ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

மதியும் விதியும்

விதி, விதி என்று அடிக்கடி பேசுகிறோம். ஆனால் அது என்ன என்று தீவிரமாய் சிந்தித்திருக்கிறோமா
 
உதாரணத்திற்கு, நாம் நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு செயல் செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு இரண்டு வழிகள் தென்படுகின்றன. ஏதோ ஒரு வழியை தேர்ந்தெடுக்கவேண்டும். அதன் பின் விளைவுகள் என்னவென்று தெரியாது. இந்த நிலையில் பொதுவாக எல்லோரும் தம்முடைய அனுபவத்தின் காரணமாக ஒரு வழியைத் தேர்வு செய்வோம். விளைவு சாதகமாக இருந்துவிட்டால் ஆஹா, நாம் தேர்ந்தெடுத்த வழி நல்ல வழி என்று திருப்திப் பட்டுக்கொள்வோம். இல்லையென்றால் ஆஹா, இந்த வழியை ஏன் தேர்ந்தெடுத்தோம்? என்று வருத்தப்பட்டுக்கொள்வோம்

நடைபெற்ற செயல் சாதாரணமானதாக இருந்துவிட்டால் சீக்கிரமே அதை மறந்துவிடுவோம். ஆனால் அதுவே வாழ்வா-சாவா என்ற ஜீவமரணப் பிரச்சினையாக இருந்து, நடந்த விளைவு மிகவும் மோசமானதாக இருந்தால் மனம் வருந்தி சோர்வில் ஆழ்ந்து, மனிதன் உடைந்துபோய், ஒன்றுக்கும் உதவாதவனாய் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது

அதாவது, குற்ற உணர்வு மேலோங்கி, சுய பச்சாத்தாபத்தில் மூழ்கி தீவிர மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இங்குதான் ஒரு மனோதத்துவ ஆறுதலை பெரியவர்கள் ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிறார்கள்.

குழந்தை கீழே விழுந்து அழுது கொண்டு வந்தால் அம்மா என்ன செய்கிறாள்? குழந்தையை, அது கீழே விழுந்த இடத்திற்கு கூட்டிப்போய், அந்த இடத்தை குச்சியால் இரண்டு அடி கொடுத்தால் குழந்தை சமாதானமாகி விடுகிறது. நாமும் வளர்ந்த குழந்தை மாதிரிதான். நமக்கும் இந்த மாதிரி நொண்டி சமாதானம் மன ரீதியாகத் தேவைப்படுகிறது. நடந்தது நம் விதிப்பயன், நாம் என்ன முயன்றிருந்தாலும் இந்த விளைவு ஏற்பட்டேயிருக்கும் என்ற தத்துவத்தை நம் மனதில் ஆழமாக ஏற்றியிருப்பதால், அதைச்சொல்லி சமாதானப்பட்டுக் கொள்கிறோம்.

நம் சுய பச்சாத்தாபத்தை மாற்ற இதைவிட வேறு உபாயம் இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் இந்த சமாதானத்தின் உட்பொருளை விளங்கிக்கொண்டிருந்தால் சரி. இல்லாமல் முழு மூடத்தனமாக என்னுடைய எல்லாச் செயலையும் விதிதான் நிர்ணயிக்கிறது என்று எண்ணி செயல்களைச் செய்வானானால் விளைவுகள் மோசமாக இருக்கும். அவன் வாழ்வு சிறப்பாக இருக்காது.


செல்போன் பேசிக்கொண்டு ரயில் தண்டவாளத்தைக் கடந்த பெண்ணும், காரை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்குபவர்களும் இவ்வாறு தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஆவார்கள். நமக்கு இயற்கை கொடுத்திருக்கும் மதியைப் பயன்படுத்தி வாழ்க்கையை நடத்த வேண்டும். இதைத்தான் பெரியவர்கள் விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.