சனி, 19 பிப்ரவரி, 2011

முதுமையை எதிர்கொள்ள பத்து அம்சத்திட்டம்.



முதுமை தவிர்க்க முடியாதது. முதுமையைச் சந்திக்கத் தகுந்த திட்டமிடல் இருந்தால் முதுமையையும் சந்தோஷமாக அனுபவிக்கலாம். அதற்கு உதவும் சில கருத்துக்கள்.

1.   முதுமையில் பணம் மிகவும் அவசியம். வாழ்நாளில் சேமித்தது எல்லாவற்றையும் மக்களுக்காக செலவழித்த பிறகு, மக்கள் பெற்றோரை புறக்கணிக்கும் சம்பவங்கள் ஏராளம்.


2.   உங்கள் வருமானத்தில் பாதி தொகையில் உங்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை முடித்துக் கொள்ளவேண்டும். மீதி பாதியைச் சேமித்தால், அதில் பாதி எதிர்பாராத செலவுகளுக்காகத் தேவைப்படும். மீதிப்பாதிதான் உண்மையான சேமிப்பாக அமையும்.


3.   முதியவர்கள் தங்கள் சுய சம்பாத்தியத்தில் சேர்த்தவை, பரம்பரையாக வந்த சொத்துக்கள் இவற்றை தமக்குப் பிறகு யார் யாருக்கு எவ்வளவு என்று பிரித்து தெளிவாக உயில் எழுதி, சாட்சிகள் கையொப்பமிட்டு, ரிஜிஸ்டர் செய்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. உயிலில் என்ன எழுதியிருக்கிறோம் என்பது சம்பந்தப் பட்டவர்களுக்குத் தெரிந்திருப்பது நல்லது.

4.   வங்கியிலிருந்து அதிகத் தொகை எடுத்து வரவேண்டியிருந்தால் நம்பகமான ஒருவரைத் துணைக்கு அழைத்துச் செல்லவும்.


5.   தடுமாற்றமுள்ளவர்கள் கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்களிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. காலையில் படுக்கையிலிருந்து வேகமாக எழுந்திருக்காமல், முதலில் அரை நிமிட நேரமாவது படுக்கையில் உட்கார்ந்த பிறகு மெதுவாக எழுந்து நடக்க வேண்டும்.

6.   வழவழப்பான தரை, பாத்ரூமில் ஈரமான தரை, மார்பிள் தளம் போன்றவற்றால் நிலை தடுமாறி விழும் நிலை தோன்றலாம். டெலிபோன் அழைப்புக்குக் கூட வேகமாகச் செல்லாமல் நிதானம் கடைப்பிடிப்பது நல்லது.


7.   உடற்பயிற்சி மேற்கொள்வதால் உடலில் இரத்த அழுத்தம் குறையும், எலும்புகள் வலுப்பெறும், மலச்சிக்கல் தோன்றாது. நல்ல தூக்கம் வரும்.

8.   சிலர் மரணபயத்தால் நிலை குலைந்து தவிப்பார்கள். இவர்கள் மனநல மருத்துவரைக் கலந்து தகுந்த ஆலோசனைகள் பெறுவது நல்லது. மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


9.   உணவு முறைகளில் வயதுக்கேற்ப மாற்றம் தேவை. வயது கூடும்போது ருசி மாறும், பசி குறையும், உண்ணும் உணவின் அளவும் மாறுபடும். காலையில் அதிகமாகவும், பகலில் மிதமாகவும், இரவில் குறைவாகவும் உணவு உண்ணவேண்டும்.

10. பற்றற்ற வாழ்க்கை வாழப்பழகிக் கொள்ளவேண்டும். தியானம் மூலம் மன அமைதி பெறலாம். சகிப்புத்தன்மை கூடும், உடல் நலம் பாதுகாக்கப் படும்.