திங்கள், 31 அக்டோபர், 2011

வேர்களைக் காப்பாற்றுவது எப்படி?

எனது நெருங்கிய நண்பர் அவருடைய மாப்பிள்ளையின் குழந்தைக்கு நடக்கும் காது குத்து விழாவிற்கு என்னையும் அழைத்துச் சென்றிருந்தார். இன்னொரு நெருங்கிய நண்பரும் உடன் வந்தார். விழா சிவகாசிக்குப் பக்கத்தில் உள்ள ஆலங்குளம் என்ற ஊரில் நடைபெற்றது. போகும் வழியில் சிவகாசிக்கு 5 கி.மீ.முன்பாக நண்பரின் சொந்த கிராமம் இருக்கிறது. ஆனைக்குட்டம் என்று பெயர்.

அவர் அந்த கிராமத்தை விட்டு வந்து 50 வருடங்களுக்கு மேல் இருக்கும். அந்தக் கிராமத்தில் அவருடைய பூர்வீக வீடு மட்டும்தான் இருக்கிறது. நெருங்கிய சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை.
















அந்தக்கிராமத்தில் ஊராட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கட்சி சார்பில்லாமல் போட்டியிட்டு வென்றவர்கள். அதில் சிலரை என் நண்பருக்குத் தெரியும். நாங்கள் அங்கு போவதால் அந்த பஞ்சாயத்து தலைவருக்கு போன் போட்டு சொல்லி அவர்களை பஞ்சாயத்து ஆபீசுக்கு வரச்சொல்லியிருந்தார். அவர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.


பஞ்சாயத்து வாயிலில் வரவேற்பு

அவர்களுக்கு என் நண்பர் தனித்தனியாக சால்வை அணிவித்து அவர்களைக் கவுரவப்படுத்தினார்.


பஞ்சாயத்து தலைவருக்கு சால்வை அணிவிக்கிறார்


பஞ்சாயத்து துணைத்தலைவருக்கு சால்வை அணிவிக்கிறார்


பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் அளவளாவுகிறார்

நண்பர் வேர்களைக் காப்பாற்றும் பாங்கைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.

வியாழன், 27 அக்டோபர், 2011

முட்டாள் ஆவது எப்படி.

Anonymous said...
ஒவ்வொரு ஆன்மிக வாதியும் உலகில் இருக்கும் ஒவ்வொரு முட்டாளாக பார்த்து ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் சொல்வதில்லை. அது அவர்களது வேலையும் இல்லை. தான் எதையும் அறியாத வரை மற்ற அறிந்தவர்களை முட்டாளாக நினைப்பதுதான் முட்டாள்களின் தன்மை. எந்த அறிவு வேண்டுமோ அதை தேடு அது கண்டிப்பாக கிடைக்கும். தேடாமல் இருந்தால் அது தானாக கிடைக்காது யாரும் உன்னிடம் வந்து சொல்ல மாட்டார்கள்.

                           

ரொம்ப ரொம்ப சுலபமான வேலை இதுதாங்க. கொஞ்சம் மொக்கையில்லாமல் ஒரு பதிவு போட்டுட்டீங்கன்னா போதும். பத்து பேரு உங்களுக்கு முட்டாள் பட்டம் தந்துடுவாங்க. அது ஏன்னு யோசிச்சுப் பார்த்ததில எனக்கு என்ன தோணுச்சுங்கிறத இந்தப் பதிவில எழுதியிருக்கேனுங்க.

எல்லோருக்கும் தனக்குத் தெரிஞ்சது அடுத்தவனுக்குத் தெரியலேன்னா அவனுக்கு முட்டாள்னு பட்டம் கொடுத்துடுவாங்க. அவனுக்குத் தெரிஞ்சிருக்கிறது உண்மைதானா என்பதைப் பற்றி அவன் கவலைப் படுவதில்லை. எனக்குத் தெரிஞ்சது அவனுக்குத் தெரியவில்லை, அவ்வளவுதான், ஆகவே அவன் முட்டாப்பயதான். இதுதான் அவனுடைய லாஜிக்.

இதுவாச்சும் பரவாயில்லீங்க. அவன் என்னென்னமோ நம்பிக்கைகள் வச்சிருப்பான். நீங்க அந்த நம்பிக்கைகளுக்கு எதிரா ஏதாவது சொன்னாப் போதும். உங்களுக்கு முட்டாள்னு பேர் வச்சுடுவான். நம்பிக்கைகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானவை. நீங்கள் நம்புவதை நான் அப்படியே நம்ப வேண்டுமென்ற அவசியம் உண்டா?

குறிப்பாக மத நம்பிக்கைகள். இதைப்பற்றி யாரும் ஒண்ணும் சொல்லக்கூடாது. சொன்னா, உடனே நீ ஒரு முட்டாள், உனக்கு இந்த உண்மைகள் புரியாது, நீ ஒரு நாத்திகன், அதனால்தான் இப்படி எழுதுகிறாய், இப்படியெல்லாம் சொல்லுவார்கள்.

நான் ஒரு கேள்வி கேட்கிறேன். கடவுளைப் பார்த்தவன் எவனும் கிடையாது. ஆனால் ஒருவன் கடவுள் உண்டு என்கிறான். அப்படி அவன் நம்புகிறான். இன்னொருவன் கடவுள் இல்லை என்கிறான். ஏனெனில் அவன் கடவுளைப் பார்த்ததில்லை, கடவுளைப் பார்த்தவர்களையும் பார்த்ததில்லை. அது அவன் நம்பிக்கை அல்லது அவன் எண்ணம் அல்லது அவன் கருத்து.

ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நேராக விவாதம் செய்யலாம். ஆனால் ஒருவனின் முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது கோழைத்தனம்.

புதன், 26 அக்டோபர், 2011

ஏன் தீபாவளி கொண்டாட வேண்டும்?



