திங்கள், 9 மார்ச், 2009

நாட்டு நடப்பு – 2

தினமும் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளில் முக்கியமானவை திருட்டுச்செய்திகள்தான். திருட்டுகளில் பலவகை. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
வங்கிகளில் பணம் எடுத்து வரும்போது திருட்டுக்கொடுப்பது மிகவும் சாதாரணமாகி விட்டது. இரண்டொரு பண நோட்டுக்களை வழியில் போட்டுவிட்டு ‘ஐயா, இந்த நோட்டு உங்களது போல இருக்குதே’ என்று கூறுவார்கள். நீங்களும் ஓஹோ, நம் பணம் தானோ என்று அதை எடுக்க முயற்சி செயவீர்கள். அந்த சமயத்தில் உங்கள் கவனம் அந்த கீழே கிடக்கும் பணத்தின் மீதுதான் இருக்கும். அப்போது அந்த திருடர்கள் உங்கள் பணப்பையை பிடுங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. இரண்டொரு நிமிடங்கள் கழித்துத்தான் என்ன நடந்தது என்று புரியும். அதற்குள் அந்த திருடன் கண்காணாமல் போயிருப்பான்.
இந்த மாதிரியான செய்திகள் அநேகமாக வாரத்திற்கு ஒருமுறையாவது வருகின்றன. மக்கள் இந்த செய்திகளைப் பார்த்துவிட்டு என்ன நினைப்பார்கள் என்று புரியவில்லை. நமக்கு இந்த மாதிரி நடக்க்காது என்று நினைப்பார்கள் போலும். ஆனால் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது என்றால் மனித மனம் சபல புத்தி உள்ளது. எதுவும் சும்மா கிடைக்கிறது என்றால் அவனது புத்தி அப்போது வேலை செய்வதில்லை. என் பாட்டி ஒரு பழமொழி சொல்வார்கள் – ஒருத்தன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தெருவில் ஒருவன் யானை, யானை, கடனுக்கு யானை என்று விற்றுக்கொண்டு போனான். இந்த சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு வாய நிறைய சோறு, பேச மடியவில்லை, இடது கையினால் எனக்கு ஐந்து என்று சாடை காட்டினானாம், அது போல சும்மா கிடைக்கு மென்றால் எதுவாக இருந்தாலும் கை நீட்டுவதுதான் நம் ஜனங்களுக்கு பழக்கம். இந்த பழக்கம் இரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.
இதன் காரணமாகத்தான் பணத்தை கீழே பார்த்தவுடன் அது நம்முடையதுதானா என்ளு கொஞ்சமும் யோசிக்காமல் அதை எடுக்க முயற்சிக்கிறான். நஷ்டம் அடைகிறான். இந்த ஆசையானது மக்களை மேலும் எப்படி அலைக்கழிக்கிறது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.
தொடரும்....