வெள்ளி, 28 அக்டோபர், 2016

வருமான வரி - சில விளக்கங்கள்

       Image result for வருமான வரி                   
"வருமானவரி என்றால் என்ன?": 

SUBBU உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்

இதில் இன்னமும் பல சந்தேகங்கள் உள்ளன, நான் தற்போது ஓய்வு பெற்றுவிட்டேன்,எனக்கு கிடைத்த சுமார் 30 லச்சம் தொகையை வங்கி டெபாசிட்டில் போட்டு மாதா,மாதம், சுமார் 24000/- வட்டியும், பென்ஷன் ஆக ரூபாய் 20000/-சேர்த்து மாதம் மொத்தம் 44,000/- பெறுகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள். 


நான் பெரும் வட்டிக்கு 10% வருமான வரி பிடித்தம் வங்கியிலேயே பிடித்தம் செய்த பிறகும் நான் ஆண்டுதோறும் வருமான ஆண்டின் எந்த மொத்த வருமானத்திற்கு ரிடர்ன்   சமர்பிக்க வேண்டும், அல்லது ரிடர்ன் சமர்ப்பிக்க வேண்டாமா  என்பது குறித்து தெளிவு படுத்துமாறு கேட்டுகொள்கிறேன்.

நான் சுமார் 40 ஆண்டுகளாக வருமான வரி கட்டி, வருமான வரி ரிடர்ன் சமர்ப்பித்துக்கொண்டு வருகிறேன். ஆகவே இந்த மாத சம்பளம் /பென்சன் வாங்குபவர்களின் வருமான வரி சமாச்சாரங்கள் ஓரளவு எனக்கு அத்துபடியாகி உள்ளன.

இந்த வருமான வரி சமாச்சாரத்தில் ஒருவர் இரண்டு நிலைப்பாடுகளை எடுக்கலாம். 

ஒன்று:  சட்டப்பிரகாரம் என்ன வரி உண்டோ அதைக் கட்டிவிட்டு வருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்து விட்டு நிம்மதியாக இருப்பது.

இரண்டு: பலவிதமான கோல்மால்கள் செய்து வரி கட்டாமல் தப்பித்து இரவில் தூக்கம் வராமல் தவிப்பது. இந்த இரண்டாவது வழியும் எனக்குத் தெரியும். ஆனால் அதைப் பற்றி நான் இங்கு விவரிக்கப்போவதில்லை. அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பவர்களுக்கு, நேரில் வந்தால் ட்யூஷன் எடுக்கப்படும். பீஸ் உண்டு.


முதல் வழி நேர் வழி. அதற்கு வருவோம். முக்கியமான சில அம்சங்களைப் பற்றி மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

1. சம்பளம், பென்சன், பேங்க் வட்டி இவைகள் அனைத்தும் ஒருவனின் வருமானமே. இதற்கு வருமான வரி கட்டவேண்டும்.

2. 60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 2.5 லட்சம் வரை வரி இல்லை.

3. 60 வயதிற்கு மேற்பட்டு 80 வயதுக்குள் இருப்பவர்களுக்கு 3.0 லட்சம் வரை வரி இல்லை.

4. 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 5.0 லட்சம் வரை வரி இல்லை.

இப்போது "சுப்பு" அவர்களின் பிரச்சினைக்கு வருவோம்.

அவருக்கு மாதம் 20000 ரூபாய் பென்சன். அதாவது வருடத்திற்கு 2.4 லட்சம். இது மட்டுமே அவர் வருமானம் என்றால் அவர் வருமான வரி கட்டத்தேவையில்லை.

ஆனால் அவர் 30 லட்சம் ரூபாயை பேங்கில் 8% வட்டிக்குப் போட்டிருக்கிறார். அதன் மூலம் அவருக்கு வருடம் ஒன்றுக்கு இன்னுமொரு 2.4 லட்சம் வருமானம் வருகிறது. ஆக மொத்தம் அவருக்கு வருடத்திற்கு 4.8 லட்சம் வருமானம் வருகிறது.