விஷ்ணுபகவான் நரகாசுரனைக் கொன்ற நாளாக தீபாவளியைக் கொண்டாடி வருகிறோம். இதை மூட நம்பிக்கை என்று சொல்லி தீபாவளியை கொண்டாடக்கூடாது என்று பிரசாரம் செய்வாரும் உளர். ஆனால் மக்கள் அந்த பிரசாரங்களைக் கேட்காமல் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கொண்டாட்டங்கள மனிதனுக்கு அவசியமாகிறது. அதிலும் தீபாவளி வெறும் கொண்டாட்டமாக அமையாமல் நமது பொருளாதாரத்துடன் எப்படி பின்னிப் பிணைந்து இருக்கிறது என்று யோசித்தீர்களானால் அதன் மகத்துவம் நன்றாகப் புரியும்.

நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த விழா எத்தனை பேருக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கிறது. எத்தனை வகையான தொழில்கள் இந்த திருவிழாவினால் பொருள் ஈட்டுகின்றன. இதெல்லாம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அல்லவா?

அது தவிர எத்தனை குடும்பங்களின் வெளியூரிலிருக்கும் குடும்பத் தலைவன் அவன் குடும்பத்துடன் இனிமையாகப் பொழுதைக்கழிக்க உதவுகின்றது. எவ்வளவு சிறார்கள் இன்று குதூகலமாக இருக்க வழி வகுக்கின்றது. இவையெல்லாம் மனித வாழ்வு தங்கள் வாழ்வு சிறக்க உதவுகின்றன.

ஆகவே தீபாவளித் திருநாளான இன்று எல்லோரும் தங்கள் குடும்பம் மற்றும் சுற்றத்தாருடன் இனிதே மகிழ்ந்திருக்க மனமார வாழ்த்துகிறேன்.

திங்கள், 24 அக்டோபர், 2011

உயிர் போனால் என்ன ஆகும்?


டிஸ்கி: இந்தப் பதிவைப் படிக்க நிறையப் பொறுமை வேண்டும்.
(அது இல்லைன்னா என்ன பண்ணுவது???? - கொஞ்சம் சிரமந்தான்)

மனிதன் என்பவன் உடல் + ஆன்மா + மனம் (+ புத்தி) என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து இயங்கினால்தான் மனிதன் வாழ்கிறான் என்று சொல்லலாம். ஒருவன் இறக்கும்போது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து செல்கிறது என்று கூறப்படுகின்றது. அப்போது அந்த ஆன்மாவுக்கும் இந்த உடலுக்கும் உள்ள தொடர்பு அறுந்து விடுகிறது என்று கூறுகிறார்கள். ஆன்மா பிரியும்போது மனமும் அழிந்து போகிறது.

ஆன்மாவுக்கு எந்த குணமும் கிடையாது என்று சொல்லுகிறார்கள். பகவத்கீதையில் ஒரு அத்தியாயம் முழுவதும் இந்தக் கருத்து பல விதமாக திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆன்மா அருவமானது, ஆதி அந்தம் இல்லாதது, அழிவற்றது, இப்படிச் சொல்லிக்கொண்டே போகிறது.

சாதாரண நடைமுறையில் நாம் சொல்லும் உயிர் என்ற வார்த்தையை ஆன்மீக குருக்கள் ஒருபோதும் உபயோகிப்பதே இல்லை. இதைப்பற்றி கேள்வி கேட்பதற்கும் அனுமதிப்பதில்லை. குரு சொல்லும் உபதேசத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லி நம் வாயை அடைத்துவிடுகிறார்கள்.

நான் கருதுவது என்னவென்றால் இந்த ஆன்மா என்பதும் உயிர் என்பதும் ஒன்றுதான். இது உடலுடன் இருந்தால்தான் உடல் இயங்கும். இது பிரியும்போது உடல் சவமாகி விடுகிறது. உயிர் ஏன் உடலை விட்டுப் பிரிகிறது? உயிரை வைத்துப் போற்றும் திறன் உடலுக்கு இல்லாதபோது உயிர் பிரிந்து விடுகிறது.

அப்புறம் எதற்காக இந்த ஆன்மீகவாதிகள் “ஆன்மா” என்ற பெயரைப் புகுத்தினார்கள் என்றால் மக்களை குழப்புவதற்காகவே. அவர்கள் கூற்றுப்படி ஆன்மாவிற்கு எந்த குணபேதங்களும் இல்லையென்றால் அந்த ஆன்மா குடியிருக்கும் மக்களிடையே இவ்வளவு குணபேதங்கள் ஏன் இருக்கின்றன? ஒருவனுடைய கர்மவினைகள் அவன் இறந்த பிறகு அவனுடைய மறு ஜன்மத்திலும் அவனைத் தொடர்கின்றன என்று கூறுகிறார்கள். ஒருவன் இறந்த பிறகு எந்த சாதனத்தின் மூலம் அவனுடைய கர்ம வினைகள் அடுத்த ஜன்மத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன? இதற்கு எந்த ஆன்மீகவாதியும் சரியான விளக்கம் கொடுப்பதில்லை.

ஆக மொத்தம் உடல், உயிர், மனது+புத்தி இருப்பது நிஜம். மற்றவை எல்லாம் ஒரு நம்பிக்கை மட்டுமே. அவரவர்களுக்குப் பிடித்த நம்பிக்கையை அவரவர்கள் பின்பற்றலாம். ஆனால் நான் பின்பற்றும் நம்பிக்கைதான் உயர்ந்தது என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. அதுதான் முக்கியம். பல ஆன்மீக குருக்கள் சொல்வதைக் கேட்கலாம். ஆனால் அதுதான் உண்மை என்று மூடத்தனமாக நம்பக்கூடாது. அவரவர்களாக யோசித்து தங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை நம்புவதே சிறந்தது.

