைக எல்லாம் சேந்து சோறு ஆக்கிட்டிருப்பாங்க.

வண்ணான், நாசிவன் ரெண்டு பேரும் குடும்பத்தோட கண்டிப்பா வேணுமுங்க. அப்பறம் பண்ணயத்து ஆளுங்க, மத்த குடிபடையெல்லாம் வந்திருவாங்க. தோட்டத்திலிருந்து வாளக்கொலை, தென்னம்பாளையெல்லாம் வந்திருங்க. வந்தவிய எல்லாம் ஆளுக்கு ஒரு வேலைய எடுத்து செய்வாங்க. வூட்டுக்கு முன்னாலெ ஒரு அம்பாரிப்பந்தல் போட்டு அதுல கொலக்கம்பம், பாளை எல்லாம் வச்சுக்கட்டுவாங்க. பண்ணெயத்து ஆளு, தென்னை ஓலையையெல்லாம் எடுத்து தடுக்கு பின்னி வச்சுருவாங்க. கொஞ்சம் மூங்கத்தப்பையும் தோட்டத்திலிருந்து கொண்டு வந்திருப்பாங்க.

மாமனூட்டிலிருந்து சீருக்கு வேண்டிய தட்டச்சாமான்கள், புது துணிமணிகள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, தங்களோட சொந்த பந்தங்களையும் கூட்டிக்கிட்டு நேரத்தோட வந்துருவாங்க. எல்லா சொந்தக்காரங்களும் சக்கரெ பளம் கொண்ட்டுட்டு வரது வழக்கமுங்க. எல்லாத்தையும் தனித்தனியா தட்டத்துல எடுத்து வைப்பாங்க. ஒம்பது தட்டு, பதினொரு தட்டுன்னு ஒத்தப்படைக் கணக்குலதான் தட்டுகளை வைப்பாங்க.

அப்புறமா எல்லாத்தட்டுகளையும் பொம்பளைங்க ஆளுக்கு ஒண்ணா எடுத்துக்கிட்டு பக்கத்தில இருக்கிற புள்ளாகோவிலுக்கு போவாங்க. ஆம்பிளைங்களும் கூடப்போவாங்க. அங்கெ சாமிக்கு முன்னாலெ எல்லாத்தட்டையும் வச்சு பண்டாரம் பூசெ பண்ணி. தட்டுகளுக்கெல்லாம் தீத்தம் தொளிப்பாருங்க. அப்பறம் கொண்டுட்டு போனமாதிரியே எல்லாத் தட்டுகளையும் பொம்பளைங்க எடுத்துட்டு ஊட்டுக்கு வருவாங்க. அதுக்குள்ள ஊட்டு உள்வாசல்லெ வண்ணான் மாத்து விரிச்சு, முக்காலி வச்சு, புள்ளாறு புடிச்சு வச்சிருப்பானுங்க. இந்த தட்டுகளை எல்லாம் அந்த மாத்து மேல வைப்பாங்க. ரெண்டு குத்துவெளக்கு வச்சு, எண்ணைஊத்தி, பொருத்தி வச்சிருப்பாங்க. 

அதுக்குள்ள மொறைக்கார பசங்க எல்லாம் சேர்ந்து ஊட்டுத்திண்ணைலெ ஒரு ஓரத்தில பச்ச தென்னை மட்டைகள வச்சு ஒரு மறைப்பு கட்டி அதுக்கு ஒரு திட்டி வாசலும் வச்சிருப்பாங்க. இதுக்கு பச்சக்குடிசன்னு பேருங்க.
அப்பறமா சமஞ்ச புள்ளயக்கூட்டிட்டு வந்து  மறைவா உக்கார வைச்சு அத்தைக்காரிக எல்லாம் தண்ணி வாத்துவுடுவாங்க. அப்பறம் ஊட்டுக்குள்ள கூட்டிட்டுப்போய் புதுத்துணிகள உடுத்தி, அலங்காரம் பண்ணி, கூட்டிட்டு வந்து மாத்து மேல போட்டிருக்கிற முக்காலிலெ உக்கார வப்பாங்க. வண்ணாத்தி தீப்பந்தம் புடிச்சுட்டு இருப்பாங்க. நாசுவனும் கூட இருப்பானுங்க. மாமனூட்டில இருந்து வந்திருக்கிறதில வயசான சுமங்கலி பொம்பளதான் சீரு பண்ணுமுங்க. தெரியாததெ அப்பப்ப நாசிவப்பையன்தான் சொல்லிக் குடுப்பானுங்க. (இந்த நாசிவன் எங்க ஆளுகளுக்கு சேந்தவன்தானுங்க. அவன எதுக்காக நாசுவனா வச்சாங்க அப்படீங்கறதுக்கு ஒரு கதெ இருக்குதுங்க. அதெ அப்றமாச்சொல்றனுங்க).



