கொஞ்சம் தத்துவம் = கடனைத் திருப்பித்தர அதிக நாள் எடுத்துக் கொள்ளக் கூடாது. காரணம் – வட்டி அதிகமாக ஏறிவிடும். அதே மாதிரி உடம்பில் அழுக்கு சேர விடக்கூடாது. நோய் நொடிகள் வரும். ஆகவே அவ்வப்போது (நன்றாக கவனிக்கவும், தினமும் தேவை இல்லை) குளித்து அந்த அழுக்கை நீக்கிவிடவேண்டும். அதே போல் நாம் தினசரி சேர்த்துக் கொண்டிருக்கும் பாவங்களையும் அவ்வப்போது கழித்துவிடவேண்டும். அதிகமாகச் சேர்ந்துவிட்டால் அதைக் கழிப்பது கஷ்டமாய் விடும்.
அதனால் இதுவரை சேர்ந்திருக்கும் பாவத்தை நீக்க நாங்கள் மூன்று நண்பர்கள் கோவைக்குப் பக்கத்தில் இருக்கும் பாலமலை அரங்கநாதர் கோவிலுக்குப் போய் வந்தோம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முதுமொழிக்கிணங்க அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
போவதற்கு எளிய வழி, டவுன் பஸ்சில் போவதுதான். கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டேண்டிலிருந்து கோவனூர் என்ற ஊர் வரை (சுமார் 20 கி.மீ.தூரம்) பஸ்கள் அரை மணி நேரத்திற்கு ஒன்று இருக்கிறது. கோவனூர் பாலமலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர். அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் மலைப்பாதை ஆரம்பமாகிறது. மலைமேல் 4 கி.மீ. போகவேண்டும். இந்தப்பாதை முன்பு கல்லும் முள்ளுமான ரோடாக இருந்தது. இப்போது தார் ரோடு போட்டிருக்கிறார்கள். ரோடு அகலம் குறைவு. அதிக வளைவுகள் இருக்கின்றன. அதிக ஏற்றமாகவும் இருக்கின்றது. பழக்கப்பட்ட ஜீப் டிரைவர்கள்தான் இந்தப் பாதையில் செல்ல முடியும்.
கோவனூரில் டவுன் பஸ்சிலிருந்து இறங்கும் இடத்திலேயே இந்த ஜீப்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. ஆளுக்கு 20 ரூபாய் கட்டணம் மட்டுமே. இவைகள்தான் மேலே போகவர இயங்கிக்கொண்டு இருக்கின்றன. மாலை 7 மணிவரை சர்வீஸ் உண்டு.
கோவில் ஒரு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. சுற்றிலும் இயற்கைக் காட்சிகள் மனதைக் கவருகின்றன. கோவில் கருவறை சிறியதாக இருந்தாலும் பிரகாரம் விசாலமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தப் பிரகாரத்தில்தான் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் நடத்தியிருக்கிறார்கள். தற்போது அன்னதானத்திற்கு தனியாக ஒரு அன்னதானக்கூடம் “பிரிகால்” என்னும் கம்பெனியார் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
கோவிலுக்கு ஒரு புதுமையான ஸ்தலபுராணம் இருக்கிறது. பல ஸ்தலங்களில் கேட்டதுதான்.