வெள்ளி, 21 அக்டோபர், 2011

சொர்க்கத்தைப் பார்த்தேன்

கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு பஸ்சில் வந்தோம். 400 கி.மீ. தூரம். பஸ்கள் சொகுசானவை. ஏசி பொருத்தப்பட்டவை. ரோடுகள் 6 வழி எக்ஸ்பிரஸ் வே. ரோடுகளில் எந்த குண்டு குழிகளும் கிடையாது. பஸ்கள் ரோடுகளில் அப்படியே வழுக்கிக்கொண்டு போகின்றன.  ஒரு குலுங்கல் இல்லை. 400 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்து விட்டோம். 100 கி.மீ. தூரத்துக்கு ஒரு இடத்தில் கடை, பாத்ரூம் வசதிகள் இருக்கின்றன. பாத்ரூம்கள் அவ்வளவு சுத்தமாக இருக்கின்றன. யாரும் காசு கேட்பதில்லை.

ரோடில் வருபவர்களுக்காக சுங்கச்சாவடி, குடிஉரிமைச் சோதனைச்சாவடி ஆகியவை “வுட்லேண்ட்” என்னுமிடத்தில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குத் தனித்தனியாக இருக்கின்றன. இரண்டு இடங்களிலும் நம் பாஸ்போர்ட், விசா ஆகியவைகளைக் காண்பித்து “சாப்பா” (ரப்பர் ஸ்டாம்ப்) குத்திக்கொள்ளவேண்டும். இவைகளை தவறு இல்லாமல் செய்யவேண்டும். எங்காவது தவறு நடந்து விட்டால் அடுத்த குடியுரிமைச் சோதனையில் நம்மை ஒரு வழி ஆக்கிவிடுவார்கள். ஒரு சிறுவன் இம்மாதிரி ஒரு தவற்றினால் ஒன்றரை மணி நேரம் போராடி அவனை மீட்டு எடுத்து வருவதற்குள் டூர் ஏஜென்டுக்கு தாவு தீர்ந்து விட்டது. எங்கேயோ ஒரு இடத்தில் அவனுடைய பாஸ்போர்ட்டில் சீல் வைக்காமல் வந்துவிட்டான். அவ்வளவுதான். அவனை தீவிரவாதிகள் ரேன்ச்சுக்கு விசாரித்து அவனை விட அவ்வளவு நேரம் ஆயிற்று.

டூர் போவதென்றால் யாரும் வழிச்செலவுக்கு பணம் எடுத்துக்கொள்ளாமல் புறப்பட மாட்டார்கள். டூரிஸ்ட் கம்பெனியே எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொள்வதால் நாம் கொண்டுபோன பணம் அப்படியே இருக்கிறது. அதை திரும்பக் கொண்டு வந்து இங்கே என்ன செய்யப்போகிறோம்? அதற்குத்தான் சிங்கப்பூருக்கு கூட்டி வருகிறார்கள். எவ்வளவு பணம் இருந்தாலும் அத்தனையையும் செலவு செய்ய இங்கே வசதிகள் செய்து வைத்திருக்கிறார்கள். அதிக அலைச்சல் கூட இல்லை. ஒரே கடையில் நீங்கள் கொண்டுபோன அனைத்துப் பணத்தையும் செலவு செய்ய சாமான்கள் வைத்திருக்கிறார்கள். “முஸ்தபா சென்டர்” என்று அதற்குப் பெயர். அம்மா, அப்பா தவிர அனைத்துப் பொருட்களும் அங்கே கிடைக்கும். நான் 20 வருடத்திற்கு முன்பு பார்த்ததை விட பல மடங்கு வளர்ந்திருந்ததைப் பார்த்தேன். இதைத் தவிர இன்னும் ஏராளமான கடைகள் இருக்கின்றன. அத்தனையிலும் ஜனங்கள் மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் சிங்கப்பூரை “வாங்குபவர்களின் சொர்க்கம்” என்று கூறுகிறார்கள்.

சிங்கப்பூரில் நாங்கள் பார்த்த முக்கிய இடங்களின் லிஸ்ட்டும் போட்டோவும் மட்டும் கொடுத்திருக்கிறேன். ஏனென்றால் வாசகர்களில் அநேகர் சிங்கப்பூரைப் பார்த்திருப்பார்கள்.

1.   சென்டோஸா தீவு





2.   
சிங்கப்பூர் ஃப்லையர்


3.   சங்கி ஏர்போர்ட்


4.   சிங்கப்பூர் சிங்கம்


5.   மாரியம்மன் கோவில்
  
   
   கொசுறு; கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். சென்டோசா லேசர் ஷோவைப் பார்க்கலாம்.
  
  http://www.youtube.com/watch?v=AuCVmyxXO4Y









புதன், 19 அக்டோபர், 2011

பதிவுகளில் போட்டோக்களை பெரிதாகப் பார்க்க

பதிவுகளில் பலரும் போட்டோக்கள் போடுகிறார்கள். நானும் போட்டுக்கொண்டு இருக்கிறேன். அவைகளின் மேல் கர்சரை வைத்து இடது சிங்கிள் கிளிக் பண்ணினால் போட்டோக்கள் பெரிதாகவும் நன்றாகவும் தெரிகின்றன.
மேலும் அந்தப் பதிவில் உள்ள எல்லாப் போட்டோக்களும் கீழே தம்ப்நெய்ல் அளவில் தெரிகின்றன. அதில் எதை வேண்டுமானாலும் கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம். அல்லது மௌசை இடது கிளிக் செய்தாலும் அல்லது மௌஸ் ரோலரை சுழற்றினாலும் படங்கள் மாறுகின்றன.

இத்துடன் நான்கு படங்கள் இணைத்திருக்கிறேன். சோதனை செய்து பார்க்கவும்.





இதை பலர் ஏற்கனவே அறிந்திருக்கலாம். அவர்கள் இந்தப் பதிவைப் பார்த்து கேலி செய்யலாம். அவர்களுக்கு கேலி செய்ய ஒரு பதிவு போடுவதில் மகிழ்கிறேன். ஆனால் நான் இந்த நுட்பத்தை இப்போதுதான் அறிகிறேன். என் போல் இருப்பவர்களின் தகவலுக்காக இந்த தகவலைப் பதிவிடுகிறேன்.