சீர்க்காரம்மா தட்டுகளுக்கெல்லாம் தண்ணி சுத்திப்போட்டு, கப்பூரம் பத்தவச்சு எல்லாத்துக்கும் சுத்திக்காட்டிட்டு, புள்ளக்கும் காட்டிட்டு துண்ணூரு வச்சு உடுமுங்க. எல்லாரும் சாமி கும்பிட்டுக்குவாங்க. அப்பறமா அத்தைமாருங்க, நங்கையா, கொளுந்தியா எல்லாரும் புள்ளக்கி கன்னம், கையிலெ எல்லாம் மஞ்சப்பூசி, பொட்டு, பூவு எல்லாம் வச்சு உடுவாங்க. இதெல்லாம் முடிஞ்சு புள்ளயக்கொண்டுபோயி திண்ணையில கட்டி வச்சிருக்கிற அந்தப்பச்சக்குடிசைல உடறதுக்கு கூட்டிட்டுப்போவாங்க. சீரு பண்ணின புள்ள அந்தப்பச்சக்குடிசைல அஞ்சு நாளெக்கி இருக்கோணுமுங்க.

இப்பத்தானுங்க அந்த மொறை மாப்பிள்ளைங்க இருக்காங்களே, அவுங்க பெரிசா ரகளை பண்ணுவாங்க பாருங்க.....

மீதி அடுத்த பதிவில் 

புதன், 27 ஜூலை, 2011

சமைஞ்ச கொமரிப்பொண்ணுங்களுக்கு சீர் செய்தல்

நண்பர்களுக்கு வணக்கம். பல நாட்களுக்கு முன் வேறொரு பதிவில் கொங்கு வேளாள சமூகத்தினரின் சமுதாயப் பழக்க வழக்கங்களைப் பற்றி எழுதினேன். சோம்பேறித்தனம் காரணமாக அந்த தளத்தை விட்டு விட்டேன். இருந்தாலும் அந்தப் பதிவுகளை மிகவும் பிரயாசைப்பட்டு எழுதியிருந்தேன். அவைகள் வீணாகப் போய்விடக்கூடாது என்ற எண்ணத்திலும், நாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற பரந்த நோக்கிலும் அந்தப் பதிவுகளை இந்தத் தளத்தில் மீள் பதிவு செய்கிறேன்.


தமிழ் நடை ஒரு மாதிரியாக இருக்கும். பெரிய மனசு பண்ணி எல்லோரும் பொறுத்துக் கொள்ளவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.





பொண்ணுங்க வயசுக்கு வந்தா எல்லா சமூகத்திலயும் சடங்கு பண்றது வழக்கம்தானுங்க. எங்க சனத்துல எப்படி பண்ணுவாங்கன்னு சொல்றனுங்க. நாஞ்சொல்றது அம்பது அறுபது வருசத்துக்கு முன்னாடி நடந்த வளிமொறைங்க. இதெல்லாம் இப்ப ரொம்ப மாறிப்போச்சுங்க.


பொண்ணு சமைஞ்சா, ஒடனே அவ மாமனூட்டுக்குத்தான் சொல்லி அனுப்போணுங்க. இல்லீன்னா பெரிய வம்பு வளக்காயிருமுங்க. சமாசாரம் தெரிஞ்ச ஒடனே அவ மாமன் சம்சாரம், கூட நாலஞ்சு பேரைச்சேத்துட்டு, ஒரு புதுச்சீல, ரவிக்கை, சக்கரை, பளம் எல்லாம் வாங்கிட்டு இந்த சமைஞ்ச ஊட்டுக்கு வருவாங்க. அப்பல்லாம் சொந்தபந்தங்க எல்லாம் பக்கத்து பக்கத்து ஊர்லதான் இருப்பாங்க. அதனால எல்லாம் சட்டுப்புட்டுனு நடக்குமுங்க.



இங்கெயும் அக்கம்பக்கத்து ஊட்டுக்காரங்க எல்லாம் கூடிடுவாங்க. எல்லாருஞ்சேந்து அந்த புள்ளய ஒரு முக்காலி போட்டு கிளக்குமானா உக்கார வைப்பாங்க. வெந்தண்ணி ஒரு பெரிய குண்டாவுல கொண்டுவந்து பக்கத்துல வச்சுக்குவாங்க. கூட வெளயாடற சிறுசுக எல்லாம் வேடிக்கை பாக்க கூடிருமுங்க.

இருக்கெறதுல பெரிய சொமங்கலிதான் இந்த சீரெச்செய்யுமுங்க. சருகுச்சட்டில தண்ணி எடுத்து அதுல கொஞ்சம் மஞ்சப்பொடிய கலந்து அந்த தண்ணிய கையிலெ கொஞ்சம் எடுத்து மூணு தடவ அந்தப்புள்ள தலயச்சுத்தி கீள ஊத்துவாங்க. அப்பறமா எல்லாரும் மஞ்சப்பொடிய தண்ணிலெ நனச்சு அந்தப்புள்ள மூஞ்சில, களுத்து, கய்யில எல்லாம் பூசுவாங்க. அவியவிளுக்கு தெரிஞ்ச தமாசெல்லாம் ஆளாளுக்குப் பேசி, ஒரே ரவுசா இருக்குமுங்க.

