புதன், 29 ஜூன், 2011

நான் ஆனந்தப்பட்ட தருணம்


பிரிட்டிஷ் பார்லிமென்ட்டில் இருந்து ஒரு பிரபல அரசியல்வாதி ரிடையர்டு ஆனபோது பலர் அவரை “இனி என்ன செய்வீர்கள்” என்று கேட்டார்களாம்.

அவர் மிகவும் சாதாரணமாக சொன்ன பதில் மிகவும் பிரபலம்.
இனி தினமும் “டைம்ஸ் ஆப் லண்டன்” பத்திரிகையை என் பெட்சைடுக்கு டெலிவரி செய்யச் சொல்லிவிடுவேன். காலையில் முதலில் அதை எடுத்து இரங்கல் செய்திகளைப் பார்ப்பேன். அதில் என் பெயர் இல்லாவிட்டால், எழுந்து காலை உணவு சாப்பிட்டுவிட்டு மற்ற வேலைகளைப் பார்ப்பேன் என்றாராம்.

இதில் உள்ள நகைச்சுவை எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை.

இது போல் நேற்றைய ஒரு பிரபல தமிழ் தினசரியில் கீழே கொடுத்திருக்கும் இரங்கல் செய்தியைப் பார்த்தேன்.

மிக்க ஆனந்தம் அடைந்தேன். ஆஹா, இன்றுடன் நான் இந்தப் பூலோகத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்களுக்கெல்லாம் விடிவு வந்து விட்டது என்று பூரித்துப் போனேன். எப்படி இந்த விடிவு எனக்கு ஏற்பட்டது என்று மேலும் படித்தபோதுதான் உண்மை விளங்கியது.

அது நானில்லை. வெறும் பெயரில் மட்டும்தான் ஒற்றுமை என்று விளங்கியது. மிகவும் ஏமாற்றமாகப் போய்விட்டது. 

செவ்வாய், 28 ஜூன், 2011

தமிழ்மணம் திரட்டி-பிரச்சினைகள்

தமிழ்மணம் திரட்டியில் இணைத்துள்ள அனைத்துப் பதிவுகளும் தரவிறங்க மிகுந்த நேரம் எடுத்துக் கொள்கின்றன. மேலும் பல சமயங்களில் "டைம் அவுட்" என்ற செய்தி மட்டுமே வருகிறது.


யாராவது இதை சரி செய்வார்களா?


ஞாயிறு, 26 ஜூன், 2011

காதலும் கத்தரிக்காயும்காதலாவது கத்தரிக்காயாவது என்று காதலில் விழுந்த கதாநாயகியைப் பார்த்து தந்தை கேட்பாரென்று பல கதைகளில் படித்திருக்கிறோம். சினிமாவிலும் பார்த்திருக்கிறோம். கத்தரிக்காய் இரண்டு நாளில் வாடி வதங்கிப்போவது போல காதலும் சீக்கிரம் வாடி விடும் என்பதுதான் காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் உள்ள ஒற்றுமை.
 
இன்றும் கூட என்னைப்போன்ற கிழடுகள் அந்த அபிப்ராயத்தைத்தான் கொண்டிருக்கிறோம். பத்தாம்பசலி என்று எங்களைப் போன்றவர்களை ஏளனமாகக் கூறுவார்கள். நாங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டிருப்போம்.

காதல் கல்யாணம் நன்மையா, தீமையா என்று பட்டி மன்றம் நடத்தினால் ஆயுளுக்கும் நடத்தலாம். ஒவ்வொருவரும் அந்தப் பட்டி மன்றத்தில் ஒவ்வொரு கருத்து கூறமுடியும். ஆனால் இன்று உலகத்தில் நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். செய்தித்தாள்களில் வருவதுதான் இன்றைய உலக நடைமுறை.

காதலித்தவன் என்னைக் கெடுத்துவிட்டு, கைவிட்டுவிட்டான் என்று போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும், கலெக்டர் ஆபீசுக்கும் அலைபவர்கள் எத்தனை பேர். காதல் கல்யாணம் நடந்து ஆறு மாதத்தில் கைவிட்டுவிட்டு ஓடுபவர்கள் எத்தனை பேர். இல்லையென்றால் விவாக ரத்து வழக்கு போடுபவர்கள் எத்தனை பேர்.

இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், ஆணும் பெண்ணும் வளர்ந்த கலாசாரம் மற்றும் பொருளாதார சூழ்நிலை வித்தியாசங்கள்தான். இவைகள் வாழ்க்கையில் மிகவும் முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இளமை வேகத்தில் வெறும் பாலுணர்வை காதல் என்று நினைத்து ஏமாந்து போகிறவர்கள்தான் அநேகர்.

இந்த வித்தியாசங்களையும் மீறி அந்தக் கல்யாணம் நிலைத்தாலும் அவர்களுக்கு ஒரு சமுதாய அந்தஸ்து கிடைப்பதில்லை. அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணும்போது ஏற்படும் பிரச்சினைகள் அநேகம். இதையெல்லாம் இளைஞர்கள் மனதில் கொண்டு அவர்கள் எதிர்கால வாழ்க்கையை வகுத்துக் கொள்ளவேண்டும்.  

சனி, 25 ஜூன், 2011

சாருவின் உரையாடல்கள்

சாருவின் உரையாடல்கள் என்று பல பதிவுகளில், பல உரையாடல்கள் (படிக்கவே கூசும்படியானவை), வெளிவந்துள்ளன. அவைகள் உண்மையாக இருக்குமானால் என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதே சமயம் இந்த அளவிற்கு செயல்பட்ட அந்தப் பெண்ணிற்கும் என் கண்டனத்தை உரித்தாக்குகிறேன். ஒரு பெண் இந்த அளவிற்குப் போயிருக்கக் கூடாது.

சனி, 18 ஜூன், 2011

நெல்லை பதிவர்கள் சந்திப்பு

திரு.சங்கரலிங்கத்திற்கு ஒரு ஜே!

நெல்லைப் பதிவர் சந்திப்புக்குப் போய் வந்தேன். திரு சங்கரலிங்கம் பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார். திருமதி சித்ரா சாலமன் உறுதுணையாய் இருந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து இந்த சந்திப்புக்காகவே வந்திருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பு தனியாக வெளியிடப்படும். இந்தப் பதிவு ஒரு ஆஜர் சொல்வதற்காக மட்டுமே.


என்னுடைய பயண ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்த திரு சங்கரலிங்கம் அவர்களுக்கு என் நன்றி.

திரு சங்கரலிங்கம் பதிவர்களை வரவேற்கிறார்.


பலாச்சுளை சங்கர் அவர் கருத்துகளைக் கூறுகிறார்.
(நெல்லையிலிருந்து புறப்படும்போது பலாச்சுளை வாங்கிச் சாப்பிட்டேனா, அந்த ஞாபகத்தில் பலாபட்டறைக்குப் பதிலாக பலாச்சுளை என்று பதிவிட்டுவிட்டேன். திரு. சங்கர் மன்னிக்வேண்டும்.)திங்கள், 13 ஜூன், 2011

சாலை விபத்துகள் ஏன் நடக்கின்றன?சமீப காலங்களில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு காரணமாக இருந்தாலும், பெரும்பாலான விபத்துக்களில் மனிதக் கவனக் குறைபாடே காரணமாக அமைகின்றன. நான் பல ஆண்டுகளாக இந்த விபத்துகளை கவனித்துக்கொண்டு வருகிறேன். பொதுவான சில காரணிகள் என் மனதிற்குத் தோன்றின. அவைகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

1.   அவசரம்: நேரம் பொன்னானதுதான். ஆனால் உயிர் அதனினும் மேலானதல்லவா? இந்த உண்மையை அநேகர் புறக்கணிப்பதால் ஏற்படும் விபத்துகள்தான் அநேகம். சமீபத்தில் ஒரு மந்திரி இறந்தது இதனால்தான். சரியானபடி திட்டமிட்டு நிதானமாக பயணிக்கவேண்டும். சீக்கிரம், சீக்கிரம் என்று அவசரப்பட்டு யமலோகத்திற்கு சீக்கிரம் போக்கூடாது.
சீக்கிரம் போகவேண்டுமென்று அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டும்போது பல தவறுகள் நிகழும். அதனால் நிச்சயமாக விபத்துகள் ஏற்படும்.

