செவ்வாய், 31 டிசம்பர், 2013

சொட்டு நீர்ப் பாசனம் உருவான கதை


சொட்டு நீர்ப்பாசனத்தின் வரலாறு மிகப் பழமையானது. பழங்கால சீனாவில் செடிகளுக்குப் பக்கத்தில் மண் பானைகளைப் புதைத்து அவைகளில் நீர் நிரப்பிவிட்டால் அந்த நீர் மண்பானையின் நுண்ணிய துவாரங்களின் வழியே கசிந்து செடிகளின் வேர்களுக்கு கிடைக்கும் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

சிம்ச்சா பிளாஸ் என்று ஒரு ஹைடேராலிக் இன்ஜினீயர். இவர் இஸ்ரேலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு விவசாயி அவரிடம் ஒரு அனுபவத்தைக் கூறினார். என் வீட்டில் ஒரு ஆலிவ் மரம் இருக்கிறது. அதற்கு நான் தண்ணீர் விடுவதே இல்லை. ஆனால் அந்த மரம் நன்கு செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த விவசாயி கூறினார்.

சிம்ச்சா பிளாஸ் இந்த மரத்தை நேரில் சென்று பார்த்தார். முதலில் அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. கொஞ்ச நேரம் யோசித்து விட்டு அந்த மரத்தின் வேர்ப்பாகத்தில் தோண்டச்சொன்னார். சிறிது தோண்டியதும் அங்கே ஒரு தண்ணீர் பைப் பதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அது அந்த விவசாயியின் வீட்டிற்கு தண்ணீர் வரும் பைப். அந்த பைப்பில் அந்த மரத்தின் வேர்களுக்குப் பக்கத்தில் ஒரு ஜாய்ன்ட் இருந்தது. அந்த ஜாய்ன்டில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. இதுவே அந்த மரம் செழித்து வளரக் காரணம் என்று சிம்ச்சா உணர்ந்தார்.

சாதாரணமாக எல்லோரும் இந்த சம்பவத்தைப் பார்த்த பிறகு நூறோடு நூற்றியொன்று என்று அதை மறந்து விடுவார்கள். ஆனால் சிம்ச்சா பிளாஸ் ஒரு தனிவிதமான மனிதர். இந்த அனுபவத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சில உண்மைகள் புலப்பட்டன. அதாவது தாவரங்களின் வேர்ப்பகுதியில் நீர் இருந்தால் அவை அதிகமாக வளர்கின்றன. தவிர குறைந்த நீர் இருந்தாலுமே அவை நன்கு வளரப் போதுமானது. இதனால் விவசாயத்திற்கு வேண்டிய நீரின் தேவை மிகக் குறையும்.

இப்படி சிந்தித்துக் கொண்டிருந்தவருக்கு இதை வணிக ரீதியாக மக்களிடையே பரப்பினால் நல்ல காசு பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. வேலையை ராஜீனாமா செய்தார். தன் மகனுடன் சேர்ந்து ஒரு கம்பெனி ஆரம்பித்தார். இந்த முறைக்கு சொட்டு நீர்ப் பாசனம் என்று பெயர் சூட்டினார். ஆரம்ப கட்ட சிரமங்களுக்குப் பிறகு இந்த நீர்ப்பாசன முறைக்கு ஆதரவு பெருகியது.

இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேல் நாட்டின் நீர்ப் பற்றாக்குறை. இஸ்ரேல் அடிப்படையில் ஒரு பாலைவனம். வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய ஏரியில் இருந்துதான் அந்த நாட்டிற்குத் தேவையான நீர் முழுவதையும் கொண்டு வருகிறார்கள். அங்கு நீர் ஒரு மதிப்பு மிக்க பொருள். ஆகவே அதை சிக்கனமாகவும் அதிக பயனுள்ளதாகவும் பயன்படுத்த ஒரு வழி கிடைத்தவுடன் அதை எல்லோரும் வரவேற்றார்கள். நாளடைவில் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த இஸ்ரேல் அரசே இந்த முறையைக் கட்டாயமாக்கியது.

இஸ்ரேல் நாட்டில் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும் சொட்டு நீர்ப்பாசன முறையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. நீர் பகிர்மானம் அரசிடம் இருந்ததால் இந்த உத்திரவு சாத்தியமாயிற்று. இதன்படி விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் விவசாயி, தன் நிலத்தில் செட்டு நீர்ப்பாசனக் கருவிகளை நிர்மாணம் செய்துவிட்டு பின்பு தண்ணீர் கோட்டவிற்கு விண்ணப்பிக்கவேண்டும். அரசு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு பின்பு தண்ணீர் கனெக்ஷனெ கொடுப்பார்கள்.

ஏறக்குறைய நம் ஊரில் கரண்ட் கனெக்ஷன் வாங்குவது போலத்தான். எல்லா வயரிங்க் வேலைகளையும் முடித்தபிறகு கரன்ட் கனெக்ஷன் வாங்குகிறோமில்லையா? அதே போல்தான் அங்கு தண்ணீர் கனெக்ஷன் வாங்குவதும். எப்படி நம் ஊரில் கரென்டுக்கு மீட்டர் வைத்திருக்கிறோமோ அதே போல் அங்கு தண்ணீருக்கும் மீட்டர் வைத்திருக்கிறார்கள். தண்ணீர் எவ்வளவு உபயோகிக்கிறார்களோ அவ்வளவுக்கு பணம் கட்டவேண்டும்.

என்னைக் கூட்டிக்கொண்டு சொல்லும் உள்ளூர் விஞ்ஞானி காலையில் எட்டு மணிக்கே வந்து விட்டார். அவர் வேலை செய்யும் ஆராய்ச்சி நிறுவனம் கற்றும் விவசாய பூமிகள் எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு போய்க் காண்பித்தார். நிறைய பேரீச்சமரங்களும் ஆலிவ் மரங்களும் பயிரிட்டிருக்கிறார்கள். இதைத்தவிர திராக்ஷை, மிளகாய், தர்ப்பூசனி, மக்காச்சோளம், தக்காளி ஆகிய பயிர்களைப் பார்த்தேன்.