அப்பறம் குண்டாவுல வச்சிருக்கற தண்ணிய அந்த சருகுச்சட்டிலெயெ மோந்து ஊத்தி அந்தப்புள்ளக்கி தண்ணி வாத்து உடுவாங்க. அப்பறம் மாமஞ்சம்சாரம் வாங்கிட்டு வந்திருக்கற புதுத்துணிய உடுத்தி வூட்டு பந்தவாசல்லெ முக்காலியப்போட்டு கெளக்குமாமா உக்கார வைப்பாங்க. அந்தப்புள்ளக்கி ஒரே வெக்கமாப்போயி தலயக்குனிஞ்சுகிட்டு உக்காந்துட்டிருக்கும்.


அதுக்கு முன்னால ஒரு மாத்து விரிச்சு அதுல ஒரு புள்ளார புடிச்சு வச்சிருவாங்க. புள்ளாருன்னா எப்படீன்னா, மாட்டுச்சாணி ஒரு கை ரொம்ப எடுத்து ஒரு கொளக்கட்டயாட்டம் புடிச்சு அதெக்கீள வெச்சு அதந் தலெல ரண்டு அருகம்பில்ல சொருகினா அதான் புள்ளாரு. அப்போதக்கி அதுதான் சாமி. அதுக்கு நெகுதி வச்சு சந்தனமும் செகப்பும் வச்சுட்டா தீந்துது. புள்ளாரு ரெடி. ஒரு தட்டத்திலெ வெத்தல, பாக்கு, ரெண்டு வாளப்பளம், ஒரு தேங்கா எல்லாம் இருக்குமுங்க. இன்னோரு தட்டத்துல சக்கர பளம் எல்லாம் வச்சிருக்கும். அப்பறம் ஒரு தட்டத்தில திண்ணீரு, செகப்பு, கப்பூரம் எல்லாம் இருக்கும். அப்புறம் ஒரு சொம்புல நெறய தண்ணியோட இருக்கும்.

இந்த சீர்க்காரம்மா அந்தப்புள்ளக்கி எதிரா நின்னு சொம்ப ஒரட்டாங்கையில எடுத்துட்டு கொஞ்சம் தண்ணியெ சோத்தாங்கையில ஊத்தி புள்ளயச்சுத்தி கீள ஊத்துமுங்க. இப்பிடி மூணு தடவ பண்ணுமுங்க. அப்பறம் தட்டத்துல கொஞ்சம் திண்ணீத்தப் போட்டு அதுக்குமேல கப்பூரத்தெ வச்சு பத்தவெச்சு புள்ளயச்சுத்தி மூணு தடவ காட்டுமுங்க. எல்லாரும் அந்தக்கப்பூரத்தெ தொட்டுக் கும்பிட்டுக்குவாங்க.
அப்பறம் சீர்க்காரம்மா சமஞ்ச புள்ள நெத்திலயும் திண்ணீரு பூசி, பொட்டு, பூவு எல்லாம் வெச்சுடுமுங்க. அப்பறம் கொஞ்சம் சக்கரெயெ எடுத்து புள்ள வாய்லெ வக்கிமுங்க. அப்பறமா வந்திருக்கற தாய்துபாய்து ஒரம்பற சனமெல்லாம் புள்ளக்கி பூவும்பொட்டும் வச்சுட்டுட்டு, சக்கர, பளத்தயெல்லாம் எடுத்து புள்ள வாயில ஊட்டறதும் மொறக்காரிங்க வாயில ஊட்டறதுமா, ஒரே ரவுசா கெடக்குமுங்க.

இந்தக்கூத்தெல்லாம் முடிஞ்சபொறவு புள்ளய கூட்டிட்டுப்போய் ஒரு தனி ரூம்புலெ உக்காரவச்சுருவாங்க. அந்தப்புள்ள மூணு நாளக்கி அந்த ரூம்பவிட்டு எங்கியும் போகப்படாதுன்னு கட்டுமானம் பண்ணியிருவாங்க.

மிச்சம் நாளெக்கி.....

முழுக்காதன் குல வரலாறு


வெள்ளாளக் கவுண்டர்களில் முழுக்காதன்குலம் என்பது ஒரு பிரிவு. மற்ற பிரிவினரைக் காட்டிலும் இந்தக் குலத்தவர்களுக்கு வெள்ளாள சமூகத்தில் அதிக மதிப்பு உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள்.

இந்த குலப்பெயர் வருவதற்கு காரணம் – இந்தக் குலத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காது குத்தும்போது வெகு விமரிசையாக சீர் செய்துதான் காது குத்துவார்கள். ஆகவே இவர்களுக்குத்தான் காது முழுமையானதாகக் கருதப்படும். எனவே இவர்கள் முழு காது உடையவர்கள் என்ற சிறப்புப் பெற்றவர்கள். இவ்வாறு இந்தக் குலத்தவர்கள் “முழுக்காதன் குலத்தவர்கள்” என்ற சிறப்பைப் பெற்றார்கள்.