2.   உடல் சோர்வு: உடலுக்கு ஓய்வு கொடுக்காவிட்டால் அது ஒரு கட்டத்தில் நம் அனுமதி கேட்காமலேயே ஓய்வு எடுத்துக்கொள்ள முயலும். இது உடலின் இயற்கை. இயற்கை விதிகளை மீறுவதால் ஏற்படும் அனர்த்தங்களை வேறு பல சூழ்நிலைகளிலும் காண்கிறோம். வாகனம் ஓட்டும்போது இந்த நிலை ஏற்பட்டால் அது நிச்சயமாக விபத்தை உண்டாக்கும்.
ஆனால் பலர் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துக் கொள்கிறார்கள். சொந்த சிலவில் சூன்யம் வைத்துக்கொள்பவர்களை என்ன செய்ய முடியும்?

3.   தூக்கமின்மை: வழக்கமாக வாடகை வண்டி ஓட்டுபவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக தூக்கத்தை தியாகம் செய்கிறார்கள். அது உயிர்த் தியாகத்தில் முடியும் என்பதை உணறுவதில்லை. எவ்வளவுதான் அனுபவம் உள்ள ஓட்டுநர்களானாலும் அவர்களின் உடம்பும் மற்றவர்களின் உடம்பு மாதிரிதானே?

அறுபது கிலோமீட்டர் வேகத்தில் போகும் வாகனம் நிமிடத்திற்கு ஒரு கிலோமீட்டர் போகும், அதாவது ஒரு விநாடிக்கு 16.7 மீட்டர் அல்லது ஏறக்குறைய 50 அடி தூரம். ஓட்டுபவர் ஒரு விநாடி கண் மூடினால் வாகனம் 50 அடி சென்றுவிடும். அந்த 50 அடிக்குள் ஒரு பாலம் இருக்கலாம். அல்லது ஒரு வளைவு இருக்கலாம். அதைக் கவனிக்க முடியாததால் விபத்து ஏற்படலாம்.

4.   தேவையற்ற ரிஸ்க்: ஒருவர் சென்னையில் வியாபாரியாக இருக்கலாம். சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை அவருடைய சொந்தங்கள் ஒரு விசேஷம் வைத்திருந்தால், அவர் என்ன செய்வார் என்றால் – சனிக்கிழமை வியாபாரத்தை முடித்துவிட்டு 11 மணிக்கு ஒரு டாக்சியில் புறப்படுவார். அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை ஊருக்குப்போய் அந்த விசேஷத்தைப் பார்த்துவிட்டு, அன்று இரவே அங்கிருந்து புறப்பட்டு திங்கள் அதிகாலை சென்னை வந்து சேர்ந்து வழக்கம்போல் வியாபாரத்தைக் கவனிப்பதாகத் திட்டம்.

திட்டம் என்னமோ நல்ல திட்டம்தான். ஆனால் அந்த ஓட்டுநர் சனி பகல் முழுவதும் வேலை செய்திருக்கக் கூடும். அவருடைய முதலாளி வரும் கிராக்கியை விட மனமில்லாமல் இந்த ஒட்டுநரையே அனுப்புவார். அவருக்கும் வேறு ஓட்டுநர் கைவசம் இருந்திருக்கமாட்டார். இந்த ஓட்டுநரும் கிடைக்கப்போகும் அதிக ஊதியத்திற்காக இந்த வேலையை ஒப்புக்கொள்வார்.

நிகழ்வதென்ன? விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதுதான்.

5.   வாகனத்தின் தன்மையை அறியாதிருத்தல்: வாடகை வண்டிகள் ஓட்டும் ஓட்டுநர்கள் வழக்கமாக ஒரே வண்டியைத்தான் ஓட்டுவார்கள். அப்போதுதான் அவர்களுக்கு அந்த வண்டியின் நெளிவு சுளிவுகள் நன்றாகத் தெரிந்திருக்கும். சில சமயம் அவர்கள் வேறு வண்டிகளை ஓட்டவேண்டிவரும். அப்போது அவர்கள் மிகுந்த கவனத்துடன் அந்த வண்டியை ஓட்டவேண்டும். ஆனால் அதிக அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள் பழைய வண்டி ஞாபகத்திலேயே ஓட்டுவார்கள்.