தகவல் தொழில்நுட்பப் பதிவர்களின் மன்னிப்பைக் கோருகிறேன். (அவர்களின் சாம்ராஜ்யத்தில் அத்து மீறி நுழைந்ததற்காக)

திங்கள், 17 அக்டோபர், 2011

ஜென்டிங்க் ஹைலேண்ட், மலேசியா

ஒரு குறிப்பு - போன பதிவில் விட்டுப்போனது - இந்த நாடுகளில் நம் நாடு போலவே மின்சாரம் 220 வோல்ட். ஆனால் பிளக்குகள் வேறு மாதிரியானவை. அவைகளின் கம்பிகள் சதுரமாக இருக்கும். நாம் வழக்கமாக உபயோகப்படுத்தும் சாதனங்களை இந்தப் பிளக்குகளில் பொருத்த முடியாது. அதற்கு யூனிவர்சல் அடாப்டர் என்று ஒரு சாதனம் இருக்கிறது. நம் ஊரிலேயே கிடைக்கிறது. விலை 50 ரூபாய். செல்போன், காமிரா பயன்படுத்துபவர்கள் இந்த அடாப்டரைத் தவறாது வாங்கிக் கொண்டு போகவேண்டும்.
அடுத்து செல்போனுக்கு அந்த ஊரில் கிடைக்கும் புதிய சிம் கார்டு போட்டால்தான் வேலை செய்யும். கோலாலம்பூர் ஏர்போர்ட்டிலேயே கிடைக்கிறது. டிராவெல் ஏஜென்ட் வழிகாட்டுவார். இந்த சிம் கார்டில் பணம் மீதி இருந்தால் சிங்கப்பூரிலும் உபயோகப்படுத்தலாம். ஆனால் ரோமிங்க் சார்ஜ் வருவதால் அதிக கட்டணம் ஆகும். ஓரிரு முறை பேசுவதற்குப் போதும். அதிகமாகப் பேசுவதென்றால் சிங்கப்பூரிலும் தனி சிம் வாங்கிக் கொள்ளவேண்டும்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளும் புதிதாக உருவானவை. அவைகளுக்குப் பெரிய சரித்திரம் கிடையாது. ஆகவே அங்கு புராதன கலாச்சார சின்னங்கள் என்று சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காக அவர்கள் பலவகையான உத்திகளைக் கடைப் பிடிக்கிறார்கள்.

ஜென்டிங்க் ஹைலேண்ட் என்று சொல்லப்படும் இடம் ஒரு மலைமேல் உண்டாக்கப்பட்ட ஒரு பொழுது போக்குத் தலம். அமெரிக்காவில் இருக்கும் டிஸ்னிலேண்ட் போல ஒரு இடம். முழுவதும் தனியார் முதலீட்டில் உருவாக்கப்பட்ட இடம். உள்ளே போனால் நாம் இந்த உலகத்தில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் வரும். இந்த மாதிரி விளையாட்டுத் தளங்களுக்கே உரித்தான அத்தனை விளையாட்டுகளும் இங்கே இருக்கின்றன. 

நாங்கள் சும்மா வேடிக்கை மட்டும் பார்த்தோம். இந்த விளையாட்டுகளில் பங்கு பெற உடல் ஒத்துழைக்கவில்லை.

கீழிருந்து மலை மேல் போய்வர கேபிள் கார் வேலை செய்துகொண்டே இருக்கிறது. சுமார் 20 நிமிடம் பயணம் செய்து மலை உச்சியை அடையவேண்டும். பயணம் செய்யும்போது இந்தக் கேபிள் அறுந்தால் என்ன ஆகும் என்ற நினைப்பை விட முடியவில்லை.

படங்களைக் கிளிக்கினால் பெரிதாகத் தெரியும்

இங்குள்ள First World Hotel மொத்தம் 6500 அறைகள் கொண்டது என்று சொன்னார்கள். நான் நூறு வரை எண்ணினேன். அதற்கு மேல் எண்ண(?) வரவில்லை. தூக்கக் கலக்கம். பேசாமல் போய்த் தூங்கி விட்டேன். இத்தனை அறையிலுள்ளவர்களுக்கும் காலை இலவச உணவு கொடுப்பதென்றால் எத்தனை ஏற்பாடுகள் வேண்டும் எனப் பாருங்கள். ஆயிரம் பேர் ஒன்றாகச் சாப்பிடக்கூடிய டைனிங்க் ஹால் இருக்கிறது. சமையல்காரர்கள் தேனி போல் சுறுசுறுப்பாக வேலை செய்து அத்தனை பேருக்கும் காலை உணவு கொடுக்கிறார்கள்.


மறுநாள் கீழே இறங்கினோம். அங்கிருந்து கோலாலம்பூருக்கு பஸ்சில் சென்றோம். கோலாலம்பூரில் நாங்கள் பார்த்த முக்கியமான இடங்கள்.

1.   பத்துமலை முருகன் கோவில்: 
   
  
   தமிழர்கள் ஒரு காலத்தில் அதிகமாக மலேசியாவில் இருந்ததன் ஞாபகார்த்தமாக இந்த முருகன் கோவில் விளங்குகிறது. மலைமேல் உள்ள ஒரு குகையில் முருகன் சந்நிதியும், வள்ளி-தேவயானை சமேத முருகன் சந்நிதியும் இருக்கிறது. பிற்காலத்தில் சுமார் 150 அடி உயர முருகன் சிலையை கோவிலுக்கு முன்பு, ஏறும் படிகளுக்கு அருகில் நிறுவி இருக்கிறார்கள். மலேசியாவிற்கு செல்பவர்கள் கட்டாயம் தரிசிக்கவேண்டிய இடம்.

