(மூன்றாம் நாள்)
திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வந்து சேர்ந்து ரெஸ்ட் எடுத்தபின் மாலை 5 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி அம்மனைத்தரிசிக்க சென்றோம். கூட்டம் அதிகமாக இல்லை. ஒரு அரை மணி நேரத்தில் தரிசனம் முடிந்த்து. அடுத்த வேலைதான் இந்த டுரிலேயே முக்கியமான வேலை. அதாவது சூரியாஸ்தமனம் பார்ப்பது.
இந்தியா முழுவதுமிலிருந்து டூரிஸ்ட்டுகள் கன்னியாகுமரி வருவது இதற்காகத்தான். அன்று கன்னியாகுமரியிலிருந்த அத்தனை டூரிஸ்ட்டுகளும் அந்த பீச் ரோட்டில் மேற்கு நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள். நாங்களும்தான். நீல வானமும் கடலும் சேரும் அடிவானம் நன்கு தெரியும்வரை மேற்கே சென்றோம். அந்த இடத்தில் உயரமாகச்சென்று அஸ்தமனத்தைப் பார்ப்பதற்காக ஒரு டவர் கட்டிவைத்திருக்கிறார்கள். அதனுடைய உயரத்தைப் பார்த்தவுடன் அதன் மேல் ஏறும் ஆசையை மூட்டைகட்டி வைத்துவிட்டோம்.
ரோடு ஓரமாக சிமெண்ட்டு தளம் போட்டு வைத்திருக்கிறார்கள். அங்கே உட்கார்ந்து சூரியனை சௌகரியமாக பார்த்து ரசிக்கலாம். ஆனால் ஒரு அசௌகரியம். நமது மக்கள் எங்கும் அவர்களது காலைக்கடன்களை முடித்து வைத்திருக்கிறார்கள். உள்ளூர் ஜனங்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். மூன்று நாளில் முப்பது க்ஷேத்திரங்கள் என்று நம் மக்களை பஸ்களில் புறிமூட்டை போல் அடைத்துக்கொண்டு வரும் நம் டூரிஸ்ட் ஆபரேட்டர்கள் பண்ணும் சமூகசேவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
எப்படியோ ஒரு மாதிரி ஒரு இடத்தைக்கண்டுபிடித்து நின்றுகொண்டோம். சூரியன் மறைவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்த்து. நாங்களும் சூரியனைப்பார்ப்பதும் கண் ரொம்ப கூசினால் வேறு பக்கம் பார்ப்பதுமாக இருந்தோம்.
இந்தப்படம் கோவையில் என் வீட்டில் இருந்து எடுத்தது. பழைய படங்கள் கம்ப்யூட்டர் வைரஸ சூறாவளியில் அடித்துச்செல்லப்பட்டு விட்டன.
“ஆஹா, சூரியன் மறைய ஆரம்பித்துவிட்டான். எங்கும் செவ்வானம். இதோ சூரியன் கடலைத்தொட்டு விட்டான். தகதகவென்று கண்ணைக்கூச வைத்துக்கொண்டிருந்த சூரியன் இப்போது கண்ணுக்கு மிகவும் இதமாக செக்கச்செவப்பாக தெரிகிறான். கால்வாசி கடலுக்குள் முழுகிவிட்டான். இப்போது பாதி சூரியன் கடலுக்குள்ளும் பாசி வெளியேயுமாக காணக்கிடைக்காத அபூர்வக்காட்சி. முக்கால் சூரியன் கடலுக்குள். ஒரு கீற்றுதான் இப்போது தெரிகிறது. ஓஓஓ சூரியன் முழுவதுமாக கடலுக்குள் போய்விட்டான். மூச்சு விடாமல் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் இப்போதுதான் மூச்சை விட்டார்கள்.”
தொடரும்.....