இந்தக் குலத்திற்கு குலதெய்வம் வெள்ளையம்மாள் ஆகும். இந்தத் தெய்வத்திற்கு கோவை மாவட்டம் காங்கயம் பக்கத்திலுள்ள காடையூரில் உள்ள பங்கசாக்ஷி சமேத காடையீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி இருக்கிறது. ஒவ்வொரு இனத்தவர்களின் குல தெய்வங்களுக்கும் ஒரு வரலாறு இருக்கும். இந்த வரலாறுகள் கர்ண பரம்பரையாய் வருவன. பல குல வரலாறுகளுக்கிடையே பல சமயங்களில் ஒரே கருத்து காணப்படும். அதே மாதிரி ஒரே குல தெய்வத்தின் வரலாற்றிலும் பல பேதங்கள் இருக்கும். இந்த வரலாறுகளுக்கெல்லாம் ஆதாரம் என்னவென்று கேட்டால் பதில் சொல்ல முடியாது. நம்பிக்கையின் அடிப்படையில்தான் இவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

காங்கயத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெரும் விவசாயிக்கு நான்கு மகன்களும் ஒரு பெண்ணும் பிறந்தார்கள். அந்தப் பெண் பிறவியிலேயே வெளுத்திருந்தாள். அவளை வெள்ளையம்மாள் என்று அழைத்தார்கள். (மகாபாரதத்தில் பாண்டு மன்னன் பிறக்கும்போதே வெளுத்திருந்தான் என்று படித்திருக்கிறோம்). இன்றும் இவ்வாறான குழந்தைகள் பிறக்கின்றன. அவைகளை “அல்பினோ” என்று கூறுவார்கள். அந்தப் பெண்ணிற்கு மணப்பருவம் நெருங்கியது. பெற்றோரும் உடன் பிறந்தோரும் கவலையில் ஆழ்ந்தார்கள்.


அவர்கள் பண்ணையில் மாடு மேய்ப்பதற்காக தூர தேசத்திலிருந்து வந்த ஒருவன் வேலையில் இருந்தான். அவனும் அவர்கள் இனத்தைச் சேர்ந்தவனே. ஆனால் ஏழை.


வெள்ளையம்மாளின் தந்தை அந்த மாடு மேய்ப்பவனுக்கே தன் பெண்ணைக் கட்டிக்கொடுக்கலாம் என்று முடிவு செய்தார். 


அவனுடைய ஊருக்குச் சென்று அவனுடைய பெற்றோர்களின் சம்மதம் பெற்றார். திருமணமும் நடந்தது. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.


அவளுடைய தமையன்களுக்கும் திருமணம் நடந்து எல்லோரும் கூட்டுக் குடும்பமாக இருந்தார்கள். இந்நிலையில் வெள்ளையம்மாளின் தந்தைக்கு அந்திம காலம் நெருங்கியது. அப்போது அவர் தன் பிள்ளைகளைக் கூப்பிட்டு, வெள்ளையம்மாளுக்கு ஒரு காணி நிலம் கொடுக்கும்படி கூறிவிட்டு காலமானார். 


வெள்ளையம்மாளின் அண்ணிகளின் துர்ப்போதனையைக் கேட்ட அண்ணன்மார்கள் வெள்ளையம்மாளின் புருஷனை வஞ்சகமாக தனியாக கூட்டிக்கொண்டு போய் கொன்றுவிட்டார்கள். அவன் எங்கோ காணாமல் போய்விட்டான் என்று சொல்லி, வெள்ளையம்மாளின் பேரிலும் பல அவதூறுகளைக் கூறி அவளை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார்கள். அப்போது அவள் ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்தாள்.


வெள்ளையம்மாள் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு எங்கு செல்வது என்று தெரியாமல் மனம் போன போக்கில் போகும்போது, ஒரு சர்தார் (அந்நாளைய முஸ்லிம் அரசாங்க உயர் அதிகாரி) குதிரைமேல் வருவதைக்கண்டு அஞ்சி புதரில் ஒதுங்கினாள். சர்தார் இவளைப்பார்த்தவுடன் நின்று விசாரித்து இவளுடைய அனாதை நிலையைக் கண்டு இரங்கினான். “நான் இப்போது வரி வசூலுக்காக அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறேன். திரும்பி வந்ததும் உன்னுடைய துயர் தீர்க்கிறேன். அதுவரை பக்கத்தில் இருக்கும் கோட்டையில் பத்திரமாக இருப்பாயாக” என்று ஆறுதல் சொல்லி, அவளைக் கோட்டையில் தங்க ஏற்பாடுகள் செய்து விட்டு, வரி வசூலிக்கப் போய்விட்டான்.

சர்தார் திரும்பி வருவதற்கு பல மாதங்கள் ஆகிவிட்டன. இதற்குள் வெள்ளையம்மாளுக்கு நான்காவது மகனும் பிறந்துவிட்டான். சர்தார் வந்த பிறகு வெள்ளையம்மாளைக் கூட்டிக்கொண்டு அவளுடைய அண்ணன்மார் ஊருக்கு வந்தான். அவர்களுடைய அண்ணன்மாரைக் கூப்பிட்டு விவரங்கள் விசாரிக்கும் போது அவளுடைய அண்ணிமார்கள் வெள்ளையம்மாள் பேரில் அடாத பழிகளைச் சுமத்தினார்கள். விபசாரி என்றும் ஏசினார்கள். அவளுடைய அண்ணன்மார்கள் வாய்மூடி மெளனமாக இருந்தார்கள். சர்தார் அவர்களைப் பார்த்து உங்கள் தகப்பனார் வெள்ளையம்மாளுக்கு காணி நிலம் கொடுக்கச் சொன்னது உண்டா இல்லையாவென்று கேட்க, அவர்கள் எங்கள் தந்தை அவ்வாறுதான் கூறிவிட்டு இறந்தார். ஆனால் இப்போது வெள்ளையம்மாள் சாதி கெட்டு வந்திருப்பதால் அவளுக்கு ஒன்றும் கொடுக்க முடியாது என்று வாதிட்டனர்.