2.   பெட்ரொனாஸ் இரட்டைக் கோபுரம்:


இந்த கோபுரம்தான் மலேசியாவின் அடையாளமாக எல்லா டூர் கம்பெனிகளாலும் காட்டப்படும் சின்னம். இது மலேசியாவின் பெட்ரோல் கம்பெனியாரால் கட்டப்பட்டது. மலேசியாவின் இயற்கை வளங்களில் மிகவும் முக்கியமானது பெட்ரோல். இங்கு கிடைக்கும் பெட்ரோல் நல்ல தரமுடையது. ஆதலால் இதை வெளி நாட்டுக்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டு தங்கள் தேவைக்கு தரம் குறைவாக உள்ள பெட்ரோலை வெளிநாட்டிடமிருந்து வாங்கிக்கொள்கிறார்கள். பிழைக்கத்தெரிந்தவர்கள்.

நாங்கள் சென்றிருந்தபோது பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தபடியால் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

3.   கோலாலம்பூர் டெலிவிஷன் டவர்: 

    
   இது கோலாலம்பூர் டவர் என்று அழைக்கப்படுகின்றது. இதன் உச்சியில் ரேடியோ. டெலிவிஷன் ஒலி, ஒளிபரப்பும் கருவிகள் உள்ளன. இதில் பாதியில் ஒரு பார்வையாளர்கள் அரங்கு இருக்கிறது. அதற்குச் செல்ல லிப்ட் வசதி இருக்கின்றது. அங்கிருந்து பார்த்தால் பல கி.மீ. தூரத்திற்கு காட்சிகள் தெரிகின்றன.


4.   கோலாலம்பூர் வார் மெமோரியல்: 
  
   முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் மற்றும் 1950 களில் நடந்த உள்நாட்டுப்போர் ஆகியவைகளில் இறந்தவர்களுக்காக ஒரு தேசிய நினைவுச்சின்னம் வைத்திருக்கிறார்கள். மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றது.

5.   சுதந்திர தின விழா மைதானம்: 


   நம் ஊர் மைதானங்களைப் பார்க்கும்போது இது மிகவும் சிறியதாக இருக்கிறது. அந்த ஊர் ஜனத்தொகைக்கு அது போதும்போல் இருக்கிறது.

6.   புத்திரஜெயா: 
   
   
   
   கோலாலம்பூரில் இடநெருக்கடி காரணமாக அரசு அலுவலகங்களை 25 கி.மீ. தள்ளி ஒரு புதிய ஊர் ஸ்தாபித்து அங்கு மாற்றியிருக்கிறார்கள். கட்டிடங்கள் எல்லாம் விலாசமாக இடம் விட்டு கட்டியிருக்கிறார்கள். ஒரு சர்வதேச கருத்தரங்கு மையம், எல்லா வசதிகளுடனும் கட்டப்பட்டு இருக்கிறது.



7.   மகாராஜா அரண்மனை: 


    
   இந்த ஊரில் மகாராஜா இருக்கிறார். முழநீளப்பெயர். வாயில் நுழையவில்லை.  ஆனால் அதிகாரம் எல்லாம் பிரதம மந்திரிக்குத்தானாம். நாங்கள் அரண்மனை கேட்டையும் காவலாளியையும் மட்டும் பார்த்தோம்.
   
   

கோலாலம்பூர் அவ்வளவுதான். அடுத்தது சிங்கப்பூர்.
  

வெள்ளி, 14 அக்டோபர், 2011

வெளிநாட்டின் நடைமுறைகள்



வெளிநாட்டில் இருக்கும்போது நமது பாஸ்போர்ட், ரிடர்ன் விமான டிக்கெட், பணம், ஆகிய இந்த மூன்றும் உயிர் போன்றவை. எக்காரணத்தைக்கொண்டும் இவைகளைத் தவற விடக்கூடாது. தவற விட்டால் மிகமிக கஷ்டப்பட வேண்டி வரும். அதிகக் கவனம் தேவை.

வெளிநாட்டில் போய் இறங்கினதுமே நமக்கு செலவு செய்ய அந்த ஊர்ப் பணம் தேவை. இந்திய ரூபாயை வெளிநாட்டில் யாரும் மதிக்க மாட்டார்கள். அமெரிக்க டாலருக்கும் பிரிட்டிஷ் பவுண்ட்டுக்கும்தான் உலக முழுவதும் மதிப்பு உண்டு. ஆகவே வெளிநாடு செல்பவர்கள் தங்கள் டூர் ஏஜென்ட் மூலமாக தங்கள் தேவைக்குண்டான டாலரை வாங்கிக்கொண்டு செல்லவேண்டும். இந்த டாலரை வெளிநாட்டில் இறங்கியதுமே, அங்கு ஏர்போர்ட்டில் இருக்கும் பணபரிமாற்ற ஏஜெண்டுகள் மூலமாக உள்நாட்டுப்பணமாக மாற்றிக் கொள்ளவேண்டும்.

மலேயாவின் நாணயம் “ரிங்கெட்” என்பதாகும். ஒரு ரிங்கெட் 16 ரூபாய்க்கு சமம். ஒரு அமெரிக்க டாலர் 50 ரூபாய்க்கு சமம். அந்தந்த நாடுகளில் அவர்கள் நாணயத்தை நாம் ரூபாயைச் செலவு செய்வது போல்தான் செய்வார்கள். உதாரணத்திற்கு நம் நாட்டில் ஒரு சாப்பாடு 25 ரூபாய் என்றால் அந்த ஊரில் 25 ரிங்கெட் இருக்கும். நாம் உடனே ஒரு சாப்பாட்டுக்கு 25 x 16 = 400 ரூபாயா என்று மலைத்துப் போகக்கூடாது. எல்லா நாடுகளிலும் ஏறக்குறைய இவ்வாறுதான் இருக்கும்.

அடுத்ததாக நாம் எடுத்துச்செல்லும் சாமான்கள். வெளிநாட்டில் எங்கும் போர்ட்டர்கள் கிடையாது. அவரவர்கள் லக்கேஜை அவரவர்களேதான் சுமக்க வேண்டும். ஏர்போர்ட்டுகளில் டிராலி இருந்தாலும் மற்ற இடங்களில் நம் லக்கேஜை நாம்தான் தூக்கவேண்டும். தவிர போகும் இடங்களில் ஏதாவது பொருட்கள் வாங்குவோம். அதில் எடை கூடும். இவைகளை மனதில் வைத்து புறப்படும்போதே அளவாகப் பொருட்களையும் துணிமணிகளையும் எடுத்துக்கொள்வது நலம். குறிப்பாக பழய உள்ளாடைகளை எடுத்துக்கொண்டால் அவைகளை ஆங்காங்கே கழித்து விட்டால் அவைகளின் எடை குறையும்.