அனைத்து பயிர்களும் சொட்டு நீர்ப் பாசனத்தில்தான் பயிரிடப்பட்டிருந்தன. நிலத்தின் மேற்பரப்பில் எங்கும் ஈரப்பசையைக் காண முடியவில்லை. ஆனால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன. சொட்டு நீரின் கூடவே பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும் சேர்த்து அனுப்புகிறார்கள். களைகள் மிகக் குறைவாகவே இருந்தன. எல்லாவற்றையும் பார்த்து நோட்ஸ் எடுத்துக்கொண்டேன்.

அப்போதுதான் நம் நாட்டில் சொட்டு நீர்ப்பாசன முறை பரவிக் கொண்டிருந்தது. உலகத்திலேயே இஸ்ரேல் நாடுதான் சொட்டு நீர்ப் பாசனத்திற்கு முன்னோடியாக விளங்குகிறது. இவ்வாறு நான் இஸ்ரேல் சென்ற நோக்கம் நிறைவேறியது.

அடுத்த நாள் இஸ்ரேலை விட்டு புறப்பட்டேன். தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதை அங்குதான் அனுபவித்தேன். எப்படி என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஜெருசலேமின் கண்ணீர் சுவர்


ஒரு காலத்தில் இஸ்ரேல் யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஆதார பூமியாக இருந்திருக்கிறது. ஏறக்குறைய இரு மதத்தினவரும் ஒரு கலாச்சாரத்திலிருந்து பிறந்திருக்கலாம்.

ஆகவே இஸ்ரேலில் இரு மதத்தினவர்களுக்கும் வழிபாட்டு ஆலயங்கள் இருந்திருக்கின்றன. கால ஓட்டத்தில் இரு மதத்தினவருக்கும் ஏற்பட்ட மோதல்களில் யூதர்களின் ஒரு ஆதி கோயில் அழிக்கப் பட்டு விடுகிறது. அதன் ஒரு பகுதி மட்டும் - அதாவது மேற்குப்பகுதியில் உள்ள சுவர் மட்டும் மிஞ்சுகிறது.

இது பிற்காலத்தில் யூதர்களின் வழிபாட்டு ஸ்தலத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறுகிறது. இந்த சின்னம் ஒரு தோல்வியின் சின்னமாதலால் பழங்காலத்தில் மக்கள் இங்கு வந்து கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள். நாளாவட்டத்தில் இது ஒரு சடங்காக மாறி விட்டது. அங்கு வரும் அனைத்து யூத மக்களும் (பிற்காலத்தில் கிறிஸ்துவ மக்களும்) இதை ஒரு புனித ஸ்தலமாக மாற்றி விட்டார்கள். அது போக இங்கு வருபவர்கள் கண்ணீர் விடவேண்டும் என்பதும் ஒரு பழக்கமாக மாறிப்போனது.

இதுதான் மேற்கு சுவர் என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Western Wall என்றும்,  மக்கள் இங்கு வந்து கண்ணீர் விடுவதால் Wailing Wall என்றும் பெயர் பெற்று விட்டது.   இன்றளவும் ஜெருசலேம் வரும் மக்கள் இந்த இடத்திற்கு தவறாமல் போகிறார்கள். இங்கு கண்ணீர் விடுவதால் தங்கள் பாவங்கள் நீங்குவதாகவும் மனக்கவலைகள் மறைவதாகவும் நம்புகிறார்கள்.

சுற்றுலா சென்றவர்களை இந்த இடத்திற்கு தவறாமல் கூட்டிக்கொண்டு போய் இந்த சுவற்றைக் காண்பிக்கிறார்கள். நானும் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு விட்டு வந்தேன் (!). கண்ணில் அப்போது தூசி விழுந்து விட்டது. கிறிஸ்தவ அன்பர்கள் என்னைத் தவறாக எண்ண வேண்டாம். கண்ணீர் விட்டது உண்மை.

பிறகு பெத்தலஹேம் (இயேசு கிறிஸுது பிறந்த இடம்) கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கே ஒரு தேவாலயம் இருக்கிறது. சமீப காலத்தில் கட்டியதாக இருக்கவேண்டும். அதன் பக்கத்தில் ஒரு மாட்டுத்தொழுவம் இருக்கிறது. அனைத்தும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவை. இங்குதான் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்று சொன்னார்கள்.

இத்தகைய இடங்களுக்குப் போகும்போது நம் மன நிலைதான் அந்த இடங்களை புனித ஸ்தலங்களாகப் பாவிக்க உதவுகிறது. நம்புக்கை இல்லாதவர்கள் இத்தகைய இடங்களுக்குப் போவது வீண்.

இங்கிருந்து பார்த்தால் ஒரு சிறிய மலை தெரிகிறது. இந்த மலையில்தான் இயேசு கிறிஸ்து தன் பத்துக் கட்டளைகளை செதுக்கினார் என்று சொன்னார்கள். அப்படியா என்று கேட்டுக்கொண்டோம்.

இந்த சுற்றுலா பஸ்சில் அந்தக்காலத்திலேயே (1987) வாக்கி டாக்கி என்று சொல்லப்படும் போன் வைத்திருந்தார்கள். தங்கள் நடவடிக்கைகளை அவ்வப்போது தங்கள் கம்பெனிக்கு சொல்கிறார்கள். சாதாரண டெலிபோனுக்கே தவிக்கும் இந்தியாவிலிருந்து போன நான் அதை பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போல் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது நம் ஊரில் பிச்சைக்காரர்கள் கூட செல்போன் வைத்திருக்கிறார்கள்.

இப்படியாக ஜெருசலேம் பயணம் முடிந்தது. மறுநாள் டெக்னிகல் சமாச்சாரங்களைப் பார்த்தேன்.