இதைக்கேட்ட வெள்ளையம்மாள் நான் கடவுள் சாட்சியாக எந்தத் தப்பும் செய்யவில்லை. இதை எங்கு வேண்டுமானாலும் சத்தியம் செய்வேன் என்று சொன்னாள். அப்போது அவளுடைய அண்ணன்மார்கள் தங்கள் பெண்டாட்டிகளின் பேச்சைக் கேட்டு, வெள்ளையம்மாள் மூன்று சத்தியங்கள் செய்தால் நாங்கள் எங்கள் நிலம் எல்லாவற்றையும் வெள்ளையம்மாளுக்கே கொடுத்துவிடுகிறோம், அப்படிச் செய்யாவிட்டால் இவள் தீக்குளிக்க வேண்டும் என்று கூறினர். அந்த சத்தியங்கள் என்னவென்றால்:

1.   காளைகளை ஏரிலோ அல்லது வண்டியிலோ பூட்டிவதற்கு வெடத்தலாமரத்தில் நுகத்தடி செய்து வைத்திருப்பார்கள். இது நன்கு முற்றி காய்ந்திருக்கும். அந்த நுகத்தடியை மண்ணில் நட்டு தண்ணீர் ஊற்றினால் அது துளிர் விடவேண்டும்.
2.   அந்த ஊர்க்கோவிலில் நிறுத்தியிருக்கும் மண் குதிரைக்கு நண்ணீர் தெளித்தால் அது தலையைக் குலுக்கி கனைக்கவேண்டும்.
3.   இதற்கு வேண்டிய தண்ணீரை சுடாத பச்சை மண் குடத்தில் எடுத்து வரவேண்டும். அப்போது அந்த மண்குடம் கரையாமல் இருக்க வேண்டும்.
இதைக்கேட்ட சர்தார் வெள்ளையம்மாளிடம் இவர்கள் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்கள். நீ இதற்கு ஒப்புக்கொள்ளாதே என்று கூறினார். ஆனால் வெள்ளையம்மாளோ, நான் பதிவிரதை, நான் இந்தச் சத்தியங்களைச் செய்வேன் என்று கூறினாள். அவ்வாறே ஒரு நுகத்தடி நடப்பட்டது. பச்சை மண் குடமும் கொண்டுவரப்பட்டது. வெள்ளையம்மாள் கோவில் குளத்திலிருந்து அந்தக் குடத்தில் நீர் கொண்டு கொண்டு வந்தாள். குடம் கரையாமல் நின்றது. அந்தக் குடத்தில் இருந்து தண்ணீரை நுகத்தடிக்கு ஊற்ற அந்த நுகத்தடியில் தளிர்கள் துளிர்த்தன. மீதம் இருந்த தண்ணீரை அங்கிருந்த மண் குதிரை மேல் தெளிக்க, அந்தக் குதிரை தலையை ஆட்டி கனைத்தது. இதைப் பார்த்த அனைவரும் அதிசயப்பட்டுப் போனார்கள். வெள்ளையம்மாளின் அண்ணன்மார்கள் நால்வரும் சர்தாரிடம் வந்து எங்கள் சொத்து முழுவதையும் வெள்ளையம்மாளுக்கே கொடுக்கிறோம் என்று சொல்லி விட்டு ஊரைவிட்டே போய்விட்டார்கள். சர்தாரும் வெள்ளையம்மாளுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு தன் ஊருக்குப் போனார்.

வெள்ளையம்மாள் பல காலம் தன் மக்களுடன் வாழ்ந்து விட்டு பின் தெய்வமானாள். அவளுடைய வம்சாவளிதான் தற்காலத்தில் முழுக்காதன் குலம் என்று அழைக்கப்படுகிறார்கள்.


சமீபத்தில் (10-7-2011) அன்று நாங்கள் (பங்காளிகளான 26 குடும்பங்கள்) எங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்தபோது எடுத்த சில காட்சிகள்.








ஞாயிறு, 24 ஜூலை, 2011

இலவசங்களை குறை கூறாதீர்கள். அது தேசத்துரோகம்.