ஸ்தலபுராணம்
முன்னொரு காலத்தில் ஒரு தொட்டியான் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான். காராம்பசுவின் மடியில் மாலைதோறும் பால் இல்லாமல் இருந்ததினால், மறுநாள் அதனைப் பின்தொடர்ந்து வரும்போது பாலைவனப்புதரில் சுயம்பின் பேரில் காராம்பசு பால் சொறிய, அதைக்கண்டு தொட்டியான் மயங்கி நின்றான். அசரீரியாய் பால்கொண்டு பூஜித்துவர வாக்களிக்க, அப்படியே பூஜித்து வந்தான். அக்காலத்தில் கௌதன்ய மகரிஷி கோத்திரத்தில் பிறந்த “காளிதாஸ்” என்பவர் இந்த சுயம்புவைப் பெருமாளாகப் பாவித்து ஒரு பர்ணசாலை கட்டி நைவேத்ய பூஜை செய்நு வந்தார். பிறகு “உங்கணகவுடர்” என்பவர் கூரை சாளை கட்டி பூஜிக்க, அவர் வம்சத்தில் பிறந்த நஞ்சுண்டகவுடர் அஸ்தகிரி, கோபகிரி, கெருடஸ்தம்பம், உற்சவ விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தி வந்தார். அதன் பின்னர் பாரஸ்டு கார்டு முனியப்ப பிள்ளை அவர்கள் கோவில் படிக்கட்டுகள் கட்டினார். மறுபடியும் உங்கணகவுடர் வம்சத்தில் தோன்றியவர்கள்அடியார் கோஷ்டியுடன் யோசித்துமண்டபம் கட்ட கல் எழுப்ப வசதி இல்லாததினால் பகவானைப் பிரார்த்திக்க, கீலக வருடம் வைகாசி மாதம் 15 ம் தேதி இரவு 15 நாளிகை அளவில் திடீர் என்று வேட்டு எழும்ப, அதிசயத்துப் போய் பார்க்க பாறை பாளம் பாளமாய் வெடித்திருப்பதைக் கண்டு ஆனந்தித்து, சிற்பிகளைக் கொண்டு கட்டிடம் கட்ட மணல் கிடைக்காததினால் வருத்தப்பட்டு இருந்தார்கள். அப்போது ஒரு பாகவதர் கனவில் பெருமாள் தோன்றி சன்னதிக்கு வாயு மூலையில் ஒரு பர்லாங்க் தூரத்தில் ஒரு அடையாளம் இருக்கும், அங்கே தோண்டினால் மணல் கிடைக்கும் என்று அருளினார். அவ்வாறே அதிகாலையில் எழுந்து போய்ப் பார்க்க அந்த அடையாளம் தெரிந்தது. அங்கு தோண்டிப்பார்க்க மணல் கிடைத்தது. அதை வைத்து கட்டிடங்கள் கட்டி, தெப்பக்குளமும் கட்டி, திருத்தேரும் செய்து சகல உற்சவங்களும் நிறைவாக நடந்து வருகின்றன.
நாங்கள் போனவுடன் அர்ச்சகர் பெருமாளுக்கும், செங்கோதை, பூங்கோதை ஆகிய இரு தேவியருக்கும், மற்ற பரிவாரத் தெய்வங்களுக்கும் பக்தி சிரத்தையுடன் பூஜை செய்து எங்களுக்கு சேவை செய்து வைத்தார். எங்களுக்காக பெருமாள் சந்நிதியில் அர்ச்சனையும் செய்து வைத்தார். போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதியும் கொடுத்தார். மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது.
மற்ற பிரபல கோவில்களில் கூட்டத்தோடு கூட்டமாக அவசரக் கோலத்தில் ஆண்டவனைத் தரிசித்துப் பழகிய எங்களுக்கு இது முற்றிலும் புது அனுபவமாக இருந்தது. பிறகு தெப்பக்குளம் பார்க்கப் போனோம்.
வழி ஒரு காட்டுப் பாதைதான். சுமார் ஒரு கி.மீ. தூரம் இருக்கும். தெப்பக்குளம் இருக்கும் இடம் ரம்மியமாக இருக்கிறது.
திரும்பும்போது சுமார் ஒரு மணி இருக்கும். அன்னதானக் கூடத்திற்குப் போனோம். பார்த்தவர்களெல்லாம் சாப்பிடச் சொல்லுகிறார்கள்.
அங்கு இருக்கும் டேபிள், சேர் எல்லாம் "லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ்" என்ற நிறுவனம் வாங்கிக்கொடுத்தது. அங்கு உட்கார்ந்து நாங்கள் கையில் கொண்டு போயிருந்த டிபனை (கொண்டு போனதை வீண் செய்யக்கூடாது என்பதால்) சாப்பிட்டோம். அந்த அன்னதானத்தில் தினமும் 100 பேரும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கிலும் மக்கள் சாப்பிடுகிறார்கள்.
அங்கு அந்தக் கோவிலின் பரம்பரை தர்மகர்த்தாவை (திரு.யு.ஜெகதீசன் அவர்கள்) சந்தித்தோம்.
அவரிடம் எங்களுடைய நன்கொடையைக் கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். மாலை 4.30 க்குப் புறப்பட்டு 6.30 க்கு வீடு வந்து சேர்ந்தோம்.