புதன், 3 மார்ச், 2010

ஜோசியர் குடும்பம் விபத்துக்குள்ளான பரிதாபம்




கோவை : குழந்தைக்கு "சோறு ஊட்ட' குருவாயூர் கோவிலுக்கு சென்றபோது, போலீஸ் ஸ்டேஷன் எதிரே நடந்த விபத்தில், மாருதி ஆம்னியில் பயணித்த ஜோதிடர் குடும்பம், நண்பர் குடும்பம் என ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.



பாலக்காடு அருகேயுள்ள மங்கலத்தைச் சேர்ந்தவர் தினேஷ்(29); ஜோதிடர். இதே பகுதியைச் சேர்ந்த தீபா(25)வை காதல் திருமணம் செய்துகொண்டார். இரு ஆண்டுகளுக்கு முன் மனைவியுடன் கோவை வந்தவர், ஆர்.எஸ்.புரத்தில் தங்கி ஜோதிடம் பார்த்து வந்தார். இவரது ஆறுமாத குழந்தை லட்சுமிஸ்ரீக்கு, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், "சோறு ஊட்டல்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நெருங்கிய நண்பரும், பீளமேடு தண்ணீர்பந்தல், விக்னேஷ் நகரில் வசிக்கும் கம்ப்யூட்டர் இன்ஜினியருமான சீனிவாசன் குடும்பத்தினரை மட்டும் அழைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு மாருதி ஆம்னி வேனில், தினேஷ் மற்றும் சீனிவாசன் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர், குருவாயூர் புறப்பட்டுச் சென்றனர். ஆம்னி வேனை கால்டாக்சி டிரைவர் மது ஓட்டினார்.

நேற்று அதிகாலை 2.15 மணி அளவில் வேன், பாலக்காடு கஸ்பா போலீஸ் ஸ்டேஷன் எதிரே சென்றபோது, எதிரே பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்த லாரி மோதியது. விபத்தில், ஜோதிடர் குடும்பம் சென்ற மாருதி ஆம்னி வேன் நொறுங்கியது. வேனில் பயணம் செய்த ஜோதிடர் தினேஷ்(29), இவரது மனைவி தீபா(25), ஆறு மாத குழந்தை லட்சுமிஸ்ரீ, நண்பர் சீனிவாசன்(39), இவரது மனைவி சரிதா(30), இவர்களது மகன் ஹனிஷ்கிருஷ்ணா(6) மற்றும் கார் டிரைவர் மது(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். தகவல் அறிந்த இரு வீட்டாரின் உறவினர்கள் பாலக்காடு புறப்பட்டுச் சென்றனர். பாலக்காடு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நொறுங்கிக் கிடந்த வேனில் இருந்து, இறந்தவர்களின் நசுங்கிய உடல்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இவர்களில், ஜோதிடர் குடும்பத்தினரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின், பாலக்காட்டில் உள்ள அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கம்ப்யூட்டர் இன்ஜினியர் சீனிவாசன்,அவரது மனைவி மற்றும் மகன் உடல்கள் நேற்று மாலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.
நன்றி; தினமலர் கோவைப்பதிப்பு


இந்த விபத்தை மக்களின் அறியாமை என்று சொல்வதா? அல்லது விபத்துக்கள் மற்றவர்களுக்கு ஏற்படுபவை, நான் அதற்கு அப்பாற்பட்டவன் என்ற இறுமாப்பா? அல்லது விதியின் வலிமை என்பதா? அல்லது ஜோசியம் அவரவர்களுக்கு பலிக்காது என்று கொள்வதா?
இந்த விபத்தை எந்த வகையில் சேர்க்கமுடியும்?