இதில் அவருக்கு 60 வயது பூர்த்தி ஆகியிருந்தால் 3.0 லட்சத்திற்கு வரி கட்டவேண்டியதில்லை. மீதி உள்ள 1.8 லட்சத்திற்கு 10% வீதம் 18000 ரூபாய் வரி கட்ட வேண்டும். ஒருக்கால் அவருடைய பேங்கில் 10% வரியாக சுமார் 24000 ரூபாய் ஏற்கெனவே பிடித்தம் செய்திருந்தால் அதற்கு உண்டான சர்ட்டிபிகேட்டை வாங்கிக் கொள்ளவேண்டும்.

அவர் அந்தப் பேங்க்கில் 20 லடசம் மட்டும் போட்டிருந்தால் இந்த வரிப்பிடித்தம் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விடலாம். அப்போது பேங்க்கில் இந்த வரிப்பிடுத்தம் செய்ய மாட்டார்கள். 

அவர் கட்டவேண்டிய வரி 18000 மட்டுமே. பேங்க் அதிகமாகப் பிடித்தம் செய்துள்ள 6000 ரூபாயை இன்கம்டாக்ஸ் ரிடர்ன் சமர்ப்பித்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

எப்படியும் அவர் ரிடர்ன் சமர்ப்பித்தே ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்க முடியாது.

வியாழன், 27 அக்டோபர், 2016

சுயமாக முடி வெட்டிக் கொள்ளல்

                                     Image result for self hair cutting


நான் சிறுவனாக இருந்தபோது இப்போது உள்ளது  போல் முடி வெட்டும் கடைகள் இருக்கவில்லை. ஒரு தெரு முனையில் நாலைந்து நாவிதர்கள் தங்கள் உபகரணங்கள் அடங்கிய ஒரு பெட்டியை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். (கவுண்டமணி ஒரு ஜோக்கில் ஆற்றிற்குள் ஒரு பெட்டியைத் தூக்கி எறிவாரே, அந்த மாதிரிப் பெட்டி)

நாம் போய் கூப்பிட்டால் நம்முடன் நம் வீட்டிற்கு வருவார்கள். வீட்டு வாசலில் ஒரு ஓரமாக உட்கார்ந்து நமக்கு முடி வெட்டிவிட்டு, அந்த வெட்டின முடிகளை எல்லாம் எடுத்து தூரமாகப் போட்டு விட்டு, நாலணா, அதாவது இன்றைய கணக்கில் இருபத்தியைந்து பைசா வாங்கிக்கொண்டு போவார்கள்.

பிறகு நாம் குளித்து விட்டுத்தான் வீட்டுக்குள் போகவேண்டும். அந்த நாளைய வழக்கங்கள் அப்படித்தான் இருந்தன. பிறகு முடி வெட்டும் கடைகள் உருவாகின. எல்லோரும் அங்குதான் சென்று முடி வெட்டிக்கொள்ளவேண்டும் என்கிற நிலை உருவாகியது. இருந்தாலும் சில பணக்காரர்களின் வீட்டுக்கு நாவிதர்கள் போவது வழக்கத்தில் இருந்தது. இந்த வழக்கம் இன்றும் சில கிராமங்களில் இருக்கிறது.

நானும் சலூனுக்குப் போய் முடி வெட்டிக் கொள்ள ஆரம்பித்தேன். கடைசியாக வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சலூனுக்கு ஒரு இருபது வருடமாகப் போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது முடி வெட்ட எங்கள் ஊரில் எண்பது ரூபாய் வாங்குகிறார்கள். தீபாவளி சமயத்தில் இது நூறு ரூபாயாக உயரும்.

இங்கு உள்ள முக்கிய உபகரணங்கள் இரண்டே. கத்தரிக்கோலும் சீப்பும். இந்த இரண்டை உபயோகித்தே நாவிதர் உங்களுக்கு முடி வெட்டி விடுவார்.

Image result for சீப்பு
Image result for scissors cutting hair

முன்பெல்லாம் என் தலையில் முடி அடர்த்தியாக இருந்தது. வரவர முடியெல்லாம் கொட்டிப்போய் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக முடிகள் இருக்கின்றன. இப்போதும் என்னிடம் அந்த நாவிதர் அதே சார்ஜ்  வாங்குகிறார்.