திங்கள், 23 டிசம்பர், 2013

இயேசுவின் கடைசி யாத்திரை


இந்த யாத்திரையைப் பற்றி அறிந்திராதவர்கள் (எம்மதத்தவராயினும்) இருக்க முடியாது. அப்போது இருந்த யூத மதத் தலைவர்கள் இயேசுவிற்கு சிலுவையில் அறையப்பட்டு மரணமடையவேண்டும் என்ற தண்டனையை வழங்கியதாக பைபிளில் எழுதப் பட்டுள்ளது. சிலுவையில் அறைவது என்றால் கைகளையும் கால்களையும் சிலுவையின் நான்கு பக்கமும் ஆணி அடித்து அந்த குற்றவாளியை தொங்க விடுவது. படம் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். (அலுவலகத்தில் ஆணி பிடுங்குவது என்பது வேறு.)

அப்போதைய மரண தண்டனை முறை இது. அவர்கள் அறையப்படும் சிலுவையை,  தண்டனை விதிக்கப்பட்ட யூத குருமார்களின் ஆலயத்திலிருந்து தண்டனை நிறைவேற்றப்படும் இடம் வரைக்கும் தண்டனை பெற்றவரே தூக்கிக் கொண்டு செல்லவேண்டும். நினைக்கவே கொடுமையாய் இருக்கிறது.

நம் தமிழ்நாட்டிலும் இத்தகைய தண்டனைகள் இருந்ததாகப் புத்தகங்கள் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தக் காலத்தில் "கழுவேற்றுதல்" என்ற தண்டனை இருந்திருக்கிறது. பாண்டிய மன்னன் சமணர்களைக் கழுவேற்றினான் என்று படித்திருக்கிறோம். ஆனால் அந்த தண்டனை எப்படியிருக்கும் என்று சிந்தித்தது கிடையாது.

சைனாவில் குற்றவாளிகளுக்கு ஒருவகையான தண்டனை கொடுக்கப்படும் என்று படித்திருக்கிறேன். குற்றவாளியை ஒரு மைதானத்தில் படுக்கவைத்து அவனுடைய இரண்டு கைகளிலும் இரண்டு கால்களிலும் பலமான கயிறுகள் கட்டப்படுமாம். இந்தக் கயிறுகளை திசைக்கு ஒன்றாக நான்கு திசைகளில் நான்கு வலுவான எருதுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருக்குமாம். நான்கு எருதுகளை ஓட்ட நான்கு ஆட்கள் இருப்பார்களாம். அரசன் உத்திரவு கொடுத்தவுடன் ஒரே சமயத்தில் இந்த நால்வரும் அந்த எருதுகளை நான்கு திசையிலும் விரட்டுவார்களாம்.

இப்போது சிறிது கற்பனை செய்து பாருங்கள். இந்த தண்டனைகளெல்லாம் எப்படியிருக்கும்? குரூரத்தின் உச்சகட்ட தண்டனைகள் இவை. இந்த தண்டனைகளை வேடிக்கை பார்க்க அந்த நாட்களில் ஏகப்பட்ட மனிதர்கள் (?) கூடுவார்களாம்.

என்னை அழைத்துப் போன சுற்றுலா பஸ்சின் கைடு இந்த இயேசுவின் கடைசி யாத்திரையை கண்முன் கொண்டு வந்தார். இயேசு சென்றதாக க் கூறப்படும் வழியாக எங்களை (சுற்றுலா பஸ்சில் வந்தவர்களை) அழைத்துச் சென்றார். அந்த வழி ஏறக்குறைய காசியில் விஸ்வநாதர் ஆலயத்திற்கு செல்லும் வழி போல் இருக்கிறது.

அந்த வழியில் இயேசு எப்படி சென்றார், எந்தெந்த இடங்களில் கீழே விழுந்தார், யார் அவருக்கு குடிக்க நீர் கொடுத்தார்கள், எந்த சீடர் உடன் வந்தார் என்கிற விவரங்களை எல்லாம் நேரில் நடப்பது பொல் கூறிக்கொண்டே வந்தார். இத்தகைய கைடுகள் இதே வேலையாக இருப்பதால் அவர்கள் வர்ணனைகள் தத்ரூபமாக இருக்கின்றன. ஏறக்குறைய நம்மை அந்தக் காலத்திற்கே கூட்டிப்போய் விடுகிறார்கள். அவர் சொல்லும் காட்சிகள் தம் கண் முன்னே நடப்பதுபோல் உணர ஆரம்பித்து விடுகிறோம்.

நானும் அவருடைய வர்ணனைகளைக் கேட்டு அந்தக் காலத்திற்கே போய்விட்டேன். மனது மிகவும் கனக்க ஆரம்பித்து விட்டது. கண்கள் பனிக்க ஆரம்பித்தன. அந்த அளவு உணர்ச்சிப் பிரவாகத்தை நான் எப்போதும் உணர்ந்ததில்லை. அதுதான் என் வாழ்நாளின் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

இயேசுவை சிலுவையில் அறைந்த இடம் என்று ஒரு இடம் வரையில் இந்த யாத்திரை தொடர்கிறது. அந்த இடத்தில் ஒரு சர்ச் கட்டியிருக்கிறார்கள். அந்த சர்ச் மிகவும் சிதிலமடைந்து விட்டபடியால் அதை இடித்து விட்டு அப்போது புதிதாக கட்டிக்கொண்டு இருந்தார்கள். அந்த இடத்தில்தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்று கைடு சொன்னவுடன் கூட வந்திருந்த பெண்கள் கண்ணீர் சிந்தினார்கள்.

ஜெருசலேமில் கண்ணீர் விடுவதற்கு என்றே ஒரு தனி இடம் இருக்கிறது. இது யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மிகவும் புனிதமான இடமாகும். அதை அடுத்த பதிவில் பார்க்கலாமா?


புதன், 18 டிசம்பர், 2013

இஸ்ரேலுக்குப் போனேன்.