இதுவும் விபத்துக்களை ஏற்படுத்தும்.

6.   அதிக பயணிகள்: சொந்த வாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் அனுபவத்தில் கண்டிருப்பார்கள். வாகனத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாகனம் ஓட்டும்போது மிகுந்த வித்தியாசம் தெரியும். வாகனத்தின் வேகம் மிகக் குறையும். திருப்பங்களில் வண்டி அதிகமாக சாயும். இந்த வித்தியாசங்களைக் கண்டுகொள்ளாமல் வாகனத்தை ஓட்டும்போது பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பயணிகள் மட்டுமல்ல. அதிக பாரம் ஏற்றினாலும் இதே நிலைதான்.

7.   செல்போன்: விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் மிகக் குறுகிய காலத்தில் அதிகம் பேர் உபயோகப்படுத்தும் பொருள்களில் செல்போன்தான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. சரியாக உபயோகித்தால் மிகவும் பயன் தரக்கூடிய சாதனம். ஆனால் இதுவே, முறையற்ற பயன்பாட்டினால் பல அனர்த்தங்களை விளைவிக்கக் கூடியது.

எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் செல்போன் அழைப்பு வந்தால் அந்த வேலையை விட்டுவிட்டு செல்போன் பேசுகிறார்கள். செல்போன் பேசிக்கொண்டே ரோட்டில் நடக்கிறார்கள். ரயில்வே லைனை கிராஸ் செய்கிறார்கள். கார், பஸெ ஓட்டுகிறார்கள்.
ஆங்காங்கே வைத்திருக்கும் போர்டுகளில் ‘’ செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள் ‘’ என்று விளம்பரம் வைத்திருக்கிறார்கள். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல்தான் எல்லோரும் நடந்துகொள்கிறார்கள். விபத்துகளை சம்பாதிக்கிறார்கள். எந்த சுவற்றில் முட்டிக்கொள்வது? 

8.   ஆணவம் அல்லது Road Rage: நல்ல சாதுவான, பொறுமையான மனிதர்கள் கூட வாகனம் ஓட்டும்போது தங்கள் இயல்புக்கு மாறாக நடந்துகொள்கிறார்கள் என்று சர்வதேச ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பின்னால் வரும் ஓட்டுநர் ஹார்ன் அடித்தாலோ அல்லது நம் வண்டியை நம் அனுமதியின்றி ஓவர்டேக் செய்தாலோ பெரும்பாலான
சமயங்களில் நம் ஆணவம் மேலோங்குகிறது. அப்போது நாம் நம் இயல்பை மறந்து பல தவறுகள் செய்கிறோம். இது விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.

9.   சாலை விதிகளைக் கடைப்பிடியாமை: சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது. அல்லது அவை போலீஸ்காரர் இருக்கும்போது மட்டும்தான் அமலில் உள்ளவை என்று நினைக்கிறோம். மேலை நாடுகளில் நடு இரவில் கூட சிகப்பு விளக்குக்கு வண்டிகள் நின்றுதான் செல்லும் என்று கேள்விப்படுகிறோம். அவர்கள் மடையர்கள் என்று கூட சிலர் நினைக்கலாம்.

சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்ற எண்ணம் நம்மிடையே இல்லை. அது மட்டுமல்ல. எந்த விதிகளுமே நமக்குப் பொருந்தாது என்கிற மனப்பான்மையை இன்றைய அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதைப் படிப்பவர்களில் யாராவது ஒருவராவது மனம் மாறினால் ஒரு உயிரைக் காப்பாற்றிய புண்ணியம் எனக்கு சேரும்.

சனி, 4 ஜூன், 2011

இந்தியாவின் சனி இன்றோடு ஒழிந்தது

இந்த போட்டோவைப் பார்த்த பிறகும் இந்திய நாட்டு சனியான லஞ்சம் ஒழியவில்லை என்று யாராவது நினைத்தால் அவர்கள் கீழ்ப்பாக்கம் செல்லவேண்டியவர்கள்.