முடி நிறைய இருப்பவர்களிடம் வாங்கும் அதே ரேட்டை என்னிடமும் வாங்குகிறாயே, என் தலையில்தான் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தானே முடிகள் இருக்கின்றன, ரேட்டில் கொஞ்சம் குறைத்துக்கொள்ளக் கூடாதா என்று ஒரு நாள் கேட்டேன்.

அந்த நாவிதர் அதற்குக் கூறிய பதிலில் நான் அசந்து விட்டேன். "சார், நியாயமாக உங்களிடம் நான் அதிக ரேட் வாங்கவேண்டும். ஏனென்றால் முடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதால் அவைகளைத் தேடிப்பிடித்து வெட்ட வேண்டியிருக்கிறது. அதற்கு அதிக நேரம் செலவாகிறது. அதனால் இனிமேல் உங்களிடம் அதிக சார்ஜ் வாங்கலாம் என்று இருக்கிறேன்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.

அப்படியா என்று அன்று வீட்டிற்கு வந்த பிறகு அவன் சொன்னதைப் பற்றி யோசித்தேன். நாம் ஏன் சலூனுக்குப் போய் முடி வெட்டிக்கொள்ள வேண்டும். இருப்பதோ கொஞ்சம் முடிகள்தான். அவைகளை நானே ஏன் வீட்டிலேயே வெட்டிக்கொள்ளக்கூடாது என்று ஒரு யோசனை தோன்றியது. இப்போது நாம் சுயமாகத்தானே ஷேவிங்க் செய்து கொள்கிறோம். பின் ஏன் சுயமாக முடி வெட்டிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. அமெரிக்காவில் இப்படித்தான் சுயமாக முடி வெட்டிக்கொள்வார்களாமே என்று எங்கோ படித்ததும் நினைவிற்கு வந்தது. உடனே செயலில் இறங்கினேன்.

எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். "கண் பார்த்தால் கை செய்ய வேண்டும் " என்பார்கள். எத்தனை வருடமாக நான் சலூனுக்குப் போய் முடி வெட்டிக்கொண்டிருக்கிறேன்? வேண்டியதெல்லாம் ஒரு சீப்பும் ஒரு கத்தரிக்கோலும்தானே என்று அடுத்த தடவை நானே முடி வெட்டிக்கொண்டு விட்டேன்.

என்ன, ஆங்காங்கே எலி கரண்டினமாதிரி திட்டுத்திட்டாய் இருந்தது.
இரண்டு நாள் வெளியில் தலை காட்டவில்லை. மூன்றாவது நாள் கண்ணாடியில் பார்த்தேன். அதிக மோசமாகத் தெரியவில்லை. தைரியமாக வெளியில் நண்பர்களப் பார்க்க கிளம்பினேன். என்னைப் பார்த்த நண்பர்கள் என் தலையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆஹா, நம் முயற்சி வெற்றி என்று எண்ணிக்கொண்டேன். இனி இதுவே நம் வழக்கமாக வைத்துக்கொள்வோம் என்று முடிவு செய்தேன்.

அமேசான் தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த டிரிம்மர் கண்ணில் பட்டது. ஆஹா, இதை வாங்கி வைத்துக் கொண்டால் நம் முயற்சிக்குத் துணையாக இருக்குமே என்று மனதிற்குத் தோன்றியது.
Image result for self hair cutting
உடனே இதை 1500 ரூபாய் கொடுத்து வாங்கி விட்டேன். பரீட்சித்துப் பார்த்ததில் உபயோகமாக இருந்தது.

பிறகு இன்னுமொரு யோசனை தோன்றியது. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று தோன்றியது. ஆகவே சுயமாக முடி வெட்டிக்கொள்ளும் யோசனை யாருக்காவது இருந்தால் அவர்களுக்கு இலவசமாக கோச்சிங் வகுப்புகள் நடத்துவதாக முடிவு செய்துள்ளேன். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செவ்வாய், 25 அக்டோபர், 2016

நான் ஒரு பாபியானேன்.

