புதன், 7 ஏப்ரல், 2010

கிளி வியாபாரம் செய்ததும் சபதம் செய்ததும்.




அப்போது அந்தக்கிளி வேடனைப்பார்த்து சொல்லிற்று. இதோ பார் வேடா, அவசரப்படாதே, இந்த ஆயிரம் கிளிகளையும் நீ விற்றிருந்தால் அதிகபட்சமாக ஆயிரம் காசு கிடைத்திருக்கும். நீ என்னை உயிருடன் விட்டால் உனக்கு ஆயிரம் பொன் கிடைக்க வழி செய்கிறேன், என்றது. வேடன் எப்படி என்று கேட்டான். அதற்கு கிளி சொல்லிற்று. பக்கத்து ஊர் கடைவீதியில் என்னைக்கொண்டுபோய் விற்பனை செய். யாரும் விலை என்னவென்று கேட்டால் ஆயிரம் பொன் என்று சொல், மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிற்று.

அப்படியே வேடனும் பக்கத்து ஊர் கடைவீதிக்கு போய் அதிசயக்கிளி வாங்கலியோ என்று கூவினான். விலை என்ன என்று கேட்டவர்களுக்கு ஆயிரம் பொன் என்று சொன்னான். கேட்டவர்களெல்லாம் சிரித்துவிட்டுப்போனார்கள். இப்படியே வேடன் நகைக்கடைவீதியில் மாணிக்கம் செட்டியார் என்பவரின் கடைக்கு முன்னால் போகும்போதும் கூவினான். செட்டியார் கூப்பிட்டு விலையைக்கேட்டபோது வேடன் ஆயிரம் பொன் என்று சொன்னான். செட்டியார் சிரிப்புடன், ஏனப்பா, கிளி என்றுக்கு ஒரு காசு விலை. இந்தக்கிளி கொஞ்சம் அழகாக இருப்பதால் இரண்டு காசு கொடுக்கலாம், நீ ஆயிரம் பொன் கேட்கிறாயே, இதென்ன உலக அதிசயமாக இருக்கிறதே, என்று சொன்னார்.


அப்போது அந்தக்கிளி செட்டியாரைப்பார்த்து, “வாருமையா, செட்டியாரே, நீர் என்னை இந்த வேடனிடமிருந்து ஆயிரம் பொன் கொடுத்து வாங்கி உமது கடையில் வையும், சகல வியாபாரத்தையும் என் வசம் விட்டுவிட்டு நீர் நான் வியாபாரம் செய்யும் நேர்த்தியைப்பாரும். இந்த ஆயிரம் பொன்னைப்போன்று பல ஆயிரம் பொன் உமக்கு சம்பாதித்து தருகிறேன் என்று சொல்லியது. இதைக்கேட்ட செட்டியாரும் கிளியின் மதுரமான வார்த்தைகளில் மயங்கி, வேடன் கேட்ட விலையைக்கொடுத்து கிளியை வாங்கி, அதற்கு ஒரு நவரத்தினகசிதமான ஒரு கூண்டு செய்து அந்தக்கிளியை அந்தக்கூண்டில் விட்டு அதற்கு வேண்டிய ஆகாரமெல்லாம் கொடுத்து வைத்திருந்தான்.

அப்போது அந்தக்கிளி செட்டியாரைப்பார்த்து கூறியது. ஐயா, செட்டியாரே, நாளையிலிருந்து இந்தக்கடையில் இருக்கும் வேலையாட்களெல்லாம் நான் சொல்லும்படியாகவும், இந்தக்கடை வியாபாரத்தை நான் மேற்பார்வை பார்க்கும்படியாகவும் திட்டஞ்செய்து நீர் ஓய்வாக திண்டுவில் சாய்ந்துகொண்டு நான் வியாபாரஞ் செய்யும் சமர்த்தைப்பாரும் என்று சொல்லியது. செட்டியாரும் அவ்வண்ணமே யாவருக்கும் திட்டஞ்செய்துவிட்டு வீட்டுக்குப்போனார்.

