செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

கொங்கு வட்டார வழக்குகள் – 1

கோயமுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை கொங்கு மண்டலம் என்று கூறுவதுண்டு. இந்த பகுதி மக்கள் பேசும் தமிழ் ஒரு மாதிரியாக இருக்கும். அது சினிமாவில் கோவை சரளா போன்றோர்களால் மிகவும் பிரபலமாகிவிட்டது. புதிதாக கேட்பவர்களுக்கு தமாஷாகக்கூட இருக்கும்.
நான் விவசாயக்கல்லூரியில் படிக்கும்போது சிலர் ‘ஆஹா, கொங்கு தமிழ் எனக்கு நல்லா தெரியும் என்று பெருமையாக சொல்லிக்கொள்வதுண்டு. அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்பேன். எங்கே இதன் பொருள் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம் – அங்கராக்கு சோப்பிலே தொரப்புக்காய் இருக்குது எடுத்துட்டு வா புள்ளேய் – என்றால் முழிப்பார்கள். கொங்கு நாட்டிலேயே பிறந்திருந்தாலும் நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள் இந்த கேள்விக்கு முழிப்பார்கள்.
ஷர்ட் பாக்கெட்டில் சாவி இருக்கறது, எடுத்து வா – இதுதான் அர்த்தம்.
இங்கு பேசுபவர்களின் பேச்சில் மரியாதையும் பண்பும் நிறைந்திருக்கும். புதிதாக யாரையாவது பார்த்தால் – என்னங்க நம்ம வீட்டிலே எல்லோரும் நல்லா இருக்காங்களா – என்று நலம் விசாரிப்பார்கள். வேறு மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் – இவர் வீட்டிலே நல்லா இருக்காங்களா என்று எனக்கு எப்படி தெரியும் என்று முழிப்பார்கள். இதை மிகவும் நுணுக்கமாக யோசித்தால்தான் விளங்கும். உங்கள் வீடு வேறு என் வீடு வேறு என்று வேறுபடுத்தி பார்க்காமல் இரண்டு வீடும் ஒன்றுதான் என்ற எண்ணத்திலிருந்து வரும் வார்த்தைகள் அவை.
நம்ம வீட்டு அம்மா செளக்கியங்களா என்று முதன்முதலாக கேட்பவர்கள் கொஞ்சம் ஆடிப்போய்விடக்கூடும். இந்த அன்னியோன்யம் வேறு மாவட்டங்களிலே பார்ப்பது அரிது.
தொடரும்....