ஓட்டல்களில் தங்கும்போது சில குறிப்புகளை கவனத்தில் கொள்ளவேண்டும். எங்கும் துணி துவைக்க அனுமதி இல்லை. படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் இவற்றில் கறைகள் ஏற்பட்டால் அவற்றிற்கு தனியாக சார்ஜ் செய்வார்கள். எல்லா ஓட்டல்களிலும் வெந்நீர் 24 மணி நேரமும் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு ஓட்டலிலும் பைப்புகள் ஒவ்வொரு மாதிரி இருக்கும். விவரம் தெரியாமல் வெந்நீர்ப் பைப்பைத் திறந்துவிட்டு கீழே நின்றால் உங்கள் உடல் வெந்துபோகும் வாய்ப்பு உண்டு. ஆகவே பைப்புகள் எப்படி வேலை செய்கின்றன என்று பார்த்து விட்டு உபயோகிக்கவேண்டும். புரியாவிட்டால் ரூம்-பாயைக் கூப்பிட்டுத் தெரிந்து கொள்ளவும். இதில் கூச்சம் வேண்டியதில்லை.

மிக முக்கியமான குறிப்பு. எந்த ஒட்டலில் ரூம் போட்டாலும் ரூமுக்கு சாவி கொடுப்பார்கள். நாம் சாதாரண சாவிகளுக்கே பழகியவர்கள். இப்போது வெளிநாடுகளில் இந்த பூட்டு சாவி விஷயத்தில் மிக அதிக மாற்றங்கள் வந்துள்ளன. பூட்டுகள் கம்ப்யூட்டரால் இயக்கப்படுகின்றன. சாவிகள் நம் ஊர் பேங்க் கிரெடிட் கார்டு போல் இருக்கின்றன. அதை ரூம் கதவில் இருக்கும் ஒரு ஸ்லாட்டில் நுழைத்து எடுத்தால் கதவு திறந்து கொள்கிறது. ரூமுக்குள் போனவுடன் அதே கார்டை உள்ளே இருக்கும் ஒரு ஸ்லாட்டில் போட்டால் எல்லா மின்சாதனங்களும் வேலை செய்கின்றன.

ஒரு அதிமுக்கியமான ஜாக்கிரதைக் குறிப்பு. இந்த கம்ப்யூட்டர் சாவி அல்லது வேறு எந்த சாவியானாலும் கதவைப் பூட்டுவதற்கு அவை தேவையில்லை. எனவே வெளியில் செல்லும்போது சாவியை அறைக்குள் வைத்துவிட்டு அறையை சாத்திவிட்டால் அவ்வளவுதான். நீங்கள் அறைக்குள் மறுபடி செல்ல முடியாது. ரிசப்ஷனில் சொல்லி, அபராதம் கட்டி வேறு சாவி வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடும்.

நம் தமிழ்நாட்டுப் பெண்மணிகளுக்கு கழுத்து நிறைய நகைகள் போடாவிட்டால் ஏதோ மூளியாக இருப்பதாக உணர்வார்கள். அவர்கள் வெளிநாட்டில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவர்களைப் பார்த்தால் அந்த ஊர் பிக்பாக்கெட்காரர்களுக்கு அல்வாவைப் பார்த்த மாதிரி.


அடுத்து வெளிநாட்டு ஓட்டல்கள் அனைத்திலும் சாப்பாடு பஃபே முறைதான். எல்லாப் பண்டங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவரவர்களுக்குப் பிடித்தவைகளை, தேவையான அளவு எடுத்துக்கொண்டு போய் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடவேண்டும். இரண்டு மூன்று முறைகள் எடுத்துக்கொண்டாலும் தவறாகப் பார்க்கமாட்டார்கள். ஆனால் ஓசியாகக் கிடைக்கிறது என்று அளவுக்கு மீறி சாப்பிட்டுவிட்டு வயிற்றுத் தொந்திரவுக்கு ஆளாகக்கூடாது. பொதுவாக வெளிநாட்டில் உணவினால் வரும் வியாதிகள் இல்லை. ஆனாலும் நாம் வலியப் போய் தொந்திரவுகளை வரவழைத்துக் கொள்ளக்கூடாது. அது எல்லோருக்கும் தொந்திரவு தரும்.

உடல் தாங்கும் அளவிற்கே வேலை தரவேண்டும்.  கண்டபடி சாப்பிட்டுவிட்டு அனாவசியமாக அலைந்தால் உடல் களைப்புற்று உங்களுடன் ஒத்துழைக்க மறுத்துவிடும். ஆகவே உங்கள் உடலைக் களைப்புறச் செய்துவிடாதீர்கள்.

வெளிநாட்டு சுற்றுலா அதிக பொருட்செலவில் மேற்கொள்ளுகிறோம். சிறுசிறு தவறுகளினால் சுற்றுலாவின் இனிமையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.


புதன், 12 அக்டோபர், 2011

மலேசியாவின் உயர்ந்த கட்டிடங்கள்

மலேசியாவில் நவீன கட்டிடக்கலை மிகவும் வளர்ந்திருக்கிறது. சில கட்டிடங்களைப் பாருங்கள்.



இதுதான் மலேசியாவின் அடையாளம்.
பெட்ரோலியம் கம்பெனியின் அலுவலகங்கள் இங்கு இருக்கின்றன.




மலேசியா டவர் என்று அழைக்கப்படும் தொலைத்தொடர்பு டவர்.


பிரதம மந்திரியின் அலுவலகம்



ஜென்டிங்கில் உள்ள First World Hotel


திங்கள், 10 அக்டோபர், 2011

வெளிநாடு செல்ல (Departure) நடைமுறைகள்


சென்னை விமான நிலையத்தில் நான்கு வழிகள் இருக்கின்றன.