மறுநாள் முதல் கிளி வருபவர்களை வரவேற்பதுவும், ஆட்களைக்கூப்பிட்டு அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொடுக்கச்சொல்வதும், வியாபாரத்திற்கு வந்தவர்களிடம் சாதுர்யமாகப்பேசி வியாபாரத்தை முடிப்பதுவுமாக, கடையில் என்றுமில்லாத அளவிற்கு கூட்டமும் வியாபாரமும் அதிகரித்தது. இந்த மாதிரி ஒரு கிளி வியாபாரம் செய்கின்றது என்கிற சேதி அக்கம்பக்கத்து நாட்டுக்களுக்கெல்லாம் பரவி, அங்கிருந்தெல்லாம் வியாபாரத்திற்கு ஜனங்கள் வர, மாணிக்கம் செட்டியாருக்கு ஏகமாக வியாபாரம் பெருகி, செட்டியார் சந்தோஷத்தில் ஒரு சுற்று பெருத்துவிட்டார்.

இது தவிர, இந்த விக்கிரமாதித்தனாகிய கிளி, அக்கம் பக்கத்திலுள்ள விவகார வில்லங்க வழக்குகளை விசாரித்து எள்ளுக்காய் பிளந்த மாதிரி இரு தரப்பினரும் ஒத்துக்கொள்ளத் தகுந்ததாய் தீர்ப்பும் சொல்லி வந்தது. இப்படி கிளியின் வியாபார சாமர்த்தியமும், நீதி வழங்கும் பாங்கும் தேசதேசாந்திரங்களெல்லாம் பரவி, ஏக கியாதியுடன் விளங்கி வரும் நாளில்...


அந்த ஊர் பிரபல தாசி அபரஞ்சிக்கும் கோயில் குருக்களுக்கும் ஏற்பட்ட வழக்கு கிளியிடம் வந்தது. வழக்கு விவரம் ஏற்கனவே கக்கு-மாணிக்கம் தன்னுடைய பதிவில் போட்டிருந்தது எல்லோருக்கும் தெரியும்.

கிளி தாசியிடமும், குருக்களிடமும் வழக்கின் விபரத்தைக்கேட்டு அதன் சாரத்தைப்புரிந்து கொண்டது. தாசியிடம் கிளி கேட்டது, இந்த கோவில் குருக்கள் உன்னை கனவில் சேர்ந்ததிற்காக உனக்கு ஆயிரம் பொன் கொடுக்கவேண்டும், அதுதானே உன்னுடைய வழக்கு என்று கேட்டது. தாசியும், ஆஹா நமக்கு ஆயிரம் பொன் வரப்போகின்றது என்று சந்தோஷப்பட்டு, ஆமாம், ஆமாம் என்றாள். சரி, சற்றுப்பொறு, தரச்சொல்கிறேன் என்று சொல்லி விட்டு, கடை ஆட்களைக்கூப்பிட்டு அங்கே வாசலில் ஒரு கம்பம் நடச்சொல்லியது.   

கம்பம் நட்டானதும் கடையிலிருந்து ஆயிரம் பொன் எடுத்து ஒரு பட்டுத்துணியில் ஒரு முடிப்பாக கட்டச்சொன்னது. அந்த பொன் முடிப்பை அந்த கம்பத்தின் உச்சியில் கட்டச்சொன்னது. ஆட்கள் அவ்வாறே கட்டினார்கள். கட்டின பிறகு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைக்கொண்டு வந்து கம்பத்தின் கீழ் வைக்கச்சொன்னது. ஆட்கள் அவ்வாறே வைத்தார்கள். இந்த வழக்கைப்பற்றி கேள்விப்பட்ட அந்த ஊர் ஜனங்கள் எல்லோரும் கிளி சொல்லும் தீர்ப்பைக்கேட்க ஆவலுற்றவர்களாய் அங்கே குழுமிவிட்டார்கள்.