(பிறகு என்னை மட்டும் தனியாக இரண்டு பேர் வேறு ஒரு ரூமுக்கு கூட்டிப்போனார்கள். அங்கு போன பிறகு நடந்ததைச் சொல்ல வெட்கமாக இருக்கிறது.)

அங்கு என் டிரஸ் முழுவதையும் கழட்டச் சொன்னார்கள். நான் வணங்கும் முருகன் அருளால் ஜட்டியை மட்டும் விட்டு வைத்தார்கள். டிரஸ்சிற்குள் ஏதாவது மறைத்து வைத்திருக்கிறேனா என்று சோதனை செய்தார்கள். அவர்களுக்குத் திருப்தியானவுடன் டிரஸ்ஸை மாட்டிக்கொள்ளச் சொன்னார்கள்.

பிறகு என் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு செக்இன் கவுன்டருக்குப் போகச் சொன்னார்கள். அங்கு போய் லக்கேஜ்களைக் கொடுத்துவிட்டு ஹேண்ட் பெக்குடன் போர்டிங்க் ஏரியாவிற்குப் போனேன். ஏதோ கொலைத்தண்டனையிலிருந்து தப்பித்த உணர்வு வந்தது. இருந்தாலும் பதட்டம் முழுவதும் மறையவில்லை. ஏன் இந்த வம்பில் வந்து மாட்டிக்கொண்டோம் என்ற உணர்வே மேலோங்கி நின்றது.

போர்டிங்க் ஏரியாவில் இரண்டு பேர் தீவிரவாதிகள் மாதிரி துப்பாக்கி, ஒரு கிராஸ்பெல்ட் முழுவதும் தோட்டாக்கள் சகிதம் இருந்தார்கள். ஓஹோ நான் போகும் பிளேனை கண்டிப்பாக ஹைஜாக் செய்யப்போகிறார்கள் என்று நம்பினேன். நான் அதுவரை ஹைஜாக்க்கில் சிக்கியதில்லை. சரி, அவ்வளவுதான், நம் ஆயுள் இன்றோடு முடிவடையப்போகிறது என்று மனதிற்குள் தோன்றியது.

பிளேனில் ஏறியது, இஸ்ரேல் 'டெல்அவிவ்' என்கிற ஊரின் ஏர்போர்ட்டில் இறங்கியது எல்லாம் ஏதோ கனவில் நடப்பது மாதிரி தோன்றியது. ஏர்போர்ட்டில் ஒருவர் என்னை வரவேற்க வந்திருந்தார். அவருடன் சென்று ஒரு ஓட்டலில் தங்கினேன். என்னுடன் வந்தவர் நாளைக்கு நீங்கள் ஜெருசலேம் சென்று பார்த்துவிட்டு வாருங்கள். அதற்கு ஸ்பெஷலெ டூரிஸ்ட் பஸ்கள் இருக்கின்றன. நான் ஓட்டல் மூலமாக புக் செய்து விடுகிறேன், அவர்கள் இங்கேயே வந்து உங்களை கூட்டிக்கொண்டு போவார்கள் என்றார். 

நான் தயங்கினேன். காரணம் நான் எப்போது அலுவலக விஷயமாக டூர் போனாலும் இந்த மாதிரி பொழுதுபோக்கு டூர்களில் கலந்து கொள்ள மாட்டேன். அது தவறு என்பது என் கொள்கை. அதை அவரிடம் சொன்னேன். 

அதற்கு அவர் இஸ்ரேல் வந்து விட்டு ஜெருசலேம் பார்க்காமல் போனால் அது உங்கள் வாழ்க்கையில் பெரிய இழப்பாகும். உங்கள் லோகல் கைடு என்ற முறையில் இந்த டூரை நான் ஒரு அலுவலக டூராகவே சிபாரிசு செய்கிறேன். போய்விட்டு வாருங்கள். நான் நாளை மறுநாள் உங்களை காலை 8 மணிக்கு மீண்டும் சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ரூமிற்குப் போய் என்னுடைய இரவு உணவை முடித்தேன். இரவு உணவு என்ன? நெதர்லாந்தில் வாங்கின வேர்கடலையும் ஆப்பிள் ஜூஸும்தான். ஒரு மாதிரியாக கனவுகள் மறைந்து தூங்கினேன். மறு நாள் காலையில் கைடு சொன்ன டூரிஸ்ட் பஸ் வந்து என் பெயரை சொல்லிக் கூப்பிட்டார்கள். அன்று நான் சென்ற டூர் என் வாழ்க்கையில் மறக்க முடியாததாக அமைந்தது. எப்படி என்று அடுத்த பதிவில் பார்க்கலாமா, நண்பர்களே.  

வெள்ளி, 13 டிசம்பர், 2013

இஸ்ரேலுக்கு விசா வாங்கினேன்.


நான் ஸ்வீடனுக்குப் போயிருந்தபோது அங்கு என் புரொக்ராமைக் கவனித்துக் கொள்பவரிடம் இஸ்ரேல் பார்க்கும் என் ஆசையை வெளியிட்டேன். அவர் அதற்கென்ன செய்து விடலாம் என்றார்.

அடுத்த நாள் இஸ்ரேல் தூதரகத்திற்குச் சென்றோம். நான் டில்லியில் அமெரிக்கத் தூதரகத்திற்குப் போயிருக்கிறேன். அது பெரிய இடம். பல கட்டிடங்கள், செடி கொடிகள், என்று ஆர்ப்பாட்டமாய் இருந்தது. நானும் ஸ்டாக்ஹோமில் இஸ்ரேல் தூதரகமும் அப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் இருந்தேன். இதிலேயே முதல் அடி.

ஒரு கட்டிடத்தில் ஒரு கதவு. அதற்கு மேல் இஸ்ரேல் தூதரகம் என்று ஒரு போர்டு. கதவு சாத்தியிருந்தது. அந்த கதவிற்குப் பக்கத்தில் ஒரு செக்யூரிடி காவலாள். இவ்வளவுதான் இஸ்ரேல் தூதரகம். என்னைக்கூட்டிக்கொண்டு போனவர் முன்பே சொல்லி வைத்திருப்பார் போலும். நாங்கள் யார் என்று சொன்னதும் அவர் அங்குள்ள மைக்ரோபோனில் என்னமோ சொன்னார். சிறிது நேரத்தில் கதவு திறந்தது. செக்யூரிடி எங்களை உள்ளே போகச்சொன்னார்.