1.   வெளிநாடு செல்பவர்கள் விமான நிலையம் உள்ளே செல்லும் வழி.

2.   வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வெளியே வரும் வழி.

3.   உள்நாட்டுப் பயணிகள் உள்ளே செல்லும் வழி.

4.   உள்நாட்டுப் பயணிகள் வெளியே வரும் வழி.

ஏன் இப்படித் தனித்தனியாக வைத்திருக்கிறார்கள் என்றால் பயணிகளுக்கு குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகவே.

நாங்கள், நானும் என் மனைவியும், வெளிநாடு செல்பவர்கள் உள்ளே செல்லும் வழிக்குப் போய் சேர்ந்தோம். டாக்சியை விட்டு இறங்கினோம். அங்கு இருக்கும் ஒரு தள்ளு வண்டியைப் பிடித்து அதில் எங்கள் சாமான்களை ஏற்றினோம். எல்லா ஊர் விமான நிலையங்களிலும் இந்த மாதிரி தள்ளு வண்டிகள் உண்டு. கட்டணம் எதுவுமில்லை. அவரவர்கள் உபயோகித்துவிட்டு ஆங்காங்கே விட்டு விடலாம்.

எங்கள் டூர் ஏஜென்ட் எங்களை அங்கேயே இருக்கச் சொல்லியிருந்தார். அவர் 7.30 மணிக்கு அங்கு வந்து சேர்ந்தார். அவரவர்களுக்குரிய பாஸ்போர்ட்டுகளையும் பிளேன் டிக்கட்டுகளையும் கொடுத்தார். எல்லோரையும் ஏர்போர்ட் உள்ளே சென்று வெய்ட்டிங்க் ஹாலில் ஒரு குழுவாக இருக்கச்சொன்னார். எல்லோரும் வந்து சேர்ந்த பின் வெளிநாடு செல்லும் நடைமுறையை ஏஜென்ட் உதவியுடன் அனுசரிக்க ஆரம்பித்தோம்.

நீங்கள் விமான நிலையத்திற்குள் புகுந்த பிறகு விமானத்தில் ஏறி உட்கார நான்கு படிகள் தாண்ட வேண்டும்.
   
  1. உங்கள் பாஸ்போர்ட், விமான டிக்கட் இவைகளைச் சரி பார்த்து உங்களுக்கு இருக்கைச் சீட்டு தருவார்கள். இதற்கு போர்டிங் கார்ட் என்று பெயர். இவர்களே உங்கள் செக்-இன் பேக்கேஜையும் எடை போட்டு வாங்கிக் கொள்வார்கள்.

அதாவது நீங்கள் கொண்டு செல்லும் உடமைகளை இரண்டு வகையாகப் பிரிப்பார்கள். கொஞ்சம் பெரிதாக இருப்பவைகளை அவர்களே வாங்கிக்கொண்டு பிளேனில் சாமான்கள் கொண்டுபோகும் பகுதியில் எடுத்துச்சென்று நீங்கள் பிளேனை விட்டு இறங்கும்போது கொடுப்பார்கள். இதற்கு “செக்-இன்” லக்கேஜ் என்று பெயர். கொஞ்சம் சிறியதாக இருக்கும் உடமைகளை (ஒன்று மட்டும்) நீங்களே கையோடு எடுத்துக் கொண்டு பிளேனுக்குள் உங்கள் சீட்டுக்கு மேலே இருக்கும் சாமான் வைக்கும் பகுதியில் வைத்துக் கொள்ளலாம். இறங்கும்பொது மறக்காமல் இந்த சாமானை எடுத்துக்கொண்டு இறங்கவேண்டும். இதற்கு கேபின் பேக்கேஜ் என்று பெயர்.

இவைகளுக்கு அதிக பட்ச எடை அளவு உண்டு. செக்-இன் லக்கேஜ் 20 கிலோவுக்குள்ளும் கேபின் பேக்கேஜ் 7 கிலோ அளவுக்குள்ளும் இருக்கவேண்டும். எடை அதிகமானால் பணம் வசூலிப்பார்கள். சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம் என்கிற ரீதியில் இந்த கட்டணம் இருக்கும்.

செக்-இன் லக்கேஜ் ஒவ்வொன்றிற்கும் ஒரு அடையாள “டேக்” உங்கள் லக்கேஜில் ஒட்டி அதன் ஒரு சிறிய பகுதியை உங்கள் போர்டிங் பாசில் ஒட்டுக் கொடுப்பார்கள்.

2.   அடுத்தது எமிக்ரேஷன்/இமிக்ரேஷன் பகுதி. இங்கு உங்கள் பாஸ்போர்ட்டையும் விசாவையும் செக் செய்து அதில் ஒரு முத்திரையைக் குத்துவார்கள். அதாவது நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டதாக அர்த்தம். இதற்குப் பிறகு நீங்கள் பிளேனுக்கு செல்லாமல் இருக்கமுடியாது.

3.   அடுத்து கஸ்டம்ஸ் பரிசோதனை. நீங்கள் ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்கிறீர்களா என்று உங்கள் உடமைகளை எக்ஸ்-ரே மிஷின் மூலம் பார்ப்பார்கள். நீங்கள் கையில் எடுத்துச் செல்லும் சாமான்களில் கத்தி, மற்றும் ஏதாவது கூர்மையான முனை கொண்ட பொருட்கள் இருக்கக் கூடாது. அவைகளை செக்-இன் லக்கேஜில்தான் வைக்க வேண்டும். செல்போன், கேமரா, லேப்டாப் போன்றவைகளை செக்-இன் லக்கேஜில் வைக்கக் கூடாது.

4.   அடுத்தது செக்யூரிடி பரிசோதனை. நீங்கள் உங்கள் உடம்பில் ஏதாவது ஆயுதம் மறைத்து எடுத்துப் போகிறீர்களா என்று பரிசோதிப்பார்கள்.
இவை முடிந்தவுடன் நீங்கள் ஒரு பெரிய ஹாலில் இருப்பீர்கள். நிறைய சேர்கள் போட்டிருப்பார்கள். உங்களைப் போன்று பலர் மனதில் ஒரு விதமான எதிர்பார்ப்புடன் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்.