அப்போது அந்தக்கிளி தாசியைக்கூப்பிட்டு இந்தக்கண்ணாடியில் பொன்முடிப்பு தெரிகிறதா என்று கேட்டது. தாசி ஆம் தெரிகிறது என்றாள். சரி, அதுதான் குருக்கள் உனக்குக் கொடுக்கவேண்டிய ஆயிரம் பொன், எடுத்துக்கொள் என்று கூறியது. கண்ணாடியில் தெரியும் நிழலை எடுக்கக்கூடுமோ என்று தாசி கேட்டாள். கனவில் உன்னைச் சேர்ந்ததிற்கு கண்ணாடியில் தெரியும் பொன்தான் சமானமாகும் என்று கிளி சொல்லியது. கூடியிருந்த ஜனங்கள் எல்லோரும் கரக்கம்பம், சிரக்கம்பம் செய்து, ஆரவாரித்து கிளியின் தீர்ப்பை ஆமோதித்தனர். தாசியைப்பார்த்து கைகொட்டி சிரித்தனர். தாசி அபரஞ்சிக்கு மிகுந்த அவமானமாகப் போய்விட்டது.    

அப்போது அந்த தாசியானவள் கிளியின் அருகில் சென்று, ஏ, கிளியே, நீ ஒரு அற்ப ஜீவனாயிருந்தும் என்னை இவ்வாறு அவமானப்படுத்தினாய். இந்த வழக்கு எனக்கு ஜெயிக்காது என்றிருந்தால், என்னைத்தனியாக கூப்பிட்டு, இந்த வழக்கு உனக்கு ஜெயிக்காது, நீ வீட்டுக்குப்போகலாம் என்று சொல்லியிருந்தால் நான் போயிருப்பேனல்லவா? அப்படிக்கில்லாமல் இவ்வளவு பேருக்கு முன்னால் என்னை இவ்வாறு அவமானப்படுத்தலாமா, என்று கேட்டாள். அதற்கு கிளி, நீ அக்கிரமமான வழக்கு கொண்டு வந்தாய், நான் அதற்குத்தகுந்த மாதிரி தீர்ப்பு சொன்னேனேயல்லாமல் வேறொன்றும் தவறாகச்சொல்லவில்லையே என்றது. அப்போது தாசிக்கு ஆங்காரமுண்டாகி, ஓ கிளியே, இவ்வளவு பேர்களுக்கு முன்னால் என்னை அவமானப்படுத்தியதுமல்லாமல் உன்னுடைய செயலுக்கு நியாயமும் கற்பிக்கிறாயா, உன்னை என்ன செய்கிறேன் பார் என்றாள். கிளி உன்னால் என்ன செய்யமுடியுமோ அதைச்செய்துகொள் என்று கூறிவிட்டது.


தாசியின் சபதம்: அப்போது தாசியானவள், “என்னை இப்பேர்க்கொத்த அவமானம் செய்த உன்னை இன்னும் மூன்று நாளைக்குள், உன் உடம்பைக் கறியாகவும், தலையை ரசமாகவும் வைத்து நான் சாப்பிடாமற்போனால் நான் தாசி அபரஞ்சி இல்லைஎன்று சபதம் செய்தாள்.

கிளியின் சபதம்: அப்போது கிளியானது தாசியையும், கூடியிருந்த ஜனங்களையும் பார்த்து சொன்னது. “இந்த தாசியானவள் கொண்டு வந்த வழக்கை நான் ஆகாயத்திற்கும், பூமாதேவிக்கும் பொதுவாக தீர்ப்பு சொன்னேன். அதை இவள் ஒத்துக்கொள்ளாமல் இப்பேர்க்கொத்த சபதம் செய்தாள். இவள் இப்படிப்பட்ட சபதம் செய்தபடியால் நானும் ஒரு சபதம் செய்கிறேன். இன்னும் 15 நாளில் இவளை மொட்டை அடித்து, முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேலேற்றி இந்த ஊர் பெருமாள் கோவிலை, கோவிந்தா, நாராயணா என்று சொல்லிக்கொண்டு மூன்று முறை வலம் வர வைக்காவிட்டால் நானும் மாணிக்கம் செட்டியார் வளர்க்கும் கிளியாவேனோஎன்று சபதமிட்டது.
யார் சபதம் நிறைவேறிற்று? பொறுத்திருந்து பாருங்கள்.