                      Image result for punishments in hell in hinduism

நான் நன்றாகத்தான் இருந்தேன். தினம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு, இரண்டு தடவை காப்பி குடித்து விட்டு, பகலில் மூன்று நான்கு மணி நேரம், இரவில் ஒரு ஆறு மணிநேரம் தூங்கி விட்டு, அவ்வப்போது நண்பர்களைப் பார்த்து அளவளாவி விட்டு, வாரம் ஒரு பதிவு எழுதி அன்பர்களைத் திருப்திப் படுத்தி விட்டு நானும் திருப்தியாக இருந்தேன்.

நான் இதுவரை எனக்குத் தெரிந்து யாரையும் கொலை செய்ததில்லை. ஆனால் நான் செய்த உணவைச் சாப்பிட்டு ஒருவர் இறந்திருக்கிறார். அது கொலைக் குற்றத்தில் சேராது என்று நம்புகிறேன். தவிர சில-பல பதிவுகள் அறுவையாகப் போட்டிருக்கிறேன். அதைப் படித்துவிட்டு யாரேனும் தற்கொலை செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

நான்  இப்படியிருக்க, என் சந்தோஷம் அந்தக் கடவுளுக்கே பொறுக்கவில்லை போல் இருக்கிறது. எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள ஒரு விநாயகர் கோவிலை திருப்பணி செய்கிறோம்  என்று இடித்துப்போட்டு ஆறேழு வருடங்களாக ஒன்றும் செய்யாமல் சும்மா கிடந்தது. திடீரென்று ஒரு மகானுபாவன் தலையிட்டு அந்தக் கோவிலின் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகமும் வைத்து விட்டார்.

என் வீட்டு அம்மணிக்கு அந்தக் கோவில் என்றால் உயிர். கும்பாபிஷேகம் நடக்க யாகசாலைகள் அமைக்கும்போதே அங்கு போய்விடுவார்கள். யாகசாலை அமைத்து ஐந்து காலங்கள் யாகம் நடந்து கும்பாபிஷேகம் முடியும் வரை அம்மணிக்கு 24 மணி நேரமும் கோயில் ட்யூட்டிதான். இதில் எனக்கு என்ன தொல்லை என்றால் கோயிலில் ஆன்மீகப் பிரசங்கம் நடக்கிறது, நீங்கள் ஒரு நாளாகிலும் வந்து கேட்கக்கூடாதா ? என்று வசவு வேறு.

சரி, வந்தது வரட்டும் என்று ஒரு நாள் அந்தப் பிரசங்கத்தைக் கேட்டகப் போனேன். பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு பக்கத்து அரங்கில் நடக்கும் உபன்யாசத்தைக் கேட்கப்போனேன். உபன்யாசகர் அட்டகாசமாக மேக்கப் போட்டுக்கொண்டு கூடவே ஒரு அழகிய நங்கையையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அந்தப் பொண் பின்பாட்டு பாடுவதற்காம். (அவர்கள் போட்டோ கிடைக்கவில்லை).

அந்தப் பொண்ணு நன்றாகவே பாடியது. அதைக் கேட்பதற்காகவே ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தேன். நடு நடுவில் உபன்யாசகரும் அவர் சரக்கை எடுத்து விட்டுக்கொண்டிருந்தார். அவர் கூறியவைகளில் சக்கையை நீக்கி சாரத்தை மட்டும் கொடுக்கிறேன்.

நீங்கள் பிறந்த்தின் நோக்கம் ஆண்டவன் அடைவதே. அப்படி ஆண்டவனை அடைய நீங்கள் புண்ணியம் செய்யவேண்டும். பாப கர்மாக்களை செய்யக் கூடாது. கொலை செய்வதும் திருடுவதும் மட்டுமே பாப காரியங்கள் என்று நீங்கள்  நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தவறு.

ஒருவன் தன் முயற்சியால் பாடுபட்டு பணக்காரன் ஆகிறான். அவனைப் பார்த்து அற்பனுக்கு வந்த வாழ்வைப் பார் என்று பொறாமைப் பட்டால் அதுவும் பாப காரியமே.