இலவச அரிசியை வாங்கி, இலவச வெட்கிரைண்டரில் அரைத்து, இலவச காஸ் அடுப்பில் இட்லியாக்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கான்கிரீட் வீட்டில் உட்கார்ந்து, இலவச மின் விசிறியை சுழலவிட்டபடி சாப்பிட்டு, இலவச டி.வி.யில் படம் பார்த்து மகிழ்ந்தால் வாழ்வு சுகமாகத்தானே இருக்கும். அப்படி உட்கார்ந்து சாப்பிட்டால் வரும் பல்வேறு இலவச நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இருக்கவே இருக்கிறது இலவச காப்பீட்டுத் திட்டம். வயதாகி ஓய்ந்துபோனால் ஊர் சென்றுவர இலவச பஸ் வசதியும், மாதாமாதம் இலவசமாகப் பணமும் தருவார்கள். மக்களைப் பெறப்போகும் கர்ப்பிணிகளுக்கு அரசாங்கமே ஆயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளித் தரப்போகிறது. அதுவும் பெண் குழந்தையாயின் அவள் வளர்ந்த பின் திருமணம் செய்யத் தங்கத் தாலியும் பணமும் கிடைக்கப்போகிறது. நல்ல வேளை மாப்பிள்ளையும் தேடிக் கொடுக்கப்படும் என்று கூறவில்லை!  எனவே குடும்பத்துக்காகவோ, எதிர்காலத்துக்காகவோ, நாட்டுக்காகவோ எதற்காக உழைக்க வேண்டும்? அதனால் இந்த நாடும் மக்களும் எப்படிப் போனால் என்ன? என்ற நிலைமைக்கு மக்கள் வந்து விட்டார்கள் போலிருக்கிறது; அல்லது அந்த நிலையை இருபெரும் கட்சிகளும் உருவாக்கிவிட்டன என்றுதான் கூற வேண்டும்.

சோதனை பதிவு

இது ஒரு சோதனை பதிவு.

அமைதிப் பள்ளத்தாக்குக்குள் செல்லும் வனத்துறை வாகனம்.


வாகனத்திற்குள்


எங்கள் வாகனம்


நன்றி, வணக்கம்.

சனி, 23 ஜூலை, 2011

நான் பைத்தியத்திலிருந்து மீண்டேன்



ஊருடன் ஒத்து வாழ்.

உலகத்தோடொட்ட ஒழுகல் பல கற்றும் கல்லாதார் அறிவிலாதார்

*****புரியில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

இந்த முதுமொழிகளை யெல்லாம் தெரிந்திருந்தும் விதியின் வசத்தால் என் மதி மயங்கி நான் ஒரு பைத்தியக்காரன் ஆனேன்.

என்னுடைய பதிவில் உள்ள பின்னூட்டங்கள், ஓட்டுப்பட்டைகள் ஆகியவற்றை நீக்கினேன். விளைவு மிகவும் மோசமாகப் போய்விட்டது. தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் தீக்குளிப்பு, தற்கொலை, ரயில் முன்பு பாய்தல் ஆகியவை மிகவும் அதிகரித்துவிட்டன.

என்னுடைய பதிவைப் படிக்கும், படிக்காத வாசகர்களும், சக பதிவர்களும், நலம் விரும்பிகளும் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று முதல் என்னுடைய பதிவில் பின்னூட்டங்களைப் போட வசதி செய்துள்ளேன். ஓட்டுப்பதிவு பட்டைகளையும் ஒவ்வொன்றாக இணைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் நடந்து முடிந்தவுடன் அந்த ஓட்டுப்பட்டைகள் தயாராகி விடும்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தயாராக சில காலம் பிடிக்கும்.

இப்போது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அப்படி மகிழ்ச்சி அடையாதவர்கள் யாராவது இருந்தால் எனக்குத் தெரியப்படுத்தினால் அவர்களை திஹாருக்கு அனுப்ப ஏற்பாடு செய்து தரப்படும்.

வியாழன், 21 ஜூலை, 2011

அமைதிப் பள்ளத்தாக்கு.


மேற்குத்தொடர்ச்சி மலைகளின் நடுவே இந்த அமைதிப் பள்ளத்தாக்கு இருப்பதை பலரும் அறிந்திருப்பார்கள். பல வருடங்களுக்கு முன்பு நான் இங்கு சென்றிருக்கிறேன். இப்போது இரண்டு நண்பர்கள் இந்தப் பள்ளத்தாக்கைப் பார்க்க விரும்பியதால்  9-7-2011 அன்று நாங்கள் புறப்பட்டோம். அன்று சனிக்கிழமையானதால் போகும் வழியில் இருந்த பெருமாளைச் சேவித்து விட்டு சென்றோம்.



அமைதிப் பள்ளத்தாக்கை இரண்டு வழிகளில் அடையலாம். கோவையிலிருந்து ஆனைகட்டி வழியாக அட்டப்பாடி, அகழி வழியாக முக்காலி என்னும் இடத்திற்குச் செல்லவேண்டும். இதே முக்காலியை பாலக்காடு, மன்னார்க்காடு வழியாகவும் அடையலாம். இரண்டு வழியாகவும் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன. சாலை வசதிகளும் நன்றாக இருக்கின்றன.



இந்த முக்காலியில்தான் அமைதிப்பள்ளத்தாக்கின் வன அலுவலர் அலுவலகம் இருக்கிறது. இங்கிருந்து வன இலாக்காவின் தனி வாகனங்களில்தான் அமைதிப் பள்ளத்தாக்குக்கு உள்ளே போகமுடியும். தனியார் வாகனங்கள் போக அனுமதி இல்லை, போகவும் முடியாது. சாலை மிகவும் மோசம். 




