ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

கிளிகளுக்கு வந்த ஆபத்து




காட்டில் விடப்பட்ட விக்கிரமாதித்தனாகிய கிளி, கம்மாளன் போனபிறகு, ஆஹா, மோசம் போனோமே, பட்டி வெகு தூரம் சொல்லியும் கேட்காமல் போனோமே என்று வருத்தப்பட்டு, சரி, போனதைப்பற்றி வருத்தப்பட்டு ஆவதென்ன, நடக்கப் போவதைப் பார்ப்போம் என்று மனதைத் தேற்றிக்கொண்டு கிளிகளோடு கிளிகளாக இருந்தான்.     

இருந்தாலும் ராஜாவாக இருந்தவனல்லவா? அந்த வீர தீர பராக்கிரமத்தினாலே அந்த மரத்தில் இருந்த ஆயிரம் கிளிகளையும் ஒன்று சேர்த்து, எங்கு போனாலும் ஒன்றாகப் போவதும், ஒன்றாக இரை தேடுவதுமாக, விக்கிரமாதித்தன் தலைமையில் வாழ்ந்து கொண்டிருந்தன.

இப்படி இருக்கையில் ஒரு வேடன் இந்த ஆயிரம் கிளிகள் ஒன்றாகப் போவதையும் வருவதையும் பார்த்து ஆஹா, இந்த ஆயிரம் கிளிகளையும் பிடித்தால், கிளி ஒன்று ஒரு காசு என்று விற்றாலும் நமக்கு ஆயிரம் காசுகள் கிடைக்குமே என்று கணக்குப்போட்டு, ஒரு நாள் அந்தக் கிளிகள் இரை தேடப்போனபின்னர், அந்த மரத்தடியில் வலையை விரித்து வைத்து, கொஞ்சம் தானியங்களை இறைத்துவிட்டு மறைவாகப் போயிருந்தான்.

அன்று மாலை இரை தேடப்போயிருந்த கிளிகள் யாவும் தாங்கள் வசிக்கும் மரத்திற்கு வரும்போது கீழே தானியங்கள் சிதறிக் கிடப்பதைப்பார்த்ததும், எப்போதும் விக்கிரமாதித்தனைக்கேட்டு செயல்படும் கிளிகள் அன்று யாதும் யோசிக்காமல் தானியங்களைப் பொறுக்கப்போய் வலையில் சிக்கிக்கொண்டன. விக்கிரமாதித்தனாகிய கிளியும் எல்லோருக்கும் நேர்ந்த விதி நமக்கும் நேரட்டும் என்று வலையில் விழுந்தது.

எல்லாக்கிளிகளும் விக்கிரமாதித்தனை குறை கூறின. நாங்கள் எல்லோரும் அவரவர்கள் பாட்டில் எங்கள் மனம் போல் வாழ்ந்துகொண்டிருந்தோம். எங்களை எல்லாம் ஒன்று சேர்த்து இப்போது எல்லோரும் ஆபத்தில் சிக்கிக்கொண்டோமே! இப்போது என்ன செய்வது என்று ஆளாளுக்கு பிரலாபித்தன. அப்போது விக்கரமாதித்தன் சொல்கிறான்: கூடி வாழ்ந்து கெட்டாரும் இல்லை, பிரிந்து வாழ்ந்து உயர்ந்தாரும் இல்லை. இப்போது நான் சொல்வதை எல்லோரும் கவனமாகக் கேளுங்கள். வேடன் வந்து பார்க்கும்போது எல்லோரும் சிறகுகளை விரித்து இறந்தது போல் படுத்துக் கொள்ளுங்கள். வேடன் ஓஹோ, வலையில் விழுந்த வேகத்தில் கிளிகள் செத்துப்போனாற்போல் இருக்கிறது என்று எண்ணி ஒவ்வொரு கிளியாக கீழே போடுவான். முதலில் விழுந்த கிளி பின்னால் விழுகின்ற கிளிகளை எண்ணிக்கொண்டு இருந்து ஆயிரம் எண்ணிக்கை ஆனவுடன் எல்லோரும் பறந்து போய்விடலாம் என்று யோசனை சொல்லியது.

அப்படியே வேடன் வந்து பார்க்கும்போது எல்லாக்கிளிகளும் இறந்தது போல் கிடந்தன. வேடனும் இதைப்பார்த்து அடடா, வலையில் விழுந்த வேகத்தில் எல்லாக்கிளிகளும் செத்துப்போயினவே என்று வருத்தப்பட்டு ஒவ்வொரு கிளியாக எடுத்து கீழே போட்டான். முதலில் விழுந்த கிளி எண்ணிக்கொண்டு இருந்தது. 999 கிளிகள் ஆனவுடன் வேடன் இடுப்பில் இருந்த வெட்டுக்கத்தி தவறி கீழே விழுந்தது. ஆஹா, இத்துடன் ஆயிரம் கிளிகளும் சரியாய்விட்டன என்று முதல் கிளி பறக்க எல்லாக்கிளிகளும் பறந்து போய்விட்டன. வேடன் கையில் இப்போது விக்கிரமாதித்தன் மட்டும் இருந்தான். வேடனுக்கு ஒரே சமயத்தில் ஆச்சரியமும் கோபமும் சேர்ந்து வந்தன. கையில் இருக்கும் கிளியைப்பார்த்தான். அது மற்ற கிளிகளைவிட பெரிதாகவும் வயதானதாகவும் இருந்தது. ஆஹா இந்தக்கிளிதான் மற்ற கிளிகளுக்கு இந்த யோசனையை சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும், இதை என்ன சொய்கிறேன் பார் என்று கூறிக்கொண்டு அதன் கழுத்தைத் திருகப் போனான்.