உன் நண்பணின் பெண் காதல் கல்யாணம் செய்து கொண்டாளா? அவளைப் பற்றி கேலமாகப் பேசினால் அதுவும் பாவமே. யாராவது புருஷன் பெண்டாட்டி சண்டை போட்டுக் கொண்டார்களா, இல்லை பொண்டாட்டி புருஷன் தலையில் அம்மிக்குழவியைப் போட்டாளா என்று ஊரில் நடக்கும் வம்புகளைப் பற்றி நாலு பேர் கூடிப் பேசுகிறீர்களா? இவைகளை எல்லாம் சித்திரகுப்தன் உங்கள் பாபக் கணக்கில் ஏற்றி விடுவான்.

நீங்கள் யமபட்டணம் போனதும் அவன் இந்தக் கணக்குகளையெல்லாம் விலாவாரியாக யமனிடம் விஸ்தாரமாகச் சொல்லுவான். யமன் அவைகளை எல்லாம் கேட்டு விட்டு, சரி, இவனை ஆறு மாதம் கொதிக்கும் எண்ணைக் கொப்பறையில் போடுங்கள் என்று தார்ப்பு சொல்லி விடுவான்.

இப்படியாக அவருடைய உபன்யாசம் நடந்தது. வீட்டுக்கு வந்து அன்று படுக்கையில் படுத்தவுடன் அவர் சொல்லிய பாப லிஸ்ட்டுகள் மனதில் ஓடின. நாம் தினமும் இவைகளைத்தானே செய்து வருகிறோம். இவைகளைதானே நாம் பொழுது போக்க உதவுகின்றன. அப்படியானால் நாம் யம பட்டணம் போனால் நம்மை எண்ணைக் கொப்பறையில்தான் போட்டு கொதிக்க வைப்பார்களே?

ஐயோ, கடவுளே, என்னை இப்படி ஒரே நாளில் பாபியாக்கி விட்டாயே, நான் இனி என் செய்வேன் என்று நினைத்துக் கொண்டே
தூங்கி விட்டேன். கனவில் யம கிங்கரர்கள் என்னை எண்ணைக் கொப்பறையில் போட்டு வேக வைப்பதாகவே கனவுகள் வந்தன.

தூங்கி எழுந்ததும் அந்த உபன்யாசகரிடமே போய் இந்தப் பாவல்களுக்கு என்ன விமோசனம் என்று கேட்டு வரவேண்டும் என்று முடிவு பண்ணி விட்டுத் திரும்பவும் தூங்கினேன்.

இந்தப் பாபங்களுக்கு விமோசனம் உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் தவறாமல் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

செவ்வாய், 18 அக்டோபர், 2016

"பேலியோ" டயட்

                         
                         Image result for paleolithic age

பேலியோலித்திக் காலம் என்பது  (Paleolithic age) மனித இன பரிணாம வளர்ச்சியில் இரண்டரை மில்லியன் வருடங்களுக்கு முந்திய காலம். இதை பழைய கற்காலம் என்று கூறுவார்கள். மனிதன் நாகரிகம் அடையாத காலம். மொழி தோன்றாத காலம்.

இந்தக் காலத்தில் மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதைப் பற்றிய செய்திகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிலபல ஆதாரங்களைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் யூகித்தறிந்தவையே. இந்த யூகங்களின் அடிப்படையில் அக்காலத்து மனிதர்கள் எவ்வகையான உணவைச் சாப்பிட்டிருந்திருப்பார்கள் என்ற செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

இயற்கையில் விளைந்திருக்கக்கூடிய பழங்கள், கிழங்கு வகைகள், சிறு அல்லது நடுத்தர அளவுள்ள மிருகங்கள் ஆகியவைகளே அவர்களின் உணவாக இருந்திருக்கக் கூடும். இது ஒரு யூகம் மட்டுமே. இந்த உணவுத் தேடல்களுக்கு அவன் கற்களால் ஆன சில கருவிகளை உபயோகித்திருக்கக்கூடும். அத்தகைய கருவிகள் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்திருக்கின்றன.

இந்த யூகங்களின் அடிப்படையில் இப்போது ஒரு இயக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது "பேலியோ டயட்" என்ற இயக்கம்.
அதாவது கற்காலத்து மனிதன் மாமிசம் மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தான். அவன் ஆரோக்யமாக இருந்தான். அதே போல் நாமும் இப்போது மாமிச உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆரோக்யமாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

இது பற்றி எவ்வளவோ பேசலாம், எழுதலாம், விவாதம் செய்யலாம். ஆனால் அதற்கு இந்தப் பதிவு மட்டுமே போதாது. உலகில் அவ்வப்போது சிலர் இந்த மாதிரி ஒரு புது வார்த்தையை உபயோகித்து பல ஜாலங்கள் செய்வதுண்டு. மக்களை மயங்குமாறு பேச்சுத் திறமையை உபயோகித்து, மக்களை மூளைச் சலவை செய்வதுண்டு.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே எழுகின்றது. அதாவது கற்காலத்து மனிதனுக்கு நெருப்பை உபயோகிக்க தெரிந்திருக்கவில்லை. அதே போல் உப்பையும் அவன் கண்டிருக்கவில்லை. இப்போது பேலியோ உணவைப் பற்றிப் பேசுபவர்கள் அவ்வாறே நெருப்பை உபயோகப் படுத்தாமலும் உப்பையும் உபயோகப் படுத்தாமலும் அவர்கள் உணவைச் சாப்பிடுகிறார்களா?

பதிவர்கள் தங்கள் சொந்த புத்தியை உபயோகப்படுத்தி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இங்கே ஒருவர் மூளைச்சலவை செய்வதைக் கேளுங்கள்.

புதன், 12 அக்டோபர், 2016

"வந்து" எனும் அசைச்சொல்

                            Image result for பேச்சாளர்

மேடைகளில்  தமிழில் நீங்கள் பேசுவதுண்டா? இதோ இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

நான் மதுரை விவசாயக்  கல்லூரியில் இணைப் பேராசிரியராக வேலை பார்த்த காலத்தில் (அது ஒரு பழைய கற்காலம் - 1976-80)
அங்கு பல பயிற்சி நிறுவனங்களிலிருந்து எனக்கு பேச அழைப்புகள் வரும். நான் அப்போது ஓரளவு மேடைப்பேச்சுகளில் திறமை பெற்றிருந்தேன். மேலே கொடுத்துள்ள பேச்சாளர் சுகி சிவம் அளவு இல்லையென்றாலும் அவர் திறமையில் நூற்றில் ஒரு பங்கு திறமை கொண்டிருந்தேன்.

மதுரையிலுள்ள ஒரு தொழிற்பயிற்சிப் பள்ளியில் என்னை விவசாயத்தைப் பற்றிப் பேச அழைத்திருந்தார்கள். இரண்டு மணி நேரம் உரையாற்றவேண்டும். ஒரு மணி உரையாடலுக்குப் பின் பத்து நிமிடம் இடைவெளி. நான் முதல் சொற்போழிவை முடித்து விட்டு உட்கார்ந்தேன். அந்த தொழில் பயிற்சி நிலையத்தின் முதல்வர், உங்களுடைய உரை நன்றாக இருந்தது. ஆனால் இடையிடையே "வந்து" என்கிற அசைச் சொல்லை அதிகமாக உபயோகிக்கிறீர்கள், அதைத் தவிர்த்தால் உங்கள் உரை மேலும் சிறப்பாக இருக்கும் என்றார்.

அடுத்த உரையின்போது மிக க் கவனமாக அந்தச் சொல்லைத் தவிர்த்தேன். அதன் பிறகு எப்போது மேடையில் பேசுவதாக இருந்தாலும் இந்த கவனம் இருந்து கொண்டிருந்தது.

உதாரணத்திற்கு:

இப்போ வந்து நீங்க என்ன பண்ணறீங்கன்னா, அங்க கடைக்குப் போய் வந்து நான் சொன்ன சாமானை வாங்கறீங்க, அப்புறம் வந்து வீட்டுக்கு வர்றீங்க.

பலர் இது மாதிரி அடிக்கடி இந்த வார்த்தையைத் தங்கள் பேச்சில் உபயோகப் படுத்துவதைக் கேட்டிருப்பீர்கள்.

கீழே கொடுத்திருக்கும் விடியோ பேச்சைக் கேளுங்கள். அதில் ஐந்து நிமிடம் பேசுவதற்குள் பத்து தடவை இந்த "வந்து" எனும் வார்த்தையை உபயோகப் படுத்தியிருப்பார். இந்த வார்த்தைக்கு அர்த்தம எதுவும் இல்லை. இது வெறும் அசைச் சொல்லே.மேடைகளில் பேசும் வாய்ப்புள்ள பதிவர்கள் இந்த நுணுக்கத்தை மனதில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வியாழன், 6 அக்டோபர், 2016

போன மச்சான் திரும்பி வந்தாண்டி பூமணத்தோட

                       
                  Image result for a Tamil bride
இப்படி ஒரு பழமொழியை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். அத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மசான வைராக்யம், பிரசவ வைராக்யம் இந்த இரண்டையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இவைகளுக்கெல்லாம் பதவுரை, பொழிப்புரை, கருத்துரைகள் தேவையில்லாமலேயே எல்லோரும் விளங்கிக் கொள்ளக்கூடியவை. இவைகளைப் புரிந்து கொண்டவர்கள் நான் ஏன் பதிவுகள் போடாமல் ஒரு மாதம் இருந்தேன் என்பதையும் நான் சொல்லாமலேயே புரிந்து கொண்டிருப்பார்கள்.

கடைசியாக ஒரு சமகாலப் பிரச்சினை பற்றி என் மேலான (அல்லது சிலர் கருத்தில் கீழான) கருத்துக்களை ஒரு பதிவு போட்டிருந்தது படித்தவர்களுக்கு நினைவு இருக்கலாம். அதில் குறிப்பாக சிலருக்கு என் வயது ஒரு உறுத்தலாக இருந்திருக்கிறது. அதாவது வயது குறைவாக இருந்தால் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். வயது ஆன பின் இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று கருத்து சொன்னார்கள். சரி போகட்டும் என்று அந்தப் பதிவை நீக்கினேன்.

நண்பர் தமிழ் இளங்கோ அவர்கள் தொலை பேசியில் என்னிடம் பேசி சில கருத்துக்களைச் சென்னார். அதிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் இந்த உலகை சீர்திருத்த தனி மனிதனால் முடியாது என்பதுதான்.

சரி, இந்தப் பதிவுலகை விட்டு விலகி இருக்கலாம் என்று முடிவு எடுத்தேன். ஆனாலும் என் பதிவுகளைப் பார்வையிடுபவர்களை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் புதிதாகப் பதிவுகள் எழுதினாலும் எழுதாவிட்டாலும் என் பதிவுகளை மகாஜனங்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூகுளாரின் வரவு செலவு அறிக்கை கூறுகிறது.

இது வரையில் நான் ஆயிரம் பதிவுகளுக்கு மேல் எழுதி விட்டேன். இன்றைய தேதியில் பத்து லட்சம் மக்கள் என் பதிவுகளைப் பார்வையிட்டிருக்கிறார்கள். என் பதிவின் தமிழ் மணம் ரேங்க் ஒரு நூறையாவது எட்டியிருக்கும் என்று பார்த்தால் பனிரெண்டைத் தாண்ட மாட்டேன் என்கிறது.

ஆகவே என் பதிவுகளுக்கு என்று ஒரு வாசகர் வட்டம் இருப்பதை அறிந்தேன். அவர்களை ஏமாற்றக்கூடாது என்ற நல்ல அல்லது கெட்ட எண்ணத்தினால் திரும்பவும் எழுதலாம் என்று வந்து விட்டேன்.

பதிவுலக வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். வழக்கம்போல் என்னைத்திட்டி பின்னூட்டம் போடுவதை நிறுத்த வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

பின் குறிப்பு: இதுக்கு எதுக்கு பொம்பளை படம் என்று கேட்பவர்களுக்கு, அந்தப் பெண் பூ வைத்திருப்பதைப் பார்த்தீர்களல்லவா, தலைப்பிலும் பூமணம் இருப்பதைப் பார்த்தீர்களல்லவா, அதுதான் சம்பந்தம்.