மேலும் வரும் சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்திருக்கவேண்டும். நாங்கள் மூன்று பேர் என்பதால் எங்களுக்கு தனி அனுமதி கொடுத்தார்கள்.
அனுமதிக்கு தொடர்பு கொள்ளவேண்டிய விலாசம்:
போன்: 04924-253225
போஸ்ட்;   Assistant Wildlife Warden,
            Anquinde Information Centre,
            Mukkali Post,
            Mannarkad – 678582
            Kerala State

ஈமெயில்:  kunthi@silentvalley.gov.in
வன இலாக்கா வாகன கட்டணம் – நபர் ஒன்றுக்கு ரூ.175.00

அமைதிப் பள்ளத்தாக்குக்குப் போகவர 4 மணி நேரம் ஆகும். பொதுவாக டூர் 11 மணிக்கு மேல்தான் ஆரம்பிக்கும். ஆகவே கையில் மதிய உணவுக்கு ஆகாரம், தேவையான தண்ணீர் ஆகியவை பயணிகளே கொண்டு செல்லவேண்டும். வனத்திற்குள் எந்தவிதமான கடைகண்ணிகளும் கிடையாது. மழை காலத்தில் செல்வதாக இருந்தால் குடை அவசியம். குளிர் அதிகமில்லை. தேவைப்படுபவர்கள் ஒரு ஸ்வெட்டரோ அல்லது ஒரு சால்வையோ கொண்டு செல்வது நல்லது.
இந்தப் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால் எந்த விதமான பிளாஸ்டிக் பொருள்களும் கொண்டு செல்ல அனுமதியில்லை.



மனிதனின் பேராசைக்கு உள்ளாகாத இயற்கை சூழலை விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்.



ஒருநாள் சுற்றுலா செல்வதற்கு உகந்த இடம்.




சனி, 16 ஜூலை, 2011

ஏழரை நாட்டுச்சனி விலகியது


ஆஹா, இன்று என்னைப் பிடித்திருந்த ஏழரை நாட்டுச்சனி விலகிவிட்டது.

ஏதோ நாலு பதிவைப் பார்த்தோம், ஒன்றுக்கு பின்னூட்டம் போட்டோம் என்று இருந்தேன். பொதுவாக நான் கூகுள் ரீடரைப் பயன்படுத்தித்தான் பதிவுகளைப் பார்ப்பேன். அதில் தமிழ்மணம் திரட்டியையும் இணைத்திருந்தேன். தமிழ் மணம் திரட்டி மிகவும் பிரபலமான திரட்டி. எல்லாப் பதிவர்களும் தமிழ்மணம் திரட்டிப் பட்டையை தங்கள் பதிவில் இணைத்திருக்கிறார்கள். ஆகவே கூகுள் ரீடரில் முக்கால்வாசி தமிழ்மணத்தில் இணைத்துள்ள பதிவுகள்தான் முண்ண்ணியில் இருக்கும்.

இது நல்லதுதான். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்மணம் பதிவைப் படிக்கலாமென்று சுட்டினால் கர்சர் சுற்றிக்கொண்டே இருக்கிறதே தவிர, பதிவு தெரிவதாகக் காணோம். எவ்வளவு நேரம் ஆனாலும் இதே நிலைதான். என்னென்னமோ, எனக்குத் தெரிந்த தகிடுதத்தம் எல்லாம் செய்து பார்த்து விட்டேன். ஒன்றும் முடியவில்லை.

இன்று கூகுள் ரீடரை நோண்டிக் கொண்டிருக்கும்போது, அதில் Manage Subscription என்று ஒரு வழி தென்பட்டது. அதில் போய் இந்த தமிழ் மணம் திரட்டியை நீக்கினேன். அவ்வளவுதான். என்னைப் பிடித்திருந்த ஏழரை நாட்டுச்சனி விலகிற்று.

வெள்ளி, 8 ஜூலை, 2011

நாய் பெற்ற தங்கப் பழம்

கனவில் கிடைத்த புதையல்

திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி கோவிலில் ஐந்து லட்சம் கோடி மதிப்புள்ள தங்கப்புதையல் கிடைத்துள்ளதாகப் பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சாதாரண மக்களின் கற்பனைக்கு இது எவ்வளவு செல்வம் என்ற மதிப்பு மனதில் பதியாது. ஏதோ பெரிய செல்வம் என்ற அளவில்தான் உணரக்கூடும்.

இவ்வளவு பெரிய செல்வத்தை அரச குடும்பத்தினர் எவ்வாறு அடைந்தார்கள் என்பது சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிக்க வேண்டிய விஷயம். “சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி” என்கிற பழமொழிக்கேற்ப சிவனே என்று படுத்துக்கிடந்த பத்மனாபஸ்வாமியை சந்திக்கு இழுத்தாகி விட்டது. இந்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும், திருவாங்கூர் அரச சந்ததியினருக்கும் பிடித்தது “ஏழரைநாட்டுச்சனி”. பூதம் புதையலைக் காப்பாற்றிய மாதிரி இனி அரசு இந்தப் புதையலைக் கட்டிக்காக்க வேண்டும்.