நானும் உள்ளே பெரிய ஆபீஸ் இருக்கும் போல என்று நினைத்துக்கொண்டு உள்ளே போனேன். அங்கு ஒரு மாடிப்படி. அதில் ஏறிப் போனால் அங்கு ஒரு எட்டுக்குப் பத்தில் ஒரு ரூம். அங்கு யாரும் இல்லை. நாங்கள் அங்கு போய் சிறிது நேரத்தில் ஒரு அசரீரி கேட்டது. "என்ன வேண்டும்?" என்றது. நாங்கள் வந்த விஷயத்தைச் சொன்னதும் ஒரு ஐந்து நிமிடம் கழித்து அங்குள்ள ஒரு துவாரத்தின் வழியாக ஒரு காகிதம் வந்தது. அது விசா வாங்க அப்ளிகேஷன்.

அசரீரி மீண்டும் சொன்னது. அந்த அப்ளிகேஷனைப் பூர்த்தி செய்து, பாஸ்போர்ட், விசா கட்டணம் சேர்த்து அந்த துவாரத்தில் போடவும் என்றது. நாங்கள் அப்படியே செய்தோம். அப்ளிகேஷனையும் பாஸ்போர்ட்டையும் பணத்தையும் அந்த துவாரத்தில் போட்டு விட்டு கால் கடுக்க நின்று கொண்டிருந்தோம். உட்காருவதற்கு ஒரு நாற்காலி கூட இல்லை.

அரை மணி ஆயிற்று. ஒரு மணி ஆயிற்று. ஒன்றும் நடக்கவில்லை. ஒன்றரை மணி நேரம் கழித்து அந்த துவாரத்தின் வழியே என்னுடைய பாஸ்போர்ட் வெளியே வந்தது. எடுத்துப் பார்த்தோம். விசா சீல் குத்தப் பட்டிருந்தது. அவ்வளவுதான் வேறு எந்த சத்தமும் இல்லை. பேசாமல் வெளியே வந்தோம். செக்யூரிடி ஒரு சலாம் போட்டான். நாங்கள் எங்கள் வாகனத்தில் ஏறி ஆபீசுக்கு வந்தோம்.

இந்த மாதிரியான ஒரு அனுபவம் என் ஆயுளில் பார்த்ததில்லை. இஸ்ரேல் தங்கள் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.

என்னுடைய இஸ்ரேல் டூர் முழுவதும் இப்படியான பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு என் இரத்த அழுத்தத்தை எகிறச் செய்தன.

ஸ்வீடனிலிருந்து நெதர்லாந்து வந்து வேகனிங்கன் போய் வந்த கதை முன்பே சொல்லியிருக்கிறேன். அப்போது ஏர்போர்ட்டில் க்ளோக் ரூமில் என்னுடைய கப்போர்டை புதுப்பிக்க சென்றபோது ஏர்போர்ட் என்கொயரியில் சும்மா விசாரித்தேன். பிளைட்டுக்கு எவ்வளவு நேரம் முன்னால் வரவேண்டும் என்று கேட்டேன். ஒரு மணி நேரம் முன்னால் வந்தால் போதும் என்று சொல்லிவிட்டு, நீங்கள் எந்த ஊருக்குப் போகவேண்டும் என்றார்கள். நான் இஸ்ரேல் என்று சொன்னவுடன் அப்படியானால் இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக வந்து விடுங்கள் என்றார்கள்.

இது என்ன விசேஷ வரவேற்பாக இருக்கும்போல் இருக்கிறது என்று நான் புறப்பட்ட அன்று இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே சென்று விட்டேன். இஸ்ரேல் போகவேண்டிய கவுன்டருக்குப் போனவுடன் என்னை என் லக்கேஜ்களுடன் ஒரு தனி ரூமுக்கு கூட்டிப்போனார்கள். அங்கு மூன்று செக்யூரிடி ஆட்கள் இருந்தார்கள். என் லக்கேஜ்களை எல்லாம் தலைகீழாக கவிழ்த்தார்கள். ஒவ்வொரு ஐட்டத்தையும் சோதனை செய்தார்கள். பிறகு சரி, எல்லாவற்றையும் திரும்ப பேக் செய்யுங்கள் என்றார்கள்.

நான் ஓட்டல் ரூமில் வெகு பாடு பட்டு ஜாக்கிரதையாக பேக் செய்த சாமான்கள் அலங்கோலமாகக் கிடந்தன. பதட்டம் வேறு. எப்படியோ ஒரு வழியாக மனதிற்குள் இஸ்ரேலைத் திட்டிக்கொண்டு, அரை மணி நேரத்தில் எல்லாவற்றையும் பேக் செய்து முடித்தேன். பிறகு என்னை மட்டும் தனியாக இரண்டு பேர் வேறு ஒரு ரூமுக்கு கூட்டிப்போனார்கள். அங்கு போன பிறகு நடந்ததைச் சொல்ல வெட்கமாக இருக்கிறது.

திங்கள், 9 டிசம்பர், 2013

ஆம்ஸ்டர்டாமிலிருந்து இஸ்ரேல் வரை


இந்த பயணத் தொடரை சீக்கிரம் முடித்து விட்டேன் என்று பலரும் குறைப்பட்டுக் கொண்டதால் நான் சென்ற அடுத்த ஊரைப் பற்றி எழுதுகிறேன்.

நெதர்லாந்திலிருந்து அடுத்தபடியாக நான் போனது இஸ்ரேல் நாடு. இந்த இஸ்ரேல் நாடு உருவான விதம் பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். நாடே இல்லாத யூதர் இனத்தினவர்களுக்காக அமெரிக்கா உருவாக்கிக்கொடுத்த ஒரு நாடு. இந்த நாடு இருந்த இடத்தில் இதற்கு முன்பு முஸ்லிம்களின் நாடான பாலஸ்தீனியம் இருந்தது. முஸ்லிம்களை விரட்டியடித்துவிட்டு அங்கு யூதர்கள் குடியேறினார்கள்.

இந்த நிலை வருவதற்குக் காரணம் யூதர்களும் முஸ்லிம்களும் ஒரே பிரதேசத்தில் இருந்து உருவானவர்கள். இருவரும் அண்ணன்-தம்பி என்றே சொல்லலாம். ஜெருசலேம் இருவருக்கும் பொதுவான புனிதஸ்தலம். யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் முதல் கோயில்கள் அங்கு இருக்கின்றன. அண்ணன்-தம்பிகளுக்கிடையான சண்டையில் இருவரும் பிரிந்து விட்டார்கள். ஆனாலும் அவர்கள் இடையே பல ஒற்றுமைகள் இன்றும் இருக்கின்றன.

யூதர்களுக்கான மொழி ஹீப்ரூ. முஸ்லிம்களுக்கான மொழி உருது. உலகிலேயே இந்த இரண்டு மொழிகள்தான் வலமிருந்து இடது புறமாக எழுதப் படுகின்றன. உருதுவிலிருந்து தோன்றிய அரபியும் இதே மாதிரிதான். அரபியிலிருந்து தோன்றிய உருதுவும் இதே மாதிரிதான். இந்த மொழிகளில் நாம் வழக்கமாக முதல் பக்கம் என்று உபயோகப்படுத்துவது அவர்களுக்கு கடைசி பக்கம். அவர்கள் புஸ்தகங்களை எடுத்தால் நாம் வழக்கமாக கடைசிப் பக்கம் என்று சொல்லும் பக்கத்திலிருந்துதான் ஆரம்பமாகும், எல்லாம் தலைகீழ்.

யூதர்களின் ஆப்ரஹாம் முஸ்லிம்களின் இப்ரஹீம் ஆனார். ஜோசப்  யூசுப் ஆனார். இப்படிப் பல உதாரணங்கள் காட்ட முடியும். இன்னும் அதிக விவரங்கள் வேண்டுவோர் கூகுளாரிடம் செல்லவும்.

இந்தியாவின் அயல் நாட்டுக் கொள்கையைப் பற்றி அறிவீர்கள். எப்போதும் பாலுக்கும் காவல்-பூனைக்கும் தோழன் கதைதான். அரேபியர்களிடமிருந்து நமக்கு பெட்ரோலியம் வேண்டும். இஸ்ரேல் அரேபியர்களுக்கு எதிரி. நண்பனின் எதிரி நமக்கும் எதிரிதானே? அதனால் இஸ்ரேலுடன் நமக்கு "டூ". இந்தியாவிலிருந்து இஸ்ரேலுடன் ஒருவரும் எந்த உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது. அங்கு செல்ல பாஸ்போர்ட்டில் அனுமதி இல்லை. இந்தியாவில் இஸ்ரேலுக்கு தூதரகம் இல்லை. அதனால் விசாவும் கிடைக்காது.

அமெரிக்கா இந்தியாவின் சட்டாம்பிள்ளை. அவனுக்கு இஸ்ரேல் செல்லப் பிள்ளை. இஸ்ரேலுடன் நாம் "டூ" விட்டாயிற்று. இதை எப்படி சரிக்கட்டுவது. எல்லாம் மூக்கால் அழுதுதான். ஐயா, எனக்கு பெட்ரோல் இல்லாவிட்டால் செத்துப் போய் விடுவேன். அரேபியர்கள்தான் எனக்கு பெட்ரோல் ஆதாரம். அதனால் அவர்களை சமாதானமாக வைத்துக் கொள்வதற்காக இஸ்ரேலுடன் சும்மானாச்சுக்கும் "டூ" விட்டிருக்கிறேன். நீங்கள் தப்பாக நினைக்கவேண்டாம். அரேபியர்களுக்குத் தெரியாமல் இஸ்ரேல் விஷயத்தில் நீங்கள் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்கிறேன் என்று சொல்லி அவர்களை சமாதானம் செய்தாகி விட்டது.

இது எல்லாம் 1990 ல் இருந்த நிலை. இப்போது பல மாற்றங்கள் வந்து விட்டன. எனக்கு ஒரு நப்பாசை. இந்த நாட்டைப் பார்த்துவிடவேண்டும் என்று. காரணம் இந்த நாட்டில்தான் சொட்டு நீர்ப்பாசனம் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியது. நான் இங்கு நீர் நுட்பவியல் மையத்தில் பணி புரிந்து கொண்டிருந்ததால் இந்த நாட்டைப் பார்த்து விட்டு வந்தால் ஒரு கெத்தாயிருக்கும் என்று நினைத்தேன்.

ஸ்வீடனுடன் நாங்கள் தொழில் நுட்ப ஒத்துழைப்பு வைத்திருந்ததால் என்னை ஸ்வீடனுக்கு அழைத்தார்கள். அங்கு சென்றபோது என்னுடைய புரோக்ராம் பொறுப்பாளரிடம் என்னுடைய விருப்பத்தை தெரிவித்தேன். அவர் "நோ பிராப்ளம்" என்றார். யூரோப், அமெரிக்கா போன்ற நாடுகளில் நாம் என்ன சொன்னாலும் முதலில் அவர்கள் சொல்லுவது "நோ பிராப்ளம்" என்றுதான். நம் ஊரின் நிலை உங்களுக்கே தெரியும்.

ஆனால் இஸ்ரேலுக்கு விசா வாங்கப் போனபோதுதான் பிராப்ளம் ஆரம்பித்தது. என்ன பிராப்ளம் என்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?

புதன், 4 டிசம்பர், 2013

குளிரிலிருந்து தப்பித்தேன்.


நேரம் ஆக, ஆக, என் கவலை அதிகரித்தது என்று சொன்னேனல்லவா? அப்போது கடவுள் என் முன்னால் பிரசன்னமானார். பசித்தவனுக்கு கடவுள் ரொட்டி ரூபமாகக் காட்சியளிப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? அது மாதிரி எனக்கு கடவுள் ஒரு ஆப்பிரிக்க இளைஞன் ரூபத்தில் காட்சியளித்தார்.

அந்த இளைஞன் அங்கு காப்பி சாப்பிட்டுவிட்டு தான் வந்திருந்த காரில் புறப்பட ஆயத்தமானார். நான் வெட்கம், மானம் எல்லாவற்றையும் விட்டு விட்டு (கடவுளிடம் வெட்கம், மானம் என்ன வேண்டியிருக்கிறது) அவரிடம் போய் பக்கத்து ஊர் பெயரைச்சொல்லி, "அந்த வழியாகப் போவீர்களா?" என்று கேட்டேன். அவர் "ஆமாம்" என்றார். நான் "எனக்கு அந்த ஊர் வரை லிப்ட் கொடுக்க முடியுமா" என்று கேட்டேன். அவர் "தாராளமாக" என்று சொல்லி என்னை அவர் காரில் ஏற்றிக்கொண்டார்.

அந்த ஊர் வந்ததும் என்னை இறக்கி விட்டார். அவருக்கு மிகவும் நன்றி சொல்லிவிட்டு, இறங்கினேன். அப்படியே நான் வணங்கும் முருகனுக்கும் ஒரு நன்றி சொல்லிவிட்டு அங்குள்ள பஸ் நிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு நிறைய பஸ்கள் இருந்தன.

கொஞ்சம் நேரம் இருந்ததாலும், தங்கும் ஓட்டலுக்குப் போக நிச்சயமான வழி பிறந்து விட்டதாலும், பக்கத்திலுள்ள ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குப் போனேன். காரணம் போகப்போகத் தெரியவரும். அங்கு சுற்றிப்பார்க்கும்போது தின்பண்டங்கள் விற்கும் பகுதியில் நம்ம ஊர் வேர்க்கடலை பொட்டு நீக்கி, வெள்ளை வெளேர் என்று பாக்கட் பண்ணி வைத்திருந்தார்கள். அரை கிலோ பாக்கட் இரண்டு வாங்கிக்கொண்டேன். ஆப்பிள் ஜூஸ் "டேட்ராபேக்" என்று சொல்லப்படும் பாக்கெட்டில் இருந்தது. அதில் இரண்டு ஒரு லிட்டர் பேக்கட் வாங்கிக்கொண்டேன்.

இந்த இரண்டும் எதற்காக என்றால்............... உண்மையைச் சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. இருந்தாலும் இத்தனை வயசுக்கப்புறம் கூச்சத்தை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். ஆகவே உண்மையைச் சொல்லுகிறேன்.

வெளி நாடுகளில் எல்லா ஓட்டல்களிலும் "பெட் & பிரேக்பாஸ்ட்" என்ற முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. நம் நாட்டிலும் இப்போது தெரிய ஓட்டல்களில் இந்த முறை வந்து விட்டது. ஆகவே காலை உணவு என்னைப் போன்றவர்களுக்கு இலவசமாக கிடைத்து விடுகிறது.  அங்கு ஓட்டல்களில் சாப்பிடும் பொருள்கள் என்ன விலைக்கு விற்கிறார்கள் என்று வெளிநாடு போய் வந்தவர்களுக்குத் தெரியும். எல்லாம் யானை விலை குதிரை விலைதான்.

ஆகவே மதியமும் இரவும் ஓட்டல்களில் சாப்பிடுவதென்றால் ஏகப்பட்ட செலவு செய்யவேண்டி வரும். தவிர ஓட்டலில் மெனு கார்டைப் பார்த்து ஆர்டர் செய்தால் என்ன கொண்டு வருவார்களென்று தெரியாது. புது ஊரில் தனியாகப் போய் ஓட்டலில் சாப்பிடவும் பயம். அது போக ஒரு சாப்பாட்டிற்கு 500 ரூபாய் (1990 ல்)  செலவு செய்ய யாருக்கு மனசு வரும்? யாருக்கு வருமோ வராதோ, எனக்கு மனசு வரவில்லை. ஆகவே நான் என்ன செய்வேன் என்றால் காலை ஓட்டலில் கொடுக்கும் இலவச பிரேக்பாஸ்ட்டை ஒரு பிடி பிடித்துவிடுவேன். இது மாலை வரை தாங்கும்.  மதியம் நடுவில் ஏதாவது ஒரு ஜூஸ் வாங்கி சாப்பிட்டால் போதும்.

இரவு உணவுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். அதற்குத்தான் நிலக்கடலையும் ஆப்பிள் ஜூஸும். இவை எல்லாம் விலை சலீசாக ஸ்டோரில் கிடைக்கின்றன. இரண்டு கை கடலையைச் சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் ஜூஸ் குடித்து விட்டால் அன்றைய இரவிற்குப் போதும். இப்படியாகத்தான் என் வயிற்றுப் பாட்டை வெளி நாடுகளில் சமாளித்தேன்.

இப்படியாக எனது நெதர்லாந்து டூரை முடித்து அடுத்து இஸ்ரேலுக்குச் சென்று விட்டு இந்தியா திரும்பினேன். தொடரை அவசரமாக முடித்துவிட்டேன் என்று வருந்தவேண்டாம். எதுவும் அளவோடு இருந்தால்தான் சுவைக்கும்.

திங்கள், 2 டிசம்பர், 2013

உலக மகாத் திருட்டு


திருட்டு என்றால் என்ன என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்து வைத்திருப்பீர்கள். பொதுவான கருத்து, நமக்குச் சொந்தமில்லாத, அடுத்தவர்களின் பொருளை நாம் எடுத்துக் கொள்வதை திருட்டு என்று வைத்திருக்கிறோம்.

இதில் சில்லறைத்திருட்டு முதல் கோடிக்கணக்கான திருட்டு வரை உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. திருட்டு என்பது திருட்டுக்கொடுப்பவனுக்குத் தெரியாமல்தான் எல்லாத் திருடர்களும் செய்வார்கள். ஆனால் விழித்திருக்கும்போதே கண்ணா முழியைத் திருடும் திருடர்களும் உலகத்தில் உண்டு.

சிலர் தோலிருக்க சுளை விழுங்கிகளாக இருப்பார்கள். நம் பொருள் தம்மிடம் இருக்கிறதென்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் அது நம்மிடம் இருக்காது. ம்யூச்சுவல் பண்டில் போடும் பணம் இந்தக் கதைதான். சில பாங்குகளிலும் ரொம்ப நாள் நீங்கள் போகவில்லையென்றால் தோலிருக்க சுளை விழுங்கிவிடுவார்கள்.

சில அரசியல்வாதிகள் நாட்டை விற்று விடுகிறார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். இது அக்கிரமம் என்றும் அநியாயம் என்றும் வாயால் பேசிக்கொண்டே நாம் சில நாளில் மறந்து விடுகிறோம்.

சரி, விஷயத்திற்கு வருவோம். விவசாயிகள் நிலத்தை உழும்போது பக்கத்து நிலத்துக்காரன் ஏமாந்தவனாக இருந்தால் ஒரு "சால்" அவன் நிலத்தையும் சேர்த்து உழுவது வழக்கம். இந்த மாதிரி விவகாரங்களில் கோர்ட், கேஸ், வெட்டு, கொலை என்று முடிவதும் உண்டு.

ஆனால் ஒரு தேசத்து மக்கள் தங்களுக்கு பாத்தியப்படாத கடல் பிரதேசத்திலிருந்து நிலத்தைத் திருடியிருக்கிறார்கள். கடலை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த நிலத்தை அபகரித்திருக்கிறார்கள். இது உலக மகாத் திருட்டல்லவா?

இப்போது நெதர்லாந்து என்று அழைக்கப்படும் அந்தக் காலத்து ஹாலந்து மக்கள் கடலோரத்தில் வெகு தூரத்திற்கு கடல் ஆழமில்லாமல் இருந்ததைப் பயன்படுத்தி கடலில் சுவர் கட்டி நிலத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த சுவர்களுக்கு டைக்ஸ் (Dikes)  என்று பெயர்.

இந்த நிலங்களை பண்படுத்தி காலம் காலமாக விவசாயம் செய்து வருகிறார்கள். இது வேறு எங்கும் காண முடியாத அதிசயம்.

இப்போது சொல்லுங்கள், நெதர்லாந்துக் காரர்களை நான் திருடர்கள் என்று சொன்னது சரிதானே?

இந்த அதிசயத்தைப் பார்க்க அன்று மதியத்திற்கு மேல் நான் போனேன். அந்த நிலங்கள் முழுவதும் நல்ல விவசாயம் செய்திருந்தார்கள். செடிகள் செழிப்பாக வளர்ந்திருந்தன. இந்த பூமி முழுவதும் கடல் மட்டத்திற்கு பல அடிகள் கீழே இருக்குறது என்று சொன்னால்தான் புரியும். பல இடங்களில் ராட்சத மோட்டார்கள் வைத்து கடலிலிருந்து கசிந்து வரும் நீரை அவ்வப்போது வளியேற்று கடலுக்கே அனுப்பி வைக்கிறார்கள். பார்க்கப் பார்க்க மலைப்பாக இருக்கிறது.

இந்த டைக்ஸ் பற்றிய கதை ஒன்று சிறு வயதில் அநேகமாக அனைவரும் படித்திருப்போம். ஒரு நாள் இந்த சுவற்றில் ஒரு சிறு துவாரம் தோன்றி அதன் வழியாக கடல் நீர் வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு சிறுவன் இந்த ஓட்டையை உடனே அடைக்காவிட்டால் இது பெரிதாகி இந்த சுவர் முழுவதுமே இடிந்து விடலாம் என்று யோசித்து அந்த ஓட்டையில் தன் விரலை வைத்து அடைத்தான். தண்ணீர் கசிவது நின்று விட்டது.

அவன் பல மணி நேரம் இவ்வாறு நின்று கொண்டிருந்தும் அந்த வழியாக யாரும் வரவில்லை. வெகு நேரம் கழிந்த பிறகே அந்த வழியாக வந்த காவல்காரன் இதைப் பார்த்து ஊர் மக்களிடம் சொல்ல அவர்கள் வந்து அந்த ஓட்டையை சரி செய்தார்கள். அந்தப் பையனின் வீரத்தைப் பாராட்டி அந்த ஊரில் அவனுக்கு ஒரு சிலை எழுப்பினார்கள்.

இந்தக் கதை கர்ண பரம்பரையாக எல்லா ஊர்களிலும் பள்ளிகளில் பாட புத்தகங்களில் வரும்.

இப்படி அந்த இடத்தில் போட்டோக்கள் எடுத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இருட்டாக ஆரம்பித்தது. நான் இந்த இடத்திற்கு ஒரு பஸ்சில் வந்தேன். இறங்கிய இடத்தில் ஒரு சிறிய ரெஸ்ட்டாரென்ட் மட்டும் இருந்தது. வேறு ஒரு கட்டிடங்களும் இல்லை. நான் இந்த இடத்திற்கு அடிக்கடி பஸ்கள் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அந்த ரெஸ்டாரென்டில் போய் விசாரித்தால் பஸ் "வரும், ஆனால் வராது" என்கிற ரீதியில் பதில் சொன்னார்கள். நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு வழியையும் காணோம். குளிர் வேறு. நாம் ஓட்டிலுக்குத் திரும்ப முடியாவிட்டால் இந்தக் குளிர் பிரதேசத்தில் என்ன செய்வது என்ற கவலை மனதைப் பிடித்துக்கொண்டது.

மீதி அடுத்த பதிவில்.