திங்கள், 14 பிப்ரவரி, 2011

சமைத்ததை சாப்பிடும் முறைகள்

பல பதிவர்கள் குறிப்பாக பெண் பதிவர்கள் சமையல் குறிப்புகளைப் பற்றி எழுதுகிறார்கள். அவை சமையல் தெரியாத ஆண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனானப்பட்ட ஜெய்லானியே வெந்நீர் வைப்பது எப்படி? என்று ஒரு பதிவு இட்டிருக்கிறார்.

ஆனால் ஒருவராவது இப்படி சமையல் செய்த பிறகு, அதைச் சாப்பிடுவது எப்படி என்று ஒரு பதிவாவது போட்டிருக்கிறார்களா என்றால் இதுவரை இல்லை. ஏன் என்றால் அப்படி அந்தக் குறிப்புகளை வைத்து செய்யப்படும் பண்டங்கள், படம் எடுக்க மட்டும்தானே தவிர அதைச் சாப்பிடச் சொல்ல அவர்களுக்குத் துணிவு இல்லை. (அவை சாப்பிட லாயக்கில்லை என்று நான் என் வாயால்/பேனாவால் சொல்லமாட்டேன்). இது பதிவுலகிற்கு ஒரு களங்கம்.  

அந்தக் களங்கத்தைத் துடைக்க என்னாலான முயற்சிகளை மேற்கொள்ளுகிறேன். முதலில் கொங்கு நாட்டு ஸ்பெஷல் ஸ்வீட்டுடன் ஆரம்பிக்கிறேன். அவ்வப்போது மற்ற ஸ்பெஷல் ஐட்டங்களைப்பற்றி பதிவிடுகிறேன். (முக்கியமான குறிப்பு: இந்த ஐட்டங்களில் எதுவும் தங்க்ஸ்கள் செய்ததாக இருக்கக் கூடாது. அம்மாமார்களோ அல்லது நல்ல சமையல்காரரோ செய்ததாக இருக்க வேண்டும்). 

படம் 1 ஐப் பார்க்கவும்.
இதுதான் ஒப்பிட்டு என்று கொங்கு நாட்டிலும் போளி என்று மற்ற மாவட்டங்களிலும் அழைக்கப்படும் பழங்காலத்திலிருந்து பெயர் போன ஸ்வீட்

இதை முறையாக சாப்பிடத் தேவையானவை, படம் 2 ல் பார்க்கவும்.
தேவையானவை:

ஒரு சம்புடத்தில் சுமாராக 30 ஒப்பிட்டு.
ஒரு சீப்பு பூவன் வாழப்பழம்.
ஒரு கிண்ணம் நெய்.
ஒரு தட்டு.
சாப்பிடும் முறை.

ரவுண்டு 1. (படம் 3)

தட்டில் கீழ்க்கண்டவைகளை எடுத்துக் கொள்ளவும்.
1.   இரண்டு ஒப்பிட்டுகள்எந்த ஸ்வீட்டையும் ஒத்தையாக சாப்பிடக்கூடாது. அது மகாப்பாவம்.
2.   இரண்டு நன்கு பழுத்த, உரித்த பூவன் வாழைப்பழங்கள். ஏன் உரித்து வைக்க வேண்டும் என்றால் தமிழ் மரபு பிரகாரம் சாப்பிடும்போது இடது கையால் சாப்பிடும் பொருள் எதையும் தொடக்கூடாது.
3.   ஒரு கிண்ணத்தில் உருக வைத்து நன்கு சூடாக இருக்கும் நல்ல மணம் உள்ள பசு நெய். 

சாப்பிடும் முறை:

4.   இவைகளை கையால் ஒன்று சேர்த்து நன்றாகப் பிசையவும். ஐயே!!! என்று முகத்தைச் சுளிப்பவர்கள் அடுத்த பதிவுக்குப் போய்விடவும். மற்றவர்கள் தொடர்ந்து படிக்கவும்

இப்போது படம் 4 ல் உள்ளது போல் இருக்கும்


இதை ஒவ்வொரு கவளமாக எடுத்து வாயில் போட்டு சுவைத்து சாப்பிடவும். சாப்பிட்டு முடித்த பிறகு தட்டு படம் 5 ல் இருப்பது போல் இருக்கும்

 

ஒரு மிடறு தண்ணீர் குடிக்கவும்.

பிறகு ரவுண்ட் 2 ஆரம்பிக்கலாம். ரவுண்டு 2, ரவுண்டு 1 ஐப் போலவேதான்

இப்படியே 3, 4, 5, 6, …….. ரவுண்டுகளுக்குப் போகவும். எப்போது வாந்தி வரும் போல் தோன்றுகிறதோ அப்போது நிறுத்திவிடவும்.
இதுதான் கொங்கு நாட்டில் ஒப்பிட்டு சாப்பிடும் ஒழுங்கான பாரம்பரிய முறை.

பத்தியம்: மறுநாள் வயிற்று வலி வந்தால் (கட்டாயம் வரும்) பக்கத்து பெட்டிக்கடையில்ஓமத்திராவகம்என்று ஒரு மருந்து கிடைக்கும். அது ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டு வந்து ஒரு மணிக்கு ஒரு தடவை ஒரு அவுன்ஸ் சாப்பிடவும். இதில் நம்பிக்கை இல்லாதவர்கள் இங்கிலீஸ் மருந்துக் கடையில்யூனிஎன்ஸைம்என்று ஒரு மருந்து கிடைக்கும். அதை வாங்கி வேளைக்கு 2 மாத்திரை வீதம் மூன்று வேளை சாப்பிடவும்.