இதை வைத்துக்கொண்டு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இது முழுவதும் மக்களின் உழைப்புதான். அன்றைய ராஜா வசூலித்து இப்படி சேமித்து வைத்திருக்கிறார். ஆனாலும் இதை ஒன்றும் செய்ய முடியாது. நம் நாட்டுச் சட்டதிட்டங்கள் அப்படி. இன்றைய ராஜாக்கள் ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கிறார்கள். இரண்டும் ஒன்றுதான். நாய் பெற்ற தங்கப்பழம்.

கேரள மக்கள் பேச்சுப் பிரியர்கள். வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரி இந்த சப்ஜெக்ட் இன்னும் பல தலைமுறைகளுக்கு காணும். மொத்தத்தில் கனவில் காணும் புதையலுக்கும் இதற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை. இரண்டும் யாருக்கும் பயன்படப் போவதில்லை. http://www.youtube.com/watch?v=w27OvzzNAUE&NR=1&feature=fvwp

புதன், 6 ஜூலை, 2011

தீவிர உடல் நலக்குறைவு ஏற்படும்போது…..




ஒவ்வொரு குடும்பத்திலும் திடீரென்று யாருக்காவது தீவிர உடல் நலக்குறைவு ஏற்படலாம். அப்போது பொதுவாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்படுவது சகஜம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலை எப்படியிருந்தாலும் அந்த நபரை அந்த ஊரிலுள்ள பெரிய, தனியார் ஆஸ்பத்திரிக்குத்தான் பொதுவாக கூட்டிச்  செல்வார்கள். எப்படியாவது, என்ன செலவானாலும் சரி, இவரைப் பிழைக்க வையுங்கள் என்று சொல்வார்கள் இப்படி சொல்பவர்கள் பெரும்பாலும் பக்கத்து வீட்டுக்காரர்களாகவே இருக்கும். அந்த நபருக்காக செலவு செய்யும் குடும்ப அங்கத்தினர் அழுது கொண்டு இருப்பாரே தவிர, இந்த முடிவுகளில் தலையிடக்கூடிய மன நிலையில் இருக்க மாட்டார்.

வசதி இல்லாதவர்கள் முதல் நாள் செலவைப் பார்த்தே, இது நமக்குக் கட்டுப்படியாகாது என்று கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

மிகப் பணக்காரர்களுக்கு இந்த செலவுகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

இந்த இரண்டும் கெட்டானாக இருக்கிற நடுத்தர மக்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள். சரியான முடிவு எடுக்க முடியாமல், திண்டாடி, சரி, எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று கடன் வாங்கி அந்த தனியார் ஆஸ்பத்திரியிலேயே வைத்தியம் பார்ப்பார்கள்.

அந்த ஆள் உடல் நலம் தேறி, வீட்டுக்கு வந்தால், அவரின் மிச்ச ஆயுள் முழுவதும்  இந்த கடனை அடைக்கவே சரியாயிருக்கும். பல சமயங்களில் இந்தக் கடன் தீர்வதற்குள்ளாகவே அவர் போய்ச் சேர்ந்து விடுவார். அவருடைய குடும்பம் சின்னாபின்னமாகப் போய்விடும்.

நீதி: இந்த நிலை ஒரு குடும்பத்தில் இருக்குமானால் அவரை அரசாங்க ஆஸபத்திரியில் சேர்ப்பதே நல்லது. அரசாங்க ஆஸபத்திரிகளிலும் வைத்தியம் நன்றாகவே செய்கிறார்கள்.

திங்கள், 4 ஜூலை, 2011

புகழ் என்னும் மாயை



சமுதாயத்தில் வாழும் ஒவ்வொருவரும் தன்னை இந்த சமுதாயம் மதிக்கவேண்டும், தன்னை அங்கீகாரம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. இதற்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறார்கள். சிலர் அந்த முயற்சியில் வெற்றி பெறுகிறார்கள். பலர் தோற்றுப் போகிறார்கள்.

அப்படித் தோற்றுப் போகிறவர்களுக்கும் அவர்கள் வாழும் சூழ்நிலையில், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் மத்தியில் ஒரு அங்கீகாரம் இருக்கத்தான் செய்யும். அவர்கள் நாளாவட்டத்தில் அந்த அங்கீகாரம் போதுமென்ற மன நிலைக்கு வந்து விடுவார்கள்.

இந்த மன நிலை இணையத்திலும் நிலவுகிறது. பதிவுலகத்தில் இந்த புகழுக்காக மிகுந்த சிரமம் எடுத்துக்கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகம் என்று நான் கருதுகிறேன். அவர்கள் இணையத்திற்கு அடிமையாகி, தங்கள் மற்ற கடமைகளிலிருந்து விலகுகிறார்களோ என்ற ஐயப்பாடு எனக்கு இருக்கிறது.

இது ஒரு மாயா உலகம். அனைவரும் இதை உணர்ந்து, இந்த மாயையிற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.