விமானம் ரெடியானவுடன் இன்ன ஊருக்குப் போகும் விமானம் தயாராக உள்ளது, அதில் பயணம் செய்பவர்கள் விமானத்திற்குச் செல்லவும் என்று ஒரு அறிவிப்பு செய்வார்கள். காத்திருப்பவர்கள் எல்லோரும் சத்திரப்பட்டி பஸ் வந்தவுடன் ஓடுவார்களே அந்த மாதிரி ஓடுவார்கள். எல்லாருக்கும் அவரவர்கள் சீட் நெம்பர் போட்டு டோகன் கொடுக்கப் பட்டிருந்தாலும் ஏதோ நம் சீட்டை வேறு யாராவது பிடித்துக் கொள்வார்களோ என்ற எண்ணத்தில் தள்ளுமுள்ளு செய்வார்கள். கண்றாவியாக இருக்கும். விமானத்தை விட்டு இறங்கும்போதும் இவ்வாறுதான் தள்ளுமுள்ளு செய்வார்கள். என்ன செய்வது, ரத்தத்தில் ஊறிப்போன வழக்கம். மாற்ற முடிவதில்லை.


ஒரு வழியாக பிளேனில் ஏறி உட்கார்ந்துவிட்டீர்களா? இனி நிச்சயமாக நீங்கள் டிக்கெட் வாங்கியுள்ள வெளி நாட்டுக்கு உங்களைக் கொண்டு போய் சேர்த்து விடுவார்கள். அந்தக் காலத்தில், அதாவது சுமார் முப்பது வருடங்களுக்கு முன் விமானப் பயணம் என்பது பெரிய பணக்காரர்களுக்கும் உயர் அரசு அதிகாரிகளுக்கும் மட்டுமே சாத்தியமான ஒன்றாய் இருந்தது. டிக்கட் விலை அதிகம். ஆனால் அதற்குத் தகுந்த மாதிரி சேவைகளும் இருந்தன. விமானம் பறக்க ஆரம்பித்ததிலிருந்து இறங்கும் வரை ஏதாவது உபசாரம் நடந்து கொண்டே இருக்கும். நல்ல உணவு வகைகள். நல்ல மதுவகைகளும் வெளிநாட்டு விமானங்களில் கொடுப்பார்கள்.

ஆனால் இன்று விமானப் பயணம் ரயிலில் ஜனதா வகுப்பு போல் ஆகிவிட்டது. பணம் கொடுத்தால்தான் உணவு வகைகள் கிடைக்கும் என்றாகி விட்டது. நம்ம ஆட்களுக்குத்தான் இதையெல்லாம் சமாளிக்கத் தெரியுமே. வீட்டிலிருந்து புளியோதரை கட்டிக்கொண்டு வந்து ஏர்போர்ட்டில் சாப்பிட்டுவிட்டு பிளேன் ஏறுகிறார்கள். எப்படியோ பிளேன் சவாரி செய்தாகிவிட்டது. அது போதும். நாங்கள் காலை 7.30 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையம் வந்து சேர்ந்தோம். இங்குள்ள லோகல் டைம் இந்தியாவை விட 2.30 மணி அதிகம்.


கோலாலம்பூர் விமான நிலையம் மிகப் பெரிதாக இருக்கிறது. ஆனால் ஜனங்களையே காணவில்லை. மலேசியாவில் ஜனத்தொகை மிகவும் குறைவு. காலைக் கடன்களையெல்லாம் ஏர்போர்ட்டிலேயே முடித்துக் கொள்ளச்சொல்லி எங்கள் டூர் ஏஜென்ட் சொல்லிவிட்டார். ஏனென்றால் நாங்கள் அங்கிருந்து 150 கி.மீ. தூரத்திலுள்ள “ஜென்டிங் ஹைலேண்ட்” என்ற இடத்திற்குச் சென்று அங்குதான் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோலாலம்பூரில் காலைக் கடன்களுக்காக தனியாக ஓட்டல் ஏற்பாடு செய்ய நாங்கள் கொடுத்த பணம் போறாது. ஏர் போர்ட்டில் உள்ள பாத்ரூம்கள் வசதியாகவும் சுத்தமாகவும் இருக்கின்றன.

வெளிநாடுகளில் ஓட்டல் ரூம்களில் தங்குவதும் காலி செய்வதும் நம் ஊர் போல் இல்லை. நம் ஊர்களில் பெரும்பாலான ஓட்டல்களில் 24 மணி நேரம் ஒரு நாளாகக் கருதப்படுகிறது. அதாவது நாம் காலை 7 மணிக்கு ரூம் எடுத்தால் அடுத்த நாள் காலை 7 மணிக்கு காலி செய்தால் ஒரு நாள் வாடகைதான். ஆனால் வெளி நாட்டில் செக்-இன் டைம், அதாவது ரூம் எடுக்கும் நேரம் மாலை 3 மணி. செக்-அவுட் டைம் பகல் 12 மணி. நம் ஊர் போல் காலை 7 மணிக்கு ரூம் எடுத்து மறுநாள் காலை 7 மணிக்கு காலி செய்தால் இரண்டு நாள் வாடகை கொடுக்கவேண்டும். இன்னொன்று -  எல்லா ஓட்டல்களிலும் காலை உணவு இலவசம். அதற்கும் சேர்த்துத்தான் ரூம் வாடகை வாங்குகிறார்கள்.

ஆகவே இங்கிருந்து செல்லும் டூர் ஏஜென்ட்டுகள் இந்த நேரத்தை அனுசரித்தே புரொக்ராம் போடுவார்கள். டூர் செல்வோர் இதை மனதில் கொள்ளவேண்டும். குறைவான கட்டணத்தில் வெளிநாட்டு டூர் என்றால் இப்படி சில சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்.