வெள்ளி, 1 ஜனவரி, 2010

விவாதத்திற்கு உரிய விஷயங்கள்


விவாதத்திற்கு உரிய விஷயங்கள்
பட்டிமன்ற தலைப்புகளை பார்த்திருப்பீர்கள். எப்படி வேண்டுமானாலும் பேசக்கூடிய தலைப்புகளைத்தான் வைப்பார்கள்.
ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது சரியா தவறா?
கற்பில் சிறந்தவள் மாதவியா கண்ணகியா?
இவை பழைய கால தலைப்புகள்-
தற்கால தலைப்புகள் சில-
சிறந்த சைட் டிஷ் ஊறுகாயா அல்லது சிப்ஸா?
வருங்கால சூபர் ஸ்டார் யார்-விஜய்யா சிம்புவா?
ஆனால்
மதங்களில் சிறந்தது இந்து மதமா இஸ்லாமிய மதமா?
என்று தலைப்பு வைத்தால் என்ன ஆகும்? வீணான கலவரம் உண்டாகும். விவாதம் செய்வது ஒரு தத்துவத்தைப்பற்றி ஒரு தெளிவு ஏற்படுவதற்காக. அதை விட்டு விட்டு ஒரு பிரச்சினைக்குரிய பொருள் பற்றி விவாதம் செய்தால் வீண் சண்டையும் மோசமான கருத்து வேறுபாடும்தான் மிஞ்சும்.
சமீபத்தில் ஒரு பதிவர் அந்த மாதிரியான ஒரு பொருளைப்பற்றிய விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். சிறிய நெருப்புப்பொறியாக ஆரம்பித்தது சக பதிவர்கள் விசிறி விட பெருந்தீயாக உருவெடுத்தது.
இதற்கு காரணம் விவாதத்திற்கு உள்ளான பொருள் மத நம்பிக்கை சார்ந்தது. நல்ல பெயருடன் வலம் வந்து கொண்டிருந்த அந்த பதிவரின் நிலை பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளது. நடுநிலையில் இருந்த பதிவர்கள் கூட வார்த்தைகளினால் காயப்பட்டு நிற்கிறார்கள்.
எது விவாதத்திற்கு உரிய சரியான பொருள் என்ற விவேகம் இல்லாமல் போனால் இந்த நிலை எவருக்கும் வரும்.
பெயர்கள் குறிப்பிடாததற்கு காரணம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம் என